வெட்கத்தின் பக்கம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 10,963 
 
 

காலை எழுந்ததும் தன் வீட்டின் மொட்டை மாடியில் போய் அமர்ந்து கொண்டு கீழே பாதையில் போவோர் வருவோரின் செயல்களை உன்னிப்பாக கவனித்தான் புத்திசாலியான மிகிலன்.

ஒவ்வொருவரும் வாகனங்களில் வேகமாகப்போகும் போது அவர்களில் பெரும்பாலானவர்கள் பணம் சேர்க்கும் நோக்கோடு பயணிப்பதாகவே பட்டது. கணவன் பின்னால் அமர்ந்து செல்லும் மனைவி கூட கணவனைத்தொடாமல் வெறுப்புடன் இடைவெளி விட்டு அமர்ந்து செல்வது போலிருந்தது. 

‘ஏன் விருப்பின்றி வெறுப்புடன் இவ்வாறு பரபரப்பை வெளிப்படுத்தி மன சாந்தமின்றி மக்கள் அலைகின்றனர்? பறவைகள் தனக்கான உணவைத்தேடி வானத்தில் ஜோடி, ஜோடியாகப்பறக்கின்றன. கூட்டம், கூட்டமாக ஒற்றுமையாகப்பறக்கின்றன. அதில் நேர்த்தி, ஒழுங்கு, மகிழ்ச்சி வெளிப்படுகிறது. மனிதர்களிடத்தில் பொறுமையற்ற, பொறாமையுடன் கூடிய, சக மனிதர்கள் மீது வெறுப்பை உமிழும் நிலை ஏன்?’ என அவனது மனம் அவனிடமே பல கேள்விகளைக்கேட்டன.

‘மணியும், நிமிடமும், நொடியும் காட்டும் கடிகாரமும், நாளும், வாரமும், வருடமும் காட்டும் காலண்டரும், படிப்பும், வேலையும், பதவியும், பணமும் இல்லாமலிருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் நினைத்ததை அடைந்து, நிம்மதியாக மன நிறைவாக மகிழ்வுடன் வாழ்ந்திருப்பார்கள். ஆராய்ச்சிகளும், விஞ்ஞான வளர்ச்சியும் இயல்பு வாழ்வை பாதிக்கக்கூடிய காரணிகள்’ எனும் வித்தியாசமான, தற்கால வாழ்க்கை முறைக்கு மாற்றான சிந்தனை ஓட்டத்திலிருந்தான்.

நன்றாகப்படித்ததில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விட்டது. சொந்த வீடும் இருபது வருடக்கடனுக்கு வங்கியில் கடன் போட்டு தனக்கென தனியாக வாங்கியாகி விட்டது. காரும் கடனிலேயே வீட்டின் முன் நின்றது. இனி பெண் பார்க்க வேண்டும். மேட்ரி மோனிகள் காளான்களைப்போல தெருவுக்குத்தெரு அல்ல, செல்போனிலேயே இணையதளத்தில் வலம் வருவதோடு, ஒரு நாளைக்கு ஒருவராவது அழைத்து பணம் கட்டச்சொல்வதும், கட்டிய பின் மேலும் பணம் பெறும் நோக்கில் பல திட்டங்களைச்சொல்வதுமாகச்செல்கின்றதே தவிர ஒரு பெண்ணைக்கூட நேராக சந்தித்துப்பேசும் நிலை வரவில்லை. அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை.

நகரங்களில் மனங்களைச்சந்திக்க யாரும் முயல்வதில்லை. பணங்களைச்சந்திக்கவே முயல்கின்றனர். பண வசதியைப்பார்ப்பவர்கள் மன வசியத்தைப் பார்ப்பதில்லை. உயரத்திலிருப்பவர்களைப் பார்ப்பவர்கள் உறவிலிருப்பவர்களைப் பார்ப்பதில்லை. படிப்பைப் பார்ப்பவர்கள், பண்பைப் பார்பதில்லை.

பெண்களில் பலர் படித்தால் போதாது, வேலை அமையட்டும் என மணம் முடிக்க சம்மதிக்காமல் காத்திருக்கின்றனர். வேலை அமைந்த பின் அதிகமான வசதியுள்ள வரன்கள் கிடைக்குமென பல வருடங்கள் காத்திருக்கின்றனர். ‘பருவத்தே பயிர் செய்’ எனும் பழமொழியை மறந்து முப்பது, நாற்பது என வயதுகளைத்தொலைத்து விட்டு, முடிவில் மணம் முடிக்க சம்மதித்து, தம்பதிகள் இரண்டு பேரும் சம்பாதிக்கும் பணத்தைக்கொட்டி வாரிசுகளை டெஸ்ட்டியூப் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

“ஊரோட ஒத்து வாழ்னு பெரியவங்க சொல்லுவாங்க. உன்ற ஒருத்தனால இந்த உலகத்த மாத்திப்போட முடியுமா? இப்படியே போச்சுன்னா ‘பையன் மெண்டல்’ னு ஆரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. பத்துப்பேர் வாழற எடத்துல அவங்க எல்லாரும் பண்ணற தப்புங்கூட சரி தான். அதை நாமும் எதிர்க்காம ஒத்துக்கனம். தனி ஒருத்தன் சொல்லறது சரின்னாலும் தப்புத்தான்னு பத்து பேர் சொன்னா அது தப்பாயிடும். விவசாயிகளான உன்னோட அம்மா வீட்டுக்குப்போனா ஆடு, மாடு, நெல்லு, வயலப்பத்திதான் பேசனம். என்னோட ஆபீஸ் வேலையப்பத்தி சொன்னா அவங்களுக்குப்புரியாது. அதப்பேசற என்னையும் புடிக்காது” தந்தை ரகுவரனின் பேச்சை உள்ளபடியே ஏற்க இயலாவிட்டாலும் ஒரு சராசரி மனிதனின் உள்ளத்தின் வெளிப்பாடாகவே பார்த்தான்.

அப்பா, ‘அம்மாவின் வீடு’ எனச்சொன்னது மிகிலனுக்கு சிறு வயதில் வாழ்ந்த பசுமையான கிராமம் ஞாபகத்துக்கு வந்தது. அங்கு சென்று பல வருடங்களாகி விட்டதால் அத்தை, மாமா, சித்தப்பா என ஒருவரது முகமும் தற்போது ஞாபகம் வர மறுத்தது.

‘பிரதிபலனை எதிர்பார்க்காமல் அவர்கள் பிறர் மீது செலுத்தும் அன்புக்கு இணையானது எதுவும் இல்லை. கிராமத்தில் வாழ்ந்த அம்மாவால் இதுவரை அப்பா பிரச்சினைகளை ஒருநாளும் சந்தித்ததே இல்லை. அதிகம் படித்த சாமார்த்திய சாலிகளை விட, குறைவாகப்படித்த சாதுவானவர்கள் மேலானவர்கள். படித்த தம்பதிகள் வீடுகளிலிருந்து வெறுப்பான பேச்சின் சத்தங்களே வெளியே கேட்கின்றன. அன்பினால் ஏற்படும் அமைதியும், சாந்தமும் எங்கும் நிலவவில்லை. நாமும் ஏன் நம் அப்பாவைப்போல வாழ்க்கைத்துணையை கிராமத்தில் தேர்ந்தெடுக்கக்கூடாது?’ எனும் சிந்தனையோட்டம் மேலோங்கியது.

திருவிழாவிற்கு பத்திரிக்கையனுப்பி அழைத்ததால் கிராமத்திலுள்ள தனது தாயின் சகோதரனான மாமன் மாறன் வீட்டிற்கு தாய், தந்தையுடன் செல்லப்போகிறோம் என நினைத்ததும் மனம் குதூகலமடைந்ததை உணர்ந்தான். ‘அங்கிருக்கும் பலரின் முகங்கள் நமக்கு தற்போது அடையாளம் தெரியாது. பேசி, கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும். எப்படியும் ஒரு வாரமாவது தங்கி நமக்கான கிராமத்து தேவதையை கண்டு பிடித்து விட வேண்டும்’ என மனம் இரவில் அவனது உறக்கத்தைக்கெடுத்தது. 

கிராமத்தை சென்றடைந்தபோது மாமன் வீட்டினர் மட்டுமில்லாமல் சுற்றிலும் உள்ள வீடுகளைச்சேர்ந்தவர்களும் தங்களது காரைச்சுற்றி நின்று பெற்றோரிடம் நலம் விசாரித்ததோடு மிகிலனையும் வியப்புடன் பார்த்தனர்.

“என்ன கோகிலா…. இந்த அத்தைய வருசத்துக்கு ஒருக்காக்கூட வந்து பார்த்துட்டு, பேசி வெச்சுட்டு போக மாட்டியா….? ” எனும் பாசமான கேள்வி மிகிலனை ஆச்சர்யப்படுத்தியது. இதற்கு வயதான அப்பெண் அவனது தாயின் சொந்த அத்தை கூட இல்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் வேறு மொழி பேசும் குடும்பம் தான்‌. நகர வாழ்வில் உறவுகளே கண்டு கொள்ளாமல் வாழும் போது, கிராமத்தில் இப்படியொரு வகையான உறவு முறை சொல்லி அழைக்கும் பழக்கம் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது.

மாமன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் கொலுசு சத்தம் காதுகளைக்கவர்ந்தது. ஓர் இளம் வயது பெண் மிகிலனைக்கண்டதும் வெட்கப்பட்டு சமையலறைக்குள் ஓடியது ஆச்சர்யமாக இருந்தது. இந்த நவீன காலத்திலும் பாட்டி காலத்துப்பெண்களா? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதை கதைகளில் மட்டுமே படித்தவனுக்கு நேரில் பார்த்தது போக, அப்பெண் கட்டியிருந்த பாவாடை, தாவணி அவனை வெகுவாக கவர்ந்தது. 

காஃபி தட்டைக்கொண்டு வந்து நீட்டும் போது கூட அவனது முகத்தை அப்பெண் நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும் அவளது பெயர் ‘அபி’ என்பது ஞாபகம் வந்தது. சிறு வயதில் அவளுடன் விளையாடிய காட்சிகள் ஞாபகம் வந்தன. 

“ஏய்… அபி….” என்றவனை உற்றுப்பார்த்து முறைத்தவள், “போடா…” என கூறி விட்டு விருட்டென சென்றதும் அதிர்ந்து போனான். ‘அத்தான்’ என அன்பாகப்பேசுவாள் என எதிர்பார்த்து வந்தவனுக்கு ‘போடா’ எனும் வார்த்தை அதிர்ச்சியைக்கொடுத்தது.

“மிகி அவள தப்பா நெனைச்சுக்காதே…. அவ உனக்கு முறைப்பொண்ணு. ரொம்ப வருசமா அவள பார்க்க நீ வராததுனால கோபமா இருக்கா..‌.” என தாய் கோகிலா சொன்னதும் சாந்தமானான். தனது தாய் கூட சில சமயம் தந்தை ரகுவரனை கோபத்தில் அன்பாக ‘போடா…’ எனச்சொல்வதை ஞாபகப்படுத்திக்கொண்டான்.

அபி என்கிற அபிராமி மிகிலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் பல வரன்களை நிராகரித்தவள். ‘மிகி வேண்டாம் என கூறிவிடுவானோ….?’ எனும் கவலையிலும் இருப்பவள். 

மிகி நகரத்தில் வாழ்பவன், அழகானவன். நன்கு படித்து வேலையில் இருப்பவன். மாடி வீட்டில் குடியிருப்பவன். எங்கும் காரில் செல்பவன். அபிக்கு பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பு பிடிக்கவில்லை. வசதியும் மிகவும் குறைவுதான். இன்றும் பழைய காலத்து ஓட்டு வீடுதான். ஆனால் சமைப்பதில் கெட்டிக்காரி. அவள் சமைத்தால் ஊரே மணக்கும். பசியடங்கிய பின்னும் சாப்பிடத்தோணும்.

காஃபி கொடுத்தது போக அடுத்தடுத்து பலகாரங்களை சுடச்சுட கொண்டு வந்து வைக்கும் போதெல்லாம் அத்தை, மாமாவைப்பார்த்து சிரிப்பதும், மிகிலனைப்பார்த்து முறைப்பதுமாகவே இருந்தாள் அபி. 

அவளது செயலால் கடுப்பானவன் பஜ்ஜி வைத்துச்சென்றவளை திடீரென எழுந்து சென்று அவளது கையைப்பிடித்து நிறுத்தினான். அவள் அவனிடமிருந்து விடுபடத்திமிறினாள். பின் விட்டு விட்டான். இந்த நிகழ்வை அவளது பெற்றோர் உள்பட அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்து சிரித்தனர்.

மிகிலன் வேண்டுமென்றே “நான் புறப்படுகிறேன். நீங்க வேணும்னா திருவிழா முடிஞ்சு வாங்க” என பெற்றோரிடம் சொல்லி விட்டு எழுந்ததை கதவின் இடுக்கிலிருந்து கவனித்தவள், கொலுசு ஒலிக்க ஓடி வந்து அவனது கைகளை உடும்பாகப் பற்றிக் கொண்டாள்.

“நான் விட்டாத்தானே போவீங்க. நீங்க எங்க வீட்டுக்கு வந்த மாதிரி நான் உங்க வீட்டுக்கு வர வேண்டாமா…? கோவில் திருவிழா முடிஞ்சுதான் போகோணும். போகும் போது நானும் உங்க கூட வந்து கோகிலா அத்தைக்கு ஒரு மாசமாச்சும் வீட்ல எந்த வேலையும் செய்ய விடாம உட்கார வெச்சு பிடிச்சதெல்லாம் சமைச்சு போடப்போறன். நம்ம பாட்டி சின்ன வயசுலயே இறந்து போனதுனால உங்க அம்மா, என்னோட கோகிலா அத்தை தான் என்னோட அப்பாவுக்கு சின்ன வயசுல நல்லா சமைச்சுப்போட்டிருக்காங்க. அதுக்கு கைமாறு நாஞ்செய்ய வேண்டாமா?” என கூறிய தனது சகோதரன் மகளான அபிராமியை எழுந்து சென்று கட்டியணைத்து உச்சி முகர்ந்தாள் மிகிலனின் தாய் கோகிலா.

பணத்தகுதி, படிப்பு தகுதி, அழகு, அறிவு அனைத்தையும் வெள்ளந்தியான அவளது அன்பு வென்று விட்டதை உணர்ந்த மிகிலன், தாம் விரும்புகிறவளை விட தம்மை விரும்புகிறவளை வாழ்க்கைத்துணையாக்குவதே மேல் என புரிந்தவனாய் “ஒரு மாசம் என்ன? நிரந்தரமா எங்களோடையே தங்கிக்கலாம்” என சொன்னதை புரிந்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிய அபிராமி, ஓடிச்சென்று தான் செய்த ஒரு லட்டை எடுத்து வந்து மிகிலனின் வாயில் திணித்தாள். அப்போது வெட்கத்தால் அவளது முகம் கோவைப்பழம் போல் சிவந்தது!

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *