பொல்லாத மனசு





(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிறந்த சிறுகதை என்பது எது?

ஒரு கதையைப் படித்து முடித்ததும், அது வாசகனின் உள்ளத்துக்கு மகிழ்ச்சி தந்தால், உடனே மறந்து போகாமல் ஒரு குறிப்பிட்ட கால உஅளவுக்காவது அவன் நினைவில் நின்றால், அதே கதையை மீண்டும் படிக்க வேண்டும் என்னும் விழைவை உண்டாக்கினால், அதைச் சிறந்த சிறுகதையாக ஏற்கலாம்.
இந்த இலக்கணத்துக்கு முற்றிலும் பொருந்திய சிறுகதையே கலைமாமணி விக்கிரமன் வழங்கிய பொல்லாத மனசு’.
கதை நிகழும் இடம் காவிரிக்கரை ஓரத்தில் உள்ள ஊர். அங்கே பழனியம்மாள் என்னும் பருவப் பெண்ணுக்கும், பூசாரியான சின்னக் கவுண்டனுக்கும் காதல், சாதியில் – பொருள் வசதியில், பொருந்தாக் காதல் இது என்று ஊர்ப் பஞ்சாயத்து எச்சரித்தும் காதலர் புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்லாமல் ‘கருமமே’ கண்ணாய் இருந்ததால், சின்னக் கவுண்டனின் பூசாரி வேலை போச்சு! இவையெல்லாம் உண்மைக் காதலைப் பாதிக்குமா? காதல் மட்டும் நின்று போகாமல் வளர்ந்தது.
ஒருநாள் பழனியம்மாளுக்காக நாகலிங்கப் பூ பறிக்க மரத்தில் ஏறி, கிளை முறியக் கீழே விழுந்து கை முறிந்தது, சின்னக் கவுண்டனுக்கு. அவன் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது, பழனியம்மாளும் அவனுடன் வந்து அவனைக் கவனித்துக் கொண்டாள்
அடுத்தக் கட்டிலில் இருந்த சாமி, இவரையும் கணவன் – மனைவி என்று நினைக்க, கவுண்டன் தன் கதையைக் கூறி, பழனியம்மாள் மனைவியல்லள் காதலி; ஆனால் இனி மனைவியாவாள் என்பதை உறுதியுடன் கூறுகிறான்.
பூசாரி வேலை போகும் என்று எச்சரித்த பின்பும் அதைப்பொருட் படுத்தாமல் காதலில் ஆழ்ந்தமைக்குக் காரணம் தன் ‘பொல்லாத மனசு’ என்கிறான் கவுண்டன்.
அந்த பொல்லாத மனசு, சரியாகி வெளியேறிய பிறகு திருத்தணியிலே பழனியம்மாளைத் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தீட்டுகிறது.
கடைசி வரை காதலியை கைவிடாத தன் நல்ல மனசைப் ‘பொல்லாத மனசு’ என்று அவன் கூறுவது எவ்வளவு பொருத்தம்!
விக்கிரமனின் கதாநாயகன் கிராமத்தான் அவன் காதல், ஒருவகையில் காதலுக்காக அரசைத் துறந்த எட்வர்டு காதல் போன்றது என்று போகிற போக்கில் உணர்த்துவது கதையின் சிறப்பு அம்சம்.
காதலால் சாதாரண மனசு பொல்லாத மனசாகி, பல நல்ல வசதிகளைத் துறப்பதில், அரசனும் ஆண்டியும் ஒன்றே என்கிற உயர்ந்த தத்துவத்தை இக்கதையில் அருமையாய் விளக்கியிருக்கிறார், ஆசிரியர்.
இந்தக் கதை படிக்கும் வாசகனை மகிழ்வித்து, அவன் மனத்தில் பதிந்து மீண்டும் அசை போடச் செய்யும் ஆற்றல் உடையது. அதனால்தான் கதை எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகும் நூலாகும் சிறப்பும் பெற்றுள்ளது.
– டாக்டர் பூவண்ணன்
பொல்லாத மனசு
ஜெரனல் ஆஸ்பத்திரி ‘கிளைவ் வார்டில்’ மணி எட்டடித்தது. ஆஸ்பத்திரி ஓரமாக ஓடும் மின்சார ரயிலின் ‘கடபுடா’ ஓசையைத் தவிர வேறு சந்தடியின்றிப் பயங்கர மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த பார்டில் எப்போதாவது சிலர் இருமும் ஒலி மௌனத்தைக் தலைக்கும். அதுபோன்ற சமயங்களில் என் உறக்கம் குலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்வேன். மங்கலான வெளிச்சத்தில் அடுத்த கட்டிலில் தளைப்பு தீர, சின்னக் கவுண்டன் பீடி பிடித்துப் புகையை ரகசியமாக வீட்டுக் கொண்டிருப்பான். கீழே அவன் மனைவி, துணைக்காக அத்தவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாள்.
இருபதாவது நூற்றாண்டு முதிர முதிர புதுப்புது வியாதிகள் விதனுக்கு உண்டாவது போல் எனக்கும் முழங்காலில் எலும்பு சம்பந்தமாக ஏதோ பெயர் கொடுத்து ஆபரேஷன் செய்ய ‘கிளைவ் வார்டில்’ கிடத்தினார்கள். வந்து மூன்று நாள்களுக்குள்ளேயே ஆஸ்பத்திரி வாழ்க்கை போதும் போதும் என்றாகி விட்டது.
பக்கத்துப் படுக்கையில் சின்னக் கவுண்டனும் அவன் மனைவியும் இல்லாவிடில் நிச்சயம் பைத்தியம் பிடித்த நிலைதான் எனக்கு வந்திருக்கும். “சாமி என்ன வேணுங்க… வலிக்குதா?” என்று அன்பாகக் கேட்பாள். பகல் வேளைகளில் அவன் மனைவி அன்பாக உபசரணைகள் செய்வாள். மணி ஐந்தானதும், எங்கள் வீட்டிலிருந்து மதிப்புக்காகவேணும் வந்து பார்த்துச் செல்பவர்களுக்கும், எந்நேரமும் அணவனுடனேயிருந்து ஆஸ்பத்திரியில் கணவன் படும் வேதனையில் பங்கு கொள்ள வந்திருக்கும் சின்னக் கவுண்டன் மனைவியைப் பார்க்குந்தோறும் ‘இதல்லவா உண்மைத் தொண்டு!’ என எனக்குத் நளாயினி நோன்றும். பேச்சு வாக்கில், “கவுண்டா… கண்ணகி, என்றெல்லாம் ஏட்டில் படித்திருக்கிறோம். இங்கே கண்கூடாக உன் மனைவி இருக்கிறாளே? ஊரிலிருந்து உன்னுடன் ஆஸ்பத்திரிக்கு வந்து இரவு பகல் கண்விழித்து ஒத்தாசை செய்ய வேண்டும் என்று உன் மனைவிக்கு என்ன அக்கறை? எங்கள் வீட்டில் சாயங்காலம் ஐந்து மணிக்கு பிளாஸ்கில் காப்பியுடன் முகத்தில் பவுடர் பூசிப் பொட்டிட்டுக் காட்சி சாலையில் பார்க்க வருபவர்கள்போல் வந்துவிட்டு முதலைக் கண்ணீர் விட்டுப் போகிறார்களே” என்றேன் நான்.
தலையணையில் சாய்ந்து படுத்திருந்த கவுண்டன் நிமிர்ந்து உட்கார்ந்தான். முறுக்கி விடப்படாமல் தாழ்ந்து அடர்ந்து இருக்கும் மீசையும், கூரிய கண்களும், வெட்டி விடப்பட்ட தலை மயிருமுடைய சின்னக் கவுண்டனின் உருவம் காண்போரைக் கவரும்.
“சாமி, என்ன சொன்னீங்க… இரவு பகல் கண் விழித்து ஒத்தாசை செய்ய வேண்டும் என்று மனைவிக்கு என்ன அக்கறை என்றீங்களே! ரொம்ப சரி அது. மனைவிக்கே அக்கறை இல்லைன்னா மற்றவங்களுக்கு என்ன அக்கறை? இவ இன்னும் மனைவியாகல்லை… அக்னி சாட்சியா தொட்டுத் தாலி கட்டலை… அவள் மனசின் காரணமாக இப்படி என்னுடன் கஷ்டப்பட வேண்டும் என்றிருக்கிறது. என்னதான் சொல்லுங்க, எல்லாத்துக்கும் இந்தப் பொல்லாத மனசுதான் காரணமுங்க” என்று கூறிவிட்டு இருமினான் கவுண்டன்.
மனைவியில்லையா அவள்? பின் யார்? இவ்வளவு அக்கறையாகப் பணிவிடை புரியும் ‘பிறர்’ கூட இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என்று எண்ணி ஆவலுடன் மேற்கொண்டு செய்தியை எதிர்பார்ப்பவன் போல் கவுண்டன் முகத்தைப் பார்த்தேன். என் குறிப்பை அறிந்து கொண்டவள் போல் சின்னக் கவுண்டன் மேற்கொண்டு தன் மனத்தில் இருப்பதை என்னிடம் கொட்டி விடத் துணிந்தவன் போல் மெல்ல எழுந்து என் படுக்கையருகேயுள்ள ஸ்டூலில் வந்து உட்கார்ந்தான். அனைவரும் உறங்கும் வேளையில் உரக்கப் பேசி பிறர் தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என்ற எண்ணம் போலும்.
என் கால் வலியையும் ஒருமணி நேரம் மறந்திருக்கலாமென்று எண்ணினேன்.
“சாமி இவ என்னோட மனைவின்னு…கட்டினபொண்டாட்டின்னு தான் இதுவரை நினைச்சிருப்பீங்க. இப்ப நான் அப்படி இல்லைன்னு சொல்லலை. ஆனா, கலியாணம்னு ஒரு சடங்கு இருக்கே! ‘மஞ்சள் கயிற்றை’க் கழுத்தில் முடிச்சுப் போட்டால்தான் உண்மைக் கணவன் – மனைவின்னு நாடு சொல்கிறது. ஏடு அப்படியே எழுதியிருக்கிறது. எங்களைப் போல் இப்படியிருந்தாலோ ‘ஓடி வந்தவர்கள்’ என்று கூறுகிறது சமூகம்.
“ஓடி வந்தவர்களாயிருந்தால் பரவாயில்லை சாமி! முற்றும் துறந்தவர்களாகி விட்டோம். இருவருக்கும் வாழ்க்கையில் வெறுப்பு ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. வாழ்வில் இன்ப துன்பங்களைத் துறந்து டவில்லை. ஆனால், எனக்காக அவள் பிறந்த வீட்டுச் சுகங்களையும் இஞ்சக்காணியையும், அவளுக்காக நான் தொழிலையும் பிறர் அன்பையும் துறந்து விட்டோம். சாமி! காதலுக்காக ராஜ்யத்தைத் துறந்தார் எட்வர்டு ராஜான்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, ‘தாதல்’னா என்னன்னு எங்களுக்குத் தெரியாது. எல்லாம் ஏட்டில் படிச்சதுதான். நானாவது எட்டாவது வரை படிச்சிருக்கேன். ஆனா, அவ அது கூடப் படிச்சதில்லை. இயற்கையா எங்க மனசு ஒண்ணுபட்டுட்டுது.
“இவ பெயர் பழனியம்மா. கவலையாலும் வேளா வேளைக்குச் சரியான சாப்பாடு இல்லாமையாலும் இப்போ வாடி வதங்கியிருக்கா. கொழுகொழுன்னு ராசாத்தி மாதிரி என் கண்ணுக்குப் படுவாள் அப்போ. எங்க ஊருக்குப் பக்கத்திலே காவிரிக் கரை ஓரமா சின்ன ஊர் இண்ணு இருக்குங்க. அதான் சாமி எங்க பரம்பரை ஊர். ஊர் மாரியம்மன் கோயிலுக்குப் பூசை செய்வதுதான் எங்க பரம்பரைத தொழில். அதிலும் பாகம் வேறு. எங்க தாத்தா காலத்திலே கோயில் பூஜைக்குப் பாத்யதை கொண்டாடிப் பெரிய வழக்கு நடந்ததாம். கடைசியிலே பஞ்சாயத்து செய்து எங்க தாத்தா ஆறு மாசமும், எதிர்க்கட்சிக்காரர் ஆறு மாசமும் பூஜை செய்ய வேண்டும் என்று திட்டமாச்சு. பொல்லாத வேலை! இதற்குப் போட்டி வேறே! உண்மையா சாமிக்குப் பூஜை செய்து தொண்டு செய்ய ஆசை இருந்தா இப்படியா ‘பிரிவினை’ செய்யும்படி வரும்? ருசி இல்லாமலில்லை. வருடா வருடம் மாரியம்மன் பண்டிகையிலே பூசாரிக்கு ஆளுக்கு ஐநூறுக்கு மேலே வரும்படி கிடைக்கும். அதுவே வருடச் செலவுக்கு ஆச்சே?
”தினம் காவிரிக் கரைப் பூந்தோட்டத்துக்குப் போய் குடலையில் மஞ்சள் அரளி, மல்லிகை, செவ்வரளி, வில்வம், துளசி ஆகியவை பறிச்சிட்டு வரணும். பிறகு கோயில் மண்டபத்தில் தொடுத்து வைச்சுக் கதவு திறந்து விளக்கேத்தி வைச்சுட்டுத்தான் மீதி வேலை. மற்றொரு பூசாரி பூ கொண்டு வர ஆள் வச்சிருந்தான். நான் இதுக்கெல்லாமா ஆளு? கடவுள் கொடுத்த கால் இருக்கிற வரை அவுங்க அவுங்க வேலையை அவுங்களே செய்யணும்னு ஒரு மைல் நடந்து போவேன். காவிரிக் கரைக்கு ஊரிலேயிருந்து குடி தண்ணீருக்குப் பெண்கள் எல்லாம் ஒரு மைல் நடந்து வந்துதான் எடுத்துச் செல்லணும். பட்டணத்துலே வீட்டுக்கு வீடு பைப். இல்லாட்டி தெருவுல பைப். அதுலே தண்ணி எடுக்கவே கஷ்டப்படுகிறார்கள். கிராமத்துல பார்க்கணுமே, பெண்கள் கோஷ்டி கோஷ்டியமாக இடுப்பில் குடத்துடன்கிளம்பி, நீர் மொண்டு திரும்பும் காட்சி! பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதது. பூப்பறிக்கப் போவதும், தண்ணி எடுக்கம பழனியம்மா வருவதும்தான் எங்கள் நிம்மதி மனத்தைக் கலைத்தது. கலக்கமும், கவலையும், படபடப்பும் அறியாத மனத்தில் ஒரு வேகத்தை இன்னதென்று கூற முடியாத உணர்ச்சியை உண்டாக்கியது. பழனியம்மா மனத்தை என்னை விட முதலில் கவர்ந்தது நாகலிங்கப்பூ தான் அதனுடைய அமைப்பு பெண்ணுள்ளத்தைக் கவராமல் இருக்க முடியுமா? நாகலிங்க மரம் உயர்ந்து வளர்ந்த மரம். மத்தவங்களுக் கெல்லாம் எட்டாது. தினம் மத்தவங்க வருவதற்கு முன்பு மரத்தின் மீதேறி அந்த மலரைப் பறித்துத் தயாராய் வைத்திருப்பேன். எங்கள் சந்திப்பை அது வளர்த்தது. அன்பை வளர்த்தது. பெண்கள் எல்லாம் நீர் எடுத்துப் போன பிறகு பழனியம்மா தனியே வருவாள்.
”ஊர்ப் பேச்சு கேட்க வேண்டுமா? இந்தக் கிராமக் கிராதகர்கள் வம்பும், தும்பும் வளர்க்க ஆரம்பித்தனர். லேசாக என் காதிலும் போட்டார்கள். பழனியம்மாவின் தந்தையும், என் தந்தையும் தனித்தனியே என்னிடம் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படி கூறினார்கள். ஆற்றுக்கு நீரெடுக்க வர பழனியம்மாவுக்குத் தடை விதிக்கப்பட்டது. எங்களைத்தான் தடை செய்தார்களே தவிர, எங்கள் உள்ளத்தைத் தடை செய்ய முடியவில்லை. எவ்வளவோ தடவை நாங்கள் சந்தித்தோம். என் தந்தை எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ‘தம்பி… இந்த வருஷமோ, அடுத்த வருஷமோகண்ணை மூடிடுவேன். இந்த மாதிரியெல்லாம் வேண்டாம்டா. வேறே நல்ல குலமா, குணமான பெண்ணைக் கல்யாணம் கட்டி வைக்கிறேன்’ என்று இதமாகவும் சொல்லிப் பார்த்தார். நான் பிடிவாதமாக ‘முடியாது’ என்ற சொல்லி விட்டேன். கிழவரானாலும் கவுண்ட ஜாதியில் வந்தவரல்லவா? கோபமும் வீர குணமும் எங்கே போகும்? ‘டேய் பயலே! அப்படியா சேதி…இந்தச் சொத்திலே தம்படி காசு கிடைக்க ஒட்டாமே அடிச்சிடுவேன்’ என்று மிரட்டினார். அதிகம் பேசினால் கைகலப்புக் கூட ஏற்பட்டிருக்கும்.
“ஊரில் இது போன்ற சம்பவம் புதுசு. வயது வந்த அறியாப் பொண்ணு மனசைக் கெடுத்துட்டான் பாவின்னு சிலர் என்னைச் சபித்தனர். ஏனெனில் பழனியம்மாவும் என்னைப் போலவே பிடிவாதமாக அவள் தந்தையிடம் என்னைத்தான் கல்யாணம் கட்டிக்குவேன் என்று கூறிவிட்டாள். அதென்ன பெரியவர்கள் இஷ்டப்படி நடப்பதா, சிறிசுகள் அவங்க இஷ்டப்படி நடப்பதா? என்ற கோபம். ஊர் பஞ்சாயத்தார்களுக்குள் விவாதம் முற்றிப் பஞ்சாயத்தே ஒரு நாள் கூடிவிட்டது. என்னைக் கூப்பிட்டனுப்பினார்கள்.
“ஊருக்குப் பெரிய மனுஷன் எனப்பட்டவர்கள் அன்பாகவும், அதட்டியும், உருட்டியும், மிரட்டியும் என் எண்ணத்தை மாற்றச் சொன்னார்கள். பெண்ணின் மாமன்காரன் ஆத்திரமும் ஆவேசமும் சிரம்பிய குரலில், ‘டேய்… ‘பழனி, பழனி’ன்னு அவ மனசைக் செடுத்தியோ, பூசாரி வேலைக்கு உலை வச்சிடுவேன்… அதோட இல்லை, உன் உசிரு உங்கிட்டே இராது. ஜாக்கிரதை’ என்று கருவினான். நானென்ன ஆண்பிள்ளை இல்லையா? கோபம் துடித்தது. உள்ளம் உருக இரியம்மனுக்குப் பூசை செய்து மனசு பண்பட்டிருந்தாலும் அதட்டலுக்கும் மிரட்டலுக்குமா இந்த மனசு பயந்துடும்? பொல்லாத சாச்சே? ‘டேய் என்ன சொன்னே…. பூசாரி வேலை தானேடா? போனாப் போகட்டும்டா… காடாறு மாசம் நாடாறு மாசம்னு ஆறு ஆறு இச்சம் இரண்டு பேர் பூசை செய்யறதை ஒத்தரே செய்யட்டும்டா… இன்னமோ சொன்னியே ‘உசிரு’ உங்கிட்டே இல்லைன்னு… இப்ப தாட்டுடா உசிரு எவங்கிட்டேங்கிறதை’ என்று பாய்ஞ்சேன் பாரு. கூடியிருந்தவர்கள் அப்படியே என்னைக் கட்டிப் பிடித்திருக்காவிடில், சாது மிரண்டதுக்கு காடு கொள்ளாமல்தான் போயிருக்கும்.
“பூசாரி வேலை எனக்குக்கிடையாது. ஒழுக்கம் தவறிவிட்டவனுக்குப் பூசாரி வேலை யோக்கியதை இல்லைன்னு கூறித் தீர்ப்பளித்து ஜிட்டார்கள் பஞ்சாயத்தார். ஒழுக்கம் நான் தவறினேனோம்! அப்படிச் செய்துவிட்டாலாவது என் மனசு மாறிடாதான்னு எண்ணம்.
“எதேச்சையா பழனியம்மா மறுநாள் ஒருவருக்கும் தெரியாமல் என்னைச் சந்தித்தாள். சிறு குழந்தை போல் விம்மினாள். தகப்பன் அவளைக் கட்டி வைத்துக்கூட அடித்தானாம். ‘ஓடுகாலி’ என்பன போன்ற வாயில் வராத சொற்களால் வைதானாம். இந்த வீட்டை விட்டே அடிச்சுத் துரத்திடுவேனென்றானாம். இவ்வளவையும் விம்மிக் கொண்டே சொல்லி விட்டு, ‘ஐயோ! உங்கப்பா சொத்தையெல்லாம் உங்க பேருக்குக் கொஞ்சங்கூடக் கொடுக்க மாட்டேனுட்டாங்களாமே! பன்னாலேதானாஇவ்வளவு வரணும்?ஐயோ என்னைமறந்துடுங்களேன்’ என்று விம்மினாள். தோளில் சாய்ந்து கெண்டு சட்டென்று அவள் முகவாய்க் கட்டையைப் பிடித்துத் தலையை என் முகத்துக்கு எதிரே திறுத்தினேன். ‘பழனி! அப்பன் கட்டி வைச்சு அடிச்சானே… ஓடிப் போவோம்னு சொன்னேனே… அப்பவெல்லாம் நீ என்னை மறந்துடறேன்னு சொல்லறதுதானே. என்னை மறந்துடறதுதானே” என்றேன். அவள் கண்களில் நீர் ‘பொல பொல’வென உதிர்ந்தது.
“வேலை போச்சு, ஊரில் ஏச்சும் அதிகமாச்சு. ஆனால், இந்தப் பொல்லா மனசு மாறவில்லை. நாகலிங்கப் பூவைப் பறித்து அவளுக்கு எப்படியாவது அளிக்கத் தவறுவதில்லை. அன்று போதாத வேளையோ நல்ல வேளையோ… மழை பெய்து விட்டிருந்தது. பழனியின் தம்பி எதேச்சையாக அந்தப் பக்கம் வந்திருந்தான். ‘தம்பி என்று கூப்பிட்டேன். அவன் ஆவலுடன் ஓடி வந்தான். ‘இதோ நாகலிங்கப்பூ பறிச்சுத் தரேன். அக்காவிடம் கொடு’ என்று மரத்தின் மீது பரபரப்புடன் வேகமாக ஏறினேன். பெய்த மழையால் உதிர்ந்த இதழ்களற்ற பூக்கல் தான் எட்டிய கிளையில் அகப்பட்டன. உச்சியில் ஏறிவிட்டேன். கிளை முறிந்து, படார் என்ற சப்தத்துடன் கீழே கிளையும் நானும் வீழ்ந்தோம். ‘அப்யய்யோ’ எனக் கூவி, தம்பி ஊருக்குள் ஓடினான். நல்ல அடி. சிறிது நேரம் நினைவின்றிக் கிடந்தேன் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள்னு ஏகக்கூட்டம் கூடிவிட்டது. பழனியம்மாவும் கும்பலில் ஒரு மூலையில் இருந்தாள் போலும் எல்லாரும் முத லக் கண்ணீர் விட்டனர். வலியால் நான் துடித்து வேதனைப்படுவதைக் கண்டு சிலருக்கு ஆறுதல். ‘ஏண்டா சின்னக் கவுண்டா, அந்த உயர மரத்தில் ஏறலாமா?’ – இதுவா ஆறுதல்?
“பக்கத்து ஊரிலிருந்து டாக்டர் வரவழைக்கப்பட்டார். தொட்டுப் பார்த்தார். எலும்பு முறிவு என்று கண்டுபிடிக்க அவருக்கு ஒரு மணி நேரம் ஆச்சு! பட்டணத்திலே ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போக வேண்டும் என்று கூறி விட்டார். நல்லவேளை கால் முறியமல் வலக்கைதான் முறிந்திருந்தது.
“ஜெனரல் ஆஸ்பத்திரி என்றவுடன் எனக்கு அழுகை வந்து விட்டது எப்படிப் போவது, யார் துணைக்கு வருவார்? அப்பாவோ தள்ளாதவர். என்னதான் என் மேல் கோபமிருந்தாலும் பிள்ளை அடிபட்டுக்கிடக்கும்போது உணர்ச்சியற்று நிற்பாரா? ‘உடனே ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போகவிட்டால் இன்னும் இருநாளில் சீழ் பிடித்து விடும். கையைத் துண்டிக்க வேண்டி வரும்’ என்று பயமுறுத்தினார் அந்த டாக்டர்.
“கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. ‘பாத்தியா.. மாரியம்மனுக்குப் பூஜை செய்து அபசாரமா நடந்ததுக்கு அம்மா தண்டனைக் கொடுத்துட்டாள்!’ என்று ஓரிருவர் கூறிச் சென்றது என் காதில் விழுந்தது. அறியாதவர்கள் என எண்ணிச் சும்மாயிருந்தேன்.
“இரட்டை மாட்டு வண்டி ஒன்று கொண்டு வரப்பட்டது. என்னை வண்டியில் ஏற்றினார்கள். கூட யார் வருவது என முடிவாகவில்லை அப்பா பச்சைக் குழந்தைபோல் அழுது கொண்டே வண்டியிலேறம் போனார். குடுகுடுவென பழனியம்மாள் ஓடி வந்தாள். என் அப்பாவை நகரச் சொல்லி, ‘மாமா… நீங்க இருங்க; ஊரிலே நாங்க இருவரும் பொல்லாதவர்களாகி விட்டோம். பழிக்கு ஆளாகி விட்டோம். ஜக்காகத்தானே அவர் மரத்தில் ஏறிக் கையை முறித்துக் கொண்டார். நான் போறேன் பட்டணம்?’ என்று கூறிக் கண்களைத் துடைத்துக் கொண்டு வண்டியில் ஏறிக் குறுக்குக் கம்பியைப் போட்டாள்.
”எல்லாரும் அசந்து நின்றார்கள். பட்டணம் வந்தோம். இடையில் எவ்வளவோ கஷ்டம். நான் படும் வேதனையைக் கண்டு அவள் துடிப்பதோடன்றி கஷ்டமறியாத, வெளியே எங்கும் போய் அறியாத அவள் அந்த ரயிலில் கூட்ட நெருக்கடியில் என்னை அழைத்து வந்து இரவும் பகலும் இங்கே தொல்லைப்பட வேண்டும் என்று அவளுக்கு என்ன தலையெழுத்தா?” என்றான் சின்னக் கவுண்டன்.
அவன் குரல் அதைச் சொல்கையில் தழுதழுத்தது. கொஞ்சம் இருமினான். ‘எல்லாம் இந்த மனசுதான் காரணம்’ என்று என்னை அறியாமல் கூறினேன்.
”சாமி! இந்தப் பொல்லாத மனசு இன்னும் என்னென்ன திட்டமிட்டிருக்குத் தெரியுமா… கை சரியான பிறகு ஊருக்குப் போகப் போவதில்லை. திருத்தணி போய் முருகன் சந்நிதியிலே நாங்கள் கடவுள் சாட்சியாக தம்பதியாகிடப் போறோம்” என்றான் – அவன் முகத்தில் களிப்புப் பொங்க.
“கவுண்டா! என்னை மறந்துவிடாதே. கல்யாணத்துக்குக் கூப்பிடு” என்றேன். மணி ‘டாண்… டாண்’ என்று பத்து அடித்தது. பழனியம்மாள் அவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
– 1946, சுதேசமித்திரன்.
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.
![]() |
கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க... |