காசி யாத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2025
பார்வையிட்டோர்: 847 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அடியே, சம்பந்திகளிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. காசி யாத்திரை முடிந்து வருகிறார்களாம்” என்று வாசுதேவையர் கையில் கார்டுடன் மனைவியின், முன் காட்சியளித்தார். 

“போனால் திரும்பி வரமாட்டார்களா என்ன? அதி சயம் போலச் சொல்லுகிறீர்களே! நாம்தான் போக வில்லை.போயிருந்தால் நாமுந்தான் இப்பொழுது திரும்பி யிருப்போம் ” என்று அவர் மனைவி காமாட்சி மனத்தாங் கலுடன் மொழிந்தாள். 

“இப்பொழுது என்ன முழுகிவிட்டது? இனிமேல் போகக் கூடாதா?” 

“ஆமாம்! கிடைத்த துணையை விட்டுவிட்டு இனிமேல் நாம் போகப் போகிறோம்! ஏன் அப்போது ஆக்ஷேபித்து ஒரே அடியாக மறுத்தீர்களாம்?” 

“எங்கேயாவது வைகாசி ஆனி மாதங்களில் காசி யாத்திரை செய்வார்களா? அங்கெல்லாம் 115 டிகிரி வெயில் மண்டையைப் பிளக்கும். அவரவர்கள் இருக்கிற இடத்தில் சௌக்கியம் செய்துகொண்டு இருக்க வேண் டியது போகப் புது இடத்தில் அலைந்து திரியக்கூடிய காலமா அது ?” 

“இப்படித்தான் வெயிலானால் வெயில், குளிரானால் குளிர். உங்களுக்கென்று குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் ஒரு காலம் ஏற்பட்டு நாம் போகிறபோது பார்த்துக்கொள்வோம். அண்ணா போனபோது வருந்தி வருந்திக் கூப்பிட்டான். அப்பொழுது க்ஷேத்திராடனம் செய்தால் மார்கழிப் பனியால் குளிரில் விறைத்துத்தான் சாகவேண்டுமென்று சொல்லிவிட்டீர்கள். அவனோ குஞ்சு குழந்தைகளோடு போய்ச் சௌக்கியமாகத்தான்
திரும்பி வந்தான். ‘தலைவலிகூட வரவில்லை’ என்றான். நாம் இவ்விதம் மீனமேஷம் பார்த்துக் காரியம் நடத் துவதற்குள் உலகமே அஸ்தமித்துத்தான் போகும்” என்று காமாட்சி வேகமாக அடுக்கினாள். 

“என்னடி, கைக்காசைச் செலவழித்துக்கொண்டு ஊர் சுற்றுவது பிரமாதமான காரியமோ? நடக்காது போலப் பெரிதாய் அடுக்குகிறாயே!” 

“உங்களுக்கு எதுதான் பிரமாதம்? இதுவரையில் என் இஷ்டத்துக்காக என்ன நடக்கிறது? நான் எதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்? இரண்டும் இல்லை. எட்டரை மணி ஆபீசுக்குச் சமைத்துப் போடுவதும் அவசர அவ சரமாகக் காரியம் செய்வதும் நித்தியம் ஒரு வியாதிக் குழந் தையுடன் இரண்டாம் பேரில்லாமல் போராடுவதும் இப் படியே என் காலம் போய்விட்டது.” 

இப்படி அவள் கூறவும் தாம் தம் குடும்பக் காரியங் களில் என்ன என்ன பங்கெடுத்துக்கொண் டிருக்கிறோம். என்ற நினைவு அவர் மனத்தில் தானாகவே உதித்தது. அவர் மனைவி சொல்வது போல் சதா ஒரு வியாதிக் குழந் தையுடன் அவள் மன்றாடுவாள். “அதன் உடம்பு என்ன? அது ஏன் அழுகிறது?” என்று பார்க்கக்கூட அவருக்கு நேரம் இராது. இரவில் பத்து மணி வரையிலும் ஆபீஸ் கட்டுகளைப் பார்த்து அலுத்து அவர் அயர்ந்து நித்திரை செய்யும்பொழுது குழந்தை கத்தித் தூக்கத்தைக் கலைக்கும். தூக்கத்திலும் விழிப்பிலும் மனைவி தொட்டில் ஆட்டுவ தையோ மருந்தோ பாலோ குழந்தைக்குப் புகட்டுவ தையோ அவர் பார்ப்பார். பிறகு பொழுது விடிந்து ஆபீஸ் போகும்பொழுது, “டாக்டரை வரச் சொல்லுங் கள் ! குழந்தை ராத்திரி முழுவதும் கண் மூடவே இல்லை என்று அவள் சொல்லும்போதுதான் அந்தக் குழந்தைக்கு. உடம்பு குணமில்லை என்று தெரிந்துகொள்வார். அந்தப் படி யே போகிற வழியில் டாக்டர் வீட்டில் இறங்கிச் சொல்லிவிட்டுப் போவார். அதற்கும் நேரமில்லை என்று தோன்றினால் பக்கத்து வீட்டுக் கோபாலனிடம் சொல்லி யனுப்புவார். 

இம்மாதிரி சில நாட்கள் டாக்டர் வந்துபோவார். அப்புறம் அக்குழந்தை டாக்டர் வரவேண்டிய அவசியம் இல் லாமலே தொல்லை மிகுந்த இவ்வுலகத்தை விட்டு நீங்கி விடும். பிறகு டாக்டர் வந்துபோன தடவைகளும் மருந்து கள் வாங்கின தடவைகளும் தெரியவரும். அவர் மனை வி மருந்து வாங்குவது முதலிய சகல வேலைகளையும் அடுத்த கத்துக் கோபாலனை விட்டே செய்துகொள்வாள். அவருக்குச் சிரமம் கொடுக்கக்கூடாது என்பது அவள் எண்ணம். 

காமாட்சி ஐந்தாறு குழந்தைகள் பெற்றாள்! ஆனால் வியாதிகளால் இறந்து போனதுபோக இப்பொழுது ஒரே பிள்ளை உயிருடன் இருக்கும் பாக்கியந்தான் பெற்றிருந் தாள். வீட்டுக் காரியங்கள் எல்லாவற்றிலும் வாசுதே வையர் மேற்கொள்ளும் பங்கு இவ்வளவுதான். கல்யா ணமோ வேறொன்றோ எதுவானாலும் சரி ; அவர் ஆபீஸ் போகாமல் வீட்டிலிருந்த நாட்கள்கூட வெகு சொற்பமே. இந்த ‘ஸெக்ரிடேரியட் ஆபீஸ்’ குமாஸ்தா உத்தியோகம் அவரை இவ்விதம் அடிமைப்படுத்தி யந்திரமாகச் செய்து விட்டது. ஏதோ அவரது மேற்பார்வையின்றியே அவர் மகன் படித்து, பாங்கி ஒன்றில் முப்பத்தைந்து ரூபாய்ச் சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்திருந்தான். வாசுதேவையர் முப்பத்தைந்து ரூபாயிலேயே ஆரம்பித்தவரானாலும் படிப்படியாக உயர்ந்து முந்நூறு ரூபாய்ச் சம்பளத்தில் ‘ரிடையர்’ ஆனவர். அவருக்கு நூறு ரூபாய்க்குமேல் பென் ஷன் வந்தது. அதை வைத்துக்கொண்டு பிள்ளையோடு பட் டணத்தில் ‘ஹாய்’யாக வசித்தார். வெகுநாள் இருந்து பழ கின ஊரைவிட்டுக் கிராமத்துக்குப் போக அவருக்கு மன மில்லை. அப்படியும் கிராமத்தில் போய்த்தான் அவருக்கு என்ன தெரியும்? 

தாய்தந்தையருக்கு வாசுதேவையர் ஒரே குமாரர். தினம் மகனை வேளைக்கு ஓர் அலங்காரம் செய்து பார்த்து ஆனந்திக்க அவர்களிடம் மிதமிஞ்சிய தனம் இல் லாவிட்டாலும் ஒரு வேலையும் செய்யவிடாமல் அருமை யாக வளர்த்தார்கள். அவருக்கு அதிகம் ஒன்றும் தெரி யாது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை.சிறுபிராயத்தில் தாய்தந்தையர் கவனித்துக்கொண் டார்கள் : பிறகு மனைவி ஏற்பட்டுவிட்டாள். 

“வாஸ்தவம், இவள் அடிக்கடி சொல்லிக் காண்பிப் பதுபோல் நமக்குக் காரிய நிர்வாகம் அவ்வளவாகப் போதாதுதான்!” என்று அவர் மனத்துக்குள் ஓர் எண் ணம் எழுந்தது. ‘அதற்குக் காரணம் என்ன?’ என்று அவர் இப்பொழுது சிந்திக்கத் தொடங்கினார். ” இதுவரை யில் நாம் குடும்பக் காரியங்களுக்குள் புகாமலே இருந்து விட்டோம். உத்தியோக நினைவாகவே இருந்ததில் வேறு காரியங்களுக்கு அவகாசமே ஏற்படாமல் போய்விட்டது. பாவம், க்ஷேத்திராடனத்தில் அவளுக்கு ஆசை என்னவோ அதிகந்தான். எப்படியும் அவளை அழைத்துத்தான் போ வது’ என்கிற திடசங்கல்பத்தைச் செய்துகொண்டார். 

இப்பொழுதுதான் மனைவியின் மனம் அவருக்குக் கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிவதாகக்கூடத் தோன் றிற்று. முன்னெல்லாம் ஒருவர் மனநிலையைப் பற்றிச் சிந்திக்க அவருக்கு அவகாசமே கிடையாது. வேலைத் தொந்தரவு அவ்வளவு. இப்பொழுதுதான் அவருக்குத் தம்முடைய வீட்டு விவகாரங்களெல்லாம் கண்ணில் பட்டன. பேரன், பேத்திகள்கூட எங்கும் இல்லாத அழகும் சாமர்த்தியமும் பொருந்திய குழந்தைகளா கத் தோன்றினார்கள். இவ்வளவு நாட்களாக அவர் காதில் விழாத அவர்கள் பேச்சும் விளையாட்டும் அவரை ஒருங்கே ஆச்சரியமும் ஆனந்தமும் கொள்ளச் செய்தன. தம் குழந்தைகளும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்று அவர் நினைத்தார். அவர்கள் வியாதியோடு கிடந் ததுதான் அவர் மனக்கண்முன் சிறிதளவு வந்ததே தவிர, வேறு அழகிய செய்கை எதுவும் நினைவிற்கு வரவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில்கூட ஆபீஸ் கட்டுகளுடன் தம் அறையில் அவர் உட்கார்ந்திருந்த பொழுது அவருக் குத் தொந்தரவாய் இராமல் இருக்க அவர் மனைவி குழந்தைகளை வீட்டில் விளையாடக்கூட விடமாட்டாள். அப்பா’ என்று அக் குழந்தைகளுக்கு அவரிடம் ஒரு சுவாதீனமும் இல்லை. அயலாரிடம் போலவே அவை களும் அவர் அருகில் வராமலே இருக்கும். அவைகளுக்கு நினைவு தெரிந்து தந்தையை அறிந்துகொள்ளுமுன் அவை களின் காலந்தான் முடிந்துவிடுமே ! 

அவர் மனம் பச்சாத்தாபத்தால் இளகியே போயிற்று. காசிப் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை அந்த நிமிஷமே செய்தால்தான் சிறிதாவது மனச் சமா தானம் ஏற்படுமென்று அவருக்குத் தோன்றியது. மத்தி யான்னமே வீட்டு உபாத்தியாயரை அழைத்துச் சமீ பத்தில் ஒரு நல்ல நாளாகப் பார்க்கும்படி சொன்னார். அவர், இன்று சனிக்கிழமை இன்றைக்கு ஆறாவது நாள் வியாழக்கிழமை நல்ல நாள் ; காலையில் புறப்பட லாம்; பரஸ்தானம் ஒன்றும் இல்லாமல் நேரே வீட்டி லிருந்தே புறப்படலாம்” என்று சொல்லிப் போனார். 

திடீரென்று நாலு நாட்களில் புறப்பட வேண்டும் என்ற தீர்மானமானது அவளுக்குக் கொஞ்சம் பட படப்பை உண்டுபண்ணிற்று. ஒருவரும் துணைக்கு வேண்டியதில்லை. ஊர் கூட்டுவதாயிருந்தால் காரியம் நடக்காது ” என்று ஐயர் தீர்மானமாகக் கூறியது அவ ளைத் திகைக்க வைத்துவிட்டது. வழியில் உள்ள ஸ்தலங் களைப்பற்றிப் பேசுவது, அடிக்கடி பலரிடம் சொல்வது, வேண்டியதைத் தயார் பண்ணுவது, இவ்வளவு ஆர்ப் பாட்டங்களுடனும் முன் ஏற்பாட்டுடனும் நடக்கவேண் டிய காரியம் அது. இப்போது திடீரென்று ஏதோ அடுத்த ஊருக்குப் போகிறது போலத் தீர்மானம் செய்தது அவளுக்குச் சற்றும் பாந்தமில்லாமல்தான் இருந்தது. 

சாயங்காலம் தம் பிள்ளை வரவே வாசுதேவ ஐயர் தமது தீர்மானத்தை அவனிடம் சொன்னார். அவன் என்ன சொல்லப் போகிறான்? ஆனால் அவர் தம் ஆபீஸில் தம் கீழ் வேலை பார்த்த கோபால் ராவைப் பார்த்து வருவதாகக் கிளம்பியபோது மட்டும், காலையில் பார்த்துக்கொள்ளலாமே அப்பா ! நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே? இப்போது இருட்டும் நேரமாகிவிட் டதே?” என்றான். 

“இப்போது வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. இன்று சனிக்கிழமை ; கோபால் ராவும் இப்போது ஆபீசி லிருந்து வந்திருப்பார். அவர் மைத்துனர்கள் இருவரில் பம்பாயில் ஒருவனும் டில்லியில் ஒருவனும் வேலையில் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கோபால்ராவை விட்டுக் கடிதம் எழுதச் சொன்னால் அங்கே போகும்போது
தங்குவதற்கு இடம் சௌகரியமாக இருக்கும் ” என்று சொல்லி வாசுதேவையர் புறப்பட்டார். 

பாதி வழி போன பிறகுதான் கோபால்ராவ் வீடு மாற்றியிருக்கும் விஷயம் நினைவிற்கு வந்தது. “அப் பொழுது அவரைச் சரியாய் விலாசம் கேட்டு வைத்துக் கொள்ளவில்லையே ! இப்பொழுது வீட்டை டைக் கண்டு பிடித்தாகவேண்டுமே” என்று பெருத்த யோசனை எழுந்தது அவருக்கு. 

‘புரசைவாக்கத்தில் அவர் முன்பு இருந்த இடத்தில் விசாரித்துப் பார்க்கலாமே, அதுதான் சரி’ எனறு நினைத்துப் பஸ்ஸை விட்டு இறங்கி, கோபால்ராவ் முன்பு இருந்த வீட்டை நோக்கி நடந்தார். 

சூரியன் அஸ்தமித்துவிட்டது. விளக்கு வெளிச்ச மும் அவ்வளவாகப் பிரகாசம் கொடுக்க முடியாத நேரம். வீட்டுப்படி ஏறவும் நாய் ஒன்று குரைத்துக்கொண்டு இவர்மேல் பாய வந்தது. பாவம்! தமக்கு ஏற்பட்ட கலவரத்தில் ரோட் ஓரம் இருந்த குப்பைத் தொட்டியில் மோதிக்கொள்ளும்படி – அதன் சமீபம் ஓடுகிறோம் என் பது கூடத் தெரியாது – வாசுதேவையர் ஓடினார். உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று காலில் சுருக்கென்று தைத்த தையும் அவர் தெரிந்துகொள்ளவில்லை. நாய் தம்மைப் பின் தொடரவில்லை என்பதையும் அவர் பிறகுதான். உணர முடிந்தது. 

சிறிது தூரம் ஓடின பிறகே ஓர் இடத்தில் நின்றார். மார்பு படபடத்தது. நிதானித்துக்கொண்டு, கால் வலிக்கக் காரணம் என்ன?’ என்று பார்த்தார். கண் ணாடித் துண்டு பொத்திருந்தது தெரியவந்தது. 

‘நாளைக்குத்தான் கோபால்ராவைப் பார்த்துக் கொள்ளவேணும். ஆபீஸிலேயே வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். இந்த ‘வீடு தேடும் வியா பாரமே வேண்டாம்’ என்று நினைத்து உடனே வீடு திரும்பினார். 

‘நடந்தது எதையும் நம் அகத்தில் சொல்லக்கூடாது. சொன்னால் அவன் உடனே, “நான்தான் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேனே” என்று ஆரம் பிப்பான். அவளோ இன்னும் ஏதாவது சொல்லத் தொடங்குவாள். அதற்கு இடங் கொடுக்கக்கூடாது என்ற தீர்மானத்துடன் வீடு சென்றார். 

நடக்கும்போதுமட்டும் கால் ஊன்ற முடியாமல் வலிக்கத்தான் வலித்தது. வீட்டில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கவேண்டி வலியைப் பொறுத்துக் கொண்டு நொண்டுவது தெரியாமல் நடந்தார். காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் நம்பினார். 

“கோபால்ராவிடம் சொன்னேளா? ‘எழுதுகிறேன்’ என்றாரா?” என்று அவர் மனைவி கேட்டுவிட்டு அவர் பதிலைக்கூட நின்று கேட்டுக்கொள்ளாமல் தன் காரியத்தில் ஈடுபட்டுவிட்டாள். காசி, பிரயாகை முதலிய இடங்களுக்குச் சென்றால் ‘போகிற வழி’க்கு என்ன என்ன தான தர்மங்கள் செய்யவேண்டும், என்ன என்ன ஊர்களை முக்கியமாகப் பார்க்கவேண்டும், மற்றும் என்ன என்ன தீர்த்தங்களில் ஒன்று விடாமல் ஸ்நானம் செய்து புண்ணிய மூட்டைகளைச் சம்பாதித்துக் கொள்ளவேண் டும் என்பனபோன்ற யாத்திரா மார்க்க விசேஷங்களை யெல்லாம் பக்கத்தாத்துப் பாட்டியம்மாளிடம் விசாரித் துத் தெரிந்துகொண்டாள். பிறகு அதற்கு இங்கிருந்தே தயாரிக்க வேண்டிய சாமான்களைத் தயாரிப்பதில் ஈடுபட் டிருந்தாள் காமாட்சி. பாட்டியம்மாள் வருஷக் கணக்கில் அங்கெல்லாம் யாத்திரை செய்து அதனால் பூகோள சாஸ்திரம் முழுவதும் தனக்குத் தெரிந்திருந்ததாகச் சொல்லிக்கொள்வாள். அங்கிருந்தவர்களும் அதை நம்பி ஏற்றுக்கொண் டிருந்தனர். ஆகையால் காமாட்சியும் அவளை விசாரிப்பதில் முனைந்திருந்தாள். 

வாசுதேவையர் குமாரனும் அவரை ஊன்றிக் கவ னிக்கவில்லை. ஆகையால் அவரை ஒன்றும் விசேஷமாகக் கேட்கவில்லை. 

காலையில் வாசுதேவையரால் எழுந்திருக்கவே முடிய வில்லை. இனி ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பதென் சாத்தியமில்லை என்ற நிலை வந்துவிட்டது. வலி அசாத்தியமானதோடு காய்ச்சல் வேறு இருப்பதாகத் தோற்றியது. இவ்விஷயம் காமாட்சிக்குத் தெரிந்த போது, “ஐயோ ! என்ன இது!” என்று அவள் கதி கலங்கிப் போனாள். ‘முதலில் இந்த அசட்டுப் பிராமணர் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக ஜுரத்தை வர வழைத்துக்கொண்டாரே! நாம் புறப்படுவதற்கு முன் குணமாக வேண்டுமே’ என்று எண்ணினாள். அவர் கால் சௌக்கியத்தைக் காட்டிலும் அவளுக்குக் காசி யாத்திரை ஞாபகம் அதிகமாக இருந்தது. 

டாக்டர் வந்து பார்த்தார். “கடுகளவு கண்ணாடித் துண்டு உள்ளுக்குள்ளே இருக்கவேண்டும். அதனால்தான் இவ்வளவு தொந்தரவு!” என்று சொல்லி அது பழுத்து வெளிவருவதற்கு மாவு வைத்துக் கட்டும்படி சொல்லி விட்டுப் போனார். 

வயசான தேகமாகையால் அவருக்கு வலி தாங்க முடியவில்லை. 

“கண்ணாடியா ? அது விஷமாச்சே! உள்ளே புரை ஓடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்று வந்தவர்கள் சிலர் சொன்னார்கள். வேறு சில அநுதாபி கள் அதோடு நிற்கவில்லை. இப்படிக் கண்ணாடித் துண்டு குத்திப் புண்பட்டவர்கள், நொண்டியானவர்கள், கால் வெட்டுப்பட்டவர்கள், உடலையே தியாகம் செய்தவர்கள் இவர்களுடைய சரித்திரங்களைச் சொல்லி விஸ்தரித் தார்கள். அவர்களுடைய வார்த்தைகளால் காமாட்சி நிலைகலங்கிப்போனாள். 

நான்கு நாட்கள் டாக்டர் மருந்து போட்டார். அவர், ‘பயம் வேண்டாம்’ என்று சொன்னாலும் இருப்பவர்கள் பயமூட்டினர். பழுத்துவிட்டது. நாளைக்கு ஆப் ரேஷன் செய்யவேண்டும்” என்று சொன்னார் டாக்டர். 

காமாட்சிக்கு இப்போது காசியின் ஞாபகம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அல்லும் பகலும் தன் கணவர் கால் சொஸ்தமாக வேண்டுமே என்ற கவலையிலே மூழ்கி யிருந்தாள். 

ஐந்தாவது நாள் காசி யாத்திரை புறப்படுவதற் காகக் குறிப்பிட்டிருந்த நாள். அந்த நல்ல நாளிலே எந்த நல்ல வேளையிலே புறப்படுவதாக நிச்சயம் செய்திருந்தார் களோ அதே வேளையில் ஸ்ரீமான் வாசுதேவையருடைய காலில் டாக்டர் ‘ஆபரேஷன் ‘ செய்து கண்ணாடித் துண்டை வெளிப்படுத்தினார். டாக்டர் கட்டுக் கட்டி விட்டு, உள்ளுக்கும் மருந்து கொடுத்தார். அதன் பிறகே ஐயருக்கு வலி நீங்கிக் காய்ச்சலும் குறையத் தொடங்கி யது. அவர் கால் புண் ஆறவே காமாட்சியின் முகத்தி லும் மலர்ச்சி உண்டாயிற்று. 

காசி யாத்திரைக்கு வழி சொன்ன பாட்டி வந்தாள். “என்ன பாட்டி ! நீங்களும் எவ்வளவோ சிரத்தையாக எல்லாம் எடுத்துச் சொன்னீர்கள் ! எனக்கும் ஆசை யாகத்தான் இருந்தது. எதற்கும் பிராப்தம் வேண்டாமா?” என்றாள் காமாட்சி. 

“அசடே! காசி யாத்திரை போகாவிட்டால் போகி றது. உன் அகத்துக்காரர் இந்த மட்டும் தப்பிப் பிழைத்தாரே, அதே பெரிது” என்று ஆறுதல் சொன்னாள் பாட்டி. 

காமாட்சியின் ஆவல் நிறைவேறவில்லை. தம்முடைய சாமர்த்தியத்தைக் காசி யாத்திரையில் காட்டவேண்டு மென்றிருந்த வாசுதேவையரின் ஆவலும் நிறைவேற வில்லை. 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *