ஒளிரும் இருள்
கதையாசிரியர்: திக்குவல்லை கமால்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 264
(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பிராஸ்’என்று ஒருசத்தம் கேட்டால் அது பாதைக்குமறுபக்க கோல்டன் ஹாஜிவீட்டு முன்பக்ககேற் தள்ளித் திறக்கப்படுகிறது அல்லது இழுத்து மூடப்படுகிறது என்று அர்த்தம். எதுநடக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் கொஞ்சம் எட்டிப் பார்க்கவேண்டும்.
அன்றும் “பராஸ்”என்றசத்தம் கேட்டது.
முன்வீட்டு மரியம் பீபிஎட்டிப் பார்த்தாள்.
ஹாஜியின் வேன் உள்ளேயிருந்து வெளிப்பட்டது.
ஏதோ தவறு செய்து விட்டவள் போல், டக்கென்று உள்ளே வந்து கதவுத் தட்டைச் சாத்தினாள்.
பாதைக்கு மறுபக்கமென்றாலும் மரியம் பீபியின் வீடு எதிர்ப்பக்கம் அமைந்திருப்பது ஹாஜியார் வீட்டாருக்கு விருப்பமில்லாத விஷயமென்பது அவளுக்கும் அவள் கணவ ருக்கும் தெரியாததல்ல. அவர்களுக்கிடையே அப்படிச் சண்டைசச்சரவென்று ஒன்றும் நடந்ததில்லை. சுமுகமான உறவுகளென்று எதுவும் இருந்ததுமில்லை.
வேன் கடந்துசென்றது உறுதியானதும் வெளியேவந்தாள் மரியம் பீபி. பக்க வாட்டில் வாழைப் பற்றையைத் துப்புரவு செய்வதில் அவள் கணவன் காஸிம். நானா வியர்வைக்கொட்டியபடி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தபோது கவலையேற்பட்டாலும் கூட, அதைமறக்கச் செய்துகொண்டு அவர் வெட்டிவைத்திருந்த வாழைக்குலை அவள் கண்களிற்பட்டது. பூவாழைக்குலை ஒன்றென்றால் கைமேல் ஆயிரம் ரூபாய்த் தாளொன்று இல்லையா?
அந்தக் காணித்துண்டில் மூன்று தென்னை மரங்களும் நின்றன. அதனால் அப்படி வருமான மெதுவும் இல்லாதபோதும் வீட்டுத் தேவை ைையச் சமாளிக்கப் போதுமானதாகவிருந்தது. பின்பக்கமாக நின்ற கொய்யாமரம், கள்ளத்தனமாகக் காய்பறித்துவிட்டு அவர்களைக் காணும்போது முகம் நிறையச் சிரிக்கும் சிறார்கள் கூட்டமொன்றை அவ்வீட்டுக்குத் தொடர்பு படுத்தியிருந்தது. வேலி மூலையில் எப்படியோ வளர்ந்துவிட்ட சிறியகற்றாளைப் பற்றை. நோய் நிவாரணிக்காக அவர்களை நாலுபேர் நாடிவர வழி செய்திருந்தது.
ஒருபத்தாண்டுகளுக்கு முன்பும் கூட ஊரில் ஒதுக்குப்புறமாகவிருந்த பகுதிதான் அது. மரியம் பீபிக்கு வாப்பாவழியில்தான் அக்காணித்துண்டு கிடைத்தது. கல்யாணப் பரிசென்று கூடச் சொல்லலாம்.
“அதில ஓலக் குடிச ஒன்டுசரி நான் ஏன்ட புள்ளக்கிகெட்டிக்குடுக்கிய” -என்று உறுதிபடச் சொன்னவர். அதிகநாள் செல்வதற்கிடையில் ஏதோ கெட்டகாய்ச்சல் பிடித்து மௌத்தாகிப் போனார்.
“நீ ஒண்டும் யோசிக்க வாணமரியம்பீபி. ஒங்கட வாப்பசொன்னத நான் செய்தேன்” என்று தைரியப்படுத்தினார்.
அது வாய்ப்பேச்சாக இருக்கவில்லை. சொன்னதுபோல ஒரேமாதத்தில் வீட்டு வேலையை ஆரம்பித்தார். மூன்று மாதத்துக்குள் குடிபுகுந்துவிட்டார்கள். ஏழு மணியானதும் வீட்டுக்குள் முடங்கிவிடவேண்டிய அளவுக்கு இருட்பட்டுவிடும் பகுதி அது. சனச்சந்தடியும் அற்றுப் போய்விடும்.
இந்தப் பத்தாண்டுக்குள் செங்கல் சுவர்களும் அஸ்பெஸ்டஸ் கூரையுமாக அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு, இன்னும் எவ்வளவோ தேவைகளை வேண்டிநின்றது அவ்வீடு. அதற்குப் பின்னர் எத்தனையோ பெரும் பெரும் வீடுகள் அப்பகுதியில் கம்பீரமாக எழுந்துவிட்டன. ஒற்றையடிப் பாதைகூட இப்பொழுது பன்னிரண்டடி கொங்ரீட் பாதையாகமாறிவிட்டது. இடையிடையே மின்கம்பங்களைவேறு தாங்கிநின்றது.
ஐந்துவருடங்களுக்கு முன்புதான் கோல்டன் ஹாஜி அங்கு சுற்றுமதில்களுடன் கூடிய வீடுகட்டினார். பெரியவீடு. வீட்டுக்குமுன்பாக ஒருபூந்தோட்டத்தையே அமைத்திருந்தார். குறுகிய காலத்திலேயே முன்மதிலை உடைத்து பிறஆண்களின் பார்வை புகாதபடி உயர்த்திக் கட்டினார்.
அவரது மனைவி, மகள், போன்றவர்களை எவரும் காணவேமுடியாது. மிக அவசிய தேவைக்கு மாத்திரம் வீட்டிலிருந்து வெளியேவந்தால் வாகனத்தில் ஏறுவார்கள். வாகனத்திலிருந்து இறங்கினால் வீட்டுக்கு ஏறுவார்கள். அதுவும் நூறுவீதம் உடலை மறைத்தபடிதான். வாகனம் கூட வெளிப்பார்வை ஊடுருவாத கண்ணாடி கொண்டதுதானாம். மனைவி பிள்ளைகள் அல்லாஹ்வுக்கு அடி பணிந்து இவ்வளவு ஒழுக்கசீலர்களாக இருப்பதால் தான் கோல்டன் ஹாஜிக்கு இவ் வளவு பரக்கத்துகிட்டியிருப்பதாக வியாக்கி யானம் கூறுவோரும் உள்ளனர்.
ஹாஜியாரும் அதற்குக் கொஞ்சமும் குறைந்த வரல்ல. ஒரு அவசர பயணத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, பாங்குச் சத்தம் கேட்டால் உடனே இறங்கித் தொழுதுவிட்டுத்தான் மேற்கொண்டு பயணத்தைத் தொடர்வாராம். வருடாவருடம் அரேபியாவுக்கு உம்ராசெய்யச் சென்று, நபிகள் நாயகம் நடமாடிய மண்ணை மிதித்து அங்குள்ள பள்ளிவாசலில் பத்துநாள் தங்கி, தொழுது அழுது ஆச் செய்துவிட்டுவருவதை அவரால் தவிர்க்கவே முடியாதாம். அதற்காக எவ்வளவு செலவானாலும் அதையிட்டு அவர் சந்தோஷப்படுவாராம்.
“டக்டக்டக்” சைக்கிள் மணியோசையைத் தொடர்ந்து கேற்றில் தட்டுவதைக் கேட்டு, மரியம்பீபியும் மாப்பிளையும் ரோட்டுப் பக்கம் பார்த்தனர்.
அங்கே தபாற்காரன் கடுகடுப்போடு நின்றதற்கு காரணம் இல்லாமலில்லை.
“நேத்தும் தட்டு தட்டென்டு தட்டீட்டுப்போன” மரியம்பீபி கூறினாள்.
‘ஆம்புளயள் ஊட்டில நிக்கியல்ல. பொம்புளயள வாரல்ல. காயிதக்காரன் எனத்த செய்யவன்’ காஸிம் நானாவின் மனதில் மெல்லியகோபம் இழையோடியது.
“கேற்றுக்கு ஒசக்கால போட்டிட்டு பொகச்செல்லோமா”
“பெய்த்தியமா ஒங்களுக்கு. காத்தடிக்கிய மழபெய்த. ம்….. இல்லாப் போனா நாங்க வகசெல்லவாகும்”
இவர்களோடு சம்பந்தப்படுவதற்காக தபால் காரன் சைக்கிளை உருட்டிக்கொண்டு அப்பக்க மாக வந்தான். காஸிம் நானாவும் வியர்வை நாற்றத் தோடு நெருங்கவேண்டிய இக்கட்டான நிலை.
“எம்.எல்.எம்.ஸாதிக்” – தபாற்காரன் வாசித்தான்.
“ஓ. ஓ….. ஹாஜியார்தான்”
“மூனுநாளாகொணுவாரேம். கொணு போறோம். இதற் குடுக்கேலுமா?” வினயமான வேண்டுகோள்.
இது ஒரு பெரிய விஷயமல்ல.
“சரிசரி குடுக்கியன்”
கடிதம் கைமாறியது.
“இந்தாங்கொ பத்திரமா எடுத்துவைங்கொ. ஹாஜியார் வந்தொடன பொடியனுக்கிட்ட அனுப்புங்கொ”
“சரிசரி….” வாங்கிக் கொண்டாள் மரியம் பீபி.
ஹாஜியாருக்கு உதவிசெய்யக்கூடிய ஒருசிறிய சந்தர்ப்பம். அதன் மூலம் மெல்லிய உறவொன்றை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு அவர்களைத் தேடிவந்திருந்தது.
“இதுக்குப் பொறகும் காயிதம் வந்தா எடுத்துவைங்கொ” இப்படி அந்தப் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கக் கூடுமென்றெல்லாம் மரியம் பீபி கற்பனையில் ஆழ்ந்துபோனாள். ஏதாவது சின்னச் சத்தங்கள் கேட்டாலே கேற் திறந்துவிட்டதோவென்று ஓடியோடி வந்துபார்த்தாள்.
எப்படியோ மஃரிபுக்கு பாங்குசொல்லி சொற்பநேரத்தில் வந்துவிட்டார் ஹாஜி. குடும்பசகிதம் காலையில் போனவர்கள்தான்.
உடனடியாக மகனின் கையில் கடிதத்தை அனுப்பினாள். இருந்தாலும் நாளைகாலையில் தான் அதன் பிரதிபலிப்பை எதிர்பார்த்தாள்.
“இங்க பாருங்கொ. ஸொபஹு தொழுதிட்டு ஹாஜியார் கூப்பிட்டாலும் கூப்பிடுவாரு. கொஞ்சம் வெட்டக்காகி நில்லுங்கொ.” மனைவியின் அறிவுறுத்தல்.
அதுசரியெனவே பட்டது காஸிம் நானாவுக்கு.
மரியம் பீபிக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. மனசெல்லாம் மகிழ்ச்சி நிரம்பி வழிவதுபோல் உணர்வு.
“முக்கியமான காயிதமியள் சொணங்கி கெடச்சா பெரிய கஷ்ட நஷ்டங்கள் வரேலும். இதும் அப்பிடி யொன்டெண்டா ஹாஜியாரு எங்களுக்கு எம்பட்டு நன்டிசெல்லோணுமன் இப்படிகாஸிம் காக்காகேட்டதின் அடியாளம் இப்போதுதான் அவளுக்குப் புரியஆரம்பித்தது.
விடிந்தது, கண் விழித்ததும் விழிக்காததுமாக மரியம் பீபிக்கு கடிதம் ஞாபகம் வந்துவிட்டது. காஸிம் காக்காகவும் மலர்ந்தமுகத்துடன் தொப்பி யோடு காணப்பட்டார்.
அன்று சனிக்கிழமையாதலால் மகனைப் பாடசாலைக்கு அனுப்பும் தொல்லை இருக்கவில்லை. அவன் நிம்மதி யாகத் தூங்கினாள்.
ஏழு மணியாகிவிட்டபோதும் அழைப்பு எதுவும் கிட்டவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அடுத்த எதிர்பார்ப்பு ஹாஜியார் புறப்படும் நேரந்தான். எங்கே பராஸ்’ சத்தம் கேட்குமென காதுகள் கூர்மையடைந்தன.
எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.
கேற் திறந்தது.
வேன் வெளியேவந்தது.
“பீப்”என்ற ஹோன் சத்தத்தோடு திரும்பியவேன் அப்படிநின்றது.
சந்தேகமில்லைல.
“அஸ்ஸலாமலைக்கும் ஹாஜி” என்றவாறு பாய்ந்து சென்ற காஸிம் காக்காமனம் நிறைந்த எதிர்ப்பார்ப்புகளோடு வேனை நெருங்கினார்.
ஹாஜியின் முகம் என்றும் போல் இறுக்கமாகவே இருந்தது. ஸலாத்துக்கும் மனம் திறந்தபதில் வரவில்லை.
மரியம்பீபிகாதைக் கூர்மைப் படுத்திக் கொண்டு நிலைப்படியில் சாய்ந்துநின்றாள்.
“இதுக்குப் பொறகு இப்பிடி வேல செய்யவாண. எடுத்தமாதிரி காயிதக் காரனுக்கிட்ட குடுங்க”
ஹாஜியார் சொல்லி முடிப்பதற்கும் வாகனம் “பும்”மென்று விரையவும் சரியாக இருந்தது.
காஸிம் நானா கைகள் படபடவென்று நடுங்கின. வானம் இடிந்து தலையில் விழுந்தது போலிருந்தது மரியம் பீபிக்கு.
அதற்கிடையில் முழித்த கண்ணோடு மகனும் வந்துநின்றான். ஆறாம் வகுப்பில் படிக்கும் அவன் கொஞ்சம் கெட்டிக்காரனும் கூட.
“காயிதம் வேறதாரடயாலுமே தெரிய மரியம் பீபி” தனது உள்ளார்ந்த சந்தேகத்தை வெளிப் படுத்தினார்.
“இதக்கொஞ்சம் வாசிச்சிப் பாருபுள்ள” என்றவாறு அந்த நீண்ட கடிதக் கவரை மகனிடம் கொடுத்தாள்.
“எம்.எல்.எம். ஸா.. ஸாதீக்”
எப்படியோ ஆங்கில எழுத்துக்களை கூட்டிவாசித்தான்.
பெயர் சரி. அதில் எந்தச் சிக்கலும் இருவருக்கும் ஏற்படவில்லை.
பிறகு அவ்வளவு சிரமப்படாமல் முகவரியை வாசித் தான். அதுகேட்டுப் பழகிப் போன ஊர்ப் பெயர்தானே.
மறுகோணத்திலிருந்த அச்சிட்ட ஆங்கில எழுத்துக்களை கையால் காட்டினார் காஸிம் நானா.
அதைவாசிக்க அவன் மிகவும் சிரமப் பட்டான்.
“டி… டி… பாட்….மென்ட்… ஒஃப் இன்… இன்கம்… டெக்ஸ்… ம்… ம்… எனத்தியோ ரோட் கொழும்பு”
வாசித்தவனுக்கும் அதன் அர்த்தம் ஒன்றும் தெரியவில்லை. கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.
“அல்லாவுக்குத்தான் வெளிச்சம்” என்றவாறு மரியம் பீபி எழுந்தாள்.
தபால்காரன் எப்போது வருவான் என்பதே காஸிம் நானாவின் ஒரே வழிபார்ப்பு.
– ஞானம் – கலை இலக்கியச் சஞ்சிகை – டிசம்பர் 2016 (199)