கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 53 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடாமறிகளுக்கு அகத்திக் கடாமறிகளுக்கு கொழையைக் கட்டிவிட்டு, எருமைக்கு ஒரு ‘குடங்கை’ புல்லை யள்ளிப்போட்டுவிட்டு… டீக்கடைப் பக்கம் போய்ட்டு வருவோம்னு புறப்பட்டான், குருசாமி. 

ஒரு கடவுக்குள்ளே நுழைந்து, காடுன்னு நெனைச்சுக் கடந்து, தெருவுக்கு வந்து பத்து கிட்டிருந்தேன். . . வீடுகள் தாண்டியிருப்பான். குப்பென்று ஒரு மணம், நாசிக்குள் புகுந்து, நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டது. ! மனசைக் கட்டி யிழுக்கிற ருசியான மணம். 

‘யார் வீட்டிலேயோ கோழிக் கறி கொதிக்குது,’ வாசம் ‘கம்ம்’ முன்னு அடிக்குது… நின்னு மோந்துபாக்க மனது சபலப்பட… அரை மனசோடு நடையைத் தொடர்ந்தான். 

‘திருவேங்கடம் சந்தையிலே முன்னூறு ரூவாய்க்கு ரெண்டு குட்டிக வாங்குனது. நல்ல அகத்திக் கொலையும் கருவேலங்காய்யும் தின்னு… வீட்லே வளருது. 

நல்ல பின் பார்வை. கடைசி ஆடிக்கு அறுத்துப் போட்டுட வேண்டியதுதான்… ஐநூறு ரூவாய்க்கு முதலாகிப் போகும் நாமளும் புள்ள குட்டிகளோட நல்லா – மனம் செழிக்க – கறி தின்னுக்கிடலாம்…’ கோழிக்கறி குழம்பு வாடை… கடைசி ஆடிக் கனவுகளை உசுப்பி விட்டது. கடாக்கறி ருசி மனசுக்குள் வந்து நின்றது. 

கோதைநாச்சி கறிக்குழம்பு வைச்சா… தனி ருசியாயிருக்கும். அவா கைப்பக்குவத்துலே அப்படியோர் நேர்த்தி. பொடிப் பொடியாக அறுத்து… அளவோட மசாலா சேர்த்து… தேங்காய் தட்டிப் போட்டு கொதிக்க வைச்சு, நல்லெண்ணை ஊத்தி ஏறக்கி வைச்சுட்டாள்னா… வாசம் எட்டு வீட்டுக்கு எட்டும். குழம்பு ருசியிலே கூடுதலாக கொஞ்சம் சோறு இழுக்கும்… 

டீக்கடை வந்துவிட்டது. குருசாமி ஒருகல்லில் உட்கார்ந்தான். 

‘ஏய் தமிழ்மணி, இங்கே ஒரு டீ குடப்பா’ 

‘கொஞ்சநேரமாகும்…’ 

‘ஏன் தண்ணீசூடேறலியா?’ 

‘ஆமா…’

‘சரி… போடுறபோது எனக்கும் ஒரு டீயைப் போடு’ 

கடையில் உட்கார்ந்தவர்கள் ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்த விஷயத்தை நிதானித்துக்கொண்டு, கலந்துகொள்ளலாம் என்று கவனிக்க ஆரம்பித்தான். 

இந்த டீக்கடை இருக்கிறதே… இது ஒருமாதிரியான ஒலி பரப்பு நிலையம். இங்கு பேசப்படாத விஷயங்களே இருக்காது.. ஊர் ரகசியம் முழுதும் தெரிந்துகொள்ள ஒருவன் ஆசைப் பட்டால்… இங்க தினம் வந்து போகிற வாடிக்கையை வைத்துக் கொண்டால் போதும்… 

அடிக்கடி அரசியல் விவாதத்தைக் கேட்டுக் கொள்ளலாம்… சினிமாக்களைப் பற்றிய சர்ச்சைகளைக் கேட்கலாம். 

இன்றைக்குக்கூட… புல்லுக்கு போற சாக்கில் பெண்ணும், குளிக்கிற சாக்கில் வாலிபனும் போய்… ஜோடிசேர ஆசைப்பட்டு ஏமாந்த கதையை பேசி முடித்துவிட்டு… 

எங்கோ ஒரு கிராமத்தில் நடந்த ஜாதிக் கலவரத்தில் சாவு எத்தனை, காயம் எத்தனை, என்ற விஷயத்தைப் பேசிக் கொண்டிருந்தனர். 

கடைசியில், கடாயைப் பற்றிய பேச்சு தற்செயலாக வந்தது. 

“நேரந்தவறாம தின்னுப்புட்டு, வேலை ஜோலி இல்லாம கீகாட்டுகடாய் கணக்கா அலையுதீயே,” என்று ஒருவன், மற்றொ ருவனைத் திட்ட… “அதென்ன கீகாட்டுக் கடா?” என்று வசவுக்கு விளக்கம் கேட்க உன்ன கீகாட்டுக் கடா?” 

பேச்சு, கடாப்பக்கம் திரும்பிவிட்டது. 

குருசாமி கூடுதல் அக்கறையுடன் பேச்சைக் கவனித்தான். இடை இடையே இவனும் பேச்சு கொடுத்தான். ஒரு பெரியவர், மேல் காட்டுக் கடா; கீழ் காட்டுக்கடா, இவற்றுக்கிடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கிக் கொண்டிருந்தார். 

குருசாமி பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான். உற்சாகமாகி விட்டான். பொதுவாக குருசாமிக்கு கறி என்றால் ரொம்பப் பிரியம். வாரத்தில் ஆறுநாட்களுக்குப் போட்டாலும்… மனம் சலிக்காமல் ஆசையோடு பிடித்து மாட்டுவான். கிராமத்தில் எல்லோருக்குமே கறி என்றால் கொண்டாட்டம் தான். என்றாலும்… இவனுக்கு சற்று கூடுதலான ஆசை. 

கோதைநாச்சி கூட குறுஞ்சிரிப்போடு கூறுவாள், “கறிக் கொழம்பு காய்ச்சிட்டா… அதுக்குன்னு ஒரு வவுறு வைச்சிருப்பீக…” 

“நெசந்தான்னு” இவனும் சிரித்துக்கொள்வான். வயிறும் மனசும் நிறைந்த திருப்தியோடு கை துடைத்துக்கொள்வான், 

“நானும் எம்புட்டோ இடங்கள்லே கறி சாப்பிட்டிருக்கேன்… ஆனா, ஓங் கைப்பக்குவம் – இந்த ருசி – எங்கயும் பாக்க முடியலே” மனசில் வஞ்சகமில்லாமல் பாராட்டி விடுவான். 

புகையோடு மல்லுக்கட்டி மூச்சுத்திணறி, அடுப்பங் கரைக்குள் பட்ட கஷ்டமெல்லாம், புருஷனின் இந்த ஒரு வார்த்தையில் மறந்தே போகும், கோதை நாச்சிக்கு! 

கோதை நாச்சி கையில் மந்திரம் கிந்திரம் வைத்திருக் கிறாளோ… என்ன மாயமோ! 

திருப்பரங்குன்றத்துக்குப் பக்கத்திலே ஒரு காட்டுக்கோவில். அங்கு கடாவெட்டி பொங்கல் வைத்து. மொட்டையடிக்க ஒரு உறவினர் குடும்பத்தோடு புறப்பட்டார். குருசாமியையும் வற்புறுத்தி அழைத்தார். சரியென்று குருசாமியும் போயிருந்தான். 

மதுரையிலேயே பிரபலமான சமையல்காரர் வரவழைக்கப் பட்டிருந்தார். கடாயும் நல்ல வளர்ப்புக்கடா. பின் வரிசை ரொம்ப அழகா – அகலமாக – இருந்தது. நிறைய கொழுப்பு. 

கறிக்குழம்பு நல்ல ருசியாகத்தானிருந்தது. ஆனாலும் கோதை நாச்சி சமைக்கிற குழம்பு இருக்கிறதே, அந்த ருசி வரவில்லை ; அது ஒரு தனி ருசி; இது ஒரு ருசி… என்னதான் மாயமோ… மந்திர ஜாலமோ ! 

குருசாமி வீட்டிலே ஒரு பூனை இருந்தது. எலிகளைப் பிடித்துத் தின்னு, வீட்டுச் சோற்றைத் தின்னு அந்தப் பூனை கொழுப்பேறியிருந்தது. ஒட்டுக்கம்பு நிறத்துப் பூனை. கடுவன் பூனை, அதற்கு என்ன சனியன் பிடித்ததோ, தெரியவில்லை குணம் மாறிவிட்டது. குழம்புச் சட்டியை உருட்டத் துவங்கியது. செல்லப்பிராணியாக இருந்த பூனை தொல்லைப் பிராணியாக மாறிவிட்டது. 

பூனையை குத்துவதில் கெட்டிக்காரன் என்று பெயர் பெற்ற மயிலேறியை வரச் சொல்லி, குத்தச் சொல்லியாகிவிட்டது. குத்திவிட்டான், கொழுத்த – கடுவன் பூனைக் கறி எவ்வளவு ருசியாயிருக்கும்னு மயிலேறி கதை கதையாகச் சொல்ல… குரு சாமிக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது. 

மயிலேறியையே சமைக்கச் சொன்னான். பக்கத்து வீடுகளிலே உள்ளவர்களை கறி சாப்பிடக் கூப்பிட்டான்… 

“பூனைக் கறியா! ஐய்யஹ்யே… ச்சே” என்று முகத்தைச் சுளித்துவிட்டனர்; சில பெண்கள், பொல்லாப் பாவம் என்று பயமுறுத்தினர். 

அருவருக்காமல் – பயப்படாமல் நாலைந்து பேர்தான் தேறினர். அவர்களுடன் குருசாமியும் ஆவலோடு ருசி பார்த்தான். 

ஒரு கவுச்சி வாடை, குடலைக் குமட்டியது. மூணு நாலு துண்டுகளுக்கு மேல் சாப்பிட முடியவில்லை.போது 

அந்தக் கவுச்சி வாடை ரெண்டு மூணு நாளைக்கு மூஞ்சியிலே அடித்துக்கொண்டிருந்தது. குமட்டல் எடுத்துக்கொண்டே யிருந்தது. வரப் போவதாக வாந்தி மிரட்டிக்கொண்டே யிருந்தது. ரொம்பவே அவஸ்தைப்பட்டுவிட்டான்… 

கோதை நாச்சி அதைச் சொல்லி கேலி பண்ணி,ஒரே சிரிப்பாணியாய் சிரிப்பாள்… 

ஏதோ ஒரு ஜோலியாய் ஒரு சமயம் கொச்சிக்குப் போயிருந்தான். ஒரு சின்ன – ஓட்டலுக்குள் நுழைந்தான். சப்ளையர் குருமா கொண்டுவந்து வைத்தான். 

“ஆட்டிறைச்சியா, மாட்டிறைச்சியா?” என்று கேட்டான். “கடாக்கறிதான் எப்பவும் சாப்பிடுதோமே… மாட்டுக்கறியை இங்க ருசி பார்க்கலாமா!” என்ற யோசனையில், மாட்டிறைச்சியைக் கேட்டான். 

“நம்ம ஊர்கள்லே இது, ஒரு ஜாதி மட்டும் திங்கிற மாமிசம். நம்ம கூட்டாளிக சாப்பிட்டா… அம்புட்டுத்தான். ஊரை விட்டே ஒதுக்கி வைச்சாலும் வைச்சுப் போடுவாங்க…” என்று நினைத்துக்கொண்டான். அவன் நினைத்த அளவுக்கு மாட்டிறைச்சி மோசமாக இல்லை. பொடி பொடி துண்டுகள். நல்ல மசாலா. நல்லா வேக்காடு. நன்றாக ருசியாகத் தானிருந்தது. 

குருசாமி புறாக்கறி சாப்பிட்டிருக்கிறான் ; மயில் கறி சாப்பிட்டுப் பார்த்திருக்கிறான்; முயல் கறி ருசி பார்த்திருக் கிறான். பன்றிக் கறியும் வழக்கமாய் சாப்பிடுவான். மூலத்துக்கு நல்லதாமே ! கோழிக்கறியும் அவனுக்குப் பிரியம்தான். ஒரு சமயம் நரிக்கறிகூட தின்றிருக்கிறான். 

கொய்யாத் தோப்பில் தொல்லை பண்ணிய நரிகளுக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள். தோட்டத்தின் கரைகளில் புதைத்து வைத்துவிடுவார்கள். மிதித்தால், வெடித்துவிடும். ஒரே ராத்திரியிலே மூன்று நரிகள் மல்லாந்து கிடந்தன. 

“இளைப்பு, தகை”க்கு நல்லதுன்னு கேள்விப்பட்டு, நரிக் கறியையும் சமைத்துத் தின்றான். கறியில் ருசியில்லை. சக்கை சக்கையாக இருந்தது. 

கறி என்றாலேயே அவனுக்கு பிரியம் என்பதால்… எந்த மாமிசமாக இருந்தாலும், ருசி பார்த்துவிட ஆசைப்படுவான்; ஆனால், கடாக்கறி என்றால், கதையே வேறு; குடியிருந்து தின்பான்; சலிக்கவே சலிக்காது. அதிலும், கோதை நாச்சி கைப்பட்ட கறி என்றால்… கேட்கவே வேண்டாம். பிடித்து வளைத்து விடுவான். மூச்சு முட்ட பிடித்து விடுவான். 

இத்தனையிலும் குருசாமிக்கு ஒரு விஷயம் மர்மமாகவே இருந்தது. கோதைநாச்சி சமைக்கிற கறிக்கு மட்டும், ஏனிப்படி ருசி ? என்ன மாயம்? 

இவளைவிட ராஜபாளையம் சித்தி சமையல்லே ரொம்பத் தேர்ச்சி. அவங்க வீட்டிலேயும் கறிக்குழம்பு பல தடவைகள் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறான். ஊஹூம், இந்த ருசி வந்ததில்லை ! என்ன காரணம்…..? மனசுக்குள் முட்டிக் கொண்டு நின்ற கேள்வி. 

அதை கோதைநாச்சியிடமே கேட்டான்… “என்னதான் சொல்லு… கறிக்குழம்பு விஷயத்துலே ஒன்னை ஜெயிக்க இந்த நாட்லேயே ஆளில்லை… ஆமா” 

கோதை நாச்சி பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டாள். 

“நீங்க எப்பவும் இப்படித்தான் சொல்றீங்க… நமக்கு தெனம் கறி திங்கிற மாதிரியாயிருக்கு? நம்மளை மாதிரி ஏழை பாழைகளுக்கு எப்பவாவது…. நல்லது பொல்லதுக்குத் தானே கறியை கண்ணுலே பாக்கமுடியுது… அதனாலே அப்படி அதிசய ருசியா இருக்கும்…” 

“நீ சொல்றதும் வாஸ்தவம் தான்…. ஆனா ருசி விஷயத்துலே கதையே வேறு, நீ தான்… தெரியுமா? ஆ…ங்.. கோதை போன பங்குனியிலே விளாத்தி குளம் போயிருந்தேனில்லே அங்க ஒரு வீட்டிலே கறிக்குழம்பு சாப்பிட்டேன்… ரொம்ப ருசியா யிருந்துச்சு. அன்னைக்குத்தான் நெனைச்சுக்கிட்டேன். கோதை நாச்சிக்கும் மிஞ்சின ஒரு நாச்சியாள் இங்க இருக்காள்னு.” 

“… இந்தாங்க டீ” 

டீ இப்போதுதான் வந்தது. குடித்தான். காத்திருந்தாலும் நஷ்டமில்லை. டீ ருசியாக இருந்தது. இந்த அடர்த்தியிலே ருசியிலே – வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது. 

பெரியவர் இன்னும் கீழ்காட்டுக்கடா, மேல் காட்டு கடா பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். 

“இராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோவில் போற ரோடு இருக்குதில்லே, அதுக்கு மேற்கே உள்ளது மேகாடு. கெழக்கே உள்ளது கீகாடு. கீக்காட்டுக் கிடாய்க ராஜபாளையம் சந்தைக்குப் போனா, ரொம்பக் கிராக்கியா விலைபோகும். மேகாட்டுக் கடாய்களைவிட, கீகாட்டுக் கடாக்களுக்கு முப்பதுரூவா, நாப்பது ரூவா விலை கூடுதலா கிடைக்கும்…”

குருசாமிக்குப் பொறுக்கவில்லை. குறுக்கிட்டான்.

“என்ன காரணம், மாமா…?” 

பெரியவருக்கும் ரசிகர் கிடைத்த உற்சாகத்தில் மீசையை தட விவிட்டுக்கொண்டார். 

“காரணமென்ன, காரணம்! கீகாட்டுக்கிடாக்கள்லே கறி ரொம்ப ருசியாக இருக்கும்…” 

இவனுக்கு ஏதோ சூட்சுமம் பிடிபடுவது போலிருந்தது. ஆர்வம் அதிகரிக்க… அப்படி ஒரு சங்கதி இருக்கா? என்று வியந்தான். 

“ஆமா.. கீக்காடுங்கிறது கரிசல்காடு. வேற மண்லே வளர்ற கொழைதழைகளைவிட.. கரிசல் மண்லே வளர்ற கொழை தழைக ரொம்பச் சத்தானது. மேகாட்டுலே இருக்கிற அகத்தி கருவேலங்காய்களைவிட சத்து கூடுதல். இந்தக் கொழை தழைகளை கருசக்காட்டுக்கடா மேய்றதாலே… கறி ரொம்ப ருசியாயிருக்கும். இந்த ருசிக்காகத்தான் விலை தூக்கலாகக் கிடைக்கும்.” 

“நீங்க சொல்றது ரொம்பப் புதுசா இருக்கே. மாமா…?” குருசாமிக்கு மலைப்பாக இருந்தது. 

“இதென்ன அதிசயம்? நம்ம காட்டுக் கடாவை விட… விளாத்திகுளம் ஏரியா கடாக்கறி இன்னும் ருசியாயிருக்கும். என்ன காரணம்னு நெனைச்சே? நம்ம கருசலை விட… அந்தக் காட்டுக் கருசல் ரொம்ப உசத்தி. அதை நெய்கருசல்னு சொல்வாக. அதுலே வளர்ற கொழைதழைக ரொம்பச் சத்து….” 

இவனுக்கு ரொம்ப நாளாக திகைப்பாக இருந்த விஷயம் இன்று விளங்கிவிட்டது. மந்திரமும் மாயமும் கோதை நாச்சியின் கையில் இல்லை, இந்தக் கரிசல் மண்ணிலல்லவா, இருந்திருக்கிறது…! 

அடடே.. கரிசல் மண்ணிற்கு இப்படியோர் மகிமை இருக்கிறதே! அந்தப் பெருமிதம் நெஞ்சில் பொங்கி வழிய…. பெரியவரைப் பார்த்தான் குருசாமி… 

“கருசக்காடுன்னு பஞ்சக்காடுன்னு நெனைச்சுக் கிட்டிருந்தேன்… இப்படியோர் பெருமை இருக்குன்னு… நீங்க சொல்லித்தானே, இப்பப் புரியுது?” 

“போடா… மண்ணுக்குப் பெருமை இருந்து என்ன செய்ய? நாக்கு வழிக்கவா ? உனக்கும் எனக்கும் இந்த மண்ணு உரிமையாயில்லியே…. என்று சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுப் புறப்பட்ட பெரியவர், ஒரு பெருமூச்சு விட்டார்…” 

பெருமிதக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த அவன் மனசில் சட்டென்று வாழ்க்கை நிஜம் உறுத்தியது. சோகத்தில் கனந்தது. 

பெரியவர் முதுகையே பார்த்தான், குருசாமி… 

– 1985, தாமரை.

– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *