வசந்த் + வதந்தி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 3,692 
 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

பாலுவிடம் சேதியை வாங்கிய பெரியவருக்கு ரொம்ப தாக்கம்! சிறிது தூரம் கூட அவரால் நிம்மதியாய் நடக்க முடியவில்லை.

‘தன்னிடம் வயசு பெண்ணொருத்தி இருக்கிறாள்!’ நினைக்க பகீரென்றது. மனசு பதைபதைத்தது.

உடன் திரும்பினார்.

“காவேரி ! காவேரி!” தன் குடிசை வாசல் முன் வந்து குரல் கொடுத்தார். மனைவி வரவில்லை. மாறாக….

மகள் மைனா..! பருவப்பெண் பாவாடை தாவணியில் பளிச்சென்று வெளியில் வந்தாள்.

மனம் பக்கென்றது.

“அம்மா எங்கே..?” – சுள்ளென்று கேட்டார்.

“பக்கத்து தெருவுக்கு போயிருக்கு.”

“ஏன்…?”

“தெரியல. இப்போ வந்துடும்.”

”சரி. நீ போ” அவளைத் துரத்தாத குறையாய் விரட்டினார்.

மடியை அவிழ்த்துக்கொண்டு காவலுக்கு இருப்பது போல் வாசலில் அமர்ந்தார். பொட்டலத்தைப் பிரித்து வாயில் கொட்டைப் பாக்கு போட்டு மென்று வெற்றிலை மடித்தார்.

‘என்ன மாதிரி அயோக்கியன்..!? பொறுக்கி..! ஒரு பொம்பளையை வச்சிக்கிட்டு ஒன்னும் தெரியாத புள்ள, யோக்கியன் போல நடக்கிறான்!?? கொலையே செய்து வந்தாலும் குத்துக்கள் மாதிரி உட்கார்ந்திருப்பான் போல..?!’ நினைவு ஓடியது.

வெற்றிலையை மென்று புகையிலை வாயில் போடுவதற்குள் காவேரி வந்தாள்.

“என்ன டவுனுக்குப் போகலையா..?” ஆள் சுறுக்க வந்து விட்டதில் சந்தேகம். கேட்டாள்.

“போகல. இடையில அதைவிட முக்கியமான விசயம்!”

“என்ன..?” அவள் அருகில் வந்தாள்.

“தணிகாசலம் புள்ள ராமு வப்பாட்டி வச்சிருக்கானாம்..!” குரலைத் தாழ்த்தி சொன்னார்.

“அப்படியா..?!” – அவளும் அதிர்ந்து அவர் சுருதியிலேயே கேட்டாள்.

“ஆமா..” ஆரம்பித்து…பாலு கொட்டியதை அப்படியே மனைவியிடம் கொட்டினார்.

“இந்த விசயம் ஊர்ல மத்தவங்களுக்குத் தெரியுமா..?” – அவளுக்கு ஊரில் எந்த முக்கிய சேதியும் தனக்குத்தான் முதலில் தெரிய வேண்டும் என்பதில் அக்கறை.!!

“தெரியாது. அந்த பையன் என்னைத்தான் முதன்முதலா விசாரிச்சான்!”

“எதுக்கும் விசாரிச்சுட்டு வர்றேன்!.” காவேரி நகர்ந்து அப்பால் சென்றாள்.

இரண்டடி எடுத்து வைப்பதற்குள்… எதிரில் எதிர்வீட்டுக்காரி!

“ஒரு விசயம் பர்வதம்..”

“என்ன..?”

“காது கொடு சொல்றேன்!”

பற்றவைத்தாள்.

அவள் சிரித்தாள்.

“என்ன?.”

“இப்பத்தான் என் புருசன் சொன்னாரு. நீ சொல்றே..?”

இவளுக்கு முகம் விழுந்தது.

வீட்டிற்கு வந்தாள்.

“காலம் கெட்டு கிடக்கு. மைனா..! நீ வெளியே தெருவே எங்கும் போக வேணாம்!” மகளைக் கண்டித்தாள்.

அவள் விழித்தாள்.

வதந்தி ஒரு காட்டுத்தீ! சிறு பொரி பட்டால் போதும். அது… ஒலி, ஒளி, காற்று சக்திகளைவிட பயங்கர வேகம் கொண்டது. பட்டென்று பரவும். தீ பிடிக்கும். அது மட்டுமல்ல… அது ஒருவர் வாயிலிருந்து புறப்பட்டு அடுத்தவர் வாயிலிருந்து வேறொன்றாக வரும்..!

அப்படிதான் இந்த சேதியும் ஒன்று பலவாக வந்தது.

“மாசத்துக்குப் பத்து நாள் அவன் அவளோடதான் குடித்தனமாம்..!”

“ஒரு புள்ள கூட இருக்காம்..!”

“பையன்… கன்னுக்குட்டியும் மாடும் கொண்டு வரப்போறான்..!”

“அவனும் பொறந்தவள்களைக் கட்டி கொடுக்கனும்ன்னு எத்தனை காலத்துக்குத்தான் பொறுப்பான்…?!!”

“பாவி செறுக்கி! கட்டியவன் தலையில கையை வச்சுட்டாள் பாதகத்தி!”

“வேத்து சாதிக்காரி இல்லே. மதத்துக்காரியையே புடிச்சுட்டான்..!”

“பெத்தவங்களுக்குத் தெரியாமலா இருக்கும்..? கலியாணம் வேணாம் சொல்றான்! கலியாணம் வேணாம் சொல்றான்னு மூடி மறைக்கிறாங்க.”

ஊரில் இருவர், மூவர் கூடினால் இதே குசுகுசு, பேச்சு..!

தணிகாசலம், செண்பகத்திற்கு வெளியில் தலை காட்ட முடியவில்லை.

எவராவது ஏதாவது கேட்டு விடுவார்களோ பயம்! வீட்டிற்குள்ளேயே அடைபட்டார்கள்.

எந்த வேலையையும் பார்க்காமல் எத்தனைக் காலம்தான் அப்படி இருக்க முடியும்..?

தணிகாசலம் புறப்பட்டு வயல்வெளிக்குப் போனார். இடையில் பஞ்சாயத்து நிறுத்தினார்.

“என்ன தணிகாசலம் கேள்வி பட்டது உண்மையா..?” கேட்டார்.

“பையன் வந்ததும் விசாரிக்கனும்ங்க” சொல்லி வந்தார்.

ரோஜா காதில் பட்டிருக்குமோ..?! அவருக்குப் புதிதாக கவலை வந்தது!

அத்தியாயம்-8

ராமுவிற்கு, சென்ற வேலை திருப்தியாய் முடிந்ததில் மகிழ்ச்சி.

வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை கையில் பெட்டியுடன் பேருந்தை விட்டு இறங்கி தன் கிராமத்து சாலையில் நடந்தான்.

‘ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக காலியாக இருக்கும் உதவி மேலாளர் பதவி தனக்கு கிடைக்குமா..?’ அவனுக்குள் யோசனை ஓடியது.

‘எம்.டி. மனது வைத்தால் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்புண்டு!’ நினைக்க சிலிர்த்தது.

அலுவலகத்தில் வசந்த் பொறாமை படமாட்டான். ஆனா மற்றவர்கள்..? மனசுக்குள் ஓட…சிரிப்பு வந்தது.

பாதி வழியில்..

“வாங்க மாப்ள..!” எவரோ நக்கலாக அழைத்தார்கள்.

பழக்கப்பட்ட குரல்தான்..!

திடுக்கிட்டுத் திரும்பினான். செல்லையன்!

வசந்த்திற்கு அடுத்து இவனுக்கு இவன்தான் ஊரில் ஆத்மார்த்தமான நண்பன். பத்தாம் வகுப்பு வரை இவனும் வசந்த், ராமுவோடுதான் படித்தான். ஏழ்மை. அதற்கு மேல் படிக்க வசதி இல்லை. அப்பாவும் துணை இல்லாமல் பரலோகம் போக..விவசாயத்தில் இறங்கிவிட்டான்.

ஊர் பற்றிய செய்திகளை ராமு இவனிடம்தான் கேட்டு தெரிந்து கொள்வான்.

செல்லையனுக்கு இவனைப் பார்த்தால்தான் விளையாட்டுப் பேச்சு, வினயப் பேச்செல்லாம் வரும். அதே சமயம் ராமு மேல் இவனுக்கு அக்கறை அதிகம்.

“என்ன மாப்ளெ! கலியாணம் கட்டாமல் திரியறே..?” வருத்தப்படுவான்.

“ஒண்ணுக்கும் உதவாத ‘அதை’ அறுத்து காக்காகிட்ட போடு. அதுவாவது பசியாறும்!” சொல்வான்.

“கலியாணம் கட்டாம பெத்தவங்களுக்குப் பாரமா இருக்குறீயே..! நியாயமா..?” கேட்பான்.

“ராமு! நீ சம்பாதிச்சு பொண்ணுங்களைக் கட்டி குடுத்துட்டே. ரூட் கிளியர். அப்புறம் ஏன் கலியாணம் கட்ட பயந்து கோயில் மாடு போல தனியா திரியறே..?” என்பான்.

ராமுவிற்கு…தற்போது நண்பனைக் கண்டதில் உற்சாகம்.

“என்னப்பா ஊர்ல விசேசம்..?” கேட்டான்.

“மாப்ளெ..! நீ பெரிய ஆளுடா..மொதல்ல கை குடுடா..” செல்லையன் தானாகவே முன் வந்து ராமுவின் வலக்கையைப் பிடித்து இழுத்து குலுக்கினான்.

முகத்தில் சந்தோசம் பரவி இருந்தது.

“என்ன விசயம் சொல்லு..?” – இவனும் விபரம் புரியாமல் அவனை ஆவலாய்ப் பார்த்தான்.

“புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிருக்காப்போல..”

“என்ன உளர்றே..?”

“நிசம் தான்ப்பா. இன்னைக்கு ஊர்ல உன்னைப்பத்திதான் பேச்சு..!”

“என்ன பேச்சு…?”

“உட்காரு சொல்றேன்” செல்லையன் மரத்தடியில் அமர்ந்தான்.

ராமுவும் அமர..ஒன்று விடாமல் சொன்னான்.

ராமுவிற்கு பயங்கர அதிர்ச்சி.

“நிஜமா..?!” நம்ப முடியாமல் கேட்டான்.

‘சத்தியம்!’ செல்லையன் அவன் தலையிலடித்தான்.

ராமு உறைந்தான்.

நண்பன் நிலையைப் பார்த்த…இவனுக்கு சந்தேகம்.

“நிசம் இல்லியா..?!” திகைப்பாய்ப் பார்த்தான்.

“இல்லே..”

“அப்போ கதையா..?”

“ஆமாம்!”

“புஸ்வாணமாக்கிப்புட்டியே..” செல்லையன முகம் தொங்கியது.

“இது என்ன பேச்சு! யார் கட்டிவிட்ட கதை..?” ராமு நடந்தானேயொழிய யோசனையெல்லாம் செல்லையன் சொன்னதையே சுற்றி சுற்றி வந்தது.

கொஞ்சம் கூட பிசிறில்லாமல் கதை கட்டி விட்டிருக்கிறார்கள். நிஜமானால்..?! – நினைத்துப் பார்க்க நடுங்கியது.

வழியில் தென்பட்ட நாலைந்து சிறுவர்கள், இவனைத் தாண்டியதும்…

“காசோலைக்குறிச்சி!” கூவி ஓட்டமெடுத்தார்கள்.

‘இது ஊரில் எந்த அளவிற்குப் பரவி இருந்தால் இந்த சிறுவர்கள் இப்படி கும்மாளமடிப்பார்கள். தன்னைப் பார்த்து நக்கலடிப்பார்கள்..?!’ – இது…ராமுவிற்குள் பெரிய தாக்கம், அதிர்வை ஏற்படுத்தியது.

ஊருக்குள் நுழைய எந்த பெண்களும் கண்ணில் படவில்லை. அப்படி பட்டவர்களும் இவனைப் பார்த்ததும் ஒதுங்கினார்கள்.

ஊரில் இப்படி நடந்ததே இல்லை. எந்தப் பெண்ணும் இவனைப் பார்த்து இப்படி செய்தது கிடையாது. அரட்டை அடித்துக்கொண்டு வரும் வயசுப் பெண்கள்கூட இவனை எதிரில் கண்டால் வாயை மூடி மௌனமாக அடக்க ஒடுக்கமாய் நடப்பார்கள். அந்த அளவிற்கு இவன் மேல் மதிப்பு மரியாதை. இப்போது பயந்து ஒதுங்குகிறார்கள் என்றால்…?!

ராமுவிற்கு உலகம் தலைகீழாய் புரள்வதைப் போலிருந்தது. படியேறினான்.

வீடு நிசப்தமாக இருந்தது.

“இதோ பாருங்க. புள்ளையைப் பார்த்ததும் ஆத்திரப்படக்கூடாது! ஆவேசப் படக்கூடாது.! அதே சமயம்.. வந்ததும் விசாரிக்கக்கூடாது. பொறுமையாய் விசாரிக்கனும். உண்மையோ, பொய்யோ நாம நம்பினா மாதிரி காட்டிக்க கூடாது. அப்படி காட்டிக்கிட்டா பொறுப்பான புள்ள இடிஞ்சி நொறுங்கிப் போவான்.. உண்மையா இருந்தா அவன் போக்குக்கு விடனும். பொய்யாய் இருந்தா தூரப்போடணும். இதுதான் சரி!” செண்பகம் தணிகாசலத்தை எச்சரித்து கண்டித்து வைத்திருந்ததின் விளைவு….

“வாப்பா…” தணிகாசலம் மகன் தலையைக் கண்டதும் சாந்தமாக வரவேற்றார்.

“ராத்திரி புறப்பட்டியா..?” செண்பகமும் சாதாரணமாக கேட்டாள்.

‘என்ன..! ஊர் பற்றி எரிகிறது என்று செல்லையன் சொன்னான். இங்கே ஒரு பிரளயமுமில்லை. ஒருவேளை சேதி இவர்கள் காதுகளுக்கு எட்டவில்லையோ..?!’ இவனுக்கு அதிர்ச்சி, ஆச்சரியமாக இருந்தது.

ஆனால்… தணிகாசலம் மனதில் எப்படி ஆரம்பிப்பது. .? – யோசனை.

“என்னப்பா யோசனை..?” இவனே அவரைக் கேட்டான்.

“ஓ…ஒண்ணுமில்லே..!” கையை விரித்தார்.

“இல்லே… ஊர்ல என்னைப்பத்தி என்னவோ பேசிக்கிறதா செல்லையன் சொன்னான்..?” பெட்டியைக் கீழே வைத்து விட்டு கேட்டான்.

“அது கெடக்குது கழுதை!”

அப்பாவின் இந்த அலட்சிய பேச்சு இவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

காபி ஆற்றிக்கொண்டு வந்த செண்பகம். ..

“அதெல்லாம் நம்ப முடியுமா…? எங்களுக்குத் தெரியும். எங்க புள்ள தங்கம்!” – சொல்லி காபியை நீட்டினாள்.

‘என்னவொரு நம்பிக்கை!’ ராமுவிற்கு டம்ளரை வாங்கி வாயில் வைக்கவே கை நடுங்கியது.

“இத நீங்க நம்பவே இல்லையா..?” ஆச்சரியமாக கேட்டு காலி டம்ளரைக் கீழே வைத்தான்.

“நம்பனும்ங்குறீயா..?” தணிகாசலம் இவனைக் கேட்டார்.

“நம்பித்தானாகனும்…!” அழுத்தம் திருத்தம் ஆத்திரமாக வாசலில் குரல் ஒலித்தது.

எல்லோரும் திரும்பி பார்த்தார்கள்.

கண்களில் தீ பொரி பறக்க ரோஜா!

அருகில் அவள் அப்பா கோதண்டம்!

அத்தியாயம்-9

“என்ன பேச்சு பேசுறீங்க..? தப்பு செய்ஞ்சுட்டு வந்த புள்ளையைக் கண்டிக்க துப்பில்லாம…சப்போர்ட் பண்றீங்க..?” ரோஜா புயலைப் போல் உள்ளே நுழைந்து படபடவென பொரிந்தாள்.

“அம்மா..!” கோதண்டம் அவள் கையைப் பற்றினார்.

“விடுங்கப்பா..!”

“ரோஜா…!” ராமுவும் அதட்டினான்.

“நீங்க பேசாதீங்க…” என்று அவன் மேல் பாய்ந்த ரோஜா.

“இப்போ கேளுங்க மாமா. உண்மையா, பொய்யான்னு..?” சொல்லி தணிகாசலத்தை உக்கிர பார்வைப் பார்த்தாள்.

‘ரோஜா கேள்விப்பட்டு கொதித்து வந்திருக்கிறாள்!’ தணிகாசலத்திற்குத் தெளிவாக தெரிந்தது.

‘எவள் காதில் விழக்கூடாதென்று பயந்தாரோ அது நடந்து விட்டது. இனி சிக்கல்!’ – நெளிந்தார்.

காளியாக இவள் இப்படி புறப்பட்டு வருவாளென்று செண்பகமும் நினைக்கவில்லை. உறைந்தாள்.

“இவர்…மனசு மாறுவார், மனசு மாறுவார்ன்னு காத்திருக்கேன்! மாறாமல் போனாலும் கவலை இல்லே. சின்ன வயசிலேர்ந்து சொல்லி வைச்ச இந்த உடலும் உசுரும் அவருக்குத்தான் சொந்தம். அவர் நினைவா கன்னியாவே இருந்துடுறதுன்னு முடிவுல இருக்கேன். இப்போ இவர் இப்படி பண்ணிட்டு வந்திருக்கார். கேளுங்க மாமா”. ரோஜா ஆத்திரம் அழுகை வெடித்து குமுறினாள்.

“பொறுமை! பொறுமை!” – கோதண்டம் மகளை அமைதி படுத்த தவித்தார்.

“இப்போ எனக்குப் பதில் சொல்லுங்க. நாங்க கேள்விப்பட்டது உண்மையா பொய்யா..?” ரோஜா கண்களைத் துடைத்துக்கொண்டு நேராகவே ராமுவிடம் தாவினாள்.

ராமுவிற்கு அவள் செய்கை பிடிக்கவில்லை. ஏன் திருமணம் வேண்டாமென்று முடிவெடுத்ததால் அவளையேப் பிடிக்கவில்லை. பெண் கொஞ்ச காலம் பிடிவாதம் பிடிப்பாள். பிறகு மனசு மாறி வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்வாள் என்று அவள் காத்திருப்பதற்காகவும் இவன் கவலைப் படவில்லை. இப்போது உறவின் உரிமையோடு வந்து, அப்பாவையும் துச்சமாக பேசி, தன்னையும் கேள்வி கேட்கிறாள் என்கிறபோது இவனுக்கு கோபம் வந்தது. என்றாலும் பதில் சொல்ல வேண்டியது நமது கடமை. அழுக்கை துடைப்பதுதான் சரி..! என்று நினைத்தான்.

“பதில் சொல்லுங்க..?” ரோஜா மறுபடியும் அதட்டினாள்.

“எ…என்ன பதில் சொல்லனும்…?”

“நீங்க சின்ன வீடு வச்சிருக்கிற சமாச்சாரம். அதுவும் திருமணமானவள். முஸ்லீம்!”

“பொய்!”

“சரி. காசோலைக்குறிச்சி எங்கே இருக்கு..?”

“தெரியாது!”

“அஜிதாபேகம்!?”

“தெரியாது!”

“பொய் சொல்றீங்க. சரி. ஏன் திருமணமே வேணாம்ன்னு பிடிவாதமாய் நிக்கிறீங்க..?”

“காரணம் எல்லோருக்கும் தெரியும். பல முறை சொல்லியாச்சு..!”

“மேலே மேலே பொய் சொல்றீங்க. பேகம் புருசனுக்குடப் தெரிஞ்சு விவாகரத்து கொடுத்துட்டான். விட்டுட்டான். அவள், என்னை இல்லாம நீங்க திருமணம் செய்துக்கக் கூடாது. மீறினால் தற்கொலைன்னு மிரட்டி இருக்காள்.”

“பொய்!”

“ஏன் உண்மையா இருக்கக் கூடாது !?”

‘இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல..?’ – ராமு திணறினான்.

ரோஜாவிற்கு பிடி கிடைத்து விட்ட உணர்வு.

“இது உண்மை மாமா..! இத்தினி நாளாய் நல்ல புள்ளையாய் நடிச்சி நம்மையெல்லாம் ஏமாத்தி இருக்கார். ஐயோ..! பாவி! நான் ஏமாந்துட்டேன். சாதாரண கல்லை மாணிக்கம் நெனைச்சி ஏமாந்துட்டேன்!” ரோஜா பெருங் குரலெடுத்து தலையிலடித்துக்கொண்டு அழுதாள்.

செண்பகம் உட்பட எல்லோருக்குமே சங்கடமாக இருந்தது. இவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று விழித்தார்கள்.

ராமுவும் தான் வகையாக மாட்டிக்கொண்டதாய் தவித்தான்.

“தம்பி! இது பொய்ன்னா எப்படி வந்தது..?” கோதண்டம் கேட்டார்.

“தெரியல மாமா..!” பரிதாபமாக சொன்னான்.

“யார் கட்டி விட்டிருப்பா..?”

“தெரியல மாமா…”

“ஏன் கட்டி விட்டாங்க..?”

“தெரியலையே..!”

“தம்பி! என் பொண்ணு அம்மாவை இழந்தவள்ன்னு தெரிஞ்சும் ஒதுக்கி…இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி இருக்கீங்க பாருங்க..பொறுக்கல..” கரகரத்தார்.

“மாமா..!” அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“மன்னிச்சுக்கோங்கோ மாப்ள. இது நிஜம். அப்பாவியா நானும் என் பொண்ணும் ஏமாந்துட்டோம்..!” உடைந்தார்.

“என்ன மச்சான் இது?” தணிகாசலத்தாலேயே தாள முடியவில்லை. எழுந்து சென்று தன் மைத்துனனை அணைத்தார்.

“என்னண்ணே இது?” செண்பகமும் கண்கள் ஓரம் கசிந்த நீரை முந்தானையால் துடைத்தாள்.

ராமுவிற்கு… இவர்கள் தன்னை அடித்து, துவைத்து, வதைத்து சித்ரவதை செய்வது போலிருந்தது.

‘தான் சம்பந்தப்படாத பொய்க்காக நிஜத்தை எப்படி மாற்றுவது மறைப்பது..?’ நிமிர்ந்தான்.

ரோஜா கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு முடிவிற்கு வந்தவள் போல் நிமிர்ந்தாள்.

“இப்போ சொல்றேன் ராமு. இது பொய்யானாலும், நிஜமானாலும் இந்த ரோஜா இனி உனக்கு கிடைக்க மாட்டாள். அதுக்காக வேறொருத்தனுக்கும் கழுத்தை நீட்ட மாட்டாள். என் மனசுல பதிஞ்ச உன் உருவத்தை கடைசிவரை அழிக்காம கண் மூடுவாள். இது சத்தியம். வாங்கப்பா!” சொல்லி கோதண்டத்தின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்ட வேகமாக வெளியேறினாள்.

ராமு, தணிகாசலம், செண்பகம்…. தடுக்க, மறைக்க வழி தெரியாமல் உறைந்தார்கள்.

வசந்த் அங்கு பிடித்த ஓட்டம் பாலு வீட்டில் வந்துதான் மூச்சு விட்டான்.

ரோஜா, கோதண்டம் இருவரும் ராமு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்… சுதாரித்து எப்படி அந்த வீட்டை விட்டு அகன்று, தன் வீட்டிற்கும் வந்து, சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்து வந்து பாலு வீட்டில் விழுந்தோம் என்று அவனுக்கே விளங்கவில்லை.

மனைவியைப் பிரசவத்திற்குப் பிறந்தகம் அனுப்பிவிட்டு, தனியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த பாலுவிடம்…

“எந்த கேள்வியும் கேட்காம மொதல்ல சேகர், கணேஷ், வெங்கடேசுக்குப் போனைப் போட்டு அவசரமா இங்கே வரச் சொல்லு” சொல்லி மூச்சுவிட்டான்.

“என்னவோ விபரீதம்!” பாலு பேசாமல் அவன் சொன்னதைச் செய்தான்.

அவர்கள் ஐந்து நிமிடங்களில் வந்தார்கள். அடுத்த வினாடி.

“என்னப்பா ஆச்சு..?” வசந்த் முகத்தைப் பார்த்து கேட்டான்.

“அறுவை சிகிச்சை வெற்றி. ஆனா…நோயாளி அவுட்!”

“என்ன உளர்றே..?”

“நாம எதை நினைச்சு விதைச்சோமோ. அது நடக்கல. ஆனா. தீ பத்திக்கிட்டு எரியுது!”

“விபரமா சொல்டா…?”

“சொல்றேன். ராமு நொந்து நூலாகி வேற வழியே இல்லாம ரோஜா கால்ல விழுந்து கலியாணத்தை முடிப்பான்னு நாம எதிர்பார்த்தோம். நானும் நெனைச்சேன். ஆனா அது நடக்காது. சேதி ரோஜா காதுல எப்படியோ விழுந்து, அவள் இன்னைக்கு அவன் வீட்டுக்கு வந்து, இனி உனக்கும் எனக்கும் செத்தா வாழ்ந்தா உறவு கிடையாதுன்னு சொல்லி வெட்டிக்கிட்டுப் போய்ட்டாள். நாம பத்த வைச்ச தீ கன்னாபின்னான்னு பத்திக்கிட்டு எரியுது. இது எங்கே போய் எப்படி முடியும், அணையும்ன்னு தெரியல…” சொல்லி தலையில் கை வைத்தான்.

நண்பர்களுக்கு அதிர்ச்சி.

“இந்த விசயமெல்லாம் உனக்கு எப்படி தெரியும்..?” சேகர் கேட்டான்.

“அவன் இன்னைக்கு ஊர்லேர்ந்து வர்ற நாள். நான் அவனைப் பார்க்க அவன் வீட்டுக்குப் போனேன். உள்ளாற ரோஜா, அவள் அப்பா ருத்ர தாண்டவம் ஆடிக்கிட்டிருந்தாங்க. ஆடி முடிச்சி வெளியேறத்துக்குள்ளே நான் சிட்டாய்ப் பறந்து இங்கே வந்துட்டேன்!”

“சரி. இப்போ அடுத்த கட்ட நடவடிக்கை..?” வெங்கடேஷ்.

“சொல்றேன். ராமு கண்டிப்பா ரெண்டு நாள் தூங்க மாட்டான். ஊர் பேச்சு, அம்மா அப்பா பேச்சு எல்லாம் அவனை சங்கடப்படுத்தும். சித்ரவதை..! அதே முகத்தோடு அவன் திங்கள் கிழமை அலுவலகத்துக்கு வருவான். நாம யாரும் அவன்கிட்ட முகம் கொடுத்து பேசக்கூடாது. நம்ம காதிலும் விசயம் விழுந்தாப்போல காட்டி முகத்தை தூக்கி வச்சி இருக்கனும். அதுக்கு மேல நான் பார்த்துக்கிறேன்!” என்றான்.

‘இவன் என்ன செய்வான்..?’ ஆளாளுக்கு குழம்பினார்கள்..!

– தொடரும்…

– 04-02-2002 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *