கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம் முத்தாரம்
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 63 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சோழபுரத்தில் ஏக தடபுடல். செவத்தா பிள்ளை – அந்த ஊரின் பிரபல மிராசுதார் – புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த நாள். வீடா அது? தன் அந்தஸ்தையும். செல்வாக்கையும் விளம்பரப்படுத்த ஒரு மாளிகையே நிர்மாணித்திருந்தார். தரையெல்லாம் சலவைக் கற்கள்; கீழே விரிப்புக்களெல்லாம் காஷ்மீர கம்பளங்கள்; தூண்களெல்லாம் அசல் கருங்காலி, தேக்கு மரங்கள்; சுவர்களிலெல்லாம் வண்ணச் சித்திரங்கள் சிரிப்பை வாரியிறைத்துக் கொண்டிருந்தன. குறிப்பாக செவத்தாபிள்ளையின் படுக்கை அறை பிரமிப்பு ஊட்டும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்க கைராசிக்கார மந்திரி என்று மந்திரி சபையிலே தனிக் கவுரவம் பெற்ற கனம் கல்யாணம் பிள்ளையே வந்திருந்தார் என்றால் விழாவின் பெருமையை எப்படி வர்ணிக்க முடியும்!

அவரும் திறப்பு விழாவின் போது திருவாயைத் திறந்து முத்து தெறித்தாற்போல் இரண்டொரு சொற்கள் வீசினார். அப்படி உதிர்த்த முத்துக்களில் சில “அழகு மாளிகைக்கு நீல மாளிகை என்று பெயர் சூட்டுகிறேன்” என்பதாகும்.

மந்திரி வந்த பெருமை மட்டுமல்ல. அன்று ஆஞ்சனேயர் கோயிலுக்கு அபிஷேகம்: அம்மன் கோயிலுக்கு ஆராதனை: விடையேறிய பெம்மானுக்கு ஆடை. ஆபரணங்கள்: நட்சத்திர பலனையும் ராசி பலனையும் பார்த்து, புரோகிதர்களின் முழு மந்திர பலத்துடனும். 60 பிராமணர்களுக்கு ஒரு சிறிதும் குறையாமல் முறையாக – செய்த தான பலத்துடனும், கொட்டு மேளம் முழங்க, செவத்தா பிள்ளை குடும்பத்தோடு, புது மாளிகையில் குடியேறினார்.


கிரகப் பிரவேசம் முடிந்த மறுநாள் காலை: முதல் நாள் நடந்த கோலாகலமும் ஆடம்பரமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. நீல மாளிகை சோக மாளிகையாக மாறி விட்டது. காரணம் தங்கள் அறையில் படுத்திருந்த செவத்தா பிள்ளையையும் அவர் மனைவி சிவகாமி அம்மாளையும் இரவில் நிலப்பேய் அடித்துப் போட்டு விட்டதாகவும் அவர்கள் உயிருக்கு மன்றாடுவதாகவும் வினாடிக்கு வினாடி செய்திகள் பறந்தன; அவர்களுடன் நித்திரை போன அவர்கள் ஓரே மகன், 9 வயது பாலகன் பாலகிருஷ்ணன் பிணமாகக் கிடக்கிறான்; அவனுடைய ரத்தத்தை ஆங்காரம் கொண்ட நிலப்பேய் குடித்துவிட்டு பிரேதத்தை மட்டும் போட்டு விட்டு ஓடி விட்டது என்ற செய்தியும் கூடவே பறந்தது. ஊர்ப் பிரமுகர்கள், போலீஸார், பொது மக்கள் எல்லோரும் ஏராளமாக நீலமாளிகையைச் சூழ்ந்தனர். டாக்டர் வந்தார்; பார்த்தார். செவத்தா பிள்ளைக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. கை கால்களெல்லாம் கோணல் கோணலாக இழுத்துக் கொண்டிருந்தன. திருப்பதி ஏழுமலையானை அண்மையில் சென்று தரிசித்து வந்த டாக்டர் அவர். ஆகையால், ‘காத்துக் கருப்பு தோஷமாகவும் இருக்கலாம்’ என்று தன் பரந்த அனுபவத்தை முத்திரையடித்துக் கூறிவிட்டுப் போய் விட்டார். மதியம் இருக்கும். செவத்தா பிள்ளையும் சிவகாமியும் நன்றாக நடமாடத் தொடங்கினர். எந்தவித உபாதையும் இல்லை. ஆனால். ஒரே மகளின் துர்மரணம்தான் அவர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியாயிருந்தது.

சுற்று வட்டாரத்திலிருந்து, அழையா விருந்தினராக, மந்திரம் செய்பவர்கள், பில்லி. சூன்யம், ஏவல் வைத்து எடுப்பவர்கள், நடு நிசியில் பேயோடு மயானத்தில் பேசியவர்கள் இத்யாதி-இத்யாதி நீலமாளிகை யினருகில் தினசரி முகாம் போட ஆரம்பித்தார்கள்.


வீர சோழபுரம் சிறு ஊரானாலும், அரசியல் அரங்கங்களுக்குக் குறைவில்லை; திண்ணை அரசியல், குளத்தங்கரை அரசியல், அப்பளக் கச்சேரி அரசியல் அரட்டை அரசியல் என்று பல்வேறு பிரிவுகளாக அந்த ஊர் அரசியல் அயசப்பட்டு வந்தது. நீலமாளிகை, செவத்தா பிள்ளை வீட்டு விவகாரமாயிற்றே. பிறகு கேட்க வேண்டுமா?.

மாயமாவது, மந்திரமாவது, பேயாவது, பிசாசாவது என்று கேலி பேசுகிறார்களே, இந்தக் காலத்துப் பையன்கள். பார்த்தீரா ஐயா, இந்த நிலமாளிகை கோலத்தை; நீலப்பேயே எதிரில் வந்து கூத்தாடியதாம்; பார்க்க மகா கோரமாக இருந்ததாம்; செவத்தாபிள்ளையால் எழுந்திருக்கவும் முடியவில்லை யாம். ஒவ்வொரு அவயவத்தின் மீதும் ஒவ்வொரு குட்டி நீலப் பிசாசு உட்கார்ந்து பாட்டுப் பாடியதாம்;

பேய், பிசாசு இருக்கத்தான் இருக்கு! அகாலமாசு கோரமாக செத்துப் போனவர்கள் ஆவி எங்கே போய்விடும் இப்படித் தான் கெட்டவைந்து திரியும்:

நடு இரவில் மயானத்தில் அமர்ந்து, தலைச்சன் பெண்ணின் தலைச்சன் குழந்தையின் மண்டை யோட்டைக் கையிலேந்தி மந்திரம் ஜெபித்துக் கொண்டே இருப்பாராம், மணிப்பண்டாரம். பெரிய மந்திரவாதி; குட்டிப் பிசாசுகள் முதல் கோணங்கிப் பிசாசுகள் வரை அவரெதிரில் வந்து கூத்தாடுமாம்; எள் என்று அவர் சொல்வதற்கு முன் எண்ணெயாகக் கொண்டு வந்து கொட்டுமாம்; ஏதோ கால வித்தியாசத்தாலே, கடன்காரனுங்க கையிலே, சொத்தெல்லாம் தொலைச்சுட்டு, வாழ்க்கையிலே விரக்தி கொண்டு, சந்நியாசியாக வெளியேறிட்டாராம்; அவர் கூட இன்று நீலமாளிகைக்கு வந்துள்ளாராம்;

இதுதான் அந்த அரசியல் சபைகளின் தீர்ப்பின் சாராம்சம்!


செவத்தாபிள்ளையும் இழந்த துக்கம் தாளாமல், குடி போன மறுநாளே, மாளிகையைக் காலி செய்து விட்டுப் பழைய வீட்டுக்கே போய் விட் டார். பேய் வீட்டில் யார்தான் குடியிருக்க முடியும்! அதுவும் இது ஒரு புதுவகையான பேயாகவல்லவோ இருக்கிறது! நீலப்பேய்! அது தன் கோரப் பற்களைத் திறந்து சிரித்த சிரிப்பைச் செவத்தா பிள்ளையால் மறக்கவே முடியவில்லை. எப்போது நினைத்தாலும் சிறு குடல் பெருங்குடலைக் கவ்வும். அவ்வளவு பயம். சிவகாமி யம்மாளோ அந்த மாளிகைப் பக்கம் போகவும் அஞ்சினாள்: பணம் பாழ்; பெற்ற மகன் மரணம்; வெளியிலே சொல்லவோ ஒரே கூச்சம்.


நீலமாளிகை ஒரு மாதமாக சோபையிழந்து ஒளியிழந்து கிடந்தது. மாளிகையினுள் பகலில் நுழைய எல்லோருமே பயப்பட்டனர். இரவிலே யாருமே போவதில்லை. அவ்வளவு பயம், ஆனால் மணிப்பண்டாரம். தன் மந்திர சக்தியால் சங்கிலிக் கருப்பனையே நிர்த்தூளி ஆக்கிவிட முடியும் என்று ஒருநாள் செவத்தா பிள்ளையிடம் கூறினான். பண்டாரத்தின் சக்தியையும் திறமையையும் ஊர் மக்கள் ஒரேமனதாகப் பாராட்டியதால் பிள்ளைக்கும் ஆசை ஏற்பட்டது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நீலப்பேயை நீலமாளிகை யிலிருந்து விரட்டி விட்டால் போதும் என்று தன் முழு சம்மதத்தையும் தெரிவித்து விட்டார்.

மந்திரவாதியும், இரவு பூஜைக்கு வேண்டிய சாமான்களோடு நீல மாளிகையில் செவத்தா பிள்ளையின் அறைக்குக் குடியேறிவிட்டார். யாரும் அந்தப் பக்கம் வரக்கூடாது என்று கடுமையான உத்தரவு ஒன்றை வீசி விட்டு, மணிப் பண்டாரம் பூஜை மிகப்பலமாக கடந்தது. ஓம் ரீம் சத்தம் காதைத் துளைத்தது. சாம்பிராணி புகை நிலமாளிகையையே வளைத்தது. மாளிகையின் வெளியில் காவல்காரர்கள் மட்டும் படுத்திருந்தார்கள்.

காலை மலர்ந்தது; காவற்காரர்கள் கதவைத் தட்டினர் கள. உள்ளே ஆள் அரவம் இருப்பதாகத் தெரியவில்லை; சந்தேகம் கொண்ட அவர்கள் செவத்தா பிள்ளையிடம் ஓடினார்கள். செவத்தா பிள்ளையும் மற்றும் சிலரும் நீலமாளிகைக்கு விரைந்தனர். ஒரு ஆள் ஓட்டு மேல் ஏறி உள்ளே குதித்து, தெருக்கதவைத் திறந்து விட்டான். எல்லோரும். அறைக்குப் போய்ப் பார்த்தார்கள்; பார்த்த அவர்கள் பேய் அடித்தவர் போலானார்கள். ஏனெனில், மணிப்பண்டாரம். பூஜை மண்டபத்தில் கோணல் மாணலாக சவமாகிக் கிடந்தார். பார்க்க மகா பயங்கரமாயிருந்தது: முகமெல்லாம் விகாரமாகி வெளிறிப் போய் நீலம் பாய்ந்திருந்தது. நீலப் பேயிடம் எந்த மணிப்பண்டாரமானாலும் சரி மந்திரவாதியானாலும் சரி இந்தக்கதிதான் என்று சவால் விட்ட மாதிரி இருந்தது. எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை; நீலமாளிகை என்றிருந்த பெயரை மாற்றிப் பேய்மாளிகை என்று பெயர் சூட்டினர்.

மணிப்பண்டாரத்தின் மரணத்திற்குப் பிறகு பேயை எப்படி ஓட்டுவது என்று யோசனை சொல்லுபவர்களும் குறைந்து விட்டனர். நிலப் பேய்க்குச் சோழ புரத்தில் நல்ல மவுசு. எங்கேயாவது நிழலைக் கண்டு யாராவது மிரண்டாலும், நீலப் பேய் அங்கேயும் படையெடுத்துவிட்டது என்று அஞ்ச ஆரம்பித்தனர்.


கல்லூரியில் பயிலும் அரிய நாயகம். கோடை விடுமுறையைக் கழிக்க தன் மாமன் வீட்டுக்கு வந்திருந்தான். புதுமை விரும்பி: பகுத்தறிவுவாதி: எதையும் தீர்க்க சிந்தித்தே முடிவு சொல்வான். மகாபக்திமானான செவத்தா பிள்ளைக்கு, தன் தங்கை மகன் இப்படித் ‘தறுதலை’யாக இருப்பது பிடிக்காது; சோழபுரத்துக்கு வந்த அரியநாயகம் நீலமாளிகையின் சரித்திரத்தையும் கேள்விப் பட்டிருந்தான். பேய் பிசாசுகளில் நம்பிக்கையில்லாத அரிய நாயகத்துக்கு நீலமாளிகையின் மர்மங்களைத் தெரிந்துகொள்ள ஆசை உண்டாயிற்று. ஆதலால் செவத்தாபிள்ளை எவ்வளவோ தடுத்தும், முரட்டுப்பிடிவாதமாக தன் ஆசையை நிறைவேற்ற செயலில் இறங்கி விட்டான். அந்தச் சீர்திருத்த செம்மல்.

நீ லமா ளிகைக்கு அரிய நாயகத்தை அழைத்துப் போனார் பிள்ளையவர்கள். மாளிகையின் எடுப்பான தோற்றம். அழகான சிறந்த வேலைப்பாடு ஆகியவற்றைக் கண்டு வியந்த அவன், நீலமாளிகையின் பேயாட்டங்களைக் கண்டு பிடிக்க முடிவு செய்தான். முதலில் மறுத்துத் தகராறு செய்த பிள்ளையவர்கள் முடிவில் ஒத்துக்கொண்டார்.

அரியநாயகம். நீலமாளிகையை நன்றாகச் சுத்தம் செய்யச் சொன்னான்; செவத்தா பிள்ளையின் அறையை நன்றாக கழுவினார்கள். மாளிகை பூராவும் வர்ண மின் விளக்குகள் கண்ணைப் பறித்தன. நன்றாக தோட்டா கெட்டித்த கைத் துப்பாக்கி, தீப்பெட்டி, பாட்ரி லைட் ஆகியவைகளை எடுத்துக் கொண்டான். ஒரு பானையில் குளிர்ந்த நீரை ஊற்றி அறையின் ஒரு முலையில் வைத்தான். தன்னோடு துணைக்கு இரண்டு ஆட்களைப் படுத்துக் கொள்ள அழைத்தான். ஆனானப்பட்ட மணிப் பண்டாரத்தின் பச்சை ரத்தத்தையே பேய் ருசிபார்த்து விட்டது; இந்தச் சிறு பிள்ளை யாண்டானை நம்பி தாங்கள் மாளிகையினுள் தங்க வேலைக்காரர் மறுத்து விட்டார்கள். ஆகையால், தான் படுத்திருக்கும் அறையிலிருந்து ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும் உடனே அங்கு ஓடிவர வேண்டும் என்று வேலைக்காரர்களுக்கு உத்தரவு போட்டு விட்டு, பேய் மாளிகையினுள் பேய் அறையில் படுத்துக் கொண்டான். வேலைக்காரர் களும் வெளியில் படுத்துக் படுத்துக் கொண்டார்கள்.

நள்ளிரவு இருக்கும்; எங்கோ ஊளையிட்ட நாயின் சத்தமும். கோட்டானின் அலறலும் தவிர சுடுகாட்டு அமைதி பேய் மாளிகையைச் சூழ்திருந்தது. திடீரென்று, ஈனக் குரல் ஒன்று பயங்கரமாக மாளிகை உள்ளிருந்து விட்டுவிட்டு ஒலித்தது. வெளியில் படுத்திருந்த காவல்காரர்கள் மின் விளக்கைப் பொருத்தி விட்டு உள்ளே ஓடினார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி, அவர்கள் ரத்தத்தையே உறைய வைக்கக் கூடியதாக இருந்தது.

அறையினுள் அரியநாயகம் அலங்கோலமாகக் கிடந்தான். கைகால்கள் இழுத்தன; வாய் பயங்கரமாக மாறியிருந்தது. உடம்பில் சத்தில்லாமல் துவண்டு கிடந்தது. மூச்சு திணறித் திணறி வந்தது. அரிய நாயகத்தை மாளிகைக்கு வெளியே கொண்டு வந்தார்கள்; குளிர்ந்த காற்று முகத்தில் பட்ட பிறகு. ஆள் நல்ல நிலைக்கு வர ஆரம்பித்தான்: நல்லவேளையாக அரியநாயகம் உயிர் பிழைத்தான்.

அரியநாயகத்தின் விஷப் பரீட்சைக்குப் பிறகு. பேய் மாளிகையின் புகழ் வானுற ஓங்கி வளர்ந்தது, செவத்தா பிள்ளைக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிதான். ஏனெனில், பேயாவது பூதமாவது என்று கேலி பேசும் நவநாகரிக இளைஞனல்லவா அரியநாயகம்; நிலப் பேய் அவனுக்குச் சரியான பாடம் கற்பித்து விட்டது என்று செவத்தா பிள்ளை மட்டுமல்ல. ஊரில் பல மக்கள் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும் எண்ணிக் கொண்டார்கள்.


ஒரு வாரம் கழிந்தது; மறுபடியும் அரியநாயகம் நிலப் பேய் மீது போர் தொடுத்தான்.

பேய் மாளிகையில் உள்ள பேய் அறையை நன்றாகச் சுத்தம் செய்தான். அறையினுள் அலங்காரமாக அடித்திருந்த நீல வர்ணத்தைத் துப்புரவாக அப்புறப்படுத்தினான். பிறகு அதன் இடத்தில் சுண்ணாம்பு வெள்ளையை அடிக்கச் செய்தான். நீல வர்ணம் அந்த அறையில் கொஞ்சம் கூட இல்லை; ஓட்டுப் பக்கங்களிலிருந்த தூசு தும்புகளை அப்புறப்படுத்தினான். பிறகு, முன்பு ஆயத்தம் செய்து கொண்ட மாதிரியே தயார் செய்து கொண்டு, பேய் அறையில் போய்ப் படுத்துக் கொண்டான். பொழுது விடிந்தது. பொல்லாத நீலப் பேய் என்ன செய்ததோ; சத்தம் போடாமலேயே ஆளைச் சாப்பிட்டுவிட்டதோ என்று நெஞ்சில் நிறைந்த பயத்தோடு மாளிகையினுள் செவத்தா பிள்ளையும் சிப்பந்திகளும் நுழைந்தனர். ஆனால் அங்கே கண்ட காட்சி! அரியநாயகம் ஆனந்தமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பினார்கள். கண்களைக் கசக்கிக் கொண்டே சிரித்த முகத்துடன் எழுந்தான், கொசுத் தொல்லையே பெருந் தொல்லை என்று வாய்விட்டுச் சிரித்தான். செவத்தா பிள்ளை அசந்து விட்டார். பெரிய பெரிய மந்திரவாதிகளே பயந்து ஓடியிருக்கும் போது, அரியநாயகம் சிறுவன் அவன் எப்படி நீலப்பேயை அடக்கி ஆண்டான் என்ற எல்லாரும் புதிர் விளங்காமல் ஏதோ புதுமையான பொருளைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.


அரியநாயகம் சாவதானமாக நீலப் பேயின் சரித்திரத்தைப் புட்டுப் புட்டு வைத்தான். நீலப் பேய் என்பது மனப் பிராந்தியே தவிர வேறில்லை; மனப் பிராந்தி மூட நம்பிக்கையின் விளைவு. முதல் தடவை தனக்கு நேர்ந்த ஆபத்து பேயினாலில்லை; நச்சுக் காற்றினால். பேயறையில் பூசப்பட்டிருந்த நீலவர்ணத்தில் எப்படியோ தவறுதலாக கொடிய நஞ்சும் கலந்து விட்டிருக்கிறது. அறைக் கதவைத் தாளிட்டவுடன் அது நச்சுக் குகையாக மாறிவிட்டது. இரவில் தூங்கும் போது நல்ல காற்று இல்லாமல் நச்சுக்காற்றை சுவாசித்ததால் தான் பேயாட்டம் நடந்திருக்கிறது. நீல வர்ணம் நீலப் பேயாகவும் கொசுவின் நீங்காரம் பேயின் சங்கீதமாகவும் விளங்கியுள்ளது. முதல் தடவை தானும், நீலப் பேய் எதிரில் கூத்தாடுமோ என்று எண்ணியபோது. நீலப்பேய்கள் தன்னை நெருங்கியது போலவும், கொசுவின் சத்தம், பேயின் சங்கீதமாகவும் தெரிந்தது. ஆனால் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட போது தான் காற்றில் ஏதோ தவறு இருக்க வேண்டும் என்று யூகித்ததாகவும், பிறகு சுவரில் இருந்த வர்ணத்தைப் பற்றி சந்தேகப்பட்டதாகவும், அந்த வர்ணத்தில் கொஞ்சம் எடுத்து சோதனை செய்தபோது கொடிய நஞ்சு அதிலிருந்ததைக் கண்டு பிடித்து பதறியதாகவும், ஆகையால்தான் நீலவர்ணத்தைச் சுரண்டி எடுத்து வெள்ளை அடிக்கச் செய்து நஞ்சை நீக்கித் தான் அங்கே படுத்து வெற்றி பெற்றதாகவும் அரியநாயகம் பெருமிதத்தோடு சொன்னான். நச்சுக் காற்றும் நீலவர்ண சூழ்நிலையும் சேர்ந்து நீலப் பேயை உருவாக்கி விட் டது செவத்தா பிள்ளை மூலம், மூட நம்பிக்கையில் உழலும் ஊர் மக்கள் அதற்கு உயிர் கொடுத்தனர். மதம் அதற்கு வாழ்வளித்தது. இதுதான் நம் நாட்டில் இன்றைய நிலை. இந்தக் கொடுமை என்றுதான் ஒழியுமோ என்று ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்தி விட்டான் அரியநாயகம்.

செவத்தா பிள்ளையும் மற்றவர்களும் தங்கள் அறியாமைக்கு வெட்கப் பட்டுத் தலைகுனிந்தனர்; மூட நம்பிக்கையின் விளைவு குறித்து வேதனைப் பட்டனர்.

செவத்தா பிள்ளை நீல மாளிகையின் பெயரை மாற்றி மாளிகைக்கு வாழ்வளித்த அரியநாயக செல்வம் என்ற தன் மருகன் பெயரையே “செல்வ மாளிகை” என்று சூட்டி மகிழ்ந்தார்.

– ஆகஸ்ட் 1956, முத்தாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *