அழுக்கு
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருள் எங்கும் வியாபித்திருந்தது. ஊசிப்பனி உடலை குத்தி வதைத்துக் கொண்டிருந்தது ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் குப்பைகளை ஈர்க்கியினால் கூட்டி ஒன்று திரட்டிக் கொண்டிருந்தான் மாயா. குவிந்திருந்த குப்பைகள் துர்நாற்றத்தைப் கிளப்பிக் கொண்டிருந்தன விடிந்தும் விடியாமலும் கிடந்த இருள் மெதுமெதுவாய் வெளுக்கத் தொடங்கியிருந்தது.
தொடை வரைக்கும் துாக்கிக் கட்டியிருந்த சாரத்தின் பிட்டப்பகுதியில் கைகளில் பிசுபிசுக்கும் அழுக்குகளை மீண்டும் மீண்டும் தேய்த்தப்படியும் இடையிடையே பிட்டத்தினுள் கையை விட்டு சொறிந்துக் கொண்டும் நின்ற மாயா குப்பை வண்டியை இழுத்து அருகிலே வைத்துவிட்டு மளமளவென குப்பைகளை அள்ளி வண்டியில் நிறைக்கலானான்.
அவன் ஒவ்வொரு முறையும் குனிந்து குப்பைகளை அள்ளும் போதெல்லாம் வீங்கிப் புடைக்கும் அவனது பருத்த தொடைகள் அவனின் உழைப்பாற்றலை படம் பிடித்துக் காட்டியது. நாசியை அறுக்கும் குப்பை நாற்றத்தால் நம நமக்கும் மூக்கினுள் சுண்டு விரலைப் விட்டு நோண்டிக் கொண்டே மழைக்கு மருந்தாய் காது மடலில் பத்திரப்படுத்தி இருந்த பீடித் துண்டொன்றை உதட்டில் பொருத்தி பற்ற வைத்தான் மாயா. அடி வயிறுவரை புகையை உள்ளிழுத்து ஆசுவாசப்பட்டுக் கொண்டப்போது கணிசமாய் குளிர் குறைந்து விட்டதாய் உணர்ந்தான்.
அப்போதும் மழை இடைவிடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றம் அவன் மூக்கை அறுத்தது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அழுக்குகள் படிந்து நிறம் மாறிப் போயிருந்த தோள் துண்டை தலையில் கட்டிக்கொண்டு, குப்பைகளை மளமளவென அள்ளி வண்டியை நிறைத்துக் கொண்டிருந்தான்.
அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி விட்டால் காலை ஆறு மணியளவில் நகரக் குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்தி விடுவான். அத்துடன் அன்றைய நாள் பணி முடிந்து விடும். அதற்கு பின் அவனை கையில் பிடிக்க முடியாது.
மீன் மார்க்கட்டுக்கு பின்னுள்ள முடுக்கு சந்தில் நண்பர்களோடு சூதாடுவதற்கு தொடங்கி விட்டான் என்றால் உலகத்தையே மறந்து விடுவான். இடையிடையே ஆங்காங்கு கிடைக்கும் சில்லறை வேலைகளுக்கான கூலிகள் பகல் நேர போதைக்கு இரையாகும். போதையில் வெறியேறிப் போயிருக்கும் கண்களில் சூதாட்டத்தின் தீவிரம் படிந்திருக்கும் இப்படித்தான் ஒருநாள் சூதாட்டக் களம் அவனை இன்னும் இன்னும் உசுப்பேத்திவிட்டதால் கையில் இருந்த காசெல்லாம் கரைந்த நிலையில் போதையோடு விறுவிறுவென வீட்டுக்கு வந்தவன் ருக்குவின் கழுத்தில் கிடக்கும் தாலியில் கை வைத்தப் போது ஆடித்தான் போனாள் அவள்.
“என்னாய்யா ஒனக்கு பைத்தியமா புடிச்சிருக்கு காது கையினு கையவச்சி வச்சிதான் இப்பிடி மூளி மாதிரி நிக்கிறேன் இப்ப இதுலயும் கையவெக்க வாறியா?” என்று புலம்பிக் கொண்டே எழுந்து அருகில் கிடந்த எச்சில் பணிக்கத்தில் இத்தனை நேரம் வாயிற் குதப்பிக் கொண்டிருந்த சலியை துப்பி விட்டு
“ஒன்னயெல்லாம் அந்தக் கடவுளே வந்தாலும் திருத்த முடியாது ஒழுங்கு மருவாதயா போயிரு இல்லனா நான் பொம்பளயா இருக்க மாட்டேன்” என கூறி முடிக்கும் முன்னமே தன் முரட்டுக் கையால் அவள் கூந்தலை கொத்தாகப் பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கினான் மாயா.
“ஆமா ஒங்கப்பன் வீட்டுல இருந்து அள்ளிக்கிட்டு வந்ததுபாரு அதுனால போட்டுக்கிட்டு லாத்துறதுக்கு குடுடி” என்று தாலியை உருவிக் கொண்டுப் போனபோது அவள் கழுத்தில் விழுந்த சிராய்ப்பில் ரத்தம் கசிந்து விட்டது. அப்போது ருக்கு தன் உயிரையே உருவிச் சென்றதாக உணர்ந்தழுதாள்.
அன்று சூதாட்டத்திற்கு ருக்குவின் தாலி இரையானது.
அன்றைய நாள் இழப்புக்கு இன்னும் இன்னும் போதை தேவையாகப்பட்டது போலும் மூச்சுமுட்டும் வரை குடித்துவிட்டு கள்ளுக்கடையில் ஊர் வம்பு இழுத்ததால் அன்றைய நாள் இரவை ஜெயிலில் கழித்திருந்தான் என்பது பழையக் கதை
பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது கூட தெரியாமல் தொடைக்கு மேல் விலகிக் கிடந்த சாரத்தையும் கவனியாது துாங்கிக் கிடந்தான் மாயா. சில நாட்களில் டவுனில் வேலை முடிந்தக் கையோடு நேரே அறுப்புசாப்புக்கு சென்று விடுவான் எப்போதாவது இப்படி வந்துப் படுத்தானென்றால் எழுப்புவதற்கு மாறடிக்க வேண்டியிருக்கும்.
“இஞ்சே இஞ்சே என்னாய்யா இப்பிடி மாடு மாதிரி துாங்கிற அறுப்பு சாப்புல இருந்து ஆளு வந்துருக்கு ஒன்ன கையோட கூட்டிக்கிட்டு வரசொல்லியிருக்காங்க” என்று அவன் முதுகுத் தண்டில் கையை வைத்து நெம்பிக்கொண்டே “எழும்புயா எழும்பி போய் தொல” என்றதும் மயிர்கள் அடர்ந்த தனது மார்பின் வலது பக்கத்தை தேய்த்து விட்டுக் கொண்டே
“அட இவ எவடி மனுசன நிம்மதியா துாங்க விட மாட்டிக்கிறா” என்று மீண்டும் குப்புறப்படுத்தவன் சில நிமிடங்களுக்குப் பின் என்ன நினைத்தானோ தெரியாது விலகிக் கிடந்த சாரத்தை கையில் பிடித்துக் கொண்டே எழுந்தோடி தயாரானான்.
“என்னடா மாயா நாளைக்கு அறுப்புக்கு ரெண்டு மாடு நிக்குது காலையில வெல்லனே வந்துரு”
“போய் தண்ணியப் போட்டுட்டு மாடாட்டம் கெடக்காத செல்லிட்டேன்” என்று மரிக்கார் நானா கூறியது இரவு ஏற்றிய போதையில் மறந்தே போயிருந்தது.
எழுந்த மாதிரியே ஓட்டமும் நடையுமாக அறுப்புசாப்பை வந்தடைந்தான் மாயா அப்போது
“என்னடா மசமசனு நிக்கிறெ துணியமாத்தி கிட்டு எறங்கி கூறப் போடு” என்றதும் சாரத்தை கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு காற்சட்டை பையினுள் கிடந்த என்ஸி டப்பாவில் இருந்தெடுத்த என்ஸிப் பொடியை நாக்கை உயர்த்தி அதன் அடியில் வைத்த கையோடு வெள்ளமென பாய்ந்தோடும் ரத்தத்தை விலத்திக் கொண்டு வந்து இறைச்சியை கூறு போடத் தொடங்கினான்.
பளபளக்கும் சூரிக்கத்தி இறைச்சியை கூறுபோட்டுக் கொண்டிருந்தது.
வழமையாகவே அறுப்பு சாப்பில் வேலை முடிந்த கையோடு கூலியையும் சேமன் இலையில் பத்திரப்படுத்தப்படும் இறைச்சி துண்டங்களையும் வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவான். அறுப்புசாப்பில் இருந்து ஒருபோதும் நேரடியாக வீடு சென்றதில்லை சந்தியில் உள்ள கள்ளுக்கடைக்குச் சென்று கழுத்துவரை போதை ஏற்றிக் கொண்டு சென்றால்தான் வீட்டில் ருக்குவிடம் ஆம்பிளைத் திமிரைக் காட்டமுடியும் என்று நினைத்துக் கொள்வான். மாயாவின் காலம் இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்தது.
எத்தனை மணியானாலும் கொண்டு வந்த இறைச்சியை வெறுமனே உப்பு போட்டேனும் அவித்துக் கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் அதில் இருந்துதான் சண்டையை ஆரம்பிப்பான் ருக்குவையும் சும்மா சொல்லக் கூடாது எது கேட்டாலும் செய்து கொடுத்து விடுவாள்.
கொஞ்ச நாட்களாகவே அடிவயிறு வின்வின்னென வலித்துக் கொண்டிருந்தது தன் இடக்கையில் இறுக்கமாய் அடிவயிற்றைப் பிசைவதும் விடுவதுமாய் இருந்தாள் ருக்கு வெளிய தெருவுக்கு கலாருனு போக முடியாத வலி ருக்குவின் இயல்புகளை பெரிதும் மாற்றியிருந்தது.
இத்தனை வலிகளோடும் கூட வேலைக்கு சென்று விடுவதால் உடல் இன்னும் பலவீனமாகியிருந்தது. நகர குடியிருப்பு பாதைகளை எல்லாம் கூட்டி சுத்தப்படுத்துவதோடு வீடுகளிலும் மிகுதி நேரங்களில் பத்துபாத்திரங்களை தேய்த்து வேலை செய்வதால் அடித்துப் போட்டாற் போல் உடலில் எப்போதும் அசதியிருக்கும் அந்த அசதியோடு வீடு வந்தாலும் மாயாவின் தேவைகளை நிறை வேற்றுவதற்கு அவள் பின் நின்றதில்லை நேரம் செல்ல செல்ல வயிற்றுவலி தன் தீவிரத்தைக் காட்டத் தொடங்கியிருந்தது மூன்று மாதமாய் தனக்கு தெரிந்த கை மருந்துகள் எல்லாவற்றையும் தின்று தீர்த்தாள் ருக்கு வலி மட்டும் குறைவதாய் இல்லை சீரகப் பருக்கைகள் சிலவற்றை வாயில் போட்டு சுடுநீரை ஊற்றிக் கொண்டப் போதும் உடல் சோர்ந்துப் போனதோடு மனசும் தளர்ந்திருந்தது.
துார்ந்துக் கிடந்த அடுப்பை மூட்டியதோடு கேத்தலை அடுப்பில் வைத்துவிட்டு கால்களை அகலவிரித்து குளிர்காயத் தொடங்கினாள் ருக்கு அப்போதுதான் முழு போதையோடு வீடுவந்து சேர்ந்தான் மாயா. வெந்ததை தின்றுவிட்டு வந்ததைப் பாடும் அவனுக்கு பணிவிடைகள் செய்வதைக் காட்டிலும் அவனோடு படுத்து எழும்பும் வாதையைதான் பெரிதும் அசௌகரியமாய் உணர்ந்தாள் ருக்கு. அவள் அனுமதிக்கிறாளோ இல்லையோ மாயா தயாராகிவிட்டால் இணங்கிப் போகவேண்டும் முழு போதையில் வந்தாலும் ருக்கு அவனுடன் படுத்தாக வேண்டும் இல்லையென்றால் போதையின் கோரப்பிடி உடலில் தழும்புகளைப் பதித்துவிடும் அதனால் மாயாவின் ஆம்பிளைத் தனத்திற்கு அதிகமாய் பயந்துப் போவாள்.
அன்று அவளுக்கு அடிவயிற்றில் புளிக் கரைந்துக் கொண்டிருந்தது போதை தந்த அசதியில் அப்படியே துாங்கி விடுவானானால் பரவாயில்லை என்று தோன்றியது
காலையில் பீலிக்கரையில் ராக்கு சொன்ன வார்த்தைகள் ருக்குவின் உள்ளத்தை அரித்துக் கொண்டே இருந்தது.
“ஏன்டி இப்பிடி சீக்கு கோழி மாதிரி இருக்கியே போயி மருந்து மாத்திர வாங்கி திங்கிறதுக்கு என்னா கேடா?”
“அட நீ வேற ஏன் என் வயித்தெரிச்சல கிண்டுற நானே புலி வால புடிச்ச எலி மாதிரி கெடந்து மாயுறேன்” என்றுக் கூறிக்கொண்டே தூரத்தில் பார்வையை நிலைகுத்தி நின்றவளுக்கு நிரம்பி வழியும் குடமும் கவனத்தில் விழவில்லை.
“இப்பிடியே கெடந்து வெனய இழுத்துக்காதடி”
“குடிகாரப் பயலுகளுக்கு வாக்கப் பட்டா இப்பிடித்தான் நாய் படாத பாடு படனும்”
“அடி பட்டே செத்துப் போயிறாத சொல்லிப்புட்டேன்”
“ஊருற உதிரமெல்லாம் இப்பிடி ஊத்தாப் பெருகுனா ஒடம்பு எப்பிடித் தேறும் போயி ஒழுங்கு மருவாதையா மருந்து எடு” என்று எச்சரித்தாள் ராக்கு.
நேரம் கரைந்துக் கொண்டிருந்தது
போதையோடு கழுத்துவரை உண்ட மயக்கமும் கலந்துவிடவே அதிரும் குறட்டையோடு நீட்டி நிமிர்ந்து .ஆறடி உயரத்தில் அரைப் பிணமாய் கிடந்தான் மாயா.
அடிவயிற்றில் கத்தி வைத்தாற் போல் வலி தீவிரமாகி இருந்தது வயிற்றைப் பிசைந்து பிசைந்து விடும் ருக்குவால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குளிர்ந்த தரையில் வயிற்றை வைத்தழுத்தி குப்புறப் படுத்துக் கிடந்தாள் கால்களை அகலவிரித்து நீட்டி நிமிர்த்தி நெட்டை முறித்தாள். சுருண்டு படுத்து முழங்கால்களை மடித்து அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தியும் பார்த்தாள். அப்போதும் வலி குறைவதாய் இல்லை. வலியை தாங்கமுடியாதவளாகி கேவிகேவி அவள் அழுதது இரவின் நிசப்தத்தில் தெளிவாகக் கேட்டப் போதும் மாயாவின் காதுகளுக்கு மட்டும் அது எட்டவில்லை.
சுருட்டி சுருட்டி வலிக்கத் தொடங்கிய வயிற்றுக்குள் அப்படி என்னத்தான் இருக்கிறதோ என்று அழுதோய்ந்தப் போது வயிற்றுக்குள் கிடந்தவைகள் எல்லாம் இரத்தத்துடன் கலந்து வாந்தியாகப் வெளியேறத் தொடங்கியிருந்தது. எழுந்து சென்று வாந்தி எடுப்பதற்கான திராணியை இழந்திருந்த ருக்கு படுக்கையோடு படுக்கையானாள். படுக்கையில் பரவியிருந்த வாந்தி வீச்சமெடுத்திருந்தது. இரவு முழுவதும் வலியால் துடித்தவள் விடியற்காலையில் அசந்து மயங்கியிருந்தாள்.
விடியலில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த நகரக் குப்பைகளோடு போராடிக் கொண்டிருந்தான் மாயா. வண்டி நிரம்பிய மகிழ்ச்சி உதட்டில் புகையாய் கரைந்துக் கொண்டிருந்தது. நகரின் அன்றைய நாள் அழுக்குகள் அவனால் அள்ளி முடிக்கப்பட்டிருந்தன. அவன் எண்ணங்கள் முழுவதும் 6.00 மணிக்குள் குப்பைகளை அள்ளி முடித்துவிட்டு அறுப்புசாப்புக்கு சென்று விடவேண்டும் என்பதாகவே இருந்தது.
அன்றும் பொழுது புலர்ந்திருந்தது.
போர்வைக்குள் ருக்கு உடல் விறைத்து கிடந்தாள்.
– சூரியகாந்தி
– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.
![]() |
சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 940
