படித்தவள்
கதையாசிரியர்: ரா.சீனிவாசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 4,335
(1994ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம் – 13
பிறை முகிலில் இருந்து முகிழ்த்து வெளிப்பட்டாள். என் வீடு நோக்கி வந்தாள்; அவள் நடையில் வாழ்க்கை விடை தெரிந்தது; தெம்பும் தெம்பாங்கும் தமிழில் இசைத்தன. ஞானச் செருக்குக் கொண்டவள் போல் அவள் காணப் பட்டாள். முன்பெல்லாம் வேங்கடம் செல்லும் பக்தர்கள் முதல் மலை ஏறுவார்கள். அதற்குக் காளிகட்டம் என்று பெயர். முண்டியடித்து முட்டிபோட்டு முகடு ஏறி அங்கே அடைந்ததும் ஒரு பெருமூச்சு விடுவார்கள். காளி கட்டம் கடந்து விட்டோம். இன்னும் ஆறு மலைகள் இருக்கின்றன. அவை பெரிது அல்ல என்று பேசுவார்கள்.
பிறை காளிகட்டத்தை அடைந்து விட்டாள். வேலை கிடைத்து விட்டது.
‘அங்கிள்’ எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று நீட்டு ஓலையைக் கொண்டு வந்து காட்டினாள்.
நீட்டோலை வாசித்தேன்; நெடுமரமாக நின்று விட்டேன்.
“அதிர்ச்சியாக இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“எப்படி உன்னை வாழ்த்துவது என்று தெரியாமல் திகைக்கிறேன். தமிழில் சொல்தேடுகிறேன்” என்றேன்.
“வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு”
என்று பாடுங்கள் என்றார்.
எனக்குப் புரியவில்லை. “நாம் பிறந்த மண்ணை வாழ்த்துங்கள் என்னை வாழ்விக்க முன்வந்திருப்பதால்” என்றாள்.
“இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்.
“சாக்லேட் மென்று தின்ன வேண்டும்” என்றாள்.
“கடித்துத் தின்றால் தான் சுவை” என்று சொல்லி வாங்கிக் கொண்டேன்.
“நான் அல்லவா வாங்கித் தரவேண்டும்” என்றேன்.
“நான் ஈட்டத் தொடங்கி விட்டேன். கூட்டல் தேவை இல்லை; வகுக்கத் தொடங்கி விட்டேன்” என்றாள்.
இந்த எதிர் வீட்டுப் பைங்கொடி எனக்கு எந்த வகையிலும் கடமைப் பட்டவள் அல்ல.
அவள் வெற்றி தோல்விகளை என்னோடு பங்கிட்டுக் கொள்கிறாள்.
அவளை இதே தெருவில் பல வருஷங்களாகப் பார்த்து வருகிறேன். அவள் தந்தையை விபத்தினால் வீட்டில் கொண்டு வந்து போட்டார்கள். வலிய அந்தத் துக்கம் விசாரிக்கச் சென்று இருக்கிறேன்; நாற்பது வயதில் இந்த நல்லுலகத்தை விட்டு நகர்ந்து விட்டார் என்றால் இதைவிட வேறு அதிர்ச்சி என்ன இருக்கும்? எனக்கு இளகிய மனம் என்று பழகிய சிலர் பகர்வது உண்டு. அது உண்மையோ பொய்யோ தெரியாது. எடுக்கப் பிடிக்க வந்தவர்களுக்கு விபத்தின் வரலாறு சொல்லிக் கொண்டிருக்க நான் முன்னிருந்து தலைமை வகித்தேன். சாவு வீட்டில் வந்தவர்களுக்கு எப்படி எப்படி இறந்தார் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் பொறுப்பு யாரையாவது சாரும்; அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதால் அவர்கள் குடும்பத்தோடு நெருக்கம் ஏற்பட்டது. கடைசி உறவினர் வந்து அழுது முடிக்கும் வரை அந்த உடல் அசைவது இல்லை என்று அடம் பிடித்தது. வந்தவர்களுக்கெல்லாம் நடந்த நிகழ்ச்சியைச் சொல்லி முடித்தேன். அதனால் அந்தப் பெண்ணின் தாய் என்னைச் சொந்த சகோதரனாக மதிக்கத் தொடங்கினாள்.
அதில் இருந்து ஏதாவது நல்லது நடப்பது நயப்பது ஏதாவது இருந்தால் விசாரிப்பது உண்டு. அவளைப் பெற்றெடுத்தவளுக்கு உற்ற துயரினை மறக்க, கற்ற இந்த மகள் தான் இருந்தாள். தான் படித்தால்தான் முன்னுக்கு வர முடியும் என்பதை நன்கு அறிந்தவளாகையால் கடுமை அவளிடம் அடிமைப்பட்டது.
என்னை எந்தச் சொல்லால் அழைப்பது? அவள் தேர்ந்து எடுத்த சொல் இந்த ‘அங்கிள்’ என்பது. அதில் ஒரு மரியாதை கலந்திருந்தது. என்னை மதிக்கும் உணர்வு பொருந்தி இருந்தது.
அவள் தனியார் நிறுவனத்தில் தக்க இடம் ஒன்று பிடித்ததை அறிந்தேன்.
“நீ ஏன் அரசு ஆட்சியில் மாட்சி பெறக் கூடாது?” என்று கேட்டேன்.
“இந்தச் சாதி என்ற நீதி எங்களை நுழைய முடியாதபடி சதி செய்கிறது. பிற்பட்டவள் என்று சொல்லிக் கொண்டு முற்பட்டுச் செல்ல விரும்பவில்லை” என்றாள்.
“அறிவில் போட்டியிட விரும்புகிறேன்; சலுகைச் சரிவில் தாழ்ந்து எழ விரும்பவில்லை” என்றாள்.
“சாதியைக் காட்டாமல் உன் திறமையை மட்டும் காட்டி அரசு பணியில் இடம் பெறலாமே” என்றேன்.
“என் தாய்க்கு நான் ஆதரவு. அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். நான் தலயாத்திரை செல்ல அவர்கள் உடன்வரமாட்டார்கள்” என்று விளக்கினாள்.
“அதற்குக் காரணம்?…”
“என் தாய் இந்த வகையில் ஒரு பேய்; அப்பாவின் ஆவி இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாக நம்புகிறாள்; அவளுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பார்” என்றாள்.
“அவர் மனநிலை சரி இல்லையா? நீ அப்பாவின் ஆவியோடு பேசி இருக்கிறாயா?” என்று கேட்டேன்.
“பாவிகளோடு ஆவிகள் வந்து பேசமாட்டார்” என்று சோகங் கலந்த குரலில் தன் சோர்வினைத் தெரியப் படுத்தினாள்.
“நாளைக்கு ஒருவனைக் கட்டிக் கொண்டால் அந்தக் காளையின் பின் போக வேண்டியது தானே”
“கானகம் செல்ல நான் சனகன் மகள் அல்ல; வானகம் சென்ற என் தந்தையின் நினைவில் வாழும் என் தாயை விட்டு நான் பிரியமுடியாது” என்று கூறினாள்.
“வேலுச்சாமி எப்படி இருக்கிறார்?”’என்று கேட்டாள்.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று அதை எடுத்துக் கொண்டேன்.
அவள் ஏன் என்றும் இல்லாமல் இன்று அவன் முகவரியைக் கேட்கிறாள்?
அடுத்த பயணத்துக்கு அவள் அடி வைக்கிறாளா? புரியவில்லை.
“ஏன் உங்களுக்கு மகள் இல்லையா?” என்று கேட்டாள்.
ஒரு மகளை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும்” என்றேன்.
“அது யார்?”
“வரப்போகும் மருமகள்.”
“அவள் உண்மையில் அதிருஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும்” என்றாள்.
“ஏன்? எப்படி?”
“உங்களை மாமனாராக அடைவதற்கு” என்றாள்.
அத்தியாயம் – 14
“எத்தனையோ நற்சான்றுகள் பெற்றிருக்கிறேன்; விளையாடி அல்ல; எதுவும் செய்யாமல்; அதற்குப் பெயர் நல்லவர் என்பது; இப்பொழுது என் வருங்கால மருமகளிடம் அதே பட்டத்தைப் பெறுகிறேன். ஒருவரைத் தெரிந்து கொள்ள ஓரிரு சொற்கள் போதும். எனக்குத் திமிர் ஏறியதால் நிமிர்ந்து நடந்தேன்.
களத்தில் பண்ணையார் மகனைச் சந்திப்பது என்று முடிவுக்கு வந்தேன். அவனுக்கு மூலை முடுக்கில் கொஞ்சம் நஞ்சம் ஆசை ஏதாவது வைத்திருந்தால் அதை அழிப்பது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன்.
பண்ணையார் சுதந்திரமான ஒரு தொழிலை நடத்தித் தன் மகனுக்கு ஒரு வாழ்வு அமைக்கத் திட்டமிட்டார், அரசுவேலை; அதை அடைய அரசியல் செல்வாக்குத் தேவைப்படுகிறது என்று சொல்கிறார்கள்; அதன் விலை இப்பொழுது கூடிக்கொண்டே போவதாகக் கேள்வி. வாங்க முடியாது என்று கைவிட்டுவிட்டார்.
சுயவேலைத் திட்டம் தவிர வேறு எந்தப் போக்கும் இல்லை; அதற்கு வெறும் பெருத்தனம் மட்டும் போதாது; மூலதனமும் தேவைப்பட்டது. அதனை மூளையில்லாமல் முடித்துவிட்டார். பிறருக்கு ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்த அவர் தனக்குக் கணிக்கும் ஆற்றல் இழந்து விட்டார்.
எதிர்பாராமல் முத்துவின் தாய் சறுக்கிவிழுந்து கால் எலும்பை நொறுக்கிக்கொண்டாள். சாய்ந்து நடந்து தான் ஓய்ந்து விட்டதைக் காட்டிக் கொண்டாள். சுவையாக இருந்த அவர்கள் வாழ்வு சுமையாக மாறியது. தன்னைத் தூக்கிவிடத் தன் மகனைத்தான் அவன் நம்ப வேண்டியதாயிற்று.
முத்து நின்று என்னிடம் அதிகம் பேசமாட்டான். வெட்டிப் பேச்சுப் பேசும் திண்ணை நான் என்பது அவன் முடிவு. என்னேடு சேர்ந்துதான் தன் தந்தை உள்ளதை ஓட்டப்பந்தயத்தில் ஒழித்து விட்டார் என்று அவன் தப்புக் கணக்குப் போட்டான். நான் சொல்லித்தான் அவர் அந்தக் கணிப்பொறி வாங்கினார் என்று கருதுகிறான். அவனுக்கு என்னைப் பற்றி விளக்க வாய்ப்பைத் தேடினேன்.
“பொறி இயல் படித்தும் நெறிப்படி ஏன் வேலை கிடைக்கவில்லை” என்று ஆரம்பித்தேன்.
“தொழிற்படிப்புக்கு வாய்ப்பு இருந்தது. அதுவும் அருகிவிட்டது” என்றான்.
“நீ வேறு தொழில்களுக்கு விண்ணப்பம் போட்டு வீணாக அலைவது ஏன்?” என்று கேட்டேன்.
“படிப்புக்கு ஏற்ற வேலை. என்று யாரும் காத்திருப்பது இல்லை. எது கிடைக்கிறதோ அதில்தாவிக்கொள்ள முயல்கிறோம்” என்றான்.
அவனைக் கொக்கிப்போட்டு வளைத்துப் போட்டேன்.
“உனக்குப் பிறை தெரியுமா?” என்றேன்.
“வான்பிறை எப்பொழுதாவது கண்ணுக்குத் தெரியும்” என்றான்.
பிறைமதி என்று விளக்கிவிட்டு அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது என்றேன்.
“தெரியும், எழுதி இருந்தாள்” என்றான்.
சுற்றி வளைக்க விரும்பவில்லை. சுழி முனைக்குவந்து நின்றேன்.
“அவளை என் மகன் வேலுச்சாமிக்கு மணம் முடிக்கலாம் என்று இருக்கிறேன்” என்றேன்.
“அவள் ஒப்புக் கொண்டாளா?” என்று கேட்டான்.
“முதன் முதலில் வேலுவைப் பற்றி இப்பொழுதுதான் விசாரித்தாள். என்னை மாமனாராக அடைய எந்தப் பெண்ணும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னாள். நீ என்ன நினைக்கிறாய்?”
“வேலு அவளுக்குத் தெரியுமா?”
“எதிர் வீடுதானே; பழகியவர்கள்” என்றேன்.
“நல்ல பெண்; குடும்பத்துக்கு ஏற்றவள். தாய்ப்பாசம் நிறைந்தவள்; அம்மாவை விட்டு வெளியே போக மாட்டாள்” என்றான்.
“அதனால் என்ன? மாமியாரும் அங்கு இருப்பதால் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை” என்றேன்.
“என் வாழ்த்துக்கள்” என்றான்.
“மண அழைப்பு அனுப்புவேன்; கட்டாயம் வந்துவிடு” என்றேன்.
“சொல்ல முடியாது; நான் இருக்க மாட்டேன்” என்றான்.
நான் பயந்து விட்டேன். இந்தப் பாவி ஏதாவது செய்து கொள்ளப் போகிறான் என்று பயந்து விட்டேன்.
“சவுதிக்குப் போவது என்று முடிவு செய்து விட்டேன்; இங்கே வேலை வாய்ப்பு இல்லை. குடும்பம் நலிந்து விட்டது; நான்தான் சம்பாதிக்க வேண்டும். என் பெற்றோர்கள் முதுமை அடைந்து விட்டார்கள்; அவர்களைக் காப்பாற்றுவது என் கடமை என்று நினைக்கிறேன். எனக்கு இங்கே எந்தப் பாசமும் இல்லை; யாருக்காக இங்கு இருக்கவேண்டும். இளமையில் பாடுபட்டால்தான் வளமாக வாழ இயலும்” என்று கூறினான்.
அவன் மனம் பிறழ்ந்து பேசுகிறானா? நிலை அறிந்து நெளிகிறானா? தெரியவில்லை.
“வாழ்த்தாவது அனுப்பிவை” என்று சொல்லி அவனிடமிருந்து விடை பெற்றேன்.
“பையனிடம் என்ன பேசிக் கொண்டிருந்தீர்” என்று பண்ணையார் என்னைக் கேட்டார்.
“ஏன் உங்களிடம் சொல்லவில்லையா! அரபு நாட்டுக்குப் போய் வேலை செய்யப் போகிறான் என்று நுவல்கிறான்”.
“எனக்கு இதுவரை அவன் சொல்லவே இல்லையே”
“நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் என்று அவன் சொல்லவில்லை”
“முதிர்ச்சி உடைய நான் அவனுக்கு எப்படி முட்டுக் கட்டையாக முடியும். என் தீவினைக்கு நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். பெரியோர்கள் வைத்த சொத்தைப் பூஜியம் ஆக்கிவிட்டேன்; அது குடும்பச் சொத்து; அதை எனக்குத் தொட உரிமை இல்லை. பெருமைக்குப் பாடுபட்டு அவனைச் சிறுமையில் நிறுத்தி வைத்து விட்டேன். நான் எந்த முகம்கொண்டு அவனைத் தடுத்து நிறுத்த முடியும்.
“அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடிக் காலில் கட்டுப் போட்டிருந்தால் அவன் அதை வெட்டிக் கொண்டு போய் இருக்க முடியாது. எந்தப் பெண்ணும் என் கண்ணில் தட்டுப்படவில்லை” என்று அவர் ஒரு முதிய கோவலனாகக் காட்சி அளித்தார்.
குன்றுபோன்ற சொத்தைக் குலைத்த நிலையில் அவர் எனக்கு ஒரு கோவலனாகக் காட்சி அளித்தார். அவனும் இப்படித்தான் கண்ணகிக்குத் தான் செய்த அநியாயத்தை அடுக்கிச் சொல்லிக் கடந்ததற்கு வருந்தினான்.
*சென்றது இனி மீளாது” என்று பாரதியின் பாஷையில் அவருக்கு ஆறுதல் கூறினேன்.
“படித்த பெண் என் எதிர் வீடு; அவளை முடித்துவிடலாம்” என்று கூறினேன்.
“மிக்க மகிழ்ச்சி. அவள் வேலைக்குப் போகிறாளா? வேண்டியதைச் சம்பாதிக்கிறாளா?” என்று கேட்டார்.
“நிரந்தரமான வேலை; சுதந்திரமான போக்கு; அவளை எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது” என்றேன்.
அவர் முகத்தில் ஏமாற்றம் தென்பட்டது.
“யாருக்கு? உங்கள் பையனுக்கு முடித்து விட்டீரா?” என்று கேட்டார்.
“அநேகமாக முடிந்தது போல்தான் என்று அறிவித்தேன்.
அத்தியாயம் – 15
வீட்டுக்குச் சென்றேன்; அவள் பாட்டுக்கு ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள்; அதைக் கேட்டுக் கொண்டு இருப்பேன்.
“எதிர் வீட்டுக்குப் போய் வந்தேன்” என்றாள்.
“பிறை அப்பாவுக்கு நினைவு நாளா?” என்றேன். “துணிந்து வேலுவுக்குப் பிறையைத் தரமுடியுமா” என்று வினவினேன்.
“தடை இல்லை” என்று விடைதந்தார்கள் என்றாள்.
இவ்வளவு எளிதாக எல்லாம் முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அதைவிடப் பிறை சிறிது நேரத்தில் என் வீட்டுக்கு வருவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.
மருமகளே மணமாவதற்கு முன் வருவது சரியாகப் படவில்லை.
“அத்தை வந்தார்கள்; வேலுவுக்குச் சமைச்சிப்போட ஆள் இல்லை என்றார்கள்” என்றாள்.
“அதை அடிக்கடி சொல்கிறாள்; புதியது ஏதாவது?”
“நான் மணம் செய்து கொள்ளப் போவது இல்லை; இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்” என்றாள்.
“மற்றொன்று என் தாயைவிட்டுப்பிரிய முடியாது; அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டார்கள். நான் அவர்களை விட்டுப்போக முடியாது. இதை எடுத்து அவர்களிடம் சொன்னேன்” என்றாள்.
அவளுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இதையும் சொல்லிவைத்தேன்.
“முத்து வர மூன்று ஆண்டுகள் ஆகும்; அவன் சவுதிக்குப்போகிறான்; இங்கு வேலை கிடைக்கவில்லை” என்றேன்.
“தெரியும் கேள்விப்பட்டேன்; இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லை; எங்கள் எதிர்காலம் பாரத மண்ணில் இல்லை” என்றாள்.
“அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருந்தால் அவனை நீ மணந்து இருக்கலாம்; பண்ணயாருக்குச் சொல்லிஇருப்பேன்” என்று பற்று நீங்கிய பற்று நீங்கிய நிலையில் அவளிடம் பேசினேன்.
இதை அவள் செவியில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
“என் தாய்தான் என் முதற்கடமை; அவளுக்காக நான் காலம் காலமாய் மணம் இல்லாமல் இருக்க முடியும்” என்றாள்.
வீடுமர் சபதம் போல இருந்தது.
“மற்றொன்று என் வேலையை விட்டு விட்டு மற்றவர்களைச் சார மாட்டேன்; கட்டியவன் கனக மாளிகையில் வைத்தாலும் பூசைக்குரிய மலர்களை நானே தேடிப் பறிப்பேன். தொழில் என் தெய்வம்” என்றாள்.
என்னை விட்டு அவள் விலகுவது போலத் தெரிந்தது.
“வேலுவை விசாரித்ததும் என்னைப் பாராட்டிப் பேசியதும் எந்த வித சார்பும் கொண்டவை அல்ல என்பதை என்னால் உணரமுடிந்தது.
அவசரப்பட்டு முத்துவிடம் நான் பேசி இருக்கக் கூடாது.
ஒரு வேளை அவன் அவளைக் காதலித்து இருக்கலாம்; அதை நான் கெடுத்து இருக்கக் கூடாது. என் மனசு என்னைச் சுட்டது.
வாய்விட்டு அவளிடம் கூறிவிட்டேன்.
“நான் ஒரு தவறு செய்து விட்டேன்; மன்னிக்க வேண்டும்” என்றேன்.
“எந்தத் தவறும் செய்யவில்லை; நீங்கள் முத்துவிடம் பேசியது எனக்குத் தெரியும்” என்றாள்.
எனக்கு அதிர்ச்சி தந்தது.
“அதனால்தானே அவன் மனம் முறிந்து வெளி நாடு செல்கிறான்” என்றேன்.
“அதற்காகத்தான் நான் இதை உங்களிடம் சொன்னேன்; நீங்கள் அவசரப்படுவீர்கள் என்பதுவும் தெரியும் முத்துவிடம் கூறுவீர்கள் என்பதுவும் தெரியும்.
என் காதலைவிட அவன் ஆண்மைதான் அவசியம்; பொருள் இல்லாதவர்க்குக் காதல் இல்லை. வினைதான் ஆடவர் உயிர்; ஆள்வினை தான் ஆடவரின் செயல்பாடு. முதலில் அவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். அவன் நெஞ்சு ஊசலாடிக் கொண்டிருந்தது. என்மேல் வைத்த விருப்பு அவனை அழுங்க வைத்தது. அதை மாற்றத்தான் உங்களைத் தூண்டினேன்” என்றாள்.
படித்தவள் அறிவுள்ளவள் என்பதை அறிந்தேன். நான் எவ்வளவு தூரம் எளிமையாகி விட்டேன் என்பதற்கு வருந்துகிறேன்.
அத்தியாயம் – 16
பண்ணையார் வீடு சுருசுருப்பாக இயங்கியது. காரணம் முத்துவின் வெளி நாட்டுப் பயணம் என்பது அறிந்தேன்.
முதிய வயதில் அவர்களை விட்டு விட்டுக் கடல் கடந்து போகிறான்; துயரம் ஒரு புறம்; அவர்கள் வறுமை நீங்கி வளம்மிக்க வாழ்வு பெறுகிறார்கள் என்ற நம்பிக்கை மற்றொரு புறம்.
சென்னை மீனம்பாக்கத்தில் மூன்று மணி நேரத்துக்கு முன் நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம், முத்துவின் தாய் சில முந்துகளை உதிர்த்தாள். அப்பா அவனைச் சேர்த்து அணை: துக் கொண்டு பிரியா விடை தந்தார்.
நான் உணர்ச்சி வயப்பட்டேன்.
“உனக்குத் துரோகம் செய்து விட்டேன்” என்று கத்தினேன்.
“மெதுவாகச் செய்யுங்கள்” என்றான் அவன்; அதன் பொருள் விளங்கவில்லை.
எதிர்பார்க்கவில்லை; முத்துவும் எதிர்பார்க்கவில்லை.
அந்த நாட்டில் அவனுக்குப் பயன்படக் கூடிய வகையில் ஊறுகாய், சமையல் சரக்குகள், இனிப்புகள் இவற்றை எடுத்துக் கொண்டு பிறை வருவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
முத்துவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தாவிட்டாலும் வியப்பு ஏற்பட்டது.
“என் பெற்றோர்களை விட்டுச் செல்கிறேன். அவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் விட்டுச் செல்லவில்லை. இதுதான் என் வருத்தம்” என்றான் அவன்.
“அவர்கள் என் பாதுகாப்பில் இருப்பார்கள். என் தாயும் உன் பெற்றோர்களும் என் கண்கள்” என்றாள்.
அவனுக்கே விளங்கவில்லை.
பொன்னொளிர் சரம் ஒன்று ஆரமாக அவனிடம் தந்தாள்.
அது அவள் வளைவில் அவள் கழுத்தில் முடிச்சாக அவன் கைப்பட இறுகியது.
“மூன்று ஆண்டுகள் காத்திருப்பேன்” என்றாள்.
மூன்று முடிச்சுகள் அவனுக்காகக் காத்துக் கிடந்தன.
(முற்றும்)
– படித்தவள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1993, அணியகம் பதிப்பகம், சென்னை.
![]() |
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர்…மேலும் படிக்க... |
