கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 1,527 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கண்ணே ராமு, வெளியே எங்கும் போகாதே! வீட்டுத் தோட்டத்திலேயே விளையாடு. காட்டிலே புலி இருக்குதாம். அது கிராமத்துக்குள் வந்தாலும் வரும்; பத்திரம்!”

“சரியம்மா!”

***

“விளக்கு வைத்த பிறகு வீதியிலே என்ன வேலை?”

“சும்மா என் சிநேகிதனோடு பேசிக்கொண்டிருக்கிறேன். ”

“சரி, சரி. உள்ளே வா. ஊரெல்லாம் புலியைப் பற்றி ஒரே பேச்சாயிருக்கு. உனக்குத் தெரியாது?”

***

“டேய், கடையை மூடுடா!”

“என்ன எஜமான், இவ்வளவு சீக்கிரம்?”

“நமது ஊர்க் காட்டிலே புலி இருக்குதாம். இருட்டுவதற்குள் வீட்டிற்குப் போய்விட்டால் நல்லது தானே!”

***

அந்தக் கிராமத்தின் எந்த மூலை முடுக்கிலும் புலியைப் பற்றியே பேச்சாக இருந்தது. கிராமத்தின் கோடியில் ஒரு சிறு காடு இருந்தது. அந்தக் காட்டில் கொடிய மிருகங்கள் இல்லை என்றே இதுவரை மக்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், ஒரு புலி புதிதாக அந்தக் காட்டுக்குக் குடி வந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு ஊரே நடுங்கியது.

புலியை நேரில் கண்டதாகப் பலர் கூறினார்கள் இரவில் கிராமத்திற்குள் வந்ததைக் கண்டதாகச் சிலர் கூறினர். புலியின் உறுமலைக் காதாலே கேட்டதாகப் பலர் சொன்னார்கள். அதன் காலடிகளைக் கண்டதாகச் சிலர் சொன்னார்கள்.

கிராமம் முழுவதும் புலியைப் பற்றியே பேச்சு. விளக்கு வைக்கும் நேரத்திற்கு முன்பே மக்கள் நட மாட்டம் மறைந்தது; கடைகள் மூடப்பட்டன. காடு இருக்கும் திசைப்பக்கம் எவருமே, பகலில்கூட எட்டிப் பார்ப்பதில்லை.

புலிப் பயம் மிகப் பெரிய தாகிவிட்டது. அந்தப் புலியைச் சுட்டுக் கொன்றாலொழிய அந்தக் கிராம மக்களுக்கு நிம்மதி யில்லை. அதனால், கிராம அதிகாரி புலியைச் சுட்டுக் கொல்ல ஆட்களை அனுப்பும்படி கலெக்டருக்கு எழுதினார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு பதில் கிடைத்தது. புலியை வேட்டையாட ஐந்து பேரை அக்கிராமத் திற்கு அனுப்பி வைப்பதாக அதில் கூறப்பட்டிருந் தது. இதை அறிந்ததும் கிராம மக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். வேட்டைக்காரரை ஆவலுடன் எதிர் பார்த்தனர்.

வேட்டைக்காரருக்கு வீரப்பன் தான் தலைவன். அவர்கள் கிராமத்திற்கு வந்ததும் மக்கள் அவர்களை வரவேற்றனர்; உபசரித்தனர்; எப்படியாவது புலி யைக் கொன்றுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

வீரப்பன், “நீங்கள் பயப்பட வேண்டாம். மூன்றே நாட்களில் அந்தப் புலியைச் சுட்டு வீழ்த்தி விடுகிறேன். இதென்ன பிரமாதம்! நான் பதினாறு அடி வேங்கையைக்கூடச் சுட்டுச் சுருண்டு விழ வைத் திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன், பாருங்கள். ஒரு சமயம் பெரிய மலையில் இருக்கும் கரியகாட்டிலே…” என்று ஆரம்பித்து ஏதேதோ கதை அளந்தான். தன் வீரப் பிரதாபங்களைத் தானே விளம் பரப் படுத்திக்கொண்டான்.

ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் வாயைப் பிளந்தபடி வீரப்பன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டு நின்றனர்.

ஒரு வழியாக வீரப்பனின் சுய விளம்பரம் முடிந் தது. கிராமத்தினர் அவரவர் வீட்டிற்குச் சென் றனர். வீரப்பன் தன்னுடன் உதவிக்கு வந்த நால் வரையும் அழைத்துக்கொண்டு காட்டிற்குச் சென்றான்.

காடு மிகச் சிறியது. அதில் ஒரே ஒரு குளம் இருந்தது. புலி நீரைக் குடிக்க அங்குதான் வர வேண்டும் என்று தீர்மானித்தான், வீரப்பன். அன் றிரவே புலியை வேட்டையாடிவிடலாம் என்று எண் ணினான். உடனே, புலியைச் சுட்டதற்காக, அரசாங் கத்தார் அளிக்கப்போகும் பாராட்டு, பதக்கம், ஆகிய வற்றைப் பற்றி எண்ணத் தொடங்கி விட்டான்.

”சார்! இந்த மரத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யட்டுமா?” என்றான் நால்வரில் ஒருவன்.

அப்போதுதான் வீரப்பன் கற்பனையிலிருந்து விடுபட்டான். ”உம்……… செய்யுங்கள்” என்று உத்தரவிட்டான்.

அன்றிரவு வீரப்பனின் ஆட்கள் மரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டனர். புலியின் வரவை எதிர்பார்த்து விழித்துக்கொண்டிருந்தனர்.

மணி பன்னிரண்டாயிற்று. ஆனால், புலி வரவில்லை. ஒரு வேளை விடியும் சமயத்தில் வந்தாலும் வரலாம் என்று காத்துக்கொண்டிருந்தனர் வீரப்ப னும் அவனது ஆட்களும்.

விடியும் நேரம் வந்தது. விடிந்தும் விட்டது. ஆனால், எதிர்பார்த்த புலி மட்டும் வரவில்லை. வீரப் பனுக்கு அலுப்புத் தட்டியது. தன் தோழர்களைப் பார்த்தான். அவர்கள் நிம்மதியாக மரக்கிளைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

“இந்தத் தூங்கு மூஞ்சிகளை வைத்துக்கொண்டு எப்படி வேட்டையாடுவது?” என்று முணுமுணுத்துக் கொண்டே வீரப்பன் மெல்ல மரத்தை விட்டிறங்கினான். சோம்பல் முறித்துக் கொண்டான். அருகிலிருந்த குளத்தில் இறங்கினான். நீரை அள்ளி அள்ளி முகத்தை அலம்பத் தொடங்கினான்.

அப்போது……

ஏதோ ஓசை கேட்டது. வீரப்பன் திடுக்கிட்டுத் திரும்பினான். ஏதோ ஒன்று நடந்து வரும் சத்தம் நன்றாகக் கேட்டது. அப்போதுதான் வீரப்பன், தன் துப்பாக்கி பரண்மீது இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

“ஐயையோ ! வருவது நிச்சயம் புலியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், துப்பாக்கி கையில் இல்லையே!” என்று நடுங்கினான். அவன் தோழர்களோ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர்.

காலடிச் சத்தம் நெருங்கியது. வீரப்பன் மடமட வென்று ஓடினான். மரத்தின்மீது ஏறினான். பாதி மரம் ஏறிக்கொண்டிருக்கும் போதே, சத்தம் வந்த திசையிலிருந்து ஒரு மிருகம் வந்தது.

அது என்ன மிருகம்?

வீரப்பன் அதைப் பார்த்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது! வந்தது புலியல்ல; அது ஒரு நரி! தன்னைப் பயமுறுத்திய அந்த நரியையாவது சுட்டுத் தள்ளவேண்டும் என்று பரணை அடைந்தான்; துப் பாக்கியை எடுத்தான் ; சுட்டான். ஆனால், நரி தப்பித்துக்கொண்டது.

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தனர். ‘வீரப்பன் புலியைச் சுட்டுவிட்டான் ‘ என்று நினைத்தனர். அதே சமயம் காட்டை நோக்கி வந்துகொண்டிருந்த சிலரின் காதுகளில் துப்பாக்கிச் சத்தம் விழுந்தது. புலியைச் சுட்டார்களா, இல் லையா என்று பார்க்கவே அவர்கள் அங்கு வந்தார்கள். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும், “ஆ! வீரர்கள் புலியைச் சுட்டுவிட்டார்கள் !” என்று முடிவு செய்து விட்டார்கள். உடனே திரும்பிச் சென்று, கிராமத்தில் செய்தியைக் கூறினர்.

***

“எங்கே புலி? சுட்டு விட்டீர்களா? குறி தவற வில்லையே !” என்று வீரப்பனைப் பார்த்து அவனு டைய ஆட்கள் கேட்டனர். வீரப்பன் வெட்கத்துடன் நடந்ததை மெதுவாகக் கூறிக்கொண்டிருந்தான் அதேநேரத்தில்,” வேட்டைவீரன் வீரப்பனுக்கு ஜே!”, என்று கூச்சலிட்டுக்கொண்டு கிராம மக்கள் காட்டை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

வீரப்பனுக்கு ஒன்றுமே தெரியவில்லை! வந்த மக்கள் வீரப்பனுக்கு மாலையிட்டனர்; பாராட்டினர். இத்தனைக்கும் வீரப்பன் ஒன்றுமே பேசவில்லை. கிராம அதிகாரி வீரப்பனைப் பார்த்து, “எங்கே சுட்ட புலி?” என்று கேட்டார்.

வீரப்பன் தலை குனிந்தான். அவனுடைய ஆட்கள் விஷயத்தை மெதுவாகக் கூறி முடித்தனர். மகிழ்ச்சி யுடன் வந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.

***

வீரப்பனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. எப்படியாவது அந்தப் புலியைக் கொன்றுவிட்டுத் தான் அந்தக் கிராமத்தைக் விட்டுக் கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தான்.

ஒரு வாரம் ஓடி மறைந்தது !

வீரப்பனின் வேட்டை முடியவில்லை. கொல்ல நினைத்த புலியைக் கண்ணால்கூடப் பார்க்க முடிய வில்லை. குளத்திற்குத் தண்ணீர் குடிக்கக்கூட வராமல் அது எங்கே செல்கிறது என்பதும் புரியவில்லை.

ஒரு நாள் பகல் நேரம்.

வீரப்பனும், அவன் ஆட்களும் சாப்பிட்டபிறகு, அன்று இரவு எந்த இடத்தில் பரண் அமைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.

பிறகு ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அங்கே புதர்கள் அடர்ந்திருந்தன. அங்கிருந்த ஒரு மரத்தில் பரண் அமைக்க முடிவு செய்தனர்.

திடீரென்று வீரப்பனது ஆட்களில் ஒருவன், “சார், கொஞ்சம் பேசாமல் இருங்கள். ஏதோ சத்தம் கேட்கிறது ” என்றான்.

உடனே அனைவரும் உற்றுக் கேட்டனர். ‘சல சல’ வென்று சத்தம் கேட்டது. “சார், புலியின் காலடி ஓசை இப்படித்தானே கேட்கும் ?” என்றான் ஒருவன். வீரப்பன் தன் கையிலிருந்த துப்பாக்கியை இறுகப் பிடித்தான். மற்றவர்கள் கையிலும் துப்பாக்கிகள் இருந்தன.

கேட்ட சத்தம் நெருங்கி வரவில்லை. ஆனால், தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. புதருக்கு மறுபுறம் இருப்பதை அவர்களால் பார்க்கவும் முடிய வில்லை. அதனால், ஐவரும் பிரிந்து புதரைச் சுற்றிக் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

ஐந்து பேரும் அடிமேல் அடி வைத்து, மெல்ல நடந்தனர். புதரைச் சுற்றிக்கொண்டு மறுபுறம் சென்றனர்.

அங்கே ஓர் உருவம் இருந்தது. ஆனால், புலி யல்ல; கிராமத்துச் சிறுவன் சின்னய்யன் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் வீரப்பனுக்கும் மற்றவர்களுக்கும் ஏமாற்றமாயிருந்தது. அவர்களுக்கும் சிறுவன்மேல் கோபம் வந்துவிட்டது.

“டேய்!” என்று அதட்டிய குரலில் அழைத்தான் வீரப்பன்.

சுள்ளி பொறுக்குவதில் முனைந்திருந்த சின்னய் யன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவன்முன் வேட்டை வீரர்கள் துப்பாக்கியை முன்னால் நீட்டிய வாறு நின்றுகொண்டிருந்தனர்.

“டேய், பையா! இங்கே என்னடா செய்கிறாய்?” என்று வீரப்பன் கேட்டான்.

”சுள்ளி பொறுக்குகிறேன்.”

“சுள்ளி பொறுக்குகிறாயா! இந்தக் காட்டில் புலி இருக்கிறதே! இந்தப் பக்கம் வரவே எல்லோரும் பயப்படுகிறார்கள். உனக்குப் பயமே இல்லையா!” வீரப்பன் ஆச்சரியத்துடன் கேட்டான். சின்னய்யன் அலட்சியத்துடன், “இல்லை” என்றான்.

”ஏன்? நீ வீராதி வீரனா?” என்று கேட்டான் வீரப்பன்.

இல்லை! ஆனால், இல்லாத ஒன்றைப்பற்றி நான் ஏன் பயப்பட வேண்டும் ?*

சின்னய்யனின் பதில் பதில் வீரப்பனுக்குப் புதிராயிருந்தது.

“இல்லாத ஒன்றா!” என்று கேட்டான் வீரப்பன்.

“ஆமாம்.”

“நீ எதைக் குறிப்பிடுகிறாய்?”

“நீங்கள் வேட்டையாட வந்திருக்கும் புலியை!”

“அப்படி யென்றால் இந்தக் காட்டில் புலியே இல்லையா?”

“இல்லவே இல்லை!”

“ஊரார் கூறினார்களே?”

“ஆம். அது வெறும் கதை”

“கதையா! நிஜமாகவா!”

“நான் கட்டிவிட்ட கதைதான்!”

சின்னய்யன் இப்படிச் சொன்னதும், வீரப்பன் திகைத்தான். “நீ கதை கட்டிவிட்டாயா ? ஏன் ? அதனால் உனக்கென்ன லாபம்?” என்று கேட்டான். சின்னய்யன் சிரித்துக்கொண்டே சொல்ல ஆரம்பித்தான்:

“நான் ஏழை. என் அம்மாவை நான் தான் காப்பாற்ற வேண்டும். இந்தக் காட்டில் சுள்ளி பொறுக்கி, அதை விற்றுப் பிழைத்தேன். நல்ல வருமானம் கிடைத்தது. உடனே, தொழிலுக்குப் போட்டி முளைத்தது. பலர் என் வேலையைச் செய்யத் தொடங்கினர். அதனால், எனக்கு அதிகச் சுள்ளி கிடைக்காததுடன், விலையும் குறைவாகக் கிடைத்தது. கோடி வீட்டுக் குப்புப் பாட்டிதான் என்னோடு அதிகமாகப் போட்டி போட்டாள். ஒருநாள் நான் அவளிடம், ‘இந்தக் காட்டில் புலி இருக்கிறது. நான் என் கண்ணாலே பார்த்தேன்’ என்று விளையாட்டுக்குச் சொன்னேன். உடனே அவள் புலியைக் கண்டதாக எல்லோரிடமும் கூறினாள். பலர் தாங்களும் கண்டதாகப் புளுகுகிறார்கள். எனக்குப் போட்டியாகச் சுள்ளி பொறுக்க வருவோர் நின்றுவிட்டனர். பழையபடி என் வேலை நன்றாக நடக்கிறது” என்று முடித்தான் சின்னய்யன்.

வீரப்பன், “அட இழவே!” என்று வாய்விட்டுக் கத்தினான். அவனது ஆட்கள், இல்லாத புலியைக் கொல்ல எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டனர் என்பதை நினைத்துப் பார்த்தனர். உடனே சிரிப்புத்தான் வந்தது!

– அன்புத் தாத்தா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரி நிலையம், சென்னை.

முனைவர் பூவண்ணன் பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். பூவண்ணன் - Tamil Wiki நேர்காணல்: டாக்டர் பூவண்ணன் (2005) http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1072 பூவண்ணன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *