கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 213 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

‘கண்ணியப்பன் கைது!’ சோமசுந்தரத்தால் நம்பவேமுடியவில்லை.

“நிசமாவா சொல்றே?!” சேதி சொன்ன கபாலியை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.

“ஆமாம் தலைவா. என் ரெண்டு கண்ணால பார்த்தேன். இன்னைக்குக் காலையில அந்த முக்காடு போட்ட பொம்பளை கல்லுாரி வாசல் வந்ததும் விடுதி மாணவிகளை விட்டு தனியே போய்க்கிட்டிருந்துது. தனியே போறவளை ஒரே போடாப் போட்டுடுடலாம்ங்குற கணக்குல கண்ணியப்பனும் அது பின்னாடியே போனான். யாரும் இல்லாத இடமாப் பார்த்து தனக்குப் பின்னால முதுகுல மறைச்சி வைச்சிருந்த உருட்டுக்கட்டையை எடுத்தான். ஓங்கி ஒரே போடாப் போட கையையும் துாக்கிட்டான். எங்கிருந்தோ நாலு போலீஸ் அப்படியே பாய்ஞ்சு அவனைக் கொத்தா அமுக்கிடுச்சு. இந்த பெண் மிரண்டு ஓரம் ஒதுங்கிடுச்சு. அதுக்கப்புறம் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் ஜீப்புல வந்து, நாயே ! நாங்க தான் அஞ்சலையை அரஸ்ட் பண்ணிதும் அவள் பின்னால ஆள் இருப்பான்னு யூகிச்சு உனக்குத் தெரியாம உன்னைக் கண்காணிச்சுக்கிட்டு வர்றோம். இப்போ எதுக்குடா அந்த பொம்பளைப் புள்ளையைக் கொலை செய்யப் பார்த்தேன்னு பிடிபட்டவன் செவிட்டுல நாலு அறை விட்டார்.

யார்டா தலைவன்…? ன்னு கேட்டு நடு ரோட்டுலேயே போட்டுப் பின்னினார். கண்ணியப்பன் உங்க உப்பைத் தின்னவன். வுலியில… ‘அம்மா! அப்பா!’ ன்னு கத்தித் துடிச்சானேத் தவிர உங்களைப் பத்தி ஒரு விபரம், விசயமும் சொல்லலை. நானும் அஞ்சலையும் சேர்ந்துதான் கூட்டு வியாபாரம் செய்யறோம். எங்களுக்கு யாரும் தலைவன் தலைவி இல்லேன்னு சொல்லி பழியை அவனே ஏத்துக்கிட்டான்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு நம்பிக்கை இல்லே. இருந்தாலும், ‘அதுக்கு ஏன்டா அந்தப் பொண்ணை கொலை செய்ய வந்தேன்னார்.‘

அது… அது…. சட்டுன்னு என்ன சொல்றதுன்னு தெரியாமா முழுங்கினான்.

‘சொல்லுடா நாயே!’ன்னு சதீஷ் பொளேர்ன்னு ஒரு அறை விட்டார்.

‘இந்தப் பொண்ணுதான் காட்டிக் கொடுத்துடுச்சுன்னு நெனைச்சேன்‘னு நம்ம ஆளு உண்மையைச் சொன்னான்.

‘அந்த பொண்ணு யார், எங்கே இருக்குத் தெரியுமா?’ன்னு இவர் கேட்டார்.

“தெரியும். விடுதியில இருக்குன்”னான்.

“அவ போட்டுக் கொடுக்கலை.” சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், “ஏம்மா! இங்கே வா”ன்னு கிட்ட அழைச்சார்.

அந்த பொண்ணும் வந்துது.

“உன் போரென்ன”ன்னார்.

“பேகம்!” சொல்லிச்சு

உடனே அவர், “நீ என்னை முன்பின் பார்த்திருக்கிறீயா? போலீஸ் ஸ்டேசன் வந்திருக்குறீயா?” கேட்டார்.

அந்த பெண், “இல்லே”ன்னு தலையாட்டுச்சு.

உடனே சதீஷ் நம்ப ஆளுப் பக்கம் திரும்பி, “இப்போ தெரிஞ்சுக்கோ. அஞ்சலை கஞ்சா விசயத்தைப் போட்டுக் கொடுத்தது இவ இல்லே. உன் எதிரி ஆளுங்க. அஞ்சலை பூக்கூடையில பூ மறைச்சு விடுதியில கஞ்சா வியாபாரம் பண்றா. அவளுக்குப் பின்னால ஒரு ஆள் தெரு முக்கத்துல நின்னு நோட்டம் விடுறான். நான் சொல்றதைக் கேள்ன்னு எனக்கு ஒரு மொட்டை போன் வந்துச்சு. நீ பொம்பளையை வியாபாரம் செய்யச் சொல்லிட்டு பின்னால நின்னு போலீஸ் வருதான்னு கவனிக்கிறவன். உன்கிட்ட சரக்கு இருக்காது. கைது செய்ய ஆதாரம் இல்லேன்னு விட்டேன். மேலும் நீ யாருன்னும் எங்களுக்குத் தெரியாது. அதான் தப்பிக்க விட்டோம். தொடர்ந்து வர்ற ஆள் இப்படி ஏதாவது ஏடாகூடமா ஏதாவது செய்வீங்கன்னு நெனைச்சு அதுக்கப்புறம் நாலு போலீசை இங்கே போட்டு கண்காணிக்க வைச்சேன். இன்னைக்கு நீ மாட்டி இருக்கே.” என்றவர் அவளைப் பார்த்து,

“இந்தாம்மா. ஸ்டேசனுக்கு வந்து இந்த ஆள் உன்னைக் கொலை செய்ய வந்தான்னு புகார் எழுதிக் கொடு. ஆயுசு பூறா இவனை சிறையில வச்சிடுறேன்.” அழைச்சார்.

அதுக்கு அவ, “நான் கௌராமான குடும்பத்தைச் சேர்ந்தவள்சார். வம்பு வேணாம். என்னை விட்டுடுங்க சார்”ன்னு கையெடுத்துக் கும்பிட்டுப் போச்சு”. முடித்தான்.

கேட்ட சோமசுந்தரத்துக்கு ஆத்திரம் இன்னும் அளவுக்கு மீறி எரிந்தது.

“கலியா! என்கிட்டேயே மோதி என் வலது கையை ஒடிச்சுட்டியா? உன்னை ஒரு கை பார்க்கிறேன்!” என்று உறுமி… “நீ போய் நம்ம ஆட்கள்கிட்ட விசயத்தைச் சொல்லி கூட்டி வா.” உத்தரவிட்டார்.

கபாலி மசியவில்லை.

“வேணாம் தலைவா. கண்ணியப்பன் கைதுனால் போலீசு ரொம்ப உசாராய் இருக்கு. இப்போ போய் கலாட்டா, கலவரம்ன்னா கண்ணீர் புகை, துப்பாக்கி சூடு நடத்தி நம்மை கூண்டோட புடிச்சி உள்ளாற போட்டுடும்.” சொன்னான்.

“அட போடா மடையா! அது நடக்கனும். அந்த சந்தடியில கலியன், சப்-இன்ஸ்பெக்டரை போட்டுத் தள்ளனும் இல்லே சுட்டுத் தள்ளனும் என்கிறதான் என் திட்டம்” சொன்னார்.

கேட்ட கபாலி ஆடிப் போய், “சூப்பர் ஐடியாங்க.” கூவினான்.

“ரொம்ப கூவாத. இந்தா புடி. இதை வைச்சிக்கிட்டு நம்ம ஆளுங்களுக்கெல்லாம் நிறைய சாராயம் ஊத்தி கொண்டு வா. கண், கையில படுற ஆட்களைக் கண்ணு மண்ணு கண்ணு மண்ணு தெரியாம வெட்டனும். அந்த அளவுக்குப் போதை ஏறனும்”. சொல்லி தன் ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு நுாறு ரூபாய் கட்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் வாங்கிக் கொண்ட கபாலி….

“வர்றேன் சாமி!” கும்பிட்டு வெளியேறினான்.

கபாலி தலை மறைந்த அடுத்த வினாடி….

அறைக்குள் நுழைந்த சோமசுந்தரம் அலமாரியைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு பிரிட்ஜைத் திறந்து விஸ்கி பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் சாய்த்தார்.

அவருக்கு அதிக கோபம் வந்தால் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போல் இப்படித்தான் குடிப்பார்.


மாலை மணி 4.00.

அயோத்தி குப்பத்தில் கலவலரம். கண் மண் தெரியாமல் வெட்டு.

அதே சமயம் போலீஸ் ஸ்டேசனுக்கும் போன் பறந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்தான் எடுத்தார்.

“சார்! இங்கே ரெண்டு ரௌடி ரௌடி கும்பல் பயங்கரமா மோதிக்கிறாங்க. உடனே வாங்க.” யாரோ பதற்றத்துடன் தகவல் சொல்லி வைத்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் விடவிடுவென்று காரியத்தில் இறங்கி அதிரடி போலீஸ் படையுடன் அங்கே சென்றார்.

சோடா பாட்டில், கல்வீச்சு, அரிவாள் வெட்டு என்று ஐம்பது பேர்களுக்கு மேல் துாள் பரத்திக் கொண்டிருந்தார்கள். யார் யாரைத் தாக்கிக் கொள்கிறார்களென்று புரியவில்லை.

போலீஸ் தடியடி நடத்தி விரட்டி விரட்டியடித்தும் யாரும் கலையவில்லை. அதுபற்றி கவலைப்படவும் இல்லை. அவர்கள் இவர்களையேத் திருப்பித் தாக்கினார்கள்.

சோமசுந்தரம் கைத்துப்பாக்கியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷைக் குறி பார்த்தார்.

நிலமை கட்டுக்குள் அடங்காததை உணர்ந்த சதீஷ் தன் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு “சுடுங்க..” உத்தரவிட்டார்.

குண்டுகள் பாய்ந்தது.


மாலை…சன், பாலிமர்… தொலைக்காட்சி சானல்களில் செய்திகள் வாசிக்கப்பட்டது.

மாலை பதிப்பு பத்திரிக்கையில் ‘இரண்டு ரௌடி கும்பல் தலைவர்கள் தாதாக்கள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் சாவு!’ கொட்டை எழுத்துக்களில் சூடாக வந்தது.

செய்திகளைப் பார்த்து, படித்த விக்னுவால் நம்பவே முடியவில்லை.

‘போலீஸ்காரர்கள் மட்டும் தன்னைத் தக்க சமயத்தில் காப்பாற்றி இருக்கா விட்டால் தான் காலி!’ – நினைக்க அவனுக்குக் குலை நடுங்கியது.

‘எப்படி இப்படி அஜாக்கிரதையாக இருந்தோம்.’ -நினைத்துப் பார்த்து வியர்த்தான்.

அத்தியாயம் – 14

அயோத்திக் குப்பம் கலவரம் விடுதி மாணவிகளை ஒன்றும் செய்யவில்லை. அவர்களுக்கு எந்தவித பாதிப்பம் இல்லை. ஏன்… அப்படிப்பட்ட கலவரம் அங்கு நடந்ததாகவே அவர்களுக்குத் தெரியாது.

மாலை ஆறு மணிக்கு மேல் பேகம் சென்ற போது விடுதி எப்போதும் போலிந்தது. மாணவிகள் உற்சாகமாக இருந்தார்கள்.

பேகம்தான் கையில் அந்த செய்தித்தாளை வைத்திருந்தாள். வாங்கிப் படித்த மீனா, “அயோத்திக்குப்பத்தில் கலவரமா?” வாயைப் பிளந்தாள்.

“இந்த ரௌடிங்க செத்தது ரொம்ப நல்ல சேதி” என்றாள்.

“பேகம்! இன்னும் எத்தனை நாள் இங்கே தங்கப்போறீங்க?”

நிரஜா கேட்டாள்.

“ஏன்… உனக்கு நான் ஏதாவது இடைஞ்சலா இருக்கேனா?” விளையாட்டாய்க் கேட்ட பேகம் “இன்னும் நாலு நாள் தங்குவேன்!” சொன்னாள்.

“வாடகைக்கு அறை பார்த்தாச்சா?”

“இன்னும் சரியா அமையலை. ஆனா… ரெண்டு நாள்ல முடிஞ்சுடும், முடிக்கனும்! இல்லேன்னா வார்டன் என்னைக் கழுத்தைப் புடிச்சு வெளியில தள்ளிடுவாங்க. அவுங்க தள்றாங்களோ இல்லியோ உங்க தோழி ஆர்த்தி தள்ளிடுவா.”

“அறை எப்படி பார்க்குறீங்க? அலுவலகத்துக்குப் பக்கத்திலேயா துாரத்திலேயா?” அவளே திருப்பிக் கேள்வி கேட்டாள்.

“பக்கம் பார்த்தாதான் சரியா இருக்கும்ன்னு பார்க்கிறேன். துாரம் போனால் பேருந்து புடிக்கனும். இல்லேன்னா டூ வீலர் வேணும். இப்போ வாங்க வசதி கெடையாது.” அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தக்கவாறு பதில் சொன்னான் விக்னு.

“உங்க வாப்பா, உம்மாவை அழைச்சு வர்ற ஐடியா இருக்கா?”

“இல்லே. ஊர்ல… வீடு நிலமெல்லாம் கவனிக்கனும். அவுங்களால வரமுடியாது”.

“மாசா மாசம் ஊருக்குப் போகப் போறீயா.. இல்லே, எங்களைப் போல ஜாலியா ரெண்டொரு மாசம் கழிச்சுப் எப்போதாவது போகப்போறீயா?”

“அடிக்கடி போவேன்.”

“கலியாணம்?”

“நிக்காவைப் பத்தி இப்போ எதுவும் ஐடியா இல்லே.” இப்படி இன்னும் ஏதேதோ பேச்சுகள்.

ஆர்த்தி இந்த வெட்டிப் பேச்சில் கலந்து கொள்ளவில்லை.

அடுத்து எல்லாரும் அதிசயமாக படிக்க உட்கார்ந்தார்கள்.

பேச்சு கொடுக்காமல் பேகமும் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு இரவு எப்படி பேச்சை ஆரம்பிக்கலாமென்று யோசித்தான்.

அறையில் உள்ள மொத்தப் பேர்களும் 8.30க்கு புறப்பட்டு கேண்டீனுக்குச் சாப்பிடச் சென்றார்கள்.

சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்த பிறகு வழக்கம் போல் மீனா கட்டிலில் போய் படுக்கையைப் போட்டாள்.

அவளுக்குக் கண்களைச் சொருகும் நேரம்….

“இன்னைய ராத்திரி நான் உங்களுக்குப் பேய் காட்டப்போறேன்!“ பேகம் மெல்ல ஆரம்பித்தாள்.

“என்ன பேயா?!” துாக்கம் வந்த மீனா திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

மற்றவர்களும் படுக்கையிலிருந்து திரும்பி பேகத்தை கொஞ்சம் அதிர்ச்சியாய்ப் பார்த்தார்கள்.

“ஆமாம். பேய்தான் காட்டப் போறேன்!” என்றான் உறுதியாக.

“எங்கே?” மாலா திகிலடித்தாள்.

“ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மொட்டை மாடியில.”

“வேணாம்மா. நீ பேய் காட்டுறேன்னு சொல்லி அழைச்சுப் போய் எதையாவது காட்டுவே!“ நிரஜா பொய்யான நடுக்கத்துடன் சொன்னாள்.

“இல்லே. இன்னைக்கு பேய்தான் காட்டப் போறேன்.” பேகமும் விடவில்லை.

“நான் வரலை. இப்படித்தான் என் அஞ்சு வயசு தம்பி. யு.கே.ஜி படிக்கிறவன். பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் என் முன்னால நின்னு திடீர்ன்னு, “அக்கா! நீ பேய்க்குஞ்சு பார்த்திருக்குறீயா?” – கேட்டான்.

“பேய்க்குஞ்சா?” எனக்கு சடக்குன்னு முகம் கலவரமாச் போச்சு. திடுக்கிட்டு…

“என்னடா சொல்றே?!” பார்த்தேன்.

“நீ பேய்க்குஞ்சு பார்த்திருக்குறீயா இல்லியா?” அவன் கறாராய்க் கேட்டான்.

“இல்லே! என்ன விசயம்?” ன்னேன்.

“இன்னைக்கு நான் பார்த்தேன். என் பிரண்டு காட்டினான்.” சொன்னான்.

“உன் பிரண்டு காட்டினானா! என்னடா உளர்றே?” எனக்கு எரிச்சல்.

“நிசம்தான்க்கா. நீ பார்க்குறீயா?” அவன் என்னைத் திருப்பிக் கேட்டான்.

“நானா?!” எனக்குச் சட்டுன்னு குலை நடுங்கிச்சு.

“ஆமாம்க்கா நான் இருக்கேன் பயப்படாதே!” தைரியம் சொன்னான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது.

அதேசமயம்….இத்தினியோன்டு படவா. என் எச்சில் பால் குடிச்சு வளர்ந்த நாய்.. தைரியமா பார்த்திருக்கேன்னு சொல்றான். நாம இன்னும் பேயையே பார்த்ததில்லே. பயப்படுறோமேன்னு நெனைச்சு….

“உனக்குப் பயமா இல்லே?” கேட்டேன்.

“இல்லே.” அவன் பதில் சொன்னான்.

“நீ பார்க்குறீயா?” மறுபடியும் கேட்டான்.

சின்னபுள்ளையே தைரியமா பார்த்துட்டு வந்து காட்டுறேன்னு துணிச்சலா சொல்லும் போது வயசுக்கு வந்த பொண்ணு பயமா இருக்கு. நான் பார்க்கலன்னு சொல்றது கேவலமில்லியா?….

“சரி” தலையாட்டினேன்.

“வா என்னோட”ன்னு அவன் முன்னால போனான்.

‘பேய் எப்படி இருக்கும். அதோட குட்டி, குஞ்சு எப்படி இருக்கும்?’ன்னு எனக்குள் யோசனை.

உள்ளேயோ பார்க்கனும்ன்னு ஆர்வம், பயம், படபடப்பு.

அதே சமயம் சிந்தனை இப்படியும் தடம் புரண்டுச்சு.

எந்த குழந்தைக்கும் பயம் கெடையாது. அது சிங்கத்தின் வாயைக்கூட தொடும். கடிக்கும் தின்னும்ன்னு அதுக்குத் தெரியாது. அந்த வகையில், இவன் பேயைப் பத்தி தெரியாமலேயே பார்த்திருக்கான். நமக்குக் காட்றான். இன்னைக்கு நாம் செத்தோம்!ன்னு முடிவு பண்ணிக்கிட்டே போனேன்.

தம்பி வீட்டுக்குப் பின்னால தோட்டத்துக்குப் போனான். கொஞ்சம் காடாய் இருக்கும் இடத்துக்குப் பயந்து பதுங்கி மெல்ல போனான்.

திக்..! திக்..! என்கிற நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு…நானும் அவன் பின்னாலேயே போனான்.

பயலுக்கு பயம் அதிகமாகிடுச்சுப் போல. ஒரு இடத்துல நின்னு ஜிப்பைத் திறந்து மூத்திரம் அடிச்சான்.

நானும் அவன் பக்கத்துல நின்னேன்.

தம்பி உடனே.. “அக்கா ! பேய்க்குஞ்சைப் பாரு”ன்னு மெல்ல கிசுகிசுத்தான்.

“எங்கே…?” நானும் விபரம் தெரியாமல் பயத்தோடு காட்டை உற்றுப் பார்த்தேன்.

கண்ணுக்கெட்டுன துாரம்வரை ஒன்னுமில்லே. வெறும் மரம் மட்டையாய் இருந்துது. நல்லாப் பார்த்தேன். சுத்தும்முத்தும் பார்த்தேன். ஒன்னுமில்லே.

“எங்கேடா பேய்க்குஞ்சு ?” அதே பயத்தோட ஆளைப் பார்த்தேன்.

“இங்கே பார்!” சொல்லி …அவன் மூத்திரம் அடிக்கும் குஞ்சை திருப்பிப் புடிச்சி காட்டினான்.

அப்போதான் எனக்கு அவன் பேய்க்குஞ்சு அர்த்தம் புரிஞ்சுது.

பையன் விளையாட்டு புரிய… ஏமாத்தம் சிரிப்பு பையனோட புத்திசாலித்தனம்.

“படவா!” சிரிச்சுக்கிட்டே முதுகுல ஒன்னு வைச்சு, “இப்படியெல்லாமாடா விளையாடுவீங்க?” ன்னு வியப்பாய்க் கேட்டேன்.

“ஆமாம்! சிவாவுக்கு அவன் மாமா பையன் காட்டினான். அவன் எனக்குக் காட்டினான். நான் உனக்குக் காட்டினேன்.” சொன்னான்.

“வீட்டுல போய் அம்மா அப்பாகிட்டேயெல்லாம் இந்த கதையைச் சொல்லி ஒரே சிரிப்பு. அது போல நீ பேயைக் காட்டுறேன்னு கூட்டிப் போய் எதைக் காட்டப்போறே?” சிரித்தாள்.

பேகம் உட்பட எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

மீனா ரொம்பவும் ரசித்து சிரித்து, “நல்ல ஜோக். விளையாட்டு! வயித்தை வலிக்குது” என்று சொல்லி வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். சிரிப்பு முடிந்ததும், “நான் விளையாடலை. உண்மையைச் சொல்றேன்.” பேகம் முகத்தைச் சீரியசாக்கிக் கொண்டு சொன்னாள்.

சுபாஷிணி ஆவியை நாம பார்க்கிறோம்….!” என்று வேறு சொன்னான்.

எல்லாரும் கலவரமாகப் பார்த்தார்கள்.

“என்ன பேகம்! நீ விளையாட்டாய்ச் சொல்றோம்ன்னு பார்த்தா நெசமாவே சொல்றே?” ஆர்த்தி திகிலாய்ப் பேகத்தைப் பார்த்தாள்.

“நிசம்தான் சொல்றேன் ஆர்த்தி. இன்னைக்கு நாம் பார்க்கிறோம்.”

“எங்களுக்குக் காட்டுறதுக்கு முன்னாடி நீ பார்த்தியா?”

“பார்த்தேன்”.

“எப்போ?”

“நேத்து!”

இந்த பதில்… கேட்ட எல்லாரையும் ஒரு உலுக்கு உலுக்கியது.

“இன்னைக்கு நாம் மட்டும் பார்க்க வேண்டாம். விருப்பப்பட்டால் இந்த விடுதியே பார்க்கலாம்” பேகம் மறுபடியும் ஆணித்தரமாகச் சொன்னாள்.

“ஏன்…. சுபாஷிணி பேய் நமக்கு அங்கே கண்காட்சியாய் நிக்குதா?” நிரஜா திருப்பிக் கேட்டாள்.

“கண்காட்சியாய் நிக்கலை. உங்களையெல்லாம் குலை நடுங்கச் செய்த பேய் எப்படி இருக்குன்னு பார்க்க உங்களுக்கு ஆவல் இல்லையா?” என்று கேட்ட பேகம்., “ஓ.கே. மொதல்ல இந்த அறையில உள்ளங்க மட்டும் பார்ப்போம். அடுத்து எல்லாரையும் அழைச்சுக் கொண்டு காட்டலாம்.” சொன்னாள்.

“அப்படின்னா அந்த பேய்ல மர்மம் இருக்கா?” மீனா கேட்டாள்.

“ஆமாம். மொதல்ல உங்களுக்கு பன்னிரண்டு மணிக்கு மொட்டைமாடிக்கு வர்ற துணிச்சல் வேணும். அடுத்து … அங்கே அந்த அலறலைக் கேட்க தைரியம் இருக்கனும். இது ரெண்டும் இருந்தா யாரும் என்கூட வந்தா பேயைத் தாராளமா தரிக்கலாம்.” பேகம் விலாவாரியாய்ச் சொன்னாள்.

எல்லார் முகத்திலும் கலவரம்மண்டி மயான அமைதி நிலவியது. ஆர்த்திக்கு மட்டும்… ‘இதில் ஏதோ சூது இருக்கிறது!’ என்பது புரிந்தது.

விக்னு அழைக்கும், இருக்கும் தைரியம் நெஞ்சில் துணிச்சல் வந்தது.

பேகம் தொடர்ந்தாள்.

“விடுதி மொத்தமும் திரண்டு போய் பார்க்கலாம். ஆனா தற்போதைக்கு அது வேணாம். நாம போய் ஒவ்வொருத்தரையா விபரம் சொல்லி அழைச்சு அவுங்க கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லி கூட்டிப் போறது அவ்வளவு சுலபமில்லே. கொஞ்சம் சலசலப்பு வரும். இதுக்குப் பின்னால நடக்கவேண்டிய காரியம் நிறைய இருக்கு. சலசலப்பு கூடாது. சுபாஷிணி செத்த விசயமும் தெரியாது.” விளக்கினாள்.

ஆர்த்திக்கு இப்போது சுத்தமாக துணிச்சல் வந்தது.

“வாங்கடி நாம போவோம்.” அழைத்தாள்.

மற்றவர்கள் அசையவில்லை.

“பேகம் துணிச்சலைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். வாங்க போகலாம்.” எழுந்தாள்.

சுபாஷிணி சாவைப் பற்றிய மர்மம் என்பதால் மீனா நிரஜாவிற்கும் இப்போது ஆர்வம் ஆவல் வந்தது.

“சரி. போகலாம்”. எழுந்தார்கள்.

மாலா மட்டும் அசையாமல் இறுகி அமர்ந்திருந்தாள்.

“மாலா நீயும் கிளம்பு” பேகம் அழைத்தாள்.

“நான் வரலை.” பலமாக தலையசைத்தாள். முகம் வெளிறி கிடந்தது.

“ஏன்?“

“எ….எனக்குப் பேய்ன்னா பயம்”.

“நாங்கள்லாம் இருக்கும் போது உனக்கென்ன பயம். நீ இங்கே தனியா இருந்தாத்தான் பயம் அதிகமாகும்.”

“வேணாம். நான் போய் பக்கத்து அறையில இருக்கேன்.”

“சரி வராது, அங்கே உள்ளவங்களுக்குப் பதில் சொல்லனும். அடுத்து அவுங்களும் வந்தாங்கன்னா நீ அடுத்த அறைக்குப் போகனும்…தொடரும். சலசலப்பு… பேய் போயிடும். இப்போ பேய் நமக்கு பேய் பத்தி தெரியனும்ன்னா…நீ எங்ககூட கண்டிப்பா வரனும்.” என்று சொன்ன பேகத்திற்குள் இவள் சரி படமாட்டாள் தோன்ற… “வேணாம். நீ வர வேணாம். வந்தா பயத்துல கத்தி காரியத்தைக் கெடுத்துடுவே. அது உனக்கு மட்டும் ஆபத்தில்லே. நம்ம எல்லாருக்கும் ஆபத்து!” சொல்லி அவளை விலக்கினாள்.

மாலா இதை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சமாய் நடுங்கினாள்.

கவனித்த ஆர்த்தி…

“நீ இங்கேயே கதவை சாத்திக்கிட்டு வாய் கட்டி இருக்கிறதுதான் நல்லது.” என்று கூறி கொடியில் கிடந்த அவள் துப்பட்டாவை எடுத்தாள்.

“ஏய் என்ன செய்யப் போறே?” நிரஜா அலறினாள்.

“இவ வாயைக் கட்டிப் போட்டு கதவடைச்சுப் போனாத்தான் பேய் உஷாராகாது.” சொல்லி அவள் வாயைக் கட்டினாள்.

“ஏய்! அது அதிகப்படி” என்று தடுக்கப் போன மீனாவை பேகம் கையமர்த்தி தடுத்தாள்.

ஆர்த்தி அவள் வாயை மட்டும் கட்டாமல் கை கால்களையும் கட்டி உருட்டி உருட்டி அறை சாவியை எடுத்துக் கொண்டு, “வாங்க.” மற்றவர்களை அழைத்து நடந்தாள்.

ஆர்த்தி, மீனா, நிரஜா வெளியே வந்தார்கள்.

பேகம் அறை சாவியை வாங்கி…அதைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு மாடிப் படி ஏறினாள்.

மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.

மொட்டை மாடியை அடைந்தார்கள்.

“கிட்டே போனா பேய் அடிச்சுடும் இப்படியே உட்காருங்க.” சொல்லி பேகம்.. முன்பு தான் உட்கார்ந்து கவனித்த இடத்தில் அமர்ந்தான்.

மற்றவர்களும் அமர… எல்லாரும் சுவரோடு சுவராக அணைந்தார்கள்.

மாடியில் மைதானத்தின் விளக்குகளின் மெல்லிய வெளிச்சம் படர்ந்து …கண்களுக்கு எட்டிய துாரம்வரை தெரிந்தது. மயான அமைதியில் அது படுத்துக் கிடந்தது.

திக்…! திக்…திக்..! – ஐந்து நிமிடங்கள் கழிந்தது.

நிரஜா தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். பார்த்தாள். ப்ளோரசன்ட் வெளிச்சத்தில் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ணைய….. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது.

பேகத்தைத் தவிர எல்லாருக்குள்ளும் இன்னும் படபடப்பு பற்றியது.

அவரவர்கள் இதயங்கள் வேகமாக துடிக்கும் ஒலி அடுத்தவர்களுக்கும் கேட்டது.

“எல்லாரும் சுபாஷணி செத்துக்கிடந்த மூலையை மட்டும் பாருங்க. அலறல் சத்தம் கேட்கும் பயப்படாதீங்க.” பேகத்திடமிருந்து குரல் வந்து எச்சரித்தது.

எல்லாருக்கும் மரண பயம் பற்றியது. நெஞ்சுகளை இறுகப் பற்றிக் கொண்டார்கள்.

“ரொம்ப பயமா இருந்தா யாரும் எதையும் பார்க்க வேணாம். கண்ணு காதுகளை மூடிக்கோங்க. அடுத்து நான் சொல்றபடி நடக்கலாம்” பேகம் மறுபடியும் எச்சரிக்கைக் குரல் கொடுத்தான்.

மீனா காதை மூடிக் கொண்டு அந்த இடத்தைப் பார்த்தாள்.

நிரஜா கண்களை இறுக மூடி அலறலைக் கேட்க தயாரானாள்.

ஆர்த்தி மட்டும் பேகத்தை ஒட்டி உட்கார்ந்திருந்ததால் எதையும் மூடவில்லை. துணிச்சலுக்கு அவன் கையைப் பற்றிக் கொண்டு சுபாஷிணி உடல் கிடந்த மூலையையே உற்றுப் பார்த்தாள்.

டிக் டிக் திக்…திக்…

மணி பன்னிரண்டு பெண் அலறல் உலுக்கியது.

அத்தியாயம் – 15

என்னதான் தைரியமாக அமர்ந்திருந்தாலும் ஆர்த்தியால் நடுக்கத்தை மறைக்க முடியவில்லை. பேகம் கையை இன்னும் இறுக்கிப் பிடித்தாள்.

மீனா, நிரஜா இன்னும் இவர்களை நெருக்கி தங்களை ஒடுக்கிக் கொண்டார்கள்.

மூன்று முறை விட்டு விட்டு அலறிய அந்த பெண்ணின் குரல் ஐந்து நிமிடத்தில் அடங்கியது. அங்கு அடுத்து எந்த சத்தமும் இல்லை.

பேகம்…ஐந்து நிமிடம் பொறுத்து, “வாங்க” எழுந்தாள்.

மற்றவர்களும் எழ..

“இனி பயமில்லே. என்கூட வாங்க….” கிசுகிசுத்து…பேகம் தைரியமாக சுபாஷிணி செத்துக்கிடந்த மூலையை நோக்கிச் சென்றாள். இவர்களும் கரும்பிசாசுகளாய்த் தொடர்ந்தார்கள்.

பேகம் அங்கு போய் குனிந்து கைக்கு அடக்கமாய் கருப்பாய் எதையோ ஒன்றை எடுத்தாள்.

ரொம்பவும் நெருங்காமல் இரண்டடி தள்ளி நின்ற ஆர்த்தி, மீனா, நிரஜாவிடம் நெருங்கி, “இதுதான் பேய்!” காட்டி…பேகம் ஒரு பட்டனை அழுத்த டேப்ரிக்காடர் கழன்றது.

அடுத்து கேசட்டைக் கழற்றி பிரித்து எடுத்து கையில் வைத்துக் கொண்ட அவள், “விபரம் அப்புறம் சொல்றேன். இப்போ மொதல்ல கீழே வார்டன் வீட்டைப் பாருங்க.” சொன்னாள்.

அடுத்த வினாடி அவர்கள் பார்வை அங்கு சென்றது.

பார்த்தார்கள். ஒரு கருப்பு உருவம் அங்கே சென்றது.

“வாங்க கிளைமாக்ஸ் போகலாம்!” வேகமாக நடந்த பேகம் செல்போன் எடுத்து எண்களை அழுத்தினாள். எதிரில் எந்த அசைவுமில்லை.

“ஓ.கே. சரியாய் நடக்குது” சொல்லி நடையைக் குறைக்காமல் நடந்தாள். அவளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற மூவரும் ஓட்டமும் நடையுமாக தொடர்ந்தார்கள்.

இவர்கள் அங்கு செல்லவும் வீட்டிற்குள் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

இருட்டில் நின்றார்கள்.

சிறிது நேரத்தில் புவனசுந்தரி வெளி விளக்கைப் போட்டு கதவைத் திறந்தாள்.

சதீஷ் சப்-இன்ஸ்பெக்டர் இரு கான்ஸ்டபிள்.

அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“மேடம்! வீட்டைச் சுத்திப் போலீஸ் நிக்குது. உள்ளே உள்ள ஆள் கொல்லைப் பக்கம் போனாலும் ஆபத்து. தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்க.” சதீஷ் சொல்ல…..

அவள் வெளிறினாள்.

“ஐயாவை உள்ளே போய் அழைச்சு வாங்க” அருகில் நின்ற இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு சதீஷ் உத்தரவிட்டார்.

அவர்கள் உள்ளே சென்று ஒருவனை ஆளுக்கொரு பக்கம் கைகளைப் பற்றி அழைத்து வந்தார்கள்.

அவனைப் பார்த்த மீனா, “கணேஷ்!” மெலிதாய் அலறினாள்.

எந்தவித கலவரமும் காட்டாமல் இருக்க இருட்டோடு இருட்டாய் அவர்களை ஏற்ற எங்கிருந்தோ விளக்குப் போடாமல் ஒரு போலீஸ் ஜீப் வந்தது.

ஏற்றினார்கள். ஏறினார்கள். வண்டி புறப்பட்டது,

“கிளைமாக்ஸ் முடிஞ்சுடிச்சு. வாங்க போலீஸ் ஸ்டேசனுக்கு. நடந்துகிட்டே விபரம் சொல்றேன்.” பேகம் நடக்க… மூவரும் தொடர்ந்தார்கள்.

“இருபத்தஞ்சு வயசு கணேஷ் ஒரு பொம்பளைப் பொறுக்கி. பணம் காசு பார்க்கலாம்ங்குற நப்பாசையில வயசு வித்தியாசம் பார்க்காம நாப்பத்தஞ்சு வயது புவனசுந்தரியை மடக்கி தொடர்பேத்திக்கிட்டு தனக்கு அடிமையாக்கிட்டான். விவாகரத்து, தனிமையில இருக்கிற தாக்கம், இவளும் அவன் தொடர்புல மயங்கி அவன் இல்லேன்னா இனி வாழ்க்கையே இல்லேங்குற நிலைக்கு ஆளாகிட்டாள். இவுங்க தொடர்பும் தொடுப்பும் வெளியில யாருக்கும் தெரியாம ரொம்ப ரகசியமா இருந்துது.”

“இந்த சமயத்துலதான் சுபாஷிணி விடுதிக்கு வந்தாள். வார்டனுக்கு உறவுங்குறதுனால நெருக்கமானாள். பெரும்பாலான நேரங்கள் புவனசுந்தரியோடேயே தோழி தோழனாய் இருந்தாள் இப்படிப்பட்ட சூழ்நிலையில இவுங்க ரெண்டு பேரும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட்ல இருக்கும்போது எதிர்பாராதவிதமா கணேஷ் அங்கே வந்தான். ‘இவர் என் பிரண்ட்! ரொம்ப நல்ல மாதிரி’ன்னு சுபாஷிணிக்கு வார்டன் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள். அப்பவே கணேஷுக்கு சுபாஷிணி மேல ஒரு கண் விழுந்துது.”

“திட்டம் போட்டு கணேஷ் இவர்களைப் பல முறை சந்திச்சான். அந்த சந்திப்புகள்னால சுபாஷிணிக்கும் அவன் மேல மெலிதாய் ஒரு காதல் அரும்ப ஆரம்பிச்சுது. அதன் தாக்கம் வார்டன், கணேஷ் ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கும் போது எதிர்ல உட்கார்ந்த சபாஷிணி தன் புத்தகம் முனையில தன் மனசை காட்ட கணேஷ்ன்னு எழுதினாள். இதைக் கவனிச்ச அவனுக்கு இவள் மனசு புரிஞ்சு போச்சு. இவளைத் தனியே சந்திச்சு தானும் அவளைக் காதலிக்கிறதாய்ப் பொய் சொல்லி மடக்கினான். அதன் விளைவு சுபாஷிணி தன் நோட்டு ஒன்னுல அவன் பேரை ரெண்டு பக்கம் எழுதினாள். படிக்கிற அந்த நோட்டை எடுத்துக்கிட்டு வார்டன் வீட்டுக்கு வந்தவள் ஏதோ நினைவு விட்டுட்டுப் போய்ட்டாள்.”

“‘அவள் போனதும் நோட்டைப் புரட்டிப் பார்த்த புவனசுந்தரிக்குச் சொரக்குன்னுது, இவள் இவனை மடக்கிப் போட்டுட்டாள்ன்னா கணேஷ் நம்ம கையை விட்டுப் போயிடுவான். பயந்தாள். கணேஷ் கை நழுவாம இருக்கனும்ன்னா சுபாஷிணியை முடிக்கிறதுதான் சரின்னு நிறைய யோசனைகள்ல இவளுக்குத் தெளிவாய்த் தெரிஞ்சுது. அவன் மேல உள்ள ஈடுபாடு வெறி இவளை இந்த அளவுக்குக் கொண்டு வந்துது. ஆனா எப்படி முடிக்கிறதுன்னு தெரியலை.”

“அதுக்கும் சந்தர்ப்பம் வாய்ச்சுது. ஒரு நாள் வார்டன் இல்லாத சமயம். சுபாஷிணிக்கிட்டேயும் ஒரு சாவி இருந்ததுனால வார்டன் வீட்டுக்குள்ளேயே கணேஷ், சுபாஷிணி தப்பா நடந்தாங்க. பார்த்த புவனசுந்தரிக்கு ரத்தம் கொதிச்சுது. பாய்ஞ்சு கணேஷைத் தள்ளி கட்டில்ல இருந்தவள் முகத்துல தலையணையை வைச்சு அழுத்தினாள். கணேஷ் விலக்கியும் விலக்க முடியலை. கொலை வெறி, அசுர பலம் அவளை அந்த அளவுக்கு மிருகமா ஆக்கிடுச்சு.”

“சுபாஷிணி செத்துப் போனாள்.”

“சுய நினைவிற்கு வந்த புவனசுந்தரிக்கும், கணேஷுக்கும் இது அதிர்ச்சி. இப்போது … ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்ல முடியாம இப்போ ரெண்டு பேருமே குற்றவாளிங்க. பொணத்தை எப்படி வெளியேத்துறதுன்னு யோசிச்சாங்க. இது யாரோ செய்ஞ்ச கொலை, தற்கொலை ஆக்கிடலாம்ன்னு தன் நடிப்பு, திறமையில நம்பிக்கை வைச்சு திட்டம் போட்டு பொணத்தைக் கொண்டு வந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல மாடியில போட்டாங்க. அடுத்த நாள் போலீஸ் வந்துது பொணத்தைக் கைப்பற்றி கொலையா தற்கொலையா விசாரிச்சுது. வார்டன் தனக்கு எதுவுமே தெரியாத போல பேசி போலீசை அனுப்பிட்டாள். புவனசுந்தரி மேல யாரும் சந்தேகப்படுறதுக்கு வாய்ப்பும் இல்லே. காரணம் வேலையில ரொம்ப கறார், கண்டிப்பு. அடுத்து கணேஷ் தொடர்பு வெளி உலகத்துக்குத் தெரியலை. தெரிஞ்ச ஒரே ஆள் சுபாஷிணியும் இப்போ உயிரோட இல்லே. தப்பிச்சாள்.”

“புவனசுந்தரிக்கு மறுபடியும் கணேஷுக்கு வேற எவள் மேலேயாவது கண் வந்துடப்போவுதுன்னு பயம், சந்தேகம். அவனை எப்படி கவுக்கலாம்ன்னு யோசிச்சாள். அவன் தன்னைத் தவிர வேற எவள் அழைச்சாலும் ஓடி ஒளியனும்ன்னு நினைச்சாள். தினம் விருந்து வைச்சு அவன் உடம்புல உள்ள ஆண்மை வீரியக் கொழுப்பைக் குறைத்தால் எல்லாம் சரியப் போகும்ன்னு நினைத்தாள். அவன் தினம் ராத்திரி யாருக்கும் தெரியாமல் எப்படி வர்றது?.. நிறைய யோசித்தாள். வழி கிடைச்சுது. ராத்திரி நேரம் இப்படி ஒரு குரலை அலறவிட்டால்… மாணவிங்க பேய்ன்னு மிரண்டு அறையை விட்டு வெளியே வராம அடைஞ்சுடுவாங்க. அந்த நேரம் அவன் விடுதி காம்பௌண்ட்குள்ள நுழைஞ்சு தன் இருப்பிடத்துக்கு வந்துடலாம், இந்த அலறல் சத்தமே கணேஷ் வர்றதுக்கு அறிவிப்பாய் எடுத்துக்கலாம்ன்னு திட்டம் போட்டாள். அதை அவன் கிட்டேயும் சொன்னாள். கரும்புத் தின்ன எவனுக்குக் கசக்கும்? கணேஷ் ஒத்துக்கிட்டான்.”

“ஆனா இதை செயல்முறை படுத்துறதுல ஒரு சிக்கல் இருந்துது. மொட்டை மாடியில டைமர் டேப்ரிக்கார்டரை ஒரு இடத்துல நிரந்தரமா பதுக்கி வைச்சு ஒலிக்கச் செய்யிற அளவுக்கு இடமில்லே. தினம் ராத்திரி யாராவது கொண்டு போய் அங்கே எவருக்கும் தெரியாம வைச்சு எடுத்து வரனும். இதுக்கு யாரைப் புடிக்கலாம்ன்னு யோசிச்சாள். மாட்டினாள் மாலா. நல்ல பெண்ணாய் பூனை போல இருந்து … யாருக்கும் தெரியாம டேட்டிங் போன அவள் கையும் மெய்யுமாய் ஒரு நாள் புவனசுந்தரிகிட்ட மாட்டினாள். வெளியில சொல்லாம சொல்லாம இருக்கனும்ன்னா எனக்கு நீ கையாளாய் இருக்கனும்ன்னு மிரட்டி அவள்கிட்ட இந்த வேலையை ஒப்படைச்சாள். அதன்படி மாலா ராத்திரி நேரம் யாருக்கும் தெரியாம பொணம் கிடந்த இடத்துல பன்னிரண்டு மணிக்கு அலறல் சத்தம்கேட்கிறது போல டைமர் டேப்ரிக்கார்டை வைச்சாள். அதிகாலையில எழுந்து போய் எடுத்தாள். இந்த வேலை கச்சிதமாய் நடந்துது. ராத்திரி நேரம் அவங்க உல்லாசமாய் இருந்தாங்க. விளைவு ?….. இரவு மாணவிகள் கஞ்சா அடிக்கிறது, புகைப்பிடிக்கிறது, இன்னும் சில கெட்ட காரியங்கள் பண்றதையெல்லாம் கண்டுக்கலை காண முடியலை.’

“மாலா, வார்டனுக்கு உளவுக்காரி கையாள்ங்குறதை வந்த இரண்டாம் நாளே கண்டு பிடிச்சேன். நானும் ஆர்த்தியும் மைதானத்துல பேசிக்கிட்டிருக்கும்போது அவள் மொட்டை மாடியில நின்னு எங்களைக் கவனிச்சாள். பொழுது சாய்ஞ்சாலே பேய் பயத்துல மாணவிகள் மொட்டை மாடி பக்கமே தலை வைச்சு படுக்காத போது இவள் மட்டும் இப்படி ராத்திரி நேரம் துணிச்சலா ஏறி கவனிக்கிறாள்ன்னா…இவள்கிட்ட ஏதோ மர்மம் இருக்குன்னு கணிச்சேன், கவனிச்சேன். இவள் வைச்சி எடுக்கிறது, வார்டன்கிட்ட தொடர்பு கண்டு பிடிச்சேன். இப்போ மாலா நம்ம கூட மொட்டைமாடிக்கு வந்தாள்ன்னா டேப்ரிக்கார்டர் ஒலிக்கும்போது பயப்போர்வையில அலறி நம்மைக் காட்டிக்கொடுத்துடுவாள். எதிரியை எச்சரிக்கை செய்துடுவாள் ஆபத்துங்குற காரணத்துக்காகத்தான் அவள் வாய், கை கால்களைக் கட்டி அறையில அடைச்சு வந்தேன்.”

“அடுத்து, நானும் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷீம் நல்ல நண்பர்கள். நான் பத்திரிக்கை விசயமா இப்படி பெண்கள் விடுதிக்குள்ளே போறேன் இடையில என் வேசம் கலைஞ்சி ஏதாவது சிக்கல் வந்தால் என்னைக் காப்பாத்துன்னு உதவி கேட்டேன். அதுக்கு அவர் நீ தாராளமா போ. அதுக்கு முன்னாடி ஒரு கொலை சிக்கல் இருக்கு. அதைக்கண்டுபிடிக்க உதவு. நீ பெண்கள் விடுதியில ஆண் நுழைஞ்ச குற்றவாளியானாலும் இந்த காரணத்தை வைச்சு காப்பாத்துறேன். உன்னையும் காபந்து பண்றேன்னு சொன்னார். இதனால எங்களுக்குள்ளே நடக்குற நிகழ்வு சேதிகளை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறி உதவியாய் இருந்தோம். அந்த வகையிலதான் நான் அஞ்சலை கஞ்சா விக்கிற விசயத்தைக் கண்டு பிடிச்சு கையும் மெய்யுமாய் கைது செய்ய உதவியாய் இருந்தேன். ஆனா, நான் ஒரு விசயத்துல மட்டும் கொஞ்சம் ஏமாந்தேன். தாதா சோமசுந்தரம் என் மேல கண் வைச்சு என்னைக் கொல்ல ஆளை அனுப்புவான்னு நான் யோசிக்கலை. என் மேல சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் கண் வைச்சிருந்ததுனால அவன் கையாள் என்னைத் தாக்க வர்ற சமயத்துல போலீஸ் பாய்ஞ்சு புடிச்சு என்னைக் காப்பாத்திட்டாங்க.”

“இதுல சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் சாமார்த்தியம் நிறைய இருக்கு. சதீஷீக்கு வார்டன் மேல சந்தேகம் இருந்தாலும் புவனசுந்தரி மேல சந்தேகப்படாத அளவுக்கு கொலையைப் பத்தி வெளியில விசாரிச்சு சரியான சான்றோட பிடிக்கனும்ன்னு அவுங்களைச் சுதந்திரமா உலவ விட்டார். கணேஷ்ன்னு எழுதின புத்தகத்தை சுபாஷிணி வீட்டுல எடுத்தார். அடுத்து கொலை, கஞ்சா சம்பந்தமா வார்டன் வீட்டுக்கு விசாரிக்கப் போன போது அவள் எழுதின நோட்டை வார்டன் வீட்டுல எடுத்தார். இன்னைக்கு அவர் அவுங்களைக் கையும் மெய்யுமாய் பிடிக்க வந்துட்டார். நாமும் வந்துட்டோம்.”

“இதுவரைக்கும் நான் பேகமாய் இருந்தாலும் ஆம்பளையாய்ப் பேசினதைக் கண்டு திகைச்ச உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். நான் ஆம்பளைதான். ஆர்த்தி காதலன் விக்னு. பெண்கள் விடுதியில எல்லாரும் எப்படி இருக்கீங்க, என்ன செய்யுறீங்கன்னு ஒரு பெண்ணாய் இருந்து எழுத பத்திரிக்கை வேலையாய் வந்தேன். நான் வந்த வேலையும் முடிஞ்சுது. உங்களுக்கு இருந்த பயம், ஆபத்து, சிக்கலும் என்னால தீர்ந்தது. நான் விடுதியில இருந்த வகையில எல்லாரும் சுதந்திரமா இருந்தாங்க. நான் யாரையும் தப்பா பார்க்கலை. இப்படி ஏமாத்தி தங்கி தப்பா பார்த்தேன்னு நீங்க நெனைச்சா எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க.”

“அடுத்து பெண்கள் ஆண்களைப் போல் சுதந்திரமா இருங்க. அது உங்க விருப்பம். வேணாம்ங்குல. ஆனா படிக்கிற வயசுல காதல் வேணாம். மீனாகூட கணேஷ்கிட்ட ஏமாற இருந்தாள். தப்பிச்சுட்டாள். கஞ்சா, புகை, போதை தப்பு. கண்ட கண்ட புத்தகங்களைப் படிச்சு கெட்டு ஓரினச்சேர்க்கையும் வேணாம். அன்னைக்கு இந்த நெனப்புலதான் நிரஜா என்னைக் கட்டிப்புடிச்சாங்க. நான் பேய்ன்னு கத்தி என்னையும் காப்பாத்தி, அவுங்களையும் காப்பாத்தி, என் வேசத்தைத் தக்க வைச்சுக்கிட்டேன்.”

“அப்புறம் ஆண்கள்கிட்ட அத்துமீறி நடக்குறது, இந்த டேட்டிங் சமாச்சாரமெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வராது. இந்தியாவுல குறிப்பா தமிழ் நாட்டுல பெண்கள் கற்பாய் இருக்கிறதைப் பத்தி வெளி நாட்டுல ரொம்ப உசத்தியாய்ப் பேசிக்கிறாங்க. எல்லாரும் பெண்களைத் தெய்வமாய் மதிக்கிறாங்க. அதை தாழ்த்திக்க வேண்டாம்ங்குறது என் கருத்து.” சொல்லி முடிக்கவும் போலீஸ் ஸ்டேசன் வரவும் சரியாக இருந்தது.

படி ஏறினார்கள்.

உள்ளே தனித் தனி சிறைகளில் கணேஷம், வார்டன் புவனசுந்தரியும் பாவமாக நின்றார்கள்.

இவர்களைப் பார்த்ததும்….

“வாங்க வாங்க……” என்று மலர்ச்சியாய் எழுந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ், “எதுக்கு விக்னு இன்னும் வேசம்? பர்தாவை எடுத்து கலைச்சிடுங்க. அமெரிக்காவுல உள் நாட்டுப் போர் நடந்த போது ஆண் வேசத்துல ஒரு பெண் பல வீர சாகசங்களை செய்தாளாம். ரெண்டு வருசமா யாரும் அவ மாறு வேசத்தைக் கண்டுபிடிக்கவே இல்லை. அதை சோல்ஜர் கேர்ள்ன்னு சினிமாவா எடுத்திருக்காங்க. நீங்களும் அப்படி சாதனைப் படைச்சு, ஒரு கொலையையும் கண்டுபிடிச்சு, மாணவிகளைக் கஞ்சா, போதைன்னு பெரிய ஆபத்திலேர்ந்து காப்பாத்தி, உங்க பத்திரிக்கை வேலையையும் முடிச்சு இருக்கீங்க. உங்களை நண்பர்ன்னு சொல்லிக்கிறது எனக்குப் பெருமையாய் இருக்கு.” மகிழ்ச்சியாய்க் கட்டிப்பிடித்தார். விக்னு பர்தா விலக்க… ஆர்த்தி அவனைப் பெருமையாய்ப் பார்த்தாள்.

புவனசுந்தரி, கணேஷ் அவனை அதிர்ச்சியாய்ப் பார்க்க…

மீனா, நிரஜா அவர்களைக் கேவலமாப் பார்த்தார்கள்.

(நிறைவு)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *