ப்ரமாணர்த்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 245 
 
 

அலை பேசி ஒலித்தது. நடராஜன் அலைபேசியை எடுத்தார்.

“என்ன ஓய், சௌக்யமா? நான் தான் உம்மாச்சூ பேசுறேன்” என்று உமா மகேஸ்வரன் வாத்தியாரின் குரல் ஒலித்தது.

“சொல்லுங்கோ. ஏதோ ஓடிண்டு இருக்கு” என்றார் நடராஜன் பேச்சில் சுரத்தே இல்லாமல்.

“நாளைக்கு மாதுங்காவில் ராதாகிருஷ்ணன் – அது தான் ஆஸ்திக சமாஜில் தலைவராக இருந்தாரே – அவரோட ஸ்ரார்த்தம். உங்களுக்கு அவா வீடு தெரியுமோன்னோ?” என்றார் உம்மாச்சூ வாத்யார்.

“தெரியும் மாமா. கன்செண் ஓட்டலுக்கு எதிர்க்க உள்ள தெருவில் மூன்றாவது பில்டிங், நாலாவது மாடி, அதுதானே” என்றார் நடராஜன்.

“நல்லா ஞாபகம் வச்சுண்டு இருக்கேளே. பேஷ் பேஷ்” என்றார் வாத்யார்.


நடராஜனுக்கு நன்றாக நினைவு இருந்தது. ராதாகிருஷ்ணனின் இரண்டு மகன்களில் ஒருவன் அமெரிக்காவில் செட்டில் ஆகி பல வருடம் ஓடி விட்டது. முதலில் வருடத்திற்கு ஒரு முறை வந்தவன் பின்னர் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை என்றாகி பின்னர் இந்தியாவிற்கு வருவதே அரிதாகிப்போனது. தெலுங்கு நாயுடு பெண்ணை அமெரிக்காவிலே ரெஜிஸ்டர் திருமணம் பண்ணி தந்தைக்கும் தாய்க்கும் (நல்ல காலம்) தகவல் மட்டும் சொல்லி அனுப்பினான் அவன்.

ராதாகிருஷ்ணனின் இரண்டாவது மகன், முதல் பையன் போல படிப்பு இல்லை. பம்பாயில் இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் தான் வேலை. நாராயணமூர்த்தி – அது தான் அவன் பெயர். மனைவி விமலா பள்ளிக்கூடத்தில் டீச்சர் – பக்கத்தில் சயானில் தான் பள்ளி இருந்தது .

விமலா நாராயணமூர்த்தி தம்பதியருக்கு ஒரே மகள் பவித்ரா. பத்தாம் வகுப்பு மாணவி. ராதாகிருஷ்ணனின் மனைவி சீமந்தபுத்திரனின் கைங்கங்கர்யத்தால் மனம் உடைந்து படுத்த படுக்கை ஆகி பரலோகம் சென்று ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. ஆனால் சும்மா சொல்லக்கூடாது. விமலா மாமனாரை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டாள். அவர் மறைந்த போது ஊரே மூக்கில் விரலை வைத்தது. ஏன் என்றால் , அவரது மூத்த மகனும் சரி மருமகளும் சரி, ராதாகிருஷ்ணனின் மனைவி சாவுக்கு வரவில்லை. கோவிட் அவர்களுக்கு ஒரு நல்ல சாக்காக போயிற்று. ஒரே ஒரு போன் மூலம் விசாரித்ததோடு சரி.

தங்களது கடமை முடிந்து போய் விட்டது என்று நினைத்தனர் அமெரிக்கா வாழ் தம்பதி. ஆனால் இரண்டாவது மகனோ அப்பாவிற்கு தோளுக்கு தோளாக நின்று அம்மாவின் கடைசிக்காரியங்களை ச் செவ்வனே செய்து முடித்தான்.

ராதாகிருஷ்ணன் முதல் மகன் மற்றும் அவன் குடும்பத்துடன் ஒட்டு உறவை அறுத்துக்கொண்டு விட்டார். அவருக்கு இருந்த சொல்ப சொத்துக்களை மருமகள் விமலா பெயரில் எழுதி விட்டு அவர் சென்ற வருடம் காலம் அடைந்த போது, விமலாவும் நாராயணமூர்த்தியும் ஒரு குறையும் வைக்கவில்லை.

அவரது கடைசிக்காரியங்களை சங்கர மடத்தில் வைத்து நல்ல படியாக முடித்து விட்டனர்.

ராதாகிருஷ்ணனின் மூத்த மகன் தந்தைக்கு கொள்ளி போடவும் வரவில்லை தம்பியிடம் விசாரிக்கவும் இல்லை. குழித் தர்ப்பணம் கூட பண்ணவில்லை அவன்.

இந்த அமர்க்களமெல்லாம் நடந்த போது, நடராஜன் தன் மனைவி பாமாவிடம் அலுத்துக்கொள்வார். ” பாமா, ராதாகிருஷ்ணின் இரண்டாவது பையன் தங்கமான பையன் தெரியுமா. நமக்கு அந்த கொடுப்பினை உண்டா – கவலை ஆக உள்ளது” என்றார் நடராஜன்.

பாமா கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பை உதிர்ப்பாள்.

“ஏண்டி நான் கவலைப்படறது உனக்குச் சிரிப்பா இருக்கோ?” எரிந்து விழுவார் நடராஜன்.

“என்னன்னா , நாமளே இந்த உலகத்தை விட்டு போன பின்பு, நம்ம குழந்தைகள் காரியம் பண்ணறதும் பண்ணாததும் அவா அவா இஷ்டம்னா …புரிஞ்சுக்கோங்கோ. இப்போவெல்லாம் வாத்தியார்கள் எங்கேடா சாவு விழறது எங்கே எவ்வளவு பணம் சுருட்டலாம் என்று அலை பாயறா ..நீங்க வேறே” என்றாள் பாமா.

“வாயை மூடு. வாத்யார்களைப் பத்தி பேசறதுக்கு உனக்கென்ன உன் குடும்பத்துக்கே யோக்கியதை கிடையாது” என்று வள்ளென்று விழுந்தார் நடராஜன். பாமாவிடம் பேசும் போது நடராஜன் பேசுவது போல தோன்றாது. குரைப்பது போல தான் தோன்றும்.

பாமா ஏழைக்குடும்பத்தில் பிறந்தவள். திருமணத்தின் போது அவளுக்குக் காது சரியாகக் கேட்காது என்பதை மறைத்துக் கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள். அதுவே நடராஜனுக்கு கட்டில் அடங்கா கோபம் . நடராஜன் உயரத்தில் நல்ல குள்ளம். டெலிபோனில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

பாமா பம்பாயில் ஹை கோர்ட்டில் டைப்பிஸ்ட் ஆக வருடக்கணக்காக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டாள். ஆனாலும் மனைவி என்றால் நடராஜனுக்கு என்றுமே இளக்காரம் தான். பாமா உயிரோடு இருக்கும் வரை சுளையாக நாற்பது ஆயிரம் பணம் பென்ஷன் ஆக வங்கியில் வந்து கொண்டிருந்தது.

ஆமாம், ஆறு மாதம் முன்பு நடராஜனின் கத்தல் கீசல் எல்லாம் இனிமேல் வேண்டாம் என்பது போல பட்டென்று மாரடைப்பில் போய் விட்டாள் பாமா . இத்தனைக்கும் அவளுக்கு நீரிழிவோ ரத்த அழுத்தமோ கிடையாது. இரண்டு மகன்களின் பேரிலும் உயிரையே வைத்து இருந்தாள். மருமகள்களை ஒரு வேலை பண்ண விடாமல் தானே எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வாள். அவர்களது துரதிர்ஷ்டம் இரண்டு பிள்ளைகளுக்கும் குழந்தை பாக்யம் இல்லை. குல தெய்வப் பூஜை என்ன, சமாராதனை என்ன – பூஜை புனஸ்காரங்கள் பண்ணியும் பேத்தியையோ பேரனையோ கொஞ்சும் பாக்கியம் நடராஜன் தம்பதிகளுக்கு கிட்டவில்லை.

மனைவியிடம் வள்ளு வள்ளுவென்று நாய் மாதிரி குலைப்பது நடராஜனுக்கு வாடிக்கைஆகிப் போனது தான் வருத்தமே. அந்த அளவுக்கு அவருக்கு கர்வம். மனைவி வேலை பார்த்ததை அவர் சட்டை பண்ணினதாகவே தெரியவில்லை.

பாமாவும் தத்து பிடித்துவென்று உளறுவாள். பேசத் தெரியாது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் மனைவியை ரோடு ஆகட்டும் பிள்ளைகளுக்கு எதிரில் ஆகட்டும் , மாட்டுப்பொண்களுக்கு எதிரில் என்று மரியாதை இல்லாமல் காச்சு மூச்சென்று கத்தி கத்தி மகன்களும் சரி மருமகள்களும் சரி பாமாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சில வருடம் முன்பு பாமாவுக்கு டெங்கு காச்சல் வந்த போது பிள்ளைகள் ஆஸ்பத்திரிக்கு ஓடியாடி கவனித்துக்கொண்டார்கள். அதுவே ஒரு பெரிய விஷயம் தான்.


எவ்வளவுக்கு எவ்வளவு பாமாவும் நடராஜனும் செட்டும் கெட்டும் ஆக வாழ்க்கை நடத்தினார்களோ, அவர்களது இரு மருமகள்களும் நேர் எதிர். அமேசான் பிளிப்கார்ட் …இதில் பொருட்களை ஆர்டர் பண்ணி பண்ணி வீடு நிரம்பி வழிந்தது. பாமா ஏதாவது சொல்ல முற்பட்டால் நடராஜன் குரைத்து அவளை அடக்கி விடுவார்.

நல்ல காலம். முதல் பையன் சுரேஷின் திருமணத்திற்கு பின்னர் செம்பூரில் சேடா நகரில் வீடு வாங்கிக்கொடுத்து விட்டார்கள். நடராஜனுக்குக்கூடப்பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். இருவருமே திருமணம் பண்ணிக்கொள்ளவில்லை. ஒருவன் பாங்கில் வேலை பார்த்து வாத நோயால் அவஸ்தைப்பட்டு போய்ச் சேர்ந்து விட்டான். அவன் சொத்துக்கள் எல்லாம் நடராஜனின் பிள்ளைகள் சுரேஷுக்கும் ரமேஷுக்கும் போய் ச் சேர்ந்து விட்டன. கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து லக்ஷம் ஆளுக்கு. செம்பூரில் வீடு வாங்குவது எளிதாகப் போயிற்று.

நடராஜனின் இன்னொரு தம்பி அவன் நீரிழிவால் அவதிப்பட்டு சரியாக சாப்பாடு இல்லாமல் ஈரோட்டில் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தவன் பட்டென்று ஒரு நாள் சாய்ந்து விட்டான் – வகுப்பறையிலேயே. அவன் சொத்து கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலே. இதையும் இரண்டு மகன்களுக்கும் பங்கு போட்டு விட்டார் நடராஜன்.

இதைத் தவிர பாமாவின் பென்ஷன் பணத்தை வங்கியில் போட்டு அவள் செத்த பின்னர் அந்த பணத்தை இரண்டு மகன்களுக்கும் பங்கு போட்டு கொடுத்து விட்டார். போன வருடம் தான் இளைய மகன் திருமணம் ஆகி செம்பூரிலேயே வாடகை வீடு பார்த்து குடியேறி விட்டான். அவன் மனைவி சொந்த வீடு வேண்டும் என்று நச்சரிக்க அங்கேயே பக்கத்தில் வீடு வாக்காக கிடைத்து. சொந்த வீடும் வாங்கி விட்டது

நடராஜனின் பென்ஷன் பணமும் வங்கியில் போடப்பட்டு அவ்வவ்போது இரண்டு மகன்களிடமும் பிரிக்கப்பட்டது.

நடராஜன் பாவம் மகன்கள் மேலும் மருமகள்கள் மீதும் அப்படி ஒரு பாசம், அப்படி ஒரு நம்பிக்கை. அதில் இம்மி அளவு கூட மனைவி மேல் இருந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவளை பல முறை மனதிற்குள் – செவிடு என்று திட்டி இருக்கிறார்.

பாமா மறைந்த பின்னர் நடராஜன் இரண்டு மாதம் ரமேஷ் வீட்டில் மற்ற இரண்டு மாதம் சுரேஷ் வீட்டில் என்று கழிக்க ஆரம்பித்தார். அவருக்கு கல்யாண் என்கிற இடத்தில் ஒரு சிறிய வீடு இருந்தது. நிறைய நாள் வாடகைக்குக் கொடுத்த பின்னர் அங்கிருந்தவர்கள் சென்னைக்கு குடியேறிய பிறகு அந்த வீட்டை பூட்டி வைத்து இருந்தார்.

நல்ல வேளை. நடராஜனுக்கு மாதா மாதம் அறுபது ஆயிரம் பென்ஷன் வந்து கொண்டு இருந்தது.

இரண்டு மகன்களின் வீட்டிலும் வெகு விரைவில் நடராஜன் வேண்டப் படாதவர் ஆகிப்போனார். மூத்த மருமகள் சங்கீதாவோ கணவனிடம் – “Your father is a liability dear hubby” என்று ஸ்டைலிஷ் ஆக அலுத்துக்கொண்டாள். இரண்டு வீட்டிலும் பாதி நேரம் ஸ்விக்கி, ராபிடோ மற்றும் சோமாடோ என்று தூள் கட்டிப்பிறந்தது.

பாவ் பாஜி, பிஸ்சா, பூண்டு பிரட், வெஜ் புலாவ் …என்று வீட்டில் சமைப்பது என்பது ஒரு தேவையற்ற விஷயமாகப்போய் விட்டது.

பாமா பண்ணின சாம்பார், மிளகு ரசம், எலுமிச்சை ரசம், பருப்புத்தொகையல், மிளகுக்குக்குழம்பு, புடலங்காய் கூட்டு, தேங்காய் அரைச்ச குழம்பு, கொத்தவரங்காய் உசிலி, கும்பகோணம் கடப்பா,

மல்லிகைப்பூ போல இட்டிலி, வத்தக்குழம்பு , அரிசி மா தோசை, அடை, வெல்லத் தோசை, தேங்காய் சேவை, கரமா உப்புமா, ரவா உப்புமா, அரிசி உப்புமா என்பது எல்லாம் நடராஜனுக்கு முடவனுக்கு கொம்புத்தேன் கிடைத்த கதையாக ப்போயிற்று.

மனைவியின் சாவிற்கு பின்னர் தான் நடராஜனுக்கு உண்மை உரைத்தது. அவரது கர்வம் அடங்கியது. மருமகள்களிடம் வாயைத் திறக்க நாதியில்லை. அவர் காது படவே – “ஆமாம், இவர் உங்கம்மாவை எப்படி நடத்தினார் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன” என்று இகழ்ச்சியாகப் பேசினாள் இரண்டாவது மருமகள்.

இத்தனைக்கும் இரண்டு மருமகள்களும் வேலைக்கு போய் ஒன்றும் கிழிக்க வில்லை. ஆனால் எக்கச் செக்க சொத்து சேர்ந்த பின்னர் எதுக்கு மெனக்கெட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு மேலோங்கியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

மாற்றி மாற்றி ஒரு மகன் வீட்டில் இருந்து இன்னொரு மகன் வீட்டிற்கு பந்தாட்டப்பட்டு நடராஜன் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

ஒரு நாள் அவரது இரு மகன்களையும் கூப்பிட்டு விட்டார்.

“நான் கொஞ்ச நாள் கல்யாணில் நம்ம வீட்டில் போய் இருக்கேன். எனக்கு உங்கள் வீட்டில் எந்த அஸௌகரியமும் இல்லை. ஆனால் சிறிது நாள் அங்கே இருந்து விட்டு வருகிறேன். வீடும் புழங்கின மாதிரி இருக்கும். நீங்கள் அங்கே வந்து கொஞ்சம் உதவி பண்ண முடியுமா?”

“அப்பா, எதற்கு நீங்கள் அங்கே செல்ல வேண்டும்”, “அப்பா நீங்கள் போக வேண்டாம்” என்றெல்லாம் மகன்கள் கூறுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் அவர்கள் உடனே ஒத்துக்கொண்டது அவருக்கு வலித்தது.

தனியாக ச் சென்ற பின்னர் அவரால் சமையல் செய்ய முடியவில்லை. நீரிழிவு வேறு தொற்றிக்கொண்டது. அதில் பசி வேறு. சமையலுக்கு ஒரு பெண்ணை அமர்த்தினால் அவள் பாதி நேரம் லீவு போட்டாள். போதாக்குறைக்கு எண்ணையும் நெய்யும் உணவில் அதிக அளவில் இருப்பது அவருக்கு புரிந்து விட்டது. சரி, நாமே வீட்டில் சமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார். ஆனால் உடல் ஒத்துழைக்க வேண்டுமே? அவர் படுக்கையில் விழுந்து மகன்களுக்கு சிரமம் கொடுக்க விரும்ப வில்லை.

ஆனால். கண் கெட்ட பின்னர் சூர்ய நமஸ்காரம் என்கிற மாதிரி பாமா உயிரோடு இருந்த வரை அவள் அருமை புரியவில்லை. மனைவி போன பின்பு ஏன் வாழ வேண்டும் என்கிற நினைப்பே மேலோங்கியது. ஆனால் மரணம் என்ன, நாம் கேட்கும் போது கிடைத்து விடுமா என்ன?

அப்போது தான் ஒரு நாள் பக்கத்து த்தெருவில் இருந்த ஷீர்டி சாய்பாபா கோவிலில் உம்மாச்சு வாத்யாரைச் சந்தித்தார்.

“நடராஜன் எப்படி இருக்கேள்? மாமி போய்ட்டானு கேள்விப்பட்டேன். இரங்கல்கள். இந்த வயசில நீங்க தனியாக அல்லோல் பட வேண்டுமா” என்றார் வாத்தியார்.

“அதெல்லாம் விடுங்கோ மாமா. அதெல்லாம் என் தலை எழுத்து. நீங்க எப்படி இருக்கேள்?”

“ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை சார். இப்போவெல்லாம் அம்மா அப்பாவுக்கு கார்யம் பண்றதே பெரிய சிரமம் ஆக நினைக்க ஆரம்பிச்சுட்டா எல்லோரும். முக்கால் வாசி வீட்டில் ஸ்ரார்த்தம் அப்படினா வாழைக்காய் அரிசியோட முடிஞ்சுடறது. முறையா ஸ்ரார்த்தம் பண்ண நினைக்கிறவா – அவாளோட எண்ணிக்கை கம்மி ஆகிண்டே வரது” என்று அங்கலாய்த்தபடி நிறுத்தினார் உம்மாச்சு வாத்யார்.

அவரே தொடர்ந்தார்.

“இங்கே பக்கத்தில் ஒரு ஆத்துக்கு வந்தேன். வாழைக்காய் அரிசி தான். இங்கிருந்து மாட்டுங்கா போகணும். இப்போவெல்லாம் ப்ராமணர்த்தம் சாப்பிடக்கூட ஆட்கள் கிடைக்க மாட்டேங்கிறா. நிலைமை அந்த மாதிரி ஆயிடுத்து ” என்று அலுத்துக்கொண்டார் அவர்.

“ஏன் மாமா, என்னை உங்க கூட சேர்த்துக்கொள்ளுங்களேன் ” என்றார் நடராஜன்.

“நீங்களா. உங்களுக்கு பென்ஷன் வரது. கட்டா கட்டையா இரண்டு பிள்ளைகள் வேற. உங்களுக்கு ஏன் இந்த தலை எழுத்து?” என்று வினவினார் வாத்யார்.

“அதைப்பத்தியெல்லாம் பேச வேண்டாம் மாமா. நான் வர ரெடி ஆக இருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச உதவி.” என்று நிறுத்தினார் நடராஜன்.

இப்படித்தான் நடராஜனின் ப்ராமணர்த்தப்பயணம் தொடங்கியது. மாதத்தில் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் இப்படியே கழிந்து விடும். ஜீவனம் ஓடிக்கொண்டு இருந்தது.

அடுத்த நாள் மாட்டுங்கா சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு நடக்கையில் ஆச்சார்யா ஊதுவத்தி க்கடை கண்ணில் பட்டது. பாமா நினைவு வந்தது. பாமாவிற்கு ஆச்சார்யா கடை ஊதுவத்தி எனறால் மிக பிரியம்.

“ஏன்னா, சத்தியவானை காப்பாற்ற வேண்டும் என்று எமனிடம் போராடினாள் சாவித்ரி. ஆனால் எந்த ஒரு ஆணாவது என் மனைவி நன்றாக இருக்க வேண்டும் என்று போராடியதாக எங்கேயும் படிக்க வில்லையே” என்றாள் பாமா ஒரு நாள்.

“அடி போடி, பைத்யக்காரி …ஆம்பளை எனறால் என்றுமே உசத்தி தான். பொம்பளை என்றாலே ஆணுக்கு பணிஞ்சு போகணும் என்கிறது தான் விதி. இதெல்லாம் உனக்கு எங்க புரியப்போறது மர மண்டை மர மண்டை ” என்று சீறினார் நடராஜன்.

இப்போது நடராஜனின் மனதில் ஒரு கேள்வி குடைந்து எடுத்தது.

” ஆம்பளை தான் உசத்தியா… பொம்பளை இல்லையா..அப்போ ஏன் நான் பாமாவை இந்த அளவு மிஸ் பண்றேன். அவள் போட்ட சாப்பாட்டுக்கு மட்டுமா இல்லை அவள் என்னிடம் காட்டின பரிவிற்கும் அன்பிற்குமா?” ….

சங்கர மடத்தைத் தாண்டி எதிரே உள்ள தெருவில் திரும்புகையில் நடராஜனின் மனம் வெதும்பி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *