மனசுக்குள் சூரியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 10, 2025
பார்வையிட்டோர்: 90 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மொட்டை மாடிச்சுவரின் மீது சாய்ந்து நின்றாள் விலாசினி, உலகம் அன்று புது அழகாய்த் தெரிந்தது. சதா கரைந்து எரிச்சலூட்டும் அந்த அண்டங்காக்கையைக் கூட பிடித்துக் கொஞ்சலாம் என்ற மனநிலை. காற்றில் படபடத்த தன் மேலாக்கை இழுத்துச் செருகித் திரும்பியவளுக்கு அடுத்த வீட்டின் பின்புறம் தெரிந்தது. கனகா வழக்கம் போல தோட்ட வேலையில் மும்முரமாயிருந்தாள். 

கனகா குடியேறிய இந்த ஒன்பது மாதங்களில் அக்கொல்லைப்புறம் பசுமைப் புரட்சியே கண்டிருந்தது. வாசற்புறம் நின்றால் கனகாவின் கணவன் கேவலமாய்க் சுத்துவான். 

“ஓடறதுக்குத் தயாரா நிக்கறியாக்கும்?” 

‘பேருக்கு மேலே இது – உனக்கெதுக்குச் சேலை?’ 

‘எத்தனை பய, எத்தனை தடவை உன்னைப் பாத்துட்டு நடக்கறான்னு கணக்கெடுத்துட்டு நிக்கறியா?’ 

தெரு முழுவதிற்கும் கேட்கும். 

‘இந்தக்கா இப்படியொரு ஆளைக் கல்யாணம் செய்துக்குவானேன்?’ காது ஜிமிக்கிகளை நிமிண்டியபடி விலாசினி யோசித்தாள். 

கனகா பெயருக்கேற்ற பொன்நிறம். உயரமும் ஒடிசலுமாயிருந்தும் எலும்பே தெரியாத வெண்ணெய் தேகம். செதுக்கிய திருத்தலத்தில் முகம் – ஆனால், அது சிரிப்பில் பூரித்து யாரும் பார்த்ததில்லை. 

விரித்துக் கோதினால், பின்புறம் முழுதும் மறைந்து, முழங்காலுக்குக் கீழே புடவைக்கட்டும். மஞ்சள் தடவிய குதிக்கால்களும் மட்டுமே தெரியுமளவு கூந்தல், ‘அழகோட் வசதியான வீட்டுப் பெண்ணாவும் தெரியறாங்க. அப்புறம் ஏம்மா, இப்படி ஒரு மரட்டு ஆளைக் கட்டி அவஸ்தைப்படணும்?. அம்மாவிடம் கேட்டிருக்கிறாள். 

‘உன் வேலையைப் பாருடி வாயாடி’ தாய் அடக்கினாலும் ‘பாவந்தான் அந்தப் பொண்ணு’ என்ற தொனி தெரியும். 

கனகாவின் கணவன், தட்டைப் பாதங்களை அகட்டி அகட்டி வைத்து நடந்து வர, இவள் முகம் சுருங்கும். உள்ளடங்கி உறுத்தும் விழிகளை, மூர்க்க உடம்பை அச்சத்துடன் பார்ப்பாள். 

இத்தம்பதியினரைப் பற்றி இந்த 18 வயதுப் பெண் அடிக்கடி யோசிப்பதிலும் காரணம் இருந்தது. அழகும் சமர்த்துமாயிருந்தும் தனக்கும் பொருந்தாத ஒருதுணை அமைந்து விடுமோ என்ற அச்சம்தான் அது. 

இனி அந்தக் கவலையில்லை. 

சகதிக் கைகளால் முடியை ஒதுக்கி விட்டபடி களையெடுத்துக் கொண்டிருந்தவளைப் பச்சாதாபத்துடன் பார்த்தவள், இடுப்பில் செருகி வைத்திருந்த கடிதத்தை உருவி பெருமிதத்துடன் பார்த்தாள். 

ஜெராக்ஸ் கடை ராஜ், அவளுக்கு எழுதிய காதல் கடிதம் அது.

வேற்று ஜாதி தான். 

ஆனால், சொந்தக்கடை ஆள் அழகன். ஓரளவு படிப்பு, சதா புன்னகைக்கும் அவன், அவளையும் சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுவான். 

கலியாணமான பின், அவள் இப்படி மயங்கும் அந்தியில் வியர்த்து, கொல்லையில் பிடுங்கி, நீர் வார்க்க வேண்டாம். சீர் நகை இருபது பவுனோடு, நெற்றியில் டிஸைன் பொட்டு, சந்தன பவுடர், புதுப் பூவுமாய் வாசலில் காத்து நிற்பாள். வந்தகையோடு, புருஷன் அவளை இறுகக் கட்டிக் கொஞ்சுவான்.. 

‘பூ. பொட்டெல்லாம் சரி. இத்தனை நகை எதுக்கு?. உறுத்துதில்லை பேசும் போது கழுத்து வளைவில் அவன் உதடுகள் உரசி… 

கற்பனை மயக்கத்தில் உடலெங்கும் ஊறிய இன்பத்தில், விரல்கள் தளர… கடிதம் நழுவிப் பறந்தது. 

‘எப்படி பதில் எழுதுவது? என்னவென்று ஆரம்பிக்க? ஆசை முத்தங்களுடன் என்று முடிக்கலாமா?’ என்ற வெட்கக் குழப்பங்களெல்லாம் கண நேரத்தில் முடிவு கண்டன. குழைத்து கிடந்த உடல், பயத்தில் விறைத்தது. கடிதம், பக்கத்துத் தோட்டத்தில்தான் விழுந்திருந்தது. அக்கா இன்னும் அதைப் பார்க்கவில்லை. 

அதை மீட்க பதறி, நடந்தாள். 

வீட்டின் முன்னறையில் எதிர்பார்த்து நின்ற கனகாவின் முகத்தில் முறுவலில்லை. 

கையில் கடிதம் இருந்தது! 

“இதுக்குப் பதிலெழுதப் போறியா?” மொட்டையாய்க் கேள்வி வந்தது. 

“வந்துக்கா, இதுதான் முதல்… அம்மாகிட்ட சொல்லிற வேண்டாம்.” 

“பின்னே? உங்கப்பாட்ட சொல்லவா?” 

‘”ஐயோ” – மளுக்கென விழி மடை திறந்தது. 

“நான் எப்படி இவருக்கு வாழ்க்கைப்பட்டேன் தெரியுமா?” மனசு குறுகுறுத்தாலும் குனிந்தே நின்றாள். 

“இப்படி வந்த கடுதாசிக்குப் பதில் எழுதினதாலதான்.”

நிமிர்ந்த விழிகளில் குழப்பம். 

“இப்படி உட்காரு” – இளையவளைப் பிடித்திழுத்து அமர்த்தி அருகே அமர்ந்தாள். 

“வாழ்க்கையைப் பாழடிச்சுக்காதே! என் கஷ்டம், முரட்டு புருஷனாலே மட்டுமல்ல, எம்புத்தியாலயுந்தான்”. 

கடிதத்தை நீட்டினாள் – அது காற்றில் புன்னகை போல அசைந்தது. 

“இதை எழுதினவனுக்கு இது பொழுபோக்கான்னு முதல்ல பாரு. விருப்பம் இரண்டு பேருக்குமே ஆழமாய் இருந்தால்… இவரை ரொம்ப நாளாய்த் தெரியுமா?” வேண்டுமென்றே கேள்வி போட்டாள். 

“இல்லை… பார்த்ததோட சரி.”

கசப்பாய்ச் சிரித்தாள். 

விலாசினி குறுகினாள். 

“எப்படியோ. ஒரு ரெண்டு வருஷம் பொறுத்து உங்க வீட்டிலே வந்து கேட்கச் சொல்லு.” 

“அப்படி… அப்படித்தான் எழுநறதாய் இருந்தேன்-க்கா.”

“நேரிலே போய், நின்னு சொல்லு. தோஷமில்லை. எழுத வேண்டாம். நல்லவன் கல்யாண நினைப்புடையவன்னு படுதா?” 

“ஆமா ஆமாங்க்கா.” 

“அப்படி இல்லைன்னா, உங்க வீட்டிலே உனக்குக் கல்யாணம் பேசறப்போ, மாப்பிள்ளைக்கு மொட்டைக் கடுதாசி அனுப்புவான். நீ ‘கண்ணே, மணியே’ன்னு உருகினது ரிஷப்ஷனிலே பரிசாய் வரும். ஆரம்பத்திலேயே வெடிகுண்டு.” 

“உங்க விஷயத்திலே?” 

“அது வேற. எங்க வீட்டிலே என் காதலுக்கு சம்மதிக்கலை. காத்திருப்போம்னேன் அதுக்குள்ளே வேற வரன் வரக்கூடாதுன்றதுக்காக ஊரிலே எம்பேரை நாறடிச்சான். அத்தனை குயுக்தி, மூர்க்கம் கொண்டதா காதல்? பட்டபிறகு தெளிஞ்சிட்டேன். கடைசியிலே இவர், பொண்ணு வசதியோட பார்க்கவும் வந்தார்.” 

“நல்ல மனசு போல….” விலாசினி முணங்கினாள்.

“இவர் முதல் சம்சாரம் ஸ்டவ் வெடிச்சு செத்துப் போயிட்டாங்க.” 

இருவரிடையே மௌனம் கனத்தது. 

“கல்யாணத்தன்னைக்கு நா அவனுக்கு எழுதின கடுதாசி ரெண்டு இவருக்கு ரெஜிஸ்டர் தபால்ல வந்தது. ‘அன்பு முத்தமா? எங்கடீ கொடுத்தான்’னு எம்முடியை உலுக்கி சுவரோட முகத்தை வச்சி உரசி உரசித் தேச்சார்”. சொன்னவள் முகம் சலனமில்லாதிருக்க, கேட்டவளின் உயிர் நடுங்கியது. 

ஆக, மலையருவியாய் வழியும் அக்காவின் கூந்தலில் முதன் முதல் புருஷன் கைபட்டது இப்படித்தான்! 

”பெண் படிக்கலாம் – வேலைக்குப் போய், சம்பாதிச்சுத் தாங்கலாம். ஆட்சி கூட செய்யலாம். ஆனால் கற்பு நிலை ஆணுக்கும் அவளுக்கும் வெவ்வேற. ஆண் வகுத்த அகராதிதானே – அதிலே அவனுக்கிருக்கும் சலுகை… அவளுக்கு….” – நிறுத்தி ஊடுருவலாய்ப் பார்த்தாள். 

“நான் அந்த மாதிரி சலுகை… சுதந்திரத்தை வேண்டலைக்கா. சுண்ணியமாய் வாழ்வமைச்சுக்க ஆசைப்படறேன்” 

“சந்தோஷம். அப்போ மனசைத் தெளிவா வை. பார்த்தவன் சிரிப்பிலே, எழுத்திலே எல்லாம் தடுமாறாதே! நீ அவனால உண்டாயிட்டாலும் அவனுக்கு லட்ச ரூபா ரொக்கம், 50 பவுனோட பொண்ணு வருவா. நீ அவ்வளவு தான். வாழ்க்கை முழுசும் மனசை உரசும் ரணத்தோட… புரியுதா?” 

“தாங்க்ஸ்க்கா” – சொற்கதிரின் ஊடுருவலில் உள்ளே குழப்பங்கள் பொசுங்கி, விழிகள் சுடர் விட்டன. 

வீடு திரும்பியவளை அம்மா அதட்டினாள். “அதென்னடி, அப்படி விழுந்தடிச்சு ஓடின? கனகா கூப்பிட்டாளா என்ன?” 

“நான்… நானாத்தாம்மா போனேன்” 

“அவ வீட்டுக்காரர் வர்ற நேரமாப் போகாத, சுள்ளுன்னு பேசிடுவான். பாவம் அந்தப் பொண்ணு – அவ என்னைக்கோ சந்தோஷப் பட்டாச் சரி.” 

சூரியனில் பயிர் விளைவதில்லை – ஆனால் 
சூரியனால் பயிர் விளைகின்றது 

என்றோ வாசித்த கவிதை வரிகள் விலாசினிக்குள் ஏனோ வந்து நின்றன. 

– ராஜம், செப்டம்பர் 1995.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *