உள்ளே நுழையலாகாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 64 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்னை மூர்மார்க்கெட்டுக்கு எதிரே, நடைபாதையில், ஒரு யுவதி சென்றுகொண்டிருந்தாள். அவளுக்குச் சுமார் இருபத்தைந்து வயசு இருக்கலாம். நல்ல கட்டு வாய்ந்த உடல்; அழகிய தோற்றம். தலையில் தொப்பி முதற் கொண்டு கால்களில் உயர்குதி ஜோடுகள் வரை, அவள் மேல்நாட்டு நவநாகரிக உடை அணிந்திருந்தாள். அவளுடைய நடையில் ஒரு நளினம், ஒரு நாஸுக்கு அவள் ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்பொழுதும், ஒரு பூங்கொடி காற்றில் அசைந்தாடுவதுபோலத் தோன்றி யது. பாதையில் போகும் ஆடவரும் பெண்டிரும் அவள் உடலழகையும் நடையழகையும் பருகிய வண்ணமே சென்றார்கள். 

எதிர்த்த பக்கத்தில் சென்றுகொண்டிருந்த வாலிபன் ஒருவன் அவளைக் கண்டதும் சற்றுத் திகைத்து நின்றான். பின்பு, “ஆம், லீலாதான்” என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, ஹலோ! மிஸ் லீலா! இங்கிலாந்திலிருந்து எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டான். “நமஸ்காரம், மிஸ்டர் வாசன்! நேற்றுக் காலைதான் பம்பாய் மெயிலில் சென்னை வந்து சேர்ந்தேன்” என்று சொல்லிக்கொண்டே தன் பழைய நண்பனைச் சந்திப்ப தற்காக அவனை நோக்கி எதிர்த்த பக்கம் ஓடினாள். நடுவில் டிராம் லயன். அதைக் கடந்து செல்லவேண்டும். து தண்டவாளத்தை அணுகியதும், அவள் சட்டென்று நின்றாள். கையில் தொங்கிக்கொண்டிருந்த பையில் ஏதோ தேடுபவள் போல் காணப்பட்டது. அத்துடன் மித்திரன் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் சஞ்சலக் குறிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏதோ ஒரு போராட் டத்தில் ஈடுபட்டிருப்பவள் போலக் காணப்பட்டாள். அப்பொழுது சற்றுத் தூரத்தில் ஒரு டிராம் வரும் சத்தம் கேட்டது. யுவதியின் சஞ்சலம் அதிகரித்தது. போராட்டம் முன்னைவிட மும்முரமாக நடந்தது. வாலிபன் இவை ஒன்றையும் கவனியாமல், வெகுநாட் களுக்கப்புறம் சந்தித்த தன் சிநேகிதியினிடம் கேள் வி மேல் கேள்வி போட்டுக்கொண்டே போனான். ஆறு வருஷங்களாய்ப் பிரிந்திருந்த சிநேகிதியை அன்று புதிதாய்ச் சந்திக்கும்பொழுது கேள்விகளுக்கு என்ன குறைவு? இதற்குள் டிராம் நெருங்கிவிட்டது. டிராம் டிரைவரைப் பார்த்து யுவதி புன்னகை செய்துகொண்டே, பின்னும் அவசர அவசரமாய்ப் பைக்குள் தேட ஆரம் பித்தாள். ‘டிராம் வருவதைத்தான் பார்த்துக்கொண்டா ளல்லவா, விலகிவிடுவாள்’ என்று நினைத்து, டிரைவர் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு வந்தான். அதிகச் சமீபத்தில் டிராம் வந்துவிட்டதைக் கவனித்த மிஸ்டர் வாசன், “டிராம் வந்துவிட்டது லீலா. அதை இங்கே வந்து தேடிக்கொள்ளலாம், ஓடிவா!” என்று கத்தினான். ஆனால் அவள் அவனுடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தியதாய்த் தெரியவில்லை. டிராம் வெகு சமீபத்தில் வந்துவிட்டது. இரண்டு விநாடிகளில் அவள் மீது ஏறிவிடும்! திடீரென்று கையில் இருந்த பையை வீசி எறிந்துவிட்டு,கால் ஜோட்டைக் கழற்ற யத்தனித்தாள். அதற்குள் டிராம் அவள்மீது ஏறிவிட்டது! “ஐயோ! இந்தப் பாழும் ஜோட்டின் குதியானது தண்டவாள இடுக்கில் மாட்டிக்கொண்டதே!” என்று கதறிக் கீழே விழுந்தாள். 

டிராம் லயனை அவள் தாண்டி வருகையில்,கால் ஜோட்டின் குதி ஒன்று தண்டவாள இடுக்கில் சிக்கிக் கொண்டது. அதை வெளியில் காட்ட வெட்கப்பட்டு, பையில் ஏதோ தேடுபவள்போல் பாவனை செய்துகொண்டு சற்று நின்றால் அதை விடுவித்துக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறு மாதிரி இருந்தது! 

டிராமில் நசுக்குண்ட யுவதியைச் சுற்றிப் பெருங் கூட்டம் கூடிவிட்டது. போலீஸார் வந்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு பார்த்தபொழுது. அவள் உயிர் இருந்தது! உடனே ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு சென்று, எதிர்பாராத விபத்துக்களுக்கென்று ஏற்பட்ட வார்டில் அவளை அநுமதித்தார்கள். முழங் கால்களுக்குச் சற்று மேலே, கால்கள் இரண்டும் நன்றாய் அரைபட்டிருந்தன. தவிர அவள் கீழே விழும்போது ஏற்பட்ட சில சில்லறைக் காயங்கள் இருந்தன. வேறொன்றுமில்லை. ஆகையினால் கால்களைத் துண்டித்து எடுத்துவிட்டு உடனே சிகிச்சை செய்தால் ஒருவேளை பிழைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கை ஏற்பட்ட தால், அந்த வார்டின் பொறுப்பில் இருந்த ஹவுஸ் ஸர்ஜன், “மிஸ் சாந்தா!” என்று கூப்பிட்டார். “ஏன்?” என்று ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.”இதோ! ஒரு அவசரக் கேஸ் வந்திருக்கிறது. நீ போய் ஸீனியர் ஸர்ஜனைச் சீக்கிரம் அழைத்து வா என்றார் ஹவுஸ் ஸர்ஜன். கட்டிலிலே கிடக்கும் உருவத்தைக் கண்டவுடன் நர்ஸ் திடுக்கிட்டு, “ஹா ! மிஸ் லீலா என்று கூச்சலிட்டாள். 

“என்ன, மிஸ் சாந்தா! இவள் உனக்குச் சொந்தமா?” என்று டாக்டர் கேட்டார். 

அந்தக் கேள்விக்கு ஒன்றும் பதில் சொல்லாமல், ஸீனியர் ஸர்ஜனை அழைத்துவர அவசரமாய் ஓடினாள் நர்ஸ். 

சென்னையில் டாக்டர் விசுவநாதனை அறியாதார் எவருமே இல்லை. ரண வைத்தியத்தில் நிபுணர். ஜெனரல் ஆஸ்பத்திரியில் ஸீனியர் ஸர்ஜனாக இருந்தார். அவர் தாம் அவ்வேலைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். ஆஸ்பத்திரியில் கிடைத்த இரண்டாயிர ரூபாய் சம்பளத்திற்கு மேல் சொந்தத் தொழிலில் அவருக்குக் குறைந்த பக்ஷம் மாதம் பதினாயிரம் ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்தது. 

நர்ஸ் அவரை அழைத்துவரச் சென்றபொழுது, அவர் ஆபரேஷன் அறையில் இருந்தார். அன்று ஒரு பிரபல ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தது. பெருந்தன்மையும் கண்ணியமும் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் விதவை ஒருத்திக்கு இருந்தாற் போலிருந்து, வயிறு கனக்க ஆரம்பித்தது. நாளுக்கு நாள் வயிறு பருக்கவே, அவள் கர்ப்பமாகிவிட்டாள் என்று ஊரில் அநேக வதந்திகள் பரவ ஆரம்பித்தன. பாவம்! அவள் என்ன செய்வாள்? வயிறு கனத்த காரணம் அவளுக்கு விளங்கவில்லை.ஊரார் பேசும் நிந்தை வார்த்தைகளையோ சகிக்க மனமும் இல்லை. ஆஸ்பத்திரியில் ஆரேஷன் செய்தாவது பார்த்துவிடுவது என்று தீர்மானித்தாள். அந்த ஆபரேஷன்தான் அன்று நடந்துகொண்டிருந்தது; விசுவநாதன் வயிற்றைக் கீறிக்கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய உதவிக்கு இரண்டு மூன்று அஸிஸ்டெண்ட் ஸர்ஜன்களும், நர்ஸ்களும் நின்றார்கள். 

அவசர அவசரமாக உள்ளே நுழைந்த மிஸ் சாந்தா சற்றுத் தயங்கி நின்றாள். டாக்டர் விசுவநாதன் மிகக் கண்டிப்பானவர்.அவர் ஏதாவது வேலை செய்துகொண்டு இருக்கும்பொழுது, யாரேனும் நடுவில் குறுக்கிட்டால், அவர்கள் கதி அதோகதிதான். ஆனால் இத்தகைய விசேஷ சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்வது? இந்த அவசரக் கேஸைப்பற்றி அவரிடத்தில் சொல்லலாமா, கூடாதா? சொன்னால் இப்பொழுது வருவாரா? மிகவும் கண்டிப்பானவராச்சே? பக்கத்தில் நின்ற அஸிஸ்டெண்ட் ஸர்ஜன் மூலமாகவாவது அவருக்கு விஷயத்தைத் தெரிவிக்கலாம் என்று, உதவிக்காக நின்றுகொண்டிருந்த டாக்டர்களின் பக்கத்தில் சென்று, ‘குசு, குசு’ வென்று ஏதோ கூறினாள். உடனே அவர் வெகு ஆச்சரியத்துடன் நர்ஸை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பின்பு டாக்டர் விசுவநாதனையும் ஒரு முறை பார்த்தார். ஆனால் டாக்டரிடம் விஷயத்தைச் சொல்ல அவருக்குத் தைரிய மில்லை. மிகப் பரிதாபத்துடன் நர்ஸ் அவருடைய முகத்தை நோக்கினாள். ஆனால் அங்கிருந்து அவளுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஒருவருடைய ஆபத்தில் உதவுவதற்கும் மனிதர்களுக்குத் தைரியம் வேண்டுமல்லவா? பாவம்! நர்ஸ் என்ன செய்வாள்? டாக்டர் விசுவநாதனிடம் தானே விஷயத்தைச் சொல்லிவிடலாம் என்று தீர்மானித்தாள். 

“டாக்டர்! டிராமில்………” என்று சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் டாக்டர் விசுவநாதன் மிகுந்த சீற்றத்துடன் கர்ஜிக்கத் தொடங்கிவிட்டார்: “நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது உனக்குத் தெரியவில்லையா? எத்தகைய அவசரக் கேஸ் ஆனாலும் சரி, ஒரு மணி நேரம் காத்திருக்கட்டும்.” 

அந்த அவசரக் கேஸ் ஒரு மணி நேரம் காத்திருக்க முடியுமா? அதற்குள் என்ன ஆகி விடுகிறதோ என்று அஞ்சினாள் நர்ஸ். கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையையும் இழந்துவிட்டாள். இன்னொரு முறை முயன்று பார்க்கலாம் என்று நினைத்து, ”டாக்டர்! ஒரு உயிர்….” என்று ஆரம்பித்தாள். 

“உயிர்! அதுதான் உயிர். இது உனக்கு உயிராய்த் தெரியவில்லையோ? மூடு, வாயை” என்று டாக்டர் முழங்கினார். 

நர்ஸுக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. “அஸிஸ்டெண்டுகளிடம் ஒப்பித்துவிட்டு வரக் கூடாதோ? எல்லாம் இறைவன் செயல்; அவன் கிருபை அல்லவா வேண்டும்? நாம் என்ன செய்ய முடியும்?” என்று முனகிக்கொண்டே நர்ஸ் ஆபரேஷன் அறையை விட்டு வெளியேறினாள். 

ஹவுஸ் ஸர்ஜன் டாக்டர் விசுவநாதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மிஸ் சாந்தா ஓடோடியும் வந்து, “டாக்டர் ஆபரேஷன் செய்துகொண்டிருக்கிறார். அவர் வர இன்னும் ஒரு மணிநேரம் ஆகும். அதற்குள் நம்மால் ஆனதைப் பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே ஒரு பீங்கான் பாத்திரத்தில் தண்ணீர், பஞ்சு, மருந்துப் பெட்டி முதலியவைகளை எடுத்துவந்தாள். 

நர்ஸுக்கு இருந்த ஆத்திரத்தையும் அவசரத்தையும் கண்ட ஹவுஸ் ஸர்ஜன், டிராமில் நசுக்குண்ட அந்தப் பெண் அவளுக்கு நெருங்கிய சொந்தமாக இருக்கலாம் என்று நிச்சயித்துக்கொண்டு, சற்றுக் கவலையுடனேயே சிகிச்சை செய்ய ஆரம்பித்தார். 

“சீமையிலிருந்து டாக்டர் பரீக்ஷை பாஸ் பண்ணி விட்டு நேற்றுத்தான் வந்தாள். அதற்குள் இவளுக்கு இந்தக் கதியா நேரிடவேண்டும்!” என்று நர்ஸ் பிரலாபித்தாள். 

‘இவள் யார், உனக்கு எப்படிச் சொந்தம்?’ எனக் கேட்டுவிடலாமா என்று ஹவுஸ் ஸர்ஜன் நினைத்தார். ஆனால் அவள் முகத்தில் தோன்றிய சஞ்சலத்தையும் கலவரத்தையும் நோக்கியபொழுது, அவருக்கு ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. பேசாமல் காயங்களைக் கழுவிக் கட்டத் தொடங்கினார். 

காயங்களெல்லாம் கட்டியாகிவிட்டது. ஆனால் நோயாளியின் நிலைமை இன்னும் திருப்திகரமாக இல்லை. ”மிஸ் சாந்தா! இன்னொரு தடவை சென்று, நிலைமை மிக மோசமாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு வருகிறாயா?” என்று ஹவுஸ் ஸர்ஜன் சொன்னார். 

அவளுக்குப் போவதற்கு இஷ்டமில்லை. முன்பே டாக்டர் வெகு கோபமாக இருக்கிறார்; மறுபடியும் போனால் என்ன செய்வாரோ என்று நினைத்தாள். எனினும் ஆத்திரம் யாரை விட்டது? ஒருவேளை அவர் வரச் சம்மதித்தாலும் சம்மதிக்கலாம் என்று எண்ணி ஆபரேஷன் அறையை நோக்கிச் சென்றாள். மிகுந்த தயக்கத்துடன் உள்ளே போனாள். அவள் அதிருஷ்டம் இருந்தவாறென்ன? டாக்டர் விசுவநாதனை அங்கே காண வில்லை. ஒரு நோயாளி மிகுந்த ஆபத்தான நிலைமையில் இருப்பதாக ஐரோப்பிய வார்டிலிருந்து அவசரச் செய்தி வந்ததாகவும், அதைக் கவனிக்கச் சென்று விட்டதாகவும் தெரிந்தது. விதவையின் வயிற்று ஆபரேஷன் அஸிஸ்டெண்ட்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நர்ஸ் நிராசையுடன் திரும்பினாள். 

ஏறக்குறைய ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். ஐரோப்பிய வார்டிலிருந்து ஒரு நர்ஸ் வந்தாள். “மிஸ் ஜேம்ஸ், டாக்டர் விசுவநாதன் எங்கு இருக்கிறார்?” என்று மிஸ் சாந்தா ஆவலுடன் கேட்டாள். 

“இப்பத்தான் சாப்பிடுவதற்காக அவருடைய அறைக்குச் சென்றார். ” 

“டாக்டர்! கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். நான் போய் அவரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு நர்ஸ் ஓடினாள். 

“போகட்டும். இன்று இவளுடைய வேலைக்கு அநர்த்தம் பிடித்துவிட்டது. டாக்டர் விசுவநாதனுடைய குணம் இன்னும் இவளுக்குத் தெரியாது போலும்” என்றாள் மிஸ் ஜேம்ஸ். 

“இல்லை மிஸ் ஜேம்ஸ்! யாரோ அவளுக்கு நெருங்கிய உறவினள் ஒருத்தி டிராமில் அடிபட்டு வந்திருக்கிறாள். ஆகையினால்தான் இப்படி ஆத்திரப்படுகிறாள்” என்றார் ஹவுஸ் ஸர்ஜன். 

டாக்டர் விசுவநாதன் அறைக்குள் மிஸ் சாந்தா அவசரமாய் நுழைந்தபொழுது, அவர் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டிருந்தார். மேஜையின் மீதிருந்த பீங்கான் தட்டத்தில் பணியாள் சாதம் பரிமாறிக்கொண்டிருந்தான். 

“டாக்டர்!” என்று மெதுவாகக் கூப்பிட்டாள் நர்ஸ். 

விசுவநாதன் ஏறிட்டுப் பார்த்தார். மிஸ் சாந்தாவைக் கண்டதும் அவருடைய கண்களில் கோபத்தீ ஜ்வாலை வீசியது. அன்று அவர் டாக்டராக இல்லை. “யாருடைய அநுமதியின் பேரில் உள்ளே வந்தாய்? ‘உள்ளே நுழையக் கூடாது’ என்று வாசலில் போர்டு போட்டிருக்கிறதைப் பார்த்தாயா, இல்லையா?” 

“டாக்டர்! அந்த அவசரக் கேஸ்…”

”போ வெளியே! அவசரக் கேஸாயிருந்தால் என்ன? டாக்டர் வேலை பார்த்தால், சாப்பாட்டு நேரத்தில் சாப்பிடவுமா உரிமை இல்லை?” 

“ஆனால்….” என்று பேச வாயெடுத்தாள் நர்ஸ். 

“மூடு வாயை! எல்லாம் எனக்குத் தெரியும்! இப்பொழுது என்னால் வரமுடியாது.” 

அங்கு ஓர் உயிர் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறது; இங்கு டாக்டர் சாவகாசமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று உள்ளம் கொதித்து நர்ஸ் வெளியேறினாள். 

“நானும் பதினாறு வருஷம் டாக்டர் வேலை பார்த்து விட்டேன். வருஷமெல்லாம் அவசரக் கேஸ், மாத மெல்லாம் அவசரக் கேஸ், நாளெல்லாம் அவசரக் கேஸ்! நாள் தவறினாலும் அவசரக் கேஸ் தவறுவதில்லை. ஒரு நாளாவது வயிராறச் சாப்பிட்டோம். நிம்மதியாய்த் தூங்கினோம் என்று கிடையாது, நாசமாய்ப்போன டாக்டர் வேலை!” என்று தம் தொழிலை நொந்து கொண்டார் விசுவநாதன். 

நர்ஸ் வார்டுக்குச் சென்று பார்த்தாள். நிமிஷந் தோறும் மிஸ் லீலாவின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து கொண்டிருந்தது. அந்தப் பரிதாபக் காட்சியை அவளால் பார்க்கச் சகிக்கவில்லை. ஆதிகாலத்தில் ஹனுமார் சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள்; ஆனால் என்னால் இந்த உயிருள்ள சஞ்சீவியின் கல் நெஞ்சைக் கரைக்க முடியவில்லையே என்று தன்னை நொந்துகொண்டாள் போலும்! “ஆனால் இன்னும் உண்மையை டாக்டருக்குத் தெரியப்படுத்தவில்லையே? தெரிவித்தால் ஒருவேளை… ஒருவேளை ஏன்? கட்டாயம்… தெரிவிக்காதது என் குற்றமல்லவா? இப்பொழுது போய் எப்படியாவது சொல்லிவிட்டு வருகிறேன்” என்று தீர்மானித்துக்கொண்டு டாக்டருடைய அறைக்கு மறுபடியும் ஓடினாள். ஆனால் வாசலை அணுகியதும், அவளுடைய தைரியமெல்லாம் பறந்துவிட்டது. அங்கே தொங்கிக்கொண்டிருந்த போர்டில் உள்ள எழுத்து ஒவ்வொன்றும், அவளுடைய கால்களுக்கு ஒரு விலங்கு பூட்டுவதுபோல இருந்தது. அதனுடன் டாக்டர் கூறிய வார்த்தைகளும் அவளுக்கு ஞாபகம் வந்தன. “ஆண்டவன் உன் தலையில் இப்படியா எழுதினான்!” என்று சொல்லிக்கொண்டு அப்படியே திரும்பிவிட்டாள். 

ஐந்து நிமிஷங்கள் கழிந்தன; பத்து நிமிஷங்கள்; பதினைந்து நிமிஷங்கள் கழிந்தன. ஒவ்வொரு நிமிஷமும் நர்ஸுக்கு ஒரு யுகம்போல் தோன்றியது. டாக்டருடைய சாப்பாடு முடிந்திருக்கும்; இந்த நிமிஷம் வந்து விடுவார், அடுத்த நிமிஷம் வந்துவிடுவார் என்று வாசலை எட்டி எட்டிப் பார்த்தாள். ஆனால் அவர் வந்தபாடில்லை. நிமிஷத்திற்கு நிமிஷம் லீலாவின் நிலைமை மோசமாகிக் கொண்டு வந்தது. அவளுடைய ஹ்ருதயத்தின் மீது நர்ஸ் கைவைத்துப் பார்த்துத் திகிலடைந்தாள். நர்ஸின் மனம் துடித்தது. ஒரு கணமேனும் அவளுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒரே ஓட்டமாய் ஓடினாள். அறையை அணுகியபோது உள்ளே இடி இடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு சற்றுத் தயங்கினாள். “அவசரக் கேஸ்களை எல்லாம் ஒன்று தவறாமல், டாக்டர் காப்பாற்றிவிட்டால் ருத்திரமூர்த்தியின் சம்ஹாரத் தொழில்தான் எப்படி நடப்பதென்று தெரியவில்லையே! இன்றைச் சம்பவத்தைத்தான் எடுத்துக்கொள். எவனோ ஒருவன் காரில் அடிபட்டோ, டிராமில் நசுக்குண்டோ கிடக்கிறான். கிடந்தால் என்ன கெட்டுப்போய்விட்டது? இந்தியாவில் இருக்கும் அடிமைகளின் தொகையில் ஒன்று குறைந்தது!” என்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, தமக்குத் தாமே பேசிக்கொண்டிருந்தார் டாக்டர். 

“ஐயோ! அது உங்கள் மகள் லீலாவல்லவா டாக்டர்! சீக்கிரம் வாருங்களேன்!” என்று வெளியில் இருந்தவாறே நர்ஸ் கூச்சலிட்டாள். அவள் உள்ளே நுழையலாகாது அல்லவா! 

“என்ன! என்ன சொன்னாய்? என் மகளா? லீலாவா? அவளுக்கு என்ன? ஐயோ! மோசம் போனேனே!” என்று கதறிக்கொண்டு ஓடிவந்தார் விசுவநாதன். 

“லீலா! லீலா!” என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் விசுவநாதன். ஏதும் பதில் இல்லை. லீலாவின் கையைத் தொட்டுப் பார்த்தார். ஜில்லென்று இருந்தது. 

இந்தியாவிலுள்ள அடிமைகளின் தொகையில் ஒன்று குறைந்தது!

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *