கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 432 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

விருத்திஷ் வேண்டா வெறுப்பாக மணிமேகலை கழுத்தில் தாலி கட்டினான். திருமணம் கூட வெகு சிறப்பாக இல்லை.

அலுவலக சாப்பாட்டுக்கூடம். சாப்பாட்டு மேசை நாற்காலிகளையெல்லாம் தற்காலிகமாக ஒதுக்கி ஐநூறு ஊழியர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு.

அதில் நிர்வாகப் பிரிவு, தொழிலாளர்கள் பிரிவு என்று அலுவலகம் மொத்தமும் கூடி இருந்தது.

தலைமை அதிகாரி இயக்குனர் தலைமை வகித்தார்.

அவருக்கும் மணமக்களுக்கு மட்டுமே மேசை நாற்காலிகள்.

மாப்பிள்ளையைப் பெற்றவர்கள், பெண்ணைப் பெற்றவர்கள் அவர்களின் சொந்தம், உறவென்று ஒரு சிலர் மட்டுமே அந்த விழாவில் வெளி ஆட்களாக கலந்திருந்தார்கள்.

விருத்திஷ் நல்ல வாட்டசாட்டம் ஆஜானுபாகுவாகத்தான் நாற்காலியில் வீற்றிருந்தான். ஆனால் இடுப்பிற்குக் கீழே… முடக்குவாதம்தான் ஆளை முறியடித்திருந்தது. இரண்டு கால்களும் குச்சி குச்சியாய் சூம்பி செயலிழந்திருந்தது. மற்றப்படி மாலையும் கழுத்துமாக ஆள் எடுப்பாக இருந்தான்.

பக்கத்து நாற்காலியில் மணமகள் மணிமேகலை கழுத்தில் புதுத்தாலி தாங்கி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

மேளமில்லை, தாளமில்லை, நாதஸ்வரமில்லை, வீண் அனாவசிய ஆடம்பரங்களில்லை. தலைமை தாங்கும் மேலதிகாரி தாலி எடுத்துக் கொடுக்க …. மிக எளிமையாக திருமணம் முடிந்திருந்தது.

பார்வையாளர்கள் அட்சதை தூவி ஆசீர்வாதம் முடித்தபிறகு…

தலைமை தாங்கிய இயக்குனர் எழுந்து தொண்டையைக் கனைத்து சரி படுத்திக்கொண்டு பேச்சைத் தொடங்கினார்.

“நான் எத்தனையோ திருமணங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனா… இந்த திருமணத்தைத்தான் தலைமை தாங்கி நடத்தி இருக்கேன். இது ஒரு மாறுபாடான திருமணம். மணமகள் மணிமேகலை கவுரவிக்கப்பட வேண்டியவள். ஒரு ஊனமுற்றவனை மணமகனாக ஏற்றுக் கொண்டவளை நாமெல்லாம் பார்த்து பெருமைப்படவேண்டும். இவன்தான் மணமகன். அரசு ஊழியன். இவனுக்குத்தான் நீ மாலை இடவேண்டும், கழுத்தை நீட்டவேண்டும் என்று சொன்ன உடனே சம்மதம் சொன்ன நல்ல பெண். இப்படிப்பட்ட பெண்ணைப் பார்த்து நான் அன்னைக்கே ஆச்சரியப்பட்டேன். இன்னைக்கும் ஆச்சரியப்படுறேன். என்னைக்கும் ஆச்சரியப்படுவேன். எந்தப் பெண்ணுமே தனக்கு மணமகனாக வரவேண்டியவன் அழகாய் இருக்கனும், குறையாய் இருக்கக் கூடாதுன்னுதான் நினைப்பாள், வேண்டிப்பாள். ஆனால் இவளோ….இப்படிப்பட்டவன்தான் தனக்கு வாய்க்கவேண்டுமென்று வேண்டி இருப்பாள் போல. அதான் உடனே சம்மதம் சொல்லிவிட்டாள்.

விருத்திஷ் இப்போ இந்த அலுவலகத்துக் குழந்தை. இந்த அலுவலக வீட்டு மாப்பிள்ளை. இவன் உடல்தான் ஊனமேத்தவிர உள்ளம் ஊனம் கிடையாது. மேலும்…நல்லவன், வல்லவன், வேலையில் திறமைசாலி. நான் அதிகமாய் பேசி நம்ம பொன்னான நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. ஆகையால் என் உரையை இத்துடன் முடித்துக் கொண்டு என் சார்பாகவும், இந்த அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் சார்பாகவும் இவர்களுக்கான வெகுமதிகளை அளிக்கிறேன் !” என்று சொல்லி… மேசை மீது இருந்த நகை பெட்டியை எடுத்து திறந்து அதிலிருந்து மோதிரம் ஒன்றை எடுத்து முதலில் விருத்திஷுக்கு அணிவித்தார். அடுத்து ஒரு மோதிரத்தை எடுத்து… மணமகள் கையை நன்றாக இறுகப் பற்றி அணிவித்தார்.

கை தட்டல்களால் அந்த அறை அதிர்ந்தது.

பெற்றவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

உடனடியாக தாள் தட்டில் இனிப்பும், காரமும் ‘நலப்பாதுகாப்புச் சங்கம்’ சார்பாக எல்லோருக்கும் வழங்கப்பட்டது. காபி பொறுப்பை நிர்வாக ஊழியர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

விழா இனிதே முடிய எல்லோரும் எழுந்து மணமக்களுக்கு கை கொடுத்து மொய் கொடுத்து… கலைந்து அலுவலகம் சென்றார்கள்.

அலுவலக கார் வாசலில் நிறுத்தப் பட்டது. விருத்திஷ் மாலையும் கழுத்துமாக கை கால்களை ஊன்றி தவழ்ந்து வந்து ஏறினான். மணிமேகலை பின்னாலேயே வந்து ஏறி அவனுக்கருகில் அமர்ந்தாள்.

மணிமேகலை தாய் செல்லம்மாவிற்கு மாப்பிள்ளை தவழ்ந்து வந்து ஏறியது கஷ்டமாக இருந்தது. மனசு விம்மியது. யாருக்கும் தெரியாமல் தன் விழிகளில் பொங்கிய நீரைத் துடைத்தாள்.

அடுத்து மாப்பிள்ளையைப் பெற்ற அம்மா அன்னபூரணி, அப்பா கங்காதரன் ஏறினார்கள்..

கார் விருத்திஷ் வீடு நோக்கி சென்றது.

ஜன்னல் வழியே காருக்குள் காற்று சிலுசிலுவென்று வீசியது. மணமக்கள் அணிந்திருந்த மாலை மலர்களின் மணம் கும்மென்று அடித்தது.

மணிமேகலை காதோரம் உள்ள சுருள் கேசம் காற்றில் விளையாடியது. அவள் அருகில் அமர்ந்திருக்கும் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

விருத்திஷ் முகம் இறுக்கமாக வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தான். இல்லை வெறித்தபடி வந்தான்.

அவனுக்கு இந்த திருமணத்தில் எள்ளளவும் விருப்பமில்லை. ரொம்ப முரண்டு பிடித்தான்.

“வேணாம்மா..! ” சொன்னான்.

“ஏன்…? “

“என்னை எவள் கட்டிப்பாள்…?”

“அப்படி ஒருத்தி வந்தாள்ன்னா…?”

“அவ மனசார சம்மதிச்சிருக்க மாட்டாள்”.

“ஏன்…?”

“இடுப்புக்கு கீழே முடக்குவாதம். மூணு சக்கர சைக்கிள். மனசு ஏத்துக்காதும்மா. இதையும் மீறி அவள் சம்மதிச்சாள்ன்னா… ஒன்னு அவ சுய புத்தி இல்லாதவளாய் இருக்கனும். இல்லே… சாக்கடையாய் ” முடிக்காமல் நிறுத்தி தாயைப் பார்த்தான்.

“நான் அப்படிப்பட்ட கழிசடையெல்லாமா உனக்குத் தேடுவேன், தேர்ந்தெடுப்பேன்.”

“அப்படிப்பட்டவள்ன்னு முகத்துல எழுதி ஒட்டி இருக்காதும்மா..ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறவள்கூட அரசு உத்தியோகம் நிரந்தர வேலை கஷ்டமில்லாம் இருக்கலாம்ன்னு சம்மதிக்க மாட்டாள் அம்மா ! எந்தப் பெண்ணும் தனக்கு வாய்க்கிறவன் அழகாய் இல்லேன்னாகூட வருத்தப் படமாட்டாள். எந்தக் குறையுமில்லாமல் ஊனமில்லாதவனைத்தான் கட்டிக்க ஆசைப்படுவாள். கை கோர்த்து நடக்க ஆசைப்படுவாள்.”

“நாங்க நல்லது கேட்டது விசாரிச்சுதான் பெண்ணைத் தேர்ந்தெடுப்போம்.”

“அதையும் மீறி தவறு நடந்தால்..?”

“தொட்டுத் தாலி கட்டினவனுக்கு யாரும் துரோகம் பழி நினைக்க மாட்டாள்.”

“அம்மா! அது அந்தக்காலம். நடைமுறை கள்ள புருசனை வைச்சுக்கிட்டு நல்லபுருசனைப் போட்டுத் தள்றது இந்தக் காலம். அம்மா! நீ எப்படிப் பட்ட பெண்ணைப் பார்த்தாலும் என் சோத்துல விசம் வைச்சிடுவாளோ, தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுடுவாளோ என்கிற மரண பயத்திலேயே வாழ்ந்து தினம் செத்து செத்துப் பிழைக்கனும். என்னை வீட்டுக்குள்ளேயே வைச்சிகிட்டு கள்ள புருசனை அழைப்பாள். நான் ஓடிப்போய் தடுக்க முடியாது. அநியாயம் நடந்தாலும் கண்டிக்க முடியாது. இந்த மூணு சக்கர சைக்கிளும் வேலையும்தான் என் வாழ்க்கை. அது போதும்.” சொன்னான்.

“கடவுளே! இந்த மாதிரிப் பிள்ளையை எனக்கு ஏன் கொடுத்தாய். அதை கருவிலேயே நீ அழித்திருக்கக் கூடாதா..? இல்லை.. கொடுக்காமலேயே விட்டிருக்கக் கூடாதா..? பிள்ளை வேதனை பெற்ற வயிறு தாங்களையே..!” அன்னபூரணிக்கு நெஞ்சம் துடித்து கண்கள் பணித்தது.

மனம் நொந்த மகனை பார்க்க எந்த தாய்க்கு மனம் இடம் கொடுக்கும்..?

“விருத்திஷ்! உனக்கு இதுதான் வாழ்க்கைன்னாலும் எங்களுக்குப் பிறகு உனக்கு வாழ்க்கை வேணும்ப்பா. கை வலிச்சா, கால் வலிச்சா ஒரு துணை வேணும்ப்பா..!” தழுதழுத்தாள்.

“ஆண்டவன் என்னை இப்படி படைச்சிட்டானேம்மா..” அவனும் கரகரத்தான்.

“இப்படி படைச்சாலும் அந்த ஆண்டவன் உனக்கும் ஒருத்தியைப் பிறக்க வச்சிருப்பான்ப்பா. ஆண்டவன் யாரையும் அனாதையாய் விடுறதில்லே. உன்னைப் போல் உள்ளவங்க எல்லாம் கலியாணம் பண்ணி சந்தோசமா இருக்காங்க. தன் மூணு சக்கர வாகனத்துல அவள் பின்னால சந்தோசமா உட்கார்ந்திருக்காள். இன்னொருத்தி புருசனை வச்சி கால் நடையாய் வண்டியைத் தள்ளிக்கிட்டுப் போறாள்.”

“என்னைவிட மோசமாய் உள்ளவனெல்லாம் கூட திருமணம் செய்து இருக்கான். அவுங்களுக்கு எப்படியோ ஒருத்தி கிடைச்சி எப்படியோ குடும்பம் நடத்துறாங்க. என்னால் அப்படி முடியாது. நல்லவள் கிடைச்சா நல்லா இருக்கும். கெட்டவள் கிடைச்சா… நரகமா இருக்கும். இப்போ இருக்கிற நிம்மதி கலியாணத்துக்குப் பிறகு காணாமல் போகும்”

அன்னபூரணி அதற்குமேல் அவனை வற்புறுத்தவில்லை. வற்புறுத்தியதெல்லாம் வேறு ஆள்.

அத்தியாயம் – 2

“விருத்திஷ்! உன்னை நான் ஒன்னு கேட்கலாமா…?” பூங்கா சிமெண்ட் பெஞ்சில் அருகில் அமர்ந்திருந்த அலுவலக நண்பன் ஆனந்தன் கேட்டான்.

“கேளேன்..!”

“இடுப்புக்குக் கீழ் உனக்கு உணர்ச்சிகள் இருக்கா…?”

“ஏன்..?”

“சொல்லு…?”

“….”

“பச்சையாவே கேட்கிறேன். உன்னால் ‘செக்ஸ்’ முடியுமா…?”

“முடியும்!” என்றவன் ….”அம்மா உன்னை விசாரிக்கச் சொன்னாளா..?” கேட்டான்.

“எப்படிடா சரியா கண்டுபிடிச்சே..?” இவன் வியப்பாய் அவனைப் பார்த்தான்.

“அம்மா நேத்துவரைக்கும் என்னோட போராடினாங்க. வேணாம்னு சொல்லிட்டேன். இப்போ அதே கேள்வியை நீ வேற மாதிரி மாத்தி கேட்கிறே! ஒன்னும் ஒன்னும் ரெண்டு. கணக்கு சரியா…?”

“ரொம்ப சரி. அதனாலதான் நீ வெளியில சொல்ல முடியாம திருமணத்துக்கு மறுக்குறியோ நெனப்பு. பொய் சொல்லாம சொல்லு உன்னால தாம்பத்தியம் முடியுமா முடியாதா…?”

“முடியும்டா. கால்கள்தான் சூம்பி இருக்கேத்தவிர அந்த உணர்ச்சிகள் எல்லாம் இருக்கு..”

“அப்போ… ஒரு பெண்ணை உன்னால் திருப்தி படுத்த முடியும்!”

“முடியும்..!”

“அப்படிப்பட்ட நீ ஏன் திருமணம் வேணாம்ன்னு அடம்பிடிக்கிறே..?”

விருத்திஷ் தன் தாயிடம் மன்றாடியதை மறு ஒலிபரப்பு செய்தான்.

“உன் பயம் அனாவசியம் விருத்திஷ். நொண்டியோ, முடமோ, கூனோ, குருடோ…ஒரு பெண் கழுத்தை நீட்டியவனிடம் ‘திருப்தி’ அடைந்து விட்டால் வேற எந்த கொம்பனையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள்.”

“அப்போ இன்னைக்குக் கள்ளப்புருசனை வச்சிருக்கிறவெளெல்லாம்…?”

“வாதம் வேணாம் விருத்திஷ்”

“செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லே ஆனந்தன். சின்னச் சின்ன விசயங்கள். எதிர்பார்ப்புகள், ஆசைகள் எல்லாம் வாழ்க்கைதான். மொதல்ல… நான் ஊனம் என்கிற விசயமே அவள் உள்ளுக்குள் உறுத்தும். காயம்பட்ட வடுவாய் நெருடும்.. அந்த தாக்கம்… ஜோடியா போகிற நல்ல ஜோடிகளைப் பார்த்து ஏங்கும். கணவன் தாவி வந்து அணைத்து இறுக்கலையேன்னு வருந்தும். எங்க வாழ்க்கையில் அவள்தான் எல்லாத்துக்கும் அலையனும். எனக்கு வாய்க்கிறவளுக்கு நான் ஒரு தாலி கட்டின கணவன் இல்லே கல். “

“….”

“இந்த ஏக்கம், தாக்கம், வருத்தம், எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒருநாள் பெருசாகும்போது…வடிகால் தேடும். “

“நீ உன்னைப் பத்தி நினைச்சி நினைச்சியே ரொம்ப அவநம்பிக்கையாய் பேசுறே விருத்திஷ்.”

“என்னைப் போல் நீயும் இருந்தால் இப்படித்தான் நினைப்பே, சிந்திப்பே..”

“இருக்கலாம். இருந்தாலும் நீ அதிகப்படி!” என்றான் ஆனந்தன்.

“என்னை ஆளாளுக்கு வற்புறுத்தி எவளையாவது என் தலையில் கட்டி நான் அவஸ்தைப்படுறதை நீங்க பார்க்கனும். அவ்வளவுதானே..!”

“அப்படியெல்லாம் இல்லே. அக்கறை. அம்மாவிற்குப் பிறகு உனக்குத் துணை!”

“எனக்குத் திருமணம் வேணாம்! வேணாம்!! வேணாம்!!!”

இதற்கு அடுத்தப்படிதான் இவன் அலுவலகத்தின் இயக்குநர் சந்திரசேகரன்.

அலுவலக நேரத்திலேயே இவனை அழைத்து வைத்துப் பேசினார்.

“உன்னைப் பெத்தவங்க உன் எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கிறது நியாயம்தானே விருத்திஷ்.”

அம்மா, ஆனந்தனிடம் வாக்குவாதம் செய்ததைப் போல் இவரிடம் செய்ய முடியவில்லை.

|முடியாது! பெரிய அதிகாரி! அதனால்…

“ஆமாம் சார்!” சொன்னான்.

“ஏற்பாடு செய்யலாமா…?”

“என்னை மாதிரியே ஒரு பெண்தான் எனக்கு சரியாய் இருப்பாள்..!”

“தப்பு. உனக்குத் திருமணம் செய்வது எங்கள் நோக்கமில்லே. உனக்குப் பணிவிடைகள் செய்யவும், பிற்காலத் துணைக்கும்தான் ஆள் தேடறோம். உன்னைப் போல பெண் எப்படி ஒத்துவருவாள்..? யாருக்கு யார் பணிவிடை செய்யமுடியும்..?”

மௌனமாய் இருந்தான்.

“வீண் பயம் ஒழி விருத்திஷ். ஆண்களில் எத்தனையோ பேர்கள் லட்சியவாதிகளாய் இருப்பதைப்போல் பெண்களிலும் இருக்காங்க. அப்படி ஒருத்தியை தேடி கண்டுபிடிச்சி கட்டிக்கச் சொன்னா நீ கட்டிக்கிறீயா…?”

“அது கஷ்டம் சார்”

“அதுக்குப் பொறுப்பு நானாச்சு. நீ கவலைப் படாதே!”

தன் தலைமை அதிகாரி அவரே இப்படி ஒரு சாதாரண ஊழியனிடம் இறங்கி வந்து பேசும்போது இவனால் அதிகம் எதிர்த்துப் பேச முடியவில்லை. தட்டிக் கழித்து வெளியே வரவும் முடியவில்லை. அப்படி செய்தாலும் அவர் விடுவதாய் இல்லை.

தலை சொன்னால் வால் ஆடாது என்று நினைத்து அந்த அளவிற்கு இவனின் தாய் அன்னபூரணி இவரிடம் முறையிட்டு மனதை மாற்றுங்கள் என்று மன்றாடி இருக்கிறாள் என்பது இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

இதற்கு மேல் முரண்டு பிடித்து பயன்…?

‘சரி’ சொல்லிவிட்டு அவர் அறையை விட்டு அகன்றான்.

மணமகள் தேடுவதில் அம்மா, அப்பா, இவர் என்று அலசினார்கள். அதில் இயக்குநர் பங்குதான் அதிகமாக இருந்தது.

அப்பா கங்காதரன் சொன்னார்….

“விருத்திஷ்! நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா. உன் இயக்குநருக்கு ரொம்ப நல்ல மனசு. எல்லாரையும் விட உன் மேல் அவருக்குப் பாசம், நேசம், அக்கறை அதிகம் என்பது அவர் பெண் தேடும் விசயத்தில் தெரியுது.ரொம்ப சிரத்தை எடுக்கிறார். நாங்க எந்த நேரம் எந்த பெண்ணை பார்க்க அழைச்சாலும் உடனே வர்றார். ஒரு தலைமை அதிகாரி இப்படி வரவேண்டிய அவசியம் என்ன இருக்கு..? அவரும் பல இடங்களில் விசாரிச்சு இப்போ..” நான் ஒரு பெண்ணைப் பார்த்து பேசி வைச்சிருக்கேன். மாப்பிள்ளையோடு நாளைக்குப் போய் பேசி முடிச்சி திரும்புவோம்ன்னு சொல்லி இருக்காரு. நாளைக்கு உனக்கு விடுப்பு. நாம் இங்கிருந்தே கிளம்புவோம்” சென்றார்கள். பார்த்தார்கள். பேசினார்கள். முடித்தார்கள்.

பெண் சுமாரான குடும்பம். குச்சு வீடு. ஐந்தாறு பெண்கள். மணிமேகலைதான் மூத்தவள்.

பார்த்து கேட்டதுமே…. கட்டிக்கிறேன்! என்று சம்மதம் சொல்லி தலையாட்டியது இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏழ்மையா..? இயலாமையா..? எது இவளை சம்மதிக்க வைத்தது. என்று இவனுக்குப் பட்டென்று மனதில் பட்டது.

“குடும்பம் ஏழ்மை. மொத்தம் ஆறு பெண்கள். சத்தியமாக இந்த குடும்பத்தைப் பார்த்து யாரும் எவளையும் இலவசமாகக் கூட கட்டிச் செல்ல மாட்டான். தாரம் இழந்தவர்கள் வந்து முகர்ந்து பார்க்கலாம். அவர்களும் வீடு வெறுமையாக இருப்பதைக் கண்டும் அடுத்தடுத்து பெண்களுக்குச் செய்ய வேண்டுமென்று பயந்து ஓடலாம். இரண்டு மூன்று…அல்லது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்படுபவர்கள் வேண்டுமானால் முயன்று பார்க்கலாம். அது இல்லாமல் போனால்… கடைசியாக இப்படி நொண்டி, முடமோதான் வந்து வாய்க்கும் ! இப்படி நினைத்து சம்மதம் சொல்லி இருப்பாளோ..?!”

“ஒரு வேளை காதல் தோல்வி. அதனால் மனம் வெறுத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம்! இல்லை…”

காதல் போர்வையில் சோரம் போயிருக்கலாம். மான அவமானத்திற்குப் பயந்து ‘ பீடை ! இப்படியாவது ஒழியட்டுமென்று ‘அம்மா, அப்பா தள்ளிவிடுகிறார்களோ..?! – ‘ இப்படி அங்கிருக்கும்போதே இவனுக்கு நிறைய யோசனைகள்.

மறுத்தால்…

“ஆமாம். உனக்கு எப்பவும் சந்தேகம், சந்தேகம். நல்ல நெனப்பே கிடையாது” அப்பா கேட்பார்.

அம்மா முறைப்பாள்.

“ஏன்டா ! நானே தேடி கண்டு பிடிச்சிருக்கேன். நல்லவளைப் பார்க்காமல் கெட்டவளையாப் பார்த்திருப்பேன்…?!” இயக்குனருக்குக் கோபம் வரும்.

அது வேலைக்குக்கூட இடஞ்சல், ஆபத்தாய் அமையும்! – அதனால் எதையும் வாய் விட்டுப் பேச தெம்பில்லாமல் இவனும் தலையாட்டி வந்து விட்டான்.

சாஸ்த்திர சம்பிரதாய சடங்குகளில்லாமல், சுத்தமான சுயமரியாதை திருமணமும் போலில்லாமல் ஒரு மாதிரியாக திருமணம் முடித்து இதோ வீடு நோக்கிப் பயணம்.

அத்தியாயம் – 3

விருத்திஷ் வீடுதான். அவன் தினம் படுத்துறங்கி புழங்கும் பிரத்தியோக அறைதான். ஆனாலும் இன்றைக்கு உள்ளே நுழைய பயமாக இருந்தது. நெஞ்சில் திகில், படபடப்புடன் அமர…உடலில் நடுக்கம் வந்தது. வியர்வைத் துளிர்த்தது. மெல்ல நோட்டமிட்டான்.

அறை ஒன்றும் அசாத்திய அலங்காரத்திலில்லை. கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லை. சுவரோரத்தில் … பாய் மேல் மெத்தை விரிக்கப்பட்டு ஜமுக்காளம் மூடி…

அதன் மேல் கொஞ்சம் மலர்கள் தூவப்பட்டிருந்தது. பாய், மெத்தை, தலைகாணி, ஜமுக்காளம் எல்லாமே புதுசு.

அருகில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழங்கள் அடங்கிய பழத்தட்டு. தாழம்பூ பத்தி. லட்சுமி விளக்கு.

இந்த பாய், மெத்தை, தலையணை, ஜமுக்காளம் வகையறாக்களை நேற்றுதான் இவனின் அப்பா காதி கிராப்டில் வாங்கி… ரிக்சாவில் ஏற்றி வந்தார். பெண் வீட்டில் செலவே இல்லை. காதையும் மூக்கையும் மட்டும் முடி அனுப்பினார்கள். இரண்டு பவுனா, மூன்று பவுனா எடைகள் தெரியாது. அதுகூட பவுனா, கவரிங்கா தெரியாது. பெண் கொடுத்தால் போதுமென்று இவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. எதை வைத்துக் கேட்பது..? கேட்டாலும் பெண் இல்லை!

விருத்திஷ் மெல்ல தவழ்ந்து மெத்தையில் ஏறி அமர்ந்தான். மனம் நடுங்கியது. அதேசமயம் ஆனந்தன் சொன்னதும் நினைவிற்கு வந்தது.

“விருத்! பொண்ணைப் பத்தி தப்பா நினைக்காதே. அது சரி…. எந்த பொண்ணு ஒழுங்குன்னு எவனுக்குத் தெரியும்…? அது அவளுக்கும், மனசுக்கும், அது சம்பந்தப்பட்ட ஆளுக்கும் தெரியும். மத்தபடி யாருக்கும் தெரியாது. அதனால் நல்லவளா, கெட்டவளான்னு கவலைப்படாதே. ஆகையினாலே அதை விட்டுத் தள்ளு. மேலும் அது நம்ப கண்ணுக்குத்தெரியாத சமாச்சாரம். ஆனா… அவள் நம்ம வீட்டுக்கு வந்த பிறகு ஒழுக்கமா இருக்கனும். அதுதான் முக்கியம். தேவை!”

“உடலில் குறை. உணர்ச்சிகளில் குறை இருந்தால் இவள் ஒழுங்காக இருப்பாளா..?!”

“முதல்ல உன் பயத்தைப் போக்கிக்கோ. பயம்தான் முதல் எதிரி. முடியும்ன்னு நினை பயம் முறிஞ்சி போகும். தானாய் துணிச்சல் வந்துடும்.”

“பயந்து செய்யும் காரியங்கள் எல்லாம் தோல்வியில் முடியும். பயம் விலக்கு ! ‘ – எங்கோ எப்போதோ படித்தது நினைவிருக்கு வந்தது இவனுக்கு.

விலக்க முயற்சித்தான்.

‘இது நம் ராஜ்யம்டா. இங்கு நாம் ராஜா. சகல சௌபாக்கியம், பலங்கள் பொருந்திய அரசன்!’ மனசுக்குள் பலமுறை சொல்லி நெஞ்சு நிமிர்த்தினான். தெம்பும், தைரியமும் தானாக வந்த மாதிரி இருந்தது.

கதவு திறந்து மணிமேகலை கையில் சொம்பு தலை நிறைய மல்லிகையோடு புகுந்து நாணம் கலந்து தாழிட்டாள்.

விருத்திசுக்கு ஆளைப் பார்த்ததும் குப்பென்று வியர்வை.

அருகில் வந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.

கணவனின் கட்டுமஸ்த்தான உடல்தான் அவள் கண்ணுக்கு முதலில் தெரிந்தது. சிவந்தாள்.

‘ஆளை உட்கார்ந்த நிலையில் எந்த ரௌடி பார்த்தாலும் மிரளுவான்!’ நினைக்க இவளுக்குள் சிரிப்பு வந்தது. சிரித்தாள்.

‘என்ன திடகாத்திரமான உடல். அகல நெஞ்சு, கையெல்லாம் புசுபுசுவென்று முடி. உருட்டுக்கட்டைகள் போல் வலிமையான கைகள். மொத்தமான விரல்கள். அகலமான கை. ஒரு அறை விட்டால் சத்தியமாக தாங்க முடியாது. சுருள் முடி. புஷ்டியான கன்னம். முப்பது வயது. ஆனால் இருபத்தைந்து வயது தோற்றம். இந்த ஆகிருதிக்கு கால்கள் மட்டும் இளம்பிள்ளை வாதத்தால் சூம்பி போகவில்லை என்றால்…கால்கள் தூண்கள் போலிருக்கும்!’ நினைத்து அடிக்கண்ணால் அவன் கால்களை பார்த்தாள்.

விருத்திஷ் என்றைக்குமே அரைக்கை சட்டை, அரைக்கால் டவுசர்தான்.

அவன் கால்கள் இரண்டும் ஐந்து வயது குழந்தையின் கால்களைப் போல் இருந்தது. காலுக்கும் உடம்பிற்கும் சம்பந்தமே இல்லை. இடுப்பிற்குக் கீழ் இவர் மனிதரில்லை. தவழும் குழந்தை. இந்த மீசை முளைத்த குழந்தைக்குத்தான் நாம் தாயாய், தாரமாய் இருந்து சீராட்டி, பாராட்டி பணிவிடைகள் செய்யவேண்டும்! நினைத்தாள்.

“உள்ளே போனதும் நமஸ்காரம் பண்ணிக்…” என்று அம்மா சொல்லி நாக்கைக் கருத்துக் கொண்டது நினைவு வந்தது.

குனிந்து நமஸ்காரம் செய்தால் வாரியணைத்து தூக்க மாப்பிள்ளையால் முடியாது ! நினைப்பில் அம்மா நாக்கைக் கடித்துக் கொண்டது புரிந்தது.

ஆனாலும் கையிலிருந்த பால் சொம்பை அவனருகில் வைத்து விட்டு வணங்கி தலை குனிந்து அருகில் அமர்ந்தாள்.

“அம்மா மணிமேகலை ! மாப்பிள்ளை மனம் கோணாமல் நடந்துக்கோ..” தனியே அழைத்து அம்மா சொன்னாள்.

இது எல்லா தாய்மார்களுமே மகள்களுக்குச் சொல்லும் அறிவுரை.

“சரிம்மா…”

“உன் வாழ்க்கை இப்படி அமைஞ்சு போச்சேன்னு வருத்தமாய் இருக்கு..” கண் கலங்கினாள்.

“கண்ணைத் துடைச்சுக்கோ. இப்படி வருத்தப்பட்டா உன்னையும் என்னையும் பத்தி என்ன நினைப்பாங்க..?”

“தாளலடீ! தலைப்பொண்ணு நீ. கண் நிறைஞ்ச ஆம்பளைக்குக் கட்டிக்க கொடுத்து…” விசும்பினாள்.

”ச்ச்சூ ! விடும்மா…”

“கையாலாகாத்தனம்! உங்களால எனக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளையைத்தானா தேட முடிஞ்சிச்சுதுன்னு சொல்லாம சொன்னது மாதிரி மனசறிஞ்சி குடும்ப நிலை தெரிஞ்சி மாப்பிள்ளை இவர்தான்னு காட்டினதும் சம்மதிச்சு தலையாட்டினது மனசை நெருடுது…”

“என்ன பேச்சும்மா இது? விதவிதமா கற்பனை செய்து பேசுறீங்க.. நான் எதுவும் நினைக்கலை..”

“நினைக்கலன்னு சொல்லாத மணிமேகலை. வெளியில காட்டிக்கலைன்னு சொல்லு. பொண்ணோட மனசு பொண்ணுக்குத்தான்ம்மா தெரியும். நான் குக்கிராமத்து விவசாயி மகள். ஆனாலும்… குழாய்ச் சட்டைப்போட்டவர்தான் எனக்குப் புருஷனாய் வரணும்ன்னு ஆசைப்பட்டேன். சொற்ப சம்பளத்துல வேலை செய்த உன் அப்பாவைக் கட்டிக்கிட்டேன். என்ன தலை எழுத்து அடுத்து ஆண் குழந்தைன்னு நினைச்சு எல்லாத்தையும் பொண்ணாய்ப் பெத்துட்டேன்.நீ வசதியில பொறக்கலைன்னாலும் நகரத்துல பொறந்தவள். உன் ஆசாபாசங்கள் எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியாதா..?”

மணிமேகலைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

தொடர்ந்து அவள் அம்மாவே பேசினாள்.

“ஆனா… எனக்கொரு சந்தோசம். மழையடிச்சாலும், வெயிலடிச்சாலும் மாசம் பொறந்தா அரசாங்க சம்பளம் கை மேல வரும். பசிக்காம இருப்பே”

இவள் மன ஓட்டம் புரியாத விருத்திஷ்…

‘என்ன… வந்தாள், பார்த்தாள், நமஸ்கரித்தாள், அமர்ந்தாள்…. பேசாமலிருக்கிறாள்?!’ நினைத்தான்.

‘காலில்லா கபோதிக்கு கழுத்தை நீட்டிவிட்டோமென்று வருத்தப்படுகிறாளா..?’ நினைத்தான்.

ஊனமில்லை என்றால் உட்கார்ந்தா இருப்பான்..? ஓடிவந்து தாங்கி, தூக்கி ஆலிங்கனம் செய்வான். என்ற ஏக்கமா..?

என்ன செய்ய…?

“ஆம்பளைதாண்டா மொதல்ல பேசணும், தொடனும்…” ஆனந்தன் சொன்னது நினைவிருக்கு வந்தது.

“ம… மணி…மணிமேகலை…?” அழைத்தான்.

அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் குழம்பி…

“என்னைப் புடிச்சிருக்கா…?” கேட்டான்.

“பிடிக்கலை…” சொன்னாள்.

விருத்திஷ் துணுக்குற்றான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *