தளிருக்குள் துளீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 395 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஈற்று மண்டலம்போல எண்ண மண்டலம் எப்போதும் எனக்கு அலை அடித்துக்கொண்டிருக்கும். மனசாலதான் வாழ்ந்து கொண்டிரு க்கிறேன். நான் இளமையான மனதோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னால் இயல்பாக இருக்க முடிகிறது. இயற்கையை ரசிக்க முடிகிறது. மனிதர்களை நேசிக்க முடிகிறது. இதனால்தான் அடிக்கடி மனது நொந்துகொள்கிறேன். மனது வெடித்து அழுகிறேன். 

குப்பைகள் போல் குவிந்திருந்த பிணங்கள். தொலைக்காட்சிக்குள் அந்தக் காட்சிகள். திரும்பத் திரும்ப அந்தக் கோரங்களைக் காட்டும் தமிழ் தொலைக்காட்சிகள். சுனாமி அனர்த்தம். உடலைக் குத்தி உருக்கும் காட்சிகள். என்னால் உணவு உண்ண முடியவில்லை. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த என் குழந்தை சொல்கிறாள்: 

“மம்மி அந்த பேபி நித்திரை கொள்கிறது” 

“ஓம் நித்திரை கொள்கிறது செல்லம். நீண்ட நித்திரை கொள்கிறது”. மனது சொல்லிக் கொள்கிறது. என்னுடல் நெஞ்சை நீவிக்கொண்டு எழுந்து வலிக்கிறது. உயிரற்ற பிஞ்சு முகங்களின் காட்சிகள். அதனைப் பார்க்கின்ற ஒவ்வொரு தாய்க்கும் நிச்சயம் நெஞ்சு வலித்திருக்கும். தாங்க முடியாத வேதனை. என்ன செய்யமுடியும். தாங்கித்தான் ஆக வேண்டும். கோர முகமாக மாறுகின்ற என் முகம். எனது மென்மையான உள்ளம் இருண்டு கவிகிறது. குரல் உடைந்து கர கரத்து நடுங்குகிறது. கறுத்த ஓர் அந்தி மயக்கத்தை என் இதயம் பரப்பிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிஞ்சு முகங்களின் பெற்றோர்கள் உயிரோடு இருந்தால் எத்தனை வேதனை அடைவார்கள். ஒரு தாயின் வேதனையை பரிபூரணமாக உணர்ந்து கொள்கிறேன். உயிரற்ற புன்னகை உதட்டில் பிறக்கின்றது. 

“இந்கே வாடா என் செல்லக் கண்ணா.” என் குழந்தை ஓடி வருகிறான். அந்தப் பிஞ்சு முகத்தை வருடி கட்டி அணைத்துக் கொண்டிருந்தேன். அவனும் சேர்ந்து கன்னங்களில் முத்தப் பூக்களைச் சொரிந்துகொண்டிருந்தான். அன்புணர்ச்சியால் இதயம் சூடேறிக் கொண்டிருந்தது. 

“மம்மி இனி ‘சில்றன்ஸ் புறொக்கிறாம்’ பார்க்கப் போகிறேன்” குழந்தைகள் மிகவும் விவேகமானவர்கள். சுனாமியை விட எத்தனையோ அனர்த்தங்களை தொலைக்காட்சியில் சந்தித்திருக்கிறான் போல். சுனாமி அனர்த்தம் தந்த கொடூரமான காட்சிகள் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். சந்தர்ப்பம் பார்த்து தனது நிகழ்ச்சிகளைப் ‘படபட’ த்துப் பார்த்துக் கொண்டிருந்தான். 

நான் வேலை செய்யும் இடத்தில்தான் அவளுடைய வீடும் இருக்கிறது. எனது நண்பி ‘அஷ்மா’ சிரித்துக்கொண்டு நின்றாள். அவசரம் அவசரம் என்று வாழ்க்கை ஓடுவதால் வழியில் காணும்போதெல்லாம் பேசிக்கொள்வோம். லண்டனில் உள்ள நூலகம் ஒன்றில் சந்தித்தபோது ஏற்பட்ட பழக்கம். நூலகத்தில் குழந்தைகளுக்கான ‘கதை சொல்லும் நேரம்’ நடைபெறுவது வழக்கம். அஷ்மா தன் சிறுமியை அழைத்து வந்திருந்தாள். நானும் எனது சிறுவனை அழைத்துச் சென்றிருந்தேன். அங்குள்ள ஆங்கிலப் பெண் அழகான குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லிக்கொண்டிருப்பா. நட்பு. பல இன மக்களும் வந்து கலந்து கொள்வர். ஆர்வத்தோடு சிறுவர்கள் கேட்டு மகிழ்வார்கள். அஷ்மா இலங்கையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண். எத்தனையோ பேர்களோடு பழகுகின்றோம். ஆனால் ஒரு சிலரை மட்டும் தான் நண்பர்களாக்கி விடுகிறோம். 

லண்டனில் இப்போ வாகனம் வைத்திருப்பவர்கள் பாடோ பெரிய திண்டாட்டம். லண்டன் பட்டணத்துக்கு போய் வருவதென்றால் ரோட்டுக்கு வரி செலுத்த வேண்டும். ஓடு பாதையில் வாகனத்தை நிறுத்தினால் தண்டம். சிவப்பு பூசப்பட்ட பஸ் ஓடும் பாதையில் ஓடினால் கம்பத்தில் பூட்டப்பட்ட கமரா அழகாகப் படமெடுத்து வீட்டுக்கு தண்டத்தோடு கடிதம் வரும். குறிப்பிட்ட இடங்களில் வேகங்களை மாற்றி ஓடினால் போச்சு போச்சு. கமராக்கள் ‘பளிச்சுப் பளிச்’ சென்று ‘மின்னி மின்னிப்’ படமெடுத்துவிடும். பொலிஸ்மாரும் பதுங்கியிருந்து பிடித்துப் போடுவார்கள். அதிக காலத்துக்குப் பிறகு இலங்கைக்குப் போய் கொழும்பில் நின்ற போது வாகன ஓட்டங்களைப் பார்த்த போது திகைத்துப் போனேன். என்ன மாதிரி சனங்களுக்குள்ளால் ‘வெட்டி வெட்டி’ வாகனங்களை ஓட்டுகி றார்கள். அதுக்குள்ள சயிக்கிள்களும் சனங்களுக்குள்ளால ‘டிங் டிங்’ என்று மணி அடித்தபடி ஓடுவினம். இங்கு சயிக்கிள் காரருக்கு வேறு பாதை. சயிக்கிள் காரர் போகும்போது மற்ற வாகன ஓட்டிகள் மிக அவதானமாக ஒடவேண்டும். சில வேளைகளில் குதிரைகளிலும் சவாரி செய்து கொண்டு போவார்கள். ஆனால் வாகன ஓட்டிகள் தான் கவனமாக ஓடவேண்டும். வாகன ஓட்டிக்குத்தான் தண்டம். இந்த லண்டன்காரர் சட்டத்துக்கு மேல் சட்டத்தை வடிவமைத்து சனங்களிடம் வறுகித் தள்ளுறாங்கள். வேலைக்குப் போகிற அவசரத்தில் காரை நிறுத்த இடமில்லாமல் மஞ்சள் கோட்டுக்கு மேல் காரை நிற்பாட்டிவிட்டேன். ‘ரவிக் வோடன்’ மோட்டசயிக்கிளில் பறந்து வந்து அபராத ரிக்கற்றை வைத்து விட்டுப் பறந்துவிட்டான். அறுபது பவுண் துண்டு. என்ன செய்வது? அபராதம் கட்டினதுதான். 

‘அஷ்மா’ சொன்னாள்; “ஹெலன் எங்கள் வீட்டின் முன்னால் இருக்கும் இடத்தில் காரை கொண்டு வந்து நிற்பாட்டு. எனக்கு எதுவித சிரமும் இல்லை. என்றாள்” 

இப்போ நான் வேலைக்குச் செல்லும் போதெல்லாம் அவளின் வீட்டிலுள்ள இடத்தில் எனது காரை நிறுத்துவது பழக்கமாகிவிட்டது. 

ஏதோ தெரியவில்லை. தனது வீட்டில் நடக்கும் வைபவங்க ளுக்குக்கூட என்னை அழைத்துக்கொள்வாள். லண்டனில் அவளின் குடும்பத்துகள் நடந்த திருமணம். 

“ஹெலன், நீ கட்டாயம் இத் திருமணத்திற்கு வரவேண்டும்” அஷ்மாவின் அன்புக் கட்டளை. ‘இஸ்லாமிய’ முறையில் திருமணம் எப்படி நடக்கிறது? என்று மனம் ஆர்வப்பட்டுக் கொண்டிருந்தது. பார்க்க வேண்டும் போலிருந்தது. இஸ்லாமியத் திருமணங்களை நான் சென்று பார்த்தில்லை.” 

“முயற்சி செய்து வரப்பார்க்கின்றேன்” என்றேன். 

லண்டனில் அவர்களது பள்ளிவாசலை அண்டிய ஒரு பிரமாண்டமான மண்டபம். திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டி ருந்தது. அதிகமான பெண்கள்தான் இருந்தார்கள். மண்டபத்தில் என்னைக் கண்டதும் அஷ்மாவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. என்னை உடல் பூத்த சிரிப்போடு வரவேற்றுக் கொண்டாள். “சிகப்புச் சாறியோடு எடுப்பாக இருக்கிறாய்!” என் காதுக்குள் கூறினாள். மகிழ்வால் சிரித்துக்கொண்டேன். 

மணப்பெண் மட்டும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காத்திருந்தாள். அலங்காரம் செய்து கொண்ட தோழியர்களும் கூட இருந்தனர். மணமகனைக் காணவில்லை. இனித்தான் வருவாரோ? மனதிற்குள் கேள்வி குடைந்துகொண்டிருந்தது. 

மணமகன் ‘மொஸ்க்கில்’ சமயவிடயங்களைச் கவனிக்கச் சென்றுள்ளார். அவருடன் ஆண்கள் மட்டும்தான் செல்லமுடியும். பெண்கள் செல்லமுடியாது. அதுதான் இங்கே எல்லோரும் காத்திருக்கின்றோம். ‘அஷ்மா’ கூறிக் கொண்டு தனது நீட்டுச் சட்டையைத் தடுக்காது பிடித்த வண்ணம் மண்டபத்தில் வண்ணம் போட்டுக்கொண்டிருந்தாள். 

“அப்படியோ சங்கதி?” மனதில் நினைத்துக் கொண்டேன். 

சிறிது நேரத்தில் எல்லோருமே வந்து சேர்ந்து விட்டனர். 

ஆடை அணிகள் சற்று வித்தியாசமாக இருந்தன. பெண்களில் சிலர் சேலைகள் வித்தியாசமான முறைகளில் அணிந்திருந்தார்கள். கைகள் கால்கள் கூட வர்ணப் பூக்கள் மாதிரி மினு மினுத்துக் கொண்டிருந்தன. அஷ்மா வெள்ளை நிறத்தில் நீட்டு ஆடை ஒன்றை அணிந்திருந்தாள். அவள்தான் திருமணப் பெண் என்று நினைக்குமளவுக்கு இளமையும் வனப்பும் நிறைந்து காணப்பட்டாள். அங்கு நின்ற சிலரை எனக்கு அறிமுகஞ் செய்து வைத்தாள். விருந்தினர்களை மகிழ்விப்பதற்கு இசைக்குழுவினர் கானஇசைகளை இசைத்துக் கொண்டிருந்தனர். இடையிடையே தலையை மூடி மறைத்து, பாதி முகங்களை பிறை போல் காட்டும் இளம் பெண்களின் இடை நெளிந்த ஆட்டங்கள். திருமண விருந்தினர்கள் அவற்றில் திளைத்துலயித்துப் போயிருந்தனர். தனது இரு பெண்பிள்ளைகளையும் அறிமுகஞ் செய்து வைத்தாள். அவளது இரு சிறு பெண் பிள்ளைகளும் அவள் மாதிரியேதான் மெல்லிய நீல நிறத்தில் நீட்டு ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் அஷ்மாவின் சகோதரர்கள் போலவே இருந்தார்கள். திருமண வைபவம் கலகலத்துக்கொண்டிருந்தது. எனக்கு ‘ஹிந்திப்’ படத்தில் திருமணக் காட்சியைப் பார்ப்பது போன்ற உணர்வு தட்டிக் கொண்டிருந்தது. வீடியோ படப்பிடிப்புக்கள் புகைப்பட விற்பன்னர்கள் தமது கைவண்ணத்தைக் காட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் இல்லாமல் ஒரு கல்யானமா? மனது கம கமத்தக்கொண்டது. 

நான் வேலையால் திரும்பும்போது சில வேளைகளில் அஷ்மா எனக்காகக் காத்துக் கொண்டு நிற்பாள். 

“திருமணத்தன்று மகிழ்ச்சியாக ரசித்தாயா? எப்படி இருந்தது?” 

“லவ்ளி! மிகவும் சந்தோஷமான விடயங்களைப் பார்த்து ரசித்தேன். அந்த நிகழ்ச்சிகளோடு சாப்பாடுகள் கூடப் பிரமாதமாக இருந்தது. றியளி ஐ என்ஜோய்ட் த வெடிங்…” 

“மணமக்கள் இருவரும் டாக்டர்மார்கள். லண்டன் வைத்திய 

சாலைகளில்தான் வேலை செய்கிறார்கள்” 

“அப்படியா அஷ்மா. மிகவும் மகிழ்ச்சி” 

“எமது பெற்றோர் எனக்கு விபரம் புரியாத வயதில் திருமணத்தை செய்து வைத்து விட்டார்கள். எனக்கு பாடசாலைக்குச் சென்று தொடர்ந்து படிக்க வேண்டும்போலிருந்தது. ஆனால் அவர்கள் திருமணத்தையே முதன்மைப்படுத்தினார்கள். கணவருக்குப் பணிந்து அவரை நிறைவுப்படுத்துவதே எனது வாழ்க்கையாகிவிட்டது. இப்போது பிள்ளைகளின் வேலையும் சேர்ந்து இவைதான் என் வாழ்க்கை. லண்டனில் கூட படித்து வேலை செய்ய அதிக வாய்ப்புகள் தானே! ஆனால் எனது கணவர் விரும்பவில்லை. அவரின் விருப்பத்தில்தான் நான் நடந்து கொள்ள வேண்டும். தொலைக்காட்சிகளைப் பார்த்து மகிழ்வேன். நான் எல்லாவற்றையும் என் மனதிற்குள்தான் வைத்து வெந்துகொண்டிருக்கின்றேன். இப்போது தான் எனக்குச் சிந்திக்கும் ஆற்றல் வந்திருக்கிறது. எனது பெற்றோர்கள் எனக்கு விட்ட பிழையை நான் எனது பிள்ளைகளுக்குச் செய்யக்கூடாது. எனது பிள்ளைகள் அவர்கள் விரும்பும் அளவுக்குப் படிப்பிக்கவேண்டும்” 

‘அஷ்மாவின்’ ஆத்திரப் பதை பதைப்பை என்னால் அவதானிக்க முடிந்தது. 

“ஹெலன் நீ பிரெஞ்சு மொழி படித்தாய் தானே? பிரான்சில் வேலையும் செய்தாய் தானே?” 

“ஓம் என்ன விடயம்?” 

“எனது மகள் இந்த ஆண்டு G.C.S.E பரீட்சை எடுக்க உள்ளார். அவளது ‘Cours Work’ க்கு உதவி செய்ய முடியுமா?” 

“ஓம் நிட்சயமாக உதவி செய்வேன். அது பற்றி யோசிக்காதே!” 

ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சென்று பாடவிடயங்களில் ஆலோசனை கூறி உதவிகள் செய்து கொடுத்தேன். ஆனால் அந்தப் பிள்ளையைப் பார்க்கும் போதேல்லாம் இதய வீணையில் ஏதோ ஒரு தந்தி முறுக்கேறி விறைத்து நிற்பது போலத்தான் உணர்ந்தேன். 

பரீட்சைகள் முடிந்திருக்க வேண்டும். அவை பற்றி எதுவுமே அஷ்மா கதைக்காதது ஆச்சிரியமாகவே இருந்தது. எதனையும் துருவிக் கேட்பது அழகல்ல. நல்ல விடயங்களாக இருந்தால் கட்டாயம் எனக்குச் சொல்லுவாள் தானே! 

சில நாட்களாக அஷ்மா வழமைபோல் என்னைக் காத்திருந்து கதைப்பது சற்றுக் குறைந்துகொண்டே வந்தது. குடும்ப வேலைகள் என்று தானே அடிக்கடி கூறுவாள். வெளிநாடுகளில் அதிகமாக வாரத்திற்கு இரண்டு தடவைகள் தான் சமைப்பார்கள். குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து விட்டு எடுத்துச் சாப்பிடுவார்கள். வேலைக்குச் செல்வதால் தினமும் சமைப்பதற்கு நேரம் இல்லை என்பார்கள். ஆனால் அஷ்மாவின் கணவருக்கு தினமும் விதம் விதமான சாப்பாடுகள் சூடாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுவாள். பாவம் வேலைப் பழுவாக இருக்கலாம். ஆனால் வெளி நாடுகளில் சமையல் என்ன பெரிய வேலையா? சாப்பிட்டு சாப்பிட்டுக் கொழுப்புக் கூடியிடும். கூடிய கொழுப்பைக் குறைப்பதற்கு ‘டயற் பண்ணுவினம். உடற்பயிற்சிகளும் செய்வினம். இப்படி வெளிநாடுகளில் பெரிய வேலைகளையும் நாங்கள் பார்க்கலாம். 

அன்று இலையுதிர் காலத்து ஈரம்படிந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. வானமண்டல சாம்பல் நிறமான மேகக் கூட்டங்கள் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. உடலை குத்தி எடுப்பது போன்ற குளிர். உடல் பாரத்தை விட அதிக பாரமுடைய உடைகளை உடம்பில் போர்த்தவேண்டியிருந்தது. இந்தப் பயங்கரக் குளிருக்குள் எதிர்பாராத விதமாக அஷ்மா நின்று கொண்டிருந்தாள். 

“என்ன அஷ்மா உறைக்குமாப் போல இருக்கிற குளிருக்குள் இப்படி நிற்கிறாய்?” இந்தக் குளிருக்குப்போல் அவளது பரந்த முகம் சிவந்து போய்க் கிடந்தது. அவளது புருவங்கள் துருத்திக் கொண்டு நின்றன. 

“ஹெலன் தயவு செய்து குறை விளங்கிக் கொள்ளாதே! எனது மகள் ‘மெடிக்கல் சென்ரருக்கு’ போக வேண்டியுள்ளது. உனது காரில் அதில் கொண்டு சென்று அங்கே விட முடியுமா?” என்று கெஞ்சுவது போல் கேட்டுக் கொண்டு நின்றாள். 

“என்ன அஷ்மா ஒரு வைத்தியரைச் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவிப்பேனா? அதுவும். இந்த மாதிரியான கடும் குளிரான வேளையில்…” 

அஷ்மாவின் மகள் வந்தாள். ‘ஹாய்’ என்று மட்டும் கூறிவிட்டு முன்சீற்றில் அமர்ந்து கொண்டாள். எதுவுமே கதைத்துக்கொள்ளவில்லை. ‘மனிதர்களின் அமைதி நிறைந்த சிந்தனைகளை கலைப்பது அசம்பாவி தமானது’ என்று மனதில் நினைத்தவாறு காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். காரில் பொருத்தப்பட்ட வானொலியில் இருந்து ‘பிறயன் அடம்ஸ்’ என்ற பாடகரின் ‘லுக் இன் ருமை ஐஸ்’ என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. 

‘மெடிக்கல் சென்றர்’ வந்ததும் நன்றி கூறிவிட்டு சென்று விட்டாள். 

நான் காரை நிறுத்தப் போகும்போதெல்லாம் அஷ்மா வீட்டில் பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். அக் குழந்தையின் ‘பிஞ்சுக் குரல்’ என்னுடலில் இன்பத்தை கிளர்த்துவதுண்டு. 

‘வீட்டுக்கு யாரோ விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்வேன். இவை பற்றி குடைந்து விசாரிப்பது எனது பழக்கமில்லை. நான் எதையும் அஷ்மாவிடம் கேட்கவில்லை. 

ஒருநாள் ‘அஷ்மா’ சிரித்துக்கொண்டே கூறினாள். “ஹெலன், எனது உறவினர்கள் வீட்டில் வந்து நிற்கிறார்கள்” 

“அப்படியா அஷ்மா! நான் உனது வீட்டில் எனது காரை நிறுத்துவதில் இடைஞ்சல் ஏதும் இருக்கிறா? கவலைப்படாதே! நான் வேறு இடத்தில் காரை நிற்பாட்டி வைக்கின்றேன்.” என்றேன். 

“இல்லை இல்லை ஹெலன். நான் அது ஒன்றும் நினைத்துக் கூறவில்லை. இந்தத் தாயும் குழந்தையும் பாவம். நாம்தான் உதவி செய்ய வேண்டியிருக்கிறது.” 

அவள் மனது ஏதோ கவலையில் ஊடாடியிருக்கவேண்டும். குளிர்காலப் பொழுதின் வெண்பனி கலந்த குளிர்காற்றையும் பொருட்ப டுத்தாமல் வெளியில் வந்து கூறிக்கொண்டு நின்றாள். 

“ஏன் அந்தப் பெண்ணின் கணவருக்குச் சுகயீனமா?” நான் கேட்டேன். 

“இல்லை. அவர் எங்கேயென்று தெரியவில்லை.” துயர முகத்தோடு கூறிக்கொண்டு நின்றாள். 

“ஏதாவது குடும்பத்தில் பிரச்சனையாக இருக்கும். என்ன அஷ்மா மற்ற குடும்பங்களில் நடைபெறாத ஒன்றா உனது உறவினர் குடும்பத்துக்கு நடந்து விட்டது. லண்டனில் யாராவது நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கக் கூடும். எல்லாக் குடும்பங்களிலும் பிரச்சனைகள் வருவதும் போவதும் இயற்கை. இதுதான் வாழ்க்கை. அவரின் குழந்தையும் இருக்கும்போது அவர் கட்டாயம் மனைவியிடம் திரும்பி வருவார். நீ யோசித்துக் கவலைப்படாதே அஷ்மா!” 

“உனது நெருங்கிய உறவினரா அஷ்மா?” 

“ஓம் ஹெலன். எனக்கு மகள் முறையானவள். எனது அக்காவின் மகள். சிறு வயதிலேயே இந்நிலைக்கு ஆளாகிவிட்டாள்.” 

“இன்று அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் அஷ்மா, வசதி வரும் போது அதுபற்றிக் கதைப்போம்” 

‘ஓ.. இன்று வெள்ளிக்கிழமை ஹெலன். நானும் ‘பிறே’ பண்ண வேண்டும்.” 

“எப்படி ‘பிறே’ பண்ணுறனீங்கள்?” 

“ஏன் பார்க்கவில்லையோ?’ 

“தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்கள் ஜெபிக்கிறதைத் தானே காட்டுவார்கள். அதிலும் பெண்களை மறைப்பதா? அது ஏன் அப்படி..?” 

‘அஷ்மா’பெரிதாகச் சிரித்துக் கொண்டாள். “பெண்களும் ஆண்கள் மாதிரித்தான் ஜெபிப்போம். இஸ்லாமிய சமயத்தில் பெண்களுக்கு கனக்கக் கட்டுப்பாடுகள் இருக்கு. இப்போ போய்விட்டு வா. பின்னர் வடிவாக விளங்கப்படுத்துவேன்.” 

வாழ்க்கை அதிவேகமாகக் கழிந்து சென்றது போல் இருந்தது…. 


“பா பா மம் மம்மி…” 

”மம்மி சொ க் கா..” மழலை மொழியில் அந்தக் குழந்தை என்னைக் கேட்டுக்கொண்டிருந்தது. 

அஷ்மா சிரித்துக் கொண்டே சொன்னாள். “இந்தக் குட்டி எல்லோரையும் மம்மி என்றே கூறி அழைப்பான்” 

அந்தக் குழந்தையின் பிரகாசமான ஏரியின் பிரதிபலிப்பைப் போன்ற சிரிப்பும், மழலை மொழியும் என் இதயத்தில் ஒலித்துக் கொண்டிடேயிருந்தது. 

எனது கைப்பையைத் துளாவிப் பார்த்தேன். பாடசாலைக் குறிப்புகள் புத்தகத்தைத் தவிர எதுவுமே இருக்கவில்லை. 

அடுத்த முறை வரும்போது பேபிக்கு சொக்கலேற் வாங்கிக் கொண்டு வருவேன். குழந்தையை வருடியபடி கூறினேன். குழந்தைக்கு விளங்கியிருக்க வேண்டும். கல கலத்துச் சிரித்துக்கொண்டேயிருந்தது. குழந்தைகள் பேசமாட்டார்கள்தான். அவர்களுக்கு எல்லாமே விளங்கும் சக்தியுண்டு. 

நான் இப்போ காரை எடுக்கும் சத்தம் கேட்கும் நேரங்களில் அந்தக் குழந்தை ஜன்னல் சீலையை இழுத்துக் கொண்டே கையை அசைத்துச் சிரிப்பான். என்னையும் அறியாமல் அந்தக் குஞ்சு முகத்தில் பாசம் ஏற்பட்டுவிட்டது. சில வேளைகளில் ‘சுவீர்ஸ்’ எல்லாம் கொடுத்துவிட்டு அவசரமாகவே நான் ஓடுவதுண்டு. தாங்.யூ.ம.மம்மி… என்று மழலைகள் பொழிந்து கொண்டேயிருப்பான்.. 

குளிரும் அவசரங்களும் நிறைந்ததாலோ என்னவோ ஒரு நாளுமே நான் அந்தக் குழந்தையின் தாயைக் காணவில்லை. எந்த நேரமும் அஷ்மாவோடுதான் தொங்கிக் கொண்டு நிற்பான். 

அன்று சூரியன் மேலெழுந்த வசந்த பரவசத்தின் புதுமையிலே தனது கத கதப்பை பொழியத் தொடங்கிய மாதிரி இருந்தது. மேகங்கள் கலைந்து போய்விட்டன. எல்லாமே ஒரே குதூகலமாய்த் தோன்றியது. அஷ்மா வீட்டில் இருந்து உணவுகள் கம கமத்து வாசம் எழும்பிக் கொண்டேயிருந்தது. 

அஷ்மா கதவைத் திறந்து கொண்டே வந்தாள். “ஹெலன் இன்று நல்ல காலநிலையாக இருக்கிறது பார்த்தாயா?’ 

“ஓம் நல்ல காலநிலை” வெளிநாடுகளில் உள்ளவர்கள் காலநிலையைத் தினமும் முக்கியமான விடயமாகக் கதைத்துக் கொள்வார்கள். 

“அதுதான் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறியோ?” 

“ஞாயிற்றுக்கிழமை இவன் இந்த சின்ன குட்டிக்கு பிறந்த தினம் வருகிறது. அதுதான் ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கின்றேன். நீயும் வசதி இருந்தால் வா. நீ வந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.” 

“எத்தனையாவது பிறந்த தினம் கொண்டாடுகிறீங்கள்?”

“மூன்றாவது பிறந்ததினம்” 

“அப்போ, இப்போ அவனின் அம்மா அப்பா எல்லாம் சந்தோஷம்தானே! பிறந்த தினத்துக்கு வந்தால் அவர்களைப் பார்க்கலாம் தானே!” 

”ஓம்.. எனது குடும்பம் மட்டும்தான். நண்பர்கள் எவரையும் அழைக்கவில்லை. நீ அந்தக் குழந்தையில் எவ்வளவு அன்பு என்று எங்களுக்குத் தெரியும். எனது கணவர் கூறினார். உன்னை மட்டும் கூப்பிடும்படி. கட்டாயம் வருவாய் தானே! ஹெலன் குறை நினைக்காதே! நீ நேர்மையாக உள்ளத்து அன்போடு பழகுவதுண்டு. எத்தனையோ குடும்பக் கவலைகளைக் கூட பரிமாறியிருக்கிறாய். ஆனால் நான்… அப்படியில்லை… எப்படி?” 

“என்ன சொல்லுகிறாய்… நீயும் எல்லா குடும்ப விடயங்களும் மனம் திறந்து கதைக்கிறனி தானே!..” 

“இல்லை. நான் சிலவற்றை மறைத்துப் பழகியிருக்கிறேன்… இவன்… இந்த சுட்டி… இந்தச் சிறுவன் எனது மகளின் குழந்தை. அவள் படிக்கும்போது பாடசாலை நண்பனினால்… அவளின் அந்த நண்பன் தற்போது ‘றக்ஸ்’ பிரச்சனையில் பிடிபட்டு சிறையில் இருப்பதாகச் செய்தி…” ‘பொளக்’ கென்று அஷ்மாவின் கண்ணீர்த்துளிகள் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன. 

“என்ன சொல்லுகிறாய் ‘அஷ்மா? எனது கண்கள் அகல விரித்து கொண்டிருந்தன…” 

”ம. ம். மி.. சொக்கா…. குழந்தையின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது…” 

“எனது கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. இந்த நாட்டில் பெண்பிள்ளைகளை நாம் எவ்வளவு கவனமாக பாதுகாத்து வளர்க்க வேண்டியிருக்கிறது. கடந்த வாரம் கூட ‘குஜராத்து’ இனப் பெண்பிள்ளை ஒன்றை உடலின்பத்தைத் தீர்த்துவிட்டு கொலை செய்துவிட்டார்கள். கொடியவர்கள். அதுவும் நெஞ்சில் பல கத்திக்குத்துக்கள். நெஞ்சு பதை பதைக்கிறது. ஒரு பெற்ற தாய் எப்படித் தாங்குவாள்? சிந்தனைகள் பரவிக்கொண்டிருந்தன. சிவப்பு மின்விளக்குத் தடை ஞாபகத்தில் வருகிறது. காரை நிறுத்தினேன்.ஓ. டியர். இவ்வளவு நேரமும் எத்தனை மைல் வேகத்தில் ஓடினேனோ தெரியவில்லை…” 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை ) 

பெண்களின் சமத்துவம், அவர்களின் தனித்துவம் தொடர்பான எழுத்தாக்கங்களைப் படைத்துவரும் இச் சிறுகதையின் ஆசிரியர் தன்னை ஒரு பெண்ணிலைவாத எழுத்தாளராக இனங்காட்டியுள்ளார். உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் திருமதி. நவஜோதி ஜோகரட்ணம் மத்தியதரப் பாடசாலை ஒன்றின் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். லண்டன் CEE (I) TV மற்றும் ETBC வானொலியிலும் அறிவிட்டாளராக இருந்திருக்கின்றார். தற்பொழுது லண்டன் “சன்றைஸ்” வானொலியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். தொடர்ந்து சிறுகதை, கவிதை ஆக்கங்களைப் படைத்துவரும் இவர் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் அவலங்களை எழுத்துக்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இவரின் கவிதைத் தொகுப்பு ஒன்று அண்மையில் வெளிவரவிருக்கின்றது. இவர் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

நவஜோதி ஜோகரட்னம் நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளதுடன் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் மகரந்தச் சிதறல் மேலும் விவரங்கள் இவர் எனக்கு மட்டும் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்."மகரந்தச் சிதறல்" என்ற இவரது படைப்பு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *