கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 336 
 
 

பதினோரு நிலை கொண்ட அந்த சிவாலயத்தின் கோபுர கிழக்கு வாசல் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது. மதிய வெயிலையும் பொருட்படுத்தாத மக்கள் நடமாட்டம் சற்றும் குறையவில்லை. கோபுர நிழலில் எப்போதும்போல் அமர்ந்திருந்த யாசகர்கள் பக்தர்களை நோக்கி காசுக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

குமார் தன் மனைவி விஜயா, பதினாறு வயது மகள் அனன்யாவுடன் கோவிலுக்குள் நுழைய ஆயத்தமானார். விஜயாவின் கையில் அர்ச்சனை தட்டு. குமார் நெற்றியில் திருநீறு. பக்திப் பரவசத்துடன் நடந்தார்.

“ஐயா… அம்மா….தர்மம் போடுங்க” என்று வாசலில் இருந்த சிலர் சூழ்ந்து கொண்டனர்.

“உங்க குடும்பம் நல்ல இருக்கும்…” மேலும் சிலர்.

குமார் சலிப்புடன் அவர்களைக் கடந்து சென்றார்.

“பாரு விஜயா. ஊர்ல எவ்வளவோ முன்னேற்றம் வந்தாலும் இந்த பிச்சை எடுக்குற பழக்கம் மட்டும் குறையவே இல்லை. இது ஒரு சமூக வியாதியா மாறிக்கிட்டு இருக்கு. கைகால் நல்லா இருக்கறவங்க கூட உழைக்காம இப்படி கையேந்துறது தப்பு இல்லையா?” என்று ஆதங்கப்பட்டார்.

“விடுங்க, அவங்க நிலைமை அப்படி,” என்று விஜயா சமாதானம் சொன்னாள்.

“இல்லை விஜயா, இவங்களுக்கு காசு போடுறது மூலமா நாம சோம்பேறித்தனத்தை தான் வளர்க்குறோம். கடவுளை வேண்ட வர்ற இடத்துல இப்படி ஒரு உளைச்சல் தேவையா?” என்று குமார் தொடர்ந்து தன் சமூக அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டே மண்டபங்களை கடந்து, சந்நிதியை நோக்கி குடும்பத்துடன் நடந்தார்.

சிறிது நேரத்தில் அவர்கள் அம்மன் சன்னதி முன் நின்றனர். அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. குமார் கண்களை மூடி, கைகளைக் கூப்பி தீவிரமாக வேண்டினார். இல்லை, அம்மனிடம் கெஞ்சினார்.

“அம்மா…உலக நாயகியே…என் தொழில்ல இருக்கற நஷ்டம் சரியாகணும். புதுசா ஒரு ஃபிளாட் வாங்கணும், அதுக்கு நல்ல வழி பிறக்கணும். அனன்யா நல்ல மார்க் எடுத்து மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைக்கணும். எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடு…உன்னைத்தாம்மா நம்பியிருக்கேன்…தாயே…”

அவர் நீண்ட பட்டியலைச் சொல்லி வேண்டிக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் நின்ற அனன்யா அவரை மெதுவாகத் தட்டினாள்.

அவளைப் பார்த்த குமார், வெளியே போய் பேசலாம் என்று சைகையால் காட்டினார்.

அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டு அவர்கள் வெளியே வந்தபோது, அனன்யா தந்தையைக் கேட்டாள்.

“அப்பா… ஒரு சின்ன சந்தேகம்.”

“கேளும்மா அனன்யா கண்ணு…” என்றார் குமார்.

“வெளிய வாசல்ல இருந்தவங்க காசு கேட்டாங்க, நீங்க அதை ‘பிச்சை’ன்னு சொன்னீங்க. ஆனா இப்போ உள்ளே நீங்க கடவுள் கிட்ட என்ன கேட்டீங்க?”

குமார் சற்று திடுக்கிட்டுப் போனாலும், நிதானமாகவே பதில் சொன்னார்.

“நான்… நான் நம்ம குடும்பத்துக்காக செல்வம், ஆரோக்கியம், உன் படிப்பு இதெல்லாம் வேண்டி கேட்டேன்.”

அனன்யா மெல்லிய தலை அசைப்புடன் சொன்னாள். “அப்போ வாசல்ல நம்மகிட்ட காசு கேட்டவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்ப்பா? அவங்க மனுஷங்க கிட்ட கேக்குறாங்க, நீங்க கடவுள் கிட்ட கேக்குறீங்க. அவங்க பசிக்கு காசு கேக்குறாங்க, நாம வசதிக்காக கேக்குறோம். கடவுளோட கண்ணோட்டத்துல பார்த்தா நாம எல்லாருமே ஏதோ வேண்டுற யாசகர் தானே? அவங்களை மட்டும் ஏன் நாம குறை சொல்லணும்? எனக்கு புரியில்லே அப்பா…”

அனன்யாவின் அந்த ஒரு கேள்வி குமாரை அப்படியே உலுக்கியது. இத்தனை வருடங்களாகத் தான் செய்த பக்தி, ஒருவிதமான ‘பேரம்’ என்பதை அவர் உணர்ந்தார். நாம் கடவுளிடம் கை நீட்டுவது ‘பிரார்த்தனை’ என்றால், வறியவர்கள் நம்மிடம் கை நீட்டுவதும் ஒருவகைத் தவம் தான் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது, அந்த யாசகர்களைப் பார்த்த சிவகுமாரின் பார்வையில் இப்போது வெறுப்பில்லை; மாறாக ஒருவிதத் தோழமையும், புரிதலும் இருந்தது.

தன் பையில் இருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை ஒரு யாசகரிடம் தந்து, “நீங்க எல்லோருக்கும் பகிர்ந்து குடுங்க…” என்று சொன்னபோது ‘நானும் ஒரு யாசகன் தான்’ என்ற எண்ணம் அவர் மனதில் பதிந்தது. அனன்யாவின் தலையை அன்போடு வருடிக் கொடுத்தார்.

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *