இவளே என் மனைவி!
கதையாசிரியர்: அ.லஷ்மி
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
காதல் 
கதைப்பதிவு: June 20, 2026
பார்வையிட்டோர்: 196
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எக்மோர்… எப்போதும் போலவே அதன் பரபரப்புக் குறையாமல், பயணிகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. ரகு மணி பார்த்தான். 4.30. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருக்கிறது ரயில் புறப்பட. பார்வையை வெளியே பரவவிட்டான். ஒவ்வொருவராக வந்து தங்கள் இருக்கை தேட ஆரம்பித்தார்கள். வெளியே பரவிய கண்கள் நிலைகுத்தி நின்றன. உடல் ஒரு முறை சிலிர்த்துக்கொண்டது. வெளியே…
பிங்க் கலர் புடவையில், ஒரு கையில் பெட்டியும் மற்றொரு கையில் பாட்டியுமாக ஒரு இளம்பெண். ரகுவின் கண்கள் அவளை மொய்த்தன. டி.டி.ஆரிடம் அவள் என்னவோ கேட்டாள். பின்பு இவனை நோக்கி நடந்து…
“எக்ஸ்கியூஸ் மீ!” ரகுவினால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.
“யெஸ், வாட் கேன் ஐ டு ஃபார் யூ?”
“எஸ்-6 இதுதானே சார்? ஸீட் நம்பர் 21 எங்கே இருக்கும்னு…”
ரகு எழுந்தே விட்டான். எதிர்ஸீட்டைக் காண்பித்து, “இதுதான் மேடம்!” நன்றிக்குப் பதிலாக ஒரு புன்னகையை வழங்கிவிட்டு அவள் தன் பாட்டியுடன் ஏறி உள்ளே வந்தாள்.
பெட்டியை ஸீட்டின் அடியில் தள்ளிவிட்டு ரகுவிடம் திரும்பி, “நீங்க எங்கே போறீங்க சார்?” என்றாள்.
ரகு, “நான் சிவகாசி வரையிலும் போறேன் மேடம்” என்று சொல்ல, அவள் தன் பாட்டியிடம் திரும்பி… “நீ என்னைப் பத்திக் கவலைப்படாம இரு பாட்டி. நாளைக்குக் காலைல நான் போன் பண்றேன். சார்கூட சிவகாசிதான் போறாராம்” என்று சொல்லிவிட்டு ரகுவிடம் திரும்பினாள். “பாட்டிக்கு என்னைத் தனியா விடறதுன்னா ரொம்ப பயம். எல்லாம் பழகிக்க வேண்டியதுதானே. இல்லையா சார்? பை தி பை என் பேரு சித்ரா. நீங்க?”
“நான் ரகு” என்று சொல்லி விட்டு மனதுக்குள் “சித்ரா – ரகு” என்று சொல்லிப்பார்த்துக் கொண்டான். இனித்தது. சித்ரா மட்டும் அவன் மனைவியாக அமைந்துவிட்டால் நண்பர்கள் மத்தியில் அவன்தான் ஹீரோ. சிவகாசி வருவதற்குள் தன்னைப் பற்றியும் தான் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பது பற்றியும் அவளிடம் பேசி, அவள் மனதில் இடம் பிடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
சித்ரா மீண்டும் ரகுவிடம், “தனியா டிராவல் பண்ணணுமேன்னு எனக்கு ஒரே பயம். உங்களைப் பார்த்த பின்புதான் எனக்கு நிம்மதி” என்றாள்.
ரயில் புறப்படத் தயாராகி, நீளமாகக் குரல் கொடுத்தது. ரகு அவளிடம், “பயப்படாதீங்க மேடம். நான் சேஃபாக கொண்டு போய்ச் சேர்த்துடறேன்” என்றவுடன் அவளும்… “அந்த நம்பிக்கைலதான் சார் நான் இருக்கேன்” என்று கூறி பாட்டியிடம் திரும்பி, “அப்போ அவர் கொண்டுபோய் விட்டுடுவாரு… பயப்படாம போய்ட்டு வா பாட்டி.. நான் வீட்ல தனியா இருந்துப்பேன்” என்று சொல்லிவிட்டு இறங்கி டாட்டா காண்பிக்க, வண்டி நகரத் தொடங்கியது.
ரகு முகத்தில் லிட்டர் லிட்டராக ஏமாற்றம் வழிய, எதிரே பாட்டி அவனைப் பார்த்துப் பொக்கைவாய் திறந்து புன்சிரித்தாள். ரகுவால் பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை!
– 300 ரூபாய் பரிசு பெறும் குட்டிக்கதை.
தொடர்புள்ள சிறுகதைகள்
யார் அது?
இரஜகை நிலவன்
June 20, 2026
எடுபிடி
கனகா பாலன்
June 17, 2026
வேரூன்றிய வைராக்கியம்
இரா.கலைச்செல்வி
June 14, 2026