வசந்தம் வந்து போய்விட்டது
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2026
பார்வையிட்டோர்: 132
(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14
அத்தியாயம் – 11

எமிலி தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள் ஹொஸ்பிட்டலுக்குப் போகும் வழியில் உள்ள பார்க்கில் எத்தனையோ தாய் தகப்பன், உற்றார் உறவினர் வந்து சில நேரம் இளைப்பாறுவார்கள்.
அவள் மனம் எரிமலையாய்க் குமுறிக் கொண்டிருந்தது. பார்பரா என்ற பெண் அலிஸனுக்கும் எமிலிக்குமிடையில் இந்த பூகம்பத்தைக் கிளறி விட எந்த அவசியமுமில்லை. ஏன் அந்தப் பார்பராப் பெண் இப்படிக் கொடூரமாக நடந்து கொண்டாள் என்றும் அவளாற் புரியமுடியவில்லை.
அவளுக்கும் டேவிட்டுக்கும் பார்பரா கட்டுக்கதை சொல்வதுபோல் ஒரு கட்டில் நாடகமும் நடக்கவில்லை. அவன் யார் என்று தெரியாமல் அவனை ரெயினிற் சந்தித்ததும் பழகியது, சாப்பிடப் போனது எல்லாம் உண்மை.
ஒரு கௌரவமான சினேகிதர்கள் என்பதற்கப்பால் வேறெந்த உறவுமில்லை. ஆனால் டேவிட்டைப் பொறுத்த வரையில் இவனுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளத் துடித்ததை இவள்அறியாமலில்லை.
அவன் தன்னைப் பற்றி முழுவிபரமும் சொல்லாதது இவளுக்குக் கோபம்தான். ஆனால் அதே வேளை இவளும் ஒரு நாளும் தன் வாழ்க்கையைப் பற்றி ஒருத்தரிடமும்- சினேகிதமாய்ப் பழகும் சாந்தியிடமும் இதுவரை மனம் விட்டுப் பேசியதில்லை. பழைய புண்ணைத் தோண்ட இவளுக்கு விருப்பமில்லை.
நிதானமும் உறுதியும் கொண்ட எமிலி அன்று அந்த நேரம் துயரில் வெந்து கொண்டிருந்தாள், ரவி இல்லாவிட்டால் உலகத்தில் எந்த மூலைக்காவது ஓடி விட வேண்டும்போல் இருந்தது.
“என்ன தியானமா” குமார் தன்னை மறந்து யோசனையில் ஆழ்ந்திருக்கும் எமிலியைக் கேட்டான்.
எமிலி நிமிர்ந்து பார்த்தாள். அவளின் கலங்கிய கண்களும் சோர்ந்த பாவமும் பரிதாபத்தையுண்டாக்கியது.
அவள் மறுமொழி சொல்லவில்லை.
“என்ன நடந்தது” குமார் பரிவுடன் கேட்டான்.
“எதுவும் நடக்கவில்லை.. எனக்குத்தான் உலகத்தை விட்டு எங்கேயாவது ஓட வேண்டும் போலிருக்கிறது”
“அப்படி விரக்தி வரும் அளவுக்கு ரவியின் நிலை இல்லையே. அவன் சுகமாகிக் கொண்டு வருகிறான் என்று தானே டொக்டர் சொன்னார்”
“அவன் உடலால் சுகம் அடையும்போது நான் உள்ளத்தால் பேதலித்துப் போய் இருக்கிறேன்” அவள் அழுதுவிடுவாள் போலிருந்தது.
அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான். எமிலி அவன் தமக்கையின் சினேகிதி. கடந்த இரண்டொரு நாட்களாகத்தான் தெரிந்தவள்.
அவளைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்பிராயம்அவனுக்குள் உதயமாகி விட்டது. உலகத்துச் சாதாரண பெண்களைப் போலல்லாமல் தான் இப்படித்தான் வாழ வேண்டுமென்று ஒரு நிச்சய தத்துவத்துடன் வாழ்பவள்.
மதிய நேர சந்தடி பார்க்கைச் சுற்றித் தெரிந்தது. இவள் ஏதோ தான் ஒரு தனிமையான உலகத்தில் இருப்பதுபோல் பிரமை பிடித்துப் போயிருந்தாள்.
பார்பராவாற் பட்ட அவமானத்தை அவளாற் சகிக்க முடியாதிருந்தது. என்ன செய்தாலும் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் குழப்பம் வரக் காரணமாயிருக்க மாட்டேன் என்ற தத்துவம் யாருக்குப் புரியும்.
யாரோ ஒரு பெண் அவள் தாயின் வாழ்க்கையில் ஈடுபட்டதாற்தானே தாய் தற்கொலை செய்து கொண்டாள். அதே தவறை இவ்வளவு படிப்புப் படித்த எமிலியும் செய்வாளா? பார்பரா அப்படி நினைக்குமளவுக்குத் தன்னை அந்தச் சூழ்நிலைக்குள் பிணைத்துக் கொண்டதற்குத் தன்னையே வெறுத்தாள் எமிலி.
எப்படித்தான் நிதானமாயிருந்தும் அவள் கண்ணீர் அவளறியாது மடை திரண்டது.
அவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
“I wish I have a shoulder to cry” அவள் முணுமுணுத்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். இருவருக்குமிடையில் நாலோ ஐந்தோ வயது வித்தியாசமிருக்கலாம். ஆனால் அப்போது அவள் ஒரு வழி தவறிய குழந்தையாய்த் தெரிந்தாள்.
“எமிலி என் நண்பனின் பிளாட் ஹொஸ்பிட்டலுக்கருகிற் தானிருக்கிறது… பார்க்கிலிருந்து அழுவதை விட யாரும் வீட்டிலிருந்து அழலாம் இல்லையா”
அவனின் குறும்புத் தனத்திற்கு அவள் தன் அழுகையினூடே சிரித்தாள்.
“உஷாவுடன் யார் இருக்கிறார்கள்” நடந்த படி கேட்டாள் எமிலி.
“சங்கர் அண்ணா நிற்கிறான். சாந்தி இனி எந்த நேரமும் வரலாம்” அவன் நடந்த படி சொன்னான்.
ரஸ்ஸல் ஸ்குயாரில் ஒரு நாலாவது மாடியில் குமாரின் பிளாட் இருந்தது. லிப்ட் இல்லாத மிகவும் பழைய கட்டிடம்.
பிளாட்டுக்குப் போனதும்அவன் ஜன்னல்களைத் திறந்து விட்டான். உலகம் பரபரப்பாய்த் தெரிந்தது. ஜன்னலருகில் நின்று உலகத்தை வெறித்துப் பார்த்தாள் எமிலி. “கடந்த சில நாட்களாக என்ன நடக்கிறது என்று தெரியாது”
குமார் சிரித்தான்.
“அப்படிப் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. அரசகுடும்பத்தில் எக்கச் சக்கமான பிரச்சினைகள். இளவரசர் சார்ல்ஸ் தன் காதலியான கமிலாவுக்குப் பேர்த்டேய் பார்ட்டி வைத்து அகில உலகத்திற்கும் கமிலாவில் தான் வைத்திருக்கம் காதலைப் பிரகடனம் செய்தார்,
பாகிஸ்தான் டொக்டர் கான் இளவரசி டையானாவின் காதற் தொடர்பை முறித்த அடுத்த வினாடி இளவரசி டையானா எகிப்திய கடைக்காரன் மகன் டொடி வையாட்டுடன் கடல் நடுவில் படகுகளில் காதற் கேளிக்கை நடத்துகிறாள். மற்றப்படி மூன்றாம் உலகத்தில் இன்னம் சண்டைகளும் வெள்ளமும் மழையும் மனித உயிர்களை நாசம் பண்ணுகிறது. நான் பிறந்த இலங்கையில் இன்னும் போர் என்ற போர்வையில் ஒரு இன அழிப்பு வேலை தொடர்கிறது. எனவே பெரிதாக ஒன்றும் எங்கள் உலகத்திற்கு வந்து எங்களைச் சிறைப்படுத்தவில்லை”
குமார் சுவாரஸயமாகச் சொல்ல எமிலிக்கு சிரிப்பு வந்து விட்டது.
“நீங்கள் ஒரு வித்தியாசமானவன்” எமிலி வந்து உட்கார்ந்தாள்.
“அப்பாவும் அம்மாவும் அப்படித்தான் அடிக்கடி சொல்வார்கள்”
குமார் அவள் முன்னிருந்த கதிரையில் உட்கார்ந்தான். “ஹொஸ்பிட்டலுக்கு ஒரு தரம் போன் பண்ணட்டா” எமிலி தயங்கியபடி கேட்டாள்.
“நிச்சயமாக” குமார் போனைத் தூக்கி அவளிடம் கொடுத்தான்.
சுவரிற் தொங்கிய கொன்ஸ்டபிள், நேர்னர் சித்திரங்களில் கண்களை ஓட்டிய படி “உங்கள் நண்பர் ஒரு ஆர்ட்டிஸ்ரா” என்று கேட்டாள்.
“இல்லை அவன் ஒரு இந்திய வியாபாரியின் மகன். படிக்கும்போது சந்தித்தேன். கலைகளில் விருப்பம், இங்கிலிஸ் ஆர்ட்டிஸர்களில் விருப்பம். பணக்காரப் பையன். வாழ்க்கையில் அரைவாசி நாள் மும்பையிலும் அரைவாசி நாள் லண்டனிலும் வாழ்வான். அவன் லண்டனில்லாத நாட்களில் அவன் சினேகிதர்கள் இந்த பிளாட்டைப் பாவிப்போம்… இப்படி ஒரு ஆடம்பரமான பிளாட் வைத்திருக்க என்னைப்போல ஸ்ருண்ட்ஸால முடியாது”
அவள் ஹொஸ்பிட்டலை டையல் பண்ணி ஹலோ சொல்ல அவன் குசினிக்குள் போனான்.
தான் இன்று வரமுடியாதென்றும் தகப்பன் ரவியுடன் நிற்க முடியுமா என்று தகப்பனைக் கேட்டுச் சொல்லும் படி நேர்ஸைக் கேட்டுக் கொண்டிருந்தாள் எமிலி.
மகன் ரவியிடமே போக முடியாமல் எமிலியைத் துரத்தும் சோகம் என்ன? குமார் யோசித்தபடி தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தான்,
“சொறி குமார் உங்களுக்குக் கரைச்சல் தந்ததற்கு மிகவும் மன வருத்தப் படுகிறேன்” குசினிக்குள் வந்தாள் எமிலி.
“ஐய்யோ அப்படி ஒன்றுமில்லை. உங்களுடன் ஒரு சில மணித்தியாலங்களைச் செலவழிப்பது மனத்திற்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது”
மரியாதையாகத்தான் குமார் சொன்னான். ஆனால் அவன் ஆர்வம் குரலிற் தொனித்தது.
அவள் தெரிந்தும் தெரியாததுமாகத் தேனீரைப் பருகிக் கொண்டிருந்தாள்.
வெளியில் மிகவும் ஆரவாரம். றஸ்ஸல் ஸ்குயாரைச் சுற்றி எத்தனையோ ஹோட்டல்கள். அவற்றை நிறைக்கும் உல்லாசப் பிரயாணிகள், எல்லோரும் ஒரேயடியாக லண்டனை முற்றுகையிடுவதுபோல் ஒரு சலசலப்பு.
எமிலி பெருமூச்சு விட்டபடி மீண்டும் ஜன்னலடிக்குச் சென்றாள்.
“அப்பாவைப் பார்க்கப் பிடிக்காமலா ஹொஸ்பிட்டலுக்குப் போகாமல் இருக்கிறீர்கள்’ ஆங்கிலேயர்களிடம் தனிப்பட்ட விடயங்களைப் பற்றிக் கதைத்தால் பிடிக்காது. அப்படியிருந்தும் குமார் அவள் படும் தர்ம சங்கடத்திற்குக் காரணம் என்னவென்று அறியும் ஆவலிற்கேட்டான்.
அவள் ஜன்னற் பக்கம் பதிந்து போயிருந்த பார்வையை அவனிற் சொலுத்தினாள். கடந்த சில தினங்களாக அவன் அடிக்கடி ஹொஸ்பிட்டலிற் சந்தித்திருக்கிறாள். ஆனாலும் இன்று ஏனோ ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவனை அளந்து பார்ப்பது போற் பார்த்தாள்.
“எனது அப்பாவுக்கும் எனக்குமுள்ள பிரச்சினை என்னை ஹொஸ்பிட்டலிலிருந்து பிரித்து விடாது… ஆனால்” அவள் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் தயங்கினாள்.
இலங்கைத் தமிழனான இவனுக்கு ஒரு ஆங்கிலேயப் பெண்ணின் வாழ்க்கையை விளங்கிக் கொள்ள முடியுமா? அவள் சிந்தித்தாள்.
‘கல்யாணத்தில் நம்பிக்கையில்லை, ஆனாலும் ஒரு தாயாய் இருக்கும் ஆசையை என்னை விரும்பிய ஒரு இந்தியனின் மூலம் திருப்தி செய்து கொண்டேன் என்று இவள் இலகுவாகச் சொன்னால் இவன் எகிறிக் குதிக்க மாட்டானா? கல்யாணத்துக் கப்பால் உறவுகளை இவன் சந்திக்க முயல்வானா?’
‘ரெயினில் சந்தித்த ஒரு மனிதனுடன் பழக்கம் வந்தது, அந்தப் பழக்கத்தில் அந்த மனிதனுடன் சாப்பிடப் போனேன் அந்தச் சந்திப்பை மற்றவர்கள் கேவலமாகத் திரித்துப் பேசிய போது பிரச்சினையை யுண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள், அதனாற்தான் நான் எனது மகனிடம் போக முடியாமல் இப்போது குமுறிக் கொண்டிருக்கிறேன் என்று இவனுக்கு விளக்கம் சொன்னால் புரிந்து கொள்வானா?
‘புரிந்து கொள்பவனாக இருக்கலாம், இல்லை என்றால் இந்த பிளாட்டுக்குத் தன்னை அழைத்திருக்க மாட்டான்’ எமிலி தேனீர்க் கோப்பையை மேசையில் வைத்தாள்.
உலகம் மிகவும் பொல்லாதது, பெலவீனமான மனிதர்களைப் பலிகொண்டு விடும்” அவள் மெல்லமாகச் சொன்னாள்.
“எனக்குத் தெரியாத தத்துவமா அது” குமார் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
தனது பதினாறாவது வயதில் இலங்கையில் தன் இன விடுதலைக்காகத் தாய் தகப்பன் சொற்களைப் பொருட்படுத்தாமல் ஒரு தமிழ் விடுதலை இயக்கக் குழுவிற் சேர்ந்தவன். அந்த இளம் வயதில் அவன் சந்தித்த சோதனைகள், கொடுமைகள், சித்திரவதைகள் என்பன அவனுக்கு உலகத்தின் அடுத்த பகுதியின் முகமூடியைக் கிழித்துக் காட்டியது.
தமிழ் விடுதலை என்ற பெயரில் தன்னலம் கொண்டலைந்த தலைவர்கள், அவர்களை நம்பிய இளம் சிறார்கள் என்பன அவனுக்குத் தெரியாதா?
சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையை எதிர்க்க அவன் போன்ற இளம் உள்ளம் பரிசுத்தமாகத் தன்னை அர்ப்பணித்ததைத் தங்கள் சுயநலத்துக்குப் பாவித்த குழுக்களின் செய்கைகள் அவனுக்குத் தெரியாதா?
வயதிலும் அனுபவத்திலும் பெலவீனமான இளம் வாலிபர்களைத் தங்கள் வெறிபிடித்த செய்கைகளால் பலி கொண்ட கோர நிகழ்ச்சிகள் படிப்பித்த பாடத்தை இவள் எந்தக் கல்லூரியிற் படித்திருப்பாள்?
ஆங்கில நாட்டில், அரசியற் பிரச்சினைகளும் கொலைகளுமில்லாத நாட்டில் இவள் ஏதோ காதல் விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் அதனால் பிரச்சினை வந்திருக்கலாம். அதை வைத்துக் கொண்டு சிக்கலான சந்தர்ப்பத்தில் முகம் கொடுக்காது சிந்திக்கிறாளா?
“உலகம் என்று எதைச் சொல்கிறோம். எங்களுக்காக மற்றவர்கள் படைத்து வைத்திருக்கும் சட்ட திட்டங்களுக்குப் பயந்து வாழ்ந்து செத்துப் போவதை சொல்கிறீர்களா அல்லது உலகத்தைக் கொண்டு நடத்துவதில் எங்களுக்கும் பங்குண்டு என்ற துணிவில் அதர்மத்தையும் அழிவுகளையும் எதிர்ப்பதையும் நாங்கள் வாழும் உலகம் என்று சொல்கிறீர்களா?”
குமாரின் குரலில் ஆனந்த் பேசுவது போலிருந்தது எமிலிக்கு, பெண்களை அடக்கியும் சாதிக் கொடுமையால் மற்ற மனிதர்களை அடக்குவதற்கும் அப்பால் சில ஆசிய மனிதர்களை மனித உரிமையை மதிக்கிறார்கள் என்பதையுணர்ந்த போது அவள் மனம் சிலிர்த்தது.
இவனுடன் தன் துயரைப் பகிர்ந்து கொள்ளலாமா? எமிலியை விட நான்கோ ஐந்தோ வயது குறைவாக இருக்கலாம் குமாருக்கு.
அவனைப் பார்த்தால் அவளை விட எத்தனையோ உலக அனுபவமுள்ளவன் போலிருக்கிறது.
அவளைப் பற்றிச் சொல்வதானால் எங்கேயிருந்து தொடங்குவது? தாயைப் பிணமாய்க் கண்டதிலிருந்து ஆரம்பிப்பதா அல்லது தன்னைக் காதலித்தவனுக்கே அவன் குழந்தையைத் தான் சுமக்கிறேன் என்று சொல்லாமல் வழியனுப்பியவிடத்திலிருந்து தொடங்குவதா?
சாந்தி அவள் முகம் உயர்த்தி அவள் கணவனைப் பார்க்கவில்லை, அவள் பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தாள், சாந்தியின் கணவன் நடராஜன் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தான்.
‘வெளியிற்போய் நாடகம் போடவேண்டாமாம், எங்களுக்குள் பேசி முடித்துக் கொள்வோமாம்’
அவளுக்கு வந்த ஆத்திரத்தில் துணிகளைத் தாறுமாறாக எறிந்தாள். நேற்றிலிருந்து ஒன்றும் சாப்பிடாத காரணத்தாலோ அல்லது நான் உன் வயிற்றில் வளர்கிறேன் என்று அவள் குழந்தை சொல்வதன் எதிரொலியாகவோ என்னவோ வயிற்றை என்னவோ செய்தது.
“எங்களுக்குள் பேசித் தீர்க்க ஒன்றுமில்லை” அவனைப் பார்க்காமற் சொன்னாள்.
ஒரு சில தினங்களுக்கு முன்தான் அவன் வேலைக்கு வெளிக்கிடும்போது விழுங்கி விடுவதுபோல் அவனைப் பார்த்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்” அவன் விளையாட்டாக அவள் கன்னத்தைத் தட்டினான்.
“நீங்கள் வீட்டுக்குத் திரும்பி வரும் வரைக்கும் உங்களைப் பார்க்காமலிருக்க முடியாமற் சில வேளையிருக்கும். அதற்காக இப்போது உங்களை என் மனத்திரையிற் படம் பிடிக்கிறேன்” அவள் குரலில் குறும்பு.
அப்படியான சாந்தி இன்று அவன் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. இருவருக்குமிடையில் எத்தனை பெரிய விரிசல்.
“நான் சொல்வதைக் கேள் சாந்தி” அவன் கெஞ்சினான். அவள் காதைப் பொத்திக் கொண்டாள்.
“சாந்தி எங்கள் திருமணத்திற்கு முதல் என்னைப் பற்றி வெளிப்படையாக உன்னிடம் எல்லாம் சொல்ல ஆரம்பித்த என்னை ‘எனக்கு உங்களைப் பற்றி ஒன்றும் தெரியத் தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறேன் என்று சொன்னாயே ஞாபகமில்லையா? அவன் அவள் முகத்தை உயர்த்தி இறுக்கிப் பிடித்துக் கொண்டு கத்தினான்.
அவளுக்குத் தலை சுற்றியது. அவன் பிடியிலிருந்து திமிறினாள்.
பத்து வருடங்களுக்கு முன் அவன் எத்தனையோ தரம் அவளிடம் சொல்ல வந்த விடயத்தை அவள் தானே சொல்ல விடாமற் தடுத்தாள்?
கேள்விகள் புழுக்களாய் அவள் இருதயத்தில் நெகிழ்ந்தன. வயிற்றைக் குமட்டி, தலைசுற்றி இப்போது எல்லாமே சூனியமாகத் தெரிந்தது.
ஏன் அவள் அப்போது அவன் சொல்ல வந்தவற்றை சொல்ல விடவில்லை?
அவன் தன்னைப் பற்றி ஒழிவு மறைவற்றுச் சொன்னால் தானும் அன்ரோனியைப் பற்றிச் சொல்ல வேண்டிவரும் என்ற பயமா?
அவள் தானாக நினைத்து அன்ரோனியிடம் ஒழிவு மறைவாகப் பழகவில்லை. இருபது வருட உறவை அவன் அவளின் அன்பனாகத் தன்னை எண்ணி வளர்த்துப் பின் ‘அவளையடைய ஆசைப்பட்டதை அவள் தன் குற்றமாக எண்ணிய குறுகுறுப்பிலா ராஜனுடன் ஒழிவு மறைவின்றிப் பேசத் தயங்கினாள்?
அல்லது மனமுதிர்ச்சியில்லையா? இருபது வயது இலங்கைப் பெண்ணுக்கு இங்கிலாந்தில் படித்தவன் என்ன சொல்லப் போகிறான் என்ற விளக்கம் தெரியாத அறியாமையிலா அவனைப் பேசவிடாமற் தடுத்தாள்?
அவனுக்கு உலகமே இருண்டு கொண்டு வந்தது. பத்து வருடங்களுக்கு முன் இவனைப் பற்றி முழுக்கத் தெரிந்திருந்தால் ‘அதற்கென்ன பழைய கதைகளை விட்டு விடுங்கள்’ என்று சொல்லியிருப்பாளா?
வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.
பாத்ரூமுக்குப் போய் ஓங்காளமெடுத்தாள்.
வயிற்றில் வளரும் குழந்தையின் செல்லச் சேட்டை அதுவா? நான் வளரப் போகிறேன். எனக்கு வயிற்றில் இடம் தேவை என்று இப்போது என்னை ஓங்காளம் எடுக்கச் செய்கிறதா?
அல்லது உனது வயிற்றில் எனக்கு வளரவிருப்பமில்லை. எப்படியாவது வெளியேற வேண்டும். உன் வாயால் என்றாலும் என்னை ஓங்காளித்துத் துப்பிவிடு என்று ஒப்பாரி வைக்கிறதா அந்தச் சின்ன உயிர்?
“சாந்தி உனக்குச் சுகமில்லையா”
அவன் பதறிப் போய்க் கேட்டான்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரென்றால் அவள் கற்பவதி என்று கேள்விப்பட்டதும் அவளைத் தூக்கிக் கூத்தாடியிருப்பான்.
இப்போது என்ன செய்வான்?
வாந்தி எடத்தவாய் கசந்தது. தொண்டை எரிந்தது. வயிறு நொந்தது. கண்கள் பனித்தன. தன் கண்களை அவன் முகத்தில் படரவிட்டாள் ஒரு கணம். அவன் சில நாட்களாகச் சவரம் செய்யாத படியால் அடையாக மீசையும் தாடியும் அரும்பத் தொடங்கியிருந்தது. சரியாகச் சாப்பிடாததால் முகம் வாடி, உடம்பு நலிந்து தெரிந்தது. இன்றிரவு அவன் தூங்காததால் கண்கள் சிவப்பேறிக் கிடந்தன.
அவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.
“எனக்கு உடம்பொன்றும் பாதிக்கவில்லை. மனம்தான் பைத்தியம் பிடிக்க வேணும் எண்டு பிடிவாதம் பிடிக்குது” பைத்தியம் போற் சிரித்தாள்.
“குழந்தை உஷாவுக்கு இப்படியான நிலைமை வந்திருக்கும்போது நாங்கள் இப்படிச் சண்டை பிடிக்கக் கூடாது சாந்தி” அவன் கெஞ்சினான்.
“ஹொஸ்பிட்டலில் உஷா, இப்போ என் வயிற்றில் இன்னொன்று. நீங்கள் என்னவென்றால் இன்னொருத்தியோட ஆட்டம்”
அவள் கற்பவதி என்று கேள்விப்பட்டதும் அவன் ஒரு நிமிடம் உலகத்தை மறந்தான். கடந்த சில வருடங்களாக இருவரும் ஏங்கிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பம்.
“சாந்தி, சாந்தி” அவன் இறுக அவளை அணைத்துக் கொண்டு கொஞ்சினான்.
ஒரு நிமிடம் அவள் அவன் அணைப்பில் அவளை மறந்தாள். உலகை மறந்தாள், ஒரு சில நாட்களுக்கு முன் அவனையணைத்தாற்போல் நடந்த ஆங்கிலேயப் பெண்ணை மறந்தாள். இந்த நெருக்கத்தின் சொர்க்கம் எத்தனை இனிமையானது.
“எதையும் மறைத்து வைத்து வாழ்வதில் எனக்குப் பிடிக்காது. வாழ்க்கை மிகவும் குறுகியது. நேற்றிருந்தோர் வாழ்க்கை ஒரு விஷயத்தில் இன்றைய துயராகி நாளைய சரித்திரமாகி விடும். ஒரு தவிர்க்கமுடியாத வியாதி வந்தால் நான் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பா இந்தச் சோதனை என்று எண்ணி ஏங்க வேண்டிவரும். மற்றவர்களுக்காக நல்லவர்களாக நடிப்பதை விட எங்களுக்குள் எங்களுக்கு நெருங்கிய மனிதர்களுக்குள் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” அவன் இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அவளுக்கு அவன் சொல்வது எல்லாம் சரியாகப் பட்டது. ஆனால் எல்லாவற்றையும் முழுமையாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. இதயம் குமுறிக் கொண்டிருந்தது.
வெளியில் வானம் வெளித்து சூரிய கிரகணம் ஜன்னற் சீலைகளுக்குள்ளால் இவர்களை எட்டிப் பார்த்தது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ருத்திர தாண்டவமாடிய இயற்கை இப்போது தன்னிலைக்கு வந்து வெயிலையும் ஒளியையும் உலகத்திற்கும் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
காலை இளம் நேரத்தின் ஆரவாரம் கேட்கத் தொடங்கி விட்டது. பால்காரனின் வண்டியின் கடபுடா சத்தமும் அவன் குட்மோர்னிங் சொல்லிப் போவதும் கேட்டது.
“எங்களுக்குள் சண்டை வேண்டாம்” அவன் அவள் காதுகளிற் கிசுகிசுத்தாள். அவள் இன்னும் அவன் பிடியில். “நான் எத்தனையோ தரம் ஸேராவைப் பற்றி உன்னிடம் சொல்ல இருந்தேன்”
‘ஸேராவாம் அவள் பெயர்.’ அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
சட்டென்று அவன் பிடியிலிருந்து தன்னை விலத்திக் கொண்டாள்.
என் உயிரே சாந்தி என்று சொல்லும்போது என் உயிரே ஸேரா என்று இவன் மனம் சொல்லி யிருக்காதென்று என்ன நிச்சயம்?
உடலோடு என்னைப் பகிர்ந்து கொண்டவன் உள்ளத்தால் அவளை இத்தனை வருடமும் நினைத்துக் கொண்டிருந்தானா? அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் அவளுக்குப் புரியாத ஒரு மனிதனாகத் தெரிந்தான்.
“ஸேராவை நான் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் அன்றுதான் கண்டேன்”
அவன் குரல் கணீரென்று ஒலித்தது.
அவள் கேட்டுக் கொண்டு நின்றாள்.
“எனக்குப் பிறந்த ஒரு மகனை அவள் பன்னிரண்டு வருடமாக வளர்த்து வருகிறாள் சாந்தி”
அவன் என்ன கற்பனைக் கதை சொல்கிறானா? அல்லது உண்மையாகத்தான் சொல்கிறானா?
தோரணம் கட்டி துளாய் மாலை தொங்கவிட்டுப் பூரண மந்திரம் பொலிவாகச் சொன்ன முகூர்த்தத்தில் கன்னிகாதானம் செய்யப்பட்ட அவளைக் கைப்பிடிக்கும்போது இவன் ஒரு மகனுக்குத் தந்தையா?
சாந்தி அறையை விட்டு ஓடினாள். எப்படிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தாள் என்று அவளுக்கே தெரியாது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. கால்கள் நகர மறுத்தன. நாவரண்டது.
பெட்டியையும் தூக்கிக் கொண்டு ரோட்டிற் கால் வைத்த போது எதிர்பட்டவர்கள் எல்லாம் வேற்றுலக மனிதர் மாதிரித் தெரிந்தார்கள்.
பாற்காரன் குட்மோர்னிங் சொன்னான். அவள் பதில் சொல்லாததை பார்த்து வியப்புடன் நகர்ந்தான் அவன். எப்போதும் மரியாதையாகவும் பணிவாகவும் நடக்கும் “இந்தியப்’ பெண்மணி ஏன் இன்று தன்னை ஏன் என்றும் கேட்காமல் போகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.
மூலைக் கடை பட்டேல் ‘எப்படிக் குழந்தைக்கு’ என்று கனிவுடன் கேட்டார். அவள் ஏதோ சாட்டுக்குத் தலையாட்டி வைத்தாள்.
பாடசாலைகள் லீவு விட்டிருந்தபடியால் குழந்தைகளின் ஆரவாரமில்லாமல் ரோட்டெல்லாம் வெறித்தோடிக் கிடந்தது.
விடுதலைக்கு முன் குழந்தைகளை உல்லாசப் பிரயாணம் கொண்டு போக வேண்டுமென்ற ஆசையிற்தானே குழந்தைகளை மியுசியம் கூட்டிக் கொண்டு சென்றார்கள்?
சாதாரண சம்பவம் அசாதாரண திருப்பத்தை எத்தனையோ பேர் வாழ்க்கையில் தொடக்கி விட்டிருக்கிறதே. அந்த விபத்து நடந்தபின் எத்தனை திருப்பங்கள் அவள் வாழ்க்கையில் நடக்கிறது?
எத்தனை உண்மைகள் வெளிவருகின்றன? இறைவனின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனை?
ஆங்கிலேயக் கிழவன் பார்கின்ஸ் வழக்கம்போல் தன் காலை அப்பியாசமான நீண்ட நடையை (Long walk) முடித்துக் கொண்டு வந்திருந்தார்.
அந்தக் கிழவனைக் கண்டால் சாந்திக்கு எப்போதும் தன் தாத்தாவைப் பார்ப்பது போலிருக்கும். தளர்ந்த வயதிலும் தளராக மனப் பலத்தைக் கொண்டவர் அவர்.
“என்ன சாந்தி குழந்தை உஷா எப்படியிருக்கிறாள்” சோகத்துடன் கேட்டார் கிழவர்
“பரவாயில்லை…. ஆனால் இன்னும் மெஷினின் உதவியுடன்தான் சுவாசிக்கிறாள்.” சாந்தி நீர் மல்கும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
பஸ் ஸ்ரொப் தூரத்தில் தெரிந்தது. லண்டனுக்குப் போகும் பஸ் போய்க் கொண்டிருந்தது. இந்தப் பாரமான சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு ஸ்ரேசனுக்குப் போக முடியாது.
ரக்சி ஏதும் வருகிறதா என்று ரோட்டைப் பார்த்தாள்.
“ஏன் உனது கணவர் உன்னைக் கூட்டிக் கொண்டு போகவில்லையா, காருக்கு ஏதும் பிழையா” கிழவன் பரிவுடன் சாந்தியின் தோளைத் தொட்டார்.
அந்த அன்புப் பரிசத்தில் அடக்கி வைத்திருந்த சோகம் கண்ணீராய் வழிந்தது.
“ஏன் கடவுள் இப்படிச் சோதனை செய்கிறார்”
அவள் கேள்வி அந்த எண்பது வயதுக் கிழவனின் புருவங்களை உயர்த்தியது.
“சாதாரண மனிதர்களுக்குத்தான் கடவுள் இருக்கிறார். அவர்கள் தங்கள் சஞ்சலமான நடவடிக்கைகளைத் தங்களுக்குத் தாங்களே சோதனைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”
அவள் மௌனமானாள்.
“மனதில் கோபமும் குழப்பமுள்ளபோது உண்மையின் பிரமாணங்கள் உருப்படியாய்த் தெரியாது. கோணலாகவும் குறுகலாகவும் தெரியும். நேற்றைய சோகமான நிகழ்ச்சி ஒன்றையே தத்துவமாகத் தெரியும். நேற்று துக்கப்படுத்தியவன் இன்று சந்தோசப்படுத்துவனாகத் தெரியும். விஷயங்களை ஒரு சம நிலையில் வைத்துப் பார்க்கும் முதிர்ச்சியில்லா விட்டால் தேவையில்லாத மனக்குழப்பம் வரும். உனது துயர் எனக்கு விளங்குகிறது. ஆனால் உனக்கு மட்டும்தான் இந்த நிலை வந்தது என்றும் கடவுள் உன்னை மட்டும்தான் சோதிக்கிறார் என்று நினைப்பதும் மிகவும் தவறு’
கிழவன் ஒரு ஆசிரியன் பிரசங்கம் செய்வது போல் சொல்லி முடித்தான்.
“எனது வாழ்க்கையை நினைத்தால் என்னையே அழித்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது” அவள் விரக்தியாய்ச் சொன்னாள்.
அவர் மெல்லமாகச் சிரித்துக் கொண்டார். அன்றாடம் வரும் திடீர்ப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் வாழ்க்கையை அழித்துக் கொள்ள வெளிக்கிட்டால் உலகத்தின் சனத்தொகை மிக விரைவில் குறுகி விடும். உனக்கு மிகவும் அழகிய குடும்பமிருக்கிறது.
“அன்பான கணவன், ஆசைக்கு ஒரு குழந்தை. இதெல்லாம் இல்லாத எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீ அதிர்ஷ்டசாலி சாந்தி நீ அதிர்ஷ்டசாலி” கிழவன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்,
நான் அதிர்ஷ்டசாலியா?
தெரியாய்த் தனமாய் ஒரு குழந்தையின் தகப்பனைக் கல்யாணம் செய்து கொண்டது அதிர்ஷ்டமா?
அன்ரோனிக்கு மறுமொழி சொல்லப் பயந்து தாய் தகப்பன் பேசிய இந்த மாப்பிள்ளைக்கு உடனடியாகச் சம்மதித்தது அதிர்ஷ்டமா?
அல்லது கடவுள் தந்த தண்டனையா? இருபது வருடம் இவளை விரும்பிய ஒருத்தனை மணக்கப் பயந்து இங்கிலாந்து மாப்பிள்ளைக்குத் தலையாட்டியதற்கு இது கடவுள் தரும் தண்டனையா?
அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுப்பான் என்று சொல்வது உண்மையா? நல்லதோர் வீணை செய்து நலம் கெடப் புழுதியில் எறிவது என்பதுபோல் அருமையான வாழ்க்கையைத் தந்த கடவுள் இப்படி அரைகுறையிற் குழப்பலாமா?
தனக்கு ஒரு பெண் தொடர்பு மட்டுமல்ல அத்தோடு ஒரு குழந்தையுமிருக்கிறது என்கிறானே ராஜன், இந்த அதிர்ச்சியை எப்படி அவளாற் தாங்க முடியும்?
ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு குழந்தை வயிற்றில் வளரும்போது தனக்கு இன்னொரு குழந்தை இருக்கிறது என்று சொல்கிறானே இவனை எப்படி எடுப்பது?
தூரத்தில் டக்சி வருவது தெரிந்தது. கையைக் காட்டி மறித்து ஏறிக் கொண்டு ஸ்ரேசனுக்குப் போனாள். அவள் தனியாகப் பிரயாணம் செய்து பழக்கமற்றவள். அவளை அவன் கணவன் கண்ணுக்குள் மணிபோல் உயிராகப் பாதுகாப்பவன்.
அவனா அவளுக்குத் துரோகம் செய்தான்?
ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. அவள் மனமும் ஓடிக் கொண்டிருந்தது.
இளம் வயதில் லண்டனுக்கு வந்து இன்னும் குடிப்பழக்கம் இல்லாமலிருக்கும் தமிழர் ஒரு சிலர்தான்.
ராஜன் வித்தியாசமானவன். நேரமிருந்தால் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாய்ப் பொழுதுபோக்குபவன். அவர்களுக்கு நிறையச் சினேகிதர்கள். பிறந்த வீடு, கல்யாணவீடு என்பன தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் போக மாட்டான். அவன் இலட்சியம் வித்தியாசமானது. எங்கேயாவது ஏதோ ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் நடந்தால் விழுந்தடித்து ஓடுவான்.
தனக்குப் பணமிருந்தால் வீடு முழுக்க மொடர்ன் ஆர்ட் வாங்கி நிரப்புவேன் என்று பெருமூச்சு விடுவான். அவன் வழக்கறிஞன் சம்பளத்தில் வாழ்க்கை மிகவும் சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
‘இலங்கையில், இலங்கையரசாங்கத்தின் இன அழிப்புக் கொள்கையால் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழக்கிறார்கள், அவர்களில் எத்தனை பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றப் படாத பாடு பட்டிருப்பார்கள், லண்டன் வாழ்க்கை கிடைத்த தமிழர் தலை தெரியாது நடக்கலாமா” அவள் தன் கணவனை நினைத்துப் பெருமூச்சு விட்டாள். “உங்களுடன் வந்த பெண் யார்’ என்று கேட்ட கேள்விக்கு ‘அவள் உதவிதேடி வந்த வாடிக்கைக்காரி என்று சொல்வான் என்றுதான் அவள் எதிர்பார்த்தாள். அவன் ‘வீட்டுக்குப் போய் அது பற்றிப் பேசுவோம்’ என்று சொன்ன தோரணையில் அவள் குற்றம் எதையோ உணர்ந்து கொண்டது.
ஹொஸ்பிட்டலுக்குச் சேர்ந்தபோது குமாரைக் காணவில்லை. சங்கர் குடும்பம் குழந்தை உஷாவுடன் இருந்தார்கள். “எங்கே உன் கணவன் ராஜன்” தமயனின் மனைவி ராதிகா கேட்டாள், சங்கரின் மனைவி ராதிகாவுக்கு சாந்தியில் ஏகப்பட்ட பொறாமை. தன் கணவன் கடைக்காரனாக இருப்பதும் சாந்தியின் கணவன் வழக்கறிஞனாக இருப்பதும் அவள் பொறாமைக்கு ஒரு காரணம்.
‘ராஜனின் பழைய வாழ்க்கையை இவள் தெரிந்து கொண்டால் என்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டாளா” சாந்தி தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
“அவருக்குத் தலையிடி கொஞ்சம் பிந்தி வரச் சொல்லி நான் சொன்னேன். “சாந்தி மனம் விட்டுப் பொய் சொன்னாள்.
“உனக்கும் தலையிடியா, முகமெல்லாம் உப்பிக் கிடக்கே” ராதிகா சாந்தியை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.
“குமார் எங்கே போய் விட்டான்”
சாந்தி பேச்சை மாற்றினாள். எப்போது ராதிகா போவாள் என்றிருந்தது.
“உன்னுடைய ஆங்கிலேயச் சினேகிதி எமிலியுடன் பார்க்கில் இருந்தானே” கிண்டலாகச் சொன்னாள் ராதிகா. குமார் ஒரு காலத்தில் இயக்கத்தில் இருந்தவன்.
இப்போது லண்டனுக்கு வந்து இவர் தமிழர் தங்களை மறந்த வாழ்க்கை வாழ்வதை அவன் வியந்து பார்த்தான்.
ராதிகா போன்ற பணப் பிறவிகளை அவனுக்குப் பிடிக்காது. ராதிகா வீட்டுக்கு அவன் போவதும் குறைவு. பகுதி நேர வேலை செய்து கொண்டு பகுதிநேரப் படிப்புப் படிக்கிறான். பதினாறுவயதிலிருந்து இருபது வயது வரைக்கும் அவன் தன் இளமையைத் தமிழ்த் தேசியத்திற்குத் தியாகம் செய்தவன்.
ராதிகாவிற்கு அவன் போக்குப் பிடிக்காது. உருப்படியில்லாதவன் என்று குமாரைப் பற்றிச் சங்கருக்குக் கோள் சொல்வாள்.
எமிலியும் அவனும் கடந்த சில நாட்களாக மிகவும் சினேகிதமாகப் பழகுவதை சாந்தி கவனித்திருக்கிறாள். ரவிக்குக் குமாரைப் பிடித்துக் கொண்டதுதான் பெரிய காரணம் என்றும் சாந்திக்குத் தெரியும்.
சாந்தி ஹொஸ்பிட்டலுக்கு வந்து கொஞ்ச நேரத்தில் டொகடர்கள் உஷாவைப் பார்க்க வந்தார்கள். உஷாவின் நிலை தெளிவாக இன்னும் சில காலம் எடுக்கும் என்று சொன்னார்கள்.
“எவ்வளவு காலம்” தணிந்த குரலிற் கேட்டாள் சாந்தி. பெரிய டொக்டர் தன் வெள்ளைக் கோர்ட் பைகளுக்குள் கையை விட்டப்படி அவளை ஏறிட்டுப்பார்த்தார். பின் ஆறுதலாகச் சொன்னார்” நாங்கள் சாதாரண டொக்டர்கள். கடவுள்கள் அல்ல. எங்களால் முடிந்தவற்றைச் செய்கிறோம். நல்ல மாறுதல்களை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார். வாந்தியும் தலைசுற்றுமாய் வந்தது. எப்படி, எத்தனை நாள் இதெல்லாத்தையும் தாங்குவது?
அத்தியாயம் – 12
அலிஸனின் அழுகை, ஆத்திரம், எரிச்சல், குமுறல்கள் எல்லாம் சாந்திக்குப் புரியக் கூடியதாக இருந்தது.
“உலகத்தில் யாரையும் நம்பக்கூடாது சாந்தி, கட்டிய கணவன், கூடிப் பழகும் சினேகிதிகள் யாரையும் நம்பக் கூடாது” அலிஸன் அவள் கணவன் டேவிட்டையும் சினேகிதி எமிலியையும் வாயாரத் திட்டித் தீர்த்தாள்.
“மகனுக்குக் கால் முறிந்து ஆஸ்பத்திரிக்கு வராமலிருந்தால் இந்த உண்மையெல்லாம் தெரியப் போகிறதா?” அலிஸன் தன் கண்களைக் கசக்கிக் கொண்டாள்.
சாந்திக்கு அவள் மனத்தில் மின் வெட்டியதுபோலிருந்தது. உஷா விபத்தில் அகப்பட்டு ஹொஸ்பிட்டலுக்கு வராமலிருந்தால் ராஜனைப் பற்றித் தெரிய வந்திருக்குமா?
“என்னவோ பீட்டருக்குப் பிளாஸ்டர் போட்டு எக்ஸ்ரே எடுத்திருக்கிறார்கள். பார்த்து விட்டு அவனை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம் என்று சொன்னார்கள். வீட்டுக்குப் போகாமல் ஹொஸ்பிட்டலில் நின்றால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். எமிலியைக் கொலை செய்தாலும் கொலை செய்து விடுவான். பீட்டரை நான் பார்பரா வீட்டில் கொஞ்சக் காலம் வைத்திருக்கப் போகிறேன். என் வீட்டுக்குப் போக மனமில்லை.” அலிஸன் விடாமற் பேசிக் கொண்டிருந்தாள்.
அன்று பின்னேரம் பீட்டரை வீட்டுக்கு அனுப்பினார்கள். அலிஸனும் பார்பராவும் குழந்தைகளுடன் வெளியேறினார்கள். டேவிட் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு பின் தொடர்ந்தாள். சாந்தி தன் வாழ்க்கையையும் அலிஸன் வாழ்க்கையையும் ஒத்துப் பார்த்துக் கொண்டாள்.
எமிலியில் ஆத்திரம் வந்தது. என்னவென்று தன் சினேகிதியின் கணவருடன் காதல் நாடகம் ஆட முடியும்?
எமிலியில் வைத்திருந்த மரியாதை நம்பிக்கை எல்லாம் தவிடுபொடியாயின. உஷாவைக் கொஞ்ச நேரம் நேர்ஸ்மார் பார்க்கட்டும் என்று சொல்லிவிட்டு ரவியிருந்த வார்ட்டுக்குச் சென்றாள்.
ரவியின் தாத்தா மிஸ்டர் ஸிம்ஸன் மிகவும் சந்தோசமாகத் தன் பேரனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“எமிலி இன்னும் வரவில்லையா” சாந்தி கேட்டாள்.
“இல்லை, நான்தான் இன்றைக்கு வரவேண்டாமென்று சொல்லி வீட்டுக்கு அனுப்பினேன். இரண்டு மூன்று நாட்களாக இங்கு நின்று களைத்து விட்டாள். ரவிக்கும் நான் நிற்பது சந்தோசமாக இருக்கிறது”
மிஸ்டர் ஸிம்சன் உற்சாகத்துடன் சொன்னார்.
“பீட்டர் வீட்டுக்குப் போய்விட்டான்” ரவி சாந்தியைப் பார்த்துச் சொன்னான்.
‘ஆமாம் பீட்டரின் தாய் உன் தாயில் மிகவும் ஆத்திரமாக இருக்கிறாள்’ என்று சொல்ல சாந்திக்கு வாய் வந்தது.
“குமார் அங்கிள் எங்கே” குழந்தை ரவி ஆர்வத்துடன் கேட்டான். ‘உனது தாயுடன் கும்மாளம் போடுகிறான்’ என்று சொல்ல வாய் வந்தது.
“பீட்டர் பாரிசுக்குப் போகப் போகிறானாம்” குழந்தை ரவி சாந்திக்கு மேலதிக விடயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஆன்டி பார்பரா நிறைய ஸ்வீட் தந்துவிட்டுப் போனாள்” ரவி தொடர்ந்தான்.
சாந்தியின் அழகிய முகத்தைப் பார்த்தாள். எமிலி மாதிரி ஒருத்திக்கு ரவி மாதிரிக் குழந்தை ராஜனாய் பிறந்திருக்கும்.
அவளுக்கு எமிலியில் விபரிக்க முடியாத கோபம் வந்தது. யாரோ ஒரு இந்தியனின் குழந்தையைத் தகப்பன் தெரியாத குழந்தையாக வளர்த்துக் கொண்டு இப்போது ஒன்றாகப் பழகும் சினேகிதியின் கனிவுடன் கள்ளமாகத் தொடர்பு கொண்டிருக்கிறாள் என்று தனக்குத் தானே சொல்லிச் சலித்துக் கொண்டாள்.
‘ஸேரா’வைப் பற்றி ராஜன் சொன்னபோது யாரோ அன்னியப் பெண்ணாகத் தோன்றியது, இப்போது ஸேராவை எமிலியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
எமிலியின் காதலனாக இருந்த இந்தியனுக்கும் இப்போது இரண்டோ மூன்றோ குழந்தைகள் இருக்கலாம். ஏன் இந்த இங்கிலிஸ் பெண்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? கலப்புக் குழந்தையைப் பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் ஏற்படும் கஷ்டங்கள் இவர்களுக்குத் தெரியாதா அல்லது தங்கள் பருவ இச்சைக்கு முன்னால் ஒரு அப்பாவிக் குழந்தையின் எதிர்காலம் பாழாகுவது பொருட்டாகத் தெரியவில்லையா?
அடுத்த இரண்டு மூன்று நாட்களும் ஹொஸ்பிட்டலில் மிகவும் அமர்க்களமாக இருந்தது. உஷாவுக்கு மேலதிக ரெஸ்ட் மேற்கொள்ளப் பட்டன. எமிலியுடன் சாந்தி முகம் கொடுத்துப் பேசவில்லை.
ராஜன் மனைவிக்குச் சாப்பாடு செய்து கொண்டோ அல்லது வாங்கிக் கொண்டோ வந்தான்,
அவள் ஏனோதானோ என்று சாப்பிட்டு முடித்தாள், அவனில் வெறுப்பாய் வந்தது. ஆனால் அவன் உழைப்பில்லாமல் அவன் தயவில்லாமல் வாழமுடியாது என்று தெரிந்தபோது தன் நிலைகுறித்துப் பரிதாபப்பட்டாள்,
அவன் அவளுடன் பேச முயன்றபோது அவன் எடுத்தெறிந்து பேசினாள். “குழந்தையைப் பார்க்க வந்தால் பார்த்து விட்டுப் போங்கள் என்னுடன் ஒரு பேச்சும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று சத்தம் போட்டாள்.
அடித்துப் போட்ட நாராய் உஷாவின் உடம்பு சுவாசம் எடுக்கும் மெஷினுடன் பொருத்தப்பட்டிருந்தது.
ஒரு சில தினங்களுக்கு முன்னால் உயிரோவியமாய் ஓடித் திரிந்த செல்வம் இப்போது அசைவற்றுக் கிடக்கிறது.
பீட்டர் உடைந்த காலுக்குப் பிளாஸ்டரைப் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டான். ரவியின் நிலைமை நாளுக்கு நாள் தேறிக் கொண்டுவருகிறது. ரவியும் இன்னும் சில நாட்களில் தாயுடன் வீடு போகலாம். உஷா எப்போது சுகம் பெறுவாள்? சாந்தி ஆயிரம் யோசனைகளுடன் துயர் பட்டாள். “எனக்கின்னுமொரு குழந்தைச் செல்வம் தா கடவுளே என்று வேண்டிய போது இருக்கிற குழந்தையை ஏன் கடவுளே இப்படியாக்கினாய்” சாந்தியின் மனம் கடவுளிடம் வாதம் செய்தது.
அன்றிரவு பெற்றோர்கள் தங்கும் அறையில் எமிலியைச் சந்தித்தாள் சாந்தி. அலிஸனின் அழுகை ஞாபகம் வந்தது.
எமிலியைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“நான் அப்படி என்ன தீண்ட முடியாதவளாகி விட்டேனா” எமிலியின் நீலக் கண்கள் சாந்தியைத் துளைத்தெடுத்தன.
ஸேரா என்பவளும் எமிலி மாதிரி உயரமாக அழகிய பொன்தலையுடனும் ஆழக்கடல் நிறத்தில் விழிகளுமுடைய அழகியாக இருப்பாளா?
அவளுக்கு ஒரு குழந்தை வருமளவுக்கு ராஜன் பழகியிருக்கிறான். எத்தனை ஆழமாக அவளைக் காதலித்திருப்பான்.
“என்ன சாந்தி என்னைக் கண்டால் வாயுமடைத்து விட்டதா” எமிலி நிதானமாகக் கேட்டாள். “அலிஸனின் அழுகை ஞாபகம் வந்தது”
கொஞ்ச நேரம் எமிலியின் மௌனம் அந்த இடத்தை நிரப்பியது.
“அலிஸனின் அழுகைக்கு நான் காரணமில்லை” எமிலி எடுத்தெறிந்து பேசினாள்.
“ஓகோ அப்படியா” சாந்தியின் குரலில் கிண்டல்.
“அலிஸனின் அழுகைக்கு எத்தனையோ காரணம், அதற்கு என்னை ஒரு கருவாகப் பாவிக்கிறாள்”
‘அவள் கணவருடன் உனக்குள்ள தொடர்பு அவளின் கண்ணீருக்குக் காரணம் என்று நினைக்கவில்லையா”
“அவள் கணவருடன் அவள் அழவேண்டிய அளவுக்கு நான் ஒரு தொடர்பும் வைத்திருக்கவில்லை” எமிலி சோகமாகச் சிரித்தாள்.
“அப்போது அலிஸன் சொன்னதெல்லாம் பொய்யா?”
சாந்தியின் குரலில் குழப்பம்.
“சாந்தி, காதாற் கேட்பது பொய், கண்ணாற் சில வேளை பார்ப்பதும் பொய் திட்டவட்டமாக ஆராய்ந்தபின் உண்மையை அறிந்து கொள்வது நல்லது” என்று நினைக்கிறேன்.
“நீ டேவிட்டுடன் சாப்பாட்டுக் கடைக்குப் போனதை பார்பரா கண்டதாகச் சொன்னாளே”
“நான் உனது தம்பி குமாருடன் இன்றைக்குச் சாப்பிடப் போனேன். நீயும் அழலாமே” எமிலி கிண்டலாகச் சிரித்தாள்.
சாந்தி குழப்பத்துடன் வெறுமையைப் பார்த்தாள். தாய் தகப்பன்களுக்காக ஒதுக்கியிருக்கும் ஒரு சிறிய விடுதியது. வெளியில் சரியான வெயில் என்றபடியால் சில தாய் தகப்பன்கள் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
“சாந்தி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டிலுக்குப் போகும் உறவைத் தவிர வேறொன்றுமிருக்காது என்று நினைக்கும் முட்டாள்களில் நீயும் ஒருத்தியாக இருப்பாயென்று நான் நினைக்கவில்லை”
சாந்தி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“டேவிட்டுடன் நான் பழகியது உண்மை. ரெயினிற் சந்தித்துக் கொண்டேன். லண்டனில் ஒன்றிரண்டு தரம் சந்தித்திருக்கிறேன். சாப்பாட்டுக் கடைக்கும் போயிருக்கிறேன். டேவிட்டைப் பற்றிய விபரமும் உன் வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு வரும் வரை தெரியாது. சாந்தி உனக்கு ஞாபகம் வருகிறதா எங்கள் குழந்தைகள் பாடசாலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாளில் அலிஸனையும் என்னையும் சாப்பிடக் கூப்பிட்டாயே. அதுவரைக்கும் எனக்கு டேவிட் திருமணமானவன் என்று தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் எனக்கில்லை. ஆனால் டேவிட்டின் அன்றும் கவர்ச்சியான தோற்றமும் என்னைக் கவரவில்லை என்று சொன்னால் நான் பொய் சொல்பவளாவேன்”
எமிலி நேர்மையானவள் என்ற மதிப்பு சாந்திக்கு எப்போதுமிருந்தது. ஸேராவைப் பற்றிய சம்பவமும் அலிஸனின் குற்றச் சாட்டும் ஒரேயடியான நேரத்தில் வந்தபடியால் அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டாள்.
சாந்தி முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள், சாதாரண நாட்களாக இருந்தால் தன் உள்ளத் துயர்களை எல்லாம் சொல்லியழுதிருப்பாள். எமிலியைப் பார்க்கும் போது ஸேராவின் ஞாபகம் வந்ததால் அவளால் எதையும மனம் விட்டுப்பேச முடியவில்லை.
அடுத்த கிழமை சேகர் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சொன்றான். சேகர் சாந்தியின் மூத்த தமயன் சங்கர் மாதிரி அமைதியானவனல்ல. மிகவும் முன் கோபக்காரன். அவன் மனைவி மாலதி அவனுடன் எப்படித்தான் வாழ்கிறாள் என்று சாந்தி நினைத்ததுண்டு. சங்கர் எப்போதும் ராதிகாவின் விருப்பப் படி வாழ்க்கையைக் கொண்டு போகிறான் என்று தெரியும்.
சேகருக்கும் மாலதிக்கும் ஒரு குழந்தைகள். சேகர் எப்போதும் எதிலாவது குறை சொல்லிக் கொண்டிருந்தான். மாலதி தன் கண்ணீரைச் சோகச் சிரிப்புக்குள் சுருக்கிக்கொண்டாள்.
“உஷாவுக்குச் சுகமில்லாமல் வந்த நாள்முதல் நீ ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறாய். ராஜன் எவ்வளவு நல்ல மனிதன். வேலைக்கும் போய் உன்னையும்குழந்தையும் ஹொஸ்பிட்டலுக்கு வந்து பார்க்கிறார்” மாலதி நன்றியுடன் சொன்னாள்.
அன்றிரவு சேகர் நல்ல வெறியில் வந்தான். குழந்தைகளைச் சாட்டாக வைத்துக் கொண்டு ஏதோ பெரிய சத்தம். தான் ஒரு விருந்தாளி என்று நினைக்க வேண்டாம் ஆனால் குழந்தையை ஆஸ்பத்திரியில் வைத்திருக்கும் ஒரு பெண் துயரத்துடன் வந்திருக்கிறாள் என்ற பரிதாபமுமில்லாமல் அவர்கள் தாறுமாறாகக் கத்திக் கொள்வதைச் சாந்தியால் நம்ப முடியாமலிருந்தது.
இந்தக் குடும்பங்களுடன் ஒப்பிடும்போது என் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது? சாந்தி நித்திரையின்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.
பணத்துக்காகக் கணவனை வதைக்கும் ராதிகா, ஒரு நேர சோற்றுக்கும் உடைக்கும் இருக்க ஒரு கூரைக்கும் அடிமையாக நடத்தப்படும் மாலதி.
கணவனில் எந்த நேரமும் சந்தேகமான அலிஸன் என்று இப்படி எத்தனையோ பெண்களுடன் ஒப்பிடும்போது என் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது என்று நினைத்தாள் சாந்தி
அடுத்த நாள் மாலதியின் கன்னம் பழுத்திருந்தது. தனது மைத்துனியை நிமிர்ந்து பார்க்காமல் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள் மாலதி.
“மாலதி உங்கள் நிலைமைக்கு நான் மிகவும் பரிதாபப் படுகிறேன்” சாந்தி துயருடன் சொன்னாள். மாலதியின் கண்களிற் தாரை தாரையாய் நீர் வழிந்து கொண்டிருந்தது.
“நேற்றுச் சொன்னேனே சாந்தி, நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. என்னைப் போல் ஆயிரக்கணக்கான பெண்கள் துயர்படும்போது உன்னைப் போல பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார்கள். உஷாவின் நிலையைப் பார்த்து மிகவும் துயரப்படுகிறேன். ஆனால் அதே நேரம் உங்களைப் போல கணவன் பக்கபலமாக இருந்தால் நான் எந்தத் துயரையும் தாங்குவேன். என் வாழ்க்கையை நினைக்கும்போது சில வேளைகளில் தற்கொலை செய்ய வேண்டும் போலிருக்கிறது”
டேவிட் முகத்தைத் தாழ்த்திக் கொண்டிருந்தான். ஓகஸ்ட் மாத வெயிலில் லண்டன் காய்ந்து கொண்டிருந்தது. பார்பரா இவர்களை ஒரேயடியாகக் கண்ட ரெஸ்ட்டோரண்டில் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்தார்கள் எமிலியும் டேவிட்டும்.
பக்கத்து மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சோடி அரசகுமாரிடையானாவையும் அராபிய செல்வர் தன் டோடி அல் பையாட் பற்றியும் மிகவும் சுவாரஷ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்
“ராஜ குடும்பத்தைப் பழிவாங்கியே தீருவேன் என்றிருக்கிறாள் டையானா” அந்தப் பெண்- அடுத்த மேசையிற் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் சொன்னாள்.
“இதிலொன்றும் பழிவாங்கிப் பிரயோசனமில்லை. ஏதோ வழியில் அரசகுடும்பமும் டையானாவைப் பழிவாங்கியே தீரும்” என்றான் அடுத்த மேசையிலிருந்த ஆண்.
அவர்களின் பேச்சை எமிலி கேட்டும் கேளாதவளாக டேவிட்டைப் பார்த்தாள்.
கடந்த சில வாரங்களாக அவன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் அவன் வயதை இன்னும் பத்து வருடம் கூட்டிக் காட்டின.
நடந்து விட்ட நிகழ்ச்சிகளின் தாக்குதல்கள் அவன் முகத்தில் திரையோடிய கோடுகளாகத் தெரிந்தன. எந்த நேரமும் சிரித்தபடி இருக்கும் அவன் முகம் ஓயாத சிந்தனையுடன் தவித்தது.
அவன் அலிஸனைத் திருமணம் செய்யும் போது பார்பரா மட்டுமல்லாது மற்றும் எத்தனையோ பேர்கள் அவன் செய்யும். முடிவு சரிதானா என்று வியப்புடன் பார்த்தார்கள்.
அவனும் அலிஸனும் எத்தனையோ விதத்தில் வித்தியாசமானவர்கள். அவன் உலகத்தை மிகவும் சுவாரஸயமாகப் பார்ப்பவன், ரசிப்பவன், பகிர்ந்து கொள்பவன்.
அலிஸனோ உலகத்தைத் தூர நின்று பார்ப்பவள், பயப்படுபவள், தன்னை உலகத்திடமிருந்து ஒதுக்கிக் கொள்பவள்.
திருமணத்தின் பின் அவர்களின் போக்கு வெவ்வேறு திசைகளிலேயே போய்க் கொண்டிருந்தது.
குழந்தைகள், குடும்பப் பொறுப்பு என்பன இரு வித்தியாசமான மனிதர்களை ஒன்றாக்கி வைக்கும் என்ற மூட நம்பிக்கையில் அவர்களும் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்களா?
யாருமே மறுமொழி சொல்லாத விடயமது.
இப்போது பார்பராவின் இடைவிடாத நச்சு மொழிகளை நம்பி அலிஸன் டேவிட்டுடனிருந்து தன் வாழ்க்கையைப் பிரித்துக் கொள்கிறேன் என்கிறாள்.
இங்கிலாந்திலும் இப்போது உலகத்தில் எத்தனையோ நாடுகளிலும் சர்வ சாதாரணமாக விவாகரத்துக்கள் நடக்கின்றன. அந்த விவாகரத்துக்களில் அலிஸனினதும் டேவிட்டினுடையதும் வித்தியாசமல்ல.
நீண்ட நாட்களுக்குப் பின் டேவிட் எமிலியைப் பார்க்க வந்திருந்தான். அவளின் குழந்தை ரவியின் நிலை சீராகிக் கொண்டு வருகிறது. இனிச் சில நாட்களில் அவள் தன் குழந்தையுடன் வீட்டுக்குப் போகலாம் என்று டொக்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவனுடன் எந்தத் தொடர்பும் வேண்டாம் என்றிருந்த எமிலி டேவிட்டைக் கண்டதும் மிகவும் பரிதாபப்பட்டாள்.
“என்னால் உங்களுக்கு இந்த நிலை வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்”
அவள் உண்மையான சோகத்துடன் சொன்னாள்.
“நீயாக இல்லாவிட்டாலும் பார்பரா இன்னொருத்தியின் பெயரைச் சொல்லி அலிஸனின் மனத்தைக் குழப்பியிருப்பாள்’
டேவிட் சோகத்துடன் சொன்னான்.
சாப்பாட்டுக்கடையில் ஜோன் வில்லியத்தின் கிற்றார் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.
அவளுக்கு இசை மிகவும் பிடிக்கும்.
அதிலும் மெல்லிசைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆனந்துடன் சேர்ந்தனுபவித்த இந்திய வீணையிசை அவளை எப்போதும் இன்புறுத்தும். தன் தனிமையை மறக்க காதுக்கினிய நாடுவது நல்ல புத்தகங்களும் அவள் இசையுமாகும்.
ஆனந்துடன் எத்தனையோ இசைக் கச்சேரிகளுக்குப் போயிருக்கிறாள். மேற்கத்திய, கிழக்கத்திய இசை என்று எத்தனயோ இசைகளை ரசித்திருக்கிறாள். டேவிட்டுடனிருக்கும்போது ஜோன் வில்லியத்தின் இசை மனத்தை எங்கேயோ இழுத்துக் கொண்டு போனது.
“பார்பராவுக்கு உங்களில் அப்படி என்ன கோபம்” அவள் வெயிட்டர் கொண்டு வந்த சலட்டில் முள்ளுக் கத்தியைச் செலுத்திய படி கேட்டாள்.
“பார்பராவுக்கு என்னில் என்ன கோபமா” ஒரு தரம் அவளை நேரடியாகப் பார்த்தான்.
“நீ பெண் விடுதலையில் நாட்டம் கொள்பவள் நான் பார்பராவைப் பற்றி உண்மைகளைச் சொன்னால் உனக்குக் கோபம் வரும்”
“ஏன் எனக்குக் கோபம் வரவேண்டும்”
“அவள் என்னில் உள்ள பைத்தியத்தில் என் குடும்பத்தையே சீரழிக்கிறாள் என்பதை நீ நம்பப் போவதில்லை. இப்படியான கருத்துக்கள் ஆண்மையின் கற்பனை என்று நீ சொல்லலாம்”
அவள் மௌனம் சாதித்தாள். “பெண் விடுதலையை நம்புவது சரி அதற்காகப் பெண்கள் செய்வதெல்லாம் சரி என்று சொல்லவில்லையே. சாதாரண உலகத்தில் சாதாரண ஆசை அபிலாஷைகளுடன் போராடுபவர்கள் மனிதர்கள். அதில் ஆண்கள் மட்டும் எப்போதும் கெட்டவர்களாகவும் பெண்கள் நல்லவர்களாகவும் இருப்பதில்லையே”
“அலிஸனுக்கு அது விளங்க மாட்டேன் என்கிறது நான் கண்ட பாட்டுக்குத் திரிவதாக அவள் விடாமற் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் அப்படி நினைப்பதற்கு அலிஸனுக்குத் தன்னிலேயே உள்ள தன்னம்பிக்கையின்மை காரணமாக இருக்கலாம். அல்லது பார்பராவிலுள்ள நம்பிக்கை காரணமாக இருக்கலாம்…..” அவன் பெருமூச்சு விட்டான்.
அலிஸனைப் பற்றிய முழுத் தகவல்களையும் எமிலிக்குச் சொன்னால் அந்த உண்மையான தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று முடிவு கட்ட முடியவில்லை.
அலிஸன் பார்பராவுடன் பாரிசுக்குப் போய்விட்டாள். குழந்தை பீட்டரின் பிளாஸ்டர் போட்ட கால்களைப் பாரிஸ் டொக்டர்களிடம் காட்டுவதாச் சொன்னாள். அலிஸன் தன்னில் உள்ள கோபத்தில் குழந்தைகளின் வாழ்க்கையைப் பழிவாங்குவதை அவன் விரும்பவில்லை.
“என்னில் உள்ள கோபத்தில் ஏன் குழந்தைகளை இப்படி நாடோடியாக்குகிறாய்” என்று அவன் கேட்டான்.
“அவர்கள் நாடோடிகள் இல்லை, ஒரு நல்ல அன்பான வாழ்க்கையின் சூழ்நிலையில் வளர்கிறார்கள்” அலிஸன் தன் வழக்கமான கீச்சுக் குரலிற் சத்தம் போட்டாள்.
“என்ன அன்பான சூழ்நிலை? பார்பரா எப்படி வாழ்கிறாள் என்று எனக்குத் தெரியும்” அவன் திருப்பிச் சத்தம் போட்டான். “அவள் என்னை மிகவும் காதலிக்கிறாள்” அலிஸனின் குரலில் என்றுமில்லாத தெளிவு.
அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. பார்பராவின் செக்ஸ் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும் ஆனால் அலிஸனுக்கு மட்டும் ஏன் தெரியாமலிருக்கிறது?
காதல் என்ற வார்த்தை இப்போதெல்லாம் கண்டபடி பாவிக்கப்படுகிறதா?
டேவிட் அலிஸனுடன் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. குழந்தை பீட்டர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது, எமிலியைப் பற்றி அலிஸன் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பது எல்லாம் சேர்த்து அவளைக் குழப்பி விட்டிருக்கிறது. அப்படித்தான் அவன் நினைத்தான்.
அலிஸனின் உலகம் எப்போதும் குழப்பமானது, நம்பிக்கையற்றது. டேவிட்டைத் திருமணம் செய்து கொண்டதே தன்னால் நம்ப முடியாத விடயம் என்று சொல்லியிருக்கிறாள்.
போதாக்குறைக்கு அவள் மனத்தில் பார்பரா இடைவிடாது நச்சு விதைகளை விதைத்தும் கொண்டிருக்கிறாள். அலிஸனின் மனத்தைக் குழப்புவது தன்னைப் பழிவாங்கத்தான் என்று அலிஸனுக்குச் சொன்னால் அவள் நம்பவா போகிறாள்?
எமிலியிடம் தன் வாழ்க்கையின் சீரழிவைச் சொல்லி அவள் அனுதாபத்தை அவன் பெறவிரும்புவதாக அவள் நினைக்கக்கூடாது என்று நினைத்தான். அதே நேரம் அவனை முழுக்க முழுக்க உணரத் தெரிந்தவர்கள் யாரும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.
தாய் தகப்பனுக்கு ஒரே மகன். அவன் திருமண வாழ்வு சந்தோசமாக இருக்க வேண்டும் என்று அவன் தாய் இடைவிடாது பிரார்த்திக்கிறாள். மிகவும் பக்தியான கத்தோலிக்க மாது டேவிட்டின் தாய், மகனின் மனைவி அவனைப் பிரிந்திருக்கிறாள் என்பதைத் தாங்க மாட்டாள். அத்தோடு இவனைப் பிரிந்து விட்டு இன்னொரு பெண்ணுடன் வாழத் தொடங்கி விட்டாள் என்பதை அவள் தாங்க மாட்டாள். தனக்கு முன்னால் குழந்தைத் தனத்துடன் எதையோ மறைக்க எத்தனிக்கும் டேவிட்டை ஏற இறங்கப் பார்த்தாள் எமிலி.
அவனைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. அலிஸன் அவனை விட்டுப் போவாள் என்பதை அவன் கனவு கூடக்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கண்டிருக்க மாட்டான். எப்படிச் சத்தம் போட்டாலும் கல்யாண உறவுகளில் மிகவும் நம்பிக்கை கொண்டவள் அலிஸன்.
டேவிட்டின் சிந்தனைகள் எங்கெல்லாமமோ சிதறின. சாப்பாட்டில் மனமில்லாமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருக்கும் டேவிட்டை எப்படித் தேற்றுவது என்று எமிலிக்குத் தெரியவில்லை.
“அலிஸன் ஏதோ கோபத்தில் போனாலும் எப்படியும் திரும்பி வருவாள்” எமிலி அவனைச் சமாதானப்படுத்துவதற்காகச் சொன்னாள்.
சாப்பாட்டை ஒதுக்கிவிட்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான் டேவிட். நீண்ட நாட்களாக அவளை அவ்வளவு அண்மையில் வைத்துப் பார்க்கவில்லை. அவளின் அழகிய நீலவிழிகள் பட்டாம்பூச்சிகளாய் அவன் முகத்தை வளைய வருவதை ரசிப்பது மிகவும் சந்தோசமாக இருந்தது.
அவன் பார்வை தர்ம சங்கடமாக இருந்தது. பழச்சாற்றில் பார்வையைப் பதித்துக் கொண்டாள்.
“எமிலி…”
அவன் எதையோ மிகவும் ஆழமாகச் சொல்ல நினைக்கிறான் என்பது அவன் பீடிகையிற் தெரிந்தது.
‘என்ன’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.
“அலிஸன்… அலிஸன் பார்பராவுடன் குடித்தனம் செய்வதாகப் போய்விட்டாள்”
எமிலி கொஞ்ச நேரம் பார்வையை வெளியிற் செலுத்தினாள். தெரு மிகவும் ஆரவாரமாகத் தெரிந்தது. இதில் எத்தனை கணவன் மனைவியர் நாளைக்குப் பிரிந்து போய் யாரோ ஒருத்தருடன் குடித்தனம் செய்யப் போகிறார்கள்?
“நான் என்ன சொல்கிறேன் என்பது விளங்கும் என்று நினைக்கிறேன்”
“அதாவது அலிஸனும் பார்பராவும் லெஸ்பியன் என்று சொல்கிறீர்கள்”
அவள் வாயால் தன் மனைவியை லெஸ்பியன் என்று கேட்பதை அவனாற் சகிக்க முடியாமல் தவித்தான்.
மனைவி ஒரு கணவனை விட்டுப் போவதையே பெரும்பாலான ஆண்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதிலும் தன் மனைவி இன்னொரு பெண்ணுடன் போய் விட்டாள் என்பதை இவன் தாங்குவானா?
இவன் ஆண்மை சீறு கொண்டெழப் போகிறதே!
எமிலி மௌனமாக அவனைப் பார்த்தாள்.
“அலிஸன் இப்போதுதான் தனது சுயமான சிந்தனையுடன் செயற்படுகிறாள் என்று நினைக்கிறேன்”
“என்ன” டேவிட் அவசரமாகக் கேட்டான்.
“அவள் எப்போதுமே பெண்பாலியல் சேர்க்கையை விரும்புவளாக இருந்திருக்கலாம் ஆனால் அதை எப்படி உணர்ந்து கொள்வது என்பது தெரியாமலிருக்கலாம், அல்லது தான் லெஸ்பியன் என்று தெரிந்து கொண்டதும் அதை ஒப்புக் கொள்ளப் பயப்பட்டிருக்கலாம். இப்போது பார்பராவின் தயவால் உண்மைகளை ஒப்புக் கொள்ளத் துணிவு வந்திருக்கலாம்” எமிலி வார்த்தைகளைக் கவனமாகச் சொன்னாள்.
அலிஸன் பார்பராவில் காதல் என்று சொல்வதற்குப் பார்பரா மட்டும்தான் காரணம் என்று டேவிட் பிடிவாதமாக நம்புவதை எமிலியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“டேவிட் யாரும் இன்னொருத்தரைப் போய் ஹோமோ செக்சுவல்களாகவோ அல்லது லெஸ்பியன்களாகவோ மாற்றுவதில்லை. ஒவ்வொரு மனிதரும் தன்னினச் சேர்க்கையில் ஒரு கொஞ்சமாவது இச்சையுடன்தானிருக்கிறார்கள். அந்த உறவுகளை சினேகிதம் என்றளவில் மறைத்து விட்டுக் கலாச்சாரம், சம்பிரதாயம், மரபுக் கோட்பாடுகளுக்குப் பயந்து கல்யாணங்களுக்குள்த் தங்களைப் பிணைத்துக் கொள்கிறார்கள். உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்து தொலைக்கிறார்கள். சமுதாயத்துக்காக, சாத்திர கோத்திரங்களுக்காக இன்னொருத்தருடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு தங்களையுமழித்துக் கொண்டு இன்னொருத்தர் வாழ்க்கையும் அழித்துக் கொள்கிறார்கள்”
எமிலி சொல்லி முடித்ததும் டேவிட் கண்கலங்கப் பார்த்தான். அவனைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. “ஆண்கள் அழக்கூடாது என்றில்லையே…. அழலாம்” அவள் அன்புடன் சொன்னாள்.
“எமிலி எனக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருக்கிறது”
“ஏன் டேவிட் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்க வேண்டும். ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காவிட்டால் பிரிந்து போவது கொளரவமான விடயம். பிரிந்து போகும்போது தங்களுக்குப் பிடித்த துணையுடன் சேர்ந்து போவது பாதுகாப்பு என்று நினைப்பது இயற்கையில்லையா”
“எமிலி, அலிஸன் லெஸ்பியன் என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டாள் என்பதை என்னால் நம்ப முடியாமலிருக்கிறது. அதுவும் இரண்டு குழந்தைக்குத் தாயானபோது….”
அவன் சொல்லி முடிக்க முதல் எமிலி சிரித்தாள்.
“டேவிட் உலகத்தில் எத்தனையோ ஆண்களும் பெண்களும் தங்கள் செக்சுவாலிட்டியை உண்மையாய்த் தெரிந்து கொள்வதில்லை. ஏதோ வாழ்ந்து தொலைக்கிறார்கள், கல்யாணம் செய்கிறார்கள், கட்டிலுக்குப் போகிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். தாம்பத்திய சேர்க்கையின் இன்ப நிலை என்னவென்றே தெரியாமல் எத்தனையோ பெண்கள் வாழ்ந்து முடித்து விட்டார்கள். அலிஸன் பார்பராவிடம்தான் இந்த இன்பத்தை அனுபவிக்க உணர்ந்து கொண்டாள் என்பதை உங்கள் ஆண்மை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதை நான் உணர்வேன். ஆனால் இதுதான் யதார்த்தம், உண்மைகள் மிகவும் கசப்பானவை. ஆனால் வாழ்க்கை மூட்டத்தில் அனுபவிக்க வேண்டிய சில உண்மையது” எமிலி சொல்லி முடித்தாள்.
”எமிலி எனக்கு இப்போதுதான் முப்பத்தைந்து வயது; இப்படியா என் வாழ்க்கை குழம்ப வேண்டும்”
“நீங்கள் உங்களைக் குழப்பிக் கொள்கிறீர்கள் டேவிட்.. நான் மிகவும் கொடூரமாகச் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்கள்.. உண்மை என்னவென்பதை உணர்ந்தால் குழம்பிக் கொள்ளத் தேவையில்லை”
டேவிட் எழுந்து கொண்டான்.
மௌனமாக நடந்தான். அவள் தொடர்ந்து வந்தாள். அவள் சொன்ன விடயங்கள் அவனைத் துன்பப் படுத்தியிருக்கும் என்று தெரியும்.
சாப்பாட்டுக் கடையை விட்டு வெளியேறியதும் அவன் மௌனமாக நடந்து கொண்டேயிருந்தான்.
“என்னில் கோபமா” அவள் கேட்டாள்.
“உன்னைக் கோபித்து என்ன பிரயோசனம்” அவன் பெருமூச்சுடன் சொன்னான்.
”ஐயாம் சொறி டேவிட்.. உண்மையாகவே உங்கள் நிலைக்கு மனம் வருந்துகிறேன்”
“என்னில் வருத்தப் பட வேண்டாம் எமிலி” அவன் திரும்பி அவள் மூகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவளுக்குத் தெரியும்.
“கொஞ்ச நாட்களாக நீ குமாருடன் நெருங்கிப் பழகுகிறாய் எமிலி”
“ஏன் நான் குமாருடன் பழகுவது லண்டன் சட்டப்படி ஏதும் பிழையா” அவள் கிண்டலாகக் கேட்டாள்,
“என்னிலிருந்து தப்பி ஓடத்தான் குமாருடன் நெருங்கிப் பழகுகிறாயா”
அவள் சிரித்தாள்.
“டேவிட் எனக்கு இப்போது முப்பத்து மூன்று வயது. குமாருக்கு இருபத்தெட்டு வயது. உங்களுக்குப் பயந்தோ அல்லது தப்பி ஓடுவதற்காகவோ நான் குமாருடன் பழகவில்லை. குமார் ஒரு நல்ல மனிதன். எனது ஆனந்தை ஞாபகப்படுத்தும் ஒரு அழகிய மனம் படைத்தவர், எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள
ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. குமாருடன் பழகுவது ஒரு இனிமையான அனுபவம். அதைப் பற்றித் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம்”.
“எமிலி…’ டேவிட் தன் நடையை நிறுத்தினான்.
“என்ன” எமிலி கேட்டாள்.
“நீ குமாரைக் காதலிக்கிறாயா”
எமிலி நீண்ட நேரம் அவனைப் பார்த்தாள்,
அவள் என்ன சொல்ல வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
“இப்போது காதலில்லை. ஒரு நாளைக்கு வரலாம் என்று நினைக்கிறேன்” என்றாள் எமிலி.
– தொடரும்…
– இந்த நாவல் 1997-1998 ஆம் ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது.
– வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்),முதற் பதிப்பு: டிசம்பர் 1997, குமரன் பதிப்பகம் , சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கருணைக் கொலை
சூசை எட்வேட்
July 11, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
July 11, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 11, 2026
