திருமணம்
கதையாசிரியர்: ரா.தணலன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 1,895
(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-22
19. சபேசன்
அப்பா என் வாழ்வை முறித்துவிட்டார்…
மாமா என்னிடம் பேசும் பொழுது அவர் குரல் தழுதழுத்தது. நான் ஏதாவது பேசியிருந்தால் அவர் கண்ணீர் விட்டு அழுதிருப்பார். அவருடைய பரிதாபகரமான நிலைமையை நான் உணர்ந்து கொண்டேன். அவர் திரும்பத் திரும்ப என்னுடைய நன்மைக்காகவே கூறுவதாகக் கூறினார். நான் நல்ல பிள்ளை என்றும் தந்தையை மீறி எதுவும் செய்யக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டார். ஆனால்……..?
உபதேச வார்த்தைகள் சொல்வதற்கு எளிதானவைதான். ஆனால் அனுபவத்தில்….? மாமா வெறும் உபதேச வார்த்தைகளாகக் கூறவில்லை. அவரைப் பற்றி எள்ளளவும் குறை கூற முடியாது. அவருடைய பெருந்தன்மையும் உள்ளம் கனிந்த அன்பும் அவ்வளவு துயரத்திற்கிடையிலும் என் உள்ளத்தைக் குலுக்குகின்றன. ஆனால் அப்பா…
நான் கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பா சாதாரணமாக உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். நான் அவர் எதிரில் வந்து நின்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் பேப்பர் படிப்பதில் ஆழ்ந்தார் எனக்கு ஆத்திர மாக வந்தது. “அப்பா” என்று கூவினேன், அவர் பேப்பரைப் பார்த்தபடியே, “என்ன?” என் கேட்டார். ஒரு கணம் என்னால் பேச முடியவில்லை என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “அப்பா நீங்கள் மாமாவிடம் என்ன சொல்லி விட்டு வந்தீர்கள்….?”
அவர் பேப்பரைக் கீழே வைத்துவிட்டு என்னைச் சாவதானமாகப் பார்த்துக்கொண்டு…”மணி எட்டாகி விட்டது போய்ச் சாப்பிட்டுவிட்டு வா பிறகு பேசலாம்” என்றார்.
நான் கூவினேன், “இல்லை. என்னுடைய உண்மையான நிலைமை தெரியும் வரை நான் இந்த வீட்டில் சாப்பிடப் போவதில்லை….”
“உண்மையான நிலைமை தெரியாமல் தான் நாம் பல தடவை ஏமாந்து போகிறோம். தெரிந்து கொண்டால் பிறகு திருத்திக்கொள்ள வேண்டியதுதானே…?”
“எதைத் திருத்திக் கொள்வது….”
“சபு !… உனக்கு நல்ல குடும்பத்தில் நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன். சும்மா கோபத்தில் கண்டதும் கடியதும் பேசிக் கொண்டிருக்காதே. போய் உன் வேலையைப் பார்…”
“அப்பா… அது இந்த ஜென்மத்தில் நடைபெறாது. மணந்து கொண்டால் நான் விமலாவைத் தான் மணந்து கொள்ள முடியும். வேறு பெண்ணைப் பற்றி என்னால் கனவில்கூட நினைக்க முடியாது.”
“சரி, அதைப்பற்றி சாவகாசவாக யோசிப்போம்.“
“முடியாது. இப்பொழுது முடிவு கட்டியாக வேண்டும்….”
“நான் என்ன உன்னுடைய குமாஸ்தாவா….?”
“நானும் உங்களுக்கு அப்படி அல்ல….”
“சபேசா….நான் உன்னுடைய தந்தை, உன்னை விட எவ்வளவோ அனுபவம் உடையவன். நான் சொல்வதைக் கேள் விமலா உனக்குத் தகுதியானவள் அல்ல. அவர்களுடைய குடும்பம் கேவலமானது. அங்தப் பெண் கமலா…. ஓடிப்போனவள்….”
நான் ஒரு கணம் திகைத்தேன். “அப்பா யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நான் விமலாவைக் கைவிட முடியாது….”
எங்கள் விவாதம் எவ்வளவு நேரம் நீடித்தது என் பது சொல்ல முடியாது. ஆனால் முடிவு நான் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புவ தாகத்தான் இருந்தது. எங்காவது கண் காணாத தூரத்திற்குப் போய்விட வேண்டும் என்ற முடிவில் பம்பாய்க்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு மெயிலில் ஏறி உட்கார்ந்தேன்.
பம்பாய் எக்ஸ்பிரெஸ் காரிருளைத் துளைத்துக் கொண்டு கிடு கிடு வென்று போய்க் கொண்டிருந்தது. நான் கண்ணை மூடிக்கொண்டு கவலை நிறைந்த சிந்தனைகளிலே ஆழ்ந்து போயிருந்தேன். என் கற்பனை எல்லாம் அப்பொழுது விமலா என்ன செய்து கொண்டிருப்பாள் என்று கண்டுபிடிக்க முயல்வதாக இருந்தது.
அவள் படுக்கையிலே விழுந்து விம்மி அழுது கொண்டிருப்பாள். பனிக்கால சந்திரன்போல் அவள் முகம் வெளுத்துப் போயிருக்கும். கண்கள் கசங்கிய கருங்குவளைகள் ஆகியிருக்கும். கலைந்து விழும் கூந்தலுடன் தன் இளரோஜாக் கன்னங்களிலே கண்ணீர் தழும்பேற அவள் கதறிக் கொண்டிருப்பாள். அவளுடைய மென்மையான இதயம் துயர ஈட்டிகளால் துளைக்கப்பட்டிருக்கும். தன் அல்லிக் கரத்திலே அலர்ந்த தாமரை போன்ற முகத்தைத் தாங்கியவளாய் தன் வாழ்வைப்பற்றி இல்லையேல் சாவைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பாள். ஐயோ சிந்தனை என்னை சித்ரவதை செய்கிறது…!
நான் ஏன்தான் விமலாவை விட்டு வந்தேன். அவள் அருகில் உட்கார்ந்து கொண்டு, எங்கள் இருவரையும் ஒன்றாக வாழ அனுமதியுங்கள் இல்லையேல் சாக அனுமதியுங்கள் என்று சத்தியாக்ரகம் செய்திருந்தால்…? எனக்கு அப்போதில்லாமல் போய்விட்டதே இந்தப் புத்தி…
நான் எவ்வளவு நேரம் இப்படிப் பட்ட கவலை நிறைந்த சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை. வேகமாக ஓடிக் கொண்டிருந்த ரயில் திடீரென்று நிறுத்தப்பட்டது. வண்டி ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. என் சிந்தனைகள் தடைப்பட்டன. எக்ஸ்பிரெஸ் அந்த இடத்தில் ஏன் நிறுத்தப்பட்டது என்பதன் காரணம் தெரிய வில்லை. வண்டியில் இருந்தவர்கள் ஜன்னல்கள் வழி யாக இரண்டு பக்கங்களிலும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பெண் அடிபட்டு விட்டாளாம் என்ற பேச்சு மிதந்து வந்தது. எனக்கு வந்த முதல் நினைவு என் விமலாவாக இருந்தால்….?
நான் பரபரப்புடன் இறங்கி வந்தேன். ரயில். அடியிலிருந்து அந்தப் பெண்ணின் உடல் எடுக்கப் பட்டு முதல் சிகிச்சை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது அவள் அழகிய முகத்தைப் பார்த்தேன். பதறி விட் டேன். “கமலா!” என்று கூவிவிட்டேன் நான்.
20. ரகு
இந்தச் சில நாட்களாக என்னுடைய உள்ளம் எப்படி இருந்த தென்று சொல்ல முடியவில்லை ஒரே குழப்பமும் போராட்டமுமாக அல்லும் பகலும் போராடும் இதயத்தோடு நான் போராடிக் கொண் டிருந்தேன். சில சமயங்களில் விபரீதமான சிந்தைகளில் மூழ்கிப்போய் வெளியேற வகை தெரியாமல் தத்தளித்துக் கொண்டே இருப்பேன். என் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது. வலையிலே அகப்பட்ட முயல் போல் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
சில சமயங்களில் அப்பாவைப்போய் பார்க்கலாம். என்று நினைப்பேன். யாருக்காக நான் அவரையும், செல்வமும்செல்வாக்கும் நிறைந்த என் குடும்பத்தையும் விட்டு வெளியேறினேனோ அவளே எனக்குத் துரோகம் செய்துவிட்ட பின்னால்…. முடவனான நான் தனித்துக் கிடப்பதில் அர்த்தம் இல்லை. பயனும் இல்லை. என்று நினைப்பேன். ஆனால் அப்பாவின் கொடிய குணம் என் நினைவுக்கு வரும். அடுத்த கணம் என் இதயத்தில் ஏதோ ஒன்று, “கமலா எனக்குத் துரோகம் செய்யமாட்டாள்…. செய்திருக்க மாட்டாள்” என்று திரும்பத் திரும்பக் கூறும்.
கமலாவைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைப்பேன். ஏன்…. நாம் நேரில் போவோம். நம்மைக் கண்டதும் அவள் எப்படி உணர்கிறாள் என்று பார்ப் போம். இந்தப் புதிய சூழ்நிலையிலே அவள் நம்மை எப்படி வரவேற்கிறான், எப்படி நடத்துகிறாள் என் பார்ப்போம் என்றெல்லாம் நினைப்பேன். அடுத்துகணம், சீ! வாழ்க்கையிலே இத்தனை தோல்விகள் போதாதா….? இன்னுமா தோல்விகளை வருந்தி அழைத்து ருசி பார்க்க முயலவேண்டும். கூடவே கூடாது… ஏற்கெனவே பட்ட துன்பங்களிலேயே இதயம் புண்ணாகிப் புரையோடிப் போய் இருக்கிறது. இனியும்….?
புதிய அதிர்ச்சிகளைத் சாங்கிக்கொள்ள நமக்குத் திராணி போதாது என்று நினைத்துக் கொள்வேன்.
காதால் கேட்டது தான் போகட்டும். கண்ணால் பார்த்ததுமா பொய்யாக இருக்கும். பிறன் ஒருவன் தன் மேலாக்கைத் தொடுவதை எந்தப் பெண்தான் பொறுத்துக் கொள்வாளா… கமலா சீ அவள் பெயரை நினைக்கவே நாக் கூசுகிறது என்று நினைப்பேன்,
என் குழந்தையைப் பற்றி நினைப்பேன். மீண்டும் என் உள்ளம் தத்தளிக்கும். மூன்று மாதக் குழந்தையாய் என் முகம் கண்டு அகமலர்ந்து கள்ளமற்ற பொக்கை வாய்ச் சிரிப்பிலே என் கருத்தை அள்ளிய அந்தச் சின்னஞ் சிறு பிள்ளையை நினைத்து மனம் ஏங்குவேன். அந்த அழகிய ஆண் குழந்தைக்காக எதையுமே செய்யலாமே என்று தோன்றும். குழந்தையை அவளிடமிருந்து பறித்துக் கொண்டு வந்து விடவேண்டும். நமக்குப் பிறந்த குழந்தை நாட்டம் பலர் மேல் கொண்டவளிடம் வளர அனுமதிப்பதா கூடவே கூடாது என்று நினைப்பேன். ஆனால் என் நிலைமை நினைவுக்கு வந்துவிட்டால்….? ஒரு கையற்ற முடவன் நான். தன்னைத் தான் காப்பாற்றிக் கொள்ளவே வகையற்றுப்போய் விட்டவன் நான் அந்தப் பிஞ்சுக் குழந்தையையும் வைத்துக்கொண்டு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பேன்.
சிந்தனைகள் என்னைக் குழப்பிக் கொண்டிருந்தன. எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன் நான். சில சமயங்களில் வேதனை கள் என் உள்ளத்தைக் குடைந்து உருக்குலைக்கிற போது எனக்கு வெறி பிடித்துவிடும். கன் னாப்பின்னா வென்று எதையாவது செய்வேன். கண்ணை மூடிக் கொண்டு பேயின் வேகத்தில் எங்காவது சென்று மோதவேண்டும் என்று தோன்றும்.
அப்படியில்லா விட்டால் அவ்வளவு வேகத்தில் நான் லாரியை ஓட்டிக் கொண்டு போயிருப்பேனா….? நள்ளிரவில்….அதுவும் ஒரு கை இல்லாதவன் நான். அதுவும் கட்டுக்கடங்காத மிலிட்டரி லாரியில்….?
லாரியில் தாவி ஏறும்பொழுது எனக்கு அந்த விதமான சிந்தனைதான் இருந்தது. காற்றின் வேகத்தில்…. அதைவிடக் கொடுமையான மின்னல் வேகத்தில்…. லாரியை ஓட்டிச் செல்வது. எதிலாவது மோதி…. எப்படியாவது தலை கவிழ்ந்து நொறுங்கி விழுவது… அதன் பிறகு….?
லாரி எத்தனை மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியாது. ஒரு திருப்பத்தில் என் கண் எதிரே ஒரு சின்னக் குழந்தை… சின்னஞ்சிறு குழந்தை அழுதுகொண்டு நிற்பது, தெரிந்தது. என் தலை சுழன்றது. கண்களை மூடிக் கொண்டு பிரேக்கை அழுத்தினேன். லாரி குழந்தைமேல் ஏறி விட்டது மேலும், ரத்தம் தோய்ந்த நிலத்தின் மேல் மாவாக அரைந்து விட்ட சதைப்பிண்டம் ஒன்று கிடப்பது போலும் நினைத்துக் கொண்டேன். மீண்டும் குழந்தையின் அழுகைக் குரல் கேட்ட பின் தான் என்னால் கண்களைத் திறக்க முடிந்தது.
எனக்கு ஒரே ஆத்திரமாக வந்தது. நள்ளிரவில் குழந்தையை நடுத்தெருவில் விட்டு விட்டுப் பெற்றவர்கள் என்னதான் செய்கிறார்கள். இந்த மூட ஜென்மங்களே இப்படித்தான். வகையறியாமல் பெற்றுத்தள்ளி விடுவது. பின் எங்காவது ரோட்டில் விட்டு விட்டுக் கவலையற்றுக் கிடப்பது என்று மனதிற்குள் சபித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தேன். குழந்தை காரைப் பார்த்துக்கொண்டு வீறிட்டு அழுதுகொண்டு நின்றது.
நான் குனிந்து கையில் எடுத்வேன். அழகான ஆண் குழந்தை….! சுற்றும் முற்றும் பார்த்தேன் பெற்றவர்கள் யாராவது காணப்படுவார்களா என்று ? குழந்தையைத் தூக்கிக் கொண்டு நாலாபக்கமும் சற்று தூரம் போய்க்குரல் கொடுத்தும் பார்த்தேன். யாரையும் காணோம். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதற்குள் குழந்தை என் கழுத்துப் பட்டையைப் பிடித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டது. நான் அதன் முகத்தைப் பார்த்தேன். அது என்னைப் பார்த்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டது.
அந்தச் சிரிப்பு என் உள்ளத்தை அள்ளிவிட்டது. அதன் அழகிய சிவந்த முகத்திலே நான் இதயம் பறி கொடுத்து விட்டேன், இனம் தெரியாத பாசத்திலே இளகிநின்ற இதயத்திலே என் குழந்தை என் அருகில். இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சாக இருந்து மீண்ட அந்தக் குழந்தையை அங்கே அனாதையாக விட்டுவிட்டுப்போக மனம் வரவில்லை. மீண்டும் சிறிது நேரம் அங்கேயே அதை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். அதைத் தேடிக் கொண்டு வருவார் யாருமே இல்லை. கடைசியாகக் காரில் எடுத்து வைத்துக் கொண்டு ஆபீசை நோக்கித் திரும்பினேன். நான் ஒரு அனாதை. இந்தக் குழந்தையும் ஒரு அனாதை….! அதன் மலர்ச்சிரிப்பிலாவது என் வாழ்க்கை மலர்ச்சி அடையுமா?
21. மாணிக்க முதலியார்
துன்பம் எல்லை கடந்து போய்விட்டால் அதன் பின் என்ன செய்வது என் றறியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. எதுவுமே ஓரளவாக இருக்கிறவரை தான். அதைப்பற்றிச் சிந்திப்பதும் செயலாற்றுவதும் எல்லாம். அளவுக்கு மீறிப் போய் விட்டால்…. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டால், ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்பதைப்போன்ற நிலைமை தான் ஏற்பட்டு விடுகிறது.
ஆயினும் என்ன? கமலாவைப்பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவளுடைய அருமைக் குழந்தை செல்வம் என்ன ஆயிற்றோ என்று நினைத்தால் உள்ளம் திகீர் என்கிறது. நானும் தேடாத இடம் இல்லை. ஏன்தான் துன்பத்தின் மேல் துன்பம் தொடர்ந்து வந்து என்னைத் தாக்குகின்றனவோ….? என்னாலேயே எதுவும் சிந்திக்கக்கூட முடியவில்லை.
பாலு இவ்வளவு கொடியவனாக இருப்பான் என்று நான் நினைத்திருப்பேனா? கடைசி நிமிஷம் வரை நான் அவனை சந்தேகிக்கவே இல்லையே…! என்னுடைய, என் குழந்தைகளினுடைய வாழ்க்கையின் பின்னால் பாலு எவ்வளவு சதி செய்திருக்கிறான்? என் சொத்துக்களைக் கொள்ளை அடித்தது; ஜாதிப் பிரஷ்டம் செய்தது, என் நிலங்களை ஜப்திக்குக் கொண்டு வந்தது, ரகுவின் வேலையைப் போக்கியது எல்லாமே அவன் தான். ஏன் நடேச முதலியார் மனத்தை மாற்றி விமலாவின் மணத்தை முறித்ததும் அவன் வேலையாகத்தான் இருக்கவேண்டும். முதல் நாள் இரவு அவனும் நடேச முதலியாரும் காரில் சென்றனர், மறு நாள் நடேச முதலியார் என்னிடம் வந்துவிட்டார் உறவை முறித்துக் கொள்ள.
பாலு….நான் அவனை எவ்வளவு நம்பினேன். நல்ல பாம்பிற்குப் பால் வார்த்ததுபோல் நான் அந்த நய வஞ்சகனைப் போற்றிக் கொண்டிருந்தேனே….? நான் அவனுக்கு ஒரு துரோகமும் செய்யாமல் இருந்தும் அவன் ஏன் தான் எனக்கு இவ்வளவு துரோகம் செய்ய வேண்டும்….?
அவனைப்பற்றிய செய்திகள் எல்லாமே திடுக்கிடத் தக்கவையாக இருக்கின்றன. கடைசியாக அவன் தன் நண்பன் சந்திரசேகரைக் கொள்ளையடித்தான். அந்த நண்பன் நெடுநாட்களாகவே திருட்டுச் சொத்துக்களைக் கைமாற்றுவதில் இவனுக்கு உதவி செய்து வந்தான்!
இந்தக் கேஸ் எப்படிப் பிடிபட்டது என்பது இன்னும் ரகசியமான விஷயம். யாரோ ஒருவர் விற்கக் கொண்டு வந்திருந்த நகையைப் பார்த்ததும் போலீசாருக்கு சந்தேகம் உண்டாயிற்று. அந்த நகையைப் பற்றி விசாரிக்கையில் அது கேசவலால் நகைக் கடையில் வாங்கியதென்று தெரிய வந்தது. கேசவலால் அந்த நகையை சுதர்சன் பாங்கிலிருந்து ஏலத்தில் எடுத்திருக்கிறான். சுதர்சன் பாங்கின் ஏஜெண்ட் தான் சந்திரசேகர்…! களவும் கைமாற்றலும் எவ்வளவு கோவையாக நடந்திருக்கின்றன?
எது எப்படியோ போகட்டும் ? களவு போன சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். ஜப்தியான நிலங்களைப் பற்றிய கேஸுகளும் ஜெயித்து விடும் என்று வக்கீல் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் என் மகள் எனக்குக் கிடைப்பாளா? கமலாவையும் அவள் குழந்தையையும் காணப் பெறுவேனா….? விமலாவின் வாழ்க்கை இனி என்றாவது சீர்ப்படுமா….?
நான் துன்பகரமான சிந்தனைகளிலே தேங்கிப் போயிருந்தேன். விமலா கையில் ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு வந்தாள். அதில் கமலாவைப்பற்றிய செய்தி ஏதாவது இருக்குமோ என்று ஆர்வத்துடன் எழுந்திருந்தேன். அவள் என் அருகே வந்தமர்ந்து பேப்பரை என் கையில் கொடுத்து ஒரு விளம்பரத்தைச் சுட்டிக் காட்டினாள்.
யாருமற்ற அனாதையாகப் போய்விட்ட ஏழைக் குழந்தை ஒன்றை அன்புடன் பேணி வளர்க்க ஒரு தாய் தேவை..! வாழ்க்கையிலே சலித்துப்போன, ஒருகையும் இழந்து விட்ட இளைஞர் ஒருவருக்கு அமைதியும், ஆறுதலும் அளிக்கக் கூடிய ஒரு துணை தேவை.
இரண்டும் ஒரே ஆளானால் நலம்….!
இந்த விசித்திரமான விளம்பரத்தைப் பார்த்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருளடைந்து போன அவள் இன்ப முகத்தைத் துயரத்துடன் பார்த்துக் கொண்டு, “என்ன அம்மா….?” என்று கேட்டேன். அவள் கரகரத்த குரலில் கூறினாள், “அப்பா…. எனக்கு இந்த உத்தியோகம் பிடிக்கும்” என்று.
நெடுநேரம் வரை என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. அவளுடைய தலையை அன்புடன் வருடிக் கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தேன். என் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். என் மகள் வாழ நினைத்தாள். ஆனால்.வாழ்வு அவளை வஞ்சித்து விட்டது. இப்போது…?
“என்ன அப்பா…யோசிக்கிறீர்கள்….? முறிந்து போனஎன் உள்ளத்திற்கு ஒரு குழந்தையின் மலர்ந்த முகம் சிறிதளவாவது சாந்தி அளிக்கும். ஒரு கையையும் இழந்து துன்புற்றுக் கொண்டிருப்பவரை வேறு யார் மணந்து கொள்வார்கள் அப்பா….யாருக்காவது என் வாழ்வால் பயன் இருக்கட்டுமே….? உங்களுக்கும் ஒரு பாரம் குறையும்…” என்றாள் விமலா. நான் அவள் முகத்தைப் பார்த்தேன். என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்து விட்டது. ஒரு தந்தையின் பாசத்தைப் பற்றி இந்த உலகம் எந்த அளவு தெரிந்து கொண்டிருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால்…. நான் என் மக்களை எவ்வளவு அன்புடன், ஆசையுடன் வளர்த்தேன். அவர்களுடைய எதிர் காலம் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிட்டேன்? ஆனால்… என் கண்மணி கமலாவைப் பற்றித் தகவலே இல்லை. இப்பொழுது விமலாவும்…
“அப்பா ஏனப்பா பேசாமல் இருக்கிறீர்கள்….?”
“அப்பா….”
அந்த அழைப்பு என்னை ஆகாசத்திற்கும் பாதாளத்திற்கும் தூக்கிச்சென்றது.
“அப்பா….”
அந்த அழைப்பு என் உணர்ச்சிகளை உலுக்கி உன்மத்தம் பிடிக்கச் செய்தது.
“அப்பா…. அப்பா…. அப்பா….”
எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் இருந்தது. என் வாழ்க்கையிலிருந்து என் இரண்டு பெண்களும் மறைந்து போவார்கள். அதன் பிறகு என் வாழ்வும் அஸ்தமித்து விடும். நான் விமலாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் அழிந்து போய் விட்ட ஆசைகளின் மனக்கோட்டைகளின் லட்சியங்களின் பிரதி பிம்பங்களை அங்கே கண்டேன். ஆனால், பேச முடியவில்லை….
“அப்பா…என் வாழ்க்கை கொஞ்சமாவது பயனுடையதாகும். அப்பா…அன்பு கலந்த சேவையில் இன்பம் காண்பேன் அப்பா….என் உள்ளம் சிறிதளவாவது மலர்ச்சி அடையும் அப்பா…யோசிக்காதீர்கள் அப்பா…” என்று அவள் திரும்பத் திரும்பக் கூறினாள். “அம்மா….உன் விருப்பம் அதுவானால்…. அதைத்தடுக்க நான் விரும்ப வில்லை அம்மா….” என்றேன். அவள் உடனே புறப்படவேண்டும் என்றாள். நானும் சம்மதித்தேன்.
22. ரகு
இந்தக் குழந்தை என் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விட்டது. அதன் மோகனச் சிரிப்பிலே என் இருண்ட உலகிலே நட்சத்திரப் பூக்கள் மலர்கின்றன. அதன் மழலைப் பேச்சிலே நினைவு மேடையில் வண்ண வண்ண ஓவியங்கள், வேடிக்கைச் சித்திரங்கள் வந்து போகின்றன. எனக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அதை எடுத்து அணைக்கவும் இன் முகத்தைக் காணவும் கொடுத்து வைக்காத பாபி நான். இந்தக் குழந்தையை யாவது…?
ஆனால் சில சமயங்களில் இந்தக் குழந்தையின் இயற்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடினேன். அது தூக்கத்திற்கு அழும்போது நான் அதற்கு பாலூட்ட முயன்றேன். அதற்குப் பசித்த பொழுது வேடிக்கை காட்ட நினைத்தேன். குழந்தை களின் இயற்கையைப் பெண்களால் தான் புரிந்து கொள்ள முடியும்போல் இருக்கிறது. தவிர நம் உத்தியோகத்திற்கும் குழந்தை வளர்ப்புக்கும் ஒத்து வரவில்லை. குழந்தையைக் கவனித்துக் கொள்ள கூலிக்காவது ஆள் பிடிக்கவேண்டும் போல் இருந்தது.
ரொம்பக் கஷ்டப்பட்ட பின் நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் நான் அந்த விளம்பரம் கொடுத்தேன். அதனால் எந்தவிதமான பயனும் ஏற்படும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. முடவனை மணந்து கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள். குழந்தை வளர்ப்பு வேலை சிலருக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் தாய் தேவை என்பதல்லவா விளம்பரம். தாயற்ற குழந்தைக்குத் தாயாக இருக்கத் தகுதி உடையவர் அல்லவா வரவேண்டும்….? அத்தகுதி உடையவர் களாக வந்து வாய்க்க வேண்டுமே…?
நான் விமலாவைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தேன். ஆனால் அவள் குழந்தையைப் பார்த்துச் செல்வம் என்று கூவிக்கொண்டு ஓடி வந்ததும்…. குழந்தை அவளிடம் தாவிச்சென்றதும்… குழந்தையை அணைத்துக்கொண்டு “அத்தான் அக்காள் இங்கே இருக்கிறாளா….?” என்று ஆர்வக் குரலிலே அவள் கேட்டதும்….
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரம் சென்றபின் என்னை நானே நிதானித்துக் கொண்டு, “கமலா உங்களுடன் தானே இருந்தாள்….”என்றேன். “இல்லை….பத்துப் பதினைந்து நாட்களாக அவ ளைக் காணோம். இங்கும் இல்லையா…? குழந்தை உங்களிடம் எப்படி வந்தது?”
நான் சிறிதுநேரம் யோசனை செய்து கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் குரூர உணர்ச்சி தாண்டவமாடியது. “உன் அக்காள் இங்கும் இல்லை. அங்கும் இல்லை. குழந்தை நள்ளிருளில் நடுத் தெருவில் நின்றது என் காரில் அடிபட்டிருக்கும். நல்ல காலம்… தப்பிற்று…”
“ஐயோ அப்படியானால் அக்காள்…?”
நான் வெறுப்புடன் கூறினேன், “அவள் பாலுவுடன் ஓடிப்போயிருப்பாள்….”
மாமா காதுகளைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்து விட்டார். விமலா கோபத்துடன் பேசினாள். ”அத்தான்… என்ன வார்த்தை இது ? பாலு ஜெயிலில் இருக்கிறான். அவனோடு உங்கள் தந்தையும், நீங்கள் உத்தியோகத்தில் இருந்த பாங்க் ஏஜெண்ட் சந்திரசேகரும் கூட ஜெயிலில் தான் இருக்கிறார்கள். நம் வீட்டைக் கொள்ளை அடித்தவன் பாலு. உங்கள் உத்தியோகம் போகக் காரணம் பாலு. நடக்கவிருந்த என் திருமணத்தை முறித்தவன் பாலு. கடைசியாக அந்த பாங்க் ஏஜெண்டையும் கொள்ளை அடித்துவிட்டு பொய் கூறி என்னையும் அழைத்துக்கொண்டு ஓடி விட முயன்றவன் பாலு…. அவன் ஒரு அயோக்யன்…. அற்பன். நல்லவன் போல் நடித்துக் கொண்டிருந்த நயவஞ்சகன்….! நல்ல காலம்-நான் அவனை நம்பி மாமாவின் மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் செல்லவிருந்தேன் அதற்குள் போலீஸ் அவனைப் பிடித்து விட்டது அத்தான் அவனுடன் அக்காள் ஓடிப்போகவாவது…? எனக்கு ஒரே புதிராக இருந்தது.”
அதற்குள் வேறு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வாலிபனும் அவனுடைய கிழத்தந்தையும் இறங்கினர். அவர்களோடு இறங்கிய பெண்….
கமலா…!
அவளால் என்னைப்புரிந்து கொள்ள முடியவில்லை. என்னாலும் அவளைப்புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் உடம்பெல்லாம் கட்டுக்கள்! மெதுவாக அந்தக் கிழவரின் தோளைப் பிடித்துக்கொண்டுதான் அவளால் நடக்க முடிந்தது.
அந்த இளைஞன் விமலாவிடம் ஏதோ கூறினான். அவள் “அக்கா….” என்று கூவிக்கொண்டு ஓடிப் போய் அவளைக் கட்டிக்கொண்டு “அதோ அத்தான்” என்றாள். அவள் என்னைப் பார்த்தாள். அப்படியே மூர்ச்சையாகி விட்டாள், நான் திடுக்கிட்டு எழுந்தேன். அப்பொழுது தான் என்னிடத்திலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு கையின் விபரம் மற்றவர்களுககுத் தெரிந்திருக்க வேண்டும். கமலாவின் மூர்ச்சையைத் தெளிவிப்பதை விட்டுவிட்டு அவர் என் கையைத் தேடிப்பார்க்கிறார். விமலா கண்ணீர் வடிக்கிறாள்.
கமலா என் மடியில் படுத்துக்கொண்டு முடமாகிப் போன என் கையை வருடிக் கொண்டு தன் கதையைச் சொல்கிறாள். என்னை அறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. கண்ணீர்க் கரை படிந்த எங்கள் சோக சரிதம் எத்தகைய கன் நெஞ்சத்தையும் கரைத்து விடாமல் போகாது. இங்கே…. நானும் என் மனைவியும் கண்ணீர்க் கடலில் மிதந்து கொண்டிருக்கிறோம். அங்கே அடுத்த அரையில் சிரிப்பொலிகள் கேட்கின்றன.
முதலில் சிரிப்பவள் விமலா….
அடுத்தது சபேசன்…
இன்னும் ஒரு சிரிப்பொலி…! எங்கள் குழந்தைனுடையது. எங்கள் உள்ளத்திலும் சிரிப்பு மலர்கிறது. இத்தனை காலம் சீரழிந்தோம். இனிச் சிரிப்போம்.
அதோ….எங்கள் செல்வம் மீண்டும் சிரிக்கிறது. சிரித்துச் சிரித்து மகிழ்கிறது. நான் கமலாவின் முகத்தைப் பார்க்கிறேன். அவள் என் முகத்தைப் பார்க்கிறாள். நாங்கள் சிரிக்கிறோம்…. வாழ்க சிரிப்பொளியே வாழ்க….! இன்பத்தின் எதிரொலியே வாழ்க….! வாழ்க்கையின் இன்ப நாதமே வாழ்க..,! வாழ்க….! வாழ்கவே….!
(முற்றும்)
– திருமணம் (நாவல்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1953, சத்தி பதிப்பகம், சென்னை.