காந்தித் தாத்தா கதை

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 1,403 
 
 

(1941ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதியவர் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாலர்கட்குப் பயன்படுமாறும் வெளியிடப்பட்டது. 

பாகம் – 1 | பாகம் – 2

ஆசிரம வாழ்க்கை

மேலான பல இலக்கியங்களை காந்தி வாசித்து வந்தார். அப்படி அவர் வாசித்த பல புத்தகங்களில் இரண்டு நூ ல்கள் அவருக்கு ஒரு புதிய நோக்கத்தையும் உணர்ச்சி யையும் அளித்தன. அவற்றுள் ஒன்று பகவத் கீதை. இதைப் படித்ததும், காந்திக்கு உலக இன்பங்களிலும் பணத்திலும் சுகத்திலும் இச்சையற்றுப் போயிற்று. எளிமையைக் கைக்கொண்டு சாந்தமான மனதுடன் தம் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார். தம் கைப்பொருள் முழுவதையும் இந்திய மக்களின் நன்மைக்காகச் செல வழிக்க நிச்சயம் செய்துகொண்டார். 

மற்றொரு புத்தகத்தை ஆங்கில நண்பரொருவர் காந்திக்குக் கொடுத்தார். அதை எழுதினவர் ரஸ்கின் என்ற ஆங்கில நூலாசிரியர். இந்தப் புத்தகமும் அவரது கொள்கைகளை மாற்றின. இப் புத்தகத்தில் கூறியுள்ள உபதேசங்களின்படி தம் வாழ்க்கையை நடத்தத் தீர்மானித்தார். ஒரு வன் தன்னுடைய சுகத்தை மேலாகக் கருதாமல் பிறர் நன்மைக்காக உழைக்க வேண்டும். வயிறு வளர்ப்பதற்காகவே பலர் பல தொழில்களைச் செய்கின்றனர். ஒருவன் வக்கீல் தொழிலையும் மற்றொருவன் விவசாயத்தையும் புரிவது ஜீவனம் செய்வதற்காகத்தான். ஆகையால், உழைப்பில் ‘இது மேல்’ ‘இது கீழ்’ என்று கிடையாதென்றும், எல்லா விதமான உழைப்புகளும் மேன்மையானவைதான் என்றும் இப் புத்தகம் கூறுகிறது. 

இப்புதிய கொள்கைகளின்படி தம் வாழ்க்கையை நடத்துவதற்காக, நூறு ஏகர் பூமியை டர்பனுக்குச் சமீபத் தில் காந்தி வாங்கினார். அங்கே அவரும் அவருடைய நண்பர்களில் சிலரும் சில உறவினர்களும் வசித்தார்கள். எல்லா ரும் எளிய வாழ்க்கையைக் கைக்கொண்டார்கள்; தங்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் தாங்களே செய்து கொண்டார்கள். தோட்டத்தில் ஆரஞ்சுமரம், மாமரம் முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். அவற்றின் விளைவு களையே உண்டு வசித்தார்கள். தாங்களே ரொட்டி செய்து கொண்டார்கள். தங்கள் வீட்டைத் தாங்களே சுத்தம் செய்து கொண்டார்கள். வேலையாள்களே கிடையாது. அங்கே பாம்புகள் அதிகமாயிருந்தமையால் முதலில் ஜனங்கள் வசிப்பதற்குப் பயப்பட்டார்கள். ஆனால், எல்லாரும் ஒன்று சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்ததனால், பயம் நீங்கி எல்லாரும் சுகமாக வாழ்வதற்கு வசதி ஏற்பட்டது. 

இதே சமயத்தில்தான் காந்தி பிரம்மசரிய விரதம் பூண்டார். தம் ஐம்புலன்களையும் அடக்கி, மனதிலும், வார்த்தையிலும் செய்கையிலும் பிறருக்குத் தீங்கிழைக் காமல் வாழும் ஒருவனே, பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிப்பவனாவான். இவ்விரதத்தை மேற்கொண்ட காந்தி சந்யாசிபோல் வசிக்க நேர்ந்தது. தம் குடும்ப விஷயங்களை அறவே மறந்தார். வீண் வம்புகளையும், வெறும் பேச்சுக்களையும், வீணே நேரம் போக்குவதையும் அறவே ஒழித்தார். அவருடைய ஆசிரமத்தில் ஒருவரும் அரட்டை யடிக்கவாவது அல்லது வெகுநேரம் கண்விழித்திருக்கவாவது கூடாது. அவர் கடவுளின் தாசனாக விளங்கினார். தம் நேரம் முழுவதையும் கடவுள் வழிபாட்டிலும் தியானத்திலும் சேவையிலுமே கழித்தார். எது பேசினாலும், செய்தாலும், அதில் அவருடைய பரிசுத்தமான எண்ணம் துலங்கி நிற்கும். எப்போதும் ஓர் உன்னத நோக்கத்துடனேயே தம் வாழ்க்கையை நடத்தி வந்தார். பொய் சொல்லிப் பிழைக்கும் தொழில் என்று ஜனங்கள் சொல்லும் வக்கீல் தொழிலைக் காந்தி நடத்திய போதுங்கூட, அவர் பொய் சொன்னதே கிடையாது. ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒரு நியாய ஸ்தலத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் போது தம் கக்ஷிக்காரனுடைய வாதம் உண்மையானதல்ல வென்று தெரிந்தவுடனே, காந்தி அந்த வழக்கைத் தள்ளிவிடும்படி நியாயாதிபதி யைக் கேட்டுக் கொண்டார். நியாயாதிபதிக்கும் கக்ஷிக்கார ருக்கும் உண்டான ஆச்சரியத்துக்கு அளவில்லை. காந்தி ரிஸ்டர் தொழில் நடத்திய காலம் முழுதும் எவ்வித மான பொய் வாதத்தையும் ஆதரிக்கவில்லை. காந்தி மேற் கூறிய வழக்கில் தம் மனச்சாக்ஷிக் கேற்றவாறு நடந்து கொண்டதில், அவருடைய பேருக்காவது வக்கீல் தொழிலுக்காவது ஒருவிதமான பிரதிகூலமும் ஏற்படவில்லை. உண்மையிலேயே எல்லா ஜனங்களும் அவரிடத்து இன் னும் அதிகமான மரியாதையையும் அன்பையும் காட்டினார்கள். ‘இவர் ஒரு பெரிய மானி, நேர்மையானவர், நம்பத் தகுந்தவர்’ என்று ஜனங்கள் எண்ணினார்கள். 

தென்னாப்பிரிக்காவில் இந்திய வியாபாரியொருவர் அதிகாரிகளுக்குச் செலுத்தவேண்டிய கடல் சுங்கத் தீர்வையைச் செலுத்தாமல் திருட்டுத்தனமாகச் சாமான்களைக் கொண்டு வந்து விற்றார். அரசாங்கத்தார் இதையறிந்து அவரைச் சட்டப்படி கோர்ட்டில் விசாரித்துத் தண்டிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டார்கள். அந்த வியாபாரி காந்தி யிடம் சென்று கண்ணீர் விட்டுத் தம் கஷ்டத்தைச் சொல்லித் தம்மைக் காப்பாற்றும்படி வேண்டினார். அதற்குக் காந்தி, “நீ தப்பவேண்டுமானால் அதிகாரிகளிடம் ஒன்றையும் மறைக்காமல் சொல்லிவிடு!” என்று புத்திமதி கூறினார். இதற்கு வியாபாரி முதலில் சம்மதிக்காவிடினும், கடைசியாக வேறு நல்ல வழியில்லை யென்றெண்ணி அதிகாரிகளிடம் உண்மையைச் சொன்னார். காந்தியும், குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரியின் சார்பாக அதிகாரிகளிடம் பேசினார். அவர் திருட்டுத்தனமாகக் கொண்டுவந்த சாமான்களின் விலையைப் போல இரட்டிப்புத் தொகையைச் செலுத்தினால் வியாபாரியை விட்டுவிடுவதாக அதிகாரிகள் சொன்னா ர்கள். வியாபாரியும் அதற்கிசைந்தார். 

தென்னாப்பிரிக்க சத்யாக்ரகம்

1906-ஆம் வருஷத்தில் தென்னாப்பிரிக்க அரசாங்கத்தார் இந்தியர்களின் மரியாதைக்குக் குறைவு உண்டாக்கும் ஒரு சட்டத்தை உண்டு பண்ணினார்கள். அச் சட்டப்படி தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியன் ஒவ்வொருவனும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டு கட்டை விரல் குறியையும் போட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். இச் சட்டத்தை நீக்கக் காந்தி தீவிரமாக உழைத்தார்; சத்யாக்ரகப் போரைத் தொடங்கினார். காந்தியும் மற்றவர்களோடு சிறைக்குச் சென்றார். சிறையில் பல கஷ்டங்களை யனுபவித்த போதிலும், ஒரு தர்ம காரியத்தை யுத்தேசித்துச் சிறை சென்றதால், கஷ்டங்களை யெல்லாம் அனைவரும் உற்சாகத்துடன் பொறுத்துக் கொண்டார்கள். பிறகு காந்திக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கத்தாருக்கும் சமரசம் உண்டாயது. 

காந்தியும் அவருடைய நண்பர்களும் சிறைமீண்டனர். அந்தச் சமரசத்தை விரும்பாத பட்டாணி யொருவர் காந்தியைத் தடிகொண்டு மண்டையில் ஓங்கி அடித்துவிட்டார். காந்தி கீழே விழுந்து மூர்ச்சையானார். பட்டாணியும் அவர் சகாக்களும் காந்தியை மறுபடியும் நையப் புடைத்தனர். உடனே போலீஸார் வந்து பட்டாணியையும் அவர் தோழர்களையும் கைது செய்தனர். காந்தியின் நண்பரான ஆங்கிலப் பாதிரியார் ஒருவர் காந்தியைத் தம் வீட்டிற்கழைத்துச் சென்றனர்; அவரும் அவருடைய மனைவியும் காந்திக்குச் சிகிச்சை செய்தனர். 

பட்டாணியின் மீது வழக்குத் தொடர்ந்து அவனைச் சிறைச்சாலைக்கு அனுப்ப, காந்தி விரும்பவில்லை. காந்தி தம் அபிப்பிராயத்தை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் ”குற்றம் செய்தவனைத் தண்டிப்பது அரசாங்கத்தின் கடமை” யென்று சொன்னார்கள். காந்தி இது சம்பந்தமாக விடுத்த ஓர் அறிக்கையில், “என் ஆங்கில நண்பரும் அவர் மனைவியும் என்னை அன்பாயும் ஆதரவோடும் பாதுகாத்து வருகின்றனர். வெகு சீக்கிரத்தில் என் காயங்கள் ஆறி, நான் சுகமடைந்து பொது வாழ்க்கையில் எனது பொறுப்பை மறுபடியும் ஏற்றுக்கொள்வே னென்று எண்ணுகிறேன். பட்டாணியிடமாவது அவர் நண்பர்களிடமாவது ஒருவரும் கோபங் கொள்ளலாகாது. பட்டாணியும் அவர் நண்பர்களும் நான் அரசாங்கத்தாருடன் செய்து கொண்ட சமரசம் தவறு என்று எண்ணினார்கள். அதற்காக என்னை அவர்கள் தங்களுக்குத் தோன்றிய வழியில் தண்டிக்க விரும்பினார்கள். அவர்களின் நடத்தைக்காக ஒருவரும் அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பது என் கோரிக்கை. என்னைத் தாக்கியவர் முஸ்லீமாதலால், அவர் மீது என் ஹிந்து சகோதரர்கள் கோபங்கொள்வது சகஜம். என் ஹிந்து சகோதரர்கள் அம்மாதிரி ஒன்றும் செய்ய மாட்டார் களென்று நம்புகிறேன். ஹிந்துக்களும் முஸ்லீம்களும் என்றும் இணைபிரியா நண்பர்கள் போல் வாழ வேண்டும்” என்று எழுதியிருக்கிறார். 

இந்தியர்களின் கோரிக்கைகளை அரசாங்கத்தார் சரிவர நிறைவேற்றாமையால், காந்தி சுகமடைந்ததும் மறுபடியும் இந்தியர்கள் பலருடன் சிறைக்குச் சென்றார். சிறையினின்றும் வெளி வந்ததும் காந்தியும் அவர் சகாக்களும் டால்ஸ்டாய் விவசாயப் பண்ணையில் வசித்தனர். இப் பண்ணையில் யாவரும் எளிய வாழ்க்கையை நடத்தி வந்தனர். பண்ணை வேலைகளை யெல்லாம் பண்ணை வாசிகள் தாமே செய்தனர். ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமுள்ள பண்ணையில் ஒரே ஒரு கூலியாள் கூட இல்லையென்றால், ஆச்சரிய மில்லையா? ஆயிரக்கணக்கான பழமரங்களும், தேவையான ஜல வசதியும், நல்ல நீர் ஊற்றும் இந்தப் பண்ணையில் இருந்தன. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் இரண்டு விடுதிகளைத் தனித்தனியாக, காந்தி அமைத்தார். இங்கே ஒரு தச்சுப் பட்டரையும் ஒரு பள்ளிக்கூடமும் இருந்தன. பண்ணை வாசிகளுக்கு வேண்டிய சகல உணவுப் பொருள்களும், காய்கறி, பழம் முதலியனவும் பண்ணையி லேயே உண்டாயின. மாவு அரைத்து ரொட்டியையும் பண்ணையிலேயே செய்து கொண்டனர். எல்லாரும் செருப்புத் தைக்கவும் தச்சுவேலை செய்யவும் கற்றுக் கொண்டார்கள். அவ்விதம் காந்தி அநேகம் செருப்புகளைத் தைத்துத் தமது பல நண்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். காந்தி செய்த எல்லா வேலைகளிலும் பண்ணையில் வசித்த ஆண்களும் பெண்களும் மனப்பூர்வமாக ஒத்துழைத்தனர். 

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைக்காகப் போராடியதில் காந்தி பல தடவை சிறைக்குச் செல்ல நேரிட்டது. கடைசியாக, கோபால கிருஷ்ண கோகலே, அக்காலத்தில் ராஜப் பிரதிநிதியா யிருந்த ஹார்டிஞ்சு பிரபு இவர்களின் முயற்சியால் இப் போராட்டம் அப்போதைக்கு ஒருவாறு சமரசமாக முடிந்தது. 

தென்னாப் பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைக்காக காந்தி போராடி போது, தமிழ் மக்கள், ஆண்களும் பெண்களும் காந்திக்குக் கொடுத்த ஆதரவு ஏராளமாகும். இவ்வாறு காந்தியின் பேரன்பைக் கொள்ளை கொண்ட வர்களுள் வள்ளியம்மை என்ற தமிழ் மாது ஒருத்தி. அவள் தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்தவள். காந்தியின் சத்யாக்ரகப் போரில் சேர்ந்து அவள் சிறை சென்றாள். சிறையிலேயே அவளை ஒரு கொடிய நோய் பற்றிக்கொண்டது. பதினாறு வயதுகூட நிரம்பாத இத்தமிழ்ச் செல்வியின் மன உறுதி கண்டு மஹாத்மாகூட ஆச்சரியப்பட்டார். அவளது வீரத்தைப்பற்றி காந்தி பல மேடைகளிலும், வியாசங்களிலும் சிறப்பாகப் புகழ்ந்திருக்கிறார். அவள் சிறையிலிருந்து வந்தபின் அவளை காந்தி பார்க்கப்போன போது அவள் படுத்த படுக்கையாய்க் கிடந்தாள். 

காந்தி மனமுருகிவிட்டார். “அம்மா வள்ளியம்மே! நீ சிறை சென்றதற்காக வருத்தப் படுகிறாயோ ஒரு வேளை?” என்று கேட்டார். 

வள்ளியம்மை : “மகாத்மாஜி! எனக்கு வருத்தம் சிறிதும் இல்லை. இன்னும் எவ்வளவு தடவை வேண்டு மானாலும் நான் சிறை செல்லத் தயார்”. 

காந்தி : “அம்மா! உன் மன உறுதியை மெச்சினேன். ஆனால் சிறையில் வசிப்பதனால் ஏற்படும் துன்பத்தினாலும் நோயினாலும் இறக்க நேர்ந்தால் என்ன செய்வது?” 

அதற்கு வள்ளியம்மை முகமலர்ச்சியுடன், “என் அண்ணலே! தாய் நாட்டின் பெருமையையும் நலத்தையும் கருதி உயிர்விடக் கொடுத்துவைக்க வேண்டாமா?” என்றாளாம்! இது நடந்த சில நாட்களுக்குப் பின் வள்ளியம்மை காலமானாள். 

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய போது, தஞ்சை ஜில்லாவில், வள்ளியம்மையின் கிராமத்திற்குச் சென்று அவளது வீட்டைத் தரிசித்து வந்தார். 

இந்த வள்ளியம்மையைப் போலவே, வேறு இருத்தமிழ் இளைஞர்களான நாகப்பனும், நாராயணசாமியும் காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் சிறை சென்று, உயிரையும் நீத்தார்கள். 

இம் மூன்று தமிழ் இளஞ் சிங்கங்களின் தைரியத்தையும் தியாக புத்தியையும் கண்ட காந்திக்குத் தமிழரிடத்து இன்னும் அதிகமான அன்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவர்களுடன் நன்றாகக் கலந்து தாமும் ஒரு தமிழனாக விளங்க வேண்டுமென்று அவர் ஆசை கொண்டார். அதனால் தமிழ் எழுத்தை வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். என்றாலும், வேறு எத்தனையோ கடமைகளைப் புரிந்து வந்தமையால், தமிழ் மொழியை நன்றாகப் பயின்று கொள்ள அவருக்கு முடியவில்லை. “தமிழை என்னால் நன்றாய்க் கற்க முடியவில்லையே!” என்று சில சமயம் வருத்தப்பட்டிருக்கிறார். காந்திக்குத் தமிழரிடமும் தமிழிடமும் இவ்வளவு பிரியம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த மூன்று வீரத் தமிழர்கள்தான். 

சபர்மதி ஆசிரமம் 

தென்னாப்பிரிக்காவில் இருபத்தாறு வருஷம் தொண்டாற்றிய பிறகு, 1914-ஆம் வருஷம் காந்தி இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்; தம் குருவான கோகலேயை இங்கே சந்தித்தார். கோகலே எப்படிச் சொல்லுகிறாரோ அவ்விதமே தம் வாழ்நாளைத் தேச சேவையில் கழிக்க காந்தி தீர்மானித்தார். கோகலே இதைக்கேட்டு அதிக மகிழ்ச்சி யடைந்து, தாம் ஸ்தாபித்த இந்திய ஊழியர் சங்கத்தில் காந்தி சேர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும் பினார்; ஆயினும், சங்கத்தின் அரசியல் கொள்கை, நடை முறை முதலியவை காந்தியின் கொள்கைகளுக்கு மாறுபட்டிருந்தமையால், காந்தி இந்திய ஊழியர் சங்கத்தில் சேராமலே தேசத்திற் குழைப்பதுதான் நலம் என்று நினைத்தார். எனினும், கோகலேக்கும் காந்திக்கும் ஒரு விதமான மனவருத்தமும் இதனால் ஏற்படவில்லை; முன் போலவே எப்போதும் கோகலேயைத் தம் அரசியல் குரு வென்றே காந்தி கருதிவந்தார். ஒரு வருஷம் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நிலைமையை நன்றாய் ஆராய்ந்து, விஷயங்களை நேரில் அறிந்து, அதன் பின்னர்தான் காந்தி பேசவோ எழுதவோ வேண்டுமென்று கோகலே சொன்னார். 

அவ்விதமே காந்தி ஒருவருஷ காலம் ஊரூராய்ச் சென்று தேசம் முழுதும் சுற்றிப் பார்த்தார். இப்படிச் சுற்றுப் பிரயாணம் செய்கையில், கவி தாகூரின் சாந்தி நிகேதனுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே தாகூர் தேசத்தின் மறுமலர்ச்சிக்காகச் செய்து வந்த அரிய சேவையைக் கண்டு காந்தி மன மகிழ்ந்தார். என்றாலும், மாணவர்கள் அவரவர் வேலையை அவரவரே செய்து கொள்ளாமை யைப்பற்றி வருத்தப்பட்டார். மாணவர்களும் உபாத்தியாயர்களும் சேர்ந்து தாங்களே சமையல் செய்து கொள்ள வேண்டுமென்று சொன்னார். கவி தாகூர் உள்பட யாவரும் காந்தியின் யோசனையை ஆதரித்தார்கள். அதன்மேல் இந்த வேலையை யாவரும் உற்சாகத்துடன் செய்யத் தொடங்கினர். 

இதன் நடுவில் தேசத் தொண்டுசெய்ய காந்திக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அந்த வருஷத்தில் ஹரித் வாரத்தில் கும்பமேளா வந்தது. அங்கே வரும் யாத்ரிகர் களுக்குத் தொண்டு செய்வதற்காக, காந்தி தம் கோஷ்டி யாருடன் ஹரித்வாரம் சென்றார். ஹரித்வாரத்தில் காந்தியும் அவர் கோஷ்டியினரும் தோட்டிவேலை செய்து அசுத்தங்களை யெல்லாம் அப்போதைக் கப்போது அப்புறப்படுத்தி, யாத்ரிகர்களுக்குச் சுகாதாரத்தைத் தேடிக் கொடுத்தார்கள். தோட்டி வேலை ஒரு கௌரவமான வேலை யென்றும், அந்த வேலையைச் செய்வதனால் ஒரு மேல்ஜாதி ஹிந்துவோ அல்லது படித்தவரோ அந்தஸ்தில் தாழ்ந்து விடமாட்டார் என்றும் நிரூபித்துக் காட்டினார். 

ஒரு வருஷம் கழிந்த பின்னர், தென்னாப்பிரிக்காவில் செய்தது போலவே இந்தியாவிலும் ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்த வேண்டுமென்று காந்திக்கு எண்ணமிருந்தது. ஆகவே, 1915-ஆம் வருஷத்தில், ஆமதாபாதில், சபர் மதிக்கரையில், ஒரு சத்யாக்ரஹ ஆசிரமத்தை அமைத்தார். இந்த ஆசிரம வாசிகள், எளிய வாழ்க்கை நடத்தி, தன்னலங் கருதாமல் உழைக்க வேண்டும். ஆசிரமத்திற் சேர விரும்பும் ஒருவன் பல விரதங்களை அனுசரிக்க வேண்டும். தேசத்துக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற ஒரே எண்ண முள்ளவர்கள்தான் இந்த ஆசிரமத்தில் சேர முடியும். 

முதன்முதலில், உண்மையே பேசுவது என்ற விரதத்தை அனுசரிக்கவேண்டும். எவ்விதமான கஷ்டங்கள் ஏற்பட்ட போதிலும் பொய் சொல்லக்கூடாது என்பது மாத்திரமன்று, தன்னுடைய தேசத்தின் நலத்திற்காகவுங் கூட எவ்விதமான பொய்யையும் சொல்லக் கூடாது. ஒளி மறைவாக, அல்லது மோசடியாக ஒரு வேலையையும் செய்யக் கூடாது. எப்போதும் சத்தியத்தைக் கடைப்பிடித்தே க்கவேண்டும். அப்படிச் செய்வதால், தன் நண்பர்களை யும், தன் மதிப்புக்குரிய பெரியோர்களையும் எதிர்க்க நேரிட்டாலும்கூட அதைப் பொருட்படுத்தக் கூடாது. 

அஹிம்சை விரதம் மற்றொன்று. இந்த விரதத்தைப் பூண்டவர் கொல்லாமை விரதத்தை யனுசரிக்கவேண்டும். நியாயந் தவறி நடப்பவர்களிடங்கூடக் கடினமான வார்த்தைகளைச் சொல்லி அவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடாது. தனக்குத் தீங்கிழைக்க முயலுவோரிடத்தும் விரோதம் பாராட்டாமல் அவர்களிடம் அன்புடனே நடந்து கொள்ள வேண்டும். ஒருவன் தனக்குத் தீங்கிழைத்தால், அதற்குப் பதில் அவனுக்குத் தீங்கிழைக்கவுங் கூடாது. அவன் எக்காரணத்தினால் தீங்கிழைத்தானோ அக்காரணத்தைத் தான் களையவேண்டும். ஒவ்வொரு வரையும் அன்பினாலேயே வெல்லவேண்டும். அவ்விதம் தன்விரோதியிடம் அன்பு செலுத்துவதால் உயிர்போக நேரிடினும், அதற்குப் பயப்படக்கூடாது. 

பிரம்மசரிய விரதம் மூன்றாவது. பெண்களைத் தன் சகோதரிகளைப் போலவும் தாயாரைப் போலவும் பாவிக்க வேண்டும். காம எண்ணத்துடன் பெண்களைப் பார்க்கக் கூடாது. தனக்குக் கலியாணமாகி யிருந்தால் தன் மனைவி யைத் தன் வாழ்க்கைத் துணைவியென்று கருதி அவளிடத்து மிகவும் பரிசுத்தமான எண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் இவ்வுலகில் பிறந்ததன் கருத்து நன்றாகச் சாப்பிடுவதற்கென்று எண்ணக் கூடாது. ஆரோக்யமான வாழ்வுக்கு எவ்வளவு உணவு வேண்டுமோ அதை மாத்திரம் சாப்பிட வேண்டும். நாக்குக்கு இடம் கொடுத்து, நல்ல கரிப்பும் காரமும் தித்திப்புமான பண்டங்களையோ, விலக்கான பிற ஆகாரங்களையோ சாப்பிடக்கூடாது. மித மிஞ்சிய உணவு உண்ணலாகாது. கொதிப்பையும் ஆவேசத்தையும் உண்டாக்கும் ஆகாரத்தையும் ஒழிக்க வேண்டும். 

திருடாம லிருப்பது மற்றொரு விரதம். இதன் கருத் தென்னவென்றால், பிறர் பொருளைத் திருடக்கூடாது என்பது மாத்திரமன்று; உண்மையாகத் தனக்கு அவசிய மில்லாத பொருள்களையோ, தேவைக் கதிகமான பொருள் களையோ என்றும் வைத்திருத்த லாகாது. 

ஒருவன் எவ்வித ஆஸ்தியும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது மற்றொரு விரதம். இதற்கு ஒருவன் அதிகமான ஆஸ்தியை வைத்துக்கொள்ளக் கூடாதென்ப தன்று அர்த்தம்; தன் தேக சௌக்யத்திற்கு வேண்டாத எந்தப் பொருளையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்பது தான் கருத்து. 

இந்த விரதங்களுடன், சுதேசி விரதத்தையும் ஆசிரம வாசிகள் கைக்கொள்ள வேண்டும். எப்போதும் தைரியத்தைக் கைவிடக்கூடாது. பயம் என்பதைக் கனவிலும் நினைக் கக்கூடாது. காந்தியின் ஆசிரமவாசிகளுக்கு அரசர்களின் பயமும், ஜனங்களுடைய பயமும், ஜாதிக் கட்டுப்பாட்டின் பயமும், குடும்பத்தின் பயமும், திருடர்களின் பயமும், துஷ்ட மிருகங்களின் பயமும், நீரின் பயமும், நெருப்பின் பயமும், மரணத்தின் பயமும் கிடையா. 

சுதேசி விரதத்தைக் கைக்கொண்டவர்கள் எப்போதும் ஆடம்பரமற்றதும், இந்தியாவிலேயே நெய்யப்பட்டதுமான கதராடையே உடுத்த வேண்டும். மற்றும் இந்தியாவில் செய்த சாமான்களையே உபயோகிக்க வேண்டும். 

மக்களின் கஷ்டங்களை எவ்விதம் ஒழிப்பது என்ற இரகசியத்தை காந்தி தென்னாப்பிரிக்காவில் அனுபவத்தில் அறிந்தார். பீஹார் மாகாணத்தில் சாம்பரானில் பெரிய பெரிய அவுரித் தோட்டங்களுண்டு. ஒரு தோட்டத்தில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அந்தத் தொழிலாளரைத் தோட்ட முதலாளிகள் சரியாக நடத்தவில்லை. இதைக் கேள்விப்பட்ட காந்தி இதன் உண்மையை நேரில் கண்டறிவதற்காக, அங்கே சென்றார். ஊரூராய்ச் சுற்றித் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்ணாரக் கண்டார். அவர்களின் குறைகளை நீக்கப் பல நாள் உழைத்தார். அவர்களுடைய குறையும் ஒருவாறு தீர்ந்தது. பின்னால் கெய்ரா ஜில்லாவில் மழையில்லாமல் பஞ்சம் உண்டாயிற்று. குடியானவர்கள் வரி செலுத்த முடியாமல் தவித்தனர். காந்தி உடனே கெய்ராவுக்குச் சென்று குடிகளுக்கு வேண்டிய உதவியைப் புரிந்தார். ஆமதாபாதில் தொழிலாளர்களுக்கும் ஆலை முதலாளிகளுக்கும் சச்சரவு ஏற்பட்ட காலத்தில், காந்தி ஆலை முதலாளிகளைக் கண்டு தொழிலாளர்களின் குறைகளைத் தீர்த்தார். இவ்விதமாக காந்தி தம்மால் இயன்றவரை, நாட்டின் ஏழை மக்களுக்கு உழைத்து உதவி புரிந்து வந்திருக்கிறார். 

காந்தியும் சாரணர்களும்

நம் வாலிபர்களெல்லாம் ஒழுக்க முடையவர்களாகவும், சமூகத் தொண்டில் என்றும் மாறாத பற்றுள்ளவர்க ளாகவும், ஆரோக்ய முள்ளவர்களாகவும், பலமுள்ளவர்க ளாகவும் இருக்க வேண்டுமென்று காந்திக்கு ஆசை உண்டு. அவர்களுக்கென்று ஏற்பட்டுள்ள தேசீய இயக்க மான ஹிந்துஸ்தானச் சாரணச் சங்கத்துச் சாரணர்களை காந்தி இரண்டு வருஷங்களுக்கு முன்பு வார்தாவில் சந்தித்தார். அச் சாரணர்கள் கூட்டத்தில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் எல்லாரும் கலந்திருந்தனர். இதைக்காண காந்தி மனமகிழ்ந்தார். தேசத்தில் உள்ள சிறுவர்களெல்லாம் ஒற்றுமையாய் ஜாதிமத வித்தியாச மில்லாமல் உழைக்க வேண்டு மென்பது ஹிந்துஸ்தான் சாரணச் சங்கத்தின் நோக்கம். இதை யறிந்து காந்தி, சாரணர்களை அந்த லக்ஷியத்தைக் காப்பாற்றும்படி சொன்னார். தேசத்தில் இப்போது வேண்டியது, எல்லா மக்களிடத்தும் ஒற்றுமையே. மற்றும், இச்சாரணர்கள் கவாத்துச் செய்வது, ஒழுங்காக ஆயிரம் பேர் சேர்ந்து நடப்பது, திரும்புவது, அணிகளாகப் பிரிவது, மறுபடியும் ஒன்று சேர்வது, இவற்றை யெல்லாம் காந்தி பார்த்தார்; வெகு சந்தோஷப்பட்டார். இவ்விதப் பயிற்சி, நாட்டில் எல்லா சிறுவர் சிறுமியருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று காந்தி அபிப்பிராயப்பட்டார். இதனால் மக்களுக்கு ஒரு கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஒற்றுமையுமேற்படும் என்று காந்தி சொன்னார். இந்தப் படத்தில் காந்தி அச்சாரணர்களின் கொடியை ஏற்றுகிறார். அவரைச் சுற்றிச் சாரணர்கள் பலரிருப்பதைப் பாருங்கள்! 

காந்தியும் அவரது உணவும்

காந்தி உணவு விஷயத்தில் பல பரிசோதனைகளைச் செய்திருக்கிறார். பல தடவைகளில் அநேக நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறார். பச்சைக் காய்கறிகள், கீரைகள், நிலக்கடலை, பழம், இவற்றையே தான் அவர் சாப்பிடுகிறார். ஆட்டுப்பாலைத்தான் சாப்பிட்டு வருகிறார். இவ்விதமாக உணவுப் பரிசோதனைகளுடன் தேசத்தின் நன்மைக்காகவும் இரவு பகலாய் உழைத்து வருகிறார். இதனால் இவருக்கு உடம்பு அசெளக்ய மேற் பட்டு ஒன்றிரண்டு தடவைகளில் சத்திர சிகிச்சையும் நடந்தது. இவருக்கு உடம்பு அசௌக்யம் என்றால் சாதாரண வைத்தியர்கள் வைத்தியம் பார்ப்பது என்பது கிடையாது. இந்தியாவிலேயே பெயர் பெற்ற வைத்தியர்கள் வைத்தியம் செய்ய முந்துவார்கள். பம்பாயிலுள்ள டாக்டர் ஸ்ரீஜீவராஜ் மேதாவும், கல்கத்தாவிலுள்ள டாக்டர் பிதான் சந்திரராயும், டெல்லியிலிருந்த காலஞ் சென்ற தேசபக்தரும் பிரசித்தி பெற்ற முஸ்லீம் தலைவருமான டாக்டர் அன்சாரியும் காந்தியின் வைத்தியர்கள். படத்தில் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார். டாக்டர் அன்சாரியும் டாக்டர் பிதான் சந்திரராயும் சிந்தனையி லாழ்ந்திருக்கிறார்கள். காந்தி எப்போதும் குதூஹலமான தன்மை யுடையவர். நோயால் வருந்தும் போதுங் கூட அவர் சந்தோஷமாயிருப்பார். அதை நாம் படத்தில் பார்க்கலாம். 

அரசியல் தொண்டு

1914-ஆம் வருஷத்தில் ஐரோப்பாவில் மஹா யுத்தம் நடந்தது. இந்திய ராஜப் பிரதிநிதி, நமது தேசத் தலைவர்கள் பலரை யழைத்தார் ; சண்டையை வெற்றி கரமாக நடத்த என்ன செய்வது என்பதைப் பற்றி அவர்க ளுடன் ஆலோசித்தார். அப்போது காந்தியையும் ராஜப் பிரதிநிதி அழைத்தார், காந்திக்கு இந்தக் கூட்டத்தில் அவ்வளவு உற்சாக மில்லை. என்றாலும், பலர் கட்டாயத் தின் பேரில், ராஜப் பிரதிநிதியிடம் அவர் சென்றார். இந்தியர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்துக்குத் தங்களாலான உதவியை அந்த நெருக்கடியான சமயத்தில் செய்யவேண்டு மென்று அந்தக் கூட்டத்தில் தீர்மானித்தார்கள். சேனையிலே இந்தியர்கள் சேர்ந்துகொள்ள வேண்டுமென்று காந்தி ஹிந்தியில் ஒரு பிரசங்கம் செய்தார். இக்கூட்டம் கலைந்ததும், இந்தியாவின் அரசியல் சீர்திருத்தத்தைப் பற்றி ராஜப் பிரதி நிதிக்கு, காந்தி ஒரு கடிதம் எழுதினார். பிறகு, படை திரட்டும் பிரசாரத்தில் இறங்கி, ஊர் ஊராய்ச் சுற்றுப் பிரயாணம் செய்து சிப்பாய்களைச் சேர்த்தார். இந்த வேலை மிகவும் கடினமா யிருந்தது. பல சமயம் கால் நடையாகவே வெகுதூரம் காந்தி செல்லவேண்டி யிருந்தது. கையிலேயே உணவை எடுத்துக் கொண்டு சென்றார். இவ்வாறு அலைந்து திரிந்ததால், அவருக்கு உடம்பு அசௌக்ய மேற்பட்டது. பல மாதங்கள் படுத்திருந்தார். 

1919 -ஆம் வருஷத்தில் தேசத்தின் விடுதலையின் பொருட்டு காந்தி உழைக்க ஆரம்பித்தார். அவருடன் லக்ஷக்கணக்கான தலைவர்களும் அவர் சொற்படி நடந்து சொல்லொணாக் கஷ்டங்களுக் கிடையில், இன்றைக்கும் உழைத்து வருகிறார்கள். இதன் பொருட்டு காந்தி பல தடவை சிறைக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு பயம் என்பது கொஞ்சமும் கிடையாது. தம்முடைய இருபது வருஷத் தொண்டினால் நமது நாட்டிலேயே ஒரு மகத் தான மாறுதலையும், ஜனங்களிடம் தைரியத்தையும் உண்டு பண்ணி யிருக்கிறார். ஆத்ம சக்தியையும், சத்யாக்ரஹத்தை யும், சத்தியத்தையுமே காந்தி கைக்கொண்டு உழைத்து வருகிறார். காந்தியும் அவருடைய உண்மையான சிஷ்யர் களும் ஏதேனும் தப்புச் செய்தால், அதை உடனே ஒப்புக் கொள்வார்கள். தாம் செய்த குற்றத்திற்காகவும், தம் சிஷ்யர்கள் செய்த குற்றத்திற்காகவும் காந்தி அடிக்கடி பலநாட் கள் உபவாச மிருந்திருக்கிறார். ஒருதடவை, ஹிந்துக்களுக் கும் முஸ்லீம்களுக்கும் சண்டை நேரிட்டதைக் குறித்து இருபத்தாறு நாள் பட்டினி கிடந்தார். இதனால் ஒரு நன்மை யேற்பட்டது. நாட்டில் ஹிந்து முஸ்லீம் ஒற்று மையை எப்படி நிலைநாட்டுவதென்று அநேகம் ஹிந்து முஸ்லீம் தலைவர்கள் முயற்சி செய்தனர். பிரிட்டனின் பிர தம மந்திரியா யிருந்த ராம்ஸே மாக்டோனால்டு இந்திய அரசியல் சம்பந்தமாக ஒரு ஏற்பாடு செய்தார். ஹரிஜனங் கள் தங்கள் சொந்தப் பிரதி நிதிகளைத் தாங்களே தனியாக ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்துச் சட்ட சபைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அவர் அதிலே கூறினார். இதற் குத் தனித்தொகுதி முறை என்று பெயர். ஹரிஜனங்களுக்கு இப்படித் தனிதொகுதியை ஏற்படுத்தி அவர்களை ஹிந்து சமூகத்தினின்றும் அவர் பிரித்தார். இத்தீங்கை ஒழிப்பதற் காக, காந்தி ஓர் உபவாசமிருந்தார். அத்தீங்கை அரசாங் கத்தார் ஒழித்ததும் காந்தி தமது உபவாசத்தை முடித்தார். 

நிஜமாகவே, காந்தி எப்போதும் சமாதானத்தையே விரும்புகிறவர். கௌரவமான எந்த ஏற்பாட்டையும் அரசாங்கத்தார் செய்தால், அதை காந்தி எந்த சமயத்திலும் ஒப்புக்கொள்ளுவார். உதாரணமாக ராஜப் பிரதிநிதி, இர்வின் பிரபு கௌரவமாக, காந்தி கோரிய சில ஏற்பாடுகளு கிணங்கியபோது, காந்தியும் தம் அரசியல் கிளர்ச்சியை நிறுத்தினார். இந்திய மக்களின் அரசியல் நோக்கங்களை பிரிட்டிஷ் மக்களுக்குத் தெரிவிக்க, காந்தி லண்டனில் கூடிய வட்ட மேஜை மஹா நாட்டிற்கும் சென்றார். அரசியல் தொண்டுடன், மக்களின் நிலைமையை மேற்படுத் தக் கூடிய பல துறைகளிலும் காந்தி உழைத்து வருகிறார். ஹரிஜன முன்னேற்றத்திற்காக அவர் செய்துள்ள தொண்டு மகத்தானது. மடிந்துபோன கிராமக் கைத் தொழில்களையும் தலையெடுக்கச் செய்து வருகிறார். மக்களின் வறுமையை நீக்கக் கதர் இயக்கத்தை ஆரம்பித்து, நாடெங்கும் கதராடை வாங்கும்படி பிரசாரமும் செய்து வருகிறார். 

குணாதிசயம்

குஜராத்தி பாஷையில் உள்ள ஒரு பாட்டின் பேரில் காந்திக்கு அதிக பிரியம். அந்தப் பாட்டை பிரதி தினமும் பாடுவார். அந்தப் பாட்டு அவருடைய வாழ்க் கையின் லக்ஷியத்தையும் போக்கையும் நன்கு காட்டுகிறது. வென்ற பாட்டு. அதுதான் ‘வைஷ்ணவ ஜனதோ ‘ அதன் கருத்து இதுதான். எவனொருவன் பிறர் கஷ்டத்தை யறிந்து அதைத் தன்னுடையது என்று பாவிக்கிறானோ, அவன்தான் உண்மையான வைஷ்ணவன். அவன் பிறருக்குச் சேவை செய்வதில் முன் நிற்பான்; தன்னைப் பற்றிப் புகழ்ந்து கொள்ளமாட்டான்; எல்லாரையும் வணங்குவான்; ஒருவரையும் இகழ்ச்சியாகப் பேசான். அவன் மனமும் சொல்லும் செய்கையும் பரிசுத்தமானவை. பேராசை, மோசக் கருத்து, கோபம், இவை யொன்றும் இல்லாதவனே உண்மையான வைஷ்ணவன். 

காந்தி கடவுள் பக்தர். தன்னலங் கருதாத, மாசு மறு வற்ற புனித வாழ்வு அவருடைய வாழ்வு. ஏழைக ளிடத் தில் அவருக்கு அளவுகடந்த அன்பு. ஏழைகள் யாவரும் நன்றாகச் செழித்து வாழவேண்டு மென்பது அவருடைய ஆசை. இந்த ஒரு காரணத்தினால்தான் அவர் ஹரிஜனங் களுக்கும் கிராம ஜனங்களுக்கும் இணையற்ற சேவையைச் செய்து வருகிறார். 

குழந்தைகளிடம் அவருக்கு மிகவும் பிரியம். அவர்க ளிடையில் நிரம்ப சந்தோஷமா யிருப்பார்; குழந்தைகளோடு குழந்தையாய் நடந்துகொள்வார். இங்கிலாந்திலே நடந்த வட்டமேஜை மகாநாட்டுக்குச் சென்றிருந்த போது மகாத்மா அங்கே ஏழைக் குழந்தைகளின் இருப்பிடமான ‘நண்பர்கள் நிலய’த்தில் வசித்தார். அச்சமயத்தில் அக்கம் பக்கத்துக் குழந்தைகளெல்லாம் வந்து காந்தியைச் சூழ்ந்துகொண்டு விளையாடும். காந்தி எல்லா ஜாதிக் குழந்தைகளிடத்தும் எல்லாத் தேசக் குழந்தைக ளிடத்தும் ஒரே விதமான அன்புடையவர். 

காந்தி ஒரு அவதார புருஷர்; அவரை அறிஞர்கள் உலகத்தின் மிகப் பெரிய மகான்களுக்கும் மத ஸ்தாபகர் களுக்குமே ஒப்பிடுகிறார்கள். அவரைப் போன்ற உத்தமர்களைக் காண்பது அரிதாகும். அவர் காலத்தில் பிறந்து, அவரை நேரில் தரிசித்து, அவருடைய செயல்களை நேராகக் காணும் பாக்கியம் பெற்ற நாமெல்லாரும் புண்ணியம் செய்தவர்கள். காந்தி நமக்கெல்லாம் சேவை புரிவதால், அவருக்கு நாம் மிகவும் கடமையும் பட்டிருக்கிறோம். நம்மா லியன்ற அளவு நாமும் காந்தியின் கொள்கைப்படி நடந்து, அவரது வேலையைச் சிறிதேனும் அவருக்கு எளிதாக்கவேண்டும். அதற்கு காந்தியின் வாழ்க்கையே நமக்கு வழிகாட்டியாகும்.

(முற்றும்)

– காந்தித் தாத்தா கதை, முதற் பதிப்பு: 1941, சக்தி காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *