இதயம் நிறைந்தவரும்… இயந்திர அரக்கனும்…
கதையாசிரியர்: அபிநந்தினி மோகன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 2,592
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1
அன்பில் தொடரும்
அழகிய கதை இது”
இதயம் நிறைந்தவரும்… இயந்திர அரக்கனும்… இதயம் நிறைந்தவர் யார்? இயந்திர அரக்கன் யார்? என அறிந்து கொள்ள என்னோடு வருகிறீர்களா?
யாருக்காக காத்திருந்து கால் வலித்ததோ தெரியவில்லை, கண் சிவந்த சூரியனும் களைப்பில் சற்று சாய்ந்து இருந்தான் . மணி நான்கு தான் என்பதை சாட்சிப் படுத்த சாலையில் நடந்து கொண்டிருந்தனர், பள்ளி குழந்தைகள்.
மாற்றம் அடைந்திருந்த தொடர் வண்டி நிலையம், தனது மாற்றத்தோடு மட்டும் அல்லாமல் கால மாற்றத்தையும் காட்சிப் படுத்தியது.
பலர் வண்டி வரும் வழி பார்த்துக் கொண்டிருந்தனர், சிலர் வழியனுப்ப காத்துக் கொண்டு இருந்தனர்.நானும் காத்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
என்ன? என் காத்திருப்பின் நீளம் சற்று நீள…..ம், வரப் போகும் தொடர் வண்டியோடு பல தொடர் வண்டி சேர்த்து வரும் நீளத்திலும் அதிக நீளம்.
எதிரே இருந்த ஒற்றை மாடி வீடும் சற்று மாற்றம் பெற்று இருந்ததை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே அங்கு இருந்த இருக்கையில் நான் இருக்கையில், இறக்கை கட்டிக் கொண்ட இதயமோ! பின்னோக்கி பறக்கிறது தேன்சிட்டு போல்.
பதினைந்து வருடங்களுக்கு முன் நான் பள்ளி சென்ற பாதை இது. என் பாத சுவடுகள் புதிய தண்டவாளங்களுக்கு அடியில் புதைந்து இருந்தாலும், அதன் பசுமையான நினைவுகள் பதிந்து போய் இருந்தது என் இதயத்தில்.
பயத்திலும், தயக்கத்திலும், பலமுறை பார்த்துக் கொண்டு மட்டுமே கடந்திருக்கிறேன், அந்த ஒற்றை மாடி வீட்டை.
இப்போதும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் ஆனால் அவ்வளவு எளிதில் கடந்து விடத்தான் முடிவதில்லை நினைவு என்னும் பெருங்கடலை.
மிதித்தாலும் சுகம் தரும், மிதிவண்டி பயணம் என பள்ளியின் பல நாட்கள் எண்ணிலடங்கா மகிழ்ச்சி தான். ஒரே ஒரு நாளைத் தவிர, கண்ணிலடங்கா கண்ணீர் தரும் அந்த ஒரு நாள் நினைவில் போய் ஓய்வெடுத்து இருந்தது என் இதய தேன்சிட்டு இன்று.
என் பெரு மதிப்பிற்குரிய, இல்லை பெரும் அன்பிற்குரிய, இல்லை, இல்லை பெரு மதிப்பிற்கும், பெரும் அன்பிற்கும் உரிய அப்படியும் சொல்லி முடித்து விட முடியாது. அதற்கு மேலும் ஏதோ ஒன்றிற்குரிய, என் மிகப் பிரியமான ஆசிரியை.
மிகப்பிரியம் என்றால் ‘மிக’ என்கின்ற வார்த்தையை மிகைப்படுத்தி கூறி விட இயலாத அளவு, மிக, மிக ,மிக என்றே மிகுந்த தொடர் வண்டியை ஒன்றோடு ஒன்று இணைத்தாலும் சொல்லி விட இயலாத அளவு, இல்லை, இல்லை அதற்கு மேலும் என தோராயமாக வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு பிரியம் எனக்கு.
அவர்கள் என்னைப் பிரிந்து சென்ற நாள் அது. ஆம்! அவர்களுக்கு ‘டிரான்ஸ்ஃபர்’ கிடைத்து விட்டது.
இதோ, எல்லாரும் காத்துக் கொண்டிருக்கிறார்களே, சற்று நேரத்தில் இங்கே வந்து நிற்கப் போகிறானே, அந்த இயந்திர திருடன் தான் கடத்திச் சென்று விட்டான்.
இதயம் இல்லாதவன், இதயத்தின் வலி எவ்வாறு புரியும் அவனுக்கு? இறுக்கத்தால் திணறி இதயத்தின் அந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பியது..
அத்தியாயம் – 2
கண் முன்னே கரையத் தொடங்கி இருந்தது மணித் துளிகள். ஏற்றுக் கொள்ள தொடங்கி இருந்தாலும் கண்ணின் ஓரம் உறையத் தொடங்கி இருந்தது கண்ணீர்த் துளிகள்.
காலாண்டுத் தேர்வின், கடைசி தேர்வு நாள் அன்று. எப்பொழுது இறக்கி வைப்பேன் என கால் கடுக்க காத்திருந்தன பேனா முனையில் மைத்துளிகளும், எப்படியாவது இறக்கி வையேன் என கண்ணின் ஓரம் கண்ணீர்த் துளிகளும்.
கடைசியில் எது எப்படியோ, என மூன்று மணி நேரம் முடிந்து முள்ளை இறக்கி வைத்து இருந்தது கடிகாரம். என்ன செய்வது என்றே புரியாமல் எட்டிப் பார்க்கும் கண்ணீரை, கட்டுப்படுத்திக் கொண்டே எப்பொழுதும் போல் எட்ட நின்றே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
எப்படியோ பார்த்து விட்டு அவர்கள் அருகில் அழைத்ததும் எப்பொழுதும் சட்டென ஒளிந்து கொள்ளும் நான், “இப்பொழுது மட்டும் தான், இனி எப்பொழுதோ?” என இதயம் சற்று அரற்ற, அருகில் சென்ற எனக்கு தூரப் பார்வையினும் கிட்டப் பார்வை அவ்வளவு தெளிவாக ஒன்றும் இருந்திருக்கவில்லை. காரணம், கண்களில் நிரம்பிய கண்ணீர்.
காகிதத்தில் எதையோ எழுதி வாங்கிக் கொண்டு இருந்தனர் எல்லாரும். எனக்கும் என கேட்பதற்குள், என் தோழிகளில் ஒருத்தியே எனக்கும் சேர்த்து காகிதத்தை நீட்ட, எழுதி முடித்து தரப்பட்ட காகிதத்தின் கடைசி வரியில் ‘யுவர்ஸ் எவர்’ என எழுதப்பட்டு இருக்க, என் சக தோழிகள் சிலரில் எவரிடமும் அவ்வார்த்தை இடம் பெறவில்லை, ஏதோ ஒரு மகிழ்வு மனதிற்குள், ஏன் என்று சொல்லப் புரியாத, முடியாத அழகிய உணர்வு அது.
அதை நினைத்து மகிழ்வதா? வார்த்தையாக மட்டும் தானே என மனம் வருந்துவதா? என அறியாத வயதில், ‘என்றும் உன்னுடைய’ என்றால், எதுக்காக என்ன விட்டுப் போறீங்க? என கேட்க எழும்பிய கண்ணீரை சிரமப்பட்டு சிறைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விட,
போதும் என்று சொன்னால் மட்டும் ஓடாமலா இருந்து விடப் போகிறேன் என்று ஓடி இருந்தது பொழுது.
விடை பெறக் காத்திருக்கும் விழி நீரை விழுங்கச் சொல்லி, இமைகளுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்து இருந்தேன்.
சேர்ந்திருந்தேன் என சொல்வதை விட சேர்ந்து இருந்தது உடல் மட்டும் எனக் கொள்ளலாம்.
இயந்திர அரக்கன் வருவதாய் இருந்த அந்த குறுகிய நேரத்திற்குள், இலக்கணம் மீறித் துடித்த என் இதயத்தை அறிந்து சொல்ல இ.சி.ஜி க்கு ஒன்றும் அவசியம் இருந்து இருக்காது, அருகில் இருந்தாலே அப்பட்டமாய் தெரிந்து இருக்கும்.
“சில வலிகளை விளக்குவதில் மொழிகளும் தோற்றுத் தான் போகிறது”.
சொல் பேச்சைக் கேட்காத மனது, கொஞ்சமாய் பிடித்தாலே அடம் பிடிக்கும், அதீத பிடித்தத்தினால் அசைய மறுத்து அங்கேயே கல்லாய் நின்றிருக்க, கடந்த கால நினைவுகள் காட்சிப் படமாய் கண்களில் நிழலாடியது.
– தொடரும்…
