கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 28 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(2008ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

1. பாம்பு மாநாடு

    மினி தான் என்னிடம் முதலில் சொன்னாள், “இது போன்ற மாநாடுகளை நீ எப்போதும் கண்டிருக்க மாட்டாய்”. புறப்பட்டுப் போய் பார்க்கச் சொல்லி விட்டு சைக்கிளை மிதித்து அவளின் பாதையில், அவளுக்குரிய வேகத்துடன் ஊர்ந்து போனாள். 

    அவள் வரவு குறித்து அம்மா என்னிடம் கூற முன்னர் ‘டொல்பின்’ போன்ற எனது நீர் மூழ்கிக் கப்பலின் பணி களை முடித்து விட்டு சகல இயந்திரங்களதும் இயக்கம் குறித்து திருப்திப்பட்டுக் கொண்டேன். அன்றைய தினமே அதை வெள்ளோட்டத்துக்கு இறக்குவதென முடிவு பண்ணும் போது அவளும், ராகவனும் ஞாபகத்துள் வந்து அவர்களும் வருவதாக கூறவும், அவர்கள் மீதிருந்த ஈர்ப்பினால் நானும் உடன்பட்டுக் கொண்டு சரியாக 14.00 மணிக்கு புறப்படுவ தென தீர்மானித்துக் கொண்டதுடன், திட்டத்தின் ரகசியம் பேணல் குறித்துக் கதைக்கும்போதுதான் அம்மா அங்கிருந்து என்னை மீட்டெடுத்து மினியின் வரவை அறிவித்தாள். 

    திடீரெனக் கூட்டப்பட்ட மாநாடு, தேசியம் சார்ந்தோ பிர தேசம் சார்ந்தோ இருந்திருக்கலாம். அவளது தகவலின்படி அந்த இடம் முழுவதும் அவை நிரம்பி இருப்பதான தகவல் மட்டுமே. ஆயிரம் அல்லது அதனை அண்மித்த தொகை யாக இருக்கலாம் என்ற எண்ணத்துடன் மேற்சட்டையை அணிந்து தயாராகையில், எனது பகற் கனவு குறித்து அம்மா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் – எப்போதை யும் போல, கனவுகளுள் என் அறிவு வளர்ந்து பெருகுவது குறித்து இதுவரை அவர்களுக்கு எந்த விடயமும் அறிவிக்கப்படவில்லை. நான் களைப்பைப் போக்க அல்லது சோம்பலுக்காகக் கண்ணை மூடி உறங்கிக் கிடக்கிறேன் என அவர்கள் எண்ணி இருக்கக்கூடும். 

    அதனால்தான் தூக்கத்தைக் கலைத்தும் – கலையும் நேரங்களிலும் அவள் திட்டிக் கொண்டே இருப்பாள். நான் விஞ்ஞானியாக உலா வரும் ரகசியம் அவளுக்கு தெரிந் திருந்தால் சந்தோசப்படுவாள். சைக்கிளைத் தள்ளிச் சென்று மிதிக்கத் தொடங்கினேன். 

    எனது ஆரம்பகால சைக்கிள் பயணத்தில் இந்த ஏற்றம் ஒரு சவாலாகவே இருந்தது – பாலத்துக்காக பாதை உயர்த்தப்பட்டு கிடைப்பாதையுடன் சரிவை உண்டாக்கி இருந்தது. வரும் போது சைக்கிளை மிதிக்காமலேயே நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய சுகமும் இருந்தது. இப்போது அவ்வாறு இல்லாவிட்டாலும் மற்றைய பாதைகளுக்கான மிதிப்பை விட இதற்கு அதிகமாகவே நெற்றியும், மூக்கும் ஈரமாகும். இன்று ஆர்வம் வேகத்தை அதிகமாக்கி இருந்ததால் அவை சொட்டிக் கொண்டு இருந்தன. மோட்டார் சைக்கிள்காரன் ஒருவன் நான் சாவதற்கு போய்க் கொண்டிருப்பதாக திட்டி விட்டுச் சென்றான். ஒருவர் வழியில் மற்றவர் நுழைகையில் அது சாதாரணமானதுதான். அவன் வேகம் அவனுக்கு சரியானது என்றால் எனக்கு என் வேகம் சரியானது தான். 

    பாலம் முழுவதும் மக்கள் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நின்றார்கள். இந்தப் பாலத்தைக் கடக்க நேர்ந்த இலட்சக்கணக்கான தடவைகளில் எந்த வேளையிலும் இது மாதிரியான நெரிசல் நிறைந்த பாலத்தைக் கண்டதில்லை. முன்னர் ஒரு முறை பாலத்திலிருந்து ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட போதுகூட அவரின் உடலைப் பார்க்க இத்தனை கூட்டம் நிற்கவில்லை. எங்கள் நாட்டின் மிக நீளமான பாலமாக இதுதான் திகழ்ந்தது, இதற்குப் போட்டியாக இன்னொன்று கட்டப்படும் வரை. போர்த்துக் கேயரோ, ஒல்லாந்தரோ சரியான மறதி எனக்கு. இரு நிலப்பரப்புக்களையும் இணைத்து தரை வழிப் போக்கு வரத்துக்கு இதனை கட்டி இருந்தார்களாம். 150-200 மீற்றர் நீளமான பாலத்தைக் கடந்து இரு ஓரங்களிலும் இருந்த ‘கொங்க்றீட்’ வேலிப் பகுதிகளிலும் இந்த அதிசயத்தை வியந்து கொண்டிருந்தார்கள். 

    சாலைப் போக்குவரத்து விதியை மீறாமல் எனக்கான இடது புறத்தால் மெதுவாக மிதித்து – யாரையும் இடித்து விடாமல் இருப்பதில் கவனத்தைச் செலுத்தினேன். ஆனாலும் உரசிக் கொள்ள நேர்ந்த இருவரைப் பார்த்ததும் பல்லைக் காட்டிக் கொண்டு, ஒரு ஓரத்தில் என் வாகனத்தை – சைக்கிளை பூட்டி விட்டு, நெரிசலுள் மெதுவாக நுழைந்து பாலமும் வீதியும் ஒப்பந்தம் செய்துள்ள பகுதியின் இடது புறத்தில் நின்று கொண்டேன். வலது புறத்தில் பச்சைகள் கலப்புற்ற பாதுகாப்புக் கூடாரம் உள்ளதால் அங்கு நிற்க முடியாது. 

    யாரும் தங்கள் தங்கள் வாய்களை மூடிக்கொண்டதாக இல்லை. குரல்வளை அதிர்ந்து நாக்கைத் தடவி வார்த்தை களாய் நீண்டு கொண்டே இருந்தது. 

    “அது சாரை”

    “அந்தா விரியன்” 

    “கருநாகமும் இருக்கும் போல” 

    காதுள் நுழைந்த அபிப்பிராயங்களை கேட்ட வண்ணமே வாவியை எட்டிப் பார்க்கின்றேன். 

    பாம்புகள் பிணைந்து கட்டித் தழுவிய வண்ணம் நெளிந்து கொண்டிருந்தன. இது பெரிய மாநாடாய் இருக்க வேண்டும். அத்தனையும் ஒன்று கூடி இருந்தன. உள்ளங் கையில் பத்துக்கு அதிகமான மண் புழுக்களை நெளிய விட்டதுபோல ஒன்றின் மேல் ஒன்றாக ஊர்ந்து சறுக்கி விழுந்து வாவியை சலனப்படுத்தி அசைத்துக் கொண்டிருந் தன. உயிரொடுங்கி- விரிந்து முழுமையுறா சலனத்தை முளைவிடச் செய்தன. அரூபமாய் எழுந்தவற்றினை ரூப மாக்கி எண்ணங்களை அலைய விட கூட்டத்துள் பார்வைப் புலத்தை நெளிய விடுகையில் மூன்று தலை தள்ளி வாய் பிளந்து வேறெதையும் நினைக்க மறந்து மாநாட்டுள் புள்ளியாய் கலந்து நின்றான் இராகவன். 

    கைகளைத் தட்டி, வாயால் சீட்டி ஊதி அருகில் வரவழைத்துக் கொண்டு சர்ப்ப மாநாடு குறித்து உரையாடத் தொடங்கினேன். சந்தனக்காடு, நாகரத்தினம், ஐந்து தலை நாகம் எல்லாம் இடையுள் நுழைந்து போயின. எங்கு தொடங்கினோம், எங்கு போய்க்கொண்டிருக்கின்றோம் என்பது தெரியாமல் தொடர்ந்து கொண்டிருந்த உரையாட லில் அதன் எண்ணிக்கை பற்றியதான கணித்தல் வந்தது. 

    பாலம் 150 மீற்றர் எனவும், பாம்புக் கூட்டத்தின் மொத்த நீளம் 200 மீற்றர் எனவும் கொள்வோமானால் ஒரு சதுர மீற்றருக்கு 100 என எடுத்தாலும் 30,000 பாம்புகள். இங்கு இன்னமும் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். இவற்றைக் கனவளவாகப் பார்க்க வேண்டும். ஏனென்பதை நீ அறிவாய். எப்படியாகிலும் 50,000 சர்ப்பங்களைக் கொண்ட மாநாடாய் இருக்கும். 

    அவன் கணிதத்தில் பத்துப் புள்ளிகளை மட்டும் தவற விட்டவன் என்ற அடிப்படையில் எனது கூற்றை ஏற்றுக் கொண்டாலும், இது மாநாடு அல்ல என்பதைக் கூர்ந்து அவதானித்தால் நீ கண்டு கொள்வாய். இவை எல்லாம் எங்கோ யாத்திரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன அல்லது சென்று கொண்டிருக்கின்றன. இப்போதைய நிலவரத்தின்படி நான் வரும்போது இருந்ததை விட, பத்து மீற்றரை விட அதிகளவான தூரம் முன்னேறி இருக்கின்றன. 

    எங்கள் ஊகங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அவை தங்கள் திசையில் நகர்ந்து நீரை அசைத்துக் கொண்டிருந்தன. 

    2. இழுபட்ட புகைப்படம்

      அன்றைய நாளில் இருள் கவியத் தொடங்கிய பொழுதில் முன்னெப்போதையும் விட வீட்டினுள் வேகமாய் நுழைந்த அப்பா, தனது கையில் அதிசயமான படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்க்க வருமாறும் அழைத்துச் சத்தம் போட்டார். அவரின் முகத்தில் சிறிது படபடப்பு மின்னல் வெட்டாய் ஓடியது. 

      வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் வாசற் கதவைத் திறந்து சைக்கிளை உள்ளே செலுத்தி கதவை மூடி விட்டு வரும் அவரிடம் இன்றைக்கு அந்தப் பக்குவம் காணாமல் போயிருந்தது. வண்டி வெளியில் வேலியிலேயே சாய்ந்து கிடந்தது பூட்டப்படாமல். 

      தான் தனது நண்பர்களுடன் கோயிலுக்குச் சென்றி ருந்த நேரம் எடுக்கப்பட்டவை என சில புகைப்படங்களை எடுத்துக் காட்டினார். முதலாவது படத்தைப் பறித்தெடுத்த அக்கா “ஒன்றும் தெரியவில்லை. அப்பாவுக்கு இன்னமும் படம் எடுக்கத் தெரியாது என்னிடம் நீட்டினாள். அதில் ஒளி மேல் நோக்கி இழுபட்டு இருந்ததால் படம் தெளிவின்றி சலனமாக இருந்தது. மற்றையதுவும் அப்படியே இருப்பதாக அம்மா தந்தாள். 

      ‘அதுதான் அதிசயம். இந்தப் படங்கள் மட்டுமல்ல அன்றைய தினமும் அதற்கு அண்டிய தினங்களிலும் மாலை வேளையில் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் இப்படித்தான் உள்ளன” என்ற அப்பா சகல படங்களையும் பரப்பி வைத்துக் காட்சிப்படுத்தினார். எல்லாவற்றிலும் மின் விளக்கு ஒளி மேல் நோக்கி இழுபட்டுச் சென்ற வண்ணம் இருந்தது. இவை தனக்குக் காலையிலேயே கிடைத்தாலும் இவை பற்றிய கலந்துரையாடலிலும், இதைப் போல இருந்த இன்னும் பல படங்களையும் தேடிக் கண்டு பிடித்து அவற்றைப் பார்த்துவிட்டு வருவதிலும் பல மணி நேரங்கள் கரைந்து போனதாம். 

      மேல் நோக்கி ஒளியை இழுக்கக்கூடிய ஒரு வித ஈர்ப்புச் சக்தியினால்தான் இது நடந்திருக்கக்கூடும். அது புவியீர்ப்பை விட அதிகளவு சக்தி கொண்ட ஒளியீர்ப்பு. கீற்றுக் களை அண்ட வெளிக்கு இழுத்துப் பயணித்தது. காலநிலை மாற்றத்தின் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதிய வேளையில்தான் ஒருவன் “அது சக்தி வாய்ந்த கோயில் எனவும் அதன் குடமுழுக்கைக் காண அனைத்துச் சித்தர்களும் ஒன்றுகூடி வானில் நின்றிருந்ததனால் அவர்களது ஒன்று திரண்ட சக்தியே ஒளியை மேல் நோக்கி இழுத்திருக்கிறது” என்றானாம். 

      இதைக் கேட்டுக்கொண்டே கண்ணாடியை சரி செய்து புகைப்படமொன்றைக் கையில் எடுத்துக் கொண்டே, இது தெய்வச் செயலே தவிர எதுவுமில்லை. அண்மைய நாட்க ளாகவே தெய்வ அனுக்கிரகம் இந்த ஊருக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டதைத் தான் உணர்ந்ததாகக் கூறிய அம்மம்மா, இப்படிப்பட்ட பல காட்சிகள் தன்னைப் போன்ற (வயது கூடிய அல்லது பக்தி நிறைந்த என்பதை உணர்த்த விரும்புகிறாள் என நினைக்கிறேன்) பலரது கனவுகளில் வருவதைத் தாங்கள் சந்திக்கும் வேளையில் கதைத்துக் கொள்வதாகவும் பெரும்பாலும் இக்கதையாடல் கோயிலி லேயே நடப்பதாகவும் கூறினாள். 

      எதையும் “அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது” என அப்பா மறுதலித்தபோது, அம்மாவும், அக்காவும் மெதுவாக அடுப்பறைப் பக்கம் மறைந்து போனார்கள். தாங்கள் சிலர் சேர்ந்து இந்த அதிசயம் குறித்து பலருக்கு அறியத் தந்திருப்பதாகவும் அவர்களின் அறிக்கையின் பின் இது குறித்து முடிவுகள் எதையாவது எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டு அப்பா சைக்கிளை உள்ளே கொண்டு வரச் சென்றார். 

      அப்போதைக்கு அது வீட்டளவில் நின்று போனாலும் ஊர் முழுவதும் கதைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 

      3. சந்தனக் காடு

        பகல் இரவு எதுவித வேறுபாடுமின்றி கனவு முழுவது மான ஆக்கிரமிப்பில் சர்ப்பம் ஈடுபட்டிருந்தது. அது நீடித்திருந்த நாட்களின் எண்ணிக்கையை வரையறுக்க முடியாது. நேற்றும் இன்றைய காலைக் கனவிலும்கூட அதுதான் வந்தது. 

        எங்களது நீர்மூழ்கியின் மேல் கட்டுமானத்தை அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் கரு மேகம் சூரியனை மறைப்பதைப்போல இருள் நிரம்பியது. வானம் முழுவதும் இறக்கை முளைத்திருந்த பாம்புகள் பறந்து கொண்டிருந்தன. திடீரென தாழ்வாகப் பறந்து வந்த ஒரு பாம்பு தலையாலும், இறக்கையாலும் என்னை அழைத்தது. 

        என் மயிர்கள் சிலிர்த்துக் கொண்டன. இரு தோள் பட்டை களிலும் ஒரு வித உறுத்தல். இரு கைகளின் மோதிர விரலும் சிறுவிரலும் பிரிவுபட்டு அக்குள் பகுதி வரையான நீண்ட பகுதி ஒரு கை போல கீழ் நோக்கி வந்து உடலுடன் ஒட்டிக் கொண்டது. கைக்கும், பிரிந்த பகுதிக்கும் இடையில் தோலும், நரம்புகளும் இழுபட்டு, கை, இறக்கைகள் போல ஆனது. கைகளை அசைக்கும் போது உடலின் நிறை குறைந்து மேல் நோக்கி பறக்கலானேன். வேகமாக அசைக்கையில் இன்னமும் உந்தப்பட்டு காற்றில் மிதந்த வண்ணமே பாம்புக் கூட்டத்தைத் தொடர்ந்து பறந்தேன். பின்னால் இருந்து அருகில் வந்த மினி இறக்கையை அசைத்த வண்ணமே என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். 

        கடற்கரை ஓரமாக ரோகினி, சந்துரு, அபி, பவி, குமார், ருதி எல்லோரும் புழுக்களாகி விளையாடிக் கொண்டிருந் தார்கள். என்ன விளையாட்டென இனங்கண்டு கொள்ள முடியாத உயரத்தில் நாங்கள் எங்களைப் பார்த்து உடலசைத்து வழியனுப்புவது போலிருந்தது. 

        ஏழு கடல் தாண்டிப் போனோம். தூரத்தே நிலத்தி லிருந்து ஒளிக்கற்றைகள் வானை நோக்கிப் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த மரங்கள் அடர்ந்த தீவுக்குள் அவை தரை யிறங்கின. நாங்களும் அங்கேதான் இறங்கினோம். 

        உடலைக் குளிரப் பண்ணும் சுகந்தம் எங்கும் நிறைந் திருந்தது. அது சந்தன வாசமென மினி கூறிக்கொண்டு மூச்சை இழுத்து நெஞ்சை நிரப்பினாள். 

        நிலம் ஒளியை வெளிப்படுத்தவில்லை என்பதைக் கண்டு கொண்டோம். பரவலாய்ச் சிதறிக் கிடந்த உள்ளங் கையளவினதான சிறுசிறு கற்கள்தான் ஒளிர்ந்து கொண்டிருந்தன. 

        இவை நாகரத்தினமாக இருக்க வேண்டும். நாகத் திலுள்ள அதி உயர் செறிவுடைய புரதமான விஷம் கட்டி யாகி, பாம்புகள் மூப்படைந்து கண்கள் குருடாகிப் போகும் போது அவற்றுக்கு ஒளி கொடுப்பவையாக இருக்கும். 

        புதுக்கதையொன்றை மினியிடமிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். 

        வயது போன பின் வாய்க்குள்ளிருந்து கக்கி அதன் ஒளியில் தான் இரையை தேடும். அதன் பின் அவற்றுக்கு இறக்கை முளைத்து ஏழு கடல் தாண்டி சந்தனக் காட்டுக்கு வரும். நாம் இப்போது சந்தனக் காட்டில் தான் நின்று கொண்டிருக்கிறோம். இவளுக்கு இப்படியான விடயங்கள் நிறையத் தெரியும். என்னுடைய அம்மம்மா மாதிரியே இவளுக்கும் கதைகள் கூற யாரோ இருக்கின்றார்கள். இதை விடவும் நிறையவே தேடல் இவளுக்கு உண்டு. எதையும் கேள்விக்குள்ளால் வளைத்து அதற்கான மறுமொழி தேடி புத்தகங்களுக்குள்ளும், மூளையினுள்ளும் தொலைந்து போவதும் இயல்பு. 

        மெதுவாக நகர்ந்தோம். எனது வலதுகையும் அவளது இடதுகையும் உரசிக் கொண்டு பாம்புகள் கழற்றிப் போட்ட பழைய சட்டைகளைப் பார்த்தே முன்னேறினோம். ஒவ்வொரு சந்தன மரத்திலும் அதைக் கட்டிக் கொண்ட வண்ணம் நிலைக் குத்தாய் பாம்புகள் தொங்கின. விதி விலக்காய் ஒன்றிரண்டு கம்புபோல நிலத்தில் நின்றன. 

        ஐந்து மீற்றர் ஆரையில் வட்டமாக பரிதியிலே ஒளி கொண்ட கற்கள் கிடக்க, மையத்தில் பெரிய முட்டை யொன்று இருந்தது. கோள வடிவுடைய அதன் ஓட்டுத் தன்மையைக் கொண்டே முட்டையென ஊகித்துக் கொண்டோம். 

        அதை நான் மட்டுமாகக் கட்டிப்பிடிக்க முடியாததால் எதிரெதிர் திசையில் நின்று கொண்ட இருவரும் இரு கைகளையும் விரித்து அணைத்தபடி அதன் சுற்றளவை அளந்து பார்த்தோம். இருவரது நடுவிரல்களும் ஒன்றை யொன்று ஒரு இஞ்சி அளவில் தடவிக் கொண்டாலும் கைகளைப் பிடிக்கக்கூடிய அளவில் அதன் சுற்றளவு இடம் தரவில்லை. 

        “இது எத்தனை பெரியது” என எண்ணிக்கொண்ட கணம் கண்களை நம்ப முடியாத வகையில் எங்கிருந்தோ பறந்து வந்த ஐந்து தலையுடைய நாகம் தலையை விரித்து படமெடுத்து நின்றது. ஒவ்வொரு தலையிலும் இருந்து பிளவுபட்ட நா நீண்டு வருவதும், உள் இழுபடுவதுமாக இருந்தது. கழுத்தின் கீழப்பகுதியில் இருந்து அடி வயிறு வரை இதயம் நிரம்பித் துடித்துக் கொண்டிருந்தது. பயம் இறங்கி காற்சட்டையை நனைத்தது. அளத்தலை விட்டு விட்டு இருவரும் ஓரே கணத்தில் பூமியை உந்திக் கிளம்பினோம். 

        அன்றைய காலையில்தான் தலையில் இரண்டு மொட்டுக்களைத் தந்த அம்மா இன்னமும் சிறு பிள்ளை யைப் போல படுக்கையில் சிறுநீர் கழிப்பதாகத் திட்டினாள். 

        கனவின் படபடப்பும், அகால வேளைச் சைகையும் உடம்பின் பாகங்களிலிருந்து கடத்தப்பட்டு பொழுதொவ் வொன்றிலும் உறுத்திக் கொண்டே இருந்தது. 

        4. கடல் அலை

          நாங்கள் சந்திப்பதற்கான நேரம் கடந்து அரை மணி நேரம் கழிந்த பின்தான் மினி வந்தாள். இன்னமும் ராகவன் வரவில்லை. இருந்தாலும் அன்றைய பொழுதைத் திட்டமிட்ட முறையில் கழிக்க அம்மம்மாவைக் கூட்டிக்கொண்டு சென்று மாமரத்தின் கீழ் பன்பாயை விரித்து இருக்கச் செய்து அவளைச் சூழ நாங்கள் அமர்ந்து கொண்டோம். அன்று அக்காவும் வந்தாள். 

          கிழமையில் ஒரு நாள் அம்மம்மாவிடம் இருந்து கதைகளைக் கேட்டறிவது வழக்கமான செயல். அந்தக் கிழமையின் கதைக்கான நாளையும், நேரத்தையும் பாடவேளையின் இடைவெளியில் கதைத்துத் தீர்மானித்துக் கொள்வோம். மூவரும் ஓரே பாடசாலையில் என்பதால் அதில் எந்த இடரும் நுழைந்திருக்கவில்லை. இது மூவரதும் வாராந்த அட்டவணையில் இருக்கும் மாற்ற முடியாத ஒன்று. அக்காவுக்கு விருப்பு இல்லாவிட்டாலும் அவளும் சில வேளைகளில் வந்து கலந்து கொள்வாள். அம்மம்மாதான் எங்களுக்குச் சொல்ல வேண்டிய கதையைத் தீர்மானிப் பாள். சில வேளை அம்மப்பாவினுடைய கதைகளையே அளப்பாள். 

          அப்போதைய கணத்துக்கான கதைகளை அவள் ஒழுங்குபடுத்த மௌனித்திருப்பாள். அவள் கதை சொல்லும்போது அக்கறையுடன் கேட்க வேண்டும். அடிக்கடி “ம்” கொட்ட வேண்டும். இல்லாவிட்டால் கோபம் வந்து துரத்தி விடுவாள். அப்படி முன்பொருமுறை நடந்திருக் கின்றது. மௌனத்தைக் கலைத்து “கடலில் எப்படி அலை கள் வந்தது தெரியுமா” என்ற கேள்வியுடன் தொடங்கினாள். கடலில் அலை உருவான கதை தொடங்கியது. 

          திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னும் குழந்தைகள் இல்லாததனால் கணவனும் மனைவியும் வேதனைப்பட்டுக் கோயிலையும் மரங்களையும் சுற்றி வந்தார்கள். ஊருக்கு வந்திருந்த பெரிய சாமியார் ஒருவரிடம் அவர்கள் தங்கள் குறையைக் கூற சாமியாரும் அவர்கள் இருவரின் வேதனையை உணர்ந்து கொண்டு அழகானதொரு மாம்பழத்தை அவர்களுக்குக் கொடுத்து பெரிய பானையொன்றில் அதைப் போட்டு பதினைந்து நாட்களின் பின் சாமி படத்துக்கு முன் வைத்து திறந்து பார்க்கச் சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார். பக்குவ மாகப் பழத்தைக் கொண்டு வந்தவர்கள் புதிய பெரிய பானையொன்றில் பழத்தை இட்டு சாமி அறையினுள் வைத்தார்கள். பதினைந்து நாட்கள் எப்போது முடியுமென இருவரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். உடனேயே திறந்து பார்த்து விட வேண்டுமென ஆசை இருந்தாலும் சாமியாரின் உத்தரவின்படி இடையில் திறக்கவில்லை. 

          சரியான நாளும் வந்தது. இருவரும் குளித்து இறைவனைக் கும்பிட்டுப் பானையைத் திறந்தார்கள். அவர்களின் கண்ணையே அவர்களுக்கு நம்ப முடிய வில்லை. பானையினுள் அழகான பெண் குழந்தை சிரித்த வண்ணம் கிடந்தது. 

          தங்கள் உயிரை வைத்து அவளை வளர்த்து வந்தார்கள். அவளும் பெரியவளாக வளர்ந்தாள். ஊரில் எல்லோரும் அவளை “மாம்பழ அழகி” என்றே அழைத்தார்கள். ஊரில் யாரிடமும் இல்லாத கொள்ளையழகு அவளிடம் இருந்தது. 

          அவர்களின் வீட்டிற்கு முன் வீட்டில் ஒரு கால் இயலாத வன், நடக்க முடியாத ஒருவன் இருந்தான். அவன் அவளை எந்நேரமும் விழுங்கி விடுவதுபோல முறைத்துப் பார்த்த வண்ணமே இருந்தான். 

          ஒரு நாள் அவள் குளிக்கச் செல்லும்போது தன் ஊன்று கோலை ஊன்றியபடி அவன் தூரத்திக் கொண்டே சென் றான். மாம்பழ அழகியும் ஓட்டமும் நடையுமாக கிணற்றடிக் குச் சென்றாள். 

          அவள் ஒரு நாள் குளிக்கச் செல்லும் போது வழியில் கிடந்த புன்னைக்கொட்டையை எடுத்துச் சென்று கிணற்றுக்கு அருகில் நட்டு ஒவ்வொரு நாளும் நீர் ஊற்றி வளர்த்து வந்தாள். அது அவளின் உயரத்துக்கு இப்போது வளர்ந்து நின்றது. ஓடிச் சென்று அதன் மேல் ஏறிக் கொண்டாள்.

          “நான் வளர்த்த அன்ன மரமே புன்னை மரமே
          முடவன் என்னைப் புடிக்க வாறான் 
          ஒரு முழும் நீளு….” என்றாளாம். 

          அப்படியே அவள் சொல்லச் சொல்ல மரமும் நீண்டு வளர்ந்ததாம். நடக்க இயலாத அவனும் அவளைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கினான். மாம்பழ அழகியும் புன்னை மரத்தை வளரச் சொல்லி மேலே மேலே போனாள். அவனும் ஏறிக்கொண்டே வருவதைக் கண்டவள் இனியும் முடியாது என நினைத்துக் கொண்டு 

          “நான் வளர்த்த அன்ன மரமே புன்னை மரமே
          முடவன் என்னை புடிக்கப் போறான்
          வளைந்து கடலில் விழு” என்றாளாம். 

          புன்னை மரம் கடல் பக்கம் சாய அவள் கடலில் குதிக்க அவனும் குதித்தானாம். அவள் பெண்ணலையாக மாறி கரைக்கு வந்து சுருண்டு உள்ளே செல்ல, ஆணலையாக மாறிய அவன் அவளை துரத்திக் கொண்டே இருந்தானாம். அவனால் அவளை இன்னமும் பிடிக்க முடியாமல் துரத்திக் கொண்டே இருக்கிறானாம். 

          கடலில் அலை உருவான கதையை கூறியவள் “கடல் நீர் ஏன் உப்பாயிருக்கிறது” என மினி கேட்ட கேள்விக்கும் இன்னொரு கதை இருப்பதாகக் கூறியவள் வருகின்ற கதைக்குரிய நாளில் அதைக் கூறுவதாகவும், வெற்றிலை போட வேண்டும் என்பதால் அதை இடித்துத் தரும்படி என்னை அழைத்து எழுந்தவள் மடிக்குள் கிடந்த மணற் பருக்கைகளைத் தட்டி விட்டு கூனல் முதுகுடன் நடந்து போனாள். 

          5. பரதேசி வந்தது

            நான், மினி, ராகவன் வகுப்பு முடிந்து பாலம் தாண்டி மெதுவாக எங்கள் ஊருக்கான பாதையில் மிதிக்கத் தொடங்கினோம். மூவரது சைக்கிள்களும் சமாந்தரமாகச் சென்றதால் பல கதைகளை செவிகளுள் பரிமாறிக் கொண்டோம். 

            எங்கள் ஊருக்கான பாதையில் அதிக வாகனம் வருவ தில்லை. மோட்டார் சைக்கிளும், சைக்கிளும் தான் ஊர்ந்து திரியும். பிரதான வீதிக்கு ஏறினால் அப்படிச் செல்ல முடியாது. இருவர் சமாந்தரமாகச் சென்றாலே நகருக்குள் செல்ல முன்னம் பலரிடம் திட்டு வாங்க வேண்டும். சிலர் முறைத்து விட்டு “வீட்டில் சொல்லி விட்டா வந்தீர்கள்” எனக் கேட்டு விட்டுச் செல்வார்கள். அதிலும் அவர்கள் சொல்வது காற்றில் கரைந்து பாதி மட்டும் காதுகளை எட்டும். மீதி வார்த்தைகளைக் காற்றிலே தேடாமல் இதுவாகத்தான் இருக்குமென ஊகித்துக் கொள்வோம். அன்று யாருமே எதுவும் சொல்லவில்லை – எங்கள் உரையாடலைக் குழப்ப வும் இல்லை. 

            நாங்கள் மூவரும் சேர்ந்திருக்கக் காரணமே, எங்களிடம் இருந்த வெறி-சாதிக்க வேண்டும். எங்கள் பெயரை நிலை நாட்ட உழைக்க வேண்டும்-எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்- என்ற எண்ணத்தினால். எனது கனவு முழுவதும் நீர்மூழ்கிக் கப்பலில் நிறைந்து இருந்தது. உங்களுக்குத் தெரியாது. அது மண்ணைத் துளைத்துப் பாதாள உலகத்துக் கும் செல்லும். 

            வைத்தியத் துறையில் பல சாதனைகள் புரிந்து நோபல் பரிசை வென்றுவிட வேண்டும் என்று மினி கூறிக் கொண்டே இருப்பாள். இராகவன் நிறைய வாசிப்பான். புதிய கவிஞர்களை, எழுத்தாளர்களைக் காட்டுவான். வாய்க்குள் நுழையாத பல பெயர்களைக் கூறிக்கொள்ளும் அவன் அவர்களைப் போல எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்பான். அவனுடைய அப்பாவும் நன்றாகக் கதை எழுது வார். இந்த எண்ணமே எங்கள் சிந்தனை முழுவதும் நிறைந்திருந்தது. எங்களிடமிருந்து எந்தப் பாடமும் தப்பி விட முடியாதபடிக்கு அத்தனை பாடங்களையும் நாங்கள் அடக்கி வைத்திருந்தோம். அது தொடர்பாகவே எங்கள் உரையாடலும் நீளும். 

            “அடுத்த வருடம் இந்த வேளையில் நாங்கள் பரீட்சை எழுதி முடித்திருப்போம்.” 

            இராகவனுக்கு மினியின் பதில் 

            “மூவருக்கும் 10A வரவேண்டும்.” 

            ….இதன் நீட்சியாக இன்னமும் சாதனை குறித்த கதைகள் தொடர்ந்தது. 

            நீண்டு வளர்ந்து பல தேசம் தாண்டிய எங்கள் உரை யாடல் என் வீட்டு வாசலுடன் முறிவடைந்தது. சைக்கிளை விட்டு இறங்கி விடை பெற்றபோது தூரத்தே நின்ற கூட்டத்தைக் காட்டினான் இராகவன். 

            “அதைப் பார்த்து விட்டு நாங்கள் அப்படியே செல் கிறோம் நீ திரும்பி வந்து விடு” – மினி. 

            மீண்டும் பயணத்தை உண்டாக்கி, கூட்டத்தை அடைந்து ஓரமாக வேலி ஓரம் சைக்கிளைச் சாய்த்து விட்டுக் கூட்டத் துள் நுழைந்தோம். உடல் முழுவதும் நீல நிறம் படர்ந்து பச்சைச் சேலையைச் சுற்றிக் கொண்ட ஒருவன் கத்திக் கொண்டு நின்றான். “எனக்கு சொல்ல வேண்டிய கடமை உங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சொல்கிறேன். இன்று மட்டும்தான் இந்த ஊர் உங்களுடையது. உங்கள் ஊர் அழிந்து சிதறப் போகின்றது. எல்லோரும் தப்பி ஓடி விடுங்கள்” 

            கூட்டத்துள் இருந்து ஒரு கல் அவன் முதுகில் பட்டது. நிறையக் குரல்கள் ஓடிப் போகச் சொல்லிக் கொண்டிருக்கை யிலேயே இன்னமும் இரண்டு கற்கள் தோள் பட்டையிலும், பிருஷ்டத்திலும் பட்டன. அந்த இடத்திலிருந்து ஓட்ட மெடுத்தவன் சிறிது தூரம் சென்று ஓட்டத்தை நிறுத்தி “இந்த ஊரை விட்டுத் தப்பி ஓடி விடுங்கள்” எனக் கத்திவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தான். அவன் ஓடிக்கொண்டிருக்கும் போதே “ஓடி விடுங்கள் ஓடி விடுங்கள்” என்ற வார்த்தை மட்டும் அவனிலிருந்து நழுவி விழுந்து கொண்டே இருந்தது. 

            “யாரென்று தெரியவில்லை – பரதேசி அங்கிருந்து ஊரின் மேற்கு எல்லையைக் காட்டி – இதையே கத்திக் கொண்டு வருகிறான்.” 

            விளக்கம் சொல்லி விட்டு அவனது திசை வழியே சாரனை மடித்துக் கட்டிய வண்ணம் அவன் நடக்கத் தொடங்கும் போது கூட்டமும் கலைய ஆரம்பித்தது. 

            எங்களில் இருந்து எந்தக் கதையும் எழவில்லை. அந்தப் பரதேசியின் பேச்சு எனது நாக்கைக் காய வைத்திருந்தது. அவர்கள் இருவருக்கும் கையசைத்து விட்டு சைக்கிளை வீட்டின் திசைக்கு திருப்பி மிதிக்கத் தொடங்கினேன்.

            சாதாரண பிச்சைக்காரர்களை – பைத்தியக்காரர்களைக் கிண்டல் பண்ணி விட்டு – கண்டு விட்டு வரும் எள்ளல் நிலையை பரதேசியின் வசனமும், அவனைத் துரத்திய நிகழ்வும் தரவில்லை மனதுக்குள். இறந்து போய் விட்டால், என் நீர்மூழ்கியின் வெள்ளோட்டம்… ஏக்கம் நிறைந்தது. 

            இறுகிக் கசியும் எண்ணப் படர்வை முற்றுப் புள்ளியிட, நம்பிக்கையின் பக்கங்களைப் புரட்டி, ஊர் அழிதல் நிகழாது. மண்ணுள் புதைதலும், காற்று அள்ளிச் செல்ல, அணு விரிதலும் நடவாத சந்தர்ப்பத்தில் அழிதல் சாத்திய மில்லை என்ற நினைவுகளுடனே வீட்டினுள் நுழைந்தேன். 

            – தொடரும்…

            – ஏவிவிடப்பட்ட கொலையாளி, முதற் பதிப்பு: டிசம்பர் 2008, சிறுகுநுனி பதிப்பகம், கொழும்பு, ஸ்ரீலங்கா.

            எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *