உள்ளும் புறமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 269 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

எங்கும் கும்மிருட்டு. படுக்கைக்குப் பக்கத்தில் கைவிளக்கு இருந்தது. அதனை ஒளிரச்செய்து சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். உடனே நான் படுக்கையைவிட்டு எழுந்தேன். பாயையும், தலைகாணியையும் சுருட்டி ஒரு மூலையில் வைத்தேன்.

இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு கண்களின் விழிப்பு சற்று வித்தியாசமானதுதான். என்றாலும், இன்று அது அவசியமான ஒன்று என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இப்போது வீட்டில் நான் மட்டும் தனியாகத்தான் இருக்கின்றேன். அப்பா, அம்மா, தம்பி, தங்கைகள் எல்லோரும் சேர்ந்து, மாமா ஊரான தென்னஞ் சோலையில் நடைபெறும் கிடாவெட்டுத்திருவிழாவிற்கு சென்றிருக்கிறார்கள். தென்னஞ்சோலை எங்கள் ஊரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. . மாமா வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு மாரியம்மனுக்கு கிடாவெட்டுத் திருவிழா. நேற்று மதியமே வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவோம் என்று சொல்லிவிட்டுச் சென்றவர்கள் இன்னும் வரவில்லை.

அப்பா, அம்மா இருவருக்கும் கிடாக் கறி என்றால் உயிர். அது மட்டுமல்ல, திருவிழா சமயத்தில் இரண்டு நாட்களும் இரவுகளில் ஆட்டம் பாட்டம் கச்சேரி என கலை கட்டும்.

நான் சிவனே என்று இருப்பவன். சுத்த சைவம். அதனால்தான் நான் மாமா வீட்டிற்குச் செல்லவில்லை. எங்கள் வீட்டில் இரண்டு கறவை மாடுகளும், ஏழு ஆடுகளும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். மாடுகளுக்கு வைக்கோல் போட வேண்டும். மூன்று வேளையும் அவைகளுக்குத் தண்ணீர் வைக்க வேண்டும். தோட்டத்தில் உள்ள சுபாபுல், கோ ஒன்று தீவனப்புல், நேப்பியர் புல் இவற்றையெல்லாம் வெட்டி வந்து மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் சீராகப் போட வேண்டும். இந்த வாயில்லா ஜீவன்களை இரண்டு நாட்கள் பச்சைத் தண்ணீர் கூட இல்லாமல் எப்படிப் பட்டினி போட முடியும்? நானும் மாமா வீட்டிற்குப் போய் இருந்தால் அதுதான் நடந்திருக்கும். அந்தப் பாவத்தை யார் சுமப்பது? அது பெரும் பாவமில்லையா?

இன்று காலை அவர்கள் வந்து விடுவதாக, எனக்குத் தகவல், நேற்று இரவு பக்கத்துத் தெரு பரமசிவம் அண்ணன் வாயிலாகக் கிடைத்தது. அவர்கள் இன்று வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நான் இன்று நண்பனின் வீட்டுத் திருமணத்திற்கு அவசியம் செல்வதெனத் தீர்க்கமாய் முடிவு செய்து விட்டேன்.

எனது மனதில் இன்றைய எனது நிகழ்ச்சிக்கான நிரல் ஓடிக் கொண்டிருந்தது. நான் திட்டமிட்டபடி எனது காலை நேர நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நல்ல விதமாக நடந்து கொண்டிருந்தன.

எங்கள் ஊரில் இருந்து முதல் பேருந்து காலை ஆறு மணிக்குப் புறப்படும். பேருந்து நிறுத்தம் வீட்டுக்குப் பக்கத்தில்தான். எங்கள் வீட்டுத்திண்ணையில் இருந்து பார்த்தாலே பேருந்து நிறுத்தத்தில் யார் யார் நிற்கின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். அவ்வளவு அருகாமை.

முதல் பேருந்தில் போனால் தான் காலாகாலத்தில் மணப்பாறைக்கு அருகில் இருக்கும் வையம்பட்டிக்குச் சென்று மணவிழாவில் கலந்து கொள்ள முடியும். நான் நேரம் தவறிச் சென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை. என்றாலும் நண்பன் மிகவும் கோபித்துக் கொள்வான். அவன் என்னிடம் சரியாகப் பேசக்கூட மாட்டான். அவன் சுபாவம் அப்படி. அதனால் முதல் பேருந்திலேயே அவசியம் போய்விட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு நான் இருந்தேன். ஆற அமர குளித்தபின் புத்துணர்ச்சி என்னுள் புகுந்து கொண்டிருந்தது. தலைமுடி கலகலப்பானது. எல்லா வேலைகளும் நன்றாகவே நடந்து கொண்டிருந்தன. இனி உடுப்புகளை மாட்டிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான்.

நான் கடிகாரத்தைக் கவனித்தேன். மணி ஆறு ஆவதற்கு இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது. நான் அவசர அவசரமாக துணிமணிகள் இருந்த அலமாரியை திறந்தேன். அப்போது திடீரென்று மின்தடை ஏற்பட்டு விளக்குகள் அணைந்தன.

வானம் கருமேகங்களைச் சுமந்தபடி சற்று மந்தமாகவே இருந்தது. இன்னும் இருள் விலகவில்லை. வீட்டிலும் வெளிச்சமில்லை. பேருந்து வரும் ஓசை மனதைக் கொஞ்சம் அச்சப்படுத்த, நான் மேல்சட்டையையும், முழுக்கால் சட்டையையும் அலமாரியில் இருந்து அவசரமாக எடுத்துப் போட்டுக் கொண்டேன். அப்போது கை விளக்கும் என்னிடம் கருணை காட்டவில்லை. அதன் ஒளிவீச்சு மிகவும் பலவீனமடைந்திருந்தது. நான் வீட்டைப் பூட்டி, சாவியை ஒரு ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, பேருந்து நிறுத்தத்தை நோக்கினேன்.

பேருந்து நிறுத்தத்தில் இருவர் நின்று கொண்டு மழை வருவதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் “இந்த மானம் இப்படித்தான் ஒரு வாரமா ஆட்டம் காட்டிட்டு இருக்கு. ஆனா ஒரு சொட்டு மழையைக் காணோம். இதுவும் நம்மளை ஏமாத்த ஆரம்பிச்சிருச்சு, அரசியல்வாதிகள் மாதிரி “ என்று அங்கலாய்த்துக்கொண்டார்.

நான் பணத்தை எடுத்து சட்டையின் உள்பையில் பத்திரமாக வைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைவாக நடந்தேன். நான் நிறுத்தத்தை அடைவதற்கும், பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

எனது கையில் ஒரு சிறு கைப்பை. அதில் ஒரு புத்தகம். அது கா. நா. சுப்பிரமணியம் அவர்களின் “ஏழு பேர்” எனும் புதினம். நான் கைப்பையுடன் பேருந்தில் ஏறினேன். பேருந்தில் ஒரு சிலரே அமர்ந்திருந்தனர். பொதுவாக முதல் பேருந்தில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். நான் ஒரு வழியாக பேருந்தின் மையப்பகுதிக்குச் சென்று அமர்ந்தேன்.

பேருந்து லால்குடியை நெருங்கியபோது சூரியன் நன்றாக சுடர்விட ஆரம்பித்தது. உடனே நான் கைப்பையில் வைத்திருந்த “ஏழு பேர்” புதினத்தை வெளியே எடுத்தேன். கா. நா. சுப்ரமணியம் அவர்களின் புதினம் எளிமையாகவும் இனிமையாகவும் எதார்த்தமாகவும் இருக்கும். நான் புதினத்தின் ஆரம்பப் பக்கங்களைப் புரட்டினேன். சில நொடிகளிலேயே “அள்ளி அணைத்திடவே” என்ற முதல் அத்தியாயத்தில் நான் மூழ்கிப் போனேன்.

வழிநெடுக இருசக்கர வாகனம் தொடங்கி, மூன்று, நான்கு, ஆறு, எட்டு பத்து சக்கர வாகனங்கள் என பல்வகை வாகனங்கள் பல்வகை நிறங்களில் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தன. நான் இவற்றையெல்லாம் மேலோட்டமாகத் தான் பார்த்தேன். என் கவனமும் பார்வையும் “ஏழு பேர்” புதினத்தில் அழுத்தமாகவும் ஆழமாகவும் புதைந்திருந்தது. நான் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தை அடைந்தபோது சிவராமன் எனும் அத்தியாயத்தை முடித்திருந்தேன். நான் பயணித்த எங்கள் ஊர் பேருந்து லால்குடி, ஸ்ரீரங்கம் வழியாக திருச்சி மையப் பேருந்து நிலையத்தை காலை ஏழரை மணிக்கு அடைந்தது.

நான் பேருந்தில் இருந்து இறங்கி வையம்பட்டி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி வேகமாக நடந்தேன். அப்போது சில இளம் பெண்களும் ஆண்களும் என்னைப் பார்த்துச் சிரித்தபடி இருந்தனர். அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்கள் எதை நினைத்தோ, அல்லது யாரைப் பார்த்தோ சிரித்திருக்கலாம் என்ற எண்ணத்தில் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. வேறு சிந்தனைகளில் சிக்கிக் கொள்ளாமல், சீக்கிரமாக வையம்பட்டி பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் விரைந்து போய்க் கொண்டிருந்தேன். வையம்பட்டி பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச்சீட்டும் வாங்கிக்கொண்டேன். எனது வாசிப்பு சக மாணவியுடன் தொடர்ந்தது. “சக மாணவி” என்பது “ஏழுபேர்” புதினத்தின் அடுத்த அத்தியாயத்தின் பெயர்.

நான் பயணித்த பேருந்து காலை எட்டரை மணி அளவில் வையம்பட்டி பேருந்து நிலையத்தை அடைந்தது. நான் பேருந்தில் இருந்து இறங்கினேன். அப்போது “தெரு சிரிக்கிறது” என்ற அத்தியாயத்தை நான் படித்துமுடித்திருந்தேன். தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது தெருவே என்னைப் பார்த்து சிரிப்பது போல் எனக்குத் தோன்றியது. “இது வெறும் பிரம்மைதான்” என எனது மேல்மனம் சொல்ல உள் மனம் “இல்லை. இது பிரம்மன் உனக்கு அளித்த சோதனை” என்று சொல்லியது.

திருமண மண்டபம் எதிரே தான் இருந்தது. நான் நேராக மண்டபத்தை நோக்கி நடந்தேன். எனக்கு எதிரே வந்தவர்களில் சிலர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி சென்றார்கள். எனக்கு முன்பாகவும் பலர் சென்று கொண்டிருந்தார்கள். எல்லாம் எனக்குப் புது முகங்கள். இங்கு எனது நண்பனையும் அவனது குடும்பத்தினரையும் தவிர வேறு எவரையும் எனக்குத் தெரியாது. நான் மண்டபத்திற்குள் நுழைந்தபோது, நண்பனின் அண்ணனும் அண்ணியும் என்னை வரவேற்றார்கள்.

அப்போது திருமணத்தின் முக்கிய நிகழ்வான தாலி கட்டுதல் நிகழ்வு நடைபெறப் போகிறது என்பதை எல்லோருக்கும் அறிவிக்கும் விதமாக அதிக அதிர்வுடன் கூடிய கெட்டிமேளம் கோடை மழைபோல் அதிர்ந்து ஓய்ந்தது.

தாலி கட்டும் நிகழ்ச்சி முடிவதற்குள் வந்து சேர்ந்ததில் என் மனம் திருப்தி அடைந்தது. . ஒரு வழியாக திருமணம் இனிதே முடிவடைந்தது.

நான் மேடையில் நின்று கொண்டிருந்த எனது நண்பனை மணமடைக்குச் சென்று சந்தித்தேன். உடனே அவன் என்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சொன்னான். உடனே நானும் அவனும் சேர்ந்து நின்று, மணமக்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்போது புகைப்படம் எடுத்த இளைஞன் என்னைப் பார்த்து பலமுறை சிரித்துக் கொண்டே இருந்தான். புகைப்படம் எடுத்த பின் என் நண்பன் என்னை அப்போதுதான் உற்றுப் பார்த்தான். அவனும் சிரித்தான். நான் என்னை முழுசாகப் பார்த்தேன். அதுவரை கலகலப்பாக இருந்த நான் கூனிக்குறுகிப் போனேன். என்மேல் நூற்றுக்கணக்கான பூச்சிகள் ஊருவதுபோல இருந்தது. ஆனாலும் இது எதிர்பாராத ஒரு நிகழ்வு. மின்தடையும் எனது அவசரப்புத்தியும் காரணமாக இருந்திருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த உடுப்பை நான் திருச்சியில் வாங்கினேன். புரட்டாசி வருவதற்கு ஒரு வாரம் முன்பு அம்மா வீட்டில் உள்ள துணிகளை

எல்லாம் துவைத்து வைக்கும் போது இந்த உடுப்பும் அதில் இணைந்து விட்டது. துவைத்து காய வைத்து அலமாரியில் அப்படியே மடித்து வைக்கப்பட்டிருந்த உடுப்பை சரி பார்க்காமல் அப்படியே உள்புறத்தை வெளிப்புறமாக நினைத்து நான் போட்டுக் கொண்டு வந்திருந்தது இப்போது எனக்குப் புரிந்தது.

நான் திருச்சியில் உள்ள ஒரு ஆயத்த அடையகத்தில்தான் இந்த உடுப்பை வாங்கினேன். நான் இதனை வாங்கும்போது கடைக்காரர் இது சமீபத்திய வரவு.. இதை உள்புறமாகவும் போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார். இரண்டு மாதிரிகளையும் எனக்குக் காண்பித்தார். அவர் சொன்ன மாதிரியே அவை இருந்தன. ஆனால் அவற்றின் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு ஒரு உடுப்பை கடைக்காரர் என்னிடம் காண்பித்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. அப்போது எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வர நான் பேசிக்கொண்டே அந்த உடுப்பிற்கான தொகையை கொடுத்துவிட்டு அட்டைப்பெட்டியில் இருந்த உடுப்பை வாங்கிக் கொண்டு வந்தேன். அதன் பிறகு அந்த உடுப்பை நான் போட்டுப் பார்க்கவே இல்லை.

இதில் இடுப்புப் பகுதியில் முன்புறமும் உட்புறமும் கொக்கிகள் இருக்கின்றன. அதனால் உட்புறத்தை வெளிப்புறமாக வைத்துப் போடும் போது சிரமம் எதுவும் ஏற்படவில்லை. இந்த உடுப்பில் முன்புறம் இருபக்கத்திலும் பைகள் மேலிருந்து கீழாக பாபிலோனின் தொங்கு தோட்டத்தைப் போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த உடுப்பில் பைகள் முன்பக்கம் மட்டுமே உள்ளன. பின்பக்கம் பை எதுவும் இல்லை. பொதுவாக தையல்காரர்கள் முழுக்கால் சட்டைகளில் பைகள் வைக்கும்போது விலை மலிவான வெள்ளை நிற துணிகளைக் கொண்டுதான் பைகளை தைத்து இருப்பார்கள். ஆனால் இதில் தடித்த சற்று அழுத்தமான துணி கொண்டு உடுப்பு நிறத்திலேயே வைக்கப்பட்டிருப்பது பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போதுதான் புரிகிறது. இதுவரை பலர் என்னைப் பார்த்து ஏன் சிரித்தார்கள் என்று. இந்த உடுப்பை வாங்கிய பின் நன்றாக பிரித்துப் பார்த்திருந்தால், இவ்வளவு கூத்தும் நடந்திருக்காது என்று எனக்குத் தோன்றியது. நண்பன் என்னைத் தனியே அழைத்து, தனது தங்கையின் அறைக்குச் சென்று உடுப்பை மாற்றிப் போட்டுக் கொள்கிறாயா என்று கேட்டான்.

”வந்த வேலை முடிஞ்சு போச்சு. இனி சாப்டுட்டு ஊருக்குப் போக வேண்டியதுதான். இன்னும் கொஞ்ச நேரம் எப்படியோ சமாளிச்சுக்குவோம,” என்று சொன்னேன்.

இங்கே மண்டபத்தில் நம்மைப் பார்த்து பலர் கண்டிப்பாக கேலி செய்வார்கள். அப்படிக் கேலி செய்பவர்களை இனி எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி தீவிரமாக யோசித்தேன். இதனை புத்திசாலித்தனமாக எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் தீவிரமடைந்தேன். உடனே எனக்குள் ஒரு யோசனை உதயமானது. அந்த யோசனைப்படியே எல்லோரையும் சமாளித்தபடி நான் தொடர்ந்தேன். எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.

நானும் நண்பனும் சாப்பாட்டுக் கூடத்திற்குள் சாப்பிட நுழைந்தோம். அப்போது ஒரு பெரியவர் என்னிடம் நெருங்கி வந்து, “என்ன தம்பி, பார்த்தா படிச்ச புள்ள மாதிரி இருக்கீங்க. இப்படி அரைக்கிறுக்கன் மாதிரி உடுப்பப் போட்டுக்கிட்டு இருக்கீங்க .என்ன எந்த நேரமும் போதைதானா?” என்று கேட்டார்.

அவரிடம் நான், “என்ன பெரியவரே, நீங்கள் எல்லாம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவங்க. வெளி உலகம் தெரியாமலேயே வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. இது கலிபோர்னியா பானி உடுப்பு. இதெல்லாம் இப்படித்தான் போட்டுக்குவாங்க. பொதுவா இந்த மாதிரி உடுப்ப ஒரு தடவைதான் போட்டுக்கலாம். ஆனா இந்த கலிபோர்னியாபா பாணி உடுப்ப நாலு தடவை போட்டுக்குவாங்க. உள்பக்கமா ரெண்டு தடவையும், வெளிப்பக்கமா ரெண்டு தடவையும் ஆக மொத்தம் நாலு தடவை போட்டுக்கலாம். இதுதான் இதுல விசேஷம். நாய் குதறினமாதிரியும் குரங்கு பிராண்டுன மாதிரியும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வாரக்கணக்கா குளிக்காம அழுக்கோட போட்டுகிட்டுத் திரியுறானுங்க. அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை”. நான் கேட்பவர்களிடம் எல்லாம் இப்படிச் சொல்லிச் சொல்லி சமாளித்தேன். ஒரு சிலரைத் தவிர மண்டபத்தில் இருந்த பெரும்பாலோர் அதை நம்பவும் செய்தார்கள்.

மண்டபம் முழுக்க இந்த விஷயம் முதன்மை பேசு பொருளாக மாறியது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் பலரும் என்னிடம் வந்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். சிலர் என்னிடம் கை கொடுத்துவிட்டுப் போனார்கள். சிலர் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஒரு தையல்காரர் என்னிடம் வந்து ரகசியமாக எனது முகவரியையும் அலைபேசி எண்களையும் குறித்துக்கொண்டு,” நான் அடுத்த வாரம் உங்களை நேரில் சந்தித்து நிறையப் பேச வேண்டும். உங்களைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டு, வாய்ப்பற்கள் முழுவதும் பளிச்சென்று தெரிய மணமக்களைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியோடு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

நண்பனிடமும் அவனது உறவுகளிடமும் சொல்லிவிட்டு பிற்பகல் மூன்று மணிக்கு நானும் மண்டபத்தை விட்டு வெளியேறினேன். நான் வையம்பட்டியில் இருந்து திருச்சி பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன், எனது வாசிப்பு தொடர்ந்தது.

நான் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வரும்போது, மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதனால் நான் எடுத்து வந்த ஏழு பேர் புதினத்தை இன்னும் முடிக்கவில்லை. நான் எங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தபின், எனது வாசிப்பு தொடர்ந்தது. காட்டுரைத் தாண்டி எங்களது பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே எஞ்சி இருந்தது. பேருந்து எங்கள் ஊரை நெருங்கும் முன்னரே நான் அதையும் முடித்து விட்டேன்.

இரவு ஏழு மணி அளவில் நான் வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால் அப்போது வீட்டில் எவரும் இல்லை. அப்பா, அம்மா, தம்பி, தங்கைகள் எல்லோரும் மாமா வீட்டில் இருந்து வந்து விட்டதற்கான அடையாளங்கள் வீட்டுத் திண்ணையில் அங்கங்கே மின்னிக் கொண்டிருந்தன. எல்லோரும் எங்கள் தெருவில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றிற்கும் சென்று ஆட்டுக்கறியும் அதன் சுவையும் என்பது பற்றி விலாவாரியாக விதவிதமாக கதைத்துக் கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பேச்சுக்காரச் செல்லங்கள். பாரதியாரின் வாய்ச்சொல் வீரர்களை நமக்கு கண் முன்னே நிறுத்துபவர்கள். எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக இதுதான் நடைமுறை.

நான் பயணம் செய்த களைப்பில் இரவுச் சாப்பாட்டை சாப்பிடாமலேயே எங்கள் வீட்டுத் திண்ணையிலேயே, கட்டிலில் தூங்கிவிட்டேன். காலையில் நான் ஏழு மணிக்கு எழுந்தேன். கட்டிலில் இருந்தவாறு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தை நோட்டமிட்டேன். அங்கே பேருந்து நிறுத்தத்தில் எட்டு மணி பேருந்திற்காக 5 ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஏழு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் இரண்டு பேர் எனது கலிபோர்னியா பாணியில் உடுப்பு உடுத்தியிருந்தார்கள்.

குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 9ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 

முத்தமிழ்ப்பித்தன் எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *