ஜென்சியும் ஜேசுமணி சித்தப்பாவும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 1,841 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூனை, குட்டிப் போட்டு விட்டால் அம்மாவின் நச்சரிப்பு அடங்காது. அங்கேயும் இங்கேயும் குட்டிகளை கவ்விக் கொண்டுத் திரியும் பூனையைக் கண்டாலே எரிந்து விழுவார் அதற்கு ஏற்றாற் போல் பூனையும் அம்மாவை வெறுப்பேற்றி பார்க்கும். 

வீடு முழுவதும் குட்டிகளை இழுத்தும், சில நேரங்களில் கூரை வழியில் இறங்கி அட்டாலில் குட்டிகளை துாக்கிப் போட்டுக் கொண்டு தூக்கத்தை கலைத்தும் விடுவதால் பூனைகளை எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். ஆனால் எனக்கு மட்டும் பூனையை ஏசுவதற்கோ வதைப்பதற்கோ ஒருபோதும் மனம் ஒப்பாது அது தன்பாட்டில் இருந்து விடும் போது நாம் ஏன் அதை வதைக்க வேண்டும் என்றிருந்திடுவேன். அதனால் என்னிடம் பூனை கொஞ்சம் நெருக்கமாகத்தான் இருக்கும் அதன் மிருதுவான உடலை என் கால்களில் உரசி உராயும் போதெல்லாம் எனக்குள் ஆயிரம் ஒளிக்கீற்றுக்கள் தோன்றி மறையும். மெல்லியத் தொனியில் குரல் எழுப்பி என்னுடன் மட்டும் உரிமை பாராட்டும் பூனையை ஒருபோதும் இம்சையாக எண்ணியதே கிடையாது. 

பூனையின் வயிறு இன்னும் வீங்கி புடைத்திருந்தது. சில நேரங்களில் இம்முறை ஐந்துக் குட்டிகளாய் கூட இருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது. இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவத்திற்காய் காத்திருக்கும் பூனை, தன்னை மறந்த நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தப் போது வயிறு மேலும் கீழுமாய் வீங்கிப் புடைத்து அசைந்துக் கொண்டிருந்தது. 

ஜென்சி கண்களை மேலும் கீழும் உருட்டிக் கதவிடுக்கின் ஊடே தலையை வெளியே நீட்டிச் சிரித்தப்போது வாயில் இருந்து வழியும் வாணி அவளது பருத்த மார்பகங்களின் ஊடே கீழிறங்கிக் கொண்டிருந்தது. அது சட்டையின் அரைவாசிப்பகுதியை நனைத்து ஈரமாகியிருந்தது. 

காற்சட்டையின் ஒரு காலினுள் இருகால்களையும் நுழைத்திருந்த இறுக்கம் அவளை அங்கிங்கு அசைக்கமுடியாதபடி தடுத்திருந்தது. மிக நெருக்கமாய் திணிக்கப்பட்டிருந்த கால்களால் பிட்டம் வீங்கிப்புடைத்திருந்தது. வழமையாகவே ஜென்சி ஒரு காலின் பகுதிக்குள் இரண்டுக் கால்களையும் திணித்து அவஸ்தைப்படுவதுண்டு கோணல்மானலாய் பூட்டப்பட்டிருந்த சட்டைப் பொத்தான்களில் கடைசிப் பொத்தானோடு சட்டையின் அரைவாசிப்பகுதியை வாயினுள் போட்டுக் குதப்பியதால் ஆடை விலகி அவளது தொப்புள் பளிச்சென வெளிப்பட்டதையும் கண்டுக்கொள்ளாமல் பராக்கு பார்ப்பதில் தீவிரமாய் இருந்தாள். அப்போது சகாயம் அந்தி நிறுவையை முடித்த அசதியோடு வந்து ஆணியில் கூடையை மாட்டி விட்டு ஸ்தோப்புக்குள் நுழைந்தாள். “ஜென்சி கண்ணா என்னாப் பண்ணுறீங்க” என்றுக் கேட்டுக் கொண்டே மடியில் கிடந்த மலைத்தக்காளி பழங்களை எடுத்தப்போதுதான் பார்த்தாள் 

“ஐயையோ இப்பிடியா கால்சட்டப் போடுவீங்க” 

“அம்மாக்கிட்ட வாங்க செல்லம் வாங்க” என்று கூப்பிட்டாள். 

அசைந்தாடி வந்து கழுத்தை இறுக கட்டி எச்சில் வடிந்திருந்த வாயாலே தாயின் முகத்தை தேய்த்து ஆசுவாகப்பட்டுக் கொள்ளும் அவளைக் கட்டித்தழுவி உச்சி முகர்ந்தாள் சகாயம். 

பத்து வருடத் தவத்தின் பயனாய் பெற்றறெடுத்த பொக்கிசம்தான் ஜென்சி. சகாயம் அவளை வயிற்றில் வாங்கியப் போது அடைந்த ஆனந்தத்தை விடவும் உருவமாய் பெற்று கையில் ஏந்தியப் போது அடைந்த ஆனந்தத்திற்கு அளவென்பதே கிடையாது. ஊரார் என்னவோ அவளை குறைப்பிரசவமாய் பார்த்தபோதும் டேவிட்டின் மறைவுக்குப் பின்னர் சகாயத்திற்கு கிடைத்த பெரும் நிறைவு ஜென்சி மட்டுமே. ஆனால் ஜென்சி வந்துதித்த சகாயத்தின் வயிற்றில் மீண்டும் ஈரம் துளிக்கவேயில்லை. 

ஆரம்பத்தில் பூனைக்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்தப்போது அம்மாதான் முதலில் அதன் மீது அக்கறைக் காட்டினார் பூனை முதல்தடவையாய் குட்டிப்போடயிருந்தப்போது அதற்கு கிடைத்த ராஜமரியாதை பற்றி பலருடன் பெருமையாகப் பேசியிருக்கிறேன் கருவாடும் மாசியும் இருந்தால்தான் பூனை சாப்பாட்டையே திரும்பி பார்க்கும் அப்போதெல்லாம் அம்மா முகம் சுளியாமல் அதற்காக காட்டிய அக்கறை கண்டு வியந்திருக்கிறேன் பூனையின் முதல் பிரசவ நாளன்று ஆடிக்காற்றுடன் பெய்த பலத்த மழை அம்மாவினுள் சுரந்த கழிவிரக்கத்தால் பூனை வீட்டினுள் கதகதப்பான கம்பளிப் போர்வைக்குள் முடங்கிக் கொண்டது. 

குரலைத் தாழ்த்தி இரவு முழுவதும் கதறியப் பூனை விடியலில் அழகிய மூன்று குட்டிகளை ஈன்றிருந்தது பட்டுப் போன்ற மிருதுவான உடலமைப்பைக் கொண்டிருந்த குட்டிகளை தன் நாக்கினால் வருடிக் கொண்டிருந்தது. மூன்றுக் குட்டிகளும் பூனையின் மார்பில் வாய் வைத்தப்படி ஆழ்ந்திருந்தன ஓரிரு நாட்களுக்குப் பின்புதான் யாருமே எதிர்பாராத நேரத்தில் பூனை அதை நிகழ்தியிருந்தது. 

பூனைக்கென ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கார்ட்போர்ட் பெட்டியில் ஆங்காங்கே ரத்தம் படிந்திருந்ததோடு சில மாமிசத்துண்டுகளும் சிதறிக்கிடந்தமையால் அம்மா பதறிப்போனார் அப்போது மூன்று குட்டிகளில் ஒருக்குட்டியைக் காணவில்லை அப்பாவை விட்டு சந்துப் பொந்துகளையும் கூரை இடுக்குகளையும் தேடித்துலாவிய போதும் குட்டியை காணவில்லை. எல்லோரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தப் போதுதான் எச்சமாய் பூனைக்குட்டியின் வால் மட்டும் கிடைத்ததால் அதிர்ந்துப் போனோம் நாம் தான் ஈன்ற குட்டிகளை தானே சுவைத்து விட்ட பெருமிதம் பூனையின் கண்களில் குரூரமாய் பரவியிருந்தது. 

அப்போது அம்மாவின் கண்களில் பரவிய கோபம் பூனையின் மீது மரண அடியாய் விழுந்தது. மூன்று நான்கு நாட்களாய் வீட்டுப்பக்கமே தலைவைத்துப் படுக்காத பூனையின் பிரிவு குட்டிகளை வெகுவாய் பாதித்திருந்தது பாலுக்காக ஏங்கியவைகளுக்கு புட்டிப்பாலை கரைத்து கரைத்து ஊற்றியப் போதும் அவற்றை சமாதானப்படுத்தும் திராணியை அம்மா இழந்திருந்தார் ஓரிரு நாட்களில் கூரை வழியில் தலைகாட்டத் தொடங்கிய பூனையை குட்டிகளின் நலன் கருதி அம்மா அதன் போக்கில் விட்டு விட்டார் இயல்பாய் வந்துப் போகத் தொடங்கியது பூனை. குட்டிகளும் இயல்பாய் பெட்டிக்குள்ளும் பெட்டிகளுக்கு வெளியேயும் உலாவத் தொடங்கியிருந்தன. 

மறுபடியும் பூனை இயல்புக்கு திரும்பி இருந்தது அம்மாவும் தான் பூனைக்கு சாப்பாடு வைப்பதற்கும் அதை பராமரிப்பதற்கும் அம்மா தவறியதே இல்லை இது இவ்வாறு இருக்கின்ற தருணத்தில் தான் பூனை இப்போது மறு பிரசவத்திற்கு தயாராகியிருக்கிறது. 

இருள் கவிழும் பொழுதுகளில் கள்ளு நெடியோடு வீட்டுக்கு வரும் ஜேசுமணி சித்தப்பாவைக் கண்டு விட்டால் கதவிடுக்கிலும் கட்டில் அடியிலும் ஒளிந்துக் கொள்ளும் ஜென்சியை சமாதானப் படுத்துவதற்கு போதும் போதுமென்றாகி விடும் போதையால் சிவந்த கண்களும் முரட்டுச் சுபாவமும் அவளை அச்சத்தில் ஆழ்த்திவிடும் அது மட்டுமல்ல ஒரு நாள் முழு போதையில் தள்ளாடியவன் வீட்டில் அராஜகமாய் சட்டிப் பானைகளை எல்லாம் உடைத்து நாசப்படுத்தியப் போது அவற்றைத் தடுக்கும் திராணியற்றுத் ஜென்சியை ஆரத் தழுவி சிலையாய் அப்படியே கூனி குறுகி இருந்து விட்டாள் சகாயம் அப்போது யாருமே எதிர்பாராத நேரத்தில் செறா விறகில் அப்பாயி தலையில் போட்ட அடியால் ரத்தம் பீறிட்டுப் பாயவே கத்தி ஆர்பரித்து விழுந்த ஜென்சி சில மணி நேரங்களாய் எழுந்திருக்கவே இல்லை. 

அன்றிலிருந்து ஜேசுமணி சித்தப்பாவின் முகத்தை அவள் பார்ப்பதே இல்லை 

பொழுது புலர்ந்துக் கிடந்தது 

பத்தேக்கருக்கு வேலைக்கு போவதென்றால் வீட்டில் இருந்து பத்து நிமிடத்திற்கு முன்னமே போயாக வேண்டும் கொஞ்சம் பிந்தினாலும் கங்காணிப் பயலுகளின் வாய் நீளும். எழுந்ததில் இருந்தே ஓடியோடி இயங்கினாலும் கடைசியில் பிந்தித்ததான் போவாள் சகாயம் சில நேரங்களில் ஜென்சி பாயோடு வெளிய தெருவுக்கு போய் விடுவாளானாள் அவற்றை எல்லாம் எடுத்து சுத்தப்படுத்தியாக வேண்டும் இவ்வாறான நாட்களில் பத்தேக்கருக்கு போக வேண்டி வந்தால் கங்காணியிடம் வசமாய் சிக்கிக் கொள்வாள் நடு வீட்டில் கால்களை அகல விரித்து துாங்கிக் கிடக்கும் ஜென்சியை ஒவ்வொரு முறையும் தாண்டித் தாண்டி போகும் போதெல்லாம் உள்ளுக்குள் நெளியும் அசௌகரியங்கள் கொஞ்சநஞ்சமல்ல எல்லா புழுக்கங்களையும் ஞாயிற்றுக் கிழமைகளில் கர்த்தரின் பாதங்களில் இறக்கி வைத்து ஆசுவாசப்பட்டுக் கொள்வாள் சகாயம் ஆனால் ஜென்சியின் எதிர்காலம் குறித்த பயம் நாளுக்கு நாள் அவளுள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 

இது இவ்வாறிருக்கவே சகாயத்துக்கான அடுத்த இடி விழுந்தது ஆமாம் ஜென்சி அன்று பெரிய மனுசியாகியிருந்தாள் முகத்தில் பரவியிருந்த அருவருப்பைத் தவிர ஜென்சியிடம் வேறு எவ்விதமான மாற்றங்களையும் கண்டிராத சகாயம் அவளைக் கட்டித் தழுவி அழுது தீர்த்தாள் அப்போது அப்பாயி 

“இந்த கூறு கெட்ட முண்டைக்கு அப்பவே சொன்னேன் இத எல்லாம் வச்சி சொமக்க முடியாது மண்ணுக்கு பாரமுனு கேட்டாளா” எனக் கூறிக் கொண்டே உரலில் சிக்கிய வெற்றிலை பாக்கை இடித்துக் கொண்டு சகாயத்தின் வாயை கிண்டினாள். ஆனால் சகாயம் எதுவும் பேசவில்லை. 

“இனிமேல பின்னுக்கே மல்லுக்கு நின்னு காவ பாக்க வேண்டியதுதான்” 

“ஊரு ஒலகத்துல நல்லா நிக்கிறதுகளே நாலு நக்கு நக்குதுக இத எல்லாம் வெச்சி எத்தன நாளைக்கு மாரடிக்கிறது” 

“இந்த சனியன கட்டிக்கிட்டு அழுகலளனு யாரு அடிச்சா”? 

“புத்திக் கெட்ட சிறுக்கிக்கு நான் சொல்லுறது எங்க ஏறுது” என்று அப்பாயி கொட்டிய வார்த்தைகளால் சகாயம் இடிந்துப் போனாள். 

அன்றொரு ஞாயிற்றுக்கிழமை மனச்சுமைகளை எல்லாம் கர்த்தரிடம் இறக்கி வைத்த திருப்தியில் திளைத்திருந்த சகாயத்திடம் “சகாயம் ஒன்னோட கஸ்டங்களுக்கெல்லாம் விடிவுக்காலம் வந்தாச்சி” 

“நம்மோட பழையப் பாதர் மிஸ்டர் ஜோசப் கண்டியில இருக்கிற ஹோமுக்கு ஜென்சிய எடுத்துகிறதா கடிதம் அனுப்பிட்டாரு இனி ஆக வேண்டியதப் பாருங்க அடுத்தக் கெழம கொண்டு போய் விடுவம்” என்றதும் இத்தனை காலம் எதிர்பார்த்திருந்த தருணம் கைகூடி வந்த சந்தோசத்தை விடவும் ஜென்சியின் பிரிவுக்காக மனம் அழுதது. 

நாட்கள் கரைந்தோடிக் கொண்டிருந்தன 

ஜென்சி பெரியவளானதிலிருந்து சகாயம் இயல்பாய் இல்லை அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை இப்படித்தான் ஒரு நாள் குசினிப்பக்கம் ஜென்சியை குளிக்க வைப்பதற்கு உடுப்பு மாற்றிக் கொண்டிருந்ததை திருட்டு தனமாய் ஒழிந்திருந்து பார்த்த ஜேசுமணியைக் கண்டுவிட்டாள் உள்ளுக்குள் பொங்கிய கோபாசேஷம் அவள் நிதானத்தை காவு கொண்டுவிட்டதால் பக்கத்தில் கிடந்த விளக்குமாரை எடுத்து சரமாரியாக தாக்கியவள் 

“ச்சீ நீயெல்லாம் ஒரு பொறப்புனு இன்னும் இந்த உசிர வச்சிக்கிட்ருக்க” 

“போய் நாண்டுக்கடா ஆயிக்கும் புள்ளக்கியும் வித்தியாசம் தெரியாத முண்டம்” 

“இப்பிடி நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு நாயி மாதிரி அலையிறியே ஒனக்கு வெக்கமா இல்ல”? 

“ஊரு மேஞ்சது பத்தாதுனு இப்ப இங்க வந்துட்டியா”

என்று அவனை அடித்து கோபத்தை தீர்த்துக் கொண்ட சம்பவம் என்னவோ முடிந்திருந்தாலும் அடிமனசில் அது பயமாக கவிழ்ந்திருந்தது. 

ஆனாலும் ஜென்சியை கண்டியில் உள்ள ஹோமுக்கு அனுப்பி விட்டால் நிம்மதி பெரு மூச்சு விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தாள் சகாயம். அன்று வானம் சகாயத்தின் மனசு போலவே அழுது வடிந்துக் கொண்டிருந்தது. 

பூனை அங்குமிங்கும் இருப்புக் கொள்ளாமல் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தது எப்படியும் விடிவதற்குள் குட்டிகளை ஈன்று விடும் என்று அம்மா வேறு உறுதியாகக் கூறிவிட்டார் உறுதியான கார்ட்போர்ட் பெட்டியினுள் கம்பளித் துணியையை போட்டுவைத்திருந்தார். சௌகரியமாய் அதற்குள் கிடக்கும் பூனை இப்போது வலி தாளாமல் “ம்மியாவ் ம்மியாவ்” என்று கத்தத் தொடங்கியிருந்தது. 

சகாயம் சில நாட்களாய் தூக்கத்தை தொலைத்திருந்தாள் 

வெறுமனே போதையோடு வந்து வீட்டை ரணகலப்படுத்திக் கொண்டிருந்தவன் இப்போது முழு போதையில் பொம்பள சகவாசத்திலும் மூழ்கிவிட்டதாகவும் ஊரில் பலவாறு கதை அடிப்பட்டது. அது சகாயத்தின் அடி வயிற்றில் புளியைக் கரைந்தது. போதையில் வந்து தள்ளாடும் ஜேசுமணியின் விரசப்பார்வைகள் ஜென்சியின் மீது அவப்போது விழும் போதெல்லாம் உள்ளுக்குள் ஆடிப் போனாலும் ஒரு போதும் நாகரிகம் கருதி அதனை வேறு யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை. பகல் முழுவதும் மலைகளில் சுற்றித் திரிந்தாலும் நினைவுகள் என்பது எப்போதும் ஜென்சியை சுற்றித்திதான் திரியும். இது இவ்வாறிருக்கவே ஜென்சியை கண்டி ஹோமுக்கு அனுப்புவதை எண்ணி மனசளவில் நொந்தும் கிடந்தாள் சகாயம். 

ஜென்சியின் பிரிவை எதிர்கொள்ள முடியாத அவள் வெறுமனே புரண்டு புரண்டு துாக்கத்தை தொலைத்து இரவுகளைக் கடத்திக் கொண்டிருந்தாள். 

மழை இடை விடாது பெய்துக் கொண்டிருந்தது. 

குப்பி லாம்போடு அப்பாயி கிழவி எழுந்து கானுக்கு செல்வதற்காக கதவைத் திறந்தப்போது கதவு கிரீச் என்ற சத்தத்துடன் ஆடிக்காற்றை உள் இழுத்துக் கொண்டது அப்போது அப்பாயி கெழவி போட்ட சத்தம் லயத்தை ஒரு உழுக்கு உழுக்கியது வாரி சுருட்டிக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்த சகாயம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் எதிர்பாராமல் கானில் வழுக்கி விழுந்த கிழவியின் மண்டையில் இருந்து ரத்தம் பீறிட்டுக் பாய்ந்துக் கொண்டிருந்தது. அடுத்த லயத்து அஜித் மல்லியின் ஆட்டோவில் கெழவியை அள்ளி போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் சேர்ந்தாள் சகாயம். 

அப்போதும் முழு போதையில் விராந்தையில் குப்புறக் கிடந்தான் ஜேசுமணி ஆடிக் காற்றுடன் மழை சீறி சீறி அடித்துக் கொண்டிருந்தது. 

பூனைக்கு நன்றாக வலி எடுத்திருக்க வேண்டும் 

குரலைத் தாழ்த்தி கத்தத் தொடங்கியிருந்தது. 

இன்னும் கொஞ்ச நேரத்தில் குட்டிப் போட்டு விடும் போய் பார்க்கலாம் என்று பேசாமல் இருந்து விட்டார் அம்மா. 

அனத்தலோடு கலந்த பூனையின் முனகல் அடங்கியிருந்தது. 

அடி வயிறு முட்டவே எழுந்து வந்து கானில் அமர்ந்து சாரத்தை விலத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஜேசுமணி அரை போதையை மூத்திரமாய் கழித்திருந்தான். 

குப்பி விளக்கு எண்ணையை இழந்து மங்கலாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. 

ஜென்சி ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தாள் 

விலகிக் கிடக்கும் பாவாடையில் இருந்து வெளிப்பட்டுக் இருக்கும் அவளின் பருத்த தொடைகளை கண்ட ஜேசுமணியினுள் ஒரு விதமான ஊர்தல் உயிர்த்துக் கொண்டது. 

யாருமற்ற தனிமை ஜேசுமணியை சூடேற்றிக் கொண்டிருந்தது. 

போதையோடு தள்ளாடி வந்தவன் ஜென்சிக்கு அருகில் படுத்துக் கொண்டான். அவனின் அனல் தெறிக்கும் உஸ்ண மூச்சு எண்ணைக்காகப் போராடிக் கொண்டிருந்த விளக்கின் உயிரைக்குடித்து ஏப்பமிட்டது. 

எங்கும் இருள் வியாபித்திருந்தது. 

விடியலில் பூனையும் குட்டிகளை தின்று தீர்த்திருந்தது. 

– வீரகேசரி

– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.

சிவனு மனோஹரன் சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *