ராம ப்ரஸாதம்




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஸைகிள் மணியின் அலறல். யாரையும் விடிவேளையில் அழுத்திவிடும் (அல்ல அசர்த்திவிடுமா?) கண் செருகலி லிருந்து அவனை வெடுக்கென்று உதறிவிட்டது. கழுத் தறுப்பு! கழுத்தறுப்பு! இதோ வந்துட்டேன்!’ (இது தினப் படிச் சடங்கு) – எழுந்து காலடியில் தயாராக வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, வழியில் ப்ரகாஷ், அடுத்து கைக்குழந்தை, அப்புறம் மரவட்டைபோல் தலையோடு முழங்கால் சுருண்டு படுத்திருக்கும் செல்லம்மா, மற்றும் கால்கள் கைகள், கணக்கப்பிள்ளை மேஜையை இடறிக் கொண்டு — கள்ளபிரான் கைங்கரியம் – அதன்மேல் காலைப் போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வருமாம் – (நாசமாப் போக! கையை ஒடிக்கணும்!’) அம்மா, “Factoryக்குப் போயிட்டு வரானோன்னோ உடம்பை அப்படி வலிக்கறதுங்கறான்”- அப்புறம் அம்மா: கை, கால், காடு, மலை: வனாந்தரம் இருட்டில் தாண்டி, மாடியில் ஒரு படியேனும் தடுக்கி யிறங்கி – ஸைகிள் மணி மறுபடியும் அலறிற்று.

“..சரி சரி, நீ ஊத்தற பச்சைத்தண்ணிக்கு இன்னிக் கென்னப்பா அவ வசை அப்படியே அறுபட்டு, காலைப் பனிக்காற்றில் நாடா அலைந்தது. தெருவிளக்கில் தெரிந்தது பால்காரன் அல்ல. வேற்றுமுகம்.
“Mr. ஸேதுராமன் இங்கே இருக்காரா?”
“நான்தான்.”
“கையெழுத்துப் போடுங்க. No 36 -”
சிட்டாய்ப் பறந்துவிட்டான்.
கவரை உடைத்துப் பிரிப்பதற்குள், உடல்பூரா வெட வெட… தந்தியென்ன வீட்டுக்குத் தினப்பழக்கமா? தோளுக்குப் பின்னிருந்து ஒட்டுப்படிப்பதற்கென்றே தந்தாற் போல் தெரு விளக்கின் மெர்க்குரி வெளிச்சத்தில்,
“Regret Lt. Ramaprasad lost in action. Feared Dead.”
மாடிப்படி பிடிசுவர்மேல் ஸேது சாய்ந்தான்.
டீக்கடைக்கு ஓட்டிச்செல்லும் ஒன்றிரண்டு எருமைகள் தெருவில் தள்ளு நடை போட்டுக்கொண்டு உறுமிக்கொண்டு சென்றன.
தெருவில் அங்குமிங்குமாய் எட்ட எட்ட சாணி தெளிக்கும் சத்தம், இப்பவே கேட்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சங்குகூட பிடிக்கவில்லை, இன்று வெள்ளிக் கிழமையுமதுவுமாய் -நேற்றே அம்மா, நாட்டுப்பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்: எனக்கு நாளைக்குப் பகல் சாப்பாடு இங்கு இல்லை. சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அழைச்சிருக்கா'” ஏதோ பேர்கூட சொன்னாள். ஆபீஸ் கவலை, வீட்டுக்கவலை ஆயிரத்தில் அதுதான் அவனுக்கு ஞாபகமா? இதெல்லாம் பொம்மனாட்டிகள் விவகாரம். அதுவும் அம்மாவுக்கு இங்கே கல்யாணம் – அங்கே நிச்சய தாம்பூலம் — இங்கே பூச்சூட்டல், இந்தாத்துலே சீமந்தம் – அரட்டைக்குப் போனவிடத்தில், முன்னே பின்னே கூடத் தெரியாது மூணாமாடியில் “என் குழந்தைக்குத் தொட்டி லிடறேன். வெற்றிலைப்பாக்கு வாங்கிண்டு போங்களேன் நவராத்ரி பூஜை-
அம்மாவுக்கு வரும் அழைப்புக்கு ஒரு குட்டி ஆபீஸே திறக்கலாம். சிலபேர் முகராசி அப்படி கீரைக்கூடைக்காரிக்கு அம்மா கைப் போணி வேணும்.
”உனக்கோசரம் கீரை தினம் எத்தனைதரம் சமையல் பண்றது. கீரைப்பூச்சி வெச்சுடும்… பையன்கள் கரிச்சுக் கொட்றான்கள்.”
“எனக்காச்சும் ஒரு கட்டு வாங்கிக்கோம்மா.. ஒரே ஒரு கட்டு, மாட்டியா? கூடையை உன் கையாலே ஒரு தடவை தொடேன்…
சிலபேர் கைராசி முகராசி அப்படி.
இதற்கெல்லாம் மனுஷன், இருந்தும் கெடுத்தான்னு இன்னிக்கு வேளை பார்த்து அம்மா தலையில் கல்லைப் போடணுமா?
அப்பா மேல் எழுந்த சீற்றத்தில் ஸேதுவுக்கு வயிற்றைக் குமட்டிற்று.
மாடியேறிப்போய், விடிந்ததும் விடியாததுமாய்- அம்மா கொஞ்சம் லேட்டாய்த்தான் எழுந்திருப்பாள் – அம்மாவை எழுப்பி இந்த சமாச்சாரத்தை அவளிடம் எப்படி உடைப்பேன்?
தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்று சொல் கிறார்களே, வசனம் மெய்தானோ என்னவோ, அவனுக்கு இரண்டு ராத்ரியாகவே இருப்புக் கொள்ளவில்லை. படுக்கை யில் புரள்வதோடு சரி. தூக்கமில்லை. சுவரில், விடி விளக்கின் சிம்னியில் கூரை தூலங்களிடையே அப்பா முகம் தோன்றித் தோன்றி மறைந்த இரண்டு நாளா என்னவோ மாதிரியிருக்கேளே! யார்மேல் நினைப்பு?”
ஸேது பல்லை நெறநெறவென்று கடித்தான்.
”ஏன், நீ வேலை பார்க்கிற இடத்தில், Head Clerk உன்னிடம் பைலைக் கொடுக்கறப்போ அவன் கை உன் மேல் இடிச்சுதா? உன் boss உன்னை இன்று லஞ்சுக்கு அழைச் சுண்டு போனானா?” என்று திருப்பிக் கேட்க ரொம்ப நாழி ஆகிவிடாது.”
செல்லம் பாதி வேடிக்கையாகக் கேட்டாலும் உள்ளூர அவளுக்குச் சந்தேகம்தான். அதுவும் இரண்டு பெற்ற பின்னருமா? என்ன படிப்பிருந்து என்ன பயன்? அந்தப் பின் புத்தி எங்கே போகும்?-
“பால்! “
மணியடித்துக்கொண்டு, பெருமாள் ஸைகிளை மிடுக்காய் வாசலில் நிறுத்தினான்.
காப்பியை ஸ்ட்ராங்காப் போட்டுக் குடிச்சு, தைரி யத்தை வரவழைச்சுண்டு அப்புறம்தான்-
ஆனால் அப்புறம்கூடத் தைரியம் வரவில்லை. கண்ணன் வேலைக்குக் கிளம்பிவிட்டான். அவனைத் தடுத்து நிறுத்த “தில்’ இல்லை. கூடவே:
“இன்னிக்கு Night பண்ணிட்டு நாளைக் காலைதான் வருவேன்.”
“என்னடா ஸேது உனக்கு உடம்பு சரியில்லையா?”
“ஏன்?”
“என்னவோ மாதிரியிருக்கியே!”
“என்ன மாதிரி?” கண்ணாடியில் பார்த்துக்கொண்டான்.
“என்னவோ பேயறைஞ்ச மாதிரி-”
“ஆமாம், கவனிக்கணும்- ஆபீஸில் யக்ஷிணி மோஹினி” செல்லம் போகவரக் காது கேட்க முணுமுணுத் தாள்.
அவனுக்குக் கண் துளும்பிற்று. அசல் இடத்து சம் பந்தம் என்றால் இப்படித்தானிருக்குமோ. இரக்கமேயில் லாமல், “அத்தை மகள், மாமன் மகள் என்று கட்டியிருந்தால் ரத்தபாசமேனும் இருக்கும். இதெல்லாம் உடல் வெறி யோடு சரி. இல்லாவிட்டால் கலியாணமாகி அஞ்சு வருடத்துக்குள் இரண்டா? அவனுக்கும் அவளுக்கும் பூரா இரண்டு வயதுகூட வித்தியாசமில்லை, காரணம்? லபி அப்படி.
ஆனால் அதே ரத்தபாசம் அவனுக்கும் அப்பாவுக்கும் இடையில் இல்லை.
ஆபீஸில் ஏதோ கூட்டலைப் போட்டுக்கொண்டே அவன் கேள்விக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருந்தான்.
லெப்டினன்ட் ராமப்ரஸாத் குடும்பத்தில், தலை முறைக்குத் தலைமுறை ஏதேனும் ஒரு பேர் ராம சப்தத் துடன் வழங்கும்… ராமப்ரஸாத், கொள்ளுத் தாத்தா வுக்குத் தாத்தா கோடி ராமநாமம் ஜபித்தவராம். அங்கிருந்தே பெயர்ப் பழக்கம் கடைபிடித்தாகிறது.
லெப்டினன்ட் – எப்போ பதவி உயர்ந்தது? களத்தி லேயே ஆகியிருக்க வேண்டும். இந்த விஷயம் – தந்தி கூறும் விஷயம். அப்பட்டமாக , நினைக்கவே அச்சமாயிருந்தது. எங்கு எப்படி நேர்ந்திருக்கும்? பர்மாவிலா? மலேயாக் காடு களிலா? நடுக்கடலிலா? இல்லை இந்தப் பக்கம் ஜெர்மனி, ரஷ்யா – அதுவும் யுத்தம் முடிவாட்டத்தில், வயித் தெரிச்சல்.
தந்தியில் என்ன தகவல் தெரிவிக்கின்றான்கள்? Lost in Action. முதலில் உடலே கிடையாது.தந்தி ஜேபியில் தேளாய்க் கொட்டிற்று. சாவுத் தீண்டல் சடங்குகள், பாபம், புண்ணியம், நரகம் – மூலைக்கொன்று அவைகளின் அரூபங்களில் பயமுறுத்தின. யாவற்றிற்கும் மேலாக, அம்மாவை மங்கலம் களைந்த நிலையில் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. No! இது அம்மாவுக்கு நேரக் கூடரது. நடக்கறது நடக்கட்டும். என்ன நடக்கப் போகிறது? மிலிடரி பென்ஷன் இதுவரைபோல் பாங்கில் அம்மா கணக்கில் சேர்ந்துவிடப் போகிறது. வராவிட்டாலும் அம்மாவுக்கு என்ன தெரியப்போறது? காண்பித்த இடத்தில் கையெழுத்து, கோணல் மாணலா ஏதோ ஒரு கோலம்- வேறென்ன?
நம் சமுதாயத்தில் இந்தச் சிவப்பையும் மஞ்சளையும் பெண்களுக்கு உயிர் நிலையா என்னம்மா ஜூல் காட்டி யாறது? மற்ற நாகரிகங்களில் இந்தக் கொடுமை உண்டா? சில ஜாதிகளில் நடுவீட்டுத் தாலி இன்னும் பழக்கத்தில் இருக்கிறது.இதெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியாது. ராமா! ராமா! என்று காதை பொத்திக்கொண்டு போனவா கரையேறணும்னு வேஷத்தை போட்டுக்கொண்டு விடுவாள். அம்மாவோ மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை, அசடு, சமர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு அவியல். சிக்கு கண்டுவிட்ட பூணூல் மாதிரி. நுனி கண்டுபிடிக்க முடியாது.
இப்போது இருக்கிறபடி நடக்கிறவரை நடக்கட்டுமே. நாளடைவில் தானாகவே நம்பிக்கை தளர்ந்து, ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகி, அந்தச் சமயத்தில் அதற்குரிய சடங்குகள் பிராயச்சித்தங்கள் நம் சாஸ்திரத்தில் எதற்குக் குறைச்சல்? வைதீக தர்மம் என்று எல்லாம் வயிற்றுப் பிழைப்புத்தான். எரிகிற வீட்டில் பிடுங்கியவரை-
“என்னப்பா balance ஆச்சா? what is this wool gathering?””
புத்தகத்தின் மேல் முஸ்திப்பாகக் குனிந்தான்.
நான் வயிற்றில் பூகம்பத்தைக் கட்டிக்கொண்டிருப்பதை வன் என்ன கண்டான்? என்னிக்கும் ஒரே பாட்டுத்தானா?
தவிர, அம்மாவைக் கோரணி பண்ணுவதற்கு, அந்தத் தியாகத்தை அம்மா செய்வதற்கு என் அப்பன் தகுதியில்லை.
அப்பாவுக்கு fieldக்கு உத்தரவு வந்ததும், உள்ளூர வாய்விட்டுச் சொல்லிக்கொள்ள முடியாத பயம் வாட்டி னாலும், அதையும் தாண்டி, சுமையிறங்கினாற்போல் ‘உஸ் ஒன்று ஸேது உணர்ந்தான். இனி வீட்டில்,அப்பாவுக்கும் அம்மாவுக்குமிடையில் நாள் தவறினாலும் தான் தவறாத சண்டைக்கு ஓய்வு காணலாம். அம்மாவுக்கு, அப்பாவின் வசவு, அடி, உதைகளினின்று நீண்ட விடுமுறை. வீட்டி லேயே மழை பெய்து ஓய்ந்தாற்போல் ஒரு நிம்மதி. மூர்க்கன் – பெரியவாள் சண்டையைக் குழந்தைகளுக் கெதிரில் போடலாமா என்று பார்க்கமாட்டான். சண்டை எப்போ, எப்படி மூளும் என்றே தெரியாது.
ஒரு தடவை அம்மாவைக் குண்டுகட்டாய் அலேக்காய் அப்படியே தூக்கி, சுவரில் வீசி எறிந்திருக்கிறான் பாரு ரு, அவன் அறையுள் நுழைவதற்கும் அந்தக் காக்ஷிக்கு சாக்ஷியா வதற்கும் சரியாக இருந்தது. அந்தமாதிரி பந்தாடலுக்கு அகாத்ய பலம் வேண்டும். அம்மா ஒன்றும் பூஞ்சையில்லை.
ஆனால் அப்பா மட்டும் லேசா? அப்பா ராமனா? ராக்ஷ ஸன்னா! வாட்டசாட்டமா நல்ல உயரம். நல்ல சிவப்பு. கொத்து மீசை. அடர்ந்த சுருட்டை மயிர். அடர்ந்த புருவங்களினடியில் தழல் வீசும் மேட்டு விழிகள். அழகன். கம்பீரன் கோவில் மணிபோல் கார்வை கொண்டு குரலில் ஒரு அடிக்கனம்.
அன்று அவனுக்கு அவர்மேல் மூண்டெழுந்த கோபா வேசத்தில், ஓடிப்போய்,சமையலறையிலிருந்து அரிவாள் மணையை எடுத்து வந்து தலையைச் சீவி, கையில் பிடித்துக் கொண்டு தெருவலம் வந்து அதுமாதிரி ஒரு சேதி இரண்டு நாட்களுக்கு முன்தான் பத்திரிகையில் படித்தான்- போலீஸில் சரண் – ஆனால் நினைப்போடு சரி, நாம் எல்லாம் என்ன இட்லி சாம்பார் தானே! முதலில் அவருடைய ஒரு முறைப்புக்கு அவன் காண்பானா? அது மாதிரிதான் மற்றும் ஒருமுறை அவர்களிடையே அவன் குறுக்கிடப் போய், அவர் காட்டுப் பன்றி போல் அவன்மேல் திரும்பியதும் அம்மா அலறிப் புடைத்துக்கொண்டு அவனைப் பொத்தி, அவன்மேல் விழவிருந்ததைத் தான் வாங்கிக் கொண்டு-
ராமா! ராமா!
அதற்கு அடுத்த தடவை அம்மாவே அவனைக் காலை வாரிவிட்டாள். “எங்கள் சண்டையில் நீ யாரடா பூர? உன் கடையைக் கட்டிண்டு போய்ச்சேர் – மத்யஸ்தத்துக்கு உன்னை அழைக்கல்லே”
அவ்வளவுதான். அதுவே அவனுக்கு அதிர்ச்சி. எதற்கும் மூன்று தரம் உண்டு. அத்தோடு சரி, அப்புறம் அவர்களிடை யில் புகைச்சல் காணும்போதே வீட்டைவிட்டு வெளியேறி விடுவான். அவனுக்குக் கலியாணம் ஆன மூணாம் நாள், அப்பா கிளம்பிப் போயாச்சு.
மனுஷ ன் குடிப்பானோ? சகவாசதோஷம் அப்படி யொன்றும் தெரியவில்லையே, சிகரெட் நெடிதான். அதுவும் எப்பவோதான்–
அப்பா, நீ அம்மாவைப் படுத்தின பாடுக்கு, உனக்குக் கிடைக்க வேண்டியதுதான் கிடைச்சிருக்கு, எந்த மரத்தடியில் குடல் அறுந்து குற்றுயிராய்க் கிடந்தாயோ, எந்தக் கட் டெறும்புச்சாரி, உன் உடல் மேலேயும் உள்ளேயும் புகுந்து மொய்த்ததோ?
”சேதுராமன்!”
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே சென்றான்…
நாட்கள் ஊர்கின்றன.
அப்பாவுக்கு அத்தனையும் வேணும் என்று தோன்றிய வேகத்தை நாளாக ஆகக் கடைப்பிடிக்க முடியவில்லை.
அந்தக் குத்து மீசைக்கிடையில், தேங்காயுடைத்தாற் போன்று, சிரிப்பில், புன்சிரிப்பில், வெளிப்படும் அந்தப் பல் வரிசை, அந்தத் தாடையிறுக்கம், நூல்கட்டிய ஜியோமிதிக் கோடின் தூயசரிவில் அந்த நெற்றி விசாலம். ஆள் அழகன் மட்டுமல்ல, ஆளப்பிறந்த களை.
அதுதான் அம்மாவுக்கு அத்தனை உதை வாங்கியும், இத்தனை வயதாகியும் மயக்கம் தெளியவில்லையோ? அம்மா ஒரு அசடு. ரகளையானால் மூணு நாளாவது பேசாமல் இருக்கணும். அடுத்த அரை மணிக்குள் இன்னிக்கு உங்களுக்குப் பிடிச்ச டிபன் அடை. இன்னிக்கு ரேடியோவில் உங்களுக்குப் பிடிச்ச கச்சேரி – ஆலத்தூர் சகோதரர்கள்…’ கெக்கேக்கே, என்றால் மனுஷனுக்கு ஏன் மண்டைக்கு ஏறாது?
அப்பா, அம்மாவை ஏசியதில் அரைக்கால் பங்கு செல்லம் என்னிடம் கேட்டுப்பளா? உன்னோடு வாழ்ந்தது போதும்’னு எப்பவோ பிறந்த வீட்டுக்குக் கம்பி நீட்டியிருப் பாள். சொல்லவும் முடியவில்லை. மெல்லவும் முடிய வில்லை. என்றைக்கு ஒருநாள் எனக்கும் செல்லத்துக்கு மிடையில், எங்கே போய் முடியப்போகிறதோ? சிறிசுகளின் சச்சரவுகளைத் தீர்க்க, அவர்கள் சுபாவங்கள் படியும்வரை அவர்கள் தடுமாற்றத்தை ஒழுங்குபடுத்தப் பெரியவாள் வேண்டியிருக்கிறது. அதற்கு அம்மா பற்றாது. அப்பாவின் விழி வேண்டும், அவர் கர்ஜ்ஜனை வேண்டும். அதையே ஒரு வேளை செல்லம் விரும்புவாளோ?
இந்தப் படிப்பு, பண்பு எல்லாம் ஒரு ஸ்டேஜ்வரை தான். நம் தோலைச் சுரண்டினால் நாம் எல்லோருமே மாந்தாவிகள் தான். நான் இப்படிப் பாஷைப் படுத்தலை தான், அப்பா ஆரம்பத்திலிருந்தே செயல்படுத்தினாரோ?
“ஏண்டா ஸேது. ஒவ்வொருத்தரா திரும்பிண்டிருக்காப் போலிருக்கே! Black outஐக் கூட எடுத்துட்டான். நாள் ஆறது. அப்பா ஏன் இன்னும் வரல்லே?
‘யுத்தம்னா, நீ என்ன கத்தரிக்காய்க் கடையில் சொத்தை பொறுக்கற மாதிரின்னு நினைச்சுண்டிருக்கையா? யுத்தம் சமுத்ரம்மா. யார் யார் எங்கெங்கேன்னு பிரிக்கறத் துக்கே நாளாகும்.’
“அப்பாவுக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோடா?”
உள் வேதனையில் அம்மாவுக்குப் புருவங்கள் நெரிகை யில், திடீரென அழகிட்டாள். அப்படி ஏதேனும் ஆக் சுன்னா தகவல் தெரிவிப்பா. தகவல் தெரியல்லேன்னா, தெரியல்லேன்னு தெரிவிப்பா. நெஞ்சு முண்டை விழுங் கினான். நெஞ்சு முள் குத்திற்று. “ஏண்டா கண் கலங் கறது. என்னவாவது?” அம்மா னக அவள் மார்க்குலையில் தவித்தது. ஒண்ணுமில்லே. எண்ணெய் தேச்சுண்டு நாளாச்சு. ஸே து அவசரமாய்க் கழன்றுகொண்டான். இந்தப் பொய் இவ்வளவு பெரிய சுமையாயிருக்குமென்று அவன் காணவில்லை. அதைக் கடைசிவரை சாதிக்கத் தனக்குத் தகுதி இல்லையென்று உணர்ந்ததும் திகிற்புகை கால் கட்டை விரலிலிருந்து உச்சி மண்டைவரை உள்ளே பரவிற்று.
அந்தத் தந்தியைக் கிழித்தெறிய அவனுக்குத் தைரியம் இல்லை. விஷயத்தை என்றேனும் அவிழ்த்துவிட நேர்ந்தால் அதுதானே சாக்ஷிக்கு வர வேண்டும்! அவன் எங்கு போனாலும் கூடவே அதுவும் சென்றது. எங்கேனும் அசதி மறதியாக வைத்துவிட்டால், கீரைக்காரிக்குச் சில்லரைக்காக செல்லம் hanger இல் தொங்கும் pant pocket இல் கைவிட்டு அங்கு அது அவள் கையைக் கடித்துவிட்டால்-
“என்னடா ஸேது, வீட்டுக்குள்ளேகூட சொக்காயைக் கழட்டமாட்டேன்கறே? என்ன தான் உனக்கு உடம்பு? முகமே சரியாயில்லையே!”
“அவருக்குப் புதுசா அர்ச்சுன மச்சம் உண்டாயிருக்கு.. அதான் யாருக்கும் காட்டமாட்டார். “
“என்னடா செல்லம் சொல்றாள். எனக்கு ஒண்ணும் புரியல்லியே!”
கதா காலக்ஷேபம்னு அம்மா போவதில் குறைச்ச லில்லை. ஆனால் யார் கதை கேட்கப்போறா?
அம்மாவுக்கு நாளுக்கு நாள் சோபனங்களுக்கு அழைப் புக்குக் குறைவே கிடையாது. நாளுக்கு நாள் அம்மாவுக்குக் களையும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அணையும் முன் கொழுந்து, அவள் கழுத்துக்கு, உலைக்கு, அந்தத் தேஜஸ்ஸே அத்தாக்ஷியோ? ஒருவரும் தன்னைச் சுற்றி யில்லாத சமயத்தில் காத்திருந்தாற்போல் அவனையறியா மலே விக்கி விக்கி அழுகை வரும்.
ராமா!
யார் கண்ணுக்கும் தெரியாமல் தனக்கு மட்டும் படும், இந்தத் தோள்மேல் குரங்கு சவாரி தாங்கமுடியவில்லை.
Electric train?
Lorry?
Level crossing?
யாருக்கும் அகஸ்மாத்தாய்ப் படணும்.
அப்புறம் அம்மா, செல்லம், குழந்தைகள்?
செல்லம் படித்த பெண், உத்தியோகம் பண்ற பெண், எப்படியும் பிழைத்துக்கொண்டு விடுவாள். அம்மாதான் பாவம் – எனக்கு ஏன் இப்படித் தோணறது? இந்த வீட்டுக்கு என்ன வந்துடுத்து? தப்பிக்கவே வழியில்லையா?
அம்மாதான் பாவம், பிரகாஷ் அப்படியே அவன் தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கான். அம்மா, என்னை மன்னிச்சுடு. நான் எல்லாம் நல்லதுக்குத்தான் நினைச் சேன்.
ரயில் தடதடவென்று அவன்மேல் பாய்ந்தோடிற்று. எப்படி நான் தண்டவாளத்திடையில் விழுந்தேன், விழ முடியும்? All over. இதென்ன புது உலகில் விழிப்பா?
விடிவிளக்கில் கூரையில் தூலங்கள் பாய்ந்தன.
அம்மாடி! மார் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. கனவே இப்படி இருந்தால் நனவு எப்படியிருக்கும்? அதுவும் அப்பா உங்களுக்கு – அப்பா! அப்பா! யாரோ தோளைப் பிடித்து உலுக்குகிறார்கள்.
“என்ன துக்கமாடி துர்க்கனாக் காண்றேள்? உங்களுக்கு இந்த நாலு மாஸமா என்னமோ பிடிச்சுண்டிருக்கு! சந்தேகமேயில்லை. “
அன்று வெள்ளிக்கிழமை. பிற்பகல் அம்மா எங்கோ சுபாஷணி பூஜையாம், இன்னும் திரும்பவில்லை. யார் எங்கே போனால், எங்கே வந்தால் என்ன?
அவன் நாற்காலியில் முழங்கால்களுக்கிடையே கைகளையும் கோர்த்த வண்ணம், சுவரை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்.
வாசலில் கார் நிற்கும் சப்தம்.
செல்லம் அவசரமாய் மேலே ஓடிவந்தாள். “உங்களை யாரோ பார்க்க வந்திருக்கா-” என்று சொல்லிக் கொண்டே. ஆனால் அதற்குள் அவளைத் துரத்திக்கொண்டு மாடியேறி வரும் பூட்ஸ் கதவை அதட்டலாய்த் திறந்தது.
“Hello son! how are you? வீட்டில் யாருமில்லே?”
ஸேதுவின் உடல் தானாக எழுந்தது. முகத்தில் மாறி மாறி சிவப்பு, நீலம், வெள்ளை – வாய்பிளந்து நாக்கே கூரையை முட்டிற்று. ஆனால் சத்தம் வரவில்லை. கை அவரைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்துத் தவித்தது.
what is the matter with you? Have you seen a ghost? Ah, இவள்தான் நாட்டுப் பெண்ணா என்ன இந்த வயசி லேயே கிழவி ஆயிட்டையே? அவள் எங்கே? வழக்கப்ர காரமா? என்ன சொன்னாலும் அவள் திருந்தமாட்டாளே!”
ஸேதுவின் கைகள் அவன் உடம்பில் எதையோ தேடித் தவித்தன.ஆ! தந்தியை உறையோடு நீட்டினான்.
உறையிலிருந்து எடுத்து, அக்கண்கள் தந்தியை வெள் ளோட்டம் விட்டன.
“..A mistake. These things happen; you know. ஒரே பேர். அதே initial. ஒரே rank – இதைச் சூடாமணி மாதிரிக் காப்பாத்தி வெச்சிருந்தையா?”
தந்தி நாலு சுக்கல்களாய் அவர் காலடியில் விழுந்தது.
(அதுதான் முறை. சூடாமணிதான். தந்திக்குரியவர் அவர்தானே!’அப்பாடி!)
திடீரென்று அந்த மேட்டு விழிகள் கோபத்தில் விரிந்தன.
“என்னடா தந்தியைப் பார்த்து உன் அம்மா வேஷம் போட்டுண்டுட்டாளா”
அப்பா அப்படிக் கேட்டது அவனுக்கும் சிரிப்பும் அழுகை யும் ஒரே சமயத்தில் பீறிட்டன. காலடியில் பூமி கிடு கிடென… அப்பா அவனைச் சட்டெனத் தாங்கிக்கொண் டார். என்ன தோள்கள்!
“He has fainted away! Bring some water. செல்லம் சமையலறைக்கு ஓடினாள்.
ஆனால் ஸேதுவுக்கு உள் ப்ரக்ஞை மாறவில்லை. ஆம் இது ஒரு ஆச்சரியமில்லை. தந்தியை இத்தனை நாள் தாங்கிக்கொண்டிருந்தது ஒரு பக்கமிருக்கட்டும். முதலில் மறைத்துவிட வேண்டும் என்று தோன்றியதற்கே காரணம் என்ன?
அது அந்தக் குலராமனுக்குத்தான் வெளிச்சம். மேகங் களைப் பிளந்துகொண்டு சூரியன் கிளம்புவது போல் இத்தனை நாள் அப்பா மேல் பாஷாணம் பாலாய் மாறும் இன்பப் பயங்கரத்தில் அப்பாவைத் தரிசிக்கையில், அவர் வெறும் ராமப்ரஸாதாக இல்லை. தான் நினைக்காவிடினும் பரம்பரை, தன் அகண்ட கருணையில் வழங்கிய ராமப்ரஸாத மாகவே தெரிந்தார்.
அப்பா. உங்களை நான் முத்தமிடலாமா?
– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |