அவளும் ஒரு தாய்தானே!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 1,913 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இந்தச் சண்டாள உலகத்திலை என்னை இப்படி இம்மிசைப் பட விட்டுவிட்டு போக்காளன் போய் சேர்ந்திட்டான். நான் படுகிற ஆறணிவை ஆரிட்டைச் சொல் அழ. 

என்ர சீராளன் போன நாள் தொட்டு 
வீடோ விடிய இல்லை – என்ர விளக்கிலோ ஒளியுமில்லை. 
ஐயோ என்ர ராசா என்ரை கோப்புக் குலையுமுன்னே 
உன்ர கோயிலுக்கு கூப்பிடணை 
என்றமானம் அழியுமுன்னே – உன்ர 
மாளிகைக்குக் கூட்பிடணை” 

அன்ன முத்தாச்சியின் ஒப்பாரி ஓய்ந்த பாடில்லை. கிழிந்த அலவல் சேலை ‘சற சற’ வென்று பிரிந்த மாதிரி புறுபுறுத்துக் கொண்டிருந்தாள். ஆச்சி இப்படித்தான். ஏதாவது கவலை எல்லை மீறும் போதெல்லாம் எப்போதோ இழந்துவிட்ட தன் கணவனை நினைத்து ஒப்பாரி வைத்து ஒரு பாட்டம் அழுது கண்ணீர் சிந்துவதில் தான் ஆத்ம திருப்தி காண்பாள் அவள். அழ ஆரம்பித்து விட்டால் இலகுவில் அந்தப் பழைய நினைவின் பிடியிலிருந்து விடுபடமாட்டாள். அப்படி ஒரு செல்வாக்கான, ரம்மியமான வாழ்க்கை வாழ்ந்தவள் அவள் அப்போது. ஆனால் இப்போதோ…? 

“என்னணை அன்னமுத்தாச்சி காலத்தாலை வேளையோட அன்னம் பாறிக் கொண்டிருக்கிறாய்” முட்டை வாங்க வந்த கனகம்மா ஆச்சிக்கு வாகாகக் கதை கொடுத்தாள். 

“எடி பிள்ளை என்ற ஈறலை ஏனடி கேக்கிறாய். நானும் கண்டன் கேட்டன் உவள் பாறுவதியைப் போல ஒரு தோறையைக் காணயில்லை. இந்த இலங்கைச் சிலோனிலை, கேளடி வியளத்தை. என்ர கோழியொண்டு அங்காலை அவள் வீட்டு முற்றத்தைக் கிலிசை கெடுத்திப் போட்டுதாம். கல்லாலை எறிஞ்சு காலை முறிச்சுப் போட்டு வேலியிலை கொண்டு வந்து போட்டிருக்கிறாள். ஏன் எண்டு கேட்டால் “பொத்தடி வாயை” என்கிறாள். எத்தினைக்குப் பின்னாலை இவள் என்னை கேட்பாள் பொத்து வாயெண்டு.” “எணை அயலுக்குள்ளை என்ன சறவையெணை? கொஞ்சம் விட்டுக் கூட்டித்தானே பார்க்க வேணும்.” 

“எடி, எடி உவளின்ர சீத்துவக்கேடு எனக்குத் தெரியாதே. கோழியை மட்டுமே, உவள் ஆட்களையும் கொல்லுவள். அவன் ஆரோ ஊர் பேர் தெரியாத ஒரு கஞ்சலனோட தொடுப்பு வைச்சுக் கொண்டு புரியன் கந்தையனை வீட்டுக் கோடிக்குள்ளை வெட்டித் தாட்ட வேசை, எடுபட்ட தோறை.” 

“ஆ! அவன் கந்தையன் என்ன தங்கப் பவுணான மனுஷன். மிதிச்ச இடத்துப் புல்லுச் சாகாது. ‘அக்கை’ எண்டால் இன்னுமொருக்கால் சொல்ல வேணும் எண்டிருக்கும். அவனை உயிரோடு தாட்டுப்போட்டு அவவின்ர முன் கொய்யகமும் மாறு – கைப்பணமும், செருப்பும் குடையும் எடுப்பும் சாய்ப்பும்…” 

“எணை உனக்கு ஏலாத நேரத்திலை உந்த நீளதாளமெல்லாம் ஏனணை? சும்மா ஒரு கால் சிறங்கை அரிசியை கொதிப்பிச்சுக் குடிச்சுட்டு கண்ணும் தெரியேல்ல காதும் கேட்கயில்லை எண்டு உந்தத் திண்ணையிலை கிடவன்” 

“எடி பிள்ளை, மூலையிலை நெடுஞ்சாண் கிடையாக கிடக்க முடியுமோ? கைம்பெண்டாடிச்சி! நான் ஆள் ஆணி இல்லாதனான். சீர்செனத்தி இல்லாத பாவி. முதுகு ஏரியெல்லாம் குத்தும் ‘உளைவும் தாங்க முடியேல்ல. குளத்தை போற தெண்டால் கூட ‘சீ’ எண்ட பாடக்கிடக்கு. கிடந்த பாயும் சீலம்பாயுமாக் கிடந்து அழுந்திறன். அதுக்குள்ளை இந்தப் பாழ்படுவாற்றை ஆய்க்கினை தாங்க முடியேல்ல. கிலிசை கெட்ட சாதி. ஐயோ கண்கெட்ட கடவுள் என்னைக் கொண்டு போகாதாம். நான் கிடந்து கயிறு மாலைப்படுறன்.” 

“ஏன் அன்னமுத்தாச்சி உன்ர மகன் அஞ்சைப்பத்தை அனுப்பிறயில்லையோ?” அன்னமுத்தாச்சியின் மனநிலையை அறிந்து கொண்டும் கனகம்மா கேட்டு விட்டாள். எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிற முயற்சிதான். அன்னமுத்து ஆச்சி கெம்பி எழும்பி விட்டா. 

“எடி உதைக் கேட்டு என்ர வயித்தெரிச்சலைக் கிளப்பாதை கண்டியோ. போக்காளன் விட்டுட்டுப் போக எத்தினை கயிறு மாலைப் பட்டு நீரைத் திண்டு நெருப்பைத் திண்டு, உரலிடிச்சு, அப்பஞ் சட்டு உவனை ஆளாக்கி உத்தியோகமாக்கிவிட்டன். பெத்தவள் ஒருத்தி இருக்கிறாள் எண்டு எண்ணம் இறுதேசம் ஒல்லுப்போலை எண்டாலும் இருக்கே. என்னம்போரு ஊரிலை கண்டறியாத பொம்பிளை ஒருத்தியை கட்டிக்கொண்டு வந்தாரோ.. அந்தச் சிங்கினி நோனா இஞ்சை வந்தாவே. அவவுக்கு தன்ர சிங்கார வாயைத் திறந்து என்னை மாமி எண்டு சொல்லக்கூட சங்கையீனமாம். இஞ்சை, பிஞ்சை, எண்டு ஒரு புது மோடியான கதை கண்டியோ. அவவின்ரை கோப்பு வாப்புக்கு இந்தக் கிழவியின்ர சாங்க பாங்கம் சரிப்பட்டு வருமே பின்னை!” 

அவவின்ரை நையாண்டியை அவன்ரை முகத்துக்காகப் பார்த்துக் கொண்டிருந்தன். எனக்குப் பொறுக்கேல்லை. பொல்லாத வெப்பியார மாகக் கிடந்தது. கேட்டன் நல்ல கேள்வி. தோறை நீ ஆரண்டு என்னோட வாய் காட்டுறாய். வெளிக்கிட்டி வேசை எண்டு தாறுமாறா ஏசிப் போட்டன். எடி தாலியைக் கட்டுக்கை! அவன் வேலையாலை வர இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவனுக்கு மூட்டி வைச்சிட்டாள், சண்டாளி. 

என்ர பிள்ளையும் சரியானதே? அவள் சொன்ன மந்திரத்திலை கட்டுப்பட்டுப் போச்சு. இருபத்தைஞ்சு வருசம் பெத்து வளர்த்த நான் சொன்ன சொல்லு மேட்டிமை இல்லாமல் போச்சு. நேற்று வந்த அந்த பிறத்தியாளின்ரை சொல்லுக்கு என்னையும் ஏறுமாறாகக் கேட்டான்டி; கலம்பகம் வலுத்துப் போச்சு. 

என்னென்டாலும் பட்டிழுத்துப் பார். நான் எங்கேயாலும் போறன். உன்னோட அண்டலிக்க ஏலாது எண்டு” சொல்லிப் போட்டு மனுசிக்காரியையும் கூட்டிக் கொண்டு ‘பாசா’ விட்டார். வேணுமெண்டால் மாசா மாசம் காசு அனுப்பிறன் எண்டார். 

எடே எடே! உன்ர பிச்சைக் காசுக்குத் தூங்கி இருக்க இல்லை. நான் செத்து நாறினாலும் எட்டிப் பாராதே போடா போ எண்டு சொல்லி விட்டுட்டன். அது அவருக்கு ரோசம் பத்திப் போச்சு. என்ர பிள்ளையும் செத்துப் போச்சு எண்டு கை கழுவி விட்டுட்டன். 

“சீ! அன்னமுத்தாச்சி இதேன்ன கதையெணை? என்ன இருந்தாலும் பெத்த பிள்ளையெல்லே.” 

“எடி பெத்த மனம்பித்து பிள்ளை மனம் கல்லு எண்டு பழமொழி சொல்லுவினம். நான் பெத்தவள் வயிறு எரிய விட்டுட்டான். எடி அவன் நல்லா இருக்கட்டும். ஏன் என்ர சீராளன் என்னிலை எவ்வளவு வாரப்பாடா இருந்தவர். நான் கொடும்பாவி. எனக்குக் குடுத்து வைக்கயில்லை. போக்காளன் போக்குக்குப் போறதுக்கெண்டு அண்டைக்கு நான் அவிச்சுக் குடுத்த நெத்தலிப் புட்டைப் புழுகிப் புழுகித் திண்டு போட்டுப்போன மனுசன் துலாக் கொடியாலை.. ஐயோ கண் கெட்ட யமன் வழியிலை நிண்டிட்டான். துலாவிலை இருந்து விழுந்த மனுஷன் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தார். ஐயா எண்ட குரலுக்கு ஒரு வாய் பிறப்புச் சொல்ல இல்லை. போக்காளன் போய்ச் சேர்ந்திட்டார். நான் உடன்கட்டை ஏறியிட்டனோ! எனக்கு அணைதுணை இல்லை. ஆருமற்ற பாவி. 

ஆளில்லாத் துக்கம் அழுதாலும் தீருமோ! 
சேர்றில்லாத் துக்கம் சொன்னாலும் தீருமோ!” 

“எனை உன்ரை பிலாக்கணத்தை கேட்டுக் கொண்டிருந்து நேரம் பங்கை பனை வட்டுக்கை போட்டுது. பொடியன் பயணத்தாலை வந்திட்டானெணை. எணை முட்டையைக் கொண்டுவா போக.” 

ஆச்சி பத்திரமாக பானைக்குள்ளிலிருந்து எண்ணிக் கொடுத்த முட்டையை வாங்கிக் கொண்டு கனகம் போய்விட்டாள். ஆச்சி அப்படியே திண்ணையில் முந்தானையை விரித்தவள் நித்திரையாகி விட்டாள். 

அன்னமுத்தாச்சிக்கு அன்று மனம் ஒரு நிலையிலுமில்லை. மனத்தில் ஒரு பாரதி. அலுவல் ஒன்றிலும் மனம் ஒன்றவில்லை. சாப்பாட்டை எடுத்தால் தொண்டைக்குழிக்குள் உணவு செல்ல மறுக்கிறது. சதிரமெங்கும் நடுங்குவது போல இருந்தது. செம்பு நிறைய தண்ணீரை எடுத்து மிடறு முறிய குடித்தவள் பிரைக்கடித்ததனால் குறையில் நிறுத்திவிட்டாள். 

போய்படுத்தாள். நித்திரையும் வர மறுத்தது. முற்றத்துப் பூவரசில் காகமொன்று அசூரியமாகக் கத்தியது. “சீ மூதேசி ஏன் கத்துறாய், ஹாய்… ஹாய்” என்று கல்லை விட்டெறிந்தாள். அது அந்த மரத்திலிருந்து பறந்து வீட்டுக் கோடியில் மாமரத்தில் நின்று கத்துவது கேட்டது. ஆச்சிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லைக்கே எண்டது போல அதுவும் ஒரு கொண்டோடிக் காகம்” என்று முணுமுணுத்தபடி கோடிக்குப் போய் மீண்டும் ஆச்சிக்கு ‘வேப்பு’க் காட்டி விட்டு முற்றத்துப் பூவரசில் வந்து ‘வாள் வாள்’ என்று ‘வாள்’த்தியது. 

“இதென்ன இடி மாலை. இந்தக் காகம் என்ன சங்கதியைச் சொல்லுது. நான் கவிழப் போறனாக்கும். அப்பிடியெண்டால் நான் புண்ணியம் செய்தனான் எல்லோ” என்று எண்ணியபடி திண்ணைத் தூணில் சாய்ந்தபடி யோசனையில் ஆழ்ந்து விட்டாள் அன்னமுத்தாச்சி. 

“அன்னமுத்தாச்சி என்னெணை நீ இஞ்சை இருக்கிறாய். உன்ரை மோன் அங்கை சாகப் பிழைக்கக் கிடக்கிறானாம்.” 

“எடி என்னடி நோடாலம் கொத்துறாய்?” 

“நான் ஒண்டும் புசத்தயில்லை. மெய்யாத்தான் சொல்லுறன். உன்ர மோனுக்கு வருத்தம் கடுமையாம். ஊரெல்லாம் அள்ளுப் பட்டுப் போய் பாக்கிது. வருத்தம் கொஞ்சம் கடுமை போலை.” 

“என்னடி சுகயினமாம்?” 

“எணை அவனுக்கும் பெஞ்சாதிக்கும் நெடுக இழுபறிதானாம். நாளும் பொழுதும் ஆஸ்பத்திரியும் வீடும்தானாம். இப்ப கன காலமாக சுகமில்லையாம்”. 

பொறி கலங்கிப்போய் இருந்து விட்டாள் அன்னமுத்தாச்சி. ‘பதகளிப்பு” அவளுக்கு. இருப்புக் கொள்ளவில்லை. “உன்ரை முகத்திலும் முழிக்கிறேல்லை. நான் உனக்குத் தாயுமில்லை. நீ எனக்கு மகனுமில்லை” என்று வைராக்கியத்துடன் சொன்னவளா இவள். 

ஆச்சி அறைக்குள் போய் முட்டிக்குள் இருக்கிற சில்லறையை எடுத்து “என்ர அம்மாளாச்சி! என்ர பிள்ளை சுகமாக எழும்பட்டும் உனக்கு மடிப்பிச்சை எடுத்துப் பொங்குறன். அவனுக்கு ஒரு விக்கினமும் வர விட்டிடாதை” என்று கையெடுத்துக் கும்பிட்டவள் சில்லறையை ஒரு சேலைத்துண்டில் முடிந்து வீட்டு வளையில் கட்டிவிட்டாள். 

“புற்றளையில் பிள்ளையாரே! பிள்ளையில்லை எண்டு உன்னை வரம் கேட்டு நீ தானே இந்தப் பிள்ளையை தந்தனி. அவனை வாழுற வளருற வயசிலை அவனை கொண்டு போடாதே!” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள். 

அவள் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றபொழுது பூசைக்கு ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. உட்பிரகாரத்தை மும்முறை வலம் வந்தவள்: பூசை முடிந்து ஐயர் கொடுத்த அர்ச்சனைத் திருநீறு, சந்தனம், பூ எல்லாவற்றையும் வாங்கி மடிச்சேலையில் முடிச்சாகக் கட்டிக் கொண்டு தெருவில் இறங்கி விறு விறுவென நடந்தாள. அந்தச் சித்திரை வெய்யிலிலும் அவளுக்கு கால் சுட்டதாகவே தெரியவில்லை. ஒருவித வெறியுடனும் வேகத்துடனும் நடந்தவள் இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள அவளுடைய மகன் வீட்டிற்கு நடையைத் தொடர்ந்தாள். 

வீட்டு வாயிலை அடைந்ததும் தன்னுடைய மருமகள் ‘உள்ளே வராதை’ எனத் தடுத்துவிடுவாளோ என்ற பீதி உள்ளூற இருந்தாலும் “வருவது வரட்டும்” என்ற ஒரு அசாத்தியத் துணிவுடன் தன் மகனின் முகத்தைப் பார்த்தாலே போதும் என்ற ஆவல் மீதுரா படியைத் தாண்டி உள்ளே செல்கிறாள். 

அங்கே! 

கட்டிலில் ஆனந்தன் கிழித்துப்போட்ட வாழை நாராகப் படுத்திருக்கிறான். படுக்கையைச் சுற்றி அவனுடைய அலுவலக நண்பர்கள். கமலாவின் இனத்தவர், இன்னும் யார் யாரோ…. 

சுற்றிவர நிற்கிற சனம் ஏராளம். ஆச்சி கிட்டக் கிட்ட நெருங்கிப் போகிறாள். கமலா ஆடாமல் அசையாமல் பிரமிப்புடன் பார்த்தபடி நிற்கிறாள். கூடி நிற்பவர்கள் அவளை ஒரு புழுவைப் பார்க்கிற மாதிரி ஒருவித நையாண்டியுடன் பார்த்து முகத்தைச் சுழிக்கிறார்கள். விஷயமறிந்த சிலர் ஆளுக்காள் கண்ணடிக்கிறார்கள். சிலர் குசுகுசுக்கிறார்கள். 

இவையொன்றையும் கவனியாமல் ஆச்சி நேரே போய் ஆனந்தனின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவள் பதறிப் போனாள். “ஐயோ உடல் கனலாய் எரியுதே. பெத்தவளின்ர மனம் எரிஞ்ச மாதிரி உன்ர உடல் எரியுதே” என்றவள் தான் கொண்டு வந்த விபூதிச் சரையை எடுத்து நெற்றியில் இட்டவள்; 

“எட தம்பி கண் முழிச்சுப் பாரடா. ஆர் வந்து இருக்கிறன் பார்! உன்ர கோச்சியடா. கண் முழிச்சுப் பாராடா என்ர துரை..” 

“அம்மா!” 

“ஆ! எல்லோர் முகங்களிலும் பிரமிப்பின் ரேகைகள்! எல்லோரும் அவனை மொய்க்கின்றனர். 

“அம்மா!” 

“ஓமடா நான் தான்! கண்ணைத் திற.” இலேசாக அவன் கண்களைத் திறக்கிறான். திறந்த கண்களுக்கு அவனது தாயின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. 

“அம்மா!” என முனகியவன் ஏதோ சொல்ல உன்னுகிறான். உதடுகள் துடிக்கின்றன. வார்த்தை வெளிவரவில்லை. விழியோரத்தில் கண்ணீர் முத்துக்கள் மாலை கோர்க்கின்றன. 

“என்ர இராசா உனக்கு ஒண்டும் வராதபடி. நீ இப்ப படு.” என்று அமர்த்தினாள். எழுந்து நின்றவள்” அவனுக்கு மனக் காய்ச்சல். அவனுக்கு ஒண்டும் வராது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வெளியே செல்ல கதவை நோக்கி நடந்தாள். 

“மாமி உங்களைக் கும்பிட்டன் மாமி. நடந்ததெல்லாம் மறந்திடுங்கோ. அவர் அம்மா அம்மா என்றுதான் அரற்றிக் கொண்டிருந்தார். நான் கொடியவள். உங்கள் இருவரையும் நான் பிரிச்சு வைச்சிட்டன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ. நீங்கள் ஒரு இடமும் போகாதேயுங்கோ” அவள் கைகள் அஞ்சலியாயக் குவிந்தன. கமலா தன் கண்ணீர் அர்ச்சனையால் ஆச்சியின் சேலையை நனைத்தாள். 

“எழும்பு பிள்ளை. நான் ஒரு இடமும் போககேல்லை” என்று சொல்லி நிமிர்ந்தவளுக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. எதிரே எல்லாமே தலைகீழாக் சுழல்வதான பிரமை. எதிரே இருந்த கட்டில் சட்டத்தைப் பிடிக்கப் போனவள் ‘தடால்” என நிலத்தில் சாய்ந்தாள். 

“அம்மா!” 

“மாமி!” 

“ஆச்சி!!” 

யாரின் அழைப்பையும் கேட்க ஆச்சி அங்கு இல்லை. ஆச்சி தன் யாத்திரையைத் தொடங்கி விட்டாளே! 

– வீரகேசரி வாரவெளியீடு, 1979.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *