விசுவரூப நாடகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: November 9, 2025
பார்வையிட்டோர்: 72 
 
 

(1954ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகம் நம் எதிரே தோன்றுகிறது. காலையில் கடலருகே விழித்தெழுகிறோம். என்ன அழகு ! செக்கச்- சிவந்த செவ்வானம் கதிரவனை எதிர்கொண்டழைக்க அமைத்த தோரணக் கோலமாகக் காட்சி அளிக்கிறது. மிகப் பரந்த கடல் – அப்பாலைய கரையே தெரியாது முடிவிலாது ஓடும் கடல் – இமய மலையையே தன்னுள் மறைத்து விழுங்கிவிடக் கூடிய பேராழம் மிக்க பெருங்- கடல், அதோ எதிரில் தோன்றுகிறது. அதனோடு சேர்ந்தாற்போல அதனைத் தொட்டுக்கொண்டு மேலே நீல வானம், கண்ட இடமெல்லாம் கண்குளிரக் காட்சி அளிக்கிறது. நிறை திங்கள் முற்றி நிற்கிற திருநாள் இன்று! கண்குளிரக் காணும் பைங்கதிர்ச் செல்வனாம் சந்திரன், மேலைப் புறத்தில் மறைந்துகொண்டிருக்கிறான். கீழைக் கடலின் வண்ணப் பெருமுகட்டில் உலகுக்கெல்லாம் ஒரு கண்ணாம் சூரியன் எழுகின்றான். ஒருங்கு நிற்கும் இருகண் என இவை தோன்றுகின்றன. கதிரவனார் ஒளி பட்டதும் புத்துயிர் பெற்று உலகம் எழுகிறது. பறவை- கள் பாடுகின்றன. விலங்குகள் மூரிவிட் டெழுகின்றன. மக்கள் தத்தம் தொழிலின்மேல் செல்கின்றனர். ஒளி- குன்றி இருட்டிக்கிடந்த உலகம், பல பல நிறங்களுடனும் பலபல வடிவங்களுடனும், மெல்ல மெல்லப் பனிப் படலத்- திரையை நீக்கிக்கொண்டு தோன்றுகிறது. 

இவ்வாறு எல்லோரும் ஒன்றாக விழித்து, ஒன்றாகப் புற இருள் நீங்கப்பெற்று விளங்குகின்றனர்; எல்லாம் விளங்குகின்றன. இப்படி, ஓர் ஒற்றுமை எங்கும் வெளி- யாகிற வியப்பில் நாம் மூழ்குகிறோம். இந்த அற்புதச் சக்தி, கதிரவனாய் எதிரே வடிவம்கொண்டு, நம்மை வாழ். வித்துக் காட்சி அளிக்கிறது. அம்மட்டுமா? குழவிப் பருவம்முதல் நாம் வளர்ந்த வளர்ச்சியும், நாம் அறிவோம் அன்றோ? கருவிலிருந்த குழவிக்கும் கம்பனுக்கும் என்ன வேற்றுமை! என்ன வேற்றுமை ! புன்னுனைப் பனிபோல நின்ற உயிர்ச்சாறு, கம்பராய், வள்ளுவராய், சேக்கிழாராய், தொல்காப்பியராய் வளர்ந்த வளர்ச்சி, கடவுள் வளர்ச்சியே ஆம். நம் முயற்சியால் எழுந்ததோ நம் வளர்ச்சி? நாம் அறிவோமா நம் மயிர்த்துளையின் எண்ணிக்கையை ? தம் உடலமைப்பின் விசித்திரத்தினையேனும் முற்றும் அறிந்- தோர் யார்? 

இதனை வளரும் மரமும் அறியாது ; நாமும் அறியோம்; சக்தியே அறியும்.உலகில், எங்கும் என்றும், இந்த வியத்தகு செயலைக் காண்கிறோம். சிறுமீன் சினையினும் சிறியதான ஆலம் வித்தும், பெரியதொரு மரமாய் வளர்ந்து, அரசர்கள் தம் பெரும்படையும் உள்ளடங்கித் தங்க நிழல் தரவில்லையா? ஒரு புல்நுனைப் பனிநீர்த் துளிபோன்ற கரு, யானையாகவும் திமிங்கிலமாக வும் பெருகவில்லையா? எங்கும் ஒரே சக்தி இவ்வாறு இயங்குகின்றது:மலையின் பெருமை திண்மை – வானத்தின் பரப்பு நிறைவு-நீரின் தன்மை நெகிழ்ச்சி- மின்னலின் விளக்கம் ஆற்றல்-அணுக்குண்டு வெளியிடும் பரமாணு- வின் ஊழிக்கூத்து-இவை எல்லாம் அந்த அற்புதச் சக்தியின் பேராற்றற் பெருவெள்ளமே ஆம். பலநிறம் கொண்டு பலபல வடிவாய்ப் பலபல மணத்துடன் தேன். விருந்து ஊட்டும் மலர்களின் அழகே அழகு! செவ்வா- னத்தின் செவ்விய அழகு-மானின் மருண்ட பார்வை- யில் வெள்ளமிடும் அழகு-மயிலின் தோகையோடு- விரியும் அழகு -பெண்ணின் ஐம்புல விருந்தாம் பேரழகு- இவை எல்லாம் அந்த அற்புதச்சத்தியின் அன்புவெள்ளம். அந்தச் சக்தியே தாய்மையாய் உலகினை வளர்க்கிறது. அம்மையப்பன் என இவ்வாறு ஆற்றலும் அன்புமாய் நிறைந்த பெரும்பொருளைப் போற்றலாகாதா? 

இவ்வாறு உயிருள்ள பொருளிலும் உயிரில்லாப் பொருளிலும் ஒருங்கு நிறைந்து நீக்கமற நிறைகின்ற இந்த ஒற்றுமைக் காட்சியை என் என்பது? இதனையே விசுவரூப தரிசனம் என்பர் முன்னோர்: இதனை அருச்சுனன் கண்ணனிடம் கண்டான்; கொடிய சூரபன்- மனும் போர்க்களத்தில் எதிர் நின்ற முருகனிடம் கண்டான். பெருந்தேவனார் என்ற பெரும் புலவரும் காண்கிறார் இந்த ஒற்றுமைக் காட்சியை. அவர் கண்ணாக இந்த நாடகத்தை நாமும் காண்போம். 

கடலையும் தாங்கி நிற்கும் கற்றரை, கண்ணுக்கும் தோன்றாது கடலடியில் பாதாளமே என்று சொல்லப்-படலாம்படி பரந்துகிடக்கும் பார்நிலம்- இதுவே, இம்மா- நிலமே எல்லாமாய் நிற்கும் பெரும்பொருளின் அடிநிலை: செவ்விய திருவடி; சேவடி. எல்லாம் நிற்பதற்குள்ள இடமே நிலம் எனப் பெயர்பெறும். சிவன் திருவடி அன்றோ அத்தகைய நிலையான இடம்? ஓரடியால் அம்- மண்ணினை அளந்தான் மாயன் என்று புராணம் பேச்- வில்லையா? கருத்தும் கலங்கும் ஆழத்தில், எங்கும் பரந்து,மேலும் கீழும் ஒன்றாக நிற்கும் நிலம்-நாம் காணும் தரையும், காணாத் தரையுமாம் இந்த நிலம் – இவ்வாறு விளங்குகின்ற காட்சி-மலையும் ஆழமுமாகக் கண்ணைக் கலக்கும் தோற்றம் – இஃதே ஆற்றலின் அடிப்படை. ஆனால், அங்கும் ஒரு செம்மை-ஓர் அழகு-ஒரு தாய்மை அன்பு – தோன்றுகிறது. அகழ்வாரைத் தாங்கும் நிலம் அன்றோ அஃது? அறிவும் ஆற்றலுமாம் அடிப்படையில் அனைத்தும் மலர்கின்றன. ஆனால், மலர்வது தாய்மை அருள். சேவடியின் அடிப்படை நிலையையும் செம்மையாம் அழகிய இன்ப அன்பினையும் இவ்வாறு உய்த்துணர் தல் வேண்டும். 

இயங்குகின்ற அப் பெரும்பொருள் எது ? அவன்- தான். அவன் உடுத்துக்கொள்ளும் உடையாம் ஆடை- யும் படபட என அசைகின்றது; முழங்குகிறது. ஆம் நம் காதுக்கும் கேட்கிறது. சேவடியைத் தீண்டி, மேலே, அதோ தோன்றுகிறது. செவ்வான் கதிரவன் ஒளியில் திகழும் நிலையே பொன்னாடை. அவனைப்போல அவ- னாடையும் அளவற்று எங்கும் விரிந்து கிடக்கிறது. பவ்வம் என்பது பரந்து கிடப்பது. எது அது ? கடலே ஆம். அதுவே அவன் ஆடை. சுருட்டுவது ஒரு மாய வானைப் பாயைப் போலச் வித்தை.நீரை வித்தை. நீரை ஆடையாகச் சுருட்டிக் கட்டிக் கோலம் கொள்ளுவதும் ஒரு மாய வித்தையே. அவன் உடுக்கும் உடுக்கை கடலே ஆம். நீரால் உலகினை அவன் வாழ்விக்கும் சிறப்பும் ஆற்றலும் இங்கே தோன்றவில்லையா? என்ன ஒளியான நீர் இது! கருங்கடல் நீர்! ஆனாலும், கையில் அள்ளினால் தெள்ளத் தெளிந்த நீர் – அற்புதம்! அற்புதம்! கடலருகே நிற்கும் நம்மீது கடவுள் நீரைத் தெளித்து நம் உள்ளமும் உயிரும் குளிர்ந்து தூய்மையாகும்படி தூவுகின்ற நீர் அன்றோ இஃது! இதோ இச் சிறு துளியில் சூரியனும் உலகமுமே நிழலிடுகின்றன. அழகே அழகு ! மழையாய்த் தூவுகின்ற நீரும் இந்தக் கடல்நீரே அன்றோ? 

அவனாம் அப் பெரும்பொருளின் இயக்கமும்கேட்டோம். உயிரிலாப் பொருள்கள் நின்ற நிலைக்கு மேலாக உயிருள்ள பொருள்கள் தோன்றி இயங்கி முழங்குகின்றன ; அப்- பெரும் பொருளின் ஆற்றலை முழங்குகின்றன. வளை- சங்கு – நரல்கிறது; ஒலிக்கின்றது: ஈதன்றோ கடலின் பெருமை! நமக்குக் கடல் தரும் பரிசில், அப் பேராற்றல் தரும் பரிசில், இப் பொருளுலக வாழ்க்கையே. முத்தும்- சங்குமாய்ப் பொருளுலக வாழ்வு பொலிவுபெற்று அழகு- பெற வில்லையா? 

கடல் என நிற்பது வெறும் தண்ணீர் அன்று.இயக் கமே வடிவமானது அது. காற்றும் நீரும் கலங்கி வீசும் அலைகளால் ஒளிர்வது கடல். அந்த அலைவீசும் தூகீர் அன்றோ நம்மேல் படுகிறது! எனவே, காற்றும் அங்கே தோன்றுகிறது. இயக்கமே காற்று என்ற பூதத்தின் வடிவம்; உயிரிடையே தோன்றும் பஞ்சப் பிராணனும் இயக்க வடிவமே ஆம். இயங்குகின்ற உயிர்களும் இங்கே முழங்குகின்றன. இயங்குகின்ற ஆட்சியின் கோலமன்றோ இவ்வாறு முழங்குகிறது? காற்றிடையே அன்றோ அந்த ஒலியும் பரவி நம் காதில் வந்துவிழுகிறது? 

காற்றினும் நுண்ணிதாக அமைந்த விசும்பே இவ்- வொலி அலை வீசும் இடம் என்பர் இந்நாளைய மக்கள். அந்த விசும்பே இவ் வொற்றுமைக் காட்சியில் தோன்றுகிறது. அரசர்க்கு அரசனாம் பெரும் பொருளின் சங்கொலி கேட்டோம். அவன் திருவுருவம் முழுதும் தோன்று- கிறது. பருப்பொருளின் நின்றும் நுண்பொருளில் செல்- கின்றேம். உருவத்தினைத் தாண்டி அருவத்தை எட்டு- கிறோம். எங்கும் நீக்கமற நிறைகின்ற வெட்டவெளி- வானம் விசும்பு – இதுவே அவனது திருமேனி. இந்த விசும்பு-இதுவே விசும்பு பூதாகாயமாய் மனோகாயமாய் சிதாகாயமாய் வளர்ந்தோங்கும். எந் நிலையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்த சிற்சுகோதயவிலாசம் இதுவே ஆம். வானத்தினை நீலவானத் தோற்றமாகக் கொண்டு அந்த நீலக் காட்சியே அவன் திருமேனி எனக் கண்ணுக்கரிய- வனைக் கண்டும் களிக்கலாம். நீலவானம் வெறுந் தோற்- றம். ஆனால் அழகிய கடவுட்காட்சி. அதற்கும் உள்ளாக அவனாக அப் பெரும் பொருளின் உண்மை வடிவம் ஒளிர்- கின்றது; விசும்பு மெய்யாகக் கொண்டு திகழ்கின்றது அஃது. 

எங்குமாய்ப் பரந்த இப் பெருவெளியை இடமாகக் கொண்டு விளங்குபவை எத்தனை எத்தனை விண்மீன்கள்? எத்தனை எத்தனை கோள்கள் ? அக் கோள்களில் எத்தனை எத்தனை உயிர்கள் ? முன் என்றும், பின் என்றும், மேல் என்றும், கீழ் என்றும், வலம் என்றும், இடம் என்றும் கற்பனைகள் பல எழுகின்றன. திசைகள் என்றும் பேசு-கின்றோம். பல பல உலகக் காட்சிகள். பல பல உயிர்- களின் தோற்றம் – அவற்றின் பல பல இயக்கம் – அவற்- றின் பல பல வரலாறு – உலக வரலாறு இவ்வாறு எல் லாம் எழுகின்றது. எங்கும் நிறைந்த பெரும்பொருளின் செயற்பாடே இவை அனைத்தும். ஆயிரம் கையுடையான் அன்றோ அவன்? அப் பெரும்பொருளாகும் அவனது கைத்திறமே இவை எல்லாம். எட்டுத் திசையும் எட்டுக் கையாக எண்டோள் வீசிநின்றாடும் கூத்து இது. திசை கையாகும் காட்சி! கருத்துக்கும் எட்டாக் காட்சி. விஞ்ஞா- னத் துறைகள் பலவும் கூறும் கருத்தின் ஒருமைக் காட்சி இது. 

கற்றரை – கருங்கடல் -கருவானம்-என்று இவ் வாறே அடுக்கினால் இங்கு ஒளி வேண்டாவா? கண்ணாகி நின்று காட்டி, உள்நின்று காண்பவனும் அவனே-அப் பெரும்பொருளே. பெருந் தீச்சுடராம் சூரியன் உலகுக்கு எல்லாம் பெருவிளக்கு. பைங்கதிர் மதியம் முதலானவை அந்த விளக்கின் எதிர் ஒளிகள். இவை இரண்டாலும் உலகம் ஒளிபெற்றுக் கண்பெற்றுக் காண்கிறது.பெரும்- பொருளாம் அவனும் அவையாய் எல்லாவற்றையும் காண்- கிறான். பைங்கதிர் மதியமும் சுடரும் அவன் கண்கள். காண்கிறவன் அவன்; நாமும் காண்கிறோம் என்கிறோம்- நம் கண்ணாக நின்று அவன் காட்டிக் காண்கிற நுட்பம் என்னே என்னே? 

இயக்கம் என்றோம்; முன்பின் என்றோம். இங்குத் தான் காலம் என்ற கருத்தும் பிறக்கிறது. வரலாறு பிறக்கிறது. காலமும் இடமும் கலந்த மயக்கமே உலகம். கண்ணாய் நிற்கும் சுடரும் திங்களும் காலத்தைக் காட்டும் உலகப் பெருங் கடிகாரங்கள். எனவே. காலமாய் அமைந்து, காலத்தையும் கடந்து அப்பெரும் பொருள் களிநடம் புரிகிறது – அவன் புரிகிறான்; இவ்வாறு இட- மும் காலமுமாக எல்லாம் இதனுள்ளே – இவனுள்ளே விரிகின்றன. இயன்று வரும் படைப்பும் காப்பும் வரலா- றும் இவ்வாறு முக்காலக் காட்சியாக விளங்க இப்பெரும்- பொருள் ஒளிர்கின்றது- இவன் ஒளிர்கிறான். எல்லாப்- பொருளும் எல்லாக் காலமும் எல்லாக் காலநிகழ்ச்சியும் ஒருங்கே தோன்றுகின்ற அற்புதக் காட்சியாக இப்பெரும் பொருள் – இவன் – தோன்றுகின்ற வியப்பே வியப்பு! இயன்றுவரும் பொருள்களோடு எல்லாம் பயின்று இது நிற்கிறது – இவன் நிற்கிறான். இவ்வாறு அனைத்தையும் தனக்கு இடமாகக்கொண்டு உலவி வருகிறது இப் பெரும் பொருள் ; உலவி வருகிறான் இவன். 

அவை, தனக்கும் தன் திருவிளையாடலுக்கும் இட மாகும் நிலை ஒன்று. தான் அவற்றிற்கு இடமாக ஆதார- மாகும் நிலை மற்றொன்று. இஃது,அனைத்தினையும், முடிவில் ஒடுக்கி அவை எல்லாம் தன்னிடத்திருக்க நிற்கின்றது- இவன் நிற்கின்றான். ஒடுங்கி நிற்கும் நிலையாம் ஒடுங்கி- யாக இவன் ஒளிர்கின்றான்; சர்வசம்ஹார மூர்த்தியாக மிளிர்கின்றான். பின்னும் இவ்வாறே தோன்றி மறையும் உலகத் திருவிளையாடல் இந்த மாயாவியின் வழியே நடந்து வரும். ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் பூலவர்’ என்பர் மெய்கண்டார்.

நாராயணன் என்பதற்கு, “நாரம் அல்லது உயிர் பொருள்களை இடம் ஆகக் கொண்டவன்; அவற்றிற்கு இடமாக இருப்பவன்” என்ற இருபொருள் உண்டு. இந்த இரண்டு பொருளையும் விளக்குவதுபோல இயன்றன எல்லாம் பயின்றும் அகத்தடக்கியும் பெரும்பொருள்; வளங்குகிறது.அவையேயாகியும், வேறே – தானே ஆகி யும், அவையும் தானுமாய் உடனாய்க் கலந்தும் பெரும்- பொருள் நிலைத்து நிற்கிறது; அவன் நிற்கிறான். அவையே ஆகி நிற்கும் நிலையும், உடனாகி நிற்கும் நிலையும், இதுவரை: கூறப்பெற்றன. என்னை இன்றி நீ இல்லை என்று ஆழ்வார் பாடுவதன் பொருள் இவ்வாறு விளங்குகிறது. யான் இல்லையானால் அவன் மூளி. 

உயிரில் பொருள்கள் இவனின்றி இல்லை; உயிர்களும் இவனின்றி இல்லை. இவற்றினைப் படைப்பவனும் காப்பவ- னும் 3 அழிப்பவனும் மறைப்பவனும்5 இவர்களை அருள்பவ னும் அப் பெரும்பொருளாம் முதல்வனே. பெரும் பொருளின்றி ஒன்றும் இயங்குவது இல்லை. இப் பொருள் அறிவிலாப் பொருளாக இருத்தல் இயலாது. சிற்றறி வுடைய பொருளாகவும் இருத்தல் இயலாது. பேரறி வுடைய பொருளாதல் வேண்டும். இந்த அறிவு நாம் அறிந்த சுட்டறிவு அன்று. அனுபவமாய் விளங்கும் மெய்யுணர்வே இங்கு வேண்டும். சித்துவடிவம் இஃது. அனைத்து உணர்வையும் இயக்கி வைக்கும் இப்பேருணர்வு உணர்வின் தலையாய் மணிமுடியாய் அனைத்துணர்வின் பிழம்பாய் விளங்குதல் வேண்டும். மனிதன், தன் அறி- வினைப் பாராட்டிக்கொள்கின்றான். ஆதலின், எல்லாம் ஆய் விளங்கி ஆளும் இப் பொருளை”அவன்” எனப்பேசுதல் மனிதப் பிறப்பின் இயல்பு. பேருணர்வுப் பிழம்பினை வேத- முதல்வன் என்ப. அனைத்து அறிவு நூலுக்கும் இவனே முதல்வன் என்று எங்கு உள்ளாரும் கூறுவர். ‘சாஸ். திர யோனித்வாத்’ என்று பிரஹ்ம சூத்திரமும் கூற வில்லையா? எத்தகைய அறிவும் அவனிடமே அவனாக முடியும். “கற்றதனா லாய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் ” என்பர் திருவள்ளுவர். எல்லா நாட்டு வேதங்களின் ஒற்றுமையும் இங்கு விளங்கு-கிறது. 

ஆண்டவன் எண்வடிவினன் என்பர். இக் கொள்கை இதுவரை கூறிய உண்மையையே வற்புறுத்துகிறது எனலாம். நிலம் என்பது பிருதிவி ஆம்.காற்றி லலையும் கடல் என்பது அப்புவும் வாயுவும்ஆம். சுடர் என்பது சூரியனே அன்றித் தேசசும் ஆம். விசும்பு என்பது ஆகாசம் ஆம். இவ்வாறு பஞ்ச பூதமுமாய் ஆண்டவன் அமைந்துள்ளான் என்பது கூறப்பெற்றது; திங்களும் கதிரவனுமாக அவன் விளங்குகிறான் என்பதும் சுட்டப் பெற்றது. இயன்ற எல்லாம் ஆம் உயிர்வகை என்னும் இயமானனாகவும் இறைவன் நிறைந்துள்ளான் என்ப- தும் விளக்கப்பெற்றது. எனவே, எண்வடிவினன் என்ற உண்மை பேசப்பெற்றுள்ளது. 

“எல்லாமாய் மாறி வருவனவற்றின் அடிப்படையாய் உள்ளான் அவன்” என அவனது சத்துநிலையாம் உண்மை நிலையும், அனந்தமாய் முடிவிலாது நீக்கமற நிறைகின்ற பரிபூரண நிலையும் கண்டோம். வேதமுதல்வன் என்பத- னால் சித்துநிலையாம் அறிவுநிலை விளங்குகிறது. ஆனந்த நிலையாம் இன்ப நிலையையும் கூறுவதே இங்கு முடிந்த முடிவு. சத்தியம் ஞானம் அனந்தம் பிரஹ்மம் என்றும் சத்சித் ஆனந்தம் என்றும் கூறப்பெறும் உண்மைகள் இவ்வாறு இங்கே வற்புறுத்தப்பெறுகின்றன. உண்மை, எங்கும் ஒன்றாகத்தானே விளங்கும்! 

இன்பம் எங்கே? அடியின் செம்மையும் இயக்கத்தின் அருளும், கருவினைத் தாய் காத்தல்போல் காக்கும் அன்பும், இன்பத் திருவிளையாடல்களே ஆம். பிரஹ்- மானந்தத்தைக் கூறவந்த உபநிடதங்கள் அரசன் இன்- பம், பேரரசின் இன்பம், தேவ இன்பம் என்று படிப்படி- யாய் இன்பம் உயர்வதனைக் காட்டி மேலும் முயன்று உயர முடியாதவாறு எல்லாமாய் முற்றிநிற்கும் இன்பமே கடவுள் இன்பம் என முடிக்கக் காண்கிறோம். கட்டற்ற தட்டற்ற அதிகார நிலைகளின் இன்பங்களாக இவை உயர்ந்து வருமாறு உபநிடதம் அமைத்திருப்பதைக் காண்கிறோம். இன்பம் என்றால், கனியின் இன்பம், கட்டிப் பட்ட கரும்பின் இன்பம் என்ற புல இன்பங்களே பிறர் நினைவிற்கு வரும். பனிமலர்க் குழல் பாவைமார்தம் ஐம்புல இன்பத்துடன் கூடிய மனவகை அன்பு இன்பமும் நினை. விற்கு வரும்: அதிகார இன்பம் நினைவிற்கு வருவது அருமை. அதற்குமேலாம் இன்பமே வீடு எனக் கொண்டு சிறப்பதே தமிழன் கண்ட உண்மை. தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் ஈசன் என்று பாடுகிறார் திருநாவுக் கரையர். இதற்குஏற்பப் பேரின்பத்தைக்குறிக்கத் தட்டற்று உருளும் ஆக்ஞா சக்கரம் கொண்டு திகழும் திகிரியோனாக ஆண்டவனைக் காண்கிறார் பெருந்தேவனார். தட்டற்று விளங்குகிறது அச் சக்கரம். அரசன் இறைமையை ஒளி எனப் பேசவில்லையா வள்ளுவர்? ஆனால், எப்போது இதன் ஒளி விளங்கும்? ஈதொரு சிறப்பு ஒளி. தீமை அற்றொழிய நன்மையே இன்பமாய் வெள்ளமிடும்போது ஒளிர்கின்றது இந்தக் கடவு ளாணை. எனவே, இன்பமும் இவ்வாறு விளக்கப்பெறுகிறது. இந்த இன்பம் அன்- பாய்ப் பாய்வதன்றோ தீதற விளங்கும் நிலை. 

எண்வடிவமாம் காட்சி -சச்சிதானந்த வடிவம் – என்ற இவை எல்லாம், உலகமும் உயிரும் உடலாய்க்கொண்டு அவற்றின் உயிராய் விளங்கும் இந்தப் புதிய கடவுட் சமுதாயத்தின் ஒற்றுமை விளக்கத் தோற்றமாய், அண்- டப் பேரரசின் இன்பப் பேரொளியாய் விளங்க, இறைவன் கோலத்தினைக் காண்கிறார் பெருந்தேவனார். உயிர்க்கு உயிருமாய் இருக்கின்றான் அவன். உயிருக்கு உடலு- மாய் அமைகின்றான் அவன். மன்னன் உயிர்த்தே மலர்- தலை யுலகம் என்பது பழைய கொள்கை. உயிரெலாம் சென்றுலவும் உடலும் ஆய் அரசன் விளங்குவது கம்பன் கண்ட புதுக்கொள்கை. கடவுட் பேரரசினிடம் இந்த இரண்டு தன்மையும் விளங்குதலான் அன்றோ உயிர்- களுக்கு உடலாயும் உயிர்க்கு உயிராயும் இறைவன் உள்ள நிலைமையைப் பெருந்தேவனார் குறிக்கின்றார்! குடியரசும் முடியரசுமாய் நிற்கின்ற நிலையின் பெருமையே பெருமை. இத்தனைக் கருத்தினையும் கடவுட் காட்சியில் உள்ளடக்கி, உயிர்ச் சமுதாயக் கடவுள் ஒற்றுமையாகவும் உலக வர- லாற்றொருமையாகவும் இதனைப் பெருந்தேவனார் காண்- கின்ற சிறப்பினைச் சங்கப்பாடலின் சிறப்பாகவே கூறலாம். 

மாநிலம் சேவடி ஆக. தூநீர் 
வளைநரல் பவ்வம் உடுக்கை ஆக
விசும்புமெய் ஆக, திசைகை ஆக, 
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக.
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப 
தீதற விளங்கிய திகிரி யோனே. 
-நற்றிணை – கடவுள் வாழ்த்து- 

திகிரியோன் என்பது எழுவாய். அறிந்ததே எழுவா யாக வருதல் இயல்பு. அதனைப்பற்றிப் புதியதாகக் கூறு- வதே பயனில்லை. அவ்வாறானால் திகிரியோன் அறிந்த பொருளாவது எப்படி? நாம் அறிந்த அற்புத இயற்கைச் சக்தியே எங்கும் தன் ஆணையைச் செலுத்திவருகிறது; ஆதலின், இந்த ஆணை நாம் அறிந்தது ஒன்றே ஆம். ஆனால், பெருந்தேவனார் காட்சியில் இந்த ஆணை தீதற் விளங்குவதாகத் தோன்றுகிறது. அவர் கண்ட காட்சி- அவர் அறிந்த உண்மை-தீமை அறுதற்காக விளங்குவது! தீமை அறுதலால் பொலிவுபெற்று விளங்குவது! “தீது அற்று அற்றுவர விளங்கிக் கொண்டே வருவது” என்று பொருள்படும் இத் தொடர்க்கு நம் அனுபவத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ளலாம். இயற்கைத் திருவிளையாடல் இவ்வாறு தீதறுதலாகி இன்பவிளக்க மாதலையே முடிந்த முடிபாம் பயனாகக் கொண்டது என்று தாம் அறிந்த உண்மையை வற்புறுத்துகின்றார் புலவர். இந்தத் திகிரியோனே. வேதமுதல்வன்,ஆக,ஆக,ஆகப்பயின்று, அகத்தடக்கிய முதல்வன்” என்று முடிக்கின்றார். வேத- முதல்வன் என்பதுஆண்டவனது சொரூப இலக்கணமாக- வும், அதற்குமுன் கூறப்பெறுபவை ஆண்டவனது தடத்த இலக்கணமாகவும் கொள்ளலாம். “நாம் அறிந்த நல்ல இன்ப இயற்கைச் சக்தியே அத்தகைய தடத்த இலக்- கணமும் சொரூப இலக்கணமும் உடையதாகக் கூறப்- பெறும் பொருள்,” என முடிக்கிறார் பெருந்தேவனார். 

இப் பாட்டின் சொற்றொடர் அமைப்பினையும் யாவோசை நயத்தினையும் துய்த்துணர்ந்து இன்புறுதல் வேண்டும். அவற்றின் வழியே தான் நம் மனம் பொருள் விளக்கம் பெற்றுப் பெருந்தேவனார் அனுபவமே தன் அனுபவமாகுமாறு உருக்கொள்கிறது. “மாநிலம் சேவடி யாக” என்பதனை மூன்று சீராய்க் கூறினார் புலவர். மா எனவே பெருமை தோன்று கிறது. நிலம் எனவே நிலைநிற்றல் விளங்குகிறது. அடியின் செம்மைக்கு ஏ ற்ப,நிலத்தின்பெருமை,மா என்பதால் வளந்- தரும் பெருமையாகக் குறிக்கப்பெறுகிறது. மா என்றும், சே என்றும், வரும் நெடில்கள் பெருமையை நீட்டிக் காட்டுகின்- றன.மாநிலத்தினும் பெரிதாய்ப் பரந்துதோன்றுகின்ற கட லின் இயக்க ஆற்றலினும் அன்பினும் பெரிதும் ஈடுபட்டுக் கடல் பரந்து இருப்பதுபோலப் பரந்த ஐந்துசீராகவரக் கட- லினை அவ்வாறு புனைந்துரைக்கின்றார். சங்கின் ஒலி வளை- நரல் என்ற ஒலியாகக் கேட்கின்றது. “தூநீர்’ என நெடி லாகவும், “வளைநரல்” எனக் குறிலாகவும், “பவ்வம்” என வகரத் தோடொன்றுபட்ட இதழ் ஒலிகளாகவும், டுக்கை” என வல்லோசையாகவும் இவ்வாறு பலவற்- றின் கலப்பொலியாக அலைகடல்ஒலி பாட்டில் அமை- கிறது. பருப்பொருளின் நின்றும் நுண்பொருளுக்குச் செல்வார், ” விசும்பு மெய்யாக என இரு சீரில் வன்மை மிக்குத் தோன்றாதபடி மென்மையும் இடைமையுமாம் அருவநிலை தோன்றக் கூறினார்; எல்லாமாய் இயங்கும் நிலையை வற்புறுத்த மேலும் இருசீரில் திசை கையாக என்றார்; தொழில் செய்வதன்றோ கை : திசை கை என வல்லெழுத்து இகர ஐகார ஒலிகளோடு இயைந்து, தொழிலொலி முடிவின்றிப் போவதனைக் காட்டுமாறு செய்தார்; சந்திரனது அழகில் ஈடுபட்டு அதனை இரு- சீரால் கூறினார்; ஒப்புயர் வற்ற சூரியனை அடையேதும் இன்றிச் ”சிடுசிடு” என ஒளிவிட் டெரியும் தீயின் நினைப் பும் சுடு விளக்கத்தின் நினைப்பும் வரச் “சுடர்” என்று ஒரே அசையில் கூறியமைந்தார்; மதியமும் கண் ஆனாலும், உண்மையில் உலகுக்கு ஒருகண் சுடரே எனக் குறிப்பார்- போலச் சுடர்கண் என ஒருசீ ராக்கினார்; உம்மையும் கொடுத்திலர்; தனி நிற்பது சுடர் : அதனால் விளங்கி அதனோடு தொடர்ந் தெண்ணப்படுவது மதியம் என்பது போலக் கூறுகின்றார்; “வேத முதல்வன்” என்ற உண் மையைத் தனியடி யாக்கினார்; நாம் விரும்பும் இன்ப நிலையை நம்மை யடக்கியாண்டு நன்மை பெருக்கும் ஆணை – யாகக் கூறி முடிக்கின்றார்; இத் திகிரியின் சிறப்பியல் தீதற விளங்குதல் ஆம் எனச் சிறப்பிக்கின்றார். 

“மாநிலம்” என்பதனோடு கடலின் தொடர்பு விளங்க அந்த அடியிலேயே, தூநீர்’ என எதுகை தோன்றக் கடலைப் பாடத்தொடங்குகின்றார் பெருந்தேவனார். கடலைப் புனைந்துரைக்கும் இரண்டாம் அடியில் வேறொன்றன் தொடர்பும் வேண்டாமையால் மோனையோ எதுகையோ வரப்பாடுகிறார் இல்லை; அருவத்திற் புகுதலின், உரு வத்தோடு ஒட்டிவரத் தொடுக்கவில்லை; விசும்பும் திசை – யும் என்ற இரண்டு நிலையாகப் பிரிந்தாலும் அவை ஒன்- றெனக் கொள்ள எதுகை நயம்கொண்டு ஒன்றுபடுத்து- கிறார்;விசும்பில் செல்லும் ஒளிகள் என ஒற்றுமைப்படுத்த, விசும்போடு பசுங்கதிர் என எதுகைத்தொடை வரப் பாடு- கிறார்; சுடர் என வேறு பிரித்து உயர்த்துகிறார்; ‘அனைத் தும் அதற்கு இடமாம்” என்ற வேற்று நிலையின் அடிப் படை ஒற்றுமையை ” இயன்றன பயின்று” எனவரும் எதுகை நயத்தோடு “பயின்றகத்து” என ஒரு சீராக்கிப் பாடுகிறார். இயன்றன பயின்று நிற்றல், படைத்தல் காத்-தல் என்ற இரண்டு நிலையில்: அகத்தடக்கலோ அழித்- தல் என்ற ஒரு நிலையில்: இந்த உண்மையும் இவ்வாறு சுட்டப்படுகின்றது. இயன்றன பயின்றபோதும் அகத்து வைத்துக் காத்துக் கொள்ளப்பெற்றே உள்ளன என்ப- தும் இத் தொடர்பால் விளங்குகிறது. “வேதமுதல்வன்” என்ற நிலையும், “தீதற விளங்கிய திகிரியோன்” என்ற நிலையும் எழுவாயும் பயனிலையுமாய் நிற்கின்ற தொடர்பினை எதுகைத் தொடையாலும் ஒன்றுபடுத்தி விளக்கி வற் புறுத்துகிறார்; தீதற விளங்குவதே திகிரியின் சிறப்பியல்- பென்பதனை வற்புறுத்தி இரண்டும் மோனையாய் அமையப் பாடுகின்றார் பெருந்தேவனார்; திகிரியான் என ஒரு சீரால் கூறத்தக்கதனைத் தம் ஈடுபாடும் அதன் பெருமை-யும் தோன்ற இருசீராக்கித் திகிரியோனே என நீட்டு-கின்றார். இவ்வாறு பொருளும் பா ஓசையும் அமைந்திருப்பது ஓரழகரம்.

– நற்றிணை நாடகங்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 1954, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *