திருமணம்
கதையாசிரியர்: சு.குருசாமி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 3,825
(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
பதிமூன்றாவது அத்தியாயம்
சிவகாமியைப் பாலகிருஷ்ணன் நன்றாய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டபொழுது, அவன் உண்மையிலேயே பிரமித்துப் போனான். அவள் குளித்துவிட்டு ஸ்னான அறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அவன் படிக்கவேண்டிய பாடங்களை எல்லாம் முடித்துவிட்டுப் பற்பொடியைக் கையில் எடுத்துக் கொண்டு, அவன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். பலமாதங்களுக்கப்புறம் மீண்டும் அவன் அவளைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை. சிவகாமியை அவன் பார்த்துப் பலமாதங்களாய் விட்டன என்பது உண்மைதான். ஆயினும் அம்மா தங்களில் அவளிடத்தில் அவ்வளவு பெரிய மாறுதல் உண்டாயிருக்கும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை அப்பொழுது அவனுடைய கண்களுக்கு முன்பு தோற்றமளித்த தேவதைதானா அவன் முன்னம் பார்த்துப் பழகிய சிவகாமி என்ற வியப்பு அவனுக்கு உண்டாயிற்று. முன்னம் காணாத ஒரு பொலிவை அவளிடத்தில் அவன் அப்பொழுது கண்டான்.
அதற்கப்புறம் பாலகிருஷ்ணன் அவளை அநேக முறைகள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. அப்பொழு தெல்லாம் அவள் இளமையின் பூரிப்பில் திளைத்துக்கொண்டிருப்பதை அவன் கண்டான். யௌவனப் பருவம் அவளுடைய மேனிக்கு மெருகிட்டிருந்தது.
இப்பொழுது அவளைப் பார்த்த போதெல்லாம் அவனுடைய மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. அந்த நாளில், அதாவது அவள் அனாதைப் பெண்ணாக அவ னுடைய வீட்டில், அவனுடன் வளர்ந்துவந்த அக்காலத் தில், அவள் இவ்வளவு அழகாயில்லையே என்று அவன் நினைத்தான். துலக்காத ஒரு பித்தளைப் பாத்திரமானது, திடீரென்று அனேக சித்திர வேலைப்பாடுகள் அமைந்த பொன் பாத்திரமாக மாறிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. அவளுடைய அங்கங்களில் எல்லாம் ஒரு புதிய ஒளி, ஒரு புதுமணம் வீசியது.
முன்பு அவள் அனாதைச் சிவகாமியாயிருந்தாள்.. ஆனால் இன்றோ நிலைமை வேறு. இப்பொழுது அவளு க்கும் ஒரு சொந்த வீடிருந்தது; சொத்திருந்தது; சுக மிருந்தது. ஏழைச்சிறுமியாக, பிறந்தமேனியை ஒரு பீற்றல் துணியினால் மூடிக்கொண்டு வந்த சிவகாமியல்ல. அவள். அவளுடைய அங்கங்களில் அங்கங்கே பொன் னும் மணியும் மிளிர்ந்தன. விதவிதமான புது ஆபர்: ணங்கள் அவளுடைய உடலை அலங்கரித்தன. அழகிய பட்டாடை ஒன்று அவளுடைய மேனியை ஒட்டித் தழுவிக் கொண்டிருந்தது.
நேசிப்பாரற்று, அன்புப் பிச்சை கேட்டு, இப்பொ ழுது அவள் சுந்தரஞ் செட்டியாரின் வீட்டிற்கு வர வில்லை. அவர்கள் யாவரும் விரும்பி அழைத்த ஒரு விருந்தினளாய் வந்திருந்தாள். அவள் மீது அன்பு செலுத்துவதற்கு ஒரு கணவர் இருந்தார். இனி அவள் யாருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசிய மில்லை. ஒருவருக்கு அஞ்சி நடக்க வேண்டிய தேவையு மில்லை. அவளுடைய நடையும், பார்வையும், பேச்சும் அதைப் பாலகிருஷ்ணனுக்கு எடுத்துக் காட்டுவன போல் தோன்றின.
அவளுடைய அந்த நிலைமைதான் அவனை வசிகரித் ததோ? பொருளாதாரச் சுதந்திரந்தான் அவளுக்கு அத்தனை அழகையுங் கொடுத்ததோ?
ஒரு தோல் பெட்டியில் அவள் தனக்கு வேண்டிய சாமான்களை எல்லாம் கொண்டு வந்திருந்தாள். அவள் அதைத் திறப்பதற்காகச் செல்லும் போதெல்லாம், பாலகிருஷ்ணன் அவளைக் கவனித்தான். அந்த நடையே ஒரு தனி மாதிரியாக இருந்தது. அதில் அவன் அகங் காரத்தைக் காணவில்லை ; ஆனால் அழகைக் கண்டான். அப்பெட்டியில் அனேக பட்டுப்புடவைகள், ரவிக்கை களும், சோப், கண்ணாடி, சீப்பு, வாசனை த்தைலம், வாசனைத்தைலம், பவுடர் டப்பி போன்ற அனேக அலங்காரச் சாமான் களுமிருந்தன. அவள் பெட்டியைத் திறக்கும் போதெ ல்லாம் பாலகிருஷ்ணன் அவளைக் கவனிப்பான். அப் பொழுதெல்லாம் அவனுடைய கண்களின் முன்பு பழைய காட்சிகள் தோன்றும். சிலவருடங்களுக்கு முன்பு, அவள் முதன் முதல் அவனுடைய வீட்டிற்கு வந்த காட்சி பாலகிருஷ்ணனுக்கு ஞாபகம் வந்தது. உடுத்திய துணி போக மீதமுள்ள துணிகளைச் சுருட்டிய ஒரு பொட்ட ணத்தைக் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு, புதிய இடத் தில் தனக்கு எத்தகைய வரவேற்புக் கிடைக்குமோ என்று பயந்தவளாய், கூனிக் குறுகி அஞ்சி, அஞ்சி வீட்டிற்குள் அப்போது அடி எடுத்து வைத்தாள் அவள். ஆனால் இப்பொழுதோ. … குதிரைவண்டியிலிருந்து இறங்கி, வெள்ளிக்கூஜாவுடன் மின்வெட்டுப்போல், வீட்டிற்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டிற்குள் சென்ற மாதிரியே, ‘நான் இப்பொழுது ஏழைச்சிறுமியல்ல,’ என்று அறை கூறுவதுபோல் தோன்றியது. அதற்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்?
சிவகாமியின் அழகில் பாலகிருஷ்ணன் மயங்கி விட்டான். அவள் பால் அவனை வசீகரித்தது எது? அவளுடைய ஆடைகளும் ஆபரணங்களுமா ? இல்லை யென்றுதான் சொல்ல வேண்டும். ஆடைகளுக்கும், ஆபர ணங்களுக்கும் அப்பா ற்பட்டது அவளுடைய அழகென் பது தெளிவாய் விளங்கியது. ஒருநாள் அவள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, ஆபரணங்களை எல்லாம் கழற்றி, ஒரு சாதாரணச் சேலைதான் உடுத்தியிருந்தாள். அன்றுதாள் அவள் அதிக அழகாய் இருந்தாள்!
இளமையின் மினுக்கும், குலுக்குமா அவளுக்கு அவ்வசீகரத்தைக் கொடுத்தன? சிறிது கொடுத்திருக் கலாம். ஆனால் இளமைப்பருவம் அவளுக்கு மெருகிட் டதேஒழிய, முலாம் பூசவில்லை. அவள் இயற்கையிலேயே அழகிதான். இன்றைக்குத் தோன்றும் இவ்வசீகரசக்திகள் எல்லாம் சிறு பிராயத்திலும் அவளிடமிருந்தன. அன்று வித்து உருவத்தில் மறைந்திருந்தன. இன்று அவை வள ளர்ச்சியுற்று வெளித் தோன்றியிருந்தன.
முன்பு பாலகிருஷ்ணன் அவளுடைய அழகை ஏன் கவனிக்கவில்லை ? ஏன் பொருட்படுத்தவில்லை ? அவளை ஏன் அவன் வெறுத்தான்? அவளுடைய ஏழ்மையும், அநாதரவான நிலைமையுந்தான் அவனுடைய கண்களை அதிகமாக உறுத்தினவா? அதனால்தான் அவளை அவன் புறக்கணித்தானா? அதுதான் காரணமா ? அதில் சிறிது உண்மை யிருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் முழு உண்மையும் அதுவல்ல. அப்படியாயின் உண்மையான காரணம் என்ன?
பால்உணர்ச்சி முற்றிலும் வளர்ச்சி உறாத அச்சிறு பருவத்தில், சிவகாமியை அவன் ஒரு பெண்ணாக மதிக்க வில்லை. அவனுடன் எல்லாவற்றிலும் போட்டியிட வந்த ஒரு சிறிய மனிதப் பிராணியாகவே அவளை அவன் கருதினான். எதையும் பங்கிட்டுக்கொள்ளும் சுபாவமில்லாத அவ்வயதில் பொறாமைக் குணந்தான் அவனிடம் மேலோங்கி இருந்தது. அதுவரை பாட்டியின் அன்பு முழு மைக்கும் அவன் ஒருவனே பாத்திரமா யிருந்தான். அதில் ஒருபகுதியை அபகரித்துக் கொள்ளுவதற்குச் சிவகாமி வந்து சேர்ந்தாள்! பாலகிருஷ்ணனை மட்டுங் கூப்பிட்டுக் கொண்டிருந்தவாய் “சிவகாமி! சிவகாமி!” என்றும் அடிக் கடி கூப்பிட வாரம்பித்தது. அவனுக்கு மட்டும் அன்ன மளித்தகை இப்பொழுது அவளுக்கும் அன்னமிட்டது. தாயின் அன்பு இன்ன தென்றறியாத அவனுடைய உள்ளம் பாட்டியின் அன்பில்தான் சிறிது ஆறுதலுற் றிருந்தது. அதைப் பங்கிட்டுக் கொள்ள அவள் வந்து விட்டாள்! சிறிது அதிகப் பங்கே அவளுக்குக் கிடைத்து விடுமோ? அவள் பாட்டியின் தங்கை பெண். அவனோ பாட்டியினுடைய சக்களத்தியின் பேரன்!
சிவகாமியின் கல்யாணம் தீர்மானமாகிய பின்பு தான், பாட்டியின் அன்பை அனுபவிப்பதில் அவனுக்கிருந்த ஆபத்து நீங்கிவிட்டது. என்றஉணர்ச்சி அவனுக்கு. உண்டாகியது. அப்பொழுதுதான் அவனுடைய கண்கள் திறந்தன. சிவகாமியின் பெண்மைக் குணங்கள் அவன் மீது முதன் முதல் அப்போதுதான் மோதவாரம்பித்தன. இன்னொரு உண்மையும் அவனுக்கு அப்பொழுதுதான் விளங்க வாரம்பித்தது. எவ்வன்பை முழுதும் அனு பவிக்க அவனுக்கு இப்பொழுது சந்தர்ப்பம் கிடைத்ததோ அது இனி அவனுக்கு அவ்வளவு தூரம் தேவையா என்ற சந்தேகம் தோன்றியது. பயிர் முற்றிய பின்பல்லவா ஆற்றில் வெள்ளம் வந்திருக்கிறது? அவனுடைய: உள்ளத்தை வளம்படுத்துவதற்கு இப்பொழுது வேறொரு அன்புத்தாரை யல்லவா வேண்டியிருந்தது! அவ்வன்புத் தாரை எங்கிருந்தது? ஐயோ ! அது அவனை விட்டு ஓடிக் கொண்டல்லவா இருந்தது! அதை ஓடவிடாமல் தடுப் பதற்குத்தான் அன்று மாடியில் சிவகாமியின் கைகளை அவன் இறுகப் பிடித்தான் போலும்!
ஆனால் அத்தாரை ஓடியே போய்விட்டது!
இனி சிவகாமியைப்பற்றி நினைக்க அவனுக்கு உரிமை இல்லை. அவளை அறவே மறந்துவிட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் தீர்மானித்தான்.
ஆனால் மறக்க முடியவில்லை !
அவள் அடிக்கடி மாடிக்கு வந்தாள். மாடியில் தான் பாலகிருஷ்ணன் படித்துக் கொண்டிருப்பான் அவள் வந்தபோதெல்லாம் அவனையு மறியாமல் அவனுடைய கண்கள் அவளை நாடின. ஆனால் அவள் அவனை ஏறிட்டுக் கூடப் பார்க்க வில்லை. ஏன் பார்ப்பாள்? பார்க்கக்கூடா தல்லவா? அவன் இருந்த புறத்திற்கு எதிர்ப்பக்கமாகவே அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றாள்.
ஒவ்வொருநாளும் மாலையில் பாலகிருஷ்ணன் கடையி லிருந்து பூவும்,பலகாரங்களும் வாங்கிக் கொண்டு வந்து சிவகாமிக்குக் கொடுப்பான். பாட்டிக்கு அதில் மிகுந்த திருப்தி ஏற்பட்டது. முன்னைப்போல் சிவகாமியின் மீது து அவன் பொறாமைப் படாமல் அவள்மீது அன்பு காட்டி யதும், வித விதமான பொருள்களை அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்ததும் அவளுக்குச் சந்தோஷமளித்தது.
சிவகாமியின் மனப்பான்மை எங்ஙன மிருந்தது? அவள் பாலகிருஷ்ணனுடன் ஒரு வார்த்தை கூடப் பேச வில்லை. இம்மாதிரி பாராமுகமா யிருப்பவளா தன்னைப் பற்றி அதிகம் விசாரித்தாள், தன்னுடைய விஷயங்களை அறிவதற்கு அதிக ஆர்வங்காட்டினாள் என்று பாலகிருஷ் ணன் நினைத்தான்.
இன்று அவனிடமிருந்து வெகு தூரத்தில் இருப்ப தாகத் தோன்றிய அவள், ஒரு சமயம் அவனுடைய கைக் கெட்டும் தூரத்தில் தானிருந்தாள். அப்பொழுது அவன் நினைத்திருந்தால் அவளை அடைந்திருக்கக்கூடும். அதைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவனுக்கு ஆத்திரம் உண்டாகியது. ‘ஐயோ! என் கைப்பிடியிலிருந்த ஒரு அழகான கிளியை முட்டாள் தனமாய்ப் பறக்க விட்டு விட்டேனே!’ என்று அவன் ஏங்கினான்.
பதினான்காவது அத்தியாயம்
அன்று திடீரென அச்சம்பவம் நடக்கும் என்று பால கிருஷ்ணன் நினைக்கவில்லை. அது மிகச் சிறிய சம்பவந் தான். ஆனால் அவனுக்கு அது முக்கியமானதாகத் தோன் றிற்று. அவனுடைய உள்ளத்தில் எழுந்த ஒரு வினாவுக்கு அது விடையளிப்பது போல் இருந்தது.
அவன் கடைவீதியிலிருந்து திரும்பி வந்திருந்தான். பள்ளிக்கூடம் விட்டவுடன், மாலை வேளைகளில் விளையா டச் செல்வதற்கு முன்பு, அவன் கடைவீதிக்குச் செல்வது வழக்கம். அவ்விதம் செல்வதில் அவனுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று அவனுடைய தாத்தாவை திருப்தி செய்வது. அவன் அடிக்கடி கடைக்குப் போக வேண்டு மென்றும், வியாபார விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் சொல்வார். ஆனால் சாயந்திர வேளைகளில் அவன் கடைக்குச் செல்வதன் முக்கிய காரணம் வேறு. மாலைச் சிற்றுண்டிக்குப் பணம் பெறுவதற்காகவே அவன் போவது வழக்கம். அவ்வமயங் களில் கடையிலிருந்து ஏதாவது சில விஷயங்களை அறிந்து கொண்டு வந்து, தாத்தாவிடம் அவைகளைப்பற்றி விவா திப்பான். பல சமயங்களில் அது முட்டாள் தனமாகவும் இருக்கும்.
அன்று அவன் கடைக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவனுடைய தந்தை அவனைக் கூப்பிட்டார்.
“அதென்னடா கையில்?”
ஏதோ திருட்டுக் குற்றத்தில் திடீரென பிடிக்கப் பட்டவன்போல் பாலகிருஷ்ணன் விழித்தான். அவன் பதிலளித்த போ,து, “பலகாரமும் பூவும் யாருக்கு?” என்று ராமநாதஞ் செட்டியார் கேட்டார்.
இக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு அவன் சிறிது நேரம் திகைத்தான். ஆயினுங் கடைசியில், “சிவகாமி வந்திருக்கிறாள்,” என்றான்.
“ஓஹோ! பாட்டி வாங்கிக் கொண்டுவரச் சொன்னாளாக்கும்?” என்று ராமநாதஞ் செட்டியார் கேட்டார்.
‘இல்லை’ என்று உண்மையைச் சொல்ல அவனுக்குத் தைரியம் வரவில்லை. ‘ஆம்’ என்று பொய் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. ஆகையால் மௌனமாய் நின்றான். பாட்டியைக் காட்டிக் கொடுப்பதற்குப் பயந்து கொண்டு தான் அவன் பேசாமலிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு, ராமநாதஞ் செட்டியார், “இப்படி நம்முடைய சொத்தை எல்லாம் விரயம் பண்ணுகிறாளாக்கும். பண்ணட்டும், பண்ணட்டும்! எத்தனை நாளைக்கு இப்படி நடக்கும் என்று பார்க்கலாம்,” என்று கடுமையான குரலில் சொன்னார்.
இந்தப் பொறாமை மனப்பான்மை பாலகிருஷ்ணனுக் குச் சற்றேனும் பிடிக்கவில்லை. அது தந்தையின்மீது அவனுக்கு வெறுப்பையே உண்டாக்கியது. அவன் பேசா மல் நின்று கொண்டிருக்கும் பொழுது, ”உன்னிடம் ஒரு விஷயம் சொல்வதற்காகக் கூப்பிட்டேன்” என்று ராமநா தஞ் செட்டியார் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார். “மதுரைச்செட்டிகள் இரண்டு, மூன்றுபேர் இன்று வ உன் ஜாதகத்தைக் கேட்டார்கள். பையன் தாத்தாவிடந் தான் இருக்கிறான். அவரிடம் போய் வாங்கிக் கொள்ளுங் கள் என்று சொல்லி விட்டேன். அவர்கள் அங்கு வந்து. கேட்டால், கொடுக்கக் சொல். இடம் நல்ல இடந்தான். அது எனக்குப் பிடித்திருக்கிறதென்றும் சொல்” என்றார்.
தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு அவன் வீட் டிற்குச் சென்றபோது, அவனுடைய மனதில் இந்த எண் ணந்தான் மேலோங்கி இருந்தது. மதுரைச் செட்டிகள் சிலர் அவனுடைய ஜாதகத்தைக் கேட்க வந்திருக்கிறார். களாம். நல்ல இடமாம். பணக்கார வீடாயிருக்கலாம். ஆனால் பெண் எப்படியோ? அது எப்படி யிருந்த போதிலும் அவர்கள் அவனுடைய ஜாதகத்தைக் கேட்க வந்திருப்பது அந்தச் சமயத்தில் அவனுக்குப் பெருமையாகவே இருந்தது. அவனுடைய நடையில் ஒரு மாறுதல் தோன்ற வாரம்பித்தது. அப்பொழுதே அவன் தன்னைப் புது மாப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டான் போலும்!
அப்பெருமித உணர்ச்சியுடன் அவன் வீட்டிற்குச் சென்ற போதுதான் அச்சம்பவம் நேரிட்டது. அது அந்த விதத்தில் நடக்கும் என்று அவன் நினைக்கவேயில்லை. மாடியில் அவனுடைய அறையில் அவன் உட்கார்ந்திருந் தான். அச்சமயம் திடீரென்று சிவகாமி அங்குத் தோன் றினாள். அவளுடைய முகம் பிரகாசத்துடன் விளங்கியது. “அம்மா பலகாரம் சாப்பிடக் கூப்பிடுகிறாள்” என்று சிவகாமி கூறினாள்.
அவளுடைய தோற்றமும், வார்த்தைகளும் அவனை த் திக்கு முக்காடச் செய்தன. அவனுக்கு என்ன செய்வ தென்று தோன்றவில்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டு, ”நான் இப்பொழுது தானே சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்றான்.
“அதென்னமோ அம்மா கூப்பிடுகிறாள்” என்று சொல்லி விட்டுச் சிவகாமி போய் விட்டாள்
அவன் ஹோட்டலில் வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டுத்தான் வந்திருந்தான். ஆயினும் சிவகாமி கூப்பிட்டதற்காகக் கீழே இறங்கிச் சென்றான்.
அவன் பலகாரஞ் சாப்பிடுவதற்காக அங்கு இலை விரிக்கப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது.பக்கத்தில் ஒரு டம்ளர் நிறையத் தண்ணீர் வைக்கப்பட்டு மிருந்தது.
“ஏண்டா பாலு,வீட்டில்தான் பலகாரம் செய்திருக்கிறதே, இன்றைக்கு ஏன் ஹோட்டலிலிருந்து வாங்கிக் கொண்டு வந்தாய்?” என்று பாட்டி கேட்டாள்.
“எனக்கு இங்கு செய்திருப்பது தெரியாதே” என்றான் பாலகிருஷ்ணன்.
“ஏண்டி சிவகாமி, இலைபோட்டுத் தண்ணீர் எடுத்து வைத்தாயே. பலகாரத்தைப் பரிமாறுகிறதுதானே?” என்று லக்ஷ்மியம்மாள் சொன்னாள்.
”நீயே எடுத்து வையம்மா”, என்று சமயலறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த சிவகாமி சொன்னாள்.
பாலகிருஷ்ணன் சாப்பிட உட்கார்ந்தான். இதே மாதிரி முன்பு ஒரு தடவை அவள் தண்ணீர் எடுத்து வைத்ததற்காகத்தான், பாலகிருஷ்ணன் அவளை அடித்தான். அன்று அவன் அத் தண்ணீரைத் தொடக் கூட இல்லை. அதன் மீது அவனுக்கு அவ்வளவு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்றோ அவனுக்கு அத் தண்ணீர் மிக்க சுவையுள்ளதாய்த் தோன்றியது. அவளே வந்து தனக்குப் பலகாரமும் பரிமாறக் கூடாதா என்று நினைத்தான்.
பலகாரங்களைச் சாப்பிட்டு விட்டு அவன் மாடிக்குச் சென்ற பொழுது, தான் ஏதோ ஒரு புது உலகில் இருப்பதாகவே அவனுக்குத் தென்பட்டது. இதுவரைக்கும் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்காத சிவகாமி அவன் முன்னால் நேருக்கு நேர் தோன்றினாள். அவனை நேருக்கு நேர் பார்த்தாள். அவனுடன் பேசவும் செய்தாள். அவன் சாப்பிடுவதற்காக இலை போட்டிருந்தாள். தண்ணீரும் எடுத்து வைத்திருந்தாள். ஒரு வேளை அத் தண்ணீர் அவளே கிணற்றிலிருந்து கொண்டு வந்த தண்ணீராகவும் இருக்கலாம். அவைகளைப்பற்றி எண்ண, எண்ண அவனுக்கு இன்பமாயிருந்தது.
திரும்பத் திரும்ப அந்த எண்ணங்களே அவனுடைய மனதில் எழுந்து கொண்டிருந்தன. இப்பொழுது யோசித்துப் பார்த்த பொழுது, ஏதாவது சாக்குப்போக்கைவைத்து, கொண்டு சிவகாமி அடிக்கடி மாடிக்கு வந்து போய்க் கொண்டிருந்ததாகவே தோன்றியது. முந்தின நாள் அவள் எருமூட்டை எடுப்பதற்காக மாடிக்கு வந்தாள். பாலகிருஷ்ணன் படித்துக் கொண்டிருந்தான். வந்தவள் வெகுநேரம் வரைக்கும் கீழே இறங்கிச் செல்லவில்லை.
“அடி சிவகாமி, இங்கு அடுப்புப்புகைந்து கொண்டிருக்கிறது. நீ அங்கு என்னடி செய்து கொண்டிருக்கிறாய்?” என்று லக்ஷ்மியம்மாள் கீழே இருந்து கத்தினாள்.
“எரு முட்டைகள் கீழும் மேலுமாய் விழுந்து கிடக்கின்றன. அவைகளை அடுக்கினேன். இதோ வந்து விட்டேன்” என்றாள் சிவகாமி
அவள் எருவை அடுக்கிக்கொண்டிருந்தது பாலகிருஷ்ணனின் படிப்புக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது,
பாட்டி அம்மாதிரி அடுக்கிக் கொண்டிருப்பாளாயின் பாலகிருஷ்ணன் மிகவுங் கடிந்திருப்பான். ஆனால் அன்றோ அவன் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் அச்சப்தத்தைக் கவனித்துக் கொண்டே இருந்தான்
அவளுக்கு கல்யாணம் ஆனபின்பு, அவனுடன் அவள் பேசியது அதுதான் முதல் தடவை. அவள் ஏன் அவனுடன் பேசினாள்? அதை நினைக்க, நினைக்க அவனுக்கு ஆனந்த மாயிருந்தது. அவளை மறந்து விடவேண்டும், அவளைப் பற்றி இனி நினைக்கவே கூடாது என்று அவன் தீர்மானித்த போது, அச்சம்பவம் நடந்தது. அது அவனுடைய உறுதியைக் குலைத்தது. அவனுடைய பால் உணர்ச்சிக்கு ஒரு ஆகாரம் கிடைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவள் அவனுடன் பேசியது, அப்புதிய ஆகாரத்தைப் பற்றிய சிந்தனையே அவனுடைய மனதில் தோன்றாமல் அடித்து விட்டது. அவனுடைய உள்ளத்தில் ஒரு தீ கொழுந்துவிட்டு எரியலாயிற்று.
இம்மாதிரிச் சிந்தனைகளில் அவன் ஈடுபட்டிருந்த பொழுது லக்ஷ்பி அம்மாளும் சிவகாமியும் கீழே பேசிக் கொண்டிருந்த சத்தங் கேட்டது. பாலகிருஷ்ணன் உற்றுக் கவனித்தான்.
“அண்ணனுடைய சாதகத்தை யாராவது வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்களா, அம்மா?” என்று சிவகாமி கேட்டாள்.
“எதற்காகக் கேட்கிறாய்?”
“சும்மாத்தான் கேட்கிறேன்.”
“எனக்குத தெரியும் நீ எதற்காகக் கேட்கிறாய் என்று. இது வரைக்கும் இன்னும் ஒருவரையுங் காணோம்?”
“வேறொன்றுமில்லை. அண்ணனுக்கு நல்ல பெண்ணாய்ப் பார்த்துச் சீக்கிரம் கல்யாணம் பண்ண வேண்டு மென்று சொன்னேன்.”
இச்சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிந்த பாலகிருஷ்ணனின் உள்ளங் குழம்ப வாரம்பித்தது.
அன்றிரவு சாப்பிட வந்த சுந்தரஞ் செட்டியார், லக்ஷ்மியம்மாளைப் பார்த்து, “உன்னுடைய பேரன் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்களடி, அம்மா” என்றார்.
“யார்?”
”மதுரை உமையொருபாகஞ் செட்டியார்.”
“இடம் எப்படி?”
“பணக்காரர்தான். ஜாதகம் பிடித்திருந்தால் உன்னுடைய பேரன் அதிர்ஷ்டக்காரன் தான்!” என்றார் சுந்தரஞ் செட்டியார்.
பதினைந்தாவது அத்தியாயம்
சில தினங்களுக்கப்புறம் ஒருநாள் பாலகிருஷ்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்தபோது, அவன் ஓர் அதிசயத்தைக் கண்டான். அவனுடைய அறை சுத்தமாகக் கூட்டப்பட்டிருந்தது. மேஜையின மேலுங் கீழுமாக வாரி எல்லாம் அழகாய் இரைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜைபின்மேல் தூய, அழகிய துணி ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அவைகளைச் செய்தது யார்?
பாட்டி லக்ஷ்மியம்மாள் அவனுடைய அறையைத் அடிக்கடி கூட்டிச் தினந்தோறு மில்லாவிட்டாலும், சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் அவள் அவனுடைய புத்தகங்களை அடுக்கி, ஒழுங்கு படுத்த மாட்டாள். அவை அப்படிக் கிடப்பதைப் பார்த்தால் அவளுக்குக் கோபங் தான் வரும். “பயல் படிக்கிற லக்ஷணத்தைப் பார்க்கலை லக்ஷணத்தை! புத்தகத்தைப் ஒழுங்காய் வைத்துக் கொள்ளத் தெரியா தவனுக்கு படிப்பென்ன வேண்டியிருக்கு? போய் முதலாவது புத்தகத்தை அடுக்கி வைத்து விட்டு, மறுஜோலி பார்” என்று அவனைக் கண்டிப்பாள். ஆகையினால் இன்று அவைகளை அடுக்கி வைத்தது யார் என்று அவன் யூகித்து அறிந்து கொண்டான். ஆயினும் அதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவனுக்கு அவா ஏற்பட்டது.
“இங்கே” இருந்த என் சரித்திரப் புத்தகத்தைக் காணோமே” என்று அறையிலிருந்தவாறே பாலகிருஷ்ணன் கத்தினான்.
“ஏண்டி சிவகாமி, அவனுடைய அறையைக் கூட்டிக் கொண்டிருந்தாயே. நீ பாத்தாயா?” என்று லக்ஷ்மியம்மாள் கேட்டாள்.
“நான் பார்க்கலை. மேஜையிலிருக்கும் அல்லது அலமாரியிலிருக்கும். எங்கே போய்விடும்?” என்று அவள் பதிலளித்தாள்.
அன்று அவள் அவனுடைய அறையைச் சுத்தம் செய் துவிட்டு, புத்தகங்களை அடுக்கலாமா, வேண்டாமா என்று பலமுறை சிந்தித்தாள். கடைசியில் அவைகளை அடுக்கி வைத்துவிட்டு, அவைகளில் ஒரு புத்தகத்தை எடுத்து, அவன் உட்காரும் நாற்காலியிலேயே உட்கார்ந்து சிறிது நேரம் வாசித்துக்கொண்டிருந்தாள். “ஏண்டி சிவகாமி. இவ்வளவு நேரமாய் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று லக்ஷ்மியம்மாள் கூப்பிட்ட போதுதான், அவள் அந் நாற்காலியை விட்டு எழுந்திருந்து வந்தாள்.
அன்று அவன் வாசிப்பதற்காகப் புத்தகங்களை எடுத்த போதெல்லாம், அவனுடைய உடலில் ஒரு புத்துணர்ச்சி தோன்றியது போல் இருந்தது. ஏன்? அவள் தொட்ட புத்தகங்கள் அல்லவா அவை! ஆகையினால் அவைகளைத் தொடும் போதெல்லாம், அவளால் ஸ்பர்சிக் கப்பட்டது போலவே அவன் இன்பம் அடைந்தான்.
இச் சம்பவம் நடந்த மறுநாள் லக்ஷ்மியம்மாள் திடீ ரென்று காய்ச்சலாய் படுத்துக் கொண்டாள். உடம்பு தீயாய்க் கொதித்தது. தலைவலி பொறுக்க முடியாமலிருந்தது. அவளுக்குச் சேவை, சிஸ்ரூஷை செய்வதில் பாலகிருஷ்ணனும், சிவகாமியும் அடிக்கடி சந்தித்தார்கள். பக்கத்திலிருந்து பழகும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.
லக்ஷ்மியம்மாள் படுத்துக்கொண்டதால், பாலகிருஷ்ணனுக்கு சிவகாமியே உணவு பரிமாற வேண்டியிருந்தது. சுந்தரஞ் செட்டியார் கடையிலிருந்து சாப்பிடுவதற்கு எந்த நேரம் வருவார் என்பது நிச்சயமில்லை. ஆகையினால் பாலகிருஷ்ணன் தனக்குப் பசித்த போது அவரை எதிர் பார்க்காமல் சாப்பிட்டு விடுவது வழக்கம். சிவகாமி பரிமாறத் தான் சாப்பிடவேண்டுமென்று பால கிருஷ்ணன் மிகுந்த அவாக் கொண்டிருந்தான். ஆனால் அச் சந்தர்ப்பம் ஏ ற்பட்ட பொழுது, அது அப்படி முடியும் என்று அவன் நினைக்கவில்லை.
”கஞ்சி கொண்டு வரட்டுமா, அம்மா,” என்று சிவகாமி லக்ஷ்மியம்மாளைக் கேட்டாள். பாலகிருஷ்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தான்.
“இப்பொழுது வேண்டாம். இன்னுங் கொஞ்சநேரங் கழித்துச் சாப்பிடுகிறேன்,” எனறாள் லக்ஷ்மியம்மாள்.
“சமயல் ஆய்விட்டது, அம்மா.”
பாலு வந்துவிட்டானே, அவனுக்குச் சோறு போடுகிறதுதானே?”
”வரச் சொல்லம்மா,” என்றாள் சிவகாமி.
பாலகிருஷ்ணன் சாப்பிட உட்கார்ந்தான். சிவகாமி பரிமாறினாள். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சிவகாமி சமயலறை வாசலில் வந்து நின்றுகொண்டு ஹாலில் படுத்திருந்த லக்ஷ்மியம்மாளுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஏதாவது வேண்டும். போது மட்டும், உள்ளே சென்று இலையில் அதை வைத்து விட்டு, மறுபடியும் வாசலுக்கு வந்துவிடுவாள். அல்லது லக்ஷ்மியம்மாளின் பக்கத்தில் சென்று, “போர்வையை நன்றாய் போர்த்தட்டுமா, அம்மா. இன்னொரு தலையணை கொண்டுவரட்டுமா, அம்மா,” என்று ஏதாவது கேட்பாள். சிவகாமி ஏதாவது பரிமாறச் சென்றபோது, பாலகிருஷ்ணன் பல முறைகளில் அவளுடைய கண்களைச் சந்திப்பதற்கு எத்தனித்தான். ஆனால் முடியவில்லை.
இப்படியிருக்கும்போது, ஒரு நாளிரவு பாலகிருஷ்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், சிவகாமி அவளுடைய வழக்கத்திற்கு விரோதமாக அவன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள். பாலகிருஷ்ணன் அவளைக் கவனித்தான். அவளுடைய முகத்தில் உணர்ச்சி பொங்கி யிருந்தது.
“என்ன வேண்டும்?” என்று மெதுவான குரலில் அவள் கேட்டாள்.
ஏதாவது வேண்டுமென்று சொல்லவேண்டுமே என்று நினைத்து, “வருவல் போடு,” என்றான்.
அவனுக்கும் உணர்ச்சிமேலிட்டது. ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும்போல் அவனுக்குத் தோன்றியது. அவளும் அவனிடமிருந்து ஏதோ எதிர்பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தான் அவன் சாப்பிட்டு முடிந்துவிட்டது. போக எழுந்து நின்றான். அவளும் நின்று கொண்டிருந்தாள். பாலகிருஷ்ணன் சில அடிகள் எடுத்து வைத்து, சமயலறை வாசல் வரைக்கும் சென்றான். சிவகாமி தான் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டு நகரவாரம்பித்தாள். பாலகிருஷ்ணன் திடீரென்று திரும்பிவந்து, ”தண்ணீர்,” என்றான்.
சிவகாமி தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அதில் கொஞ்சம் குடித்து விட்டுப் பாலகிருஷ்ணன் போய் விட்டான்.
அவனுடைய உள்ளத்தில் ஏமாற்றம் குடிகொண்டது!
மறுநாள் மத்தியான்னம் அவன் சாப்பிட உட்கார்ந்த. போது, தற்செயலாய் அவனுடைய தாத்தாவும் வந்து விட்டார். இருவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள்.
இரவு சாப்பாட்டு நேரத்தை வெகு ஆவலுடன் எதிர் பார்த்திருந்தான் பாலகிருஷ்ணன். மணி ஏழாகிவிட்டது. சாப்பிடப் போகலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த. போது, லக்ஷ்மியம்மாள் பேசுஞ் சத்தங் கேட்டது.
“ஏண்டி சிவகாமி, சமயலாய் விட்டதா, என்ன?”
“ஆய் விட்டது.”
“அவன் வந்து விட்டானே. சாப்பிடச் சொல்கிறது. தானே?”
“ஐயாவும் வரட்டும் அம்மா. ரெண்டு பேருக்கும் சேர்த்துப் போட்டு விடுகிறேன்,” என்றாள் சிவகாமி.
“பாலு பசி பொறுக்க மாட்டானடி. அவனுக்கு முதலாவது சோற்றைப் போட்டு விடுவது தானே?”
இதற்குச் சிவகாமி பதிலளிக்கவில்லை.
இச்சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனுக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. சிவகாமியினுடைய மனப்பான்மை அவனுக்கு விளங்கவில்லை. அவள் ஏன் இப்படி அவனை அவமானப் படுத்தினாள்? அவன் அவளை என்ன செய்தான்? ஒன்றும் செய்ய வில்லையே. அங்ஙனமிருக்க ஏன் அவள் அப்படிப் பேசினாள்? அதைக் கேட்டதும் பாட்டி அவனைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? முந்தின நாள் சம்பவத்தினால் தான் ஏமாற்றம் அடைந்தது போல், அவளும் ஏமாற்றம் அடைந்திருப்பாளோ! அவனிடமிருந்து ஒன்றும் எதிர் பார்க்க முடியாது என்று அவள் நிச்சயித்து விட்டாளா? அதன் பலனா இம்மனப்பான்மை? அல்லது திடீரென்று ஏற்பட்ட ஒரு விரக்தியினால் அவள் அப்படிப் பேசினாளா? அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இவ்வாறு பலவிதமாக அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று சிவகாமி அவனுக்கு முன்னால் தோன்றினாள்.
“சாப்பிடவா அண்ணா உனக்குப் பசிபொறுக்க. முடியா தாம். அல்லவா?” என்றாள்.
“எனக்கு இப்பொழுது பசி இல்லை,” என்றான் பால கிருஷ்ணன்.
சிவகாமி திரும்பி வந்து விட்டாள். அவளுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. ‘எனக்கு நன்றாய் வேண்டும்! எனக்கு ஏன் இந்த வெட்கங்கெட்ட தனம்? அவன் என்னுடன் ஒரு வார்த்தையேனும் பேசாமலிருந்த போது முதல் முதல் நானே வலியப்போய்ப் பேசினேன். அவனுக்குச் சாதம் பரிமாற வேண்டுமென்று துடியாய்த் துடித்தேன். எனக்கு என்ன குறை இருக்கிறதென்று இப்படி எல்லாம் நடந்து கொண்டேன்! சீ! சீ! மானங்கெட்டதனம்!’ என்று சிவகாமி தன்னைத் தானே மிகவுங் கடிந்து கொண்டாள்.
அவள் கீழே இறங்கி வந்ததும், “என்னடி சிவகாமி?” என்று லக்ஷ்மியம்மாள் கேட்டாள்.
“இப்பொழுது வயிறு பசிக்க வில்லையாம்.”
“சரி. அவர் வந்த பிறகே சாப்பிடட்டும். இப்பொழுது என்ன கெட்டுப்போகிறது? எனக்கு கஞ்சியைக் கொண்டு வா” என்றாள் லக்ஷ்மியம்மாள். கள்ளங்கபடமற்ற அவளுக்கு இளமையின் துடிப்புக்கொண்ட அவ்விரு உள்ளங்களில் கொந்தளித்துக் கொண்டிருந்த புயல்களைப்பற்றிக் சிறிதேனும் சந்தேகம் தோன்றவில்லை.l
சுந்தரஞ் செட்டியார் வீட்டிற்கு வந்தபோது மணி பத்தாகிவிட்டது. பேரனைச் சாப்பிடக் கூபபிட்டபோது அவன் தனக்குப் பசி இல்லை என்று சொல்லிவிட்டான். மனைவியினுடைய உடல் நிலையைப்பற்றி விசாரித்துவிட்டு அவர் சாப்பிட உட்கார்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, மதுரையிலிருந்து ஆள் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
“யாரிடமிருந்து?” என்று லக்ஷ்மியம்மாள் கேட்டாள்.
”உமையொருபாகஞ் செட்டியாரிடமிருந்து.”
“என்னவாம்?”
“ஜாதகம் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டிருக்கிறார்.”
“அப்புறம்…?”
“அப்புறம் ஒன்றுமில்லை. அது மட்டுந்தான் சொல்லி விட்டிருக்கிறார்.”
– தொடரும்…
– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
