இரண்டாவது தாய்




தீபாவளி! விரல் விட்டு எண்ணிவிடும் நாட்களே உள்ளன. பத்து நாட்களுக்கு முன்பே பண்டிகை கால ஊக்கத் தொகை பெற்றுவிட்டான். அதற்காக அவன் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. வாரத்தில் ஆறு நாட்கள் ஓய்வே கிடையாது. ஞாயிறு மட்டும் எட்டு மணி வரை தூங்கும் அவனை, ‘இதென்ன எழவெடுத்த தூக்கம் தூங்குறாரு’-என்ற மனைவியின் வசை மொழி கேட்டு எழுந்தான் – பரத். ஆண்களுக்கு நிகராக பெண்கள் உழைத்தாலும் ஆண்களை போல் கடுமையான உழைப்பாளியாக பெண் இருக்க முடியுமா. மனதுக்குள்ளே வெதும்பினான்.

பெண்கள் உரிமைக்காகவும்,பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்கிறார்கள். எத்தனை வீடுகளில் ஆண்கள் கையில் விலங்கிடாத கைதியாய் பேச்சுரிமை இன்றி தவிக்கிறார்கள்…நினைத்துப் பார்த்தான்.
அதிகாலையிலே ஆண்வர்க்கம் உழைக்கத் துவங்கிவிடுகிறது. செய்தித்தாள் வினியோகம், பால் வினியோகம், காய்கறிகளை மார்கெட்டுக்கு எடுத்து செல்லுதல், பூக்களை பறித்து பஜாரில் விற்று வருதல், ஆறு மணி சிப்டிற்கும், ஏழு மணி சிப்டிற்கும் பணிக்கு செல்ல நாண்கு மணிக்கே ரயில்வே பிளாட்பாரங்களில் நடுங்கும் குளிரில்…என்று அதிகாலையிலே ஆண் வர்க்கம் உழைக்கத் தொடங்கிவிடுகிறது.
பரண் மேலே உள்ள சாமான்சட்டுக்களை எடுத்து கீழே போட்டு, மேலே கீழேயெல்லாம் சுத்தமாக ஒட்டடை அடித்து, கலக்கி வைத்த சுண்ணாம்பை அடிக்கச் சொல்லி சமையலறையிலிருந்து வந்த கட்டளையை ஏற்று துடப்பத்தை கையில் எடுத்து தலைப்பா கட்டிக் கொண்டு இயங்கத் துவங்கினான்-பரத்.
மனைவிக்கு பட்டுச் சேலை, மகளுக்கு பட்டுப் பாவாடை, மகனுக்கு கலாச்சார வேஷ்டி சட்டை என்று பண்டிகை கடன் சுமைகள்.தனக்கென்று எந்த கோடியும் எடுக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்த கால்சட்டையும், மேல்சட்டையையும் தான் துவைத்து தேய்த்து அலமாரியில் பத்திரப்படுத்தினான்.
சந்தைக்கு சென்று வர மனைவியின் கட்டளை குளியலறையிலிருந்து-வழக்கம் போல் ஏற்றுக் கொண்டு கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினான். தரையோடு தரையாக தேய்ந்து போன செருப்பை மாற்ற முடியவில்லை. அதற்கான நேரங்கள் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது.எத்தனை அடிமைத்தனம்-சூன்யத்தில் விழுந்தது போலிருந்தது அவனுக்கு.
தாயின் அரவணைப்பில் இருக்கும் போது எத்தனை சுகமாக இருந்தது. கற்பப் பையின் கனகனப்பில் எந்த சிந்தனையுமின்றி கண்களை மூடி உறங்கும் சிசுவைப் போல நிச்சலனமற்ற பொழுதுகள் அவை-நினைத்துப் பார்த்தான் பரத். தன்னலமற்றவள் தாய். அம்மாவின் உபச்சாரங்களை நினைவுபடுத்தி பார்த்தான். அழுக்குப் படியாத சட்டை, நேரம் தவறா சாப்பாடு, சனிக் கிளமைகளில் எண்ணைக் குளியல், ஜலதோஷம் என்றால் கசாயம், தலை வலி என்றால் நெற்றியில் பச்சலை பத்து. நெஞ்சில் கபம் கட்டும் போது தூதுவளை துவையல்-என்றெல்லாம் மனசுக்குள்ளேயே மருகி மருகி யோசித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
“ஏங்க மார்கெட்டுக்கு போனீங்களே ஒரு பினாயில் பாட்டிலும், ப்ளீச்சிங் பவுடரும் வாங்கி வந்திருக்க கூடாதா?”
“எதுக்கு?”
“சொல்ல மறந்துட்டேன்…வீட்டைக் கழுவி துடைச்சு விடனும். அப்பறம் உங்களுக்கு நேரம் கிடைக்காது”
பரத்துக்கு பதவிசான குணம்தான். சாது மிரண்டால் காடு கொள்ளாது. எதிரில் இருந்த குடத்தை எட்டி உதைத்தான். ‘நங்ங்..!’_என்ற ஓசையுடன் குடம் அலறியது. சில நிமிடங்கள் வரை சப்தம் அறைக்குள் மண்டலித்துக் கொண்டிருந்தது. பரத்தின் மனையாட்டி மருண்டு போனாள். பசி வயிற்றைக் கிள்ளியது. கட்டிலில் சென்று கவிழ்ந்தான். பரத்தின் மனதில் பரவிக்கிடந்த சூன்ய உணர்வுகள் சன்ன சன்னமாக குறைந்தது. அல்லது நீங்கி அறை முழுவதும் அமைதி நிலவியது. தூங்கிவிட்டான். தூக்கத்தில் கிடைக்கும் மயான அமைதி வேறெதிலும் கிடைப்பதில்லை. ஆனால், பரத் விஷயத்தில் சற்று நேர் மாறாக இருந்தது. கனவு. புரட்டி எடுக்கும் கனவு. நெஞ்சு புடைத்து மூச்சு வாங்கினான். இறந்து போனான்.
‘டண் டண் டணக்கு!, டண் டண் டணக்கு!’_என்று தப்பை தட்டும் ஓசை கேட்கிறது. இடையிடையே சங்கு ஊதும் சப்தமும் கேட்கிறது.
ஆம்! பரத் இறந்து விட்டான். கனவில்தான். அனைத்து சொந்த பந்தங்களுக்கும் சாவு சேதி சொல்லியாகிவிட்டது. பரத்தை நன்றாக கழுவி புதுக் கோடியில் சுற்றி நாசியில் பஞ்சை வைத்து அடைத்து,கால்களின் பெருவிரல்களை ஒரு சேர கட்டி வீட்டின் முற்றத்தில் கிடத்தியிருந்தார்கள். தலைமாட்டின் ஒருபுறத்தில் மனைவி தலைவிரிக் கோலமாய் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். மறுபுறத்தில் அம்மா, ‘நான் இருக்க நீ போயிட்டியே!’_என சொல்லி நெஞ்சை தட்டி அழுது கொண்டிருக்கிறாள். பாடை தயாரானது. உறவினர்கள் கூடி பரத்தின் பூத உடலை பாடையில் கிடத்தி தூக்கி செல்கிறார்கள். அம்மாவும்,மனைவியும் சிறிது தூரம் அழுது வந்த பின் திரும்பி சென்றுவிடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டையும் சாவு கடந்து செல்லும் போது வாசலில் தண்ணீர் ஊற்றி பிணத்தின் தாகம் தனிக்கிறார்கள்.
சாவு ஊர்வலம் தெருவைக் கடந்து பிரதான சாலையை அடைகிறது. சாலையை மறித்து சரக்கு லாரியிலிருந்து ரேஷன் கடைக்கு அரிசி மூட்டையை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது லாரியிலிருந்து அரிசி மூட்டைகள் அவிழ்ந்து அத்தனையும் நடு ரோட்டில் சிந்திவிடுகிறது. பாடையை நடு ரோட்டிலேயே போட்டுவிட்டு உறவினர்கள் ஓடிச் சென்று அடித்தும்-இடித்தும் சிந்திய அரிசியை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அனாதையாக விடப்பட்டான் பரத். பூத உடலிலிருந்து ஆவி விட்டகன்று தனியாக நின்று இறந்து போன பரத்தை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தது. ஆவி பரத்துக்கு பூதபரத்தின் மேல் பரிவு ஏற்படுகிறது. பாபி பிரக்ஞையற்று நிர்மூலமாய் கிடக்கிறானே. உடலெங்கும் ஓடிக் கொண்டிருந்த ரத்தம் உறைந்து போய்விட்டதே. ‘லப்டப்’_என்று அடித்துக் கொண்டிருந்த இதயம் கல்லாகிப் போனதே. திரண்ட புஜமும் அகன்ற மார்பும் தளர்ந்து கூழாகிக் கிடக்கின்றதே ஆவி பரத் அழுதே விடுகிறான். தனக்கும் இந்த உலகுக்கும் உள்ள கணக்கு வழக்குகள் முடிக்கப்பட்ட பின்பும் ஒரு அற்ப ஆசை.அம்மாவையும், மனைவியையும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வந்தால்லென்ன. ஓடுகிறான் பரத். சாலையை கடந்து தெருவைக் கடந்து தன் வீட்டை வந்தடைகிறான். தன் வீட்டை சுற்றி இருள் சூழ்ந்திருக்கிறது. எண்பது வயதடைந்த தன் தாத்தா கயிற்றுக் கட்டிலில் செருமிக் கொண்டு கிடக்கிறார். சாற்றியிருந்த கதவை தட்டுகிறான். ‘அம்மா!அம்மா!’ வென குரல்யெழுப்புகிறான். சிறிது தயக்கத்துடன் அம்மா வந்து கதவை திறக்கிறாள். ஆவி பரத் நின்று கொண்டிருக்கிறான். சில நிமிடங்கள் கலவர முகத்துடன் மேலும் கீழும் பார்க்கிறாள். பரத்தின் பாதம் தரையில் பாவவில்லை. அப்பாவை கூப்பிடுகிறாள். அப்பாவும் ஓடி வந்து அம்மாவின் முதுகுப் புறமாக நின்று பார்க்கிறார்.
‘நம் பிள்ளை மாதிரி இருக்குதே. ஆவியாக இருக்குமோ?’
‘டமார்!’_என்று கதவை சாற்றிவிடுகிறார்கள்.
‘டமார்! டமார்!’_என்ற ஓசை ஆவி பரத்தின் நெஞ்சை தாக்குகிறது. காற்றில் கலந்து அண்டத்திலும் பேரண்டத்திலும் எதிரொலிக்கிறது.
‘அம்மா! அம்மாவா இப்படி செய்கிறாள்?’_ஆசையோடு அரவணைப்பாள் என்று நினைத்தவனுக்கு பேரிடியாய் இருந்தது. அருகிலேயேதான் மனைவியோடு குடித்தனம் நடத்திய வீடு இருக்கிறது. ஓடிச் சென்று பார்த்தான். பூட்டிக் கிடக்கிறது. ‘அடப்பாவி..!’ அலுத்துக் கொண்டான். மாதத்தில் பதினைந்து நாட்கள் அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவாயே. இன்று முதல் நான் இல்லையென்று ஆன பின்பு நிரந்தரமாக சென்றுவிட்டாயோ. அழுது கொண்டே ஆவி பரத் மயானம் நோக்கி நடக்கலானான். கனவு முடிந்துவிடுகிறது.
திடும்மென விழித்துப் பார்த்தான். நெஞ்சில் கை வைத்துப் பார்த்தான். இதயம் துடித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் போலும். மெல்லியதாய் சந்தோஷம் அடி வயிற்றில் பரவியது. இறைஞ்சும் பார்வையுடன் எதிரே மனைவி, கையில் கண்டங்கத்திரி கசாயத்துடன் நின்று கொண்டிருந்தாள். நெற்றியில் ஏதோ மொடமொடத்தது.தலைவலிக்காக போடப்பட்ட சுக்குப் பத்து.குழந்தைகள் ஆளுக்கொரு மூலையாக சுருண்டு படுத்துக் கிடந்தார்கள்.
“எனக்கு என்ன ஆச்சு?”_பரத்.
“குளிர் காய்ச்சல்!” மனைவி.
“குளந்தைகள் சாப்பிடலையா?”
“அப்பா சாப்பிடலையாம்!”
“சாம்பார் வச்சு சாதம் ஆயிடுச்சா?”
“இல்லை, கஞ்சிதான் வச்சேன்”
“ஏன்?”
“உங்களுக்கு உடம்பு முடியலையே!”
“நீயும் சாப்பிடலையா?”
“நீங்களும், குழந்தைகளும் சாப்பிடாம நான் எப்படி..?”
அப்பா சாப்பிடவில்லை என்பதால் பிள்ளைகள் சாப்பிடவில்லை. பிள்ளைகளும் கணவனும் சாப்பிடவில்லை என்பதால் அவள் சாப்பிடவில்லை. பரத்துள் மையம் கொண்டிருந்த ‘நான்’செத்துவிட்டது. மனதுள் எழும்பிய சலனங்கள் அடங்கின. நீண்ட நாள் புயல் மழைக்கு பின்பு, புயல் ஓய்ந்து மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியது போன்ற உணர்வு ஏற்பட்டது பரத்துக்கு.
மனைவியும் இரண்டாவது தாய்தான். பரத் தனது தவறுகளை மனைவியிடம் கூறி சமரசம் செய்து கொண்டான். பின்பு, தனது மேல் சட்டையை அணிந்து கொண்டு பஜாருக்கு கிளம்பினான். பினாயிலும், ப்ளீச்சிங்கு பவுடரும் வாங்கதான். வீடெல்லாம் அழுக்கு. கழுவிவிடப் போகிறான்.
– ஜனவரி 2023, தமிழ் நெஞ்சம் மின்னிதழில் பிரசுரமானது.