வேர்விடும் காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: முகப்பு
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 137 
 
 

அந்த ஊரில் ‘வேதாந்தா’ தாத்தா என்றால் எல்லோருக்கும் ஒரு தனி மரியாதை. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது வீட்டின் முன்னால் ஒரு சிறிய நந்தவனத்தை அமைத்து, அங்கு வரும் இளைஞர்களிடம் உரையாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடம் உரையாடினாலே, சோர்ந்து வரும் இளைஞர்கள் மகிழ்ச்சியோடு திரும்புவர்.

ஒரு மாலை வேளையில், கௌதம் என்ற இளைஞன் மிகவும் சோர்ந்து போய் அவரிடம் வந்தான். “தாத்தா, நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. என் வயதுடையவர்கள் எல்லாம் வாழ்க்கையில் முன்னேறிவிட்டார்கள். நான் மட்டும் இன்னும் ஆரம்ப இடத்திலேயே நிற்பது போல் உணர்கிறேன். எனக்குத் திறமை இல்லையோ என்று தோன்றுகிறது,” என வருந்தினான்.

தாத்தா மெதுவாகச் சிரித்துவிட்டு, தோட்டத்தில் இருந்த ஒரு மாமரத்தையும், ஒரு மூங்கில் செடியையும் காட்டினார். “கௌதம், இந்த இரண்டையும் கவனி. நான் இரண்டையும் ஒரே நாளில் தான் நட்டேன். மாமரம் சில வருடங்களிலேயே வளர்ந்து, கிளை பரப்பி, இன்று பலருக்கும் நிழலும் கனியும் தருகிறது. ஆனால், அந்த மூங்கில்? முதல் நான்கு வருடங்கள் மண்ணுக்கு வெளியே ஒரு அங்குலம் கூட வளரவில்லை. நான் அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்றினேன், உரம் இட்டேன். மற்றவர்கள் அந்த மூங்கில் செத்துவிட்டது என்று சொன்னார்கள்.”

தாத்தா தொடர்ந்தார், “ஆனால் ஐந்தாவது வருடம், ஆச்சரியப்படும்படி அந்த மூங்கில் வெறும் ஆறு வாரங்களில் முப்பது அடி உயரத்திற்கு வளர்ந்து நின்றது. அந்த நான்கு வருடங்களும் அது வளரவில்லை என்று அர்த்தமல்ல; அவ்வளவு பெரிய உயரத்தைத் தாங்குவதற்காகத் தனது வேர்களை மண்ணுக்கு அடியில் ஆழமாகவும் வலுவாகவும் ஊன்றிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. அந்த நான்கு வருடமும் தனது வேரை அது பலப்படுத்தவில்லை என்றால் இன்று அது நிமிர்ந்து நிற்க முடியாது. ஒவ்வொரு தாவரத்திற்கும் வேர்விடும் காலம் இருக்கிறது. மனிதர்க்கும் அப்படித்தான். நம்பிக்கையோடு முயற்சி செய். வெற்றி உறுதி”

கௌதமின் முகத்தில் மெல்லிய தெளிவு தெரிந்தது. தாத்தா அவன் தோளைத் தட்டிச் சொன்னார்:

“உன் வாழ்க்கையும் அப்படித்தான். இப்போது நீ எதிர்கொள்ளும் தோல்விகள் வீணானவை அல்ல. அவை உனது அனுபவ வேர்களைப் பலப்படுத்துகின்றன. மற்றவர்களோடு உன்னை ஒப்பிட்டு வாடாதே. மாமரம் சீக்கிரம் கனி கொடுக்கும், மூங்கில் உயரமாக வளரும். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. உனது உழைப்பை நிறுத்தாதே, உனக்கான ‘ஆறாவது வருடம்’ விரைவில் வரும். அப்போது உனது வளர்ச்சி அனைவரையும் வியக்க வைக்கும்.”

கௌதம் அன்று வீடு திரும்பும் போது, அவனது நடையில் ஒரு புதிய உற்சாகம் , தன்னம்பிக்கை இருந்தது. தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு வலிமையான தொடக்கத்திற்கான தயாரிப்பு என்பதை உணர்ந்து தன்னம்பிக்கையோடு தனது முயற்சியை இன்னும் முழு வேகத்தோடு துவங்கினான்.

நீதி: வெற்றி தாமதமாவதால் நீங்கள் தோற்றுவிட்டதாக அர்த்தமல்ல. நீங்கள் உயரப் பறப்பதற்கான அடித்தளம் அங்கே பலமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். நம்பிக்கையோடு காத்திருங்கள்!

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *