கனவு மாளிகையின் ஒரு கானல் கதை
பூஜ்யமாகி விடுகிற வாழ்க்கை தான் இங்கு அதிலென்ன சந்தேகம்?. மார்பு தட்டிக் கொண்டு சொல்ல இங்கு எதுவுமே நிஜமில்லை. நித்தியமில்லை எல்லாம் மண்ணோடு போகிற கரித்துகள் தான். நிழல் தட்டி எழுகின்ற காட்சிகள் நடுவே, இது ஒரு கனா தோறறமாய் வந்து மனதை உலுக்கிற்று அந்த பிரமாண்டமான வீட்டில். அப்போது ஒரு யுகத்துக்கு முன்னால், மீரா மட்டுமல்ல அவர்களும் இருந்தார்கள். அவர்கள் யார்? எங்கிருந்து முளைத்தது இந்தத் தேகம். அதன் உறவுகள் உரிமை கொண்டாடும் நினைவுகள் இப்போது எதுவுமே மிஞ்சவில்லை. கூடப் பிறந்த அண்ணன்மார் அக்காமார் எல்லாம் போச்சுது. இப்போது அவள் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறாள் வெறித்த வானத்தை பார்த்துக் கொண்டு..
இங்கு கொழும்பில் கரைகிற வாழ்க்கையில், பிள்ளைகள் கூட ஒட்டவில்லை. மரணம் வந்தால், அதுவும் மிஞ்சாது எப்பவோ முன்னால் பார்த்தது. பார்த்தது என்ன வாழ்ந்து கழித்த கதை, அப்பேர்ப்பட்ட வாழ்க்கையும் அந்த வீடும் மனிதர்களும் இல்லாதொழிந்த நிலையில் எதை நினைத்து என்று மனம் ஆறுவது? அவளுக்குப் புரியவில்ல. இந்த மாய உலகமும் மனித வாழ்க்கையும், மனதின் சிருஷ்டியே தவிர உண்மையில் இல்லையென்றே, வேதம் சொல்கிறது பார்க்கலாம். வேதமென்ன பூதம் தான் இங்கு வாழ்கிறது. அதற்கு சாட்சி பூர்வமாக, மீராவின் மனதில் எத்தனையோ, கறை படிந்த கதைகளுண்டு.
அழகிய வீடு, அழகான மனிதர்கள். வாழ்க்கை என்பது இதற்கு மேலே ஒன்று மில்லை. அழகு இல்லாமல், போனால், அனர்த்தமே விளையும் அன்பும் அழியும் மொட்டை மரமாகி உதிர்ந்து பட்டு விட்டால், யார் சீண்டப் போகிறார்கள்? போன வருஷம் மன நோய் பிடித்து மக்கி உதிர்ந்து போனாளே மகள். அப்பவெல்லாம் படையெடுத்து வராத சனங்கள் குறித்து மீராவின் மனதில் ஆழ்ந்த அனுதாபமே உண்டு..
இதுவே பெரிய மனிதன் இழப்பாக, இருந்தால், கதையே வேறு, இந்தக் கூறுபட்ட உலகம் தான் நமக்கு இவையெல்லாம் அன்பு விட்டுப் போன வெற்றுச் சங்கதிகளே.
இந்த வெற்று நிழல்களில் ஒன்றாய் தான் அவள் வாழ்ந்த, வீடும் அந்த வாழ்க்கையும். அவற்றை நினைத்தால், வெறும் கனவு தான் மிஞ்சும்.
அவள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் புனிதம் காக்கவே. சொன்னால் யார் நம்புவார். மரணத்தை மறந்து போகாமல், அவள் எடுத்து வைத்த ஒகள்? இந்த பிணம் தின்னும் காட்டில் தான் அவள், மகளின் அந்தியேஷ்டி விருந்து முடிந்து, வீடு கிளம்பும் போது, கோகிலா ஓடி வந்து அவளின் கரங்களைப் பற்றிக் கொண்டு, வாஞ்சையோடு கேட்டாள்.
அக்கா! யாழ்ப்பாணம் வாறியளே?
அதைக்கேட்டவுடன், ஒன்றும் பேசத் தோன்றவில்லை மீராவுக்கு. நெஞ்சை அடைத்தது. பூமி பிளந்தது. யாழ்ப்பாணம் எங்கே? நான் எங்கே?அதிலும் இதைக் கேட்க இந்த கோகிலா தான் யார்? அவள் வேறு யாருமில்லை.
ஏழாலை மண்ணின் உயிர்த் தோன்றலான, அவளின் உண்மை முகம் இப்போது தரிசனத்துக்கு வந்தது. நெருங்கிய உறவு கூட இல்லை. பக்கத்து வீட்டுக் காரி. அவளின் தந்தை ஆறுப்பிள்ளை ஓர் ஏழைவிவசாயி. அவர்கள் வீடு முழுக்க வாழை மரங்கள். விரத நாட்களில் மீராவின் தம்பி சுந்தரம் அங்கு போய்த் தான் வாழை இலை வாங்கிக் கொண்டு வருவான்..அது ஒரு பழங்கதை.
கோகிலா யாழ்ப்பாணம் வரச் சொல்லி கேட்டதற்கு. நொந்து போன என் மகள் கேட்டபோதெல்லாம் என்னாலை போக முடியேலை இப்ப எதுக்கு என்று தான் யோசிக்கிறன்! அதோடை நான் வந்தால் எங்கை நிக்கிறது? என்றாள்.
ஏன் எங்க்டை வீட்டிலை நில்லுங்கோ. நான் பாக்கிறன்.
நான் வீட்டை போய் கனகாலமாச்சு. மகளின் பிள்ளையை பார்க்க இப்ப இஞ்சை வந்து நிக்கறன் அவள் வேலைக்குப் போறதாலை தான் இந்த நிலைமை .
அப்ப வீட்டிலை ஆர்?
வீட்டைபாத்துக் கொண்டு, அவர் தான் தனியாக இருக்கிறார். மகளுக்கு கல்லூரி லீவு விட்டதாலை நாளைக்கு ஊருக்குப் போறம். அது தான் கேக்கிறன், நீங்கள் வாறியளே?
எனக்கு நடக்கிறது கஷ்டம், கன நேரம் பஸ் ஸிலை இருந்து பயணம் செய்ய ஏலாது. எப்படி வாறது?
எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுறன், என்ரை அம்மா மாதிரி உங்களை கையிலைபிடிச்சுக் கூட்டிக்கொண்டு போறன்.
அப்ப சரி வாறன்.
அது ஒரு புனித யாத்திரை மாதிரி தொடங்கிற்று. போய் இறங்கியவுடன் மீராவுக்கு கண்ணைக் கட்டிற்று. இது பழைய யாழ்ப்பாணமாகப் படவில்லை. வழி தவறி வந்து விட்டால் போல் ஓர் உறுத்தல், அத்துணை மாற்றம் வளர்ச்சி பெற்ற, ஒரு புது நகரமாக அதைக் கண்ட நிலையிலும் மனம் மயங்கவில்லை. மீராவுக்கு பழசை மீட்டிப் பார்க்கத் தான் அவள் கரங்கள்துடித்தன. அப்படி மீட்டிப் பார்ப்பதற்கு அது ஒன்றும் வீணையல்ல. வீணாகிப் போன ஒரு வாழ்க்கை வாழ்ந்த வீடு. ஆம் அதற்குகட்டியம் கூறத் தான் அவள் வந்திருக்கிறாள். வானத்தை தேடுகிறாள். அதற்கு அனுசரணையாக கோகிலாவின் அன்பு வழிநடத்தல் காரணமாக, காலை சாப்பாடு முடிந்த கையோடு இருவருமாக அந்த மயான பூமிக்கு வந்து சேர்ந்தார்கள். அவள் வாழ்ந்து கழித்த வீடு, இதுவா என்று , அவள் அதைக் காண நேர்ந்த போது முற்றாக உடைந்து போனாள் பெரியக்கா. பிறந்த போது தான், அப்பா அதைக் கட்டினார்.
எவ்வளவு பெரிய வீடு. டபட அமைந்த வீடு ஏழெட்டுஅறைகள், சுற்றிலும் வராந்தாக்கள். அவற்றின் சுவர்கள் மீது தொங்கிய சுவாமி, படங்களை நினைத்தால், அழுகை தான் வருகிறது. அத்துணை அழகான படங்களும் போன இடம் தெரியவில்லை. திருடர்கள் கொண்டு போனார்களா? மனித வேட்டையா? சண்டை காரணமாக காடு வெறித்த கதைதான் பெறுமதியான உயிர் கூட கேள்விக் குறியாகப் போன பின், இந்த ஜடப் பொருட்களின் இழப்பும் வீடும் வாசலும் ஒரு பொருட்டல்ல என்று தோன்றினாலும் அதையும் மாறிக் கொண்டு மீரா அழுதது பெரும் குரலாய் கேட்டது. அந்த தீன ஒலியை உள் வாங்கி திகைத்தவாறே, கோகிலா அவள் அருகில் தான் இன்னும் நின்று கொண்டிருந்தாள், பிறகு ஏதோ நினைத்துக் கொண்டு, சத்தமாக அவள் கேட்டாள்.
ஏன் அழுகிறியள்? எனக்கு பயமாக இருக்கு. நான் இங்சை உங்களைகூட்டி வந்திருக்கப்படாது .
அப்ப நாங்கள் வாழ்ந்த வீடு, இப்படி சரிஞ்சு கிடப்பதைப் பார்க்க நெஞ்சு பற்றி எரியுது. எனக்கு இதை இவ்வளவு பெரிசாய் கட்டி முடிக்கேக்கை, அப்பா எவ்வளவு நம்பிக்கையோடு இருந்திருப்பார். இப்படித்தான் காலம் எல்லாவற்றையும் தின்னும் என்று, அழிவைப் பற்றி அவர் ஒரு கணம் யோசிச்சிருந்தால், இதெல்லாம் நடந்திருக்குமோ? அவர் சுவரிலே மாட்டி வைச்சு அழகு பார்த்த அந்த அழகான படங்களைக் கூட இப்ப காண முடியேலை. யார் இதை அழித்தது? அல்லது களவாடிச் சென்றார்கள்? இதற்கெல்லாம் விடை தேடித் தான் நான் அழுது கொண்டிருக்கிறன். இதிலை அப்பா மட்டும் பாவமல்ல. எல்லோரும் தான்.
இதென்ன புதுக் கணக்கு? எனக்கு விளங்கேலை.
அதை விளங்க வைசசு என்ன ஆகப் போகுது? தீயிலை எரிஞ்சு போற உடம்பே வாழ்வென்று நம்புகிற நமக்கு இதெல்லாம் கணக்கில் எடுபடாத அற்ப விடயங்களே. இதுக்குப் போய் அழுறது கூட ஒரு தெய்வ வரமாய் தான் எனக்குப் படுகுது .
இந்தப்படுதலில் உச்சி குளிர்ந்து போய் நின்று கொண்டிருக்கிற மீராவின் உண்மை முகம் எது என்று பிடிபடாத மயக்கச்சுவடுகளில், அகப்பட்டு கோகிலா அப்படி நின்று கொண்டிருப்பது கூட இப்போது மீராவின் கண்களில் தெரியவில்லை.
அந்த ஒரு கணத்தில், அவளுக்கு தெரிய வந்த உண்மை, அவள் நிழல், கூடி நிற்பது போலவே பட்டது. ஒரு மனிதனே இப்படியாகையில் வீடு எம் மாத்திரமென்று கவலை தணிந்து ஆற்றாமையுடன், அவள் நினைவு கூர்ந்தாள்.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: January 5, 2026
பார்வையிட்டோர்: 2,392
