சொல்ல முடியாத கதை…!
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 2,285
(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13
அத்தியாயம்-7
‘‘என்னப்பா இப்படி சொதப்பிட்டான்?!‘‘ – அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை சேகர் வெளியில் வந்ததும் கொட்டினான்.
‘‘என்னமோ கணக்கு வழக்கெல்லாம் கேட்கிறானே.. நாம சரியா கொடுப்போம். எடுத்து நீட்டுவான்னு எதிர் பார்த்தா அஞ்சுல ஒன்னு தர்றேன்னு சொல்லி முகத்துல கரியைப் பூசிட்டான். இதுக்குத்தான் இந்த ஆடம்பரமா…?!‘‘ – தினேஷீக்கு முகம் சிவந்தது.
‘‘சரி அடுத்து …’’ சிவா.
‘‘இவன் மாதிரி இன்னும் நாலு பேர்கிட்ட போனா… என்னமோ யாசகம் கேட்கிறது போல ஆளுக்குக் கொஞ்சம் பிச்சைக் காசு போடுவானுங்க. அதுக்கு ஆயிரத்தெட்டு கேள்விங்க கேட்பானுங்க. அதை வசூலிக்கப் பத்து தடவை வேற நடக்கனும்.‘‘
‘‘கஷ்ட நஷ்டம் இருக்கத்தான்ப்பா செய்யும் ‘‘- இடையில் சிவா சொன்னான்.
அதை சிவபுண்ணியம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ‘‘இதுக்குப் பேசாம நாமே ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கலாம்.’’ சொன்னான்.
‘‘அதுக்கு ஆளுக்கு ஆயிரம் போடனும்.‘‘
‘‘அதுவும் போதாது, நாம ரெண்டாயிரம் மொய் வைச்சா பத்தாயிரம் தேறும். அதை வைச்சு சமாளிக்கலாம். கீழ்ப்பாக்கத்துல கொண்டு விட்டு மனிதாபிமானத்தோடு செய்ஞ்சிட்டோம். இனி புள்ள பொறப்பு வளர்ப்பு உன் கையிலங்குற திருப்தியோட விட்டு வந்துடலாம்.‘‘
‘‘ரெண்டாயிரம் மொய் வைக்கிறது நமக்கு சாத்தியப்படாது.‘‘ – சேகர் திட்டவட்டமாக சொன்னான். அவன் சொன்னது சரியாய் இருக்க எல்லோரும் அதை ஏற்றுக்கொள்வது போல் மௌனமாக இருந்தார்கள்.
‘‘மத்தவங்களைப் போல நாம கண்டுக்காம போகலை. இரக்கப்பட்டு செய்யிறோம் என்பதற்காக உடல் உழைப்பும் கொஞ்சம் பணமும் செலவழிக்கலாம். அதுக்காக ஒரு மாசத்துல ரெண்டாயிரம் செலவழிச்சு நாம கஷ்டப் பட முடியாது.‘‘- சேகர் சொன்னதையே திருப்பி சிவா சொன்னான்.
‘‘பேசாம நாமும் எல்லோரையும் போல விலகிடுறது நல்லது.‘‘ சொன்ன தினேஷை எல்லோரும் பார்த்தார்கள். அவர்கள் பார்வையைப் புரிந்து கொண்ட அவன்‘‘ நம்ம கஷ்டத்தை நெனைச்சி சொன்னேன் ! ‘‘சமாளித்தான். ‘‘எவன்கிட்டேயும் வசூலுக்குப் போய் கை ஏந்தாம ராணிக்கு முன்னால ஒதியன் மரத்தடியில துண்டை விரிச்சு வைச்சா போதும் வசூல் கொட்டும் ‘‘- சிவா சொல்லி சிரித்தான். ‘‘ஜோக் வேணாம் சிவா. நாம சீரியஸா பேசுவோம். ராணி விசயத்துலநாம இறங்கிட்டோம். அடுத்து என்ன..?தாய் புள்ளையை எப்படி காப்பாத்தறது ?‘‘- தினேஷ் கொஞ்சம் காட்டமாகவே பேசினான்.
‘‘மடத்துல கேட்டுப்பார்க்கலாம்.’’
புரியாமல் பார்த்தார்கள்.
‘‘அனாதை குழந்தை பெரியவர்களைத் தத்தெடுத்து வளர்க்கிற மடம்.’’ சேகர் தெளிவாகச் சொன்னான்.
அவன் சொன்னது எல்லோருக்கும் பிடித்திருந்தது. முகங்களில் தெளிவு திருப்தி வந்தது.
எல்லார் மனங்களிலும் அந்த மடம் வந்தது.
அது கிரிஸ்தவர்கள் நடத்தும் நிறுவனம். அந்த நிறுவனத்தின் வேலையே அனாதைகளுக்கு ஆதரவு கொடுப்பது. இருபது குழந்தைகள் வளர்கிறார்கள். ஐம்பது இளங்குமரிகள் ஊனமானவர்களிருக்கிறார்கள். முதியோர் இல்லம் என்று பெயர் போடாமல் பத்துப் பதினைந்து பாட்டன் பாட்டிகளிருக்கிறார்கள்.
வருமானம் ? வெளிநாட்டிலிருந்து உதவி. அது எந்த நாடு தேசம். எவருக்கும் தெரியாது. மடம் சோம்பி, சும்மாக் கிடக்கவில்லை. அங்கு இருப்பவர்கள் உழைக்கிறார்கள். மடத்தை நிர்வாகம் செய்யும் கன்னிகாஸ்திரிகளிலிருந்து வேலை செய்கிறார்கள். முக்கியம் தையல் வேலையில் பெண்களுக்கு அதிக ஈடுபாடு. உள் நாடு வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படுகின்றன. அது இல்லாமல் தோட்டம் பயிரிடுகிறார்கள். காய்கறி உற்பத்தி செய்கிறார்கள். ஆள் வைத்து நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். மருத்துவமனை நடத்துகிறார்கள்.
இந்த மருத்துவமனை மக்களுக்கு அனாதை தொட்டில். பிள்ளையைப் பெற்றுவிட்டு சத்தம் போடாமல் போய்விடுகிறார்கள். இப்படி நடக்கக்கூடாது என்பதற்காக பிரசவத்திற்குச் சேர வரும் பெண்களிடம்… உன் பேரென்ன, எந்த ஊர், புருசன் யார், அப்பா அம்மா யார் என்றெல்லாம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு, நன்றாக விசாரித்துதான் சேர்க்கிறார்கள். அப்படியும் மக்கள் இவர்களுக்குக் கடுக்காய்க் கொடுத்து விடுகிறார்கள். பொய் விலாசம் கொடுத்து கம்பி நீட்டிவிடுகிறார்கள். யார் எப்படி தேடியும் கிடைப்பதில்லை. இது மட்டுமில்லாமல் எங்காவது பிள்ளையைப் பெற்று அரசு தொட்டில் போல வாசலில் கிடத்திவிட்டு செல்பவர்கள் நிறைய. வழி இல்லையென்று கொண்டு வந்து விடுபவர்கள் கொஞ்சம்.
மறுநாள் சிவபுண்ணியமும் சிவாவும்தான் சென்றார்கள். தினேஷ் ஒதுங்கிக் கொண்டு விட்டான்.
இவர்கள் மடத்தில் அடியெடுத்து வைக்கும்போது சேகர் வந்து சேர்ந்தான்.
நிர்வாகி…அறுத்தைந்து வயது கன்னிகாஸ்திரி கண்களில் கருணை பொங்க சாந்த சொரூபியாக இருந்தாள். இவர்கள் சொன்னதை அனுதாபத்துடன் கேட்டாள்.
ஆனால் மொத்தக் கதையையும் கவனமாகக் கேட்டு… ‘‘மன்னிக்கனும்!‘‘- மெல்ல சொன்னாள்.
‘‘மேடம் !‘‘- சிவா துணுக்குற்றான்.
‘‘அவளை பராமரிச்சு புள்ளையை எடுக்கிறது கஷ்டம் ?‘‘ சொன்னாள்.
‘‘உங்க மருத்துவமனையில வைச்சு பைத்தியத்துக்கும் வைத்தியம் பார்த்து பிரசவம் பார்க்கலாம் மேடம். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். ?‘‘
‘‘மனநோய்க்கு எங்ககிட்ட மருத்துவம் கெடையாது, நோயாளியைக் கட்டிப் போட்டு தனி அறையில அடைச்செல்லாம் எங்களால வைத்தியம் பார்க்க முடியாது. இன்னைக்கு இரக்கப்பட்டுச் செய்தால்… நாளைக்குப் பத்து கேஸ் வரிசையா வரும். முடியாதுன்னு ஒதுக்கினால் அந்த கேஸ் எப்படி பார்த்தீங்கன்னு கேள்வி வரும். மேலிடத்துக்கும் நாங்க பதில் சொல்லியாகனும். நாங்க ஏசு பேரால் மக்களுக்குத் தொண்டு செய்யத்தான் எங்க வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்கோம். அதே சமயம் இங்க உள்ளவங்க பாதிக்கப்படாமலும் நாங்க வேலை செய்யனும். பிள்ளையைப் பிரிச்சி கொண்டு வாங்க தாராளமா ஏத்துக்கிறேன்.’’விலாவாரியாய் நிலையைச் சொன்னாள்.
‘பிள்ளையைப் பிறக்க வைக்கத்தானே இந்த ஏற்பாடு !‘ சேகருக்கு வாய்வரை வார்த்தை வந்துவிட்டது. சொல்லி பிரயோஜனம் ?!… விட்டுவிட்டான்.
‘‘வேற வழி மேடம் ?‘‘ – சிவபுண்ணியம் நம்பிக்கையைவிடாமல் கேட்டான்.
அவள் மௌனமாய்க் கண்களை மூடினாள்.
ஏசுவிடம் மனம் பிரார்த்திப்பது போல் முகம் இருந்தது. மூவரும் துவண்டு போய் அவளைப் பார்த்தார்கள்.
‘விட்டுவிட வேண்டியதுதானா ? எங்காவது போய் தொலை, சாவு, தலை முழுக வேண்டியதுதானா?‘
சிவபுண்ணியத்திற்கு மனசு கனத்தது,
‘பாவி ! பெண் பாவம் உன்னைச் சும்மாவிடாது.‘ மனம் பிள்ளைக் கெடுத்தவனைச் சாபமிட்டது.
‘நாகூரான் தேருடைக்க… தேவூரான் தண்டம் கொடுத்த கதையாய் எவன் செய்த தவறுக்கோ நாம கஷ்டப்படுறோம் பார்.‘ – சேகர் முகத்தில் தானாக வருத்தம் வந்தது.
‘நம்மாள் முடிந்த அளவு முயற்சி செய்தாச்சு. விதி விட்டு விடலாமா..!‘- சிவா ரொம்ப நொந்து போனான்.
‘இந்த கண்மூடல் ஜெபம் யாருக்காக.?? கர்த்தரே ! அந்த உயிர்களைக் காப்பாற்ற முடியாததற்கு மன்னியும் ! என்பதா. மனிதர்களே செல்லுங்கள் என்று விடை கொடுப்பதா ?’ ஆளாளாளுக்குப் புரியாமல் அவளையேப் பார்த்தார்கள். அவள் கண்விழித்தாள்.
‘‘கர்த்தர் மேல பாரத்தைப் போட்டு அந்த உயிர்களை நான் காப்பாத்துறேன்..! ’’ சொன்னாள்.
காதுகளில் தேன் பாய்ந்தாலும் இவர்களால் நம்ப முடியவில்லை.!
அத்தியாயம்-8
காலை விடிந்ததும்….
முதல் வேளையாய் நண்பர்கள் சாந்தி கடைக்கு வந்தார்கள்.
ராணி இல்லை.!
‘‘எங்கே மாஸ்டர் ராணி ?‘‘- சிவா திகைப்பாய்க் கேட்டான்.
‘‘அதை ரெண்டு நாளா காணோம்.‘‘ அவர் டீயை ஆற்றிக் கொண்டே பதில் சொன்னார்.
‘‘எங்கே போனா ?‘‘
‘‘தெரியலை. நேத்திக்குப் பூவம் ஊர்ல நடு ரோட்டுல யாரோ ஒரு பொம்பளை கார்ல அடிபட்டு செத்துப் போயிடுச்சுன்னு இங்கே ஒரு ஆள் சொன்னார். அவளா இருக்குமோன்னு ஓடிப்போய் பார்த்தேன். இல்ல. உங்களையும் ரெண்டு நாளா காணோம.;‘‘
‘‘மறுபடியும் டவுனுக்குப் போய்ட்டாளா ?‘‘- சிவபுண்ணியம் சந்தேகமாக கேட்டான்.
‘‘விசாரிச்சேன். அங்கேயும் இல்ல.‘‘
‘‘என்னாச்சு ?‘‘
‘‘சம்பந்தப்பட்டவன் கொண்டு போயிருப்பான்னு நெனைக்கிறேன்.‘‘
சிவா, சிவபுண்ணியம் புரியாமல் பார்த்தார்கள்.
‘‘பத்திரிக்கைக்கு எழுதிப் போட்டிருக்காங்க. ஆள் வேற தேடுது. மாட்டினோம்ன்னா கண்டிப்பா நாம தொலைஞ்சோம். தலையில கட்டிடுவாங்க. இல்லே புள்ளைப் பொறக்கிறதுக்கு வேண்டிய செலவைப் பாருன்னு சுமத்திடுவாங்க. தப்பித் தவறி இவள் உளறினாலும் ஆபத்துன்னு நெனைச்சு சம்பந்தப்பட்டவன் கொண்டு போயிருப்பான்னு நெனைக்கிறேன்.‘‘
‘‘எங்கே வெளியூருக்கா ?‘‘
‘‘அப்படியுமிருக்கலாம். ஆளை அப்படியே இல்லாமலும் செய்திருக்கலாம் !‘‘- என்று சர்வ சாதாரணமாக சொல்லி இடியை இறக்கினார்.
இவர்களுக்குத் திக்கென்றது.
‘‘கொலை செய்யிறது சாத்தியமா மாஸ்டர் ?.’’ சிவபுண்ணியம் எச்சில் விழுங்கி பயத்துடன் கேட்டான். ‘‘இந்த காலத்துல சாத்தியம், சாத்தியமில்லேன்னு எதையும் நெனைக்க முடியலை. தொட்டவன் தன் தப்புக்கு வருத்தப்பட்டு யாருக்கும் தெரியாம எங்காவது கொண்டு அடைச்சு வைச்சுக்கூட வைத்தியம் பார்க்கலாம். இல்லே இவளே கூட மனம் போன போக்குல எங்கேயாவது போயிருக்கலாம்.‘‘
‘‘நீங்க கடைசியில சொன்னதுதான் நடந்திருக்கும் மாஸ்டர்.‘‘ சேகர் டீயைக் குடித்தபடி சொன்னான்.
‘‘நானும் அப்புடித்தான் இருக்கனும்ன்னு மனசைத் திடப்படுத்திக்கிறேன்.‘‘
‘‘விட்டது சனியன்னு விடுங்க ‘‘-கணேஷ் திருப்தியாக எழுந்தான்.
அலுவலகம் விட்டு வீடு வந்த பிறகும் சிவபுண்ணியத்திற்கு மனசு சரியில்லை.
‘‘என்ன ஒரு மாதிரியா வர்றீங்க ?‘‘- இவன் வீட்டில் நுழையும்போதே கேட்டாள்.
‘‘ராணியைக் கணோம் சொம்மியா ?‘‘
‘‘பைத்தியமா ?‘‘
‘‘ஆமா.‘‘
‘‘எங்கே ?‘‘
‘‘தெரியலை.‘‘
‘‘பைத்தியம் எங்கேயாவது போயிருப்பா,‘‘
‘‘அப்படி நெனைக்க முடியலை சௌம்மியா.‘‘
‘‘என்ன நெனைக்க முடியலை?‘‘
‘‘யாராவது கடத்திக்கிட்டுப் போயிருப்பாங்களோன்னு தோணுது.‘‘
‘‘ஏன் அப்படி நெனைக்கிறீங்க.!?‘‘
‘‘புள்ள பொறந்தா ஆபத்து தன் வேஷம் கலைஞ்சிடும்ன்னு நெனைச்சி கடத்தியிருக்கலாம்ன்னு தோணுது.‘‘
‘‘அப்படி இருக்க வாய்ப்பே இல்லே.‘‘
புரியாமல் பார்த்தான்.
‘‘மொதல்ல… இவளுக்கு யார் தன்னைக் கெடுத்ததுன்னு சொல்லத் தெரியற அளவுக்குப் புத்தி இல்லே. அடுத்து, குழந்தை முகச்சாயலை வைச்சி யாருன்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம். அப்புடியே கண்டு பிடிச்சாலும் அவுங்களுக்கு அதைப் பத்தி கவலை இல்லே.‘‘
‘‘இந்த இடம்தான் சரி இல்லே சௌம்மியா ! பத்திரிக்கைங்களுக்கு சேதி எழுதிப் போட்டாச்சு. போலீஸ்லேயும் புகார் குடுத்து கண்டுபிடிக்க ஏற்பாடு செய்தாச்சு. நாளைக்கு ஆள் யார்ன்னு தெரிஞ்சா அவமானம். கட்டி வைச்சா வெளியிலேயே தலை காட்ட முடியாது. செலவை ஏத்துக்கிறதும் சிக்கல். இப்படிப்பட்ட சூழ்நிலையில ஆளை இல்லாமலே பண்ணிட்டா மொதல்ல கேட்க நாதியில்லே. பிரச்சனை இல்லே. எங்காவது கொண்டு வைச்சி கதையை முடிச்சா என்னன்னு தோணியிருக்கலாம். அப்படி கொண்டும் போயிருக்கலாம். ‘‘- தன் ஊகத்தைச் சொன்னான்.
‘அப்படி அனாதை பிணமாக கிடந்தால் ?! ‘- நினைக்கவே நடுங்கியது சௌம்மியாவிற்கு.
‘‘அப்படியெல்லாம் கொலை செய்யிறதுக்குச் சாத்தியமில்லீங்க. எங்கே கொலை செய்து எப்படி போட்டாலும்
போலீஸ் கண்டுபிடிச்சுடும்ங்குற பயம் வரும். ஒரு பைத்தியத்தைக் கொலை செய்துட்டு எதுக்கு தூக்கு, சிறைன்னுல்லாம் யோசனை வரும். அந்த அளவுக்கு யாரும் துணிய வாய்ப்பில்லேங்குறது என்னோட கருத்து.‘‘
‘‘இங்கே இருந்தா இவள் என்னைக்கும் சிக்கல், பிரச்சனைன்னு கொண்டு போக வாய்ப்பு உண்டு சௌம்மியா.‘‘
‘‘நம்மால ஒரு பைத்தியம் கஷ்டப்படுதுன்னு பரிதாபப்பட்டு பிரசவிச்சி விடலாம்ன்னும் கொண்டு போயிருக்கலாம் இல்லியா?‘‘
‘‘அப்படிப்பட்டவன் அவளைத் தொட்டிருக்கவே மாட்டான்.‘‘
‘‘ஏதோ போதையில தெரியாம செய்திருக்கலாம். அவன் பார்க்கிற நேரம் இவள் எப்படி கெடந்தாளோ ?! சும்மாவே வயசு குமரி கிழிசல்ல மார்ப தெரியறாப்போல நடமாடுறா..’’
‘‘புள்ளை இல்லாதவங்க புள்ளைக்கு ஆசைப்பட்டவங்க கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு.‘‘
‘‘இதை அவுங்க பகிரங்கமா செய்யலாமே?!‘‘
‘‘செய்யலாம். பைத்தியம் புள்ளைன்னு யாராவது கேவலமா பேசிடப் போறாங்க என்கிற எண்ணத்துல ரகசியமா முடிக்க கொண்டு போயிருக்கலாம்.‘‘
‘‘போகட்டும். எப்படியோ அவள் வயித்துப் பாரம் கழிஞ்சி தாயும் புள்ளையும் சுகமானா சரி.‘‘
‘‘அப்படி ஆனாத்தான் பிரச்சனை இல்லியே. அந்த பொண்ணு உசுருக்கே ஆபத்துன்னா?!‘‘
சௌம்மியாவிற்கும் நினைக்க திக்கென்றது.
‘‘அவ எப்படியாவது போறா. நீங்க ஏன் மண்டையை உடைச்சிக்கிறீங்க ?‘‘- சௌம்மியாவிற்கு கணவன் கஷ்டம் வேதனையாக இருந்தது.
‘‘ரெண்டு உசுர் விசயம்மா‘‘- பாவமாக சொன்னான்.
‘‘அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும் ?‘‘
‘‘ஏதாவது செய்யனும் சௌம்மியா.‘‘
‘‘வீணா புலம்பாதீங்க. நீங்க பத்திரிக்கைக்கு எழுதினது சம்பந்தப்பட்டவங்களுக்கு எப்படித் தெரியும் ?‘‘
‘‘தூண்டில்காரனுக்கு மிதவை மேல கண் சம்பந்தப்பட்டவனே கவனிக்கலாம் .‘‘
வாசலில் யாரோ கதவைத் தட்டினார்கள்.
அத்தியாயம்-9
இரண்டு இளைஞர்கள் நின்றார்கள். ஒருவன் கையில் கேமரா.
‘‘யார் நீங்க ?‘‘ – சிவபுண்ணியம்தான் கேட்டான்.
‘‘நாங்க பத்திரிக்கை நிருபர்கள். நான் விஜயன் இவர் வீரன்!‘‘
‘‘எந்த பத்திரிக்கை ?‘‘
சொன்னார்கள்.
‘‘என்ன விசயம்?‘‘
‘‘எங்க அலுவலகத்துக்கு பைத்தியம் கர்ப்பம்ன்னு தகவல் வந்துது, உண்மையா பொய்யான்னு விசாரிக்க ஆசிரியர் எங்களை அனுப்பிச்சிருக்கார்!‘‘
பத்திரிக்கை வேலை ஆரம்பித்துவிட்டது. சிவபுண்ணியத்திற்குப் புரிந்தது.
‘‘அதுக்கு நான் என்ன செய்யனும்?‘‘
‘‘தகவல் கொடுத்தவங்கள்ல நீங்களும் ஒருத்தர். எங்களுக்கு உதவனும்.‘‘
‘எழுதிப் போட்டவன் எல்லார் பெயரையும் எழுதிப் போட்டுவிட்டானா?!‘ – இவனுக்குள் சிந்தனை ஓடியது. ‘‘சிவா, சேகர், கணேஷ், தினேஷெல்லாம் தேடிப் பார்த்தோம் கெடைக்கலை. நீங்கதான் இருக்கீங்க. ‘‘அவர்களில் ஒருவன் சொன்னான்.
‘‘என்னை எப்படி சரியா கண்டு புடிச்சி வந்தீங்க?‘‘
‘‘சிவபுண்ணியம் வீடு எதுன்னு கேட்டோம். உங்க வீட்டைக் காட்டிவிட்டாங்க.‘‘
‘‘யார்?‘‘
‘‘நாங்க ஊருக்குப் புதுசு சார். யார்ன்னு பேரெல்லாம் தெரியாது. நீங்க உதவுறீங்கன்னு சொன்னா நிக்கிறோம் இல்லே நடையைக் கட்றோம். என்ன…வெட்டி வேலைன்னு ஆசிரியர் திட்டுவார். எவனோ வீணத்தவன் எழுதிப் போட்டிருக்கான்னு ஏசுவார். இதெல்லாம் எங்க தொழில்ல சகஜம்ன்னாலும் நாளைக்கு உண்மையை எழுதிப் போட்டாக்கூட எங்களை கிளப்பிவிட யோசனை செய்வாங்க‘‘.
‘ராணி வேறு இல்லை. சிக்கல் ! எப்படி சொல்வது ?‘ – ‘‘சரி வாங்க ‘‘ துணிந்து வெளியே வந்தான்.
அவர்கள் தொடர்ந்தார்கள்.
சிவபுண்ணியம் நேராக சாந்தி டீக்கடைக்குத்தான் அவர்களை அழைத்து வந்தான்.
நல்லவேளையாக மாஸ்டர் இருந்தார்.
‘‘பத்திரிக்கை அலுவலகத்திலேர்ந்து வந்திருக்காங்க மாஸ்டர்! ‘‘ – என்று சொல்லி அவருக்கு அவர்களை அறிமுகப்படுத்தினான்.
‘‘ராணியைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க‘‘- என்பதையும் சொன்னான்.
‘‘அந்த பொண்ணு இல்லீங்களே !‘‘ – மாஸ்டர் நாசூக்காக விசயத்தை உடைத்தார்.
வந்தவர்கள் அவரைத் திகைப்பாய்ப் பார்த்தார்கள்.
‘‘தம்பிங்க எழுதிப் போட்டதெல்லாம் உண்மை. அது நல்லவிதமா பிரசவம் முடிக்க நாங்க முயற்சி எடுத்ததும் நிசம். வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல தாழி ஒடைஞ்ச கதையா இப்போ அந்த பொண்ணு திடீர்ன்னு காணாம போனதுதான் எங்களுக்கு அதிர்ச்சி. என்ன செய்யிறதுன்னு தெரியாத கைபிசையல்.‘‘ – சொன்னார்.
‘‘பைத்தியம் இங்கே அங்கே எங்காவது சுத்திக்கிட்டிருக்கும் கண்டுபிடிச்சுடலாமே.?!‘‘
‘‘தேடியாச்சு. கெடைக்கலை.‘‘
வந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
‘‘சம்பத்தப்பட்டவங்க கடத்திப் போயிருப்பாங்களோன்னு நெனைக்க பயமா இருக்கு.‘‘
‘‘போலீஸ்ல புகார் கொடுத்தீங்ளா ?‘‘
‘‘அப்போ கொடுத்தோம் இப்போ கொடுக்கலை‘‘ .
‘‘எப்போ கொடுத்தீங்க?‘‘
‘‘பைத்தியம் கர்ப்பமா இருக்கா. கண்டுபிடிக்கனும்ன்னு சொன்னோம். புகார் குடுத்துட்டுப் போங்கன்னு சொன்னாங்களேத் தவிர நடவடிக்கை எடுக்கலை. அதனால இப்போ கொடுக்கலை.‘‘- மாஸ்டர் சொன்னார்.
நிருபர்கள் இருவரும் சிறிது நேரம் அமைதியாய் இருந்தார்கள்.
‘‘அந்தப் பெண் இங்கே கர்ப்பமாய் இருந்தது உண்மை சார். இதோ எதர்க்க அந்த ஒதியன் மரத்தடியிலதான் படுக்கை, இருப்பு. இங்கே மத்தவங்களுக்கும் தெரியும்..‘‘ – மாஸ்டர் உண்மையைச் சொன்னார்.
‘‘சேதி உண்மையா இருக்கலாம். ஆனா நாங்க விசாரிக்க சம்பந்தப்பட்ட ஆள் இல்லியே ?!’’ ஒருவன் சொன்னான். அப்போதுதான் கந்தசாமி நாயக்கர் டீக்கடைப் பக்கம் வந்தார்.
‘‘மாஸ்டர்! இந்த பைத்தியம் அங்கே செத்துக்கிடக்கிறதா சேதி வந்து எல்லாரும் ஓடறாங்க ‘‘- குண்டைப் போட்டார். ‘‘எங்கே ?‘‘- எல்லோருமே அவரைத் திகிலாய்ப் பார்த்தார்கள்.
‘‘நம்ம சிவன் கோயில் குளத்தான்ட.‘‘
சிவபுண்ணியம் உட்பட இருந்த அத்தனைப் பரபரப்பானார்கள்.
– தொடரும்…
– 12-05-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.