மணிமான் கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 559
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
8. சத்வசீலக் காற்படிகன் கதை | 9.1 மணிமான் கதை | 9.2 அனங்கரதி கதை
உவிஷபுரம் என்ற பட்டணத்தை கிரகபுஜன் என்ற ஒரு மகாராஜன் ஆண்டு வந்தான். அவனுக்கு மணியியக்கிசை என்று அழகில் நிகரற்றவளான ஒரு குமாரி இருந்தாள். அவளை அறிவில் நிகரற்றவனும், சகலவி தமான வித்தைகளிலும் பாஷைகளிலும் தேர்ச்சி பெற்றவனுமான ஒருவனுக்கே விவாகம் செய்து கொடுக்க வேண்டுமென்று வேந்தன் எண்ணியிருந்தான். அப்போது சகல கல்விகளிலும் பாஷைகளிலும் தேர்ந்த மணிமான் என்ற அரசன் ஒருவன். அறிவில் நிகரற்றவனான தான் அழகில் நிகரற்றவளான ஒருத்தியை அடைய வேண்டுமென நிச்சயித்து, கிரகபுஜ மன்னனின் குமாரியை தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்கும்படி கேட்டான். கிரகபுஜ மன்னனும் அவனுடைய வித்தைகளையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து தனக்குத் திருப்திகரமாயிருக்கவே. தன் குமாரத்தியை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.
மணிமான் மன்னன் தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு தன் ராஜ்யம் போய்ச் சேர்ந்தான். தம்பதிகள் இருவரும் சுகமாக வாழ்ந்து கொண்டு வந்தார்கள். ஆனால் ஓர் அறிவாளியும் ஓர் அழகான பெண்ணும் அதிக காலம் மனமொன்றி வாழ முடியுமா? ஒருநாள் அவர்கள் படுத்திருந்த மஞ்சத்தின் கீழே எறும்புக் கூட்டங்கள் சாரிசாரியாகப் போய்க் கொண்டிருந்தன. அவற்றில் முன்னே சென்ற எறும்புகளில் சில மேற்செல்லாமல் நின்றதைக் கண்ட மற்ற எறும்புகள் அவைகளை கூப்பிட்டு. “ஏன் நிற்கிறீர்கள்?” என்று கேட்டன. அதற்கு அவை, “மேற் செல்லக் கட்டிலில் இடமில்லை” என்றன. அப்போது பின்னால் இருந்த எறும்புகள். “அப்படியானால் கட்டிலைத் தூக்கி எறிந்து விட்டுப்போகிறது தானே?” என்றதும். முன் இருந்தவை, ‘மன்னனும் மகிஷியும் கட்டிலில் நித்திரை கொள்ளும் போது அவ்வாறு செய்வது தோஷமாயிற்றே” என்று சொல்லின.
அரைத் தூக்கத்திலிருந்த மணிமான் மன்னனுக்கு மிருகபாஷையைச் சேர்ந்த எறும்புகளின பாஷையும் தெரியுமாகையால். அவற்றின் சம்பாஷணையைக் கேட்டு ஆச்சரியப்பட்டுக் கலகலவென சிரித்தான். அப்போது பேரழகியான அவன் மனைவி கண்விழித்து. “ஏன் சிரித்தீர்கள்?” என்று கேட்டாள்.
அவள் வினவியதைக் கேட்டு அவ்வெறும்புகள் அரசனைத் தங்கள் பாஷையில் கூப்பிட்டு, “ராஜனே! நாங்கள் பேசிய வார்த்தைகளை நீர் யாரிடமாவது சொன்னால் உமது சிரம் வெடித்துப் போகும்!” என்றன.
அதைக் கேட்டு அவன் தன் மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசாரத்துடன் இருக்கையில், “ஏன் சிரித்தீர்கள்?” என்று நச்சரித்துக் கொண்டே இருந்த அவள் மறுபடியும் அவனைப் பார்த்து, “நான் கேட்டதற்கு ஏன் ஒன்றும் சொல்லவில்லை? என்மேல் தயவில்லை போலிருக்கிறது? அப்படியானால் நான் உயிர் விடுகிறேன்” என்றாள்.
“இதற்கென்ன செய்வது!” என்று யோசித்த அரசன், மனைவியைப் பார்த்து, “கண்ணே! உன் கேள்விக்குப் பதில் சொன்னால் என் சிரம் வெடித்துப் போகும். ஆகையால் நாளைக்கு மயானத்திற்குச் சென்று அங்கே கட்டையை ய அடுக்கி, அதன் மீது படுத்துக்கொண்டே சொல்கிறேன். உடனே என் தலை வெடிக்கும். நீ வறட்டியால் என் உடலை மூடி கொள்ளி வைத்துவிடு” என்றான். அதை நம்பாத அவள் “அதையுந்தான் பார்த்து விடுவோமே” என்றாள்.
அந்தப்படியே மறுநாள் மயானத்தில் கட்டையை அடுக்கிக் குவித்து அரசன் அதன் மீது படுத்துக் கொண்டு, மனைவியை அழைத்தான். அவளிடம் எறும்புகள் பேசியதைச் சொல்லப்போகும் தருணத்தில் ஆணும் பெண் ணுமாக இரண்டு ஆடுகள் அவனுக்கு அருகாமையில் நின்று தர்க்கமிட்டுக் கொண்டிருந்தன.
பெண் ஆடு ஆண் ஆட்டைப் பார்த்து, “அதோ இருக்கும் கிணற்றில் முளைத்துள்ள புல்லை எனக்குப் பிடுங்கிக் கொடு” என்றது. அதற்கு ஆண் ஆடு, “நீ என் கிட்ட வராதே. புல்லை பிடுங்கப்போய் கிணற்றில் விழச் சொல்லுகிறாயா? பெண் புத்தி கேட்டு நடப்பதற்கு எனக்குப் பைத்தியமா?” என்று சொல்லி விட்டுப் பெண் ஆட்டை விட்டுப் போய்விட்டது.
இதைக் கேட்ட அரசன் திடுக்கிட்டு எழுந்து தன் மனைவியைப் பார்த்து, “என்னைக் கொல்ல நினைத்த பாதகி! இனி நீ என் முகத்தில் விழியாதே” என்று சொல்லிவிட்டுப் பட்டணம் போய் வேறு ஒருத்தியை கல்யாணம் செய்து கொண்டான்.
இவ்விதம் கதையை சொல்லி முடித்த வேதாளம், ‘ஆட்டுக்கிடா. அறிஞன் இவ்விருவரில் யார் அதிகப் புத்திசாலி? சொல்லுமையா. ராஜனே!” என்று கேட்டது.
இதற்கு விக்கிரமாதித்த மகாராஜன். “ஆடாயிருந்த போதிலும் பெண் புத்தி கேளாதிருந்தமையால் அதுவே அதிகப் புத்திசாலி!” என்று விடை சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு மறுபடியும் முருங்க மரத்தில் எறிக்கொண்டது.
(மேற்கூறிய கதைக்குப் பதிலாக வடமொழி மூலத்தில் பின் வரும் கதை உள்ளது.)
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.