கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 178 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்றைக்கும் போல் சென்ட்ரல் தியேட்டர் வாசலில் உட்கார்ந் திருந்தான் செருப்பு தைக்கும் மாரி. மழைக்காலத்தின் ஈரம் ததும்பிய சாலைகள் வெறிச்சோடியிருந்தன. காலையிலே தொடங்கிய மழை இடைவிடாது தனது அரூப விரல்களால் நகரமெங்கும் எதையோ தேடுவதுபோல் படர்ந்துகொண்டி ருந்தது. நீர்த்துளி தெறிக்கும் தலைகளுடன் ஓடும் மனிதர்களின் வேகம் கண்டபடி பசியுடன் எவரேனும் செருப்பு தைக்க வரக் கூடுமோ எனக் காத்திருந்தான். அவன் அமர்ந்திருந்த மரமும் தலையைக் குனிந்தபடி மழையை உள்வாங்கிக்கொண்டிருந்தது. மழைக்குள் விரையும் மனிதர்கள் நீர்வெளி விலக்கிப் போகிறார் கள். ஒரு டீ குடித்தால் கூட பசியடங்கிவிடும். அதற்கும் ஒரு ரூபாய் வேண்டியிருக்கிறதே என்ற யோசனை தோன்றியது. ஈரத்தினை உறிஞ்சிய பழம் செருப்புகள் பிரேதமாக ஊதி, கண் பெருத்து தன் முன் கிடப்பதையும் அதன் வாசனையும் கண்டான். வலுத்துப் பெய்யத் தொடங்கியது மழை. தாடியில் முளைத்த நீர்த்துளிகளைச் சொறிந்துவிட்டுக்கொண்டு காறித் துப்பினான். காற்றும் மழையோடு சேர்ந்துகொண்டது. அந்த நீண்ட தெருவில் எவருமில்லை. அவனும், ஒரு மரமும், எட்டுப் பழம் செருப்பு களும் தவிர. சினிமா தியேட்டரின் குறுகிய வலப்புறச் சந்தில் இருந்து குடையில்லாமல் நனைந்தபடி வெளிப்பட்ட சிறுமி யொருத்தி ஒரு மீனைப் போலச் சுழன்று அவனருகில் வந்து தனது இடக்கையில் வைத்திருந்த செருப்பு ஒன்றைக் குனிந்து தரையிலிட்டு, தைத்து வைக்கும்படி சொல்லிவிட்டு அவன் நிமிர்ந்து அவளைப் பார்க்கும் முன்பு தெருவில் ஓடி அடுத்த வளைவின் சுவர்களைக் கடந்து சென்றாள். அந்தச் செருப்பு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தது. வழக்கமான சிறுமிகளின் செருப்பில் சிறுமியின் பாத வாசனை படிந்திருந்தது. அது ஏதோ ஒரு பெயரிடப்படாத நறுமணம். எங்கே பிரிந்திருக்கிறது எனச் செருப்பை வலக்கை யிலிட்டுத் தூக்கிப் பார்த்தான். விரல்களின் முனையில் சிறிய இடைவெளி. மெழுகிட்ட நூலால் அதைத் தைத்துத் துடைத்து விட்டு தனது மடியிலே வைத்துக்கொண்டு காத்திருந்தான். இப்போதே குடிக்கப் போகும் டீயின் ருசி நாக்கில் துளிர் விட்டது. காற்றும் மழையும் தீவிரமாகிச் சுழன்றன. பின் மதியம் அது ஓய்ந்தபோது ஒளித் திவலைகள் ஆங்காங்கே தெரியத் தொடங்கின.

அந்தச் சிறுமிக்காகக் காத்துக்கொண்டிருந்தான் மாரி. நிச்சயம் இரண்டு ரூபாய் கிடைக்கும். மாலை வரை அந்தச் சிறுமி வர வில்லை. ஆனால் மீண்டும் மழை வந்துவிட்டது. பின்பு இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா வரை மரத்தடியில் காத்துக்கொண்டி ருந்தான். அவள் வரவில்லை. மழைக்குப் பயந்து வீட்டிலே இருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டு செருப்பைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். அடுத்த நாள் காலை மழையில்லை. நல்ல வெயில். மரம் சிலிர்த்துக்கொண்டது. சுவர்கள் வெயிலுக்கு முதுகு காட்டி நின்றன. இளம் சிவப்பான அந்தச் செருப்பை எடுத்து மீண்டும் ஒரு முறை நன்றாகத் துடைத்து தனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு மற்ற வேலை களில் ஈடுபடத் தொடங்கினான். அன்றும் அந்தச் சிறுமி வரவே யில்லை. மறந்துவிட்டாளா? இல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாது அலைகிறாளா, தெரியவில்லையே என்றபடி இரவில் அதை வீட்டுக்கு எடுத்துப் போனான்.

மறுநாள், மூன்றாம் நாள் நாள்கள் கடந்தபோதும் அவள் வரவேயில்லை. ஆனால் அவன் அந்தச் செருப்பை தினமும் கொண்டுவந்து காத்துக் கிடந்தான். ஓர் இரவில் மாரியின் மனைவி அந்தச் செருப்பைக் கண்டாள். அதன் வசீகரம் தொற்றிக் கொள்ள கையில் எடுத்துப் பார்த்தாள். சிறுமியின் செருப்பு போலிருந்தது. அதைப் போட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. தனது வலது காலில் அந்தச் செருப்பை நுழைத்துப் பார்த்தாள். அது அவளுக்குச் சரியாக இருந்தது. சிறுமியின் செருப்பு அவளுக்குப் பொருந்துகிறதே என்றவள் மற்றொரு செருப்பைத் தேடி, பையைக் கொட்டினாள். மாரி உள்ளே கோபமாகச் சப்தமறிந்து வந்தபோது மனைவியின் வலது காலில் இருந்த சிவப்புச் செருப்பைக் கண்டான். ஆத்திரத்துடன் திட்டி, அவள் சொல்வதைக் கேட்காமல் கழட்டச் சொல்லிப் பிய்ந்துவிட்டதா எனப் பார்க்க கையில் எடுத்து உயர்த்தினான், கிழியவில்லை. சிறுமியின் செருப்பு இவளுக்குத் தைத்தது போலச் சரியாக இருக்கிறதே என்ற வியப்புடன் அது ஒற்றைச் செருப்பு எனப் பிடுங்கி பையில் போட்டு கட்ட முயன்றான். அவள் முணுமுணுத்த படி பின் வாசலுக்குப் போய்விட்டாள். செருப்பு அவனுக்குள்ளும் ஆசையைத் தூண்டியது, போட்டுப் பார்க்கலாமென. தன் வலது காலைச் சிறிய செருப்பில் நுழைத்தபோது அது தனக்கும் சரியாகப் பொருந்துவதைக் கண்டான். விசித்திரமாக இருந்தது. இரண்டு வேறுபட்ட அளவு கால்களுக்கு எப்படி ஒரே செருப்பு பொருந்துகிறது. அவனால் யோசிக்க முடியவில்லை. எப்படியோ உரியவரிடம் அதை ஒப்புவித்துவிட வேண்டியது தனது வேலை என்றபடி பையில் போட்டுக்கொண்டான்.

மறுநாள் பகலில் உடன் தொழில் செய்யும் நபரிடம் இந்தச் செருப்பின் விசித்திரம் பற்றிச் சொல்ல அவன் தன் வலது காலைப் பொருத்திப் பார்த்தான். அவனுக்கும் சரியாக இருந்தது. இச்செய்தி நகரில் பரவியது. நீலநிறத் துணியில் வைக்கப்பட்ட அந்தச் செருப்பைப் போட்டுப் பார்க்க ஆசை கொண்ட பலர் தினமும் வந்து அணிந்து தனக்கும் சரியாக உள்ளதை அதிசயித்துப் போயினர். அந்தச் செருப்பு ஒரு வயதுக் குழந்தை முதல் வயசாளி வரை எல்லோருக்கும் பொருந்துவதாக இருந்தது. அதைக் காலில் அணிந்தவுடன் மேகத் துணுக்குகள் காலடியில் பரவுவது போலவும்,பனியின் மிருது படர்வது போலவும், உதடுகளை விட மிருதுவாகத் தனது பாதத்தினை முத்தமிடுவதாகவும் பலர் கூறினர். அவன் வராதுபோன செருப்புக்குரிய சிறுமியை நினைத்துக்கொண்டான். கோடைக் காலம் பிறந்திருந்தது. எண்ணற்ற சிறுமிகளும், பெண்களும், ஆண்களும் அந்த விந்தைச் செருப்பை அணிந்து பார்த்துப் போயினர். அதை அணிந்து பார்க்க அவர்களே பணம் தரவும் தொடங்கினர். தினசரியாகப் பணம் பெருகிக்கொண்டே போனது.

அவன் மற்ற வேலைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டான். தினசரி அந்த ஒற்றைச் செருப்பைச் சுற்றி எடுத்துக்கொண்டு வந்து அதே இடத்தில் காத்துக் கிடப்பான். வருடங்கள் புரண்டன. அவன் பசு இரண்டு வாங்கினான். வீடு கட்டிக்கொண்டான். வாழ்வின் நிலை உயர்ந்துகொண்டே போனது. இப்போதும் அந்தச் சிறுமி வரக் கூடும் என்று பலர் முகத்தின் ஊடேயும் அவளைத் தேடிக்கொண்டிருந்தான். அவள் இப்போது பருவப் பெண்ணாகி யிருக்கக் கூடும் என அவனாகச் சொல்லிக் கொள்வான். அவன் வருவதற்கு முன்பாகவே காலையில் பலர் மரத்தடியில் அவனுக்காகக் காத்து நிற்பார்கள். அணிந்து பார்ப்பார்கள். முகத்தில் சந்தோஷம் பீறிடும். கலைந்து போவார்கள். இப்படியாக மாரியின் முப்பது வருஷம் கடந்தது. அவன் வயதாகி இருந்தான். அந்த வருடம் மழைக்காலம் உரத்துப் பெய்தது. ஓர் இரவில் செருப்போடு வீடு திரும்பும்போது அதைத் திருட முனைந்த இருவர் தடியால் தாக்க பலமிழந்து கத்தி விழுந்தான். யாரோ அவனைக் காப்பாற்றினார்கள். செருப்பு திருடு போகவில்லை. ஆனால் தலையில் பட்ட அடி அவனை பலவீனமடையச் செய்தது. வீட்டை விட்டு வெளியேறி நடக்க முடியாதவனாகிப் போனான். அந்தச் சிறுமிக்காக அவன் மனம் காத்துக்கொண்டே இருந்தது. தனது மரணத்தின் முன்பு ஒரு தரம் அவளைச் சந்திக்க முடியாதோ என்ற ஏக்கம் பற்றிக்கொண்டது. தான் அவளால் உயர்வடைந்ததற்கான கடனைச் சுமந்தபடி மரிக்க வேண்டும் என்பது வேதனை தருவதாக இருந்தது. பார்வையாளர்கள் அவன் வீடு தேடி வந்து அணிந்து பார்த்துப் போயினர்.

ஒரு மழை இரவில் பார்வையாளர் யாவரும் வந்து போய் முடிந்த பின்பு கதவை மூடி மாரி உள்ளே திரும்பும்போது யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபடி காலையில் வாருங்கள் எனச் சொன்னான். மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் முகம் சலனமற்று இருந்தது. அவள் தணிவான குரலில் சொன்னாள், “வெகு தாமதமாகி விட்டது… எனது செருப்பைத் தைத்துவிட்டாயா இல்லையா?” அவளை அடையாளம் கண்டுவிட்டான் மாரி. அதே சிறுமி. அந்தப் பெண் தன் கையிலிருந்த கூடையிலிருந்து சிவப்புநிற இடதுகால் செருப்பை எடுத்து அவன் முன்னே காட்டிச் சொன்னாள், ”இதன் வலது செருப்பு தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?”. அவன் தலையாட்டியபடி தன்னிடமிருந்த செருப்பை எடுத்துவந்து துடைத்து அவளிடம் காட்டினான். சிரித்துக்கொண்டபடிப் பார்த்தாள். அவள் கைகளில் தந்தபடி அதன் விந்தையை எடுத்துச் சொன்னான். “இந்தச் செருப்பு உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது”. அவள் ஆச்சரியமின்றி தலையாட்டினாள். தன்னிடமிருந்த நாணயம் எதையோ அவனிடம் செருப்பு தைத்த கூலியாகக் கொடுத்து விட்டுக் கூடையில் அந்தச் செருப்பைப் போட்டாள். இந்தச் சொத்து, வாழ்வு யாவும் அவள் தந்ததுதான். அவள் யார் என அறிய ஆவலாகிக் கேட்டான். பதிலற்று சிரித்தபடி மீண்டும் மழையில் வெளியேறிச் சென்றுவிட்டாள். தெருவின் விளக்குக் கம்பம் அருகே வந்து நின்ற அவள் கூடையில் இருந்த இரண்டு செருப்புகளையும் எடுத்துத் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது செருப்பு சரியாகப் பொருந்தியது. தைத்து வாங்கிய வலதுபாதச் செருப்பை அணிந்தபோது அது பொருந்தவில்லை. சிறியதாக இருந்தது.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *