இறப்பின் பின்னது…
கதையாசிரியர்: உரு.வளவன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 41
“இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!”

புது தில்லியில் உள்ள ஒரு ஒன்றிய அரசின் தலைமை அலுவலகம். காலை 10.30 மணி. மெதுவாக ஊழியர்கள் வந்து கொண்டு இருந்தார்கள். அந்த பிரிவு அலுவலர் சர்மா வரும்போதே, இன்னைக்குன்னு பாத்து மெட்ரோ இவ்வளவு கூட்டம். கேந்திரிய டெர்மினல் இறங்கி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. வந்தவுடன் தனது சட்டை பையிலிருந்து பாண் பராக் எடுத்து கடைவாயில் இடுக்கிக் கொண்டார்.
நீரஜா புதிதாக சேர்ந்த இளநிலை எழுத்தர். ஒரு கோப்பை எடுத்துக் கொண்டு வந்து பிரிவு அலுவலரிடம் வந்தாள். சார். இது நம்ம டிபார்ட்மென்ட்ல பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்காக வந்திருக்கும் விண்ணப்பங்கள். இது ரொம்ப நாளா பெண்டிங் இருக்கு. இதை எப்படி முடிவெடுக்க வேண்டும், என்று கேட்டாள்.
நீரஜா, நீங்க புதுசா வந்திருக்கீங்க… ஒன்னும் அவசரம் இல்ல. மெதுவா, எடுக்கலாம். ஒன்னும் குடி முழுகி போகாது, என்றார்.
சார். கருணை அடிப்படையில் வழங்கப்படும் நியமனம் என்பது ஒரு அரசு நலத்திட்டம். ஒரு குடும்பத்தின் வறுமையைத் தடுப்பதற்கான ஒரு நிவாரண நடவடிக்கை. இதில் நாம் நடவடிக்கை எடுக்கா விட்டால், உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு, நாம் செய்ய வேண்டிய நன்மையை செய்யாமல் காலம் தாழ்த்துவது, சரியாக இருக்காது, என்றாள் நீரஜா.
இந்த மதராஸிகளுக்கே உள்ள நிரந்தரமான மனநிலை. நீதி, நேர்மை, நியாயம், கத்திரிக்காய், புடலங்காய்ன்னு ஏதாவது பேசிகிட்டு. நீ ஒன்னு பன்னு, அங்க கடைசி சீட்ல, குனிஞ்ச தலை நிமிராம, மானிட்டர் உள்ள தலையை விட்டுகிட்டு ஒருத்தர் வேலை பார்த்துகிட்டு இருக்கார் பார்…
ஆமாம்… சன்முகம் சார்…
அவர் கிட்ட போய் கேள்… அவர் உனக்கு சொல்வார்…
ஒரு மதராஸிக்கு இன்னொரு மதராஸி … சரியா இருக்கும், என்றார் சர்மா.
நீரஜா… சன்முகத்திடம் சென்றாள்… வணக்கம் சார்… என்றாள்…
இன்முகம் காட்டி வரவேற்றார் சன்முகம்…
சார்.. இந்த compassionate ground appointment file ரொம்ப நாளா கிடப்பில் இருக்கு. இத எப்படி…, என்று கேட்டாள் நீரஜா..
நீங்க என்ன பன்னுங்க., முதலில் இதை chronological order ல ஒரு லிஸ்ட் தயார் பன்னுங்க…, அந்த ஊர்ல இருக்க லோக்கல் ஆபீஸ் கிட்ட ஒரு வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் கேளுங்க…
அது எல்லாம் ரெடி சார் … ஆனா., எல்லா ரிபோர்டும் ஒரே மாதிரி இருக்கு… இறந்த ஊழியரின் குடும்ப நிலை… இறந்தவருக்கு … இப்போ வேலை கேட்பவருக்கும் என்ன பிரச்சினை என்ற எந்த விபரமும் இல்லை … உண்மை தன்மை இருப்பதாக தெரியவில்லை என்றாள் …
அப்ப ஒன்னு செய்வோம்… நான் இப்ப நம்ம தலைமை அதிகாரியை சந்திக்க சர்மா சார் கூட போறேன்.. நீங்களும், இந்த பைலை எடுத்து கிட்டு வாங்க … உங்க சந்தேகம் … அதற்கான தீர்வு கிடைக்கும் என்றார் சன்முகம்.
தலைமை அதிகாரியின் அறை. வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகு, யார் இந்த பெண் என்று கேட்டார் தலைமை அதிகாரி. சர்மா சொன்னார், இந்த பெண் compassionate ground appointment file ல ஏதோ சந்தேகம் கேட்கனும்னு சொன்னாள், என்றார்.
என்னம்மா, சொல்லுங்க.. என்றார் தலைமை அதிகாரி. சார். இந்த வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. உண்மையை பிரதிபலிக்க வில்லை. நாமளே, இங்கிருந்து ஒரு அதிகாரியை அனுப்பி, நேரடி ரிப்போர்ட் வாங்கினால் தான் நாம சரியான முடிவை எடுக்க முடியும். உண்மையான குடும்ப உறுப்பினருக்கு நிவரானம் கிடைக்க வழி செய்யலாம், என்றாள்.
Good Idea, அந்த பைலை கொடுங்க… என்று வாங்கி … அந்த பையன் ஒருத்தன் துருதுருன்னு இருப்பானே … அவன் பேர் என்ன, என்று கேட்டார் தலைமை அதிகாரி.
நம்ம சந்தன் குமார் சார்…
ஆமாம். அவனையே நாமினேட் பண்றேன். அவனை அனுப்புங்க. Genuine Report குடுப்பான் என்றார் தலைமை அதிகாரி.
மாலையில் தகவல்கள் சந்தன் குமாரிடம் கொடுத்தாள் நீரஜா.
சந்தன் அவற்றை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து, அவற்றை ஒரு முறை படித்துப் பார்த்தான். இரண்டு சென்னை, ஒன்று கொச்சி, ஒன்று பெங்களூரு மற்றொன்று பாட்னா. முதலில் சென்னை புறப்பட்டான்.
முதல் இறந்த நபரின் வீட்டிற்கு சென்றான். அந்த வீட்டில் கருணை அடிப்படையில் வேலைக்கேட்ட பெண் அங்கு இல்லை… இறந்த நபரின் வயது 27. வேலைக்கேட்ட பெண், அவரது மணைவி, வயது 25. அந்த வீட்டில் வயதான ஒரு தாய் மற்றும் கண் தெரியாத தந்தை இருந்தனர். அவர்கள் கூறியது. கருணை அடிப்படையில் வேலைக்கேட்ட பெண் தங்கள் மருமகள் தான், என்றனர். தங்கள் மகனுக்கு திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே, தான் முன்பே ஒருவரை காதலித்து வந்ததாகவும், எங்கள் மகனுடன் வாழ்வது இயலாத காரியம், என்று கூறி சென்று விட்டாள். அந்த
நெருக்கடியிலிருந்து வெளிவர இயலாத எங்கள் மகன், திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டான். அவள் எங்கள் இறந்த மகனின் சாவுக்குக் கூட வரவில்லை.
அடுத்த நாள், அவன் அலுவலகம் சென்று, தான் தான் எங்கள் இறந்த மகனின் மணைவி என்றும், அனைத்து பண பலன்களும் தனக்கே வர வேண்டும் என்றும் எழுதிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறாள். நாங்கள் ஒன்றும் சொல்ல இயலவில்லை. எங்கள் விதி, என்று நொந்தனர். மேல் விசாரனையில், இவையனைத்தும் உண்மை என்றே தெரிந்தது.
இரண்டாவது இறந்த நபர் வீட்டில், ஒரு இளம் விதவை, தன் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு குடிசை வீட்டில் இருந்தாள். அவள் வசித்த நிலையை பார்க்கும் போதே, கண்ணீர் வரவழைக்கும் படி இருந்தது. அவள் சொன்னாள். நான் அவரை லவ் பன்னி கல்யாணம் கட்டிகிட்டேன். அவர் அந்த ஆபிஸ்ல கேன்டீன்ல, டீ பாய், நிரந்தர வேலை இல்லாமல் இருந்தார். ஒரு நாள் சொன்னார். இன்னைக்கு வேலை நிரந்தரம் ஆயிடும். ஆர்டர் வந்துட்டு வந்து உன்ன சினிமாக்கு இட்டுனு போறேன்ன்னார். ஆனா, அவர் வற்ற வழியில் பஸ் ஏறி இறந்துட்டார். வேலை நிரந்தரம் ஆயி ஒரு நாள் தான்.
அவர் அப்பா அம்மா பக்கத்து வூட்ல தான் கீறாங்க… அவங்களையும் நான் தான் பாத்துக்கிறேன்னு சொன்னாள் அந்த பெண். அப்போது அங்கே வந்த இறந்த நபரின் தாய் தந்தையரும் இதையே சொன்னார்கள். சற்றே கனத்த மனதுடன் கொச்சி புறப்பட்டான் சந்தன்.
கொச்சியில் அவனுக்கு ஒரு விசித்திரமான கதை காத்திருந்தது. இறந்த நபர் 55 வயது அதிகாரி. அவரது மகள் பி.இ பட்டதாரி. இள நிலை எழுத்தர் பணி கேட்டு விண்ணப்பித்து இருந்தாள். வீட்டில் அனைத்து வசதிகளும் இருந்தது. வாசலில் ஒரு பெரிய கார் இருந்தது. எப்படி இறந்தார் என்று கேட்ட போது, அலுவலகத்தில் போன் பேசிக்கொண்டு இருக்கும் போதே, இறந்து விட்டதாக சொன்னார்கள். இதில் ஏதோ சூது இருக்கிறது என்று யோசனை செய்து கொண்டு வெளியில் வந்தான்.
எதிர் வீட்டில் இருந்து ஒரு சேட்டன், சாரே… நிங்கள், ஏது டிபார்ட்மென்ட், உங்களுக்கு ஒரு விஷயம் அறியுமோ… ஞான் பறையும் … என்று பக்கத்தில் இருந்த சாயா கடையில் ஒரு கட்டன் சாயாவும் பழம்பொறியும் வாங்கிக்கொண்டு வந்தான்.
அவன் சொன்னான். “மறிச்ச ஆள் … ஒரு கையூட்டு பேர்வழி… அவன் வாங்கிய கையூட்டு எல்லாத்தையும் அவனது மாமனார் கிட்ட கொடுத்து வச்சான். பின்னே, ட்ரான்ஸபெர் ஆகி வந்த பின்ன, அந்த பைசாவ திருச்சி தரச் சொல்லி கேட்டப்பொழ், மாமனார் பரஞ்சது, எனிக்கு, நாலு பெண் குட்டி, நாலு பேருக்கும், நாலு ஷேர் தரும் …னு…, இது கேட்ட பின், போன் பேசிக்கொண்டே மறிச்சு… பின்ன அவன் போயி.”.. சந்தன் திகைத்து
விட்டான். மேல் விசாரனையில், இவை அனைத்தும் உண்மை என்றே புலப்பட்டது.
பெங்களூரு என்ன சொல்ல போகிறது என்ற யோசனையுடன் சென்றான் சந்தன். இறந்த நபர் 35 வயது ஆண். இறந்த இடம்.. Isolation/Confinement ward, Govt Jayadev Hospital, என்று தெரிய வந்தது. முதலில் அந்த டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் என்று சந்தன் அங்கு போனான். அவனுக்கு உண்மையில் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த டாக்டர் கேஸ் ஷீட் காட்ட மறுத்தார்.
பிறகு, ஏகப்பட்ட பீடிகை போட்ட பிறகு, அந்த கேஸ் ஷீட் எடுத்து வர சொன்னார் டாக்டர். அதை நீங்கள், பார்க்க மட்டுமே அனுமதி, போட்டோ எடுக்கக் கூடாது, எதிலும் இதைப் பற்றி சொல்லக் கூடாது என்று சொல்லி காட்டினார். தலையில் அடிபட்டு வந்து சேர்க்கப்பட்ட அந்த நபர், போதை மருந்து உட்கொண்டு இருந்ததால், ரத்த பரிசோதனையில் HIV Positive என்று தெரிந்தவுடன் Isolation Ward மாற்றப்பட்டு, இறந்திருக்கிறார். அவரது உடல் நேராக மின் மயானத்தில் மாநகராட்சி ஊழியர்களால் தகனம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் டெத் செர்டிபிகேட், மாரடைப்பு என்று காரணம் சொல்லப் பட்டு இருந்தது.
கருணை அடிப்படையில் வேலைக்கேட்ட பெண் அந்த நபரின் மணைவி 28 வயதானவர். ஒரு பெண் குழந்தை, ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள்.
சற்று மன திடம் குறைந்த நிலையில், சந்தன் கேட்டான், டாக்டர் இந்த நபரின் மணைவி மற்றும் குழந்தையை பரிசோதித்தீர்களா? அவர்களுக்கு எதுவும் பாதிப்பு ..?
புன்முறுவல் பூத்தார் டாக்டர். நீங்கள் ஒரு மனிதாபிமானி என்று நிரூபித்து விட்டீர்கள்… கவலை வேண்டாம்… அவர்கள் பாதிப்படைய வில்லை…
அப்படியென்றால், அவர்களுக்கு, இந்த உண்மை தெரியுமா? என்று பதட்டத்துடன் கேட்டான் சந்தன். இல்லை.. இல்லை.., வேறு விதமாக… அவர்களின் இரத்தம் எடுத்து பரிசோதனை செய்யப் பட்டு விட்டது… நல்ல வேளை, அவர்கள் எந்த வித பாதிப்பும் அடைய வில்லை, என்றார் டாக்டர்.
சேகரித்த விபரங்களை கோப்புகளுடன் சரிபார்த்த போது, அனைத்தும் பொருந்தி வந்தது. ஒருவிதமான மன உளைச்சல் அடைந்தான் சந்தன்.
அதோடு பாட்னா புறப்பட்டான். அங்கு இறந்தவர் பெயர் ரமேஷ் சந்த் ஜா… இவர் எப்படி இறந்தார் என்று கேட்ட போது., முதல் நாள் மூத்த மகள் இறந்தவுடன் மறுநாள் இவர், என்றனர்.
அப்போ, கருணை அடிப்படையில் வேலைக்கேட்ட பெண் அந்த நபரின் இரண்டாவது மகளா? ஆமாம். இப்போது ஜா-வின் மனைவியும் இரண்டாவது மகளும் தான் இருந்தனர்.
அடுத்தடுத்த நாட்களில் இரண்டு மரணம். இந்த குடும்பம் எவ்வாறு தாங்கும். நேரடியாக கேட்க மனசு வர வில்லை. அப்போது அங்கு வந்த அவர்களது குடும்ப நண்பர் சின்ஹா…, அவர் வீட்டுக்கு வருமாறு சொன்னார்.
அங்கு போன போது சொன்னார்.
ஜா .. எப்போதும், அலுவலக வேலை என்று இருப்பவர். இவரது மூத்த மகள் படிப்பில் படு சுட்டி. தனது இன்ஜினியரிங் கடைசி செமஸ்டர் ரிசல்ட் வந்தபோது, ரேங்க் குறைந்த விடயத்தை தன் தந்தையிடம் தெரிவிக்க பல முறை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு இருக்கிறாள். ஆனால், இவர் வேலை மும்முரத்தில், போனை எடுக்கவே இல்லை. ஒருவேளை, தன் தந்தையார், ரிசல்ட்-ஐ பார்த்திருப்பாரோ… ரேங்க் குறைந்தது தெரிந்து கொண்டு, கோபத்தில் போன் எடுக்க வில்லையோ என்று நினைத்துக் கொண்டு தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டாள். விபரம் அறிந்து வீட்டுக்கு சென்ற ஜா, தனது அறிவிலில்லாத செயலை நினைத்து குமைந்து போய், அடுத்த நாள் இவரும் அதே முடிவை தேடிக் கொண்டார், என்று சொன்னார் சின்ஹா. டெத் செர்டிபிகேட் அவ்வாறே சொன்னது. போலீஸ் ரெகார்டஸ் கூட அதையே கூறியது.
இவை எல்லாவற்றையும், முடித்துக் கொண்டு போன சந்தன், தனது அறிக்கையை தாக்கல் செய்தான். உங்கள் பரிந்துரை என்ன என்று கேட்டார் தலைமை அதிகாரி. நான் உண்மை நிலையை அறிந்து ரிப்போர்ட் பண்ணியிருக்கேன். நீங்கள் முடிவெடுங்கள்.
இல்லை சொல்லுங்கள்… என்று கேட்டார் தலைமை அதிகாரி.
சந்தன் நீங்க கொடுத்திருக்கிறது மரண விசாரணை அறிக்கை. கருணை மனுவுக்கு பின்னால இருக்குற கண்ணீர், கறை, கயமை, கர்மம் எல்லாத்தையும் தோலுரிச்சு காட்டிட்டீங்க. ஒரு இறப்புக்கு பின்னால் இருந்தது என்ன. சொல்லுங்க உங்க பரிந்துரையை.. என்று கேட்டார் தலைமை அதிகாரி.
சார்.. நான் பார்த்தது…
முதலில் துரோகம். கல்யாணம் ஆகி 2 மாசம். புருஷன் செத்தும் வராத பொண்டாட்டி. கருணை வேலை கேக்குறா – காசுக்காக. கண்ணீருக்காக இல்ல.
இரண்டாவது தியாகம். டீ பாய் புருஷன். ஒரு நாள் நிரந்தர வேலை. அடுத்த நாள் மரணம். கைக்குழந்தையோட குடிசைல, மாமியார் மாமனாரையும் காப்பாத்துறா. இவளுக்கு தான் கருணை தேவை.
மூன்றாவது கர்மம். கையூட்டு வாங்குனான். மாமனார் ஏமாத்துனான். போன்லயே உசுரு போச்சு. பெரிய வீடு, கார் இருக்கு. ஆனா நிம்மதி இல்ல. இவங்களுக்கு வேலை தேவையா?
நான்காவது ரகசியம். HIV Positive. மின் மயானம். பொண்டாட்டி புள்ளைக்கு தெரியாது. டெத் செர்டிபிகேட்ல பொய். இங்க கருணை வேலை கொடுத்தா அந்த குடும்பத்தோட மானத்த காப்பாத்துறோமா, இல்ல பொய்ய காப்பாத்துறோமா? மற்றும்
ஐந்தாவது குற்ற உணர்ச்சி. பொண்ணு போன் பண்ணா எடுக்கல. பொண்ணு தற்கொலை. அடுத்த நாள் அப்பனும் தற்கொலை. “வேலை மும்முரம்” – ஒரு உயிர குடிச்சிடுச்சு. இங்க கருணை யாருக்கு வேணும்? வேல போய் அப்பன கூப்பிட முடியுமா?
இறப்பின் பின்னது “கருணை” இல்ல சார்.
சில வீட்ல “கணக்கு”, சில வீட்ல “கண்ணீர்”, சில வீட்ல “கர்மவினை”.
ஏன்னா உயிரோட இருக்கும் போது நமக்கு “File” தான் தெரியும். “Life” தெரியாது.
சார் இனிமேல் இந்த மாதிரி வேலையை எனக்கு தராதீங்க.. ஏன்னா..
நான் இறக்கல. ஆனா 5 வீடு போய் 5 தடவ செத்தேன். என்ன மாதிரியான மனிதர்கள்.
இறந்தவன் எழுந்து வர மாட்டான்.
ஆனா இறந்தவன் பேர சொல்லி, உயிரோட இருக்குறவன் பிழைக்கலாம்.
அது நியாயமா, அநியாயமா-னு முடிவு பண்றது – சர்மா இல்ல.
சன்முகம் இல்ல. நீரஜா இல்ல. தலைமை அதிகாரியும் இல்ல.
சந்தன் குமார் மாதிரி “துருதுரு”னு உண்மைய தேடி போறவன் தான் முடிவு பண்ணணும்.
அப்போ தான் “இறப்பின் பின்னது” – “இன்னொரு உயிர் வாழும்”னு ஆகும்.
“இது கதை அல்ல. ஒவ்வொரு அரசு அலுவல்களில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு “Compassionate Ground File”-க்கும் இது பொருந்தும்”.
தொடர்புள்ள சிறுகதைகள்
சடங்கு
க.சட்டநாதன்
July 5, 2026
இணையச் சிலந்திகள்!
மா.சித்திவினாயகம்
July 5, 2026