முழுநிலவில் முதலிரவு!
கதையாசிரியர்: பி.டி.சாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 123
(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
19. சிவபூஜை மகிமை!

கோடிக்கணக்கான மின்னல்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து ஒரே நேரத்தில் தாக்கியதைப் போலிருந்தது அவருக்கு. இப்படி கொள்ளை அழகு குவிய ரோஜாப்பூவாய் மலர்ந்து கிடப்பாள் என்று அவர் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க முடியாது.
குபேரன் போதை வெறியில் தள்ளாடி அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “காந்தா… என் உயிர் உள்ள வரையிலும் உன்னை மறக்கவே மாட்டேன்.” என்று சொன்னார்.
காந்தாவா? தன்னை அந்தப் பெயருடைய வேறு பெண் என்று அவர் நினைத்துவிட்டாரா?
“நான் காந்தா அல்ல, மீனா…” என்று அவள் திருத்தினாள்.
”ஓ… நீ மீனா..? எஸ் யூ… ஆர் மைடீயர் மீனா…நான் உன்னை என்னுடைய ஆசைநாயகி காந்தாவாக நினைத்துவிட்டேன். காந்தா… உன் கால் தூசுகூடப் பெறமாட்டாள்.” என்று சொல்லிக் கொண்டே எல்லைமீறிய போதை காரணமாகத் தள்ளாடினார்.
ஆனால் பொங்கி வழியும் அவளுடைய இளமையின் அழகை மட்டும் அவர் கண்கள் கொண்ட மட்டிலும் ரசிக்கத் தவறவில்லை.
இளமைத் துறுதுறுப்பும், வசீகரமும் கொண்ட அவள் பெண் இனத்துக்கே சவால்விடும் அற்புதமான உடலமைப்பைக் கொண்ட வளாகக் காட்சியளித்தாள்.
அவள் கிராமத்திலே வளர்ந்த அழகி – குளத்தின் கரையில் செழித்து வளர்ந்த பசுமைப்புல் – தென்னங்குருத்து போன்ற இளமை கொண்டவள். இள நீரின் குளுமை நிறைந்தவள்.
அவர் தன்னை அத்து மீறிப் பார்ப்பதை மீனா கண்டதும் ஒரே திமிறலுடன் தன்னை விடுவித்துக்கொண்டாள்..
“உனக்கு நல்ல பலம் இருக்கிறது. இந்த அளவுக்கு உறுதி வாய்ந்தக் கையை நான் எந்தப் பெண்ணிடமும் பார்த்ததில்லை. அற்புதமான உடலமைப்பு.” என்று அவர் சொல்லிவிட்டு மதுப்புட்டியை எடுத்து ஒரு கண்ணாடித் டம்ளரில் பாதி வரை மதுவை ஊற்றினார், அதற்குமேல் கொக்கோ கோலா பானத்தைக் கலந்தார்.
“ஏய் கிராமத்துக் குட்டி… இந்தா…குடிடீ…” என்று அவர் ‘டீ’ பட்டம் வேறு முதல் முறையாகக் கொடுத்தார்.
கண்ணபிரானைச் சமாளித்த அனுபவம் ஏற்கனவே அவளுக்கு உண்டு. முதல் இரவை முடிந்துபோன இரவாக மாற்றிக் காட்டியவள் அல்லவா?
அவள் எப்படியோ துணிந்து கையிலிருந்த மதுப்புட்டியையும், கண்ணாடித் தம்ளரையும் தட்டிவிட்டாள்.
இரண்டும் ‘டங்’கென்று தரையில் மோதி உடைந்து சிதறின. மது நெடியுடன் தரை விரிப்பை நனைத்தது.
மீனா மூக்கைப் பிடித்துக்கொண்டாள். வெளியே ஓடுவதற்கு மார்க்கம் தெரியாததால் கூண்டுக்கிளிபோல் அறைக்குள்ளேயே. வளைய வளைய வந்து தத்தளித்தாள்.
அவள் – தன்னிடம் வேலை செய்யும் அடிமைப்பெண் – மதுப் புட்டியைத் தட்டிவிட்டதால் அவர் எல்லை மீறிய ஆவேசமடைந்து இரண்டு கைகளையும் மூர்க்கத்தனமாகப் பற்றிக்கொண்டு அவளுடைய உதடுகளை நோக்கி தன்னுடைய முகத்தை நெருக்கினார்.
மீனா இரு கைகளாலும் அவர் நெஞ்சில் ஊன்றி பலம் முழுவதையும் கொண்டு வந்து போராடினாள்.
கிராமத்துக்கட்டையான அவள் பலசாலிதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவு முரட்டுப் பலத்துடன் அவரைப் பிடித்துத் தள்ளுகிறாள்.
“ஐயா, என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் ஒரு பெண்ணிடம் இந்த அளவுக்கு கேவலமாக நடந்துகொள்வீர்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.” அவள் அழுதாள்.
அந்தப் பேதையால் வேறு என்னதான் செய்ய முடியும்? குபேரன் அவள் சொன்ன எதையும் காதுகளில் வாங்கிக்கொள்ளாமல் இரத்தவெறிகொண்ட வேங்கையாக மாறினார். கைகள் இரண்டையும் பிடித்தவாறு தன்னோடு இணைத்துக்கொள்ளப் போராடினார்.
“என்னை இம்சை செய்வதின் மூலம் ஆபத்தை அணைத்துக் கொள்ளாதீர்கள். அதனால் வீண் தொல்லைகள்தான் உண்டாகும்.” என்று அவள் கதறினாள்.
கைகளை விட்டுவிடாமல் பலாத்காரப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த குபேரன், “இன்றிரவுதான் உன் மீது இந்த விபரீத ஆசை உண்டாயிற்று. என்னை நானே கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன். நீ மட்டும் தலையை அசைத்தால் உன்னுடைய வாழ்க்கைத் தரத்தை எத்தனை மடங்கோ உயர்த்திவிடுவேன்.” என்று முழங்கினார்.
”நான் ஏழையாகவே மானத்தோடு இருக்கிறேன் ஐயா.என்னை வெளியே அனுப்பிவிடுங்கள்.”
அவரை எதிர்த்துச் சண்டைபோடும் மனத்துணிவு அவளுக்கு இல்லாததால் பரிதாபமாகக் கெஞ்சினாள்.
ஆனால் அவரோ மிஞ்சினார். எதைக்கண்டும் அவர் அஞ்சவில்லை. “உன்னால் எனக்குத் தூக்குமேயே கிடைப்பதாக இருந்தால் கூட நான் பின்வாங்கப் போவதில்லை. நான் எதை நினைத்தாலும் உடனே அதைச் செய்து முடித்துவிடுவேன். இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.” என்று உறுமினார்.
பல்லியின் கூர்மையான பற்களுக்கிடையே சிக்கிக் கொண்ட கரப்பான் பூச்சி திமிறிக்கொண்டு கடைசியில், அது என்ன செய்தாலும் செய்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணத்துடன் செயலற்றுக் கிடக்குமே; அதே நிலைதான் அவளுக்கும்!
அவர் வியர்வையில் குளித்துவிட்டார். வெப்பக்காற்று மூச்சோடு கலந்து அடித்தது.
மீனா தன் கற்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன். “ஐயா… என்னை விட்டுவிடுங்கள்… உங்கள் பாவத் தொழிலுக்குத்தான் நான் உடந்தையாக இருக்கிறேன். கற்பைப் பறி கொடுத்தவள் என்ற கெட்ட பெயரையும் எனக்கு வாங்கித் தராதீர்கள். என்னை நெருங்கினால் வீணாக அழிந்துவிடுவார்கள்.” என்று கதறி அழுதாள்.
அவர் முழுமையாக அவளை ரசித்தார். அவள் கதறி அழுத விதம கண்கொள்ளாக் காட்கியாக இருந்தது. கண்ணீர் வழிந்தோடி யதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார். அவள் கைகளுக்கு நடுவே பூங்கொடி போல் துவண்டு எவ்வளவு அபாரமாகக் காணப்படு கிறாள்.
“அந்தப் பெண்ணை வெந்நீரில் போட்டுப் பொரித்து எடுத்தேன். ஆனால் உன்னை கொதித்தும் எண்ணெயில் வடையாகத் தட்டிப் போட்டு எடுத்துவிடுவேன். என் கோபத்தைக் கிளறி உன்னுடைய அழிவை நீயே தேடிக்கொள்ளாதே.”
அவர் இப்படி மிகமிகக் கடுமையாக மிரட்டிக்கொண்டிருந்த அதே நேரத்தில் கதவு படாரென்று திறந்துகொண்டது.
இரண்டு பேர்களும் ஒரே நேரத்தில் கதவைப் பார்த்தார்கள்.
மாலினி ஆவேசம் பொங்கியவளாய் கதவைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
அவ்வளவுதான்!
பாம்பின் பற்களில் பிடிபட்டிருந்த தவளை தன்னை ஒரே உதறல் மூலம் விடுவித்துக்கொண்டு ஓடிச்சென்று மாலினியின் பட்டுப்போன்ற. மென்மையான பாதங்களில் விழுந்தது.
அவள் மாலினியைத் தூக்கி நிறுத்தி, “இது நன்றாக இருக்கிறதா சித்தப்பா…? இந்நேரம் தகவல் அறிந்து நான் இங்கே வராமல் இருந்திருந்தால் இந்தப் பெண்ணின் கதி என்னவாகியிருக்கும்? இனியும் இதைப்போன்ற தவறுகளைச் செய்யாதீர்கள். அதன்பிறகு என்னுடைய சித்தப்பா என்றுகூடப் பார்க்காமல் உங்களையே டிஸ்மிஸ் செய்யக்கூடிய சூழ்நிலைகூட உண்டாகும்.” என்று மிகவும் கடுமையாக மிரட்டியவள், அவளையும் கையோடு அழைத்துக்கொண்டு விரைந்தாள்.
அவர் பேயடித்தவர் போல் அப்படியே நின்று கொண்டிருந்தார் இத்தகைய படுதோல்வி அவருடைய வாழ்க்கையிலேயே ஏற்பட்டிருப்பது இதுதான் முதல்தடவை.
ஓர் உறுமல் மூலம் அவர் நிலைமையைச் சமாளித்துக்கொண்டு கட்டிலில் போய்க் குப்புற விழுந்தார்.
கட்டில் அவருடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிறீச்சிட்டது.
20. அடங்காப்பிடாரி லாரி!
“உங்கள் சித்தப்பாவை நேரடியாக மோதிவிட்டீர்களே, அதை நினைக்கும்போது என் குலையே நடுங்குகிறது.” என்று மீனா கவலையோடு சொன்னாள்.
“விரைவில் இந்த சித்தப்பா என்ன கதி ஆகிறார் என்பதை நீயே தெரிந்துகொள்ளலாம்.” என்றாள் மாலினி, காரை மெதுவாக ஓட்டிக்கொண்டே.
எதிரில் படு அட்டகாசத்துடன் அடங்காப்பிடாரி போல் பிரகாசமான விளக்குகளை எரியவிட்டவாறு வந்து கொண்டிருந்த லாரியைக் கண்டாள்.
“அந்த லாரியைப் பாருங்கள்… விளக்கை அணைக்காமலேயே வருகிறது.” என்று மீனா கதறினள்.
ஆபத்து லாரியின் உருவத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை மாலினி தெரிந்துகொண்டதும் பிரேக் கட்டையை அழுத்தினாள்.
கிரீச் என்ற ஒலியுடன் டயர்களைத் தேய்த்துக்கொண்டு வந்த வழியில் திரும்பி நின்றது.
அதற்குள் லாரி நெருங்கிவிடவே காரை வெகு வேகமாக ஓட்டிச் சென்றாள் மாலினி. லாரியும் படுவேகத்துடன் தூரத்திக் கொண்டு வந்தது.
இடையே ஒரு குறுகலான வீதி வந்தது.
அந்த வீதியில் லாரி போக இடம் கிடையாது. அதை மாலினி புரிந்துகொண்டு காரை ஓட்டிச் சென்றாள்.
துரத்திக்கொண்டு வந்த புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட மான்குட்டிகளின் நிலை இருவருக்கும். மீனாவின் நெஞ்சு ‘பட் பட்’ என்று அடித்துக்கொண்டிருந்தது அந்த ஒலியை அவர்கூடத் தெளிவாகக் கேட்டிருக்கவேண்டும்.
காரை ஓர் இடத்தில் மாலினி நிறுத்தினாள். மிகவும் சாதுரியமாகக் காரை ஓட்டித் தப்பியதால் அவளுடைய கைகளும், கால்களும் அதிர்ந்தன.
“உங்களையும் ஒழித்துக்கட்ட முயற்சி நடைபெறுகிறது என்பதை இப்பொழுது நேரிலேயே பார்த்தீர்கள் அல்லவா?” என்று மீனா நினைவுப்படுத்தினாள்.
“நான் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் விளையாடுகிறார்கள். என் சித்தப்பாவுக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் அந்தியக் காலம் நெருங்கி வந்துவிட்டது.” என்று அவள் சீறிவிட்டு “நம் கம்பெனியில் தயாரிப்புத் துறையில் உண்மையிலேயே என் னென்ன நடக்கின்றன என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று சொன்னாள்.
பக்கத்தில் உட்கார்ந்தபடி சிறிது நேரம் வரையில் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் மீனா. தயாரிப்புத் துறையைப் பற்றிய எல்லா அந்தரங்க ரகசியங்களும் அவளுக்குத் தெரியும். ஆனால் மாலனியிடம் எப்படிச்சொல்ல முடியும்? சொன்னால் அடுத்த சில நிமிடங்களிலேயே கொதிக்கும் வெந்நீரில் தூக்கிப்போட்டு கோழியைப் போல் பொரித்து விடுவார்களே!
“நான் எதையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்.”
தன் காதலன் ராஜாமணியை வஞ்சம் தீர்த்துவிடுவார்கள் என்று அஞ்சியதுதான் உண்மையை மறைப்பதற்கு முக்கிய காரணம்.
“ஏன் சொல்ல மறுக்கிறாய்?”
“சொன்னால் – அதைத் தெரிந்து கொண்டால் உங்கள் உயிருக்கும் ஆபத்து உண்டாகும். காலம் வரும்போது நானே எல்லாவற்றையும் விளக்கிச் சொல்வேன். இந்த அக்கிரமக்காரர்கள் என்றைக்காவது ஒருநாள் அழியத்தான் போகிறார்கள்”.
“அதிருக்கட்டும், உன்னைத் தேடிக்கொண்டு அடிக்கடி ஒரு கருப்பு உருவம் வருகிறதாமே, அதனுள் ஒளிந்துகொண்டிருக்கும் மனிதன் யார் என்பதையாவது சொல்லமாட்டாயா?”
அவள் கேவிக்கேவி அழத்தொடங்கி விட்டாள். “என்னை விட்டுவிடுங்கள்.”
“அவன் உன் காதலனாக இருக்கக்கூடும் என்று ராஜாமணி நினைக்கிறார்.”
மாலினி மெதுவாக இப்படிச் சீண்டிவிட்டதும் மீனா அலறியவளாய், “இல்லை..இல்லை…அவர் மனத்தில் இப்படியொரு சந்தேகம் வரவே கூடாது. இந்த உலகத்திலேயே அவர்தான் எனக்கு தெய்வம்” என்று சொன்னாள்.
“நீ தெய்வமாக நினைக்கலாம். ஆனால் இப்பொழுது அந்தத் தெய்வமே உன்னைச் சந்தேகிக்கிறதே” என்று மறுபடியும் அவளுடைய வாயைக் கிளறிவிடும் முயற்சியில் இறங்கினாள் மாலினி.
“சந்தேகம் வராமல் நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று கெஞ்சினாள் மீனா.
“நீ இப்படி எல்லாவற்றையும் மறைக்கக் காரணம் என்ன?”
“நாம் எல்லோரும் நல்லபடியாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசையைத் தவிர வேறு எதுவுமே எனக்கில்லை.”
மாலினி எவ்வளவுதான் வற்புறுத்திய போதிலும் மீனா தனக்கு தெரிந்தவற்றை வெளியிடவே இல்லை.
21. குபேரன் எச்சரிக்கை!
தன்னுடைய ஏர்கண்டிஷன் அறையில் கொடுமைகளுக்கெல்லாம் பிறப்பிடமான குபேரன் சாய்ந்து கிடந்தார்.
கோட்டு கோதண்டம் என்ற மூக்கன் தன்னுடைய கோட்டை இன்னும் களற்றாமல் கீழே உட்கார்ந்து அவனுடைய கால்களை இதமாக அமுக்கிக் கொண்டிருந்தான்.
“இந்த மீனாப்பெண் எல்லாவற்றையும் மாலினியிடம் சொல்லியிருப்பாளா? இனியும் மீனாவை நம்புவது மடத்தனம் என்று நினைக்கிறேன்.” என்று சொன்னார் குபேரன்.
“ஒரேயடியாக நம்பிக்கையை இழந்துவிடவேண்டாம் பாஸ்..மீனா நாம் யார் என்பதை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறாள். அதனால் நம்மிடம் மோதுவதற்கு ஒரு போதுமே துணியமாட்டாள்.”
மூக்கன் அவளுக்காகப் பரிந்து பேசியதும், குபேரன் அவனைப் பார்த்து வன்மமாகச் சிரித்தார். “எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறாய் என்பது தெரியவில்லை.”
“அவள் நம்மிடம் வேலைக்கு வந்து சேர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டன. அவள் நினைத்திருந்தால் நம்மை என்றைக்கோ காட்டிக் கொடுத்திருக்க முடியும். போலீஸ் பாதுகாப்புடன் நம் எல்லோரையுமே அவள் தூக்குமேடைக்கு அனுப்பிவிட முடியும்.”
தூக்குமேடை என்ற சொல்லை அவர் கொஞ்சம்கூட விரும்பாமல் முகத்தைச் சுழித்துக் கொண்டார்.
அப்பொழுது கதவைத் தள்ளித் திறந்து கொண்டு மீனா உள்ளே வந்தாள். “என்னை இங்கே வரச் சொன்னீர்களாமே.” என்று சொன்னாள்.
“மூக்கா…நீ வெளியே போய் யாராவது உள்ளே வராமல் பார்த்துக்கொள்.” என்று அவர் சொன்னதும், இனி தனக்கு வேலை என்பதைப்போல் மூக்கன் கோட்டை இழுத்து விட்டுக்கொண்டு சென்றான்.
மீனா குனிந்த தலை நிமிரவில்லை. அவர் முகத்தைப் பார்க்க விருப்பமே இல்லை. இரவில் அவர் கற்பழிக்க முயற்சி செய்ததை அதற்குள் எப்படி மறந்துவிட முடியும்?
அவர் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “மீனா நின்று கொண்டிருக்கிறாயே, உட்கார்” என்று சொன்னார்.
“பரவாயில்லீங்க.. எனக்கு வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு நிற்க முடியாத நிலையில் தத்தளித்தாள் மீனா.
“நேற்றிரவு நான் கொஞ்சம் மோசமாக நடந்துகொண்டேன். குடிபோதை என்னைக் கெடுத்துவிட்டது. அதன் பிறகு என்னுடைய செய்கையை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன்.”
அவர் இப்படிச் சொன்னபோதிலும் மீனா அதை நம்புவதற்குத் தயாராக இல்லை. அவளுக்குத்தான் எல்லாமே தெரியுமே!
“நான் அதை அப்போதே மறந்துவிட்டேன்” என்றாள் மீனா, இன்னும் குனிந்த தலையை நிமிர்த்திக் கொள்ளாமலேயே.
“ரொம்பவும் நல்ல பொண்ணு” என்று பாராட்டிய குபேரன், “இங்கே நடக்கும் எதையும் மாலினியிடம் நீ சொல்லிவிட வில்லையே?” என்று கேட்டார்.
“நான் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன். நீங்கள் நம்பலாம்” என்றாள் அவள் உறுதியுடன்.
“உன்னை நான் நம்புகிறேன். கடைசி வரையில் இந்த நம்பிக்கை இருந்து கொண்டே தான் இருக்கும்” என்று சொன்ன குபேரன் “என்னிடம் உனக்கு உண்மையான விசுவாசம் இருந்தால் ஒரு ரகசியத்தைச் சொல்ல வேண்டும். உன்னுடைய வீட்டுக்கு ஒரு கருப்பு உருவம் வந்து போகிறதே, அது யார்?” என்று கேட்டார்.
அவள் சட்டென்று ஒரு பொய் சொல்ல வந்தாள். அப்படி சொல்வதைத் தவிர வேறு வழியும் இல்லை. “ராஜாமணி வருகிறார்.”
“ராஜாமணி அப்படி வரக்காரணம்”
“நீங்கள் அவர் வந்து போவதைத் தெரிந்து கொண்டால் தப்பாக நினைத்துக் கொள்வீர்கள்.”
“அப்படியா?”
“நான்தான் அவரை அப்படி வரச்சொன்னேன். மற்றவர்களின் பார்வை அவர் மீது விழுவதை நான் விரும்பவில்லை.”
“ஜாக்கிரதை..எக்காரணத்தைக் கொண்டும் எனக்குத் துரோகம் செய்ய நினைத்துவிடாதே. மறைமுகமாகக்கூட திட்டமிட்டு வேலை செய்யாதே.”
அவள் நம்பிக்கையூட்டும் தோரணையில் தலையை அசைத்தாள். எதிர்த்து வேலை செய்யும் தைரியம்தான் அவளுக்கு உண்டாகவில்லையே.
– தொடரும்…
– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை