கடல் கொந்தளிப்பு!…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 53 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… 

தம்பி, சாமு! உனக்கு எத்தனை மட்டம் சொல்றது? கடினமான கப்பல் பயணம். உன் விளையாட்டுப் பொருள்களை மாமா வீட்டில் வைத்துவிடு. அவைகளை இப்பொழுது அள்ளிச் சுமக்க முடியாது. தாத்தா வரும்போது கொண்டு வருவாங்க. நீ அடம்பிடித்து அழுவது சரியில்லை’ என்று கண்டித்தும் நயந்தும் வேண்டினாள் சாராம்மாள். 

ஏசர் தாத்தாவும், எஸ்தர் பாட்டியும் மகளின் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பெத்தலேகம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சாராயின் கணவன் தர்சீசு பட்டணத்தில் பட்டாடை வியாபாரம் செய்கிறார். எனவே அங்கேயே குடும்பமாக குடி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்பது வயதுள்ள சாமு என்ற சிறுவன் இருக்கிறான். அவனையும் கூட்டிக் கொண்டு பெத்லேகேமிலுள்ள தங்கள் பெற்றோர் வீட்டிற்கும் ஆயிரம் ஆடுகளுக்கு மேய்ப்பனான தன் தமையன் வீட்டிற்கும் விருந்திற்கு வந்திருந்தார்கள். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு தர்சு பட்டணத்திற்குப் புறப்பட்டார்கள். வட கீழ்த்திசையிலிருந்து நேரே மேற்கு திசை நோக்கிச்சென்று யோப்பா என்னும் துறைமுகத்தில் கப்பல் ஏறவேண்டும். 

சாமுவிற்கு, அவனின் மாமா எரிகோச் சந்தையிலே வாங்கிக் கொடுத்த அழகான மரக்குதிரை, பொம்மைகள், விலையேறப்பெற்ற விளையாட்டுச் சாமான்கள் ஏராளம் இருந்தன. அவை அனைத்தையும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று அழுதான். 

அம்மா அன்போடு கூறினாள். 

‘தம்பி ராஜா, சீக்கிரம் குடிமதிப்பு எழுதும் நாள் வருகிறது. அப்பொழுது அப்பாவும் நம்மோடு வருவார்கள். இப்பொழுது தாத்தா வீட்டில் உன் விளையாட்டுச் சாமான்கள் பத்திரமாய் இருக்கட்டும், பிறகு வரும்போது எடுத்துச்செல்லலாம், என்னடா கண்ணு…’ 

‘ஆமா, முடியாது, பிறகு எனக்கு அங்க விளையாட வேண்டாமா?’ என்று காலை கையை உதைத்து கொண்டு சாமு குமுறினான். 

‘சாமு ராஜா… அம்மா சொல்வதைக்கேள் உன் விளையாட்டுப் பொருள்கள் யாவும் மிகவும் கனமுள்ளவை. மேலும் கப்பல் பிரயாணத்தில் இவைகளை சுமந்து செல்வது கஷ்டம். கேளுடா தம்பி’ என்று கொஞ்சலுடன் கூறி அவனைத் தூக்கி அணைத்தாள் தாய். 

சாமு, அம்மா பிடியிலிருந்து தப்பி ஓடி கீழே விழுந்து புரண்டு அழுதான். அவனின் கோடி உடுப்புகள் அழுக்காயின. 

‘கீழ்ப்படியாத பிள்ளையை கடவுள் தண்டிப்பார்’ என்றாள் பாட்டியம்மா. 

‘எனக்கு விளையாட்டுச்சாமான் வேண்டும் – எல்லாத்தையும் கொண்டு போவேன்’ என்று ஒற்றைக்காலில் நின்றான் சாம். 

புறப்படவேண்டிய நேரமாயிற்று. 

அம்மா எரிச்சலுடன் இரைந்தாள் : 

‘அழுகையோடு கூட்டிட்டுப் போனாலும் ஆக்கமாய்தான் இருக்கும். அவன் இஷ்டம் போல் செய்யட்டும். இவ்விதம் கூறிய அம்மாவின் கண்களில் கண்ணீர் சொட்டியது. பெரும் சுமையுடன் துறைமுகப்பட்டினம் போய்ச் சேர்ந்து கப்பல் ஏறினர். 

கப்பல் புறப்பட்டது. நடுக்கடலுக்குச் சென்ற சிறிது நேரத்தில் ‘ஐயோ அம்மா… கடவுளே…’ என்ற அலறல் ஒலி எங்கும் எழுந்தது. பேய்க்காற்று கப்பலை அங்கும் இங்கும் புரட்டியது. பயங்கரக் காற்றினால் கடலில் கொந்தளிப்பு எழுந்தது. மாலுமி வந்து எச்சரிக்கை கொடுக்கிறான். 

‘கப்பலின் பாரத்தைக் குறைக்க உயிரையும் உடலையும் தவிர மீதி அனைத்தையும் கடலில் அள்ளி எறியுங்கள்.’ அவனுடைய முரட்டுக் குரல் மூர்க்கமாக ஒலிக்கிறது. 

அதோ ஒருவர் தனக்கு இஷ்டமான துணிமணிப் பெட்டியைக்கூட தூக்கி எறிகிறார். ஐயையோ ஒரு அம்மாள் தன் நகைப்பெட்டியை எறிய வேண்டிய நிர்பந்தநிலை. அன்று இரவுப் போதிற்குரிய கட்டுச் சாதங்களையும் கூட தூக்கி எறிகிறார்கள். 

அந்தோ பரிதாபம்! 

அருமருந்தையொத்த சரக்கெல்லாம் ஆழ்கடலில் அமிழ்ந்தன. 

பேய்க்காற்று ஓய்ந்தபாடில்லை. கடலின் குமுறல் குறைந்த பாடில்லை. கப்பல் உடைந்து அல்லது அமிழ்ந்து அனைத்து உயிர்களும் நாசமாய்விடுமோ என்று அஞ்சினர். 

மாலுமி மீண்டும், சுற்றி வந்தார் – அடித்தட்டில் தூங்கிக் கொண்டிருந்த யோனாவை எழுப்பி- இறைவனை வழிபடும்படி கூறிவிட்டு கோபத்தில் வந்து கொண்டிருந்தார். வரும்போதே சாமுவின் விளையாட்டுச் சாமான்களை கண்டு குடல் கொதித்துக் குமுறினார். ‘என்னம்மா நீ, ஆடைகளையும் அணிகலன்களையும் அள்ளி எறியும் போது உன் பிள்ளை இன்னும் இந்த விளையாட்டுச் சாமான்களை வைத்திருக்கிறான்’ என்று கூறி அவன் கையிலிருந்து பிடுங்கி அனைத்தையும் கடலினுள் எறிந்தார். கடவுளை வணங்கும்படி யாவரையும் கெஞ்சி வேண்டினார். 

சாமு வீறிட்டு அழுதான். 

இன்னும் காற்று நின்றபாடில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாவங்களை நினைத்து கடவுளை நோக்கி அழுது வேண்டினார்கள். 

பலரின் ஆலோசனைப்படி இறுதியில் சீட்டுப் போடவே, சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தத. காரணம் கேட்டுத் துருவினர். ‘யோனா என்ற ஒரு மனிதன், “கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்படியாமல் விலகி ஓடுகிறான்”. என்ற செய்தி கப்பலெங்கும் பரவியது. 

யோனாவோ தன்னை சமுத்திரத்தில் தூக்கிப்போடும்படி வேண்டினான்.

‘பாவம் பிழைத்துப்போகட்டும், சீக்கிரம் தண்டு வலியுங்கள் ஐயா’ என்று ஒரு பிரயாணி இரக்கத்துடன் வேண்டினார். உடனே காற்றும் புயலும் இன்னும் அகோரமானது, கடல் ஆங்காரங் கொண்டது. 

மனித இரக்கம் யாது பயன்? கடலுக்குள் மனித முயற்சி வீண். சமுத்திரம் வெகு மும்முரமாய் மூர்க்க வெறி கொண்டது. 

அனைவரும் யோனாவைச் சூழ்ந்தனர். 

“ஐயாமார்களே, இலட்சக்கணக்கான மக்களின் அழிவைத் தடுக்க கடவுள் என்னை நினிவேக்குப் போகச் சொன்னார். நான் அவர் கட்டளையை மீறி தர்சீசுக்குக் கப்பல் ஏறினேன். என்னைத் தூக்கிக் கடலில் போட்டால் தான் கடல் கொந்தளிப்பு நிற்கும்” என்று யோனா கூறினான். 

இறுதியில் யோனாவைத் தூக்கி கடலில் போட்டார்கள். காற்று நின்றது. கடல் அமைதலானது. கப்பல் கனகச்சிதமாகச் சென்றது. 

‘அம்மா, அம்மா கீழ்படியாத யோனாவுக்காகவாம்மா இவ்வளவு கொடிய ஆபத்து நிகழ இருந்தது?’ சாமு கேட்டான். 

‘ஆமாடா கண்ணு, கீழ்ப்படியாமை கொடிய பாவம்”, அம்மா அவன் உச்சியைக் கோதியவாறு சொன்னாள் : 

‘அம்மா, இன்னொரு காற்று வந்தால் என்ன செய்வது? என் பெயருக்குச் சீட்டு விழுமே….. என்னையும் தூக்கிக் கடல்ல போடு வாங்களோம்மா… நானும் கீழ்ப்படியாமல் தானே வந்தேன்…. அம்மா அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா, நான் இனி கீழ்ப்படிந்து உங்களுக்குப் பிரியமாய் நடப்பேம்மா’ என்று கூறி சாமு மனங்கசந்து அழுதான். 

“நாம் இந்த உலகத்திலிருந்து ஒன்றும் கொண்டு போக முடியாது. இருக்கும் போதே காலா காலங்களில் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்து வாழ வேண்டும்” என்று எண்ணியவளாக, 

இருவரும் முழந்தாளிட்டு நன்றிப் பெருக்கோடு வேண்டினார்கள். 

குறிப்புகள்:- 

  1. கதைக்கு மூலப்பொருள்:- மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய விவிலிய “யோனா” நூல் 

2. தர்சீசூ பட்டணம் நினிவே நகருக்கு எதிர் திசையிலிருக்கிறது. இது ஸ்பெயின் நாட்டில் இருந்ததாகக் கருதப்படுகிறது. 

3. ஜனவரி 1970 ‘பாலியர் நேசன்’ இதழில் எழுதியது. 

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *