பிள்ளையார் பிரமச்சாரி… ஏன்..?
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 32
(கதைப்பாடல்)

பெருமை மிக்க பிள்ளையார்
பிரம்மச் சாரி ஆனதேன்??
அருமை மிக்க அக்கதை
அறிந்து கொள்வோம் இக்கணம்!
பூனை ஒன்றைக் கையிலே
பிடித்துப் பாலப் பிள்ளையார்
கூர்மை மிக்க குச்சியால்
குத்தி விளையாடினார்!
அன்பு கொண்டு பார்வதி
அன்னம் உண்ண அழைத்திட
சின்ன பிளையாராவர்
அன்னை தன்னை நெருங்கினார்!
அன்னை அவரின் முகத்திலோ
அங்குமிங்கும் காயங்கள்.,
அந்தக் காயம் யாவிலும்
பெருகி ரத்தம் வழிந்ததாம்!
பதறிப்போனார் பிள்ளையார்
பார்வதியாம் அன்னையைப்
பார்த்துக் கேட்டார் பயத்துடன்:
‘அம்மா உனது முகமெங்கும்
அங்கும் இங்கும் காயமேன்?
என்று கேட்க, அன்னையார்
‘எல்லாம் உன் செயல்!’ என்றிட
‘என்ன தவறு நான்செய்தேன்?!
எடுத்துச் சொல்வாய்!’ என்றதும்
‘சின்னப் பூனை உடலெங்கும்
செய்த சேட்டைப் பலனிது..!’
அன்னை சொல்ல, பிள்ளையார்
‘பூனை தன்னைத் தானேநான்
குத்திச் சேட்டை பண்ணினேன்?!’
உனக்குக் காயம் ஏனென்றார்?!’
‘அகில உலக உயிர்களுள்
அன்னை நானே வாழ்கிறேன்!’
ஊறுசெய்தால் அவற்றையே
உறுத்தும் என்னை என்றனள்.
‘அகில உலக உயிர்களில்
அன்னை வாழ்வ துண்மையேல்….
உலகப்பெண்ணில் யாரைநான்
உவந்து மணந்து கொள்ளுவேன்??!’…
எவ்வுயிரும் அன்னையாய்
எண்ணுகின்றேன்! என்றும்நான்
இவ்வுலகில் ஆதலால்
இருப்பேன் பிரம்மச்சாரியாய்!
என்று சொல்லி யாரையும்
மணமுடிக்க வில்லையாம்!!.
திருமணத்தை வேண்டி அவர்
திருவடிகள் பணிந்திடின்
விரைந்தவர்க்குத் திருமணம்
நடத்தி வைப்பார் பிள்ளையார்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
