கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 186 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எத்தனை முறை அந்தப் பக்கம் பஸ்ஸில் கடந்துபோனாலும் ஊரில் இறங்க வேண்டும் என்றே தோன்றவில்லை. ஊரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் பெரும் ஆயாசம் கவிழ்ந்து கொள்ளும். யார் இருக்கிறார்கள் பார்ப்பதற்கு எனப் படும். போன தரம் விடுமுறையில் மற்ற அண்ணன்கள் வந்திருந்தபோது கூட கேட்டான்:

“போய் ஊரப் பாத்துட்டு வருவமா?”

“அங்கென்னடா இருக்கு… வேலை மெனக்கெட்டுப் போக” “வீடு இருக்கும்ல…”

”அது எப்படியிருக்கோ. இருந்தாலும் யாருக்கும் அவசிய மில்லாதது. ஊரா அது”

பஸ் கடந்துபோகும்போது ஊரின் வெளி தெரியும். அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. மரங்களற்றுப் போனதால் வெளீரென ஊரே தெரிகிறது. எப்போதாவது சிவர் அவனை அடையாளம் கண்டுகொண்டு பஸ்ஸில் சிரிப்பார்கள்.

சில நாள்களுக்கு முன்பு பஸ்ஸில் கிருஷ்ணசாமி நாயக்கரைப்

பார்த்தபின்பு ஊருக்குப் போக வேண்டும் என்று தோணியது. பஸ் கிளம்பும்போது ஓடி வந்து ஏறினார். நல்ல உயரம் அவர். உட்கார இடம் தேடினார். இவன் பக்கத்தில் சீட் காலியாக இருந்தது.

உட்கார்ந்துகொண்டு, அலுப்பை முறித்த பின்புதான் அவனைப் பார்த்தார். அவள் சிரித்தான். அவருக்கு அடையாளமாகிப் போனது.

“குருக்கள் மகன்தானவே நீ…” தலையாட்டினான்.

“எங்க இருக்கே… ஊர் பக்கமே வர்றதில்லை. “

அவன் பதில் பேசவில்லை. அவரே கேட்டார்.

“வீட்ட என்ன செய்யப் போறீங்க. அது பாட்டுக்கு நாதியில்லாத தெருவா இருக்கு.”

“என்ன செய்றது ”

“இப்பிடி விட்டா அந்த இடத்தில நாலு சுவர்தான் மிஞ்சும். ஊர் பக்கிக ஆம்புட்டத எடுத்துட்டு போய்க்கிட்டு இருக்காக. இப்பவே வீட்ல நிலை கிடையாது தெரியுமா…”

”விழுந்துருச்சா,”

”நீ ஒண்ணு. தெக்குத் தெரு முக்கிய ஒரு வீடு கட்டிருக்கான். அங்க இருக்கு. பேசாம வீட்ட வித்திற வேண்டியதுதானே.”

“யாரு வாங்கப் போறா. போனாலும் சொற்ப விலைக்குப் போகும். எதுக்குன்னுதான், ‘

”அதும் சரிதான். எதுக்கும் ஊருக்கும் வந்து தலையக் காட்டிட்டு போனா மிச்சம் மீதி மிஞ்சும்.’

அவர் சொல்லிவிட்டுப் போன பின்பு ஒரு மாலையில் ஊருக்குப் போனாள். ஊரின் அமைப்பே மாறியிருந்தது. நிறையப் புது வீடுகள். தெக்குத் தெரு முக்கைக் கடக்கும்போது பார்த்தான். புது வீடு அது. இவர்கள் வீட்டின் நிலை, கதவு இரண்டுமிருந்தது. வீட்டில் யாரோ ஒரு பெண் இவனை வெறித்தபடியிருந்தான். எவ்வளவு பெரிய நிலைக் கதவு அது. அந்தப் பூட்டு, அதன் அமைப்பே விநோதமானது. பெரிய கைப்பிடி. வெண்கலத்தால் ஆனது. கை போன்ற அமைப்பு. ஏறி ஆடுவதற்கு ஏற்ற சுதவின் கட்டைகள்.

புதுசாக இப்போது பச்சைப் பெயிண்ட் அடித்திருந்தார்கள். அதன் ஊடேயும் பழைய அரக்கு நிறம் அப்படியே இருந்தது. பெரிய பெரிய விரல் தடங்கள் இன்னும் கறையாக அழியாது போயிருந்தன. பெண்களின் விரல்கள். இடையில் சின்னதாக அவன் விரல் தடம் கூட மறைந்திருந்தது.

கோவில் ஊரின் கோடியில் இருந்தது. அதிலிருந்து நேராக எதிர்ப்படும் தெருவே ஒரு காலத்தில் அக்ரஹாரமாக இருந்தது. இப்போது கோவிலே பராமரிப்பற்று இருந்தது. அக்ரஹாரத்தின் அகன்ற தெரு வழி நிசப்தம் நிரம்பக் கிடந்தது.

பஜனை மடத்தின் பெரிய திண்ணைகளில் ஆட்கள் படுத்து உறங்கிப்போன முதுகுத் தடம். எங்கும் தாயக் கட்டம், ஆடு புவி ஆட்டமாடிய கரிக்கோடுகள். சுவரில் காரை பேர்ந்துபோன இடங்கள். கொஞ்ச காலம் ஆடு கட்டியிருந்திருக்க வேண்டும் போலத் தோன்றியது.

திண்ணையில் இருந்த தூணில் ஆட்டின் அறுந்துபோன கயிறு குலைகள் தெரிந்தன. மூத்திரக் கறுப்பு படர்ந்து போயிருந்தது தரையெங்கும். திண்ணையில் கீழ் இருந்த காவிக் கோடுகள் அழிந்துபோய்விட்டன. பஜனை மடம் பெரும் கொண்ட கதவோடு இறுகியிருந்தது. மார்கழி மாதக் குளிரோடும் நடுங்கும் குரலோடும் பாடிப்போன பஜனைப் பாடல்கள் போன இடம் தெரியாது போனது.

ஒரு வரிசையில் எட்டும், இன்னொரு வரிசையில் எட்டுமாக எதிரெதிராகப் பதினாறு வீடுகள் நிறைந்தது அக்ரஹாரம்.

இப்போது பாதி வீடுகள் இடிந்து, கட்டைச் சுவர்களாக நின்றிருந்தன. அவன் தெரு வழியாக நடந்து வந்தான். தேர் போய் வலம் வரும் தெரு இன்று மூளியாக இருந்தது.

தெருவில் இரண்டாவது வீடு அவர்களுடையது. இரண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். கல்விலே தவை வைக்கும் அமைப்போடு சாய்ந்திருக்கும் திண்ணை. உள்ளே அடுத்தடுத்து விரியும் கட்டுகள். ஊஞ்சல் போட்டு ஆடும் இடம். பின்கட்டில் கொல்லை. துளசி மாடம். சின்னத் தோட்டம். சுற்றிலும் வேலி அடைத்த பின்புறம். கிணறு.

இப்போது வீட்டின் எதிர் நின்றதும் வீடு பயம் கொள்ளச் செய்தது. நிலையைப் பெயர்த்து எடுத்துப்போயிருக்கிறார்கள். நிலையற்ற வீடு சிதிலத்தின் வடிவமாக இருந்தது. ஜன்னல் கம்பிகள் துரு வேறிப் போயிருந்தன. ஜன்னல் கதவைக் கூடக் காணவில்லை.

ஓ ! வெனப் பிளந்து கிடந்தது வீடு. தூசிகளும் குப்பையுமாக எங்கோ பதுங்கிக் கிடக்கும் பறவையின் விம்மலோடு மடித்தது. திண்ணை, உள்ளே என அசிங்கமாக இருந்தது வீடு. வீட்டைச் சுற்றிப் பின் வாசலுக்கு வந்தான்.

கிணறு வானம் பார்த்திருந்தது. சின்னக் கிணறு. முன்பு எப்போதும் தண்ணீர் நிரம்பி வழியும். ஊற்று சுரந்து கொண்டே இருக்கும்.வாதாமரத்தின் இலைகளைப் பிடுங்கிச் சுருட்டி கிணற்றில் போட்டு விளையாடுவார்கள். அக்கா கிணற்றின் சுவர்களில் கூட காவி அடிப்பாள்.

எப்போதும் அம்மா பின் வாசலில் உட்கார்ந்தபடியே இருப்பாள். நிறைய பூச்செடிகள் பூக்கும். இருட்டில் பூ தெரியாது. வாடையடிக்கும். வேலியின் நிழல் வரி வரியாக விழும். அம்மா கதவோரம் சாய்ந்திருப்பாள். எப்போதும் அத்தக் கதவு பூட்டியதாக ஞாபகமே இல்லை.

சின்னப் பாத்திகளில் கீரை முளைக்கும். கீரை தரையை முண்டும். காலத்தில் தினமும் அவனும் அக்காவும் பாத்திகளின் முன்னே உட்கார்ந்துகொண்டபடியே கையை நீட்டாமல், விரலை மடக்கி பாத்திகளைக் காட்டுவார்கள். பசேலென கீரை விரியும் நாளின் காவை பாத்திகளின் முன்னே அக்கா சிரிப்பாள்.

அக்காதான் தோட்டத்தை உருவாக்கினாள். கேந்திப் பூக்களை நட்டாள். மஞ்சள் குரல் போன்ற பூக்கள் கூட அவள் தோட்டத் தில் இருந்தது. பூக்களைப் போலவே நிறம் அவளுக்கும்.

அவள் அதிகம் வேலை செய்ய மாட்டாள். தோட்டத்தில் உட்கார்ந்து கிணற்றைப் பார்ப்பாள். பாத்தி வெட்டுவாள். சாயங்காலமானதும் மாடங்களில் விளக்கு வைப்பாள். அவள் கைக்குள் அடங்கும் விளக்கு. பின் மதியமெங்கும் திரி போடும் வேலை நடக்கும்.

அப்போதே அண்ணன்கள் டவுனில் படித்துக்கொண்டிருந்தார் கள். அக்காவும் அவனும் மட்டும் வீட்டில். அக்ரஹாரத்தில் பெண்கள் அதிகம். சிவப்பு சிவப்பாக, பெரிய இலைகளின் நடு நரம்பைப் போல முறுக்கிக்கொண்ட பெண்கள். அகன்ற பாதங்கள், ஈரம் கசியும் முகத்தோடு ஜன்னலின் இடைவெளியில் அவர்கள்.

அதிகாலை பெண்களோடே விடியும். எந்தப் பெண்களையும் வெளியே பார்க்க முடியாது. சப்தம் கேட்கும். வசீகரமான பாடல்களும் கேட்கும் சில காலைகளில் குறைவாகப் பையன்கள்.

கோவிலுக்கும் தெருவுக்கும் ஓடுவார்கள். தெரு எப்போதும் பார்த்திருக்கும் ஓடுபவர்களை.

சில சமயம் அக்கா திரி போடும்போது கூடவே உட்கார்ந்து கொள்வாள். ஒரு மாயத்தைப் போலப் பஞ்சு நிமிடத்தில் திரியாகும். வரிசையாகத் திரிகள் சேர்ந்தபின்பு எழுந்துகொண்டு அவனைப் பார்த்து சிரிப்பாள். எதற்கென்ற கேள்வி எழாது சிரிக்கும் நிலை அது.

கோவில் பிரகாரங்களில் விளக்கு ஏற்றுவதும் அவள்தான்.

கூடவே அவனும் வருவான். கறுப்பாக மசி வழியும் விளக்குகள் தூண்களில். எத்தனை இருக்கும் எனத் தெரியாது. சில மூலை முடுக்குகளில் கல் விளக்குகள். அக்கா திரி போட்டு எண்ணெய் ஊற்றுவாள்.

சின்ன விளக்குகள் எரியும்போது கண்களில் மினுக்கம் போலத் தெரியும். எல்லாவற்றையும் பார்த்தபடியே பிரகாரம் கடப்பாள். உள்ளே வில்வ மரத்தில் காய்கள் தொங்கும். கறுத்த உயர்ந்த கோவில் சுவர் விரிவுண்டு செடிமுளைத்திருக்கும்.

புற்கள் முளைத்த அதன் ஊடே நடந்து போகும்போது காற்று விரித்திருக்கும். எண்ணெய் வாளியை அவனிடம் கொடுத்து விட்டு அக்கா வருவாள். அப்பா வந்து ஒரு இரவில் வீட்டில் சொன்னபோது அக்கா கலங்கிப்போனாள். அப்பா சொல்வ தற்கே கஷ்டப்பட்டுச் சொன்னார்.

“விளக்கு போட வேணாம்ன்னு சொல்லியாச்சு… எண்ணெய் தர மாட்டாங்க… அவள நின்னுகிட சொல்லு.”

அக்காவே சில விசேஷ நாள்களில் எண்ணெய் வாங்கி ஊற்றினான். அவள் கல்யாணமாகிப் போனபோது அவன் ஸ்கூவ் முடித்தான். போன வேகத்தில் அக்கா இரண்டு குழந்தைகளும் வாழாவெட்டியுமாக வந்தாள். தெருவின் சுபாவமது. இவளைப் போன்ற சிலர் எப்போதுமிருந்தார்கள்.

முதல் வீட்டைக் காலி பண்ணி சுந்தரராமைய்யர் போனது அப்போது தான் நடந்தது. அவர்போன சில நாள்களில் சில வீடுகள் காலியாயின.

மழையற்றுப்போன கோடையில் கோவில் உலர்ந்து கிடந்தது. பூட்டப்படாத கோவிலின் பெரிய வாசல் கதவு இரவெல்லாம் தனித்திருந்தது. அப்பாவும் இன்னொரு குருக்களும் கோவில் வெளித் திண்ணையில் பகலெங்கும் படுத்து வானம் பார்த்தார்கள்.

கிணறு வற்றிப்போனது. பூக்கள் அரிதாகிப் போனது. துளசி இருந்தது. துளசி இலைகளைச் சிறிது சிறிதாக்கி சரம் கட்டினாள் அக்கா. வாடையெங்கும் அமுக்கியது. கடைசி வீட்டிலிருந்த இரண்டு பெண்களும் ஹோட்டலில் சமையல் வேலை செய்யும் பையன்களை மணந்துகொண்டு கோவில் பிரகாரம் சுற்றி வந்தார்கள். பெண்கள் இறுகிப்போயிருந்தார்கள். பிணைத்துக் கொண்ட விரல்களில் மஞ்சள் தொங்கியது.

பையன்கள் நல்ல கறுப்பு. பெண் வெயில் பட்டால் கருகிவிடும். சிவப்பு. நூல் புடவையும், ஈரம் உலராத தலையுமாகப் பெண்கள். சம்பவம் போல நடந்துபோனது கல்யாணம். அவர்களும் கிளம்பிப் போனார்கள்.

பெரிய அண்ணன் கல்யாணம் செய்துகொண்டு சென்னைக்குப் போனாள். சின்னவர்களும் அப்படியே ஆனார்கள். அக்காவும் குழந்தைகளும் அம்மா ஊரைவிட்டுப் போய்விட்டாள்.

ஒரு இரவில் பெரிய அக்காவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்தது. எதற்கென எவ்லோருக்கும் தெரிந்தபோதும் யாரும் அதைப் பற்றிப் பேசிக்கொள்ளவில்லை. அக்கா வேலைக்குப் போய் வந்தாள். ஹோட்டலில் சமையல் வேலை.

விடியாத கருக்கு இருட்டோடு கோவில் உண்டியல் திருட்டுப் போனது. கோவில் கதவு மூடப்பட்டது. அப்பா ஒடிந்து போனார். அக்காவும் குழந்தைகளும் இரவில் யாரிடமும் சொல்லாமல் எங்கோ போனார்கள். அப்பா அழுதார் அன்றெல்லாம்.

கோவில் நிலம் தரிசாகிக் கிடந்தது. வீட்டை விட்டுவிட்டு அவர்களும் கிளம்பிப் போனார்கள். அக்ரஹாரத்தின் காவி மங்கிப்போய் ஒரு நாளில் வெறிச்சோடியது.

இன்று வீட்டை விட்டு வெளியே வந்தான். அநேகமான வீடு விரிவுண்டே கிடந்தது. எவருக்கும் பிரயோசனமின்றிப் போனது வீடு. எப்போதும் மக்கள் அலையும் அக்ரஹாரத்தின் வீடுகள் வெறுமையாகிப் போயிருந்தன.

பிழைப்பு தேடிப் போனவர்கள் நகரங்களில் அவைந்தார்கள்.

தெருமுனைக்கு வந்தபோது பார்த்தான். கடைசி வீட்டில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. கடக்கும் போது எட்டிப் பார்த்தாள். ஒரு வயதானவரும் இரண்டு பெண்களும் தெரிந்தார்கள். அவனைக் கண்டதும் வயதானவர் வெளியே வந்து எட்டிப் பார்த்துவிட்டுக் கேட்டார்:

‘”யார் வீட்டுக்கு வந்தீங்க”

“எங்க வீட்டுக்குத்தான். ரெண்டாவது வீடு. அங்க…” “நிலையில்லாத வீடா”

தலையாட்டினாள்.

“நாங்க இங்க புதுசா வந்திருக்கோம். யாரும் எதும் சொல்லலை. அதான் இங்கயே இருக்கோம்.”

அவர் அவனோடு வெளியே நடந்து வந்தார். வரும்போது கேட்டார்:

”யாருமில்லையோ இங்க. முன்னாடி ஒரு தரம் வந்தப்பா தெருவே ஜோதி மாதிரி இருந்ததே. கார்த்திகைனு நினைக்கேன். எல்லாம் டவுனுக்குப் போயிட்டாங்களோ… பிழைக்கணுமில்ல.”

அவனுக்கு ஞாபகம் இருந்தது. அவன் காய்ச்சலாகக் கிடந்தான். ஜூரத்தில் மெலிந்துபோயிருந்தாள். அன்று கார்த்திகை. தெருவெங்கும் பெண்கள் விளக்கு வைத்தார்கள். வாசல், நிலை, முற்றம், பின்கட்டு, தெருவெங்கும்… கோவிலில் ஆயிரத்து எட்டு சின்ன விளக்குகள்.

தெருவே பிரகாசத்தில் மிதந்தது. மஞ்சள் வெளிச்சம் எங்கும் இருந்தது. பெண்கள் உள்ளே கிறங்கி நடப்பது விநோதமாக இருந்தது. அவர்களின் பேச்சு, நடை எல்லாம் விளக்கின் சுபாவத்தோடு ஒன்றிப்போயிருந்தது.

அந்த நாள் இரவில் திரி கருகும்வரை விளக்கெரிந்தது. ஜீவராசிகள் இருட்டைத் தேடிப் போக முடியாது விழி பிதுங்கின. படியில் ஓரம் ஓடுங்கிய தவளை கண்களை உருட்டிய நாள் அது. அவன் திரும்பவும் தெருவுக்கே போனான். தெக்குத் தெரு முக்கில் இருந்த வீட்டுக்காரன் இவனை முறைத்தான். இவன்

நிலையைக் கேட்டு வந்திருப்பதாக அவன் நினைத்திருப்பான் போலும் இருந்தது.

திரும்பும்போது இரவானது. பஸ் ஸ்டாப்பில் சிவசாமியைப் பார்த்தான். அவன் கேட்டான்:

“என்ன ஊர்ப் பக்கம் வந்திருக்காப்வ இருக்கு… வீட்டை விக்கவா”

“என்ன இருக்கு விக்க”

“நீங்க ஊரவிட்டுப் போய் இருபது வருசமிருக்குமா…” ”இருக்கும்.”

‘”அக்காவ பாக்கிறதுண்டா தீங்க. மேலூர்ல பார்த்தேன். அவர் சைக்கிள் கடைல வேலை பாக்கிறா போல ஆள் இப்படியா யிட்டாங்க. உங்க வீட்டுக்கு வர்றதுண்டா. அவரும் வேற சாதின்னு கேள்விப்பட்டேன்.”

“வருவா எப்பவாவது”

‘மழை பெஞ்சா வீடு விழுந்திரும்…”

அவன் பதில் பேசவில்லை. வீடு திரும்பிய பின்பு இரவில் உறக்கம் வரவில்லை. அன்று இரண்டு நாள்களுக்குப் பின்பு அக்காவின் ஞாபகம் வந்தது. போய்ப் பார்த்து வந்தான். அவள் வீட்டில் இருந்த இரவில் கேட்டாள்:

”வீடு இடிந்துபோச்சா…’

”போயிரும்.”

அவன் அந்த வீட்டிலிருந்து வரும்போது பார்த்தான். அக்கா வீட்டின் மாடக் குழிக்குள் சில திரிகளும், பழைய அகல் விளக்கு களும் எடுத்து வந்திருந்தாள் போல இருந்தது. மசி வடியும் விளக்குகள். வீடு திரும்பும்போது ஒரு விளக்கையும், சில திரி களையும் எடுத்து வந்தான். எதற்கு உதவும் எனத் தெரியவில்லை.

மசிபடிய கைகளில் அவள் கொண்டு வந்தபோது தெருவெங்கும் எண்ணெய் விளக்கெரிந்த நாளின் ஞாபகம் வந்தது. மசி என்றும் கறுப்பாகவே இருந்தது.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *