நெஞ்சுக்குள் நெஞ்சு வை…





(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

‘பிடிக்கவில்லை. ஏன் சம்மதித்தாய்..?’ சட்டென்று வார்த்தைகள் நாக்கு வரை வந்தது. அடக்கிக்கொண்டான்.
கணவனின் முக மாறுதலை உடனே கவனித்த மணிமேகலைக்குத் தன் தவறு தெரிந்தது.
“ஐயோ! நான் சும்மா சொன்னேன்!” பதறி அவன் கையைத் தொட்டாள். இருந்தாலும் விருத்திஷ் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“உங்களைப் பிடிக்கலைன்னா சம்மதிச்சிருப்பேனா..?” என்றும் கெஞ்சலாய்க் கேட்டாள்.
இது நடிப்பு! முன்னே சட்டென்று வார்த்தைகளாய் வந்தது சுயம். இது போலி! – இவன் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.
“வருத்தப்படாதீங்க. மன்னிச்சுக்கோங்க..” கெஞ்சி தாவங்கட்டையைப் பிடித்தாள். “சரி விடு..” விருத்திஷ் அரை மனதாக சமாதானத்திற்கு வந்தான்.
இவரிடம் எச்சரிக்கையாகப் பேசவேண்டும், பழவேண்டும். சாதாரணமானவர்களைப் போலில்லை இவர். குறை உள்ளவர். மனதில் அந்த மரு உறுத்திக்கொண்டே இருக்கும். நாம் எச்சரிக்கையாய் நடக்கவில்லை என்றால் தன் குறையால் இப்படி பேசுகிறாள், நடக்கிறாள் என்கிற வருத்தம் வரும். இந்த பாதிப்புதான்…. சும்மா விளையாட்டிற்குச் சொன்ன சொல் அவரை குத்தி இருக்கிறது – புரிந்தது.
இதையே ஒரு நல்ல மணவாளனிடம் சொல்லி இருந்தால்…
“அப்படியா..? உடனே போ. நான் இன்னொருத்தியைக் கலியாணம் செய்து கொள்கிறேன்!” என்று அவன் திருப்பி கலாய்த்திருப்பான்.
“உனக்கு பிடிக்கலையா..? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு!” என்று சட்டென்று சொல்லி இழுத்து அணைத்து இறுக்குவான்.
இதுதான் குறை உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு. ஆக… இனி என்ன பேசுவதென்றாலும் இது அவர் மனதை பாதிக்குமா, பாதிக்காதா… என்று யோசித்து நிதானமாக வார்த்தைகளை விட வேண்டும். அடுத்து… ‘குறை’ என்று படிந்து கிடைக்கும் தாழ்வு மனப்பான்மையை கொஞ்சம் கொஞ்சமாய் பேசி சரிப்படுத்தி நீக்க வேண்டும்! என்று முடிவெடுத்த மணிமேகலை…. கணவனை வாஞ்சையாய்ப் பார்த்தாள்.
“வாழ்க்கையில் நாம ஒன்னு சேர்ந்தாச்சு. நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டால்தான் நல்லா இருக்கும், நல்லது சொல்றேன். எனக்கு மூணு வயசு முடியும்போதுதான் இந்த போலியோ நோய் தாக்கம் வந்து கால்கள் இப்படிப் போச்சு. அந்த வயசுல இதன் வலி வருத்தம் தெரியல. வளர வளரத்தான் அதுவே பெரிய காயமாய் வலிச்சுது.
மணிமேகலை..! என் வயசுல ஓடியாடி விளையாடுற புள்ளைங்களைப் பார்க்கும்போதெல்லாம் ஐயோ! நாம இப்படி இப்படி ஆகிட்டோமேன்னு எப்படி துடிச்சிருக்கேன்னு அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும். என் நிலை பார்த்து என்னை நிறைய பேர்கள் ஒதுக்கி இருக்காங்க. ஒதுங்கி இருக்காங்க. இப்படியாய் எனக்குள் நிறைய காயங்கள் அடிபட்டு அடிபட்டு… ‘இனி நாம இப்படித்தான். இதுதான் வாழ்க்கைன்னு நிமிரும்போது வயசு பத்து. அப்புறம் படிப்பில் கவனம். அடுத்து இதுவே வேலை வாங்கித் தர்றதுக்கும் உதவுச்சு. என் இளமைக் காலங்களில் சுவாரசியம் கிடையாது. காதல் கிடையாது, வசந்தம் கிடையாது. சப்பாணி டோய்! ன்னு இன்னும் இன்னும் என்னைப் பார்த்து குலைக்கிறாங்க, குதறுறாங்க, பார்க்கிறாங்க. இதுதான் என் வாழ்க்கையில் இதுவரைக் கண்டது” என்றவன் நிறுத்தி… “உன் வாழ்க்கையில் ஏதாவது வசந்தம், காதல், கோணல் இருக்கா மணிமேகலை…?” பார்த்தான்.
எதிர்பாராத கேள்வி துணுக்குற்றாள்.
“எதுவா இருந்தாலும் மறைக்காம சொல். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.காரணம்…நம்ம வாழ்க்கையில் ஒளிமறைவு, கள்ளம் கபடு இருக்கக்கூடாது!” ஆழமாகப் பார்த்தான்.
இவன் இப்படி பேசியதே இவளை ஆழம் பார்க்கத்தான்!
‘உண்மையைச் சொல்லலாமா…?’ மனதில் ஓடியது மணிமேகலைக்கு.
‘வேண்டாம். அது முடிந்து போன கதை. இன்று சொன்னால் நாளை அது வீண் சந்தேகம், சச்சரவுகளை எழுப்பும். மேலும்… நான் இப்படி,..அப்படி என்று ஆண் சொல்ல பெண் கேட்கலாம். ஆனால்… அதையே ஒரு பெண் சொல்லி ஆண் கேட்கும் அளவிற்கு அந்த வர்க்கம் இன்னும் பக்குவப்படவில்லை. கேட்கும்போது கண்ணியமாகத்தான் தோன்றும். அடுத்துதான் அது எரிமலை வெடிக்கும், விஷம் கக்கும். வேண்டாம். தப்பு!’
“இல்லீங்க..” சொன்னாள்.
‘இந்த கேள்விக்குப் பதில் யோசித்து சொல்கிறாள்! எதுவோ இருக்கிறது. மறைக்கிறாள்.என்ன அது..?’ – இவனுக்குள் ஓடியது.
“ஒளிமறைவு வேணாம் மணிமேகலை..” விசயம் கறக்க மறுபடியும் சொன்னான்.
“நான் அப்படியெல்லாம் மனதை எங்கும் சிதறவிடவில்லை”. மணிமேகலைத் தெளிவாகச் சொன்னாள்.
‘ஒரு வயசுப் பெண் எப்படி சிதறாமலிருக்க முடியும்..? இந்த நிலையில் பூங்காவில் அமர்ந்திருக்கும் நம்மைப் பார்த்தே வயசுப் பெண்கள் கடைக்கண்ணால் பார்க்கிறார்கள். எதுவோ சொல்லி சிரித்துச் செல்கிறார்கள். மனசு தடுமாறுகிறது. சர்வ அழகும் பொருந்தி இருக்கும் இவளை இளைஞர்கள் பார்க்காமலிருப்பார்களா..? இல்லை… இவள்தான் அவர்களை பார்க்காமலிருப்பாளா ..? பார்த்து…. இவனைப் போல் ஒருவனாவது தனக்குக் கணவனாக அமைய வேண்டும் என்று எண்ணாமலிருந்திருப்பாளா..? ஆண் பெண் எவருக்கும் இளம் வயதில் மனசு தடுமாறாமல் இருந்திருக்காது. இவள் பொய் சொல்லுகிறாள்.’
“கடந்த கால வாழ்க்கை வேணாம் விருத்திஷ். அது நம் கண்ணுக்குத் தெரியாதது. நம்மைக் கட்டிக்கிட்டப் பிறகு அவள் ஒழுங்காய் இருக்கனும். அதுதான் நமக்கு முக்கியம். தேவை” – ஆனந்தன் சொல்லியது மீண்டும் அவனுக்குள் வந்தது.
கடந்த கால வாழ்க்கை சுத்தமாக இல்லையென்றால் நிகழ்கால வாழ்க்கை எப்படி சுத்தமாய் இருக்கும். மணிமேகலை ஊனமில்லாதவனையாத் திருமணம் செய்துகொண்டாள்?! சரி நமக்குக் கண் நிறைந்த கணவன் கிடைத்திருக்கிறான் விடு என்று ஒதுக்குவதற்கு?!…. அவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அப்படி வாழலாம். இவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் இப்படி வாழலாம் என்று நல்லவனைப் பார்த்து மனசு எடை போடாதா..? அப்படி எடை போடும்போது மனதில் அழுக்குகள் சேராதா..?’ யோசித்தவன் அதற்கு மேல் நீட்டாமல்…
‘சரி இவள் சுத்தமானவள் ! நம்புகிறேன்.!’ என்று ஒதுக்கிய விருத்திஷ்…
“உண்மையாவா மணிமேகலை…” குரலில் ஆச்சரியம் குழைத்துக் கேட்டான்.
“ஆமாங்க. நான் சராசரி பெண்ணிலிருந்து கொஞ்சம் மாறுபட்டவள்!”
“புரியல..?!” குழப்பமாகப் பார்த்தான்.
“எனக்குன்னு எந்த ஆசையும் கிடையாது.”
இவனுக்குள் மெல்லிசாய் வியப்பு வந்தது.
ஆசை இல்லாத பெண் உலகில் உண்டா கடவுளே..! – நினைத்தான்.
திருமணம் நிச்சயம் ஆனா உடனேயே அன்னபூரணி இவனைத் தனிக்குடித்தனம் வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள்.
இவன்தான் மறுத்தான்.
காரணம்….தான் அலுவலகம் சென்ற பிறகு எவனாவது இவளை வளைத்து விட்டால்…? என்ன செய்வது நினைப்பு.
“நான் சொன்னா சொன்னதுதான். அப்பா ஆஸ்துமா. லொக்கு லொக்குன்னு இருமி உங்க நிம்மதியைக் கெடுப்பார். நீங்க புதுசு அப்படி இப்படி இருப்பீங்க” என்றாள்.
எப்படி அப்படி இப்படி இருப்பது..? ஓடிப்பிடித்து விளையாடப் போகிறோமா..? கால நேரம் தெரியாமல் மனைவியைத் தூக்கி தட்டாமாலை சுற்றி கட்டிலில் கிடத்தப்போகின்றேனா..? இல்லை… உட்கார்ந்த இடத்திலேயே சில்மிஷம் செய்யப் போகின்றேனா..? அப்படியே செய்தாலும் மணிமேகலை அதை ரசிப்பாளா..? இதையெல்லாம் தாயிடம் சொல்ல முடியாம, தவிப்பாய்ப் பார்த்தான்.
அவன் பார்வையை உணர்ந்த அவள்…
“நான் சமயம் கிடைக்கும்போது அப்பப்ப வந்து பார்க்கிறேன்!” சொன்னாள்.
‘காவல் போட வழி…?’ இவனுக்குள் ஓட…
“மணிமேகலை…!” அழைத்தான்.
‘சொல்லுங்க..? “
“இன்னும் ரெண்டு மூணு நாள்தான் நாம் ரெண்டு பெரும் இங்கே இருப்போம். அதுக்கப்புறம் எங்க அலுவலக ஊழியர் குடியிருப்பு வீடு ஒண்ணுக்குக் குடித்தனம் போய்விடுவோம்.”
“தனிக்குடித்தனமா…?”
“ஆமா…”
“ஏன்..? “
“என் அலுவலகம் கூப்பிடு தூரம். எனக்கு சிரமமிருக்காதுன்னு அம்மா அபிப்பிராயம். ஏற்பாடு”
“மாமாவையும் அத்தையையும் இப்படி தனியே விட்டுப் போறது சரியா..?”
“அவுங்க நல்ல இருக்காங்க. உன் உதவி ஒத்தாசை தேவை இல்லே. நான் அலுவலகம் போன பிறகு உனக்குத் தனியே இருக்கப் பயமா..?”
“குடியிருப்பு தனித்தனி வீடுகளா..?”
“இல்லே. நாலு மாடி கட்டிடங்கள். அப்படி பத்து கட்டிடங்கள். எல்லாத்திலும் குடித்தனங்கள் இருக்கு.”
“அப்புறம் என்ன பயம்..?”
“புதுசு… சட்டுன்னு யாரும் பழக்கமிருக்காதே…!”
“கொஞ்ச நாள்ல பழகிடுவாங்க…”
“அதுவரைக்கும் உன் துணைக்கு உன் கடைசி தங்கச்சியை துணைக்கு வச்சுக்கோ எனக்கு ஆட்சேபனை இல்லே.”
“பொண்ணுங்க அடுத்த வீட்டுக்குப் போறதே என் அம்மாவுக்குப் பிடிக்காது. இதுக்கு சம்மத்திக்க மாட்டாங்க.”
“பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் தவிப்பேன்னு சொன்னேன்.”
“எனக்குத் தொலைக்காட்சி பிடிக்காது. கைபேசி பிடிக்காது. புத்தகம் படிச்சு பொழுது போக்குவேன்.”
“நிறைய படிப்பியா…?”
“ஆமாம்!”
”நான் நூலகத்திலிருந்து உனக்குத் தேவையானது எடுத்து வர்றேன்.”
“சரி”
“அப்புறம் உனக்கென்ன வேணும்..?”
“என்ன வேணும்..? நீங்க வேணும், நான் வேணும்.. அடுத்து நமக்குக் குழந்தைகள் வேணும்..” முகம் செம்மையாக அவனைப் பார்த்தாள்.
அத்தியாயம் – 5
செல்லம்மாள் புழக்கடையில் புரண்டு புரண்டு படுத்தாள்.
எந்த தாய்க்குமே பெண்ணை முதலிரவு அறைக்குள் அனுப்பிவிட்டால் பதற்றம்தான்.
‘என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ..? பெண் மனசு கோணாமல் நடந்து கொள்ளவேண்டும்!’என்ற கவலை, தவிப்புமாய் இருப்பாள். மணிமேகலையின் தாய்க்கு இது அதிகப்படியாக இருந்தது.
பிள்ளையைப் பெற்றவர்கள், அதிகாரி ஆகியோர் எடுத்துச் சொல்லியும் நம்பிக்கைப் படாமல் விருத்திஷ் தாய் அன்னபூரணியைத் தனியே அழைத்து தன் கவலையைச் சொன்னாள்.
“அதுபத்தி கவலைப் படாதீங்கம்மா. விருத்திஸுக்கு கால்கள்தான் இளம்பிள்ளை வாதத்தால் அப்படிப் போச்சு. மத்தபடி எந்த குறையும் இல்லே. அப்படி இருந்தால் இந்த காரியத்தில் இறங்குவேனா..? பெண்ணுக்குப் பெண் துரோகம் செய்வேனா..? அதிலும் நான் செய்யமாட்டேன்!” என்று அவள் சொன்னாலும்…
செல்லம்மாவிற்கு அந்த குறை மனசுக்குள் இருக்கத்தான் செய்தது.
மேலும்… மணிமேகலை மறுப்பு சொல்லாமல் தயங்காமல் சட்டென்று சம்மதமென்று தலையாட்டியது வேறு சங்கடம். இவளால் ஒன்றும் பேச முடியவில்லை. இது குறித்து இது குறித்து மகளிடம் பேசினால்… அவள் பயந்து வேண்டாமென்று மறுத்து ஒதுக்கினால் செலவில்லாமல் வந்த வரன் கை நழுவி போய் விடுமோ என்கிற பயம் வேறு. மறு பேச்சு பேசாமல் ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு கம்மென்று இருந்து விட்டாள்.
இப்போது அப்படி இருக்க முடியவில்லை.
‘கடவுளே! நான் என்ன பாவம் செய்தேனோ என் மகளுக்கு இப்படியொரு வாழ்க்கையை கொடுத்துட்டே. அவளுக்கு எந்த குறை இருந்தாலும் இந்த குறை இருக்கக்கூடாதுப்பா!’ என்று மனசார வேண்டி தவித்து தூக்கம் வராமல் புரண்டாள்.
காலையில் எழுந்து மகள் நல்ல சேதி சொன்னால்தான் மனசு நிம்மதியடையும் நிலை. அதனால் இரவு முழுதும் தூங்கியும், தூங்காமலும் நெளிந்தாள்.
அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே அந்த விடிந்தும் விடியாத நேரத்தில் எழுத்துதான் வந்தாள் செல்லம்மாள். ஆனால்… இவள் மகளை நெருங்குவதற்குள் குளியலறையில் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டாள் மணிமேகலை.
வரட்டும்! விசாரித்து விட்டுத்தான் மறுவேளை! – காத்திருந்தாள். குளியலறை திறந்து வெளிவந்தவளை சம்பந்தி அம்மாள் அழைத்துக் கொண்டு சென்றது ஏமாற்றமாக இருந்தது.
கணவனுக்கு வெந்நீர் கொண்டு வைப்பது, இன்னும் பிற வேலைகளென்று மணிமேகலைக்கு அடுத்தடுத்து ஓயாமல் வேலை என்றபதால் சட்டென்று நெருங்கி மகளிடம் எதையும் கேட்க முடியவில்லை. அப்படியும் ஓர ஒதுங்க இருந்து மகள் முகம் மலர்ச்சியாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கவனித்தாள். மணிமேகலையின் முகத்தில் அப்படி எதையும் காண முடியவில்லை. நிலை கொள்ளாமல் தவித்தாள்.
மணிமேகலை கணவனை எழுப்பி குளியலறை அழைத்து வந்தாள். அவன் முட்டி போட்டு தவழ்ந்து செல்ல.. மகள் பின்னால் செல்வதைப் பார்க்க பாவமாக இருந்தது. குளியலறை நோக்கி சென்ற விருத்திஷ்….நின்று மனைவியிடம்…
“பின்னால் வராதே!” – சொன்னான்.
“ஏன்..?”
“மாடு ஓட்டிக்கிட்டு வர்ற மாதிரி இருக்கு!”
மணிமேகலை இந்த வார்த்தைகளைக் கேட்டு ஒரு கணம் ஆடிப்போனாள், அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றாள்.
அவன் உள்ளே சென்றதும் இவளும் நுழைந்து கதவு சாத்தினாள்.
” ஏன்..? ” அவளைப் பார்த்தான்.
“நான் குளிப்பாட்டி விடுறேன்.”
“வேணாம். எனக்குக் குளிக்கத் தெரியும்!”
“இத்தனை நாளும்தான் ஆளில்லாமல் தானாய்ச் செய்து சிரமப்பட்டீங்க. துணைக்கு நான்தான் வந்துட்டேனே. எதுக்கு கஷ்டம்..?”
“எனக்குக் கஷ்டம்ன்னு யார் சொன்னது..?” விருத்திஷ் அவளைத் திருப்பித் தாக்கி கடுப்படித்தான்.
மணிமேகலைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“இதோ பார் மணிமேகலை. என் மேல பரிதாப பட்டு நீ எனக்கு எந்த காரியமும் செய்ய வேணாம். யார் தயவுமில்லாமல் என்னால் எல்லா காரியங்களும் செய்ய முடியும். தயவு செய்து நீ எனக்கு உதவி செய்யிறேன்னு உபத்திரவம் செய்யாமலிந்தால் போதும்! நீ போகலாம்” சொன்னான்.
மணிமேகலைக்கு அவமானமும், வேதனையும் ஒரு சேர ஆட்கொண்டது.
‘இது இப்படிப்பட்டவர்களுக்கு உள்ள பொதுக் குணம்!’ நினைத்து வெளியே வந்தாள்.
அப்படி வந்தவளை…
“அடுப்பைப் பாரும்மா” என்று தயாராய் வந்து அவளை அங்கு அனுப்பினாள் அன்னபூரணி.
குளித்து முடித்து மாப்பிள்ளை சுத்தமான கைகளுடன் தரையில் தவழ்ந்து செல்வதை பார்க்க செல்லம்மாளுக்கு மனசைப் பிசைந்தது.
“இதோ பாரம்மா. அவன் எப்பவும் அப்படித்தான். அவன் வேலையை யாரும் செய்யக்கூடாது. செய்தால் கடுப்படிப்பான். அதனால நான் என்ன செய்யிறேன், ஏது செய்யிறேன்னு இன்னைக்கு கவனி. அவன் எப்படிப் போறான், என்ன பண்ரான்னு பார். அதன்படி நடந்துக்கோ”. அருகில் வந்து மாமியார் சொன்னது ஆறுதலாக இருந்தது மணிமேகலைக்கு.
”சரிங்க அத்தை!” சொன்னாள். கவனித்தாள்.
விருத்திஷ் ஈரத் துணியுடன் சென்றான். அறையில்… கீழ் அவனின் சட்டை, கால் சட்டை மடிப்புக் கலையாமல் எடுத்து எடுத்து வைக்கப்பட்டிருந்தது. உடுத்திக் கொண்டான். அதன் அருகிலேயே தேங்காய் எண்ணெய், சீப்பு, கண்ணாடி, பவுடர் வகையறாக்கள் இருந்தன.
அவன் தலையில் எண்ணெய் தடவி, சீவி, பவுடர் பூசி வெளி வந்தான்.
“இப்படி வந்துட்டான்னா ‘சாப்பிடறதுக்குத் தயார்!’ன்னு அர்த்தம்” என்று மருமகளின் காதைக் கடித்த அன்னபூரணி… தட்டில் அவனுக்குத் தேவையான இட்லி, சட்னி வகையறாக்களைக் கொடுத்து அனுப்பினாள்.
நகர்ந்தவளிடம்….
“நீ கிட்ட கொண்டு வச்சுட்டா போதும். நீ பரிமாற வேணாம்!” சொல்லி அனுப்பினாள்.
மணிமேகலை அதன்படியே செய்து திரும்பினாள்.
‘கணவனுக்கு அருகில் இருந்து பரிமாறாமல் அம்மாவைப் போல் இப்படி அலட்சியமாக வைத்து விட்டுச் சொல்கிறாளே.. !’ இவனுக்குள் சுருக்கென்று தைத்தது.
மணிமேகலையின் தாய் செல்லம்மாள் இந்த நடவடிக்கைகளை எல்லாம் ஒதுங்கி இருந்து கவனித்துக் கொண்டுதானிருந்தாள்.
‘இதைவிட முக்கியமானது மகளைக் கேட்க வேண்டும். ஊருக்குச் செல்ல வேண்டும். அண்ணனைக் காவல் வைத்துவிட்டு வந்தோம். பாவம்! வீடு எப்படி இருக்கோ. குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ..?’ கவலைப் பட்டாள்.
விருத்திஷ் சாப்பிட்டுவிட்டு அந்தண்டை நகர்ந்ததும் எச்சில் இலையைக் கொல்லையில் போட வந்த மகளைப் பிடித்துக் கொண்டாள் செல்லம்மாள். கையை எடுக்காமல் மகளை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்.
“என்னம்மா..? “
“ராத்திரி முகூர்த்தம் திருப்தியா..?” சட்டென்று கேட்டாள்.
‘எதற்கு இந்த கேள்வி?!’ புரியாத மணிமேகலை…
“திருப்தி திருப்தி இல்லே…! என்ன செய்யப்போறே..?” கேட்டாள்.
செல்லம்மாள் சங்கடமாகக் கையைப் பிசைந்தாள்.
“அம்மா! இது பத்தாம் பசலித்தனக் கேள்வி. திருமணம் முடிஞ்சிடுச்சி. வாழ்க்கையில் ஒண்ணு சேர்ந்துட்டோம். இனி இன்பம், துன்பம், லாப, நட்டம் எல்லாம் எங்களைச் சேர்ந்தது. நீங்க கேட்டு என்னாகப் போவுது..? திருப்தின்னா சந்தோசப்படுவீங்க. இல்லேன்னா …பிரிச்சி வைக்கப் போறீங்களா? இல்லே வேற ஏதாவது செய்யப் போறீங்களா?” மணிமேகலை நிறுத்தி நிதானமாகத்தான் கேட்டாள்.
இதுவே செல்லம்மாளிற்கு ஆயிரம் சாட்டையடிகள் வாங்கியது போலிருந்தது. அரண்டாள்.
இதுவரை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசாமல் எவ்வளவு சாந்தமாக இருந்த பெண், இப்படி படபடக்கிறாளே! திருப்தி இல்லையா..? ஏமாற்றம் அவளை இப்படி பேச வைக்கிறதா..? நினைத்தவள் சுதாரித்து…
“இல்லேம்மா… ஒரு பேச்சுக்கு…” இழுத்தாள்.
“கேட்க வேண்டியதில்லை!” என்று என்று முகத்திலடித்தாற்போல் சொன்ன மணிமேகலை….
“அம்மா! திருப்தி இருந்தாலும் இல்லேன்னு சொல்லலாம். இல்லேன்னாலும் உங்க நிம்மதிக்காக இருக்குன்னு சொல்லலாம். மகள் உண்மையைச் சொல்றாளா, பொய் சொல்றாளான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..? அதனால இந்த கேள்வி அனாவசியம். இதை நீ மட்டும் கேட்கல முதலிரவு அறையிலிருந்து வர்ற மகளைப் பார்த்து எல்லா தாய்மார்களும் கேட்கிற கேள்வி. அதனாலதான் எனக்கு கோபம்!” சாந்தமாகச் சொன்னாள்.
இது செல்லம்மாளுக்கு ஆறுதலாக இருந்தது.
இருந்தாலும் முடிவு தெரியவில்லையே!
“என்னம்மா யோசனை..?”
“ஒண்ணுமில்லே..”
“சரி நீ ஊருக்குப் புறப்படு”
“சரிம்மா..” தலையசைத்தாள்.
அத்தியாயம் – 6
திட்டமிட்டபடி அலுவலக குடியிருப்புக்கு குடி வந்தது கூட பெரிதில்லை. மோப்பம் பிடித்துக்க் கொண்டு சிவா வழிய வந்து விசாரித்து விட்டு மனைவியைப் பார்த்து விட்டுச் சென்றது தான் விருத்திசுக்கு வெறுப்பு, வேதனையாக இருந்தது. அழையாத விருந்தாளியாக வந்து… ரொம்ப அந்நியோன்னியன் போல்…
“குடி வந்துட்டியா..? ரொம்ப சந்தோசம். மணிமேகலை ஒன்னும் கவலைப் படாதே. பக்கத்து கட்டிடத்துலதான் இருக்கேன். என்னை உன் கணவன் சகோதரனாய் நினைச்சு எந்த உதவி வேணும்ன்னாலும் கேள். மறுக்காமல் ஓடி வந்து காதும் காதும் வைச்சா மாதிரி அடுத்தவங்களுக்குத் தெரியாம செய்து போறேன். விருத்திஷ் கூச்சப்படுவான். நீ கூச்சப்படவேணாம் தைரியமா கேள்” ரொம்ப யோக்கியன் போல் சொல்லிவிட்டுச் சென்றது வேறு இவனுக்குக் கடுப்பாக இருந்தது.
‘என்னை உன் கணவன் சகோதரனாய் நினைச்சு எந்த உதவி வேணும்ன்னாலும் கேள். மறுக்காமல் ஓடி வந்து காதும் காதும் வைச்சா மாதிரி அடுத்தவங்களுக்குத் தெரியாம செய்து போறேன்.’
‘எவ்வளவு சூசகமாக வார்த்தைகள். அயோக்கிய ராஸ்கல்!′ – மனசுக்குள் பல் கடித்தான்.
அவனைப் பற்றி எதுவும் தெரியாத மணிமேகலை. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து….
“இருங்க. காபி குடிச்சுட்டுப் போங்க…” எடுத்து வந்து கொடுத்து உபசரித்தது வேறு இவனுக்கு வேதனை.
அயோக்கியனுக்கு அடுத்த வாய்ப்பு!
காபி குடித்தவன்…
“காபி ரொம்ப அருமை. உங்க கை மணம் செம…” காபியைச் சொல்வது மாதிரி மணிமேகலையைப் புகழ்ந்தது இன்னும் கொடுமை, வயிறெரிச்சல்.
பெண்களுக்கு ஆண்கள் ஒரு வார்த்தை வாய் புகழ்ந்தால் போதும். அப்படியே மயங்கி மலர்ந்து மண்ணாகி அவன் மடியில் சாய்ந்து விடுவார்கள். இப்படிப்பட்ட பலகீனத்தை கடவுள் அவர்களுக்குப் படைப்பிலேயே பிறப்பாக வைத்து அனுப்பிவிட்டார்.
அப்படித்தான் மணிமேகலையும் மலர்ந்து விட்டாள்.
சரி வராது! நினைத்த விருத்திஷ்…
“மணிமேகலை…!” அழைத்தான்.
“இதோ வந்துட்டேன்.”
சமயலறையில் எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் அப்படியே விட்டுவிட்டு வந்தாள்.
“உட்கார்”
அமர்ந்தாள்.
“வீடு வசதியா இருக்கா…?”
“இருக்கு..”
“நான் மாடி ஏறமுடியாது என்கிற நல்ல எண்ணத்துல எங்க இயக்குனர் கீழ் வீட்டை ஒதுக்கி இருக்கார். கொடுத்திருக்கார்…”
“அத்தை சொன்னாங்க..”
“இங்கே நாப்பது அம்பது குடும்பங்களிருக்கு . எல்லாமே என் அலுவலகத்துல வேலை பார்க்கிறவங்க…”
“சொன்னீங்க…?”
“கீழ் வீடு என்கிறதுனால போறவன் வர்றவனெல்லாம் தேவை இல்லாம வந்து தலை காட்டிட்டுப் போவான். அவனுக்கெல்லாம் காபி, டீன்னு உபசாரணை வேணாம். அவ்வளவு ஏன்… எவன் என்னைத் தேடி வந்தாலும் நீ அறையை விட்டு வெளியே வரவேணாம்.”
“அவன் பேச்சுக்கு மறு பேச்சு வேணாம். அவன் சொல்றபடி நடந்துக்கோ பிரச்சனை இருக்காது!” அத்தை அன்னபூரணி சொன்னது ஞாபகம் வந்தது.
“சரிங்க…” தலையாட்டினாள்.
“அப்புறம் இந்த சிவா பயல் அடிக்கடி அனாவசியமா வந்து தலை நீட்டுவான். நீ வெளியவே வராதே.”
“ம்ம்ம்…”
“உன் தலையைக் கண்டாலே வலிய வந்து வழிவான், பேச்சுக் கொடுப்பான் பேசாதே!”
“ஏன்…?”
“அவன் சரியான பொம்பளைப் பொறுக்கி!”
“அப்படியா…?!”
“ஆமாம். நாங்க ஏழெட்டுப் பேர் ஒன்னா வேலைக்கு வந்தோம். அதுல சிவா ஒருத்தன். முதல் மாத சம்பளம் எடுத்ததுமே… ‘பலான’ இடத்துக்குப் போய் வந்து அலுவலகத்தில் வந்து நான் அங்கே போனேன் அவள் அப்படி இருந்தாள், இப்படி இருந்தாள்ன்னு தம்பட்டம் அடிச்சி அளப்பறைப் பண்ணினான்.”
“….”
“ஒண்ணாம்நம்பர் அயோக்கியன்! அவனுக்குப் பொம்பளைங்கன்னா அல்வா சாப்பிடுறது மாதிரி. அவளுங்களை வளைக்க என்ன வேணுமின்னாலும் செய்வான்..! என்ன வேலைன்னாலும் என்னைத் தவிர நீ அடுத்தவர் உதவியை நாடக்கூடாது! அவ்வளவுதான்!” கறாராக சொன்னான்.
“மணிமேகலை! இவனுக்குச் சந்தேகப்புத்தி அதிகம். அதுக்காகத்தான் கலியாணமே வாணாம்ன்னு அடம்புடிச்சான். அனுசரிச்சு நடந்துக்கோ…” அன்னபூரணி குரல் காதில் ஒலித்தது.
அதற்காக இப்படியா…? கண்டவன் கண் பட்டால் பெண் கற்பிழந்து விடுவாளா..? ஊனமான கணவனென்று பெண்தான் தப்பிதமாக நடப்பாளா..? இல்லை, வீட்டிற்கு வருபவர்கள்தான் கணவன் மாற்றுத்திறனாளி காலில்லா கையாலாகாதவன் என்று எதிரில் நிற்பவளைக் கையைப் பிடித்து இழுப்பானா..? என்ன அயோக்கியத்தனமான நினைப்பு இது…?!
எல்லா பெண்களைப் போல் ஏன் சராசரியாக இருக்க வேண்டும். இப்படி ஒருவனைத் திருமணம் செய்து அவனுக்கு பணிவிடைகள் செய்து வாழலாம் நினைத்து கழுத்தை நீட்டியது தவறோ..?! இவளுக்குத் தோன்றியது.
உடல் மட்டுமல்ல. மனமும் ஊனமாய் இருக்கிறதே! என்ன செய்ய எப்படி வாழ..? மேலும் இவளுக்குள் யோசனை ஓடியது.
இந்த மன உனக்கு மாற்றப் பட வேண்டும். கலையப்படவேண்டும்! நினைத்தாள்.
அதற்கு முதல் கட்டமாக….மறுநாள்.
“என்னங்க..! இன்னைக்கு நாம கடற்கரை போகலாமா..?” அழைத்தாள்.
“வேணாம்..!”
“மூணு சக்கர வாகனத்தில் உட்கார்ந்த்திருக்கும் என்னையே எல்லாரும் ஒரு மாதிரியாய் கேவலமாய்ப் பார்த்துப் போவாங்க. நீயும் கூட இருந்தீன்னா.. இவனுக்குக் கலியாணமா..? பொண்ணு அழகா இருக்காளேன்னு ஒரு மாதிரியா விகாரமா நினைச்சுப் போவாங்க.வேணாம்.”
“இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டிருந்தால் நாம வாழ முடியாதுங்க…”
விருத்திஷ் சிறிது நேரம் மவுனமாய் இருந்தான்.
இவளுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது. நடத்திதான் புரிய வைக்க வேண்டும் தோன்றியது.
“சரி போகலாம்!” சம்மதித்தான்.
விருத்திஷ் தன் மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை விட… மணிமேகலை பின்னால் அமர்ந்து செல்ல… சாலையில் போவோர் வருவோர் எல்லாரும் இவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டுத்தான் சென்றார்கள். கடற்கரையில் இன்னும் கொடுமை.
அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் இவர்களை இளைஞர்கள் ஒட்டிச் சென்றார்கள். அப்படி செல்வதோடு மட்டுமில்லாமல்…
“இவனுக்கெல்லாம் ரதி மாதிரி பொண்டாட்டி கிடைச்சிருக்காள் பார்த்தியா..?”
“பாவம்டா அந்த பொண்ணு… தாய் மாமன் போல தலையில கட்டிட்டாங்க…”
இதைவிட எல்லாம் கொடுமை…
இவர்களைப் பார்த்த அடுத்த நொடி எங்கிருந்தோ வந்து முளைத்த சிவா ஓடி வந்து….
“ஹாய் விருத்திஷ்!” ஒட்டிக்கொண்டான்.
இவர்கள் அருகில் அமர்ந்து…
“மணிமேகலை! வீட்டுக்காரரோட சந்தோசமா கடற்கரைக்கு வந்துட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சி.” என்று வேறு இவளிடம் பேச்சுக் கொடுத்தான்.
பொது இடத்தில் எப்படி முகத்தைத் திருப்பிக்கொள்ள முடியும்..?
இவளும் அவனைப் பார்த்து மெல்லிசாய் முறுவலிக்க…
பெண்களுக்கு என்ன சொன்னாலும் புத்தியே வராது. புகழ்ச்சி போதும் முகம் பூக்கும்! – விருத்திசுக்கு உடலே பற்றி எரிந்தது.
“போகலாம்…!” மணிமேகலையிடம் சொல்லி விருட்டென்று எழுந்தான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |