எல்லாம் அவளுக்கே
கதையாசிரியர்: தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: November 9, 2025
பார்வையிட்டோர்: 73
(1954ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1
அவன் வருகின்றான். உள்ளிருப்பது வெளியில் தெரி- யாதபடி அமைந்த தனி இடம் அது; மரம் அடர்ந்த நிழல் இடம். அவனை எதிர்பார்த்து நிற்கின்றாள் அவள். அவ். வளவு நம்பிக்கை !
எப்படி எழுந்தது இந்த நம்பிக்கை ? இந்த நம்பிக்கை- உள்ளத்தில் எரிந்தெழுந்த எரிமலையின் ஆரவாரத்தை யார் அறிவார் ? உள்ளத்தின் உள்ளே பார்த்தால் தோன்- றும் ஒரு பழங் காட்சி…
2
அவர்கள் யாரோ இருவர்! ஆனால், இயற்கையின் பொருத்தம் – கடவுளின் அருள் -அவர்கள் இருவரையும். ஒன்றுகொண்டு சேர்க்கின்றது. வியப்பினும் வியப்பு !
கண்டதும் காதல்! இருவரும் ஒருவராகின்றனர். அப்- போதே உலசுறிய மணக்கமுடியுமா? ஆணும் பெண்ணும் இவ்வாறு ஒன்றாக இருக்கவிடுமா உலகம்? இருவரும் பிரியவேவேண்டும். ‘பிரிவு’ என்பது ஒன்று இருப் – பதனை அவர்கள் உணர்கின்றனர். தம் கீழே தரையே பிளப்பதுபோல அவர்களுக்குத் தோன்றுகின்றது. துன்- பப் பேரிருள் ! எதிர்பாராத பேரிடி!
ஆனால், அளவிலா நம்பிக்கை – அருளில் நம்பிக்கை- இயற்கையில் நம்பிக்கை – களங்கமிலா மனம்- வஞ்சமிலா நெஞ்சம் – இவையே ஆறுதல் வடிவமாக எழுகின்றன. அவன் திரும்பிப்போகிறான், ஊருக்கு, அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே.
அவளும் தோழிமாரோடு வீடுதிரும்புகிறாள். அவள் உள்ளமோ உடன் வரவில்லை; அவனோடு போய்விட்டது. என் செய்வாள்? புதிய உணர்ச்சி, எரிமலையாகப் பொங்கு- கிறது. அவளால் பொறுக்க முடியவில்லை. நடந்ததனைப் பிறர் அறியாமல், பழையபடி வாழ்வினை எவ்வாறு நடத்து- வது? பழக்கம் அவளுக்கு உதவுகிறது. ஆற்றின் ஓட்- டத்தோடு செல்லும் மிதவைபோலத் தன்னைச் சூழ்ந்தவர் வழியே அவளும் செல்கின்றாள். என்றாலும், இரண்டாட்- டம்-போராட்டம் -மனக்கொந்தளிப்பு – இவை நின்றபா- டில்லை; வளர்ந்துகொண்டே போகின்றன.
அவனைக் கண்டது எப்படி? முன்னாளைய பழக்கம் இன்றும் அவளை அவ்விடம் செல்ல உந்துகிறது.கால்கள் நடக்கின்றன. எண்ணமில்லாமலே அவனைக் கண்ட இடத்- தில் வந்து அவள் நிற்கிறாள். அவனும் வருகிறான்; ஐயம் இல்லை: அவன்தான்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வைத்திருப் வள்போல வருகிறாள் : தன்னால் செய்ய முடியாததனைச் செய்து முடித்ததுபோல அவள் பெரு மூச்சு விடுகிறாள்; இல்லை! பெரு மூச்சு விட்டாற்போலத் தோன்றுகிறாள். அவளால் இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது.
அவள் கண் தோழிமேல் விழுகிறது. அவ் வுயிர்த் தோழியே இனிச் செய்யவேண்டுவனவற்றைச் செய்ய வேண்டுமோ?
3
பின் அவள் என் செய்வாள்? இளையவள்; குறு மகள் – பச்சிளங் குழந்தையின் கள்ளமற்ற உள்ளமே அன்று அவள் வடிவம். செயற்கரியது செய்து முடித்த- வர் மேலும் செய்வது எப்படி? மனிதப் பிறப்பால் ஆவதோ?
பெரு வெற்றி! மிக்க பெரு வெற்றி! வெற்றியின் பின் பெரு வீரர்கள் என்ன செய்கின்றனர்?’ அப்பாடா!, என்று பெருமூச்சு விட்டு ஓய்வு எடுத்துக்கொள்கின்றனர்; வென்ற நாட்டில், அமைதியை நாட்டி ஆட்சிக்கு வகை செய்வது அமைச்சர் கடன் என அமைச்சரை நோக்கி நிற் கின்றனர்; தம் சுமையைக் கீழிறக்கிவிட்டு அந்தச் சுமையை அவர்கள்மேல் ஏற்றிவிடுகின்றனர். அப்படி உய்த்து விடுவது- தள்ளி விடுவது – அதுதானே உலகம்! அது தானே அரசியல் !
அவள் அறிவாள் அரசநிலை. மலை காட்டரசன் மகள் அல்லளோ அவள்?
4
அவன் எண்ணம் அவ்வாறு ஓடுகிறது. பாங்கனிடம் அவன் கூறியதும் நினைவுக்கு வருகிறது…
அவளைக் கண்டபின் பழைய வழக்கப்படி அவன் தன் கலைதெரி கழகத்திற்குள் நுழைகின்றான். அங்கே தோழர்- கள் கூடிப் பாடுகின்றனர்; பேசுகின்றனர்; நுண்பொருள் விரிக்கின்றனர் ; ஆடுகின்றனர். அவர்களுக்கு இதுவரை உயிர் என விளங்கியவன் அவன்; இன்று சும்மா இருக்- கின்றான்: ஏதோ பர்க்கின்றான். என்ன? ஒன்றும் இல்லை. குருடா? செவிடா? கல்லாகச் சமைந்துவிட்டானா? கலைப்- போக்கில் கருத்தினைப் பறிகொடுத்தவர்கள்-இதனை – அவன் நிலையைக் காணவில்லை. ஆனால், அவன் உயிர்த்- தோழன் – பாங்கன் – இதனைக் காண்கிறான்.
அவனைத் தோழன் தனி இடத்திற்குக் கொண்டு செல்கிறான். “ஏன் இந்த வாட்டம்- இந்த வெறித்த பார்வை? என்ன நேர்ந்தது? இதோ என்னைப் பார்! என்னிடத்திலுமா ஒளிவு மறைவு?” என்றெல்லாம் தோழன் கேட்கிறான். எல்லாம் ஒருதலைப் பேச்சே ! தோழ- னுக்குக் கண்ணீர் கலங்குகிறது.
பெருமூச்சு விடுகிறான் அவன் ; காதற் கொந்தளிப்- பினை மெல்ல வெளிவிடுகிறான்:
“குணப் பெருங் குன்றே! கலங்கா நெஞ்சமா கலங்கு- கிறது? ‘ பெண்ணுக்குத் தோற்றேன்-மனதைப் பறி- கொடுத்தேன்’- என்று நீயா பேசுவது? மலையமானும் உனக்கு ஒவ்வான். வெற்றியே உனது. நீயா இவ்வாறு கருத்தையும் கலையையும் உரத்தையும் உறுதியையும் தோற்பது ? அதுவும் ஒரு பெண்ணுக்கா?” என்று பாங்கன் இடித்துரைக்கின்றான்.
பேசத் தொடங்குகிறான் அவன்: ‘உம்-உம்! வெற்றி! வெற்றி! எல்லாம் பழம் பேச்சு. எல்லாம் வெற்று இறுமாப்பு! இன்று நான் எங்கே? தோல்வியே என் வடிவம். வருந்துகின்றேன் என்று நினைக்கிறாயா? வாழ்கின்றேன் : இன்றுதான் வாழ்கின்றேன். தோல்வி- யில் என்னைக் கண்டேன்; இன்பங் கண்டேன். தோற்ற வன் எங்கே? எங்கே? எங்கும் இல்லை. வெற்றி யடைந் தாளையே எங்கும் காண்கிறேன். அவளாகவே ஆகிவிட்- டேன். அவளே நான். பெரு வெற்றி! அன்பின் வெற்றி! அதன் நுட்பம் இஃது! ஈது ஒரு கடவுட் புதுமை ! கண்- டேன் நான்! கண்டேன் நான் ! நீ எப்படி அறிவாய்!”
“நான் எப்படி அறிவேன் ? நீ தான் சொல்.”
“மலையமானை நீ புகழ்வாய். ‘காரிக் குதிரைக் காரி’ என்பாய். ‘கருங் குதிரைமேல் அக் காரி மலையமான் காரி – ஏறிச் செல்வான்’ என்பாய். அவ்வளவுதான் வெற்றிப்பறை கேட்கும்’ என்பாய். ‘உடுக்கை போன்ற பெரும் பறையினை, அவனோடு சென்ற புலையன் ஆர- வாரத்தோடும் போர்ப் பறையாகக் கொட்டுவதே வெற்- றிப் பறையாக ஒலிக்கும்’ என்று புகழ்வாய். பகை- யரசர் – பகையும் வேண்டுமோ?-பிறர் என்று எதிர் நின் றாலே போதும்; அவர் நாட்டின்மேல் பாய்வான் மலைய- மான் கைப்பற்ற முடியாத அரிய அரண் எல்லாம் அழித்து ஒழிப்பான்’ என்பாய். நண்பா, உன் மலைய மான் வெற்றியினும் மிகப் பெரிய வெற்றி, அவளது வெற்றி!”
“தோல்வியே காணாத என் மனம் தோற்றது. அறிவு, ஓர்ப்பு, நிறை, கடைப்பிடி-அறிவு, ஆராய்ச்சி, மறை பிறர் அறியாமல் ஒருநிலை நிற்கும் மன நிலை, குறிக்- கோள் தவறாது கடைப்பிடித்து நடக்கும் உள்ளத்து உறுதி- இவையே என் உள்ளக் கோட்டைகள்’ என்று எண்ணி இறுமாந்திருந்தேன். அனைத்தையும் கைப்பற்றிக்- கொண்டு தகர்த்தெறிந்தாள். அறிவா? ஆராய்ச்சியா? நிறையா? உறுதியா ? எல்லாம் அவளே!
”இப்படி வெற்றி பெற்றார் யார்? அவள்! அவள்! அவளே!”
“என்ன அழகு! கல் நெஞ்சினையும் கரைத்து உருக்கும் அழகு! கண்டேன் அவளை! ஒரே மின்வெட்டு! இடையில் கட்டிய மணிமேகலையின் மெல் ஒலி! ஆம், வெற்றி ஒலி அஃது! எனது எல்லாம் அவளது ஆயிற்று. நானே அவ- ளில் ஒடுங்கிவிட்டேன். அவளே அடைக்கலம். நான் எங்கே? அவளே நான்.”
“இந்தப் போக்கினை மாற்றச் சிரிக்கலாமா?” என்று நினைக்கிறான் பாங்கன்: சிரிக்கிறான்.
“ஹ்ஹ்ஹ்! உன்னிடம் கற்ற கல்வியினை உன்னிடமே காட்டலாமே…ஆம், உன் கற்பனையை விளக்கவா…?”
“மலை நாட்டான் மலையமான். மலை நாட்டாள் மா தரசி. மா-குதிரை- ஏறிப் பாய்கிறான் மலையமான்.மா – அழகு – ஏறி வெல்கிறாள் மாதரசி.
“புலையன் அங்கே; புல்லியது – நுண்ணியது; நுண் ணிடை இங்கே. பெருந்துடி கொட்டுகிறான் புலையன் அங்கே. இங்கோ துடி – துடி போன்ற இடை; பெருந்துடி- பெருமை வாய்ந்த இடை. பெருந்துடி கறங்குகிறது அங்கே! பெருமை வாய்ந்த துடி போன்ற இடையில் மேகலை ஒலிக்கின்றது இங்கே ! சென்றதும் வெற்றி அங்கே! கண்டதும் காதல் இங்கே! உம்-உம்-உம்.விளக்- கம் சரிதானே !’ எனச் சிரிக்கின்றான்; சிரிப்புக் காட்டுகின்- றான் பாங்கன்.
“பாங்கா, இதுவா உன் நட்பு? நீ சொல்வது சரி; ஆனால், சிரிப்பது ஏன்? புண்ணில் கோல் விடாதே!”
“இடுக்கண் வருங்கால் நகுக.”
“நண்பா, இதற்கு ஒரு வழி இல்லையா?”
உள்ளம் எல்லாம் உருகி உயிரெலாம் உருகி வரும் இந்தக் குரல் பாங்கன் மனத்தில் பாய்கிறது. பாங்கனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவன் வெறிக்க வெறிக்கப் பார்க்- கிறான் ; “கலங்காதவன் கலங்குகிறான். கருத்தறிந்து செய்தல் வேண்டும்” என்று முடிவுசெய்கிறான்.
“உனக்கு யான் என்ன சொல்வது? நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்று போகிறான் பாங்கன்.
5
இப்படிப் பாங்கனிடம் அவளது வெற்றியைப் பேசியது அவன் நினைவுக்கு வருகிறது. இவ்வளவு செயற்கருஞ் செயல் செய்தபின் அவளாக இனி என்ன செய்யக் உடும்? அவளும் அவனும் பிறர் அறியாமல் கூடவேண்- டும். அதற்கோ பிறர் கண்ணை மருட்டும் சூழ்ச்சிவேண்டும். உலகறிந்த ஓர் அறிவு வேண்டும்; தம்மோடு ஒத்துத் துடிக்கும் நெஞ்சு வேண்டும். அரசன் வென்றபின் அமைச் சரே அமைதியை நிலைநாட்டவேண்டும். அரசனுடைய கண்ணும் உயிரும் அமைச்சரே. அவளுடைய உயிரும் கண்ணும் அவளுடைய உயிர்த்தோழியே. தோழி, உல கறிந்தவள்; அன்பு வடிவானவள். தோழியும் அவளும் ஒரே உள்ளம். தொட்டிற் பழக்கம் அது. தோழிமேல் படி- கிறது அவள் நாட்டம். ‘இவளே இனி வேண்டுவன செய்யக் கூடியவள்”-அவள் பார்வையின் பொருள் எல்லாம் இப்படி அவனுக்கு விளங்குகிறது. அவனும் அவளும் ஒருவர் அல்லரோ இன்று!
6
தோழியின் பின்செல்கின்றான் அவன்; பேசும் வாய்ப்பினை எல்லாம் பயன்படுத்திப் பேசுகிறான்; அன்- பொழுகப் பேசுகிறான்; நெஞ்சுருகப் பேசுகிறான்; உள்ளத்- தினைத் திறந்து வைத்தது போலப் பேசுகிறான். ஆனால், நேரே பேசக்கூடிய பேச்சா இது? தோழிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை; பின்னர்ச் சிறுகச் சிறுக நிலைமை விளங்குகிறது. எனினும், உடனே அவள் உடன்பட்டுப் பேசும் பேச்சா இஃது? அவனைப் போகவிட்டுக் காண்- கிறாள். துடிதுடிக்கும் அவன் மனம் இதற்குள் உடை- கிறதுபோல் தோன்றுகிறது.
யாரை நோவது? தோழியை நேரே நொந்து இகழ- லாமா? பண்பாடாகுமா அது? தலைவியை நோவதா? எப்படித் துணியும் அவன் மனம் அவளை நொந்து பேச? இரங்குகிறான் அவளுக்காக. ‘என்ன செயற்கரிய செயல்! என்னை உய்யக்கொண்ட செயல்! மேலும் என் செய்- வாள்?” அவள்தான் இவளிடம் தன்னை அனுப்பியதனை – யும் இவ்வாறு கூறிவிடுகின்றான் அவன், தன் முணு முணுப்பில். “மேலும் இச் சுமையைப் பொறுக்கமுடியாமை- யால் அவள் பார்வை என்னை இவளிடம் அனுப்பியது.
அவ்வாறு அனுப்பி ஓய்வு கொண்டு பெரு மூச்சு விடுவது- போல நிற்கின்றாள் அவள்; இவளே எல்லாம் செய்வாள் என்ற நம்பிக்கையால்-ஆனால், இவளோ….” என்று இழுத்துக்கொண்டே பேசுகிறான் – தோழி காதில் விழத்- தான் பேசுகிறான். ஆனால், பேசுவதோ நெஞ்சோடு.
7
உடையும் மனத்திற்கு ஓர் ஆறுதல் மருந்து தோன்றுகிறது. இது கேட்டுத் தோழியும் உதவ முந்துற முந்துவாள். அவள் அவனோடு ஒருயிராய் ஒற்றித்துப் போன நிலை, அவள் இருப்பிலேயே -அவள் பார்வையி- லேயே, ஒளிர்கிறது. அவன் கண்ட காட்சியை நினைப்- பூட்டிக்கொண்டு உரக்கத் தனக்குத்தானே நெஞ்சொடு பேசி விளக்குகிறான். உள்ளீடானது இப்படி வெளியீ- டாகிறது. அதுதானே பாட்டு. தோழிக்கும் கேட்கிறது. உணர்வினில் வல்லோர் பாடினால் உணர்வினில் வல்லோர் உள்ளவாறு உணர்வர்.
அவன் அவளொடு கூடிய நாளின் காட்சி……
அறிவும் அன்பும் இன்பமும் ஒளிரும் பரந்த அவளது நெற்றியை மறக்க முடியுமா அவன்?
அவனொடு மகிழ்ந்தபின் தோழிமாரொடும் செல்- கின்றாள் அவள். அவள் பின்னழகு கண்டு ஈடுபடுகிறான் அவன். இந்தக் குறுமகளா அந்த ஒண்ணுதல்! அவன் கண்ட அறிவின் பிழம்பு! அன்பின் வடிவம்! இடையில் உடையைக் கீழே தாழ உடுத்திருக்கிறாள் அவள்; திரும்- பித் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே நடக்கிறாள்; உடை தடுக்கிறது; தெற்றுகிறாள்; காலில் சிக்கிய உடை- மேல் கால் வைத்து நடக்கிறாள். பின்புற உடல் இடையின் கீழ்ச் சிறிது வெளியாகிறது. பின்னழகு பேரழகின் ஒளியாக – அழகெலாம் ஒருமுகப்பட்டு ஒளிரும் ஒளித் திவலையாகத் – திதலையாகத் தோன்றுகிறது. ஓரிமைப் போதுதான் – உடனே உடையைத் திருத்திக்கொள்- கிறாள்-அதற்குள் அவ்வாறு மின்னிய அழகில் உள்ளத்- தைப் பறி கொடுக்கிறான்: மறக்க முடியாத காட்சி ?
அவனை அணைத்த கைகள்-அவைகளை வீசி நடக்- கின்றாள். வளை ஒலி இல்லை. அகன்ற தொடி உண்டு. அதோ தெரிகின்றன ! ஒலியின்றி இறுகச் செறிந்து முன் கையில் அழகு ஒளி வீசுகின்றது. அகன்ற தொடி- யும் இறுகத் தழுவ அன்பு வீங்கி நிற்கின்றாள். “அவள் தொடி செய்த தவமும் செய்யவில்லை நான், அப்படிச் செறிந்து நிற்க.”என்று அவனது அடிமனத்தே ஒரு குமு- றல் எழுகிறது. உயிர்த் தோழியின்மேல் முன்கையை வைத்து நடக்கிறாள் அவள்; தோழியைப் பற்றிக்கொள்- கிறாள். உணர்ச்சியால் அலையுண்டவளுக்கு அத்தகைய ஊன்றுகோல் வேண்டியிருக்கிறது.
அந்தத் தோழிதான் அவள் உயிர் எனத் தோன்று- கிறது, அவனுக்கு. அத் தோழியை அப்படிக் காட்டிக்- கொடுக்கின்றாளா?
8
அன்று கண்ட காட்சி அஃது. இன்று காணும் காட்சி சிறிது மாறி உள்ளது. இன்றும் பின்னழகு காண்கிறான்! திரும்புகிறாள் அவள்; அவனை எதிர்பார்த்துத்தான் திரும்புகிறாள். அதோ அறிவு ஒளிரும் அவள் நெற்றி! முன்கை வீசி நடக்கிறாள். முன் கேளாத ‘கலகல’ ஒலி- ஆம் – வளை ஒலி இது- பழைய தொடி இல்லையா? அவை முன் கையைக் கவ்விக்கொண்டு கிடக்கின்றன. அவற்றோடு அழகுக்கு அழகு செய்ய- அவற்றோடு பட்டு, உராய்ந்து, ஒலித்துப் பாட,வளைகள் புதுமையாக வந்துள்ளன. அதோ பளபளப்பான வெள்ளிய வளைகள் ! அவை சங்கு வளைகள்- தாம். அவற்றின் வட்ட வடிவு ஓர் அழகு! என்ன அழகிய திரட்சி! என்ன உருட்டு! என்ன வேலைப்பாடு! இருந் தும், என்ன வன்மை! கலைஞன் கலை எல்லாம் கைத்திற- மாக வளையிற் பொலிகிறது: வளையைத்தான் அராவினானா? கருத்தைத்தான் அராவினானா? இவ்வாறு கலையாய்ப் பதிய, உயிரில்லாத பொருள் உயிர் பெற்றுப் பேசுகிறது! காதலாகக் கொஞ்சுகிறது!
“ஆனால், பார்த்ததுபோல் இருக்கிறதே! எங்கே பார்த்தேன், இந்த வளைகளை?”
9
அவன் நினைத்துப்பார்க்கிறான். கண்டதும் காதல் கொண்ட அவன், அன்றிரவெல்லாம் அவ்விடமே அலைந்து திரிந்தமை நினைவிற்கு வருகிறது. அப்போது கண்ட காட்சி….
சில குடியிருப்புக்கள் – அங்கும் இங்கும் சில தோட்ட- வீடுகள்-அவ்வளவே! அவனுடைய ஊர்போலப் பெரிய தன்று, அவள் வாழும் இடம்; சிறிய ஊர் ; சில வீடுகள் சேர்ந்த சேரி. ஆனால், என்ன இயற்கை வளம் ! உழைப்புக்குப் பரிசிலா இந்த வளம்? இல்லை. தூய அற- வாழ்வுக்குப் பரிசில் அவளை அறியானா அவன்? தூய்மையே அவள் உயிர் ; அறமே அவள் வடிவம். கற்பினைக் கடவுளே காக்கும் இயற்கையே இவ்வாறு போற்றுகிறது.
என்ன இயற்கை விருந்து ! இயற்கையும் இந்தக் குறவருமாய் இயைந்த இயைபே இயைபு இது குன்றுகள் நிறைந்த.குறிச்சி. ஒரு பெரிய மலை தோன்று- கிறது! என்ன ஒலி அஃது? ஆம்! அருவி வீழ்கிறது. இருளில் ஒரே வெண்மை நிறமாகத் தோன்றுகிறது. அது தண்ணீரால் தழைத்ததா? மழை வளம் தரும் கற்பால் தழைத்ததா? அழகிய அருவி ! தாலாட்டுப் பாடுவதுபோல ஒரே பண்ணில், தொலைவில், மெல்லப் பாடுகிறது. அதன் எதிரேதான் இருக்கிறது அந்தச் சேரி. சேரிப் புறத்தே திரிகிறான் அவன்; அங்கு ஓர் அன்புக் குடும்பம்… சிறு குடும்பம்…காண்கிறான். மனைவி- யும் மணாளனும் வாழும் வாழ்வு…கவலையற்ற வாழ்வு… உழாத உழவு… ஆனால், இன்ப விளைவு… இவை தோன்று- கின்றன. இயற்கையன்னையே தன் புதல்வனுக்கும் புதல்- விக்கும் ஊட்டுகிறாள். வீட்டின் முற்றத்தில் காதலர் வீற்- றிருக்கின்றனர். வானமே மீன் விளக்குப் பொலியும் மேற்- கட்டி; மரச்செறிவே மண்டபம் ; சுற்றியும் பலா மரங்கள், செக்கச்சிவந்த வேரோடி நிற்கின்றன. கிளைதோறும் பலாப் பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. பறித்து எடுத்து இவர்களுக்கு ஊட்டவேண்டும் போலும்! பழம் பழுத்து வெடிக்கிறது. சுளைகள் காதலர் கையில் விழுவதற்காகப் போட்டி இடுகின்றன; பல தோற்கின்றன ; கீழே விழுந்து கிடக்கின்றன. முற்றம் நிறையப் பலாச்சுளை ! கனிந்த சுளை! தேன் சொட்டும் சுளை! எங்கும் பலாவின் நறு- மணம்! அருவியின் வெள்ளைக் காட்சியாம் விருந்து! அதன் தாலாட்டின் செவி விருந்து! பலாவின் சுவை விருந்து! நறுமண விருந்து ! மனைவியைத் தழுவியபின் உடலும் உள்ளமும் உயிரும் குளிர்ந்துள்ளன. கணவன் மெய்ம்மறந்து நிற்கிறான்; ஊற்றின்பம் வேறு நாடுவானா? ஐம்புலனில் அந்தப் புலனை மறந்துவிடுகிறானோ?
காதலரின் காதலுக்கு எனவே இயற்கை அமைக்கும் சூழல் இஃது. அருவியின் தாலாட்டே காதலியைத் தூங்க வைக்கின்றது. காதலன் என் செய்வான்? காதலன் கைத்திறம் வல்லவன்; கலைஞன். காதல் விளையாட்டு இல்லையானால் கலை விளையாட்டு உண்டு. கவலையற்ற நிலையில், பசியற்ற நிலையில், மன எரிவற்ற நிலையில், காதல் வெள்ளமாய்ப் பொங்கிய உணர்வு. காதலி தூங்கியவுடன், கலையாக மாறிப் பிறக்கிறது. காதலனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் இயற்கை விருந்தினைத் துய்க்கின்றான்; உணர்வு விருந்தாகத் துய்க்கின்றான்; காதலியின் காதலையும் அழகினையும் காண்கிறான்; தன்னை மறக்கின்றான். முன் தான் கொண்டுசேர்த்த சங்குகள் அங்கே குவிந்து கிடக்கின்றன. தானற்ற பெரு நிலையில் அவன் சில சங்குகளை எடுக்கின்றான்; கருத்தில் கண்ட அழகினைச் சங்கில் காண முயல்கின்றான்; வாளரம் கொண்டு அராவுகிறான். உயிரற்றது உயிர் பெறுகிறது; சாவாத பெருவாழ்வு பெறுகிறது; கலையொளியே கண்ணொளியாக ஒளிர்கிறது; கலைஞனோடு பேசுகிறது. அந்த அழகிய வளை கண்டு மகிழ்கிறான் கலைஞன்.
இரவில் திரியும் அவன், காண்கின்றான் இதனை “ஆ! ஆ! கலை தோன்றும் நுட்பம் கலைதெரி கழகத்தில் விளங்கவில்லை. இங்கு விளங்குகிறது. இயற்கையே வாழ்க! காதலே வாழ்க! கலையே வாழ்க!”
10
அந்த வளைகளே இவள் கையில் இன்று கலகல என இவனை வரவேற்றுப் பாடுகின்றன. அந்தக் கலைஞன் – தன் நாட்டுத் தலைவன் மகளுக்கு… தூய்மைக்கு… அழகுக்கு-அன்புக்கு… அறிவுக்கு… ஆருயிர்க்கு-எதிர்-கால வாழ்வுக்குத் தந்த கலைப் பரிசில் ! அவை வேறு எங்கே ஒளி பெறும்? ஒலி பெறும்? ஆம்! ஆம்/ அவையே! ஐயம் இல்லை!
இந்த வழியே இவன் உள்ளத்தில் ஓர் ஊக்கம் பிறக் கிறது. பாட்டாக, நெஞ்சுடன், பாடாமல் பாடுகிறான். உள் ஆழம் தோன்றுகிறது. தோழியும் தானே கேட்டுக்- கொண்டிருக்கிறாள். அவள் உள்ளத்திலும் அந்த ஊக்கம் பிறக்கும் அன்றோ?
இயற்கையின் ஐம்புல விருந்தும் – இல்லை நாற்புல – விருந்தும் – இந்த நாடும் – காதல் வாழ்வும் – எல்லாம் கலையாய் இவளை அழகு செய்வதனையே முடிந்த முடிபாகக் கொண்டுள்ளன! இவளும் இவனும் கூடிய கூட்டம் கடவுட் கூட்டம் ; இயற்கைக் கூட்டம். எல்லாம் இதற்- கெனவே படைக்கப்பெற்றுள்ளன. படைப்பின் முடிமணி அவள். இனி ஏன் தயக்கம்?
11
“இதனை அவள் கண்களே, காட்டவில்லையா? என்ன அழகு! நீரில் பூத்த குவளை ஈரமற்று நிற்குமா? அந்தக் குவளையே இந்தக் கண்கள். ஆனால், மையுண்ட கண்கள் விரிந்து பரந்து விளங்குகின்றன. ஈரப் பார்வை ! நிழல்- தரும் பார்வை ! களங்கமற்ற பார்வை! கள்ளைக் குடித்- தவன் களிப்புப்போலத் தன்னையும் அறியாது இன்பமும் அன்பும் பொங்கும் பார்வை! என்னைக் கண்ட களிப்பில் எல்லாவற்றையும் மறந்துநிற்கும் மகிழ்ச்சிப் பார்வை கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத மடப்பம்- பெரு நம்பிக்கை -உறுதி- என் மேல் உறுதி- தோழி மேலும் பாயும் உறுதி – இத்தகைய நம்பிக்கையே வடிவ- மான பார்வை ! பார்வையில் எவ்வளவு பொருள் ஆழம்? எவ்வளவு அன்பு? எவ்வளவு இன்பம்? எவ்வளவு நம்பிக்கை ?
“நெஞ்சே! இத்தகைய நோக்கம் அன்றோ நம்மை இங்கே கொண்டு வந்துவிட்டது. என் செய்வது ?” என்கிறான். அவள் நம்பிக்கை பாழாகுமா? கண்டாய் அல்லையோ இயற்கையின் போக்கினை! அவளுக்காக அன்றோ அனைத்தும்! ஆதலின், ஆறுதல் உண்டு” என்று அவன் அடிமனத்தே ஓர் எண்ணம் பூத்துக் குலுங்குகிறது; தோழியின் அடிமனத்திலும் அத்தகைய எண்ணம் பழுத்து இனிக்கின்றது.
தம் வள்ளல் மலையமானின் வீரம்…தாம் கண்ட கலை நுட்பம்.. கா தலின் அழகு…அறத்தின் வீறு இத்தனை யும் தோன்ற இந்தச் சிறு கதையினைக் கபிலர் 12 வரியில் பாடியுள்ளார் :
மலையன் மா ஊர்ந்து போகிப் புலையன்
பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு அவர்
அருங்குறும்பு எருக்கி அயர்வுயிர்த் தாஅங்கு
உய்த்தன்று மன்னே நெஞ்சே ! செவ்வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழுபலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலிவெள் அருவி ஒலியில் துஞ்சும்
ஊர் அல் அம் சேரிச் சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோண் ஏர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை ஒள் நுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ்மட நோக்கே.
-நற்றிணை – 77.
(மலையன் – மலையமான் காரி என்ற வீர வள்ளல்; மா- குதிரை; துடி-உடுக்கை; புலம்-நாடு; குறும்பு -அரண்; எருக்கி-அழித்து; அயர்வுயிர்த்தாங்கு- ஓய்ந்து அப்பாடா எனப் பெரு மூச்சு விட்டதுபோல; உய்த்தன்று – செலுத்தியது; மன்- “மிகுதி,” அதுவும் தீர்ந்தது’ என்பனபோன்ற குறிப்புப் பொருள் தரும் இடைச் சொல்; சினை-கிளை; தூங்கும் – தொங் – கும்; ஒலி – தழைத்த ; கங்குல் -இரவு; கோண் – வளைவு – வன்மை; ஏர்-அழகு; எல்-ஒளி; உண் கண் – மை பூசிய கண்.)
பின்னாளில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாட்டில் அகப்பாட்டே கடவுட் பாட்டாகியது வியப்போ?
– நற்றிணை நாடகங்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 1954, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
![]() |
தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (08 சனவரி 1901 – 27 ஆகத்து 1980) 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இறந்த ஆண்டு: ஆகஸ்ட் 27 – 1980. பிறந்த ஊர்: சிந்தாதிரிப்பேட்டை (சென்னை). மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். சிறப்பு பெயர்கள்: பன்மொழிப்புலவர்,…மேலும் படிக்க... |
