பிச்சை
கதையாசிரியர்: தில்சாத் எ.எச்.எம்.
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 202

காலை வெயில் நகரின் தெருக்களை மெல்லத் தடவ, முத்து தன் ஆடம்பரக் காரில் மருத்துவமனை நோக்கிப் பயணித்தான். பணம் படைத்தவன், ஆனால் மனதில் ஒரு பாரம். இதய நோய் அவனைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது.
சாலை சிக்னலில் கார் நின்றபோது, ஐந்து பிச்சைக்காரர்களின் பார்வை அவர் மீது விழுந்தது. பழைய சேலையில் ஒரு பெண், நடுங்கும் கைகளுடன் முதியவர், குழந்தையைத் தூக்கிய இளைஞன் அவர்களின் கண்கள் கதறின. “இஞ்ச பாருங்க, கையில நூறு ரூபா இருக்கு, நீங்களே பிரிச்சுக்கோங்க,” என்றான் முத்து, காரின் ஜன்னல் வழியாக நோட்டை நீட்டி. அந்த நேரம் “சார், பெரிய ஆளு மாதிரி இருக்கீங்க, ஆளுக்கு நூறு தாங்க!” என்று முதியவர் கேலி செய்ய, முத்து சிரித்தார். “இப்போ இதுதான் இருக்கு, ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன்”, என்று காரை நகர்த்தினார்.
மருத்துவமனையில், “முத்து, உங்கட வருத்தம் இப்போ தீவிரம் அடைந்திருக்கு. ஐந்து வகையான சிகிச்சை உங்க உடம்புக்குத் தேவ, ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவர்படி வர இருக்கு. வெளிநாட்டு மருந்துகள்தான் அதிகம் பயன்படும், ஐந்து மாதங்கள்ள உங்க சிகிச்ச முடியும். செலவு அதிகம், ஆனால் உங்கள் ஆயுள் நிச்சயம் கூடும். கவலை வேண்டாம், நாங்க கேரண்டி!” என்று டாக்டர் கூறினார். மருத்துவரின் புன்னகை, பளபளப்பான மேசையில் வைக்கப்பட்ட பிச்சைத் தட்டு போலத் தோன்றியது, முத்துவுக்கு. சற்று சிரித்த படி, “சரிங்க, டாக்டர் நான் நீங்க சொல்ற போல ஏற்பாடு செய்கிறேன்”, என்று கூறி, வெளியேறினார் ஹாஸ்பிடலில் இருந்து.
திரும்பும் வழியில், அதே பிச்சைக்காரர்களை மீண்டும் சந்தித்தார். ஒருவரின் தட்டு, மழையில் நனைந்த காகிதம் போல வெறுமையாக இருந்தது. இன்னொருவரின் கை, உலர்ந்த மரத்தின் கிளை போல நடுங்கியது. “எவ்வளவு கொடுத்தாலும் இந்தத் தட்டுகள் நிரம்பவில்லையே”, என்று முத்து தன்னோடு பேசிக்கொண்டான். மருத்துவரின் புன்னகையும், இவர்களின் கைகளும் ஒரே மாதிரித் தோன்றியது. “பிச்சை எப்போதும் பிச்சையாகவே இருக்குமா?” என்று அவரது மனம் கேள்வி எழுப்பியது.
சற்று யோசித்த முத்து, காரை நிறுத்தி அவர்களை அழைத்தார். “நல்லா கேட்டுக்கொங்கோ, ஒரு மல்லிகைக் கடை ஆரம்பிக்கப் பணம் தரேன். இனி பிச்சை எடுக்காதீங்க”, என்றார். இந்த வார்த்தைகள் அவர்களின் முகங்களில், வெயிலில் ஒளிரும் மின்குமிழ் போல ஒளிர்ந்தன. “சார், இது… உண்மைதானா?, எங்களுக்கு எப்படி..?” என்று அதில் ஒரு பெண் கேட்டாள். முத்து, “பிச்சை என்பது பணம் மட்டுமல்ல, நம்பிக்கையும், வாழ்வும் கொடுப்பதும்தான்” என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் அந்தத் தெருவில், மல்லிகையின் மணம் பரவுவது போல, பிச்சைக்காரர்களின் புதிய வாழ்க்கையில் நறுமணம் தழுவியது.