திருப்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 218 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காற்று குளுமையாக முகத்தில் மோதியது. வேப்பம் பூவாசம் மனதைக் கிறங்கடித்தது. உல்லாசமாய்க் காற்று வாங்கியபடி கையைப் பிடித்துக் கொண்டுவரும் அமலின் பெரிய, பெரிய கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் திணறியபடி உலவிக் கொண்டிருந்தேன். 

“ஏனப்பா அங்கை…. இவ்வளவு காத்து இல்லை…” 

“அங்கை மரங்கள் குறைவு தானையப்பன் அதுதான் காத்துக் குறைவு…” 

“ஏனப்பா மரங்கள் குறைவு…?” 

அவனது கேள்விகள் ஒருபோதுமே முடிவடைவதில்லை. ஒவ்வொரு பதிலால் நான் முற்றுப்புள்ளி வைக்க முனைகிறபோதும் அவன் அதற்கு மேலான கேள்விகளை நீட்டிக் கொண்டு போவான். 

“ஏனப்பா காகம் கறுப்பு…” 

“ஏன் கொக்கு கறுப்பு இல்லை…” 

”குயில் என்னெண்டு வடிவாக்கூவுது….” 

“மயில் கூவமாட்டுதோ…” 

அடுக்கடுக்கான கேள்விகள் அவனிடம் இருக்கும். அந்தக் கேள்விகளை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் நான் திணறும் சமயங்களில் உமாவுக்குத் தாங்க முடியாத சிரிப்பாகிப் போகும். 

“என்னைப் போட்டு இந்த ஆட்டு ஆட்டின்னீங்கள் தானை அனுபவியுங்கோ….” என்பதாய் அவள் கண்கள் கேலி பேசும். 

சில வேளைகளில் அவள்கூட வசமாய் அமலனிடம் மாட்டிக் கொண்டதுண்டு தான். எனினும் அவள் புத்திசாலித்தனம் யாருக்கு வரும்!

“அம்மா சமைக்கவேணுமடா. அப்பாவைக் கேட்டால் எல்லாம் சொல்லுவார்….” 

என்று என்னிடம் மாட்டியும் விட்டிருக்கிறாள். சில வேளைகளில் எங்கேனும் புறப்படும்போது, அவனது மனம் அலைச்சலுற்றிருக்கும் போது கேள்விகளால் ஆக்கினைப்படுத்தும் மகன்மீது எரிச்சல் பீறிட்டு அவனை அதட்டும் அளவிற்கு நிலைமை நீண்டிருக்கிறது. 

அவ்வேளைகளிலெல்லாம் அவள் எங்கிருந்தேனும் ஓடிவந்து ஆபத்பாந்தவராய் குழந்தையை மீட்டெடுத்திருக்கிறாள். 

“உங்களுக்கு வேலை கூடவெண்டா அவனிலை ஏன் காயுறீங்கள்? ஏன் அவனைத் திட்டி அவனிண்டை ஆர்வத்தை ஒடுக்குவான்…?” 

என்றவாறே அமலனை இழுத்து அவனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு போய்விடுவாள். 

இப்பொழுதெல்லாம் என்னைவிட அமலன்மீதில் அவள் கூடுதல் அக்கறை காட்டுகிறாளே என்று கூட உள்ளே ஒருதுளி பொறாமை எட்டிப்பார்க்கிறது. அதனாலான ஒருவித எரிச்சல்தான் அமலன் மீதில் கோபமாய் வெளிப்படுகிறதா என்று தெளிவாக இருக்கும் சிலவேளைகளிற் தோன்றுகிறது. 

அவசரகதியில் இயங்குகின்ற வாழ்க்கையின் விரைந்த ஓட்டத்தில் குடும்பத்தோடு மகிழ்ந்திருப்பதென்பதற்கே நேரம் போதாமல் போய்விடுகிறது. இயந்திரகதியிலான வாழ்க்கை பணத்தைத் தேடி ஓடுகிறஓட்டம். வாழ்க்கையை ஓட்டுவதற்கு இந்த ஓட்டம் தேவையாய்த்தானேயிருக்கிறது. ஆற அமர அவளோடு பேசுவதற்கோ, பிள்ளையின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்கோ நேரம் இருப்பதில்லை. தேவைகளைத் தீர்ப்பதற்கான உழைப்பைப் பற்றியும், அந்த உழைப்பின் மூலம் வரும் ஊதியத்தைப் பெருக்கல் பற்றியுமே மனம் கணக்குப் போட்டுக் கொள்கிறது. 

உமா அடிக்கடி சொல்லிக்காட்டுவதுண்டு 

“இப்படிக் காசு, காசெண்டு மாய்ஞ்சு காசு தேடிப் போட்டு பிறகு நிமிர்ந்து பார்த்தால் உங்கட இளமைக் காலமே பறந்து போயிருக்கும். உங்கட பிள்ளை நல்லாய் வளர்ந்திருக்கும். அதுக்குப் பிறகா அவனோடை விளையாடப் போறியள்…” 

அவளைக் காதலித்தகாலம் மிகவும் ரம்மியமாக இருந்தது. இப்போது கூட அவளைக் கைப்பிடித்த பிறகும் கூட அந்தக்காலம் மனதுக்கு எவ்வளவு இதமாயிருக்கிறது. எவ்வளவு ஆறுதலான காலம், துடியாட்டம் மிகுந்திருந்த காலமேயென்றாலும், படிக்கிற போது எவ்வளவு பொறுப்புகளற்றிருந்த காலம், வெறுமனே படித்தலும், விளையாட்டு மாயிருந்த காலத்தில் எந்தத் தொல்லைகளுமற்று, எந்தக் கடமைகளுமின்றி அவளை ஆசை ஆசையாய்க் காதலிக்க முடிந்தது. சின்னச் சின்னதாய் ஊடல்களோடு, நிறைய, நிறைய சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டு, அந்தக் காலம் இனி வரவே வராது. அப்படி அப்பாவித்தனமாய் வளைய வந்த உமாவை இனிக் காணவே முடியாது. அவள்தான் இப்போது அமலனுக்கு அம்மாவாகிவிட்ட பாரிய பொறுப்பைச் சுமக்கவேண்டிய வளாகிவிட்டாளே. 

“அமலனுக்கு அம்மா மட்டுமில்லை, உங்களுக்கு மனிசியும் கூட…” 

என்று என் எண்ணப்போக்குணர்ந்து செல்லமாகக் குட்டியுமிருக் கிறாள் உமா. 

எனினும் கூட சிலவேளைகளில் களைத்துச் சலிக்கின்ற வேளைகளில் அவளிடத்தில் பழைய உமா தோற்றம் கொள்வதை உணர முடியும். கனிவாய் அருகில் வந்து கேசம் வருடும் அவள் அணைப்பில் மனம் பாரம் நீங்கி இலேசாகி விடும். எனினும் அந்தப்பழைய உமாவை ரசிக்கமுடியாமல் அலுத்துக்களைத்த சலிப்பில் உறக்கம் கண்களைத் தழுவிவிடும். 

எப்பவோ இரவிரவா என்னை நினைச்சு சிவராத்திரி எண்டு சொன்ன ஞாபகம்… நேற்றுப் பாத்தா கும்பகர்ண நித்திரை….” 

சீண்டல் இப்போதெல்லாம் உமாவுக்கு மிக எளிதாய்க் கை கூடி விட்டது. 

“நான் என்ன செய்ய பயங்கரக்களை…” அசடு வழியச் சொல்வேன். 

“சரி… சரி… அதுக்காக இனியொரு சாட்டும் சொல்ல வேண்டாம்….” 

எப்படி அவளால் சட்டெண்று கனிவுக்கு மாறமுடிகிறது…? தாய்மை ஒரு பெண்ணை அப்படிப் புடம் போட்டு விடுகிறதா…? 

எப்போதேனும் அரிதாய் வேலையை முடித்து ஓய்வாய் இருக்கிற பொழுதுகளில் அவளும், அமலனும் மனதுக்குள் எட்டிப் பார்த்து நாம் இங்கே இருக்கிறோம் என்பதாய் நகைப்பார்கள். அப்படி எட்டிப்பார்த்த ஒரு வேளையில்தான் மனதுள் தாங்க முடியாத ஏக்கம் எட்டிப்பார்த்தது. 

உமா என்னை என்பாட்டில் விடுவது எனது நிம்மதிக்காகவே என்றபோதும், அமலனை என்னோடு ஒன்றவைக்க எப்படியெல்லாம் பாடுபடுகிறாள் என்பது புரிந்தது. 

ஆரம்பகாலங்களில் அமலன் பிறந்த புதிதில் அவன் என்னோடு ஓட்டிக் கொள்ளவேயில்லை. எதற்கும் அம்மாதான் வேண்டும். அதற்கு நான் பெரும்பாலும் பகல்பொழுதில் வீட்டில் நிற்காதது காரணமாய் இருக்கலாம். ஒருநாள் எனது நண்பன் வீட்டுக்கு வந்த பொழுது அமலன் என்னிடம் வராமல் பயந்து கத்திய போது என்முகம் எனக்கே அந்நியமாய்ப் போயிற்று. நண்பன் குழந்தையின் இயல்பைப் புரிந்து கொண்டபோதும் எனக்கு அது மிக அவமானமாகவே இருந்தது. அந்த அவமானம் எனக்கு ஏற்பட்டதை உமா சட்டென்று ஊகித்துக் கொண்டாள். அந்த வருத்தத்தை என்னிடமிருந்து ஒதுக்குவதற்காக அவள் எடுத்த முயற்சியாலேயே இன்று அமலன் என் கையைப் பற்றிபடி எதற்கெடுத்தாலும், “இது ஏனப்பா….. அது ஏனப்பா…” என்று வினாத்தொடுத்தபடி யிருக்கிறான். 

அவள் எடுத்த அக்கறையினால் இன்று அமலன் என்னோடு ஒன்றிவிட்டபோதிலும், அவனுக்கான நேரத்தை நான் ஒதுக்கியது மிகக்குறைவோ என்றே எனக்குத் தோன்றுகிறது. அமலனுக்கான நேரம் மட்டுமல்ல…. அவளுக் கான நேரமும் கூட…. 

அவளோவெனில் நாளும் பொழுதும் எனக்காகவே… எனது நலனைச் சிந்தித்தே தனது கருமங்களை ஆற்றுகையில், நானும் கூட அவர்களுக்காகவே உழைத்தாலும், அது பணவடிவில் அவர்களைச் சேர்கிறதே தவிர மனரீதியில் அவர்களுக்கு நிம்மதியை அளிக்கக்கூடியதாய் இல்லையே… 

உறுத்தல் உள்ளூறி அதன் உச்சத்தை எட்டிய தருணத்தில் தான் ஒரு சில நாள்களேணும் உழைப்பை மறந்து அவர்களை உற்சாகப் படுத்தி மகிழ்விக்கவேண்டும் என்று தோன்றிற்று. அதன் விளைவாகவே ஊருக்கு வருகின்ற எண்ணம் முளைவிட்டது. 

ஊரில் எங்களுக்குத் தேவையான அமைதி கிடைத்தது. இனிய மரங்களிலிருந்து வரும் காற்றோடு ரம்யமாய் வலம் வரமுடிந்தது. இரைச்சலில்லாத ஊரும், அமைதியான கோயிலும், பறவைகளின் கீச்சிடலும் எங்களது பழைய வசந்தகாலத்தை எங்களிடம் ஞாபகப்படுத்தின. அமலனுக்கோ புதிய, புதிய கேள்விகளைத் தூண்டிவிட்டன. 

வேப்பமரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் அவனை ஏற்றி ஆட்டியபடியிருந்தேன் நான். 

மரத்தின் கீழிருந்த கல்லில் அமர்ந்தபடி எங்களது அப்பா, மகன் உறவுமுறையை ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள் உமா. 

“இன்னும் இறுக்கி ஆட்டுங்கோ அப்பா’ 

அவன் குதூகலிக்கும்படி இன்னும் பலமாக ஆட்டினேன். 

மனது லேசாகிவிருந்தது. இப்படியே இங்கேயே தங்கிவிடலாம் போலிருந்தது. இந்தக் குதூகலத்தை இவ்வளவு காலமும் பிள்ளை யிடமிருந்து பறித்துவிட்ட பாவத்திற்கு மனம் இரங்கியது. 

“அப்பா அப்பா நிப்பாட்டுங்கோ..” கயிற்றை இறுக்கிப் பிடித்தபடி அமலன் பதகளித்தான். 

நான் பதறிப்போய் கயிற்றை நிறுத்துப்பிடித்து, 

“என்னப்பன்…” என அவனை ஆதுரமாய்ப் பார்த்தேன். உமாவோ கல்லைவிட்டே எழுந்துவிட்டாள். 

அமலன் ஒன்றும் சொல்லாமல் இறங்கி ஓடினான். ஓடிப்போய் ஒரு செடியில் அமர்ந்திருந்ததேன் நிறத்து வண்ணத்துப்பூச்சியை உற்றுப்பார்த்தான். உமா ஆசுவாசமாய் பெருமூச்சு விட்டாள். 

“என்னவெண்டு சொல்லாமல் எப்பிடிப்பயப்பிடுத்திப் போட்டான்…” நானும் மரத்தின் கீழிருந்த கல்லில் உட்கார்ந்தேன். 

“அப்பா, அதென்னப்பா அது…” அமலன் திரும்பி ஓடிவந்து என் கையை பற்றி இழுத்தான். 

“அது வண்ணத்துப்பூச்சியப்பன்…” 

“அதுக்கு மட்டும் ஏனப்பா வடிவான செட்டை…” 

“அது அம்மாவுக்குத்தான் தெரியும். அம்மாட்டைக் கேட்டுப் பாரப்பன்…” 

“ஏனம்மா….” 

“அது ஏனண்டா அப்பன் பூச்சிகளிலையே நல்ல பூச்சி வண்ணத்துப்பூச்சிதான். அதுதான் கடவுள் வண்ணத்துப் பூச்சிக்கு வடிவான செட்டை குடுத்தவர்..” 

“அப்ப கடவுள் எனக்கும் வடிவான செட்டை தருவாரோ?’ 

“ஓ… வளரும் வரைக்கும் நல்லபிள்ளையா இருந்தா பிள்ளை இறக்கைகள் செய்யிற அளவுக்கு கடவுள் அறிவைத் தருவார்…” 

“அப்ப ஏனம்மா உங்களுக்கு இறக்கைகள் செய்யிற அறிவைத் தரேல்லை கடவுள்…” 

“நான் நல்ல பிள்ளையா இருக்கேல்லை, குழப்படி பண்ணீற்றன் போலை கிடக்கு…” 

“என்னம்மா குழப்படி செய்தனீங்கள்…” 

“ஒண்டுமில்லை…” என்றவள் ரகசியமாய் என்புறம் திரும்பி ‘அப்பாவை ‘சைட்’ அடிச்சதுதான்” என்றாள். 

“நீங்களும் குழப்படி செய்தனீங்களோப்பா…” 

“பின்ன, நான் மட்டுமோ…” அவள் என் தோளைப் தட்டி வம்புகிழுத்தாள். 

அமலன் மறுபடியும் அந்த வண்ணத்துப்பூச்சியைத் தேடிப் போனபோது நானும் அவளும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்தபடி, அசையாமல், காலமே திகைத்து நின்று விட்டாற்போல… பார்வையால் பேசியபடி… அந்த நாட்கள் திரும்பவும் வந்துவிட்டதா என்ன…? 

“அது பறந்து போட்டுது அப்பா…” என்றவாறே ஓடிவந்த அமலனின் சிணுங்கலில் நாங்கள் கலைந்தோம். 

“ஏனப்பா இஞ்சை மட்டும், நிறைய பூச்சிகள் பறவைகள் இருக்கு…” 

“இஞ்சை நிறைய மரங்கள் இருக்கு அதுதான்…” 

“ஏன் அப்ப… எங்கட இடத்தை மரங்கள் இல்லை…”

“அங்கையும் மரங்கள் இருந்த எல்லாத்தையும் மனிசர் வெட்டிப் போச்சினம்…” 

“ஏன் வெட்டின…” 

“வெட்டினாத்தானை அங்கை வீடுகள் கட்டி மனிசர் வாழலாம்…” 

“இஞ்சையும் ஆக்கள் இருக்கினம் தானை…” 

“இஞ்சையும் இருக்கினம், அங்கை ஆக்கள் கூட… ஆக்கள் கூடக்கூட இடம் கூடத் தேவைப்படும் தானை…” 

“அப்ப மரங்களிலை இருந்த பறவை பூச்சியெல்லாம் எங்கை…”

“எல்லாம் வேறை இடம் தேடிப் போயிருக்கும்… அதிலை அரைவாசி அழிஞ்சிருக்கும்..” 

“ஏனப்பா மனிசர் கூட… பறவைகளும் பூச்சிகளும் குறைய…” 

“மனிசரை மாதிரி பறவைகளும், பூச்சிகளும் கூடத் தான் இருந்தது. காடுகளிலை தான் இவை இருக்கும். அதுதான் அவை வாழச் சுகமான இடம். மனிசர் தனக்கு இடம் தேவைப்பட, தேவைப்பட மரங்களை வெட்டி காடுகளை அழிச்சுப்போட்டினம். அதோடை பறவைகளும், பூச்சிகளும் குறைஞ்சிட்டுது. பலம் கூடின மனிசன் பலம் குறைஞ்சதை அழிச்சிடுறான்….” 

“பாவம் அப்பா…” அமலன் அந்த பறவைகளுக்காவும், பூச்சிகளுக்காகவும் பச்சாதாபப்பட்டான். 

“ம்… உங்கட பிரசங்கம் பிள்ளைக்கு விளங்கு மெண்டு இவ்வளவு சொல்லுறீங்கள்….” 

“அவன் கேட்கிற கேள்விகளுக்கு இப்பிடித்தான் சொல்லோணும்….”

“விளங்காட்டிக் கேக்கமாட்டான் எண்டு நினைக்கிறீங் களோ…”

“அப்படியில்லை உமா…. விளங்காட்டிலும் அவன் யோசிப்பான். யோசிச்சாத்தானை சில விடைகளைக் கண்டுபிடிப்பான்.” 

என் பதிலால் அவள் மலர்வது தெரிந்தது. பையனின் கெட்டித் தனத்தோடு கூட புருஷனின் புத்திசாலித்தனத்தையும் மெச்சுகிறாளோ…?

“எப்படித்தானிருந்தாலும், நீங்கள் சொன்னமாதிரி இயற்கையை அழிச்சு, அழிச்சு வெறும் செயற்கையான வாழ்க்கைக்குள்ளை தான் நாங்கள் போகப்போறம்…” 

திருப்தியில்லாத முணுமுணுப்போடு தேனீர் கலப்பதற்காக அவள் எழும்பிப்போனாள். 

“அப்பா இஞ்சை வாங்கோப்பா…” அமலனின் குரலுக்குப் பின் நானும் இழுபட்டேன். தும்பிகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் பின்னால் துரத்தி கமுகம் மடலில் அவனை இருத்தி இழுத்துக் கொண்டிருந்தபோது உமா தேனீர்க்கோப்பைகளோடு திரும்பி வந்தாள். 

“விளையாடினது காணும். அப்பாவும் மகனும் வந்து தேத்தண்ணி யைக் குடியுங்கோ…” என்றவள் திடுமென்று கத்தினாள். 

“பிள்ளையைத் தூக்குங்கோ அப்பா….” 

திடுக்கிட்டுப்போன நானும் பிள்ளையைத் தூக்கிய வாறே “என்ன…?” என்றேன். 

தேனீர்க்கோப்பைகளை வைத்துவிட்டு ஓடிவந்து அமலனை வாங்கியவள் கமுகமடலைச் சுட்டிக் காட்டினாள் கருங்குழவியொன்று. கமுகமடலில் உட்கார்ந்து கொண்டிருந்தது. 

“என்னப்பா அது….” 

“அது குழவி கடிக்கும்…” 

பிள்ளையைத் தூக்கியபிடி விடாமலே அவள் கல்லில் அமர்ந்தாள் குழவியை விரட்டிவிட்டு நானும் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்க, பார்வையைச் சுற்றிக் கொண்டிருந்த அமலன் சந்தோஷமாய் வீறிட்டான். 

“அதுக்கை போட்டுதப்பா குழவி….” 

அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு மரக்கிளையில் குழவிக் கூடொன்று குடுவை மாதிரி தோற்றம் கொண்டிருந்தது. 

“என்னப்பா அது….?” 

“அதுதான் குழவிக்கூடு..” 

“என்னண்டப்பா இவ்வளவு வடிவாக் கட்டினது…” 

அவனுக்குப் பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை. 

“ரெண்டுபேரும் உள்ளுக்குப் போங்கோ, நான் உதை என்னவாவது செய்து போட்டு வாறன்…” 

“என்னப்பா செய்யப்போறீங்கள்…” 

“மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்தப்போறன்…” 

”பாவம்…” உமா பரிதவித்தாள்… 

“பாவம் பாத்திட்டு பிறகு குழவி குத்தினாத் தெரியும்…?” 

“நீங்கள் தானையப்பா சொன்னியள் எல்லா உயிரினமும் சமனெண்டு. மனிசன் தான் அதை அழிச்சு சுயநலமா வாழுறானெண்டு. பிறகு நீங்களே இப்படிச் செய்யலாமோ…” 

அமலனின் கேள்வியில் விக்கித்து நின்றேன். 

“நல்ல வடிவான கூடு, அப்படியே கிடக்கட்டும்..”உமாவும் ஆமோதிக்கிறாள். மனதுக்குள் ஏதோ பிசைந்து அந்தக் கூட்டைக் கலைக்க மனசு வரவில்லை. கொஞ்ச நாட்களேனும் எங்களுக்கு இன்பத்தைக் கொடுத்த இடம். இந்த இடத்தில் ஒரு துன்பத்தை விதைத்துவிட்டுப் போக விருப்பமாயில்லை. குழவிகளின் கூடு குலைவது மட்டுமன்றி அவளாலும், அமலனாலும் கூட நிம்மதியாய் வரமுடியாது. ஏன் இவ்வளவு நாள் இன்பமும் கூட, இதன் முடிவில் இல்லாமலாகிவிடும். 

“சரி வாங்கோ போவம். அந்தக் கூடு அப்பிடியே இருக்கட்டும்…” “என்ன வடிவான கூடு அப்பா… இப்பிடி உங்களாலை செய்ய ஏலுமோ அப்பா…” 

“அப்பா குழப்படி பண்ணினதாலை கடவுள் குழவிக்குக் குடுத்த வரத்தை அப்பாவுக்குக் குடுக்கேல்லை யப்பன்…” 

என் முகம் போனபோக்கைப் பார்த்துக் கலகலத்துச் சிரித்தபடி சொல்கிறாள் உமா. 

எனக்கு இந்த சந்தோஷம் மட்டும் போதும் போலிருக்கிறது. 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை) 

தாட்சாயணி என்ற புனைபெயருடன் எழுதிவரும் பிரேமினி சபாரத்தினம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானப்பட்டதாரியான இவர் ஈழத்தின் இன்றைய தலைமுறைப் பெண் படைப்பாளிகளில் முன்னணி வகிப்பவர்களில் ஒருவர். 

சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டு எழுதிவரும் தாட்சாயணி பல சிறுகதை. கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றதோடு தரமான பல படைப்புகளைத் தந்து ஈழத்து எழுத்துலகில் தனது பெயரை ஆழமாகப் பதித்துக்கொண்டார். ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழந்த எழுத்தாளர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் அனுபவங்களை, அவலங்களை பெண்ணிலை நின்று இலக்கியமாகப் படைத்துக்கொண்டிருக்கின்ற இவர் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 2004 – “ஞானம்” விருதுபெற்ற சிறுகதைத் தொகுப்பு “ஒரு மரணமும் சில மனிதர்களும் ‘ நூலாக வெளிவந்துள்ளது. 

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *