தனக்கென ஒருவன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 1,044 
 
 

கனகாவிற்கு தனிமை வாட்டியது. தந்தை தனக்காக கட்டிக்கொடுத்திருந்த அரண்மனை போன்ற வீட்டிலிருந்த சொத்துப்பத்திரங்களை பீரோவிலிருந்து எடுத்துப்பார்த்தாள். இன்றைய மதிப்பு ஐநூறு கோடிகளுக்கு மேல் என்றது. 

சேமித்து வைத்திருந்த தங்க நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தாள். பவுன் கணக்கெல்லாம் கிடையாது, ஐந்து கிலோ தங்க நகைகள். இன்றைய மதிப்பு ஐந்து கோடிகளுக்கு மேல். 

கல்விச்சேவைக்காக கல்வி நிறுவனம் சார்பாக தான் வாங்கிய விருதுகளைப் பார்த்தாள். அனைவராலும் பெற முடியாத, பெற விரும்புகின்ற பொக்கிஷங்கள். இவையனைத்தும் பெற்றிருந்தும், பெற வேண்டியதைப்பெற முடியாமல் போனதை நினைத்து ஏங்கினாள்.

“ஒரே பொண்ணு. அதுவும் தவமிருந்து பெத்த பொண்ணு. ஆசையாசையா வளர்த்தோம். ஊட்டில பெரிய ஸ்கூல்ல படிக்க வெச்சோம். லண்டன் யுனிவர்சிட்டில மேற்படிப்பெல்லாம் படிக்க வெச்சோம். நகையும், சொத்தும் நெறைய சேத்து வெச்சோம். பொண்ணு ஸ்கூல் நடத்தோணும்னு ஆசப்பட்டான்னு சொந்தமா ஸ்கூல் கடனில்லாம கட்டிக்கொடுத்தோம். ஆடம்பரமா நல்லபடியா கல்யாணமும் பண்ணி வெச்சோம். ஆனா நல்ல அழகான மாப்பிள்ளையா பார்க்கிறதா நெனைச்சோமே தவுத்து, அன்பான நல்லவனான்னு விசாரிக்காம விட்டுட்டோம். இன்னைக்கு என்ற வகுத்துல பொறந்த பொண்ணு தனி மரமா நிக்கிறதப்பார்த்தா வேதனையா இருக்குது வசந்தி…” வீட்டிற்கு வந்திருந்த உறவுக்காரப்பெண்ணிடம் தனது கவலையை கண்களில் கண்ணீர் வடிய கொட்டித்தீர்த்தாள் கனகாவின் தாய் சுந்தரி.

“அம்மா நீ கம்முனு இருக்க மாட்டியா? அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு நம்மள கூப்பிட பத்திரிக்கை வைக்க வந்திருக்காங்க. அவங்களை உபசரிச்சு பத்திரிக்கை வாங்கிட்டு வாழ்த்தறத உட்டுப்போட்டு நம்ம சொந்தக்கதைய, சோகக்கதையெல்லாம் போய் சொல்லிட்டு….” கனகா சற்று கோபமாகப்பேசியதும் மௌனமான தாய் உறவுக்கார பெண்ணிடம் பத்திரிக்கையை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தாள்.

விலையுயர்ந்த கார்கள், ஒரு காருக்கு ஒரு ஓட்டுநர். வீட்டிற்கு மட்டும் பத்து வேலையாட்கள் என ராஜ வாழ்க்கை கிடைத்திருந்தது கனகாவின் குடும்பத்திற்கு.

‘என்ற பொண்ணு கனகா பிறந்த யோகந்தான். மகாலட்சுமியே வந்து பொறந்திருக்கறா… பத்து பேரு வேலை செய்யற சொந்தக்காரங்க பனியன் கம்பெனிக்கு கிராமத்துல விவசாயத்துல வருமானமில்லைன்னு வந்து சேந்த நானு, கல்யாணமாயி கொழந்தை பொறக்க வரைக்கும் கண்டவங்களுக்குத்தான் ராத்திரி பகலா பாடு பட்டேன். கொழந்தை வயித்துல இருக்கறபோதே என்ற பாட்டி கனகாத்தா பேர வெக்கோணும்னு கனகா கார்மெண்ட்ஸ் னு பேரு வெச்சு பத்துப்பேர வேலைக்கு வெச்சு சொந்தமா தொழில் ஆரம்பிச்சேன். கொழந்தை பொறந்த பின்னாடி கனகான்னு அப்பத்தா பேரையே கொழந்தைக்கு வெச்சுப்போட்டேன். இப்ப ஐநூறு பேருக்கு வேலை கொடுக்கறேன்..‌.’ என உறவுகளிடம் அடிக்கடி தனது சொந்தக்கதையைக்கூறுவார் கனகாவின் தந்தை பாலசாமி.

“உங்கொப்பந்தான் கோடிக்கணக்குல சம்பாதிச்சு வெச்சிருக்கறானில்ல. அப்புறம் எதுக்கு நாஞ்சம்பாதிக்கோணும்? வாலிப வயசுல சுகத்த அனுபவிக்கனம்…. வாழ்க்கைய சந்தோசமா வாழனம். மாசத்துக்கு பத்து லட்சம் என்னோட அக்கௌண்டில மாத்தி விட்டிடு. உன்னோட சந்தோசமா வாழறேன். இத்தன கோடி சொத்தையும் சுடுகாட்டுக்கு போற போது தலைக்கா கட்டீட்டு போகப்போறான் உங்கொப்பன்….?’ கணவன் நரேனின் பேச்சால் அதிர்ச்சியில் உறைந்து போனாள் கனகா.

மகளின் முகம் வாடியிருப்பதைப்பார்த்து ஆடிப்போனார் பாலுசாமி. மகளின் மகழ்ச்சியே தனது மகிழ்ச்சியாக வாழ்பவர் தற்போது மனதால் உடைந்து போனார்.

“ஏஞ்சாமி ஏதாச்சும் பிரச்சினையா….? ஏதாருந்தாலும் எம்படகிட்ட சொல்லு… மனசுல வெச்சு மட்டும் வாழ்ந்திராதே….”

“ஒன்னும் இல்லீங்கப்பா…. நீங்க கவலைப்படாதீங்க. எதுன்னாலும் நானே பார்த்துக்கறேன்….” சொன்னவள் படுக்கயறைக்குச்சென்று கதறி அழுதாள்.

திருமணமாகி ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் கணவன் மனைவியாகவே வாழவில்லை என்பதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தாள். உறவுகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது”ஏதாச்சும் விசேசமா இருக்கிறியா…?” என கேட்கும் போது மனதின் வலி அதிகரிக்கும். “ஒன்னும் இல்லைங்க…” எனக்கூறி அவ்விடத்தை கடந்து தனிமையில் அமர்ந்து கொள்வாள்.

“மாப்பிள்ளையப்பத்தி விசாரிச்சு தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டியா…” தோழி சௌமி கேட்ட போது அதிர்ந்த கனகா, “என்னாச்சு…? யாராச்சும் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னாங்களா?” உடல் நடுங்க கவலையுடன் கேட்டாள்.

“ஆமா என்ற மாமம்பையனோட நங்கையால நேத்து கோம்பக்காட்ல எழவூட்ல‌ பாத்தபோது உன்ற ஊட்டுக்காரனப்பத்தி சாடமாடையா சொன்னா….”

“என்ன சொன்னா…?” பதறியது கனகாவின் மனம்.

“நீ வெளிநாட்ல படிச்சவ. இந்தவிசியத்த ஈசீயா எடுத்துக்குவீன்னு நெனைக்கிறேன். நரேனுக்கு உன்ற கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பொண்ணோட பழகி கொழந்தை உண்டானதுனால தாலியக்கட்டி அவனாசிப்பக்கம் தனியா ஊடு எடுத்துக்கொடுத்து தங்க வெச்சிருக்கிறதா சொன்னா….” சொன்னதைக்கேட்டதும் மனம் உடைந்து தேம்பினாள் கனகா.

“நீ அழுகாதே. உன்ற கூட ஒரு புருசனாவே அவன் நடந்திருக்க மாட்டான்னு எனக்கு புரியுது. சில பேரு ரெட்டை வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கறாங்க. ஆனா பொண்டாட்டியோட வாழாமில்ல. இவன் அவ பேர்ல உசுரா இருக்கறானாமா? பொறந்தது பையனாமா. அப்பனாத்தா சந்தோசத்துக்கு உன்னக்கட்டிக்க சம்மதிச்சிருப்பான்னு சொல்லறாங்க. பத்துல ஒருத்தன் இப்படித்தான். கலாச்சாரம் சுத்தமா வெளிநாடு மாதர கெட்டுப்போச்சுன்னு வெச்சுக்கவே… நாஞ்சொல்லறத சொல்லீட்டேன். ஒன்னி அவனோட வாழறது, வாழாதது உன்ற இஷ்டம்” சொன்னவள் கிளம்பிச்செல்ல வீட்டிற்குள் சென்று பெட்டில் படுத்து கதறினாள் கனகா. கதவைச்சாத்தி கத்தியபடி அழுதாள். 

இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கணவன் நரேனுடன் எதுவும் பேசாமல் முறைத்த படி முகத்தை திருப்பிச்சென்றாள்.

சென்றவளை பின் தொடர்ந்து சென்றவன் அவளது பக்கத்தில் சென்று முதலாவதாக நெருக்கமாக அமர்ந்தான். கணவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.

“இன்னும் சாந்தி முகூர்த்தம் நடக்கலேன்னு கோபத்துல தானே தள்ளிப்போறே….? இன்னைக்கு நல்ல நாள் நடத்தலாம்னு தான் வந்தேன். இப்படி வெறுப்பா இருந்தா எப்படி சிறப்பா நடக்கும்?” 

“தாலி கட்டினவன் பொறுப்பா இருந்தா மனைவி ஏன் வெறுப்பா போறா…? நடக்காம இருந்ததே நல்லதா போச்சு….”

“கனகா…. நீ நல்ல மன நிலையோட தான் சொல்லறியா….?”

“ஆமா. எனக்கு பைத்தியம் எதுவும் புடிக்கலே. உனக்குத்தான் புடிச்சிருக்கு. பொம்பளைங்க பைத்தியம்….”

“கனகா….” கத்தினான்.

“கத்தாதே. கதவையும் சாத்தாதே… ஏன்னா நீ நிரந்தரமா வெளில போக வேண்டிய நேரம் வந்திருச்சு. உன்னப்பத்தி இப்பதான் முழுசா தெரிஞ்சிட்டேன். உனக்கு என்னோட அழகு பெருசா தெரியல, என்ற மேல அன்பு இம்மியளவும் இல்லே. பணமே குறியா நீ இருந்த போதே நான் முழிச்சிருக்கனம். உனக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் நடந்திருக்கு. ஒரு குழந்தையும் இருக்கு….”

மனைவி கூறக்கேட்டவன் பதில் கூறாமல் தலை குனிந்தான்.

“ஒத்துக்கறேன். ஏதோ வயசு கோளாறு. சின்னதா ஒரு தப்பு நடந்திருச்சு. கற்பமானதுனால தாலி கட்ட வேண்டியதா போச்சு. பணத்தக்கொடுத்து செட்டில் பண்ணிடலாம். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலை…. கவலைப்படாதே நீதான் என்னோட ஒரிஜினல் மனைவி….” பெரிய தவறை செய்து விட்டு சாதாரணமாக கணவன் பேசியது தூக்கி வாரிப்போட்டது. 

“ஒரிஜினலா ஒருத்திய பெரிய சொத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம். டூப்ளிகேட்டா பல பொண்ணுங்களோட வாழ்ந்துக்கலாம். குழந்தை ஆயிருச்சுன்னா பணம் கொடுத்து செட்டில் பண்ணிடலாம்… கட்டுன மனைவி கன்னி கழியாமையே காலத்தைக்கடத்திக்கலாம். அப்படித்தானே….?” சொன்னவள் கோபம் தலைக்கேறியவளாய் கொசு அடிக்கும் பேட்டை எடுத்து அவனது தலையில் ஓங்கி அடித்தாள். 

“ஐயோ..‌ காப்பாத்துங்க…” எனக்கூச்சலிட்டான். வீட்டிலிருந்த கனகாவின் பெற்றோர் பதறியபடி வந்து பார்த்த போது நரேனின் நெற்றியில் ரத்தம் சொட்டியது. கனகா தலைவிரி கோலமாக பத்ரகாளியைப்போல் நின்றாள்.

பெற்றோரிடம் அவனது முகத்திரையைக்கிழித்துக்காட்டினாள். கனகாவின் தாய் இதைக்கேட்டு மயக்கமடைய கார் ஓட்டுனர் வந்து மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றார்.

தந்தை மகளது நிலையை எண்ணி கண்ணீர் வடித்தார். நிலைமை தனக்கு சாதகமாக இல்லாததைப்புரிந்த நரேன் தனது காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.

பெற்றோருடன் கலந்து பேசி முக்கிய உறவுகள் அழைக்கப்பட்டு பேசி முடித்து நரேனிடமிருந்து விவாகரத்து பெற்றாள் கனகா. 

மகளது வாழ்க்கை சிதைந்து போனதை நினைத்து மனம் உடைந்து போன பாலசாமி ஒரு நாள் படுக்கையில் நெஞ்சு வலியால் துடித்தவர், மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனது தான் தனது விவாகரத்தைவிட கனகாவை மிகவும் மனதால் பாதிக்கச்செய்திருந்தது.

வசதியில் சம தகுதி பார்த்து விசாரிக்காமல் திருமணம் செய்ததால் ஏமாற்றமடைந்த மனநிலையிலிருந்தும், தந்தை இழப்பிலிருந்தும் மீண்ட கனகா பள்ளி நிர்வாகத்தையும், பனியன் கம்பெனி நிர்வாகத்தையும் தானே கவனித்தாள். ஒரு நாள் பள்ளியில் அவளது கவனத்தை ஈர்த்த ஆசிரியர் வருணை தனது அறைக்கு அழைத்துப்பேசினாள்.

“பிப்த் வரைக்கும் உங்க கூடத்தான் ஒரே க்ளாஸ்ல தான் படிச்சேன். ஒரு டைம் நாம விளையாடிட்டு இருக்கும் போது நீங்க விழுந்து தலைல அடி பட்டதப்பார்த்து நீங்க கூட அழாம சமாளிச்ச போது உங்களுக்காக நான் அழுதேன். ஞாபகம் இருக்கா..‌‌..?” கேட்டவனை ஏறிட்டு ஆச்சர்யமாகப்பார்த்தாள் கனகா.

“நல்லா ஞாபகம் இருக்கு. நீங்க தான் அவரா?”

“அவரு இல்லீங்க. நான் தான் அவன்….”

“தன்னை அழவைப்பவனை விட தனக்காக அழுகின்றவன் தான் ஒரு பொண்ணுக்கு தேவை. அவனே கணவனாக வரும்போது வாழ்க்கையே வசந்தமாகிறது. நீங்க எப்போதும் என் கூடவே இருப்பீங்களா….? என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பீங்களா?” யோசிக்காமல் மனதில் பட்டதும் கேட்டவள் வெட்கத்தில் தலை குனிந்தாள். வருணும் உடனே பதில் சொல்ல முடியாமல் தவித்தான். தவிப்பும் சம்மதத்தின் அறிகுறிதான் என புரிந்து கொண்டாள்.

இருபத்தைந்து வயது வரை அவள் வெட்கப்பட்டதை அவளே பார்த்ததில்லை. ‘துக்கப்பட வைப்பவனை விட வெட்கப்பட வைப்பவன் நமக்கானவன், நல்லவன்…’ என மகிழ்ந்தவளின் உடல் ஏனோ லேசாக இனம்புரியாமல் நடுங்கியது. இது தான் காதலின் வெளிப்பாடு என்பதை கதைகளில் படித்திருந்தவள் அதை முதலாக, முழுமையாக உணர்ந்தாள்.

அவளையறியாமல் டேபிள் மேலிருந்த அவனது கைகளைத்தேடி இறுகப்பற்றியது அவளது கைகள். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கைக்குரிய எதிர்பாலினத்தவரின் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அது பணத்தின் அடிப்படையில் கிடைப்பதைக்காட்டிலும் மனதின் அடிப்படையில், நற்குணத்தின் அடிப்படையில் கிடைப்பது நம்பத்தகுந்ததாகவும்,நீடித்து நிலைப்பதாகவும் இருக்கும் என்பதில் நிறைவு ஏற்பட்டபோது தனக்கென ஒருவன் கிடைத்து விட்டதை அறிந்த கனகாவின் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தது.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *