கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 5,459 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

மனதை மயக்கும் மாலை நேரம். சூரியன் இருந்தும் இல்லாமல் இருக்கும் நேரம். டில்லி லோதி கார்டன் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. கடைகளில் வியாபாரம் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வரிசை கட்டி கார்கள்இ இரு சக்கர வாகனங்கள் கும்பல் கும்பலாக கிடந்தன. அவரவர்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். தங்கள் தங்கள் வேலைகளைக் கவனித்தார்கள்.

ராகுல் வயது 30. தன் புது ஹுண்டாய் காரில் ஒய்யாரமாக சாய்ந்திருந்தான். கண்களில் கறுப்புக் கண்ணாடி. இடது கையில் தங்க நிற கைக்கடிகாரம். வலது கையில் ஐந்து பவுன் எடையுள்ள தங்க காப்பு. நீல நிற ஜுன்ஸ் அணிந்திருந்தான். மேலே விலை உயர்ந்த துணியில் சட்டை அணிந்திருந்தான். அதில் மேல் பட்டனைக் கழற்றி விட்டிருந்தான். மார்பில் உள்ள கரு முடியில் ஐந்து பவுன் சங்கிலி பளபளத்தது. வலது கையில் சிகரெட் புகைந்தது, அடுத்த கையில் ஆப்பிள் கைபேசி அடக்கமாக இருந்தது.
நல்ல கட்டுமஸ்தான உடம்பு. பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும் அழகு. உடல் முழுக்க வெளி நாட்டு செண்ட். மல்லிகையின் மணம்.

தினமும் மாலை நேரத்தில் இங்கு இவன் இப்படித்தான் நிற்பான். தன் தொழிலுக்கு ஏற்றாற் போல் கடையை இப்படி விரிப்பான். வாடிக்கையாளர்களைக் கவர்வான். அவனைப் பார்த்தால் உல்லாசப்பிரியன் போல்தான் தோன்றும். ஆனால் கண்கள் இரை தேடி மேயும். விசயம் வேறு.

‘‘ராகுல் !’’ அருகில் குரல் கேட்டது.

பார்த்தான்.

எதிரில் தர்மலிங்கம். 40 வயசு. முகம்….பக்திஇ சாந்தத்திற்கடையாளமாக நெற்றியில் பட்டைஇ நடுவில் குங்குமப் பொட்டு. பஞ்சாபி போல வேட்டிஇ சட்டை அணிந்திருந்தார். சட்டை பை கனத்திருந்தது.

‘‘வலைக்கு மீன் வந்துதா ?’’ நெருங்கி அவன் காதருகில் குசுகுசுத்தார்.

‘‘ப்ச் !’’ ராகுல் உதட்டைப் பிதுக்கினான்.

‘‘ஒரு நிமிசம் வர்றேன். !’’ – அவர் அவனை இருக்கச் சொல்லி விட்டு நகர்ந்து கூட்டத்தில் மறைந்தார்.

ராகுலின் உதட்டில் மெல்ல புன்னகை வந்து முகம் மலர்ந்தது.

தர்மலிங்கம் கொஞ்ச நேரத்தில் ஒரு அழகான பெண்ணுடன் திரும்பி வந்தார். அவள் அழகு நிலையத்திற்குப் போய் தன் முகத்தைப் பிளீச்சிங் செய்து…புருவத்தை வில்லாக வளைத்திருந்தாள்.

அவர்கள் வந்து இவன் முன் நின்றதும்….

அவள் இவனை ஏற இறங்க பார்த்தாள். அடுத்த கணம் அவளுக்குள் குப்பென்று உஷ்ணம் பாய்ந்து நாடி நரம்புகளுக்குள் மின்சாரம் பாய்ந்தது. முகம் சிவந்தது.

தர்மலிங்கம் அவளைத் திரும்பி அர்த்தத்துடன் பார்த்தார். அவர் பார்வையைப் புரிந்து கொண்ட அவள் ‘திருப்தி’ என்பது போல் தலையசைத்தாள்.

அதன் பிறகுதான் தர்மலிங்கம் ராகுலிடம் பேசினார்.

‘‘பேர் ஜுலி!’’ அவளை இவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

‘‘நான் ராகுல்!’’ இவன் அவளை நோக்கி புன்னகையுடன் கை நீட்டினான். அவளும் கூச்சமில்லாமல் கை குலுக்கிப் பிரித்தாள். ‘‘ஒரு நிமிசம்!’’ தர்மலிங்கம் ஜுலியிடம் அனுமதி பெற்று ராகுல் மேல் கை வைத்து நாலடி தள்ளிக் கொண்டு தனியே வந்தார்.

‘‘மனுசி பெரிய இடம். இதம் பதமா பிடிக்கிறாப் போல நடந்துகிட்டா.. கொள்ளை.” என்றார்.

ராகுல் சம்மதத்திற்கடையாளமாய் தலையசைத்தான். ‘‘வா…’’ – சொல்லி அழைத்து வந்தார்.

‘‘சொல்லி இருக்கேன். நீங்க போகலாம்!.’’ அவர் அவளிடம் சொல்லி… தலையசைத்தார்.

‘‘கார் இருக்கா ஜுலி?’’ ராகுல் அவளிடம் நேரடியாகவே கேட்டான்.

‘‘இருக்கு.’’ மெல்ல சொன்னாள்.

‘‘எங்கே போகனும்?’’.

‘‘வீட்டுக்கு.’’

கேட்ட ராகுல் முகம் ஒரு விநாடி இருண்டது. ‘‘வீட்ல யாரும் இல்லே.’’- இவள் அவன் முகம் பார்த்துச் சொன்னாள்.

அவன் முகம் தளர்ந்தது.

‘‘என் கார்ல போகலாமா?’’ – கேட்டான்.

‘‘வேணாம். என் கார்ல போகலாம்.’’- ஜுலி சொன்னாள். ‘‘ஏன்?’’ – ஏறிட்டான்.

‘‘ராத்திரி முழுக்க வீட்டு வாசல்ல என் காரைத் தவிர வேற கார் நின்னா பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க. என் கார்லேயே போகலாம்.’’ என்றாள்.

அவள் பயம் ராகுலுக்குப் புரிந்தது.

‘‘சரி. ஒரு நிமிசம்.!’’ என்றவன் தன் காரில் ஏறி கிளப்பினான்.

அது….மெல்ல ஊர்ந்து நகர்ந்து மறைந்தது. ‘‘எங்கே போறார்?’’ – ஜுலி கொஞ்சம் தவிப்பு கலவரமாய்த் தர்மலிங்கத்தைப் பார்த்தாள்.

‘‘பக்கத்துலதான் வீடு. காரை விட்டுட்டு அஞ்சு நிமிசத்துல வந்துடுவார்.’’ – என்றார்.

‘‘ஆள் கலியாணம் ஆனவரா?’’

‘‘பக்கா பேச்சிலர்!’’

‘‘வயசு?’’

‘‘முப்பது.’’

அவள் மனதில் திருப்தி வந்தது.

‘‘நீங்க ஆளை முழுசாப் பார்த்தா அசந்துவீங்க.’’ தர்மலிங்கம் பொடி வைத்துப் பேசினார்.
ஜுலிக்குக் குப்பென்று முகம் சிவந்து பின் சகஜ நிலைக்கு மாறினாள்.

சிறிது நேரத்தில் ராகுல் கையில் கார் சாவியைச் சுழற்றிக் கொண்டு வந்தான். அவன் வரும் அழகைப் பார்க்கும் போதே மனதை அள்ளிக் கொண்டு போனது அவளுக்கு.
அவன் அருகில் வர …தர்மலிங்கம் ‘‘அ..அம்மா!’ ’ஒரு மாதிரியாக தலையைச் சொரிந்தார்.

அதன் அர்த்தத்தை உணர்ந்த அவள் தன் விலையுயர்ந்த தோல் கை பையைப் பிரித்து முழு 1000 ரூபாய் நோட்டை அவரிடம் நீட்டினாள்.

பணிவாய் பெற்றுக் கொண்ட அவர் ‘‘நன்றிம்மா!’’ ஒரு கூழைக் கும்பிடு போட்டு நகர்ந்தார்.

ஜுலி ‘‘போகலாமா?’’ ராகுலைப் பார்த்து கேட்டாள்.

‘‘ம்ம்…’’ அவன் தலையசைக்க அவள் தன் காரை நோக்கி நடந்தாள். இவன் பின் தொடர்ந்தான்.

நூறு மீட்டர் தள்ளி அவளின் ஹோண்டா சிட்டி கார் நின்றது. ஜுலி முன் பக்க கதவைத் திறந்து ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள். ராகுல் சுவாதீனமாக அடுத்த முன் பக்க கதவைத் திறந்து ஏறி அவள் அருகில் அமர்ந்து காரின் கறுப்பு கண்ணாடிகளை ஏற்றிவிட்டான்.

‘சொல்லாமலேயே செய்கிறார். ஆள் ரொம்ப விபரம்!’ மனதுக்குள் ரசித்த ஜுலி தன் பக்கம் உள்ள கண்ணாடியையும் ஏற்றி காரைக் கிளப்பினாள். கார் அவர்கள் இருப்பதை மறைத்து புறப்பட்டது.

ஜுலி ஏ.சியைப் போட்டாள். உள்ளே மெல்ல குளிருடன் ரோஜா மணம் வ Pசியது. கார் சாலையில் வழுக்கியது. ‘‘மொதல்ல உங்க புரோகிராம் சொல்லுங்க?’’ ராகுல் பேச்சுக் கொடுத்தான்.

‘‘இப்போ நேரா ஓட்டலுக்குப் போய் சாப்பிடுறோம்!’’

‘‘காக்டெயில் உண்டா?’’

‘‘இல்லே!’’

‘‘டிஸ்கோ?’’

‘‘எனக்குப் பழக்கம் கெடையாது.’’

‘‘ஓட்டல் அடுத்து நேரா வீடுதானா ?’’

‘‘ம்ம்…’’ என்றபடியே அவள் காரை கவனமாக ஓட்டினாள். ‘‘நீ…நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…’’ ராகுல் தன் வழக்கமான பாணியைத் தொடங்கினான்.

அவன் சொன்னதை ஆமோதிப்பவள் போல் அவள் மென்மையாக உதடு பிரித்தாள்.
‘‘உங்களை இப்பவே தொட்டுக்கனும் போல ஆசை வருது. ஆட்சேபணை உண்டா?’’ நெருங்கி அமர்ந்தான்

‘‘உண்டு.’’

‘‘ஏன்?’’

‘‘இப்பவே என் உடம்பு ரொம்ப சூடா இருக்கு.’’

ராகுலும் மெல்ல உஷ்ண மூச்சு விட்டான். அவள் கழுத்தைக் கவனித்து ‘‘உங்களுக்குத் திருமணம் ஆயிடுச்சா?’’

‘ம்ம்….’’

‘‘வீட்டுக்காரர்?’’

‘‘அமெரிக்காவுல கம்ப்யூட்டர் புரோகிராமர்!’’

‘‘எப்போ திரும்புவார்?’’

‘‘வருசத்துக்கு ஒரு முறை’’

‘‘நீங்க போகலையா?’’

‘‘வாய்ப்பு இல்லே.’’

‘‘திருமணம் முடிஞ்சு எத்தினி வருசம் ஆகுது?’’

‘‘நாலு.’’

‘‘புள்ளைங்க?’’

‘‘இன்னும் இல்லே!’’

‘குறையா ?… விருப்பமில்லையா?’ – கேட்க நினைத்தான். அநாவசியம் ஒதுக்கினான்.
‘‘வீட்டுல துணைக்கு யாருமில்லியா?’’

‘‘இல்லே. மாமனார் மாமியாரெல்லாம் தமிழ்நாட்டுல இருக்காங்க.’’

‘‘உங்க வயசு?’’ – இது பெண்களைப் பார்த்துக் கேட்கக் கூடாத கேள்வி. நாக்கைக் கடித்துக் கொண்டான். ஜுலி கோபித்துக் கொள்ளவில்லை.

‘‘என்ன இருக்கும்?’’ திருப்பிக் கேட்டாள்.

ராகுல் அவள் முகத்தைப் பார்த்து ‘‘இருபத்தைந்து…!’’ உத்தேசமாக சொன்னான்.

‘‘தப்பு முப்பது!’’

‘‘நம்பவே முடியலை!’’

‘‘பொய் சொல்றீங்க.’’

‘‘நிசம் சொல்றேன்.’’

‘‘சந்தோசம்.’’ – சிரித்தாள்.

‘‘தனியாவா இருக்கீங்க?’’

‘‘வீட்டு வேளைக்கு ஒரு ஆயா. தோட்டத்தைப் பராமரிக்க ஒரு கிழவன். ரெண்டு பேரையும் நான் இன்னைக்கு ராத்திரி தங்க விடலை.’’ – சொல்லி காரை நட்சத்திர ஓட்டலுக்குள் திருப்பினாள்.

இறங்கினார்கள்.

காவலாளி இவர்களுக்கு தலை தாழ்த்தி ‘வணக்கம்!’ தெரிவித்து வழி திறந்து விட்டான்.
உள்ளே ரம்மியமான இருட்டு. அந்த இருளுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் மெல்லிய இசை காற்றில் பரவி வழிந்தது. ஜுலி மெழுகுவர்த்தி வெளிச்சம் உள்ள இடமாகத் தேடிப் போனாள். ஒரு மூளை மேசையில் இருவரும் எதிரெதிராக அமர்ந்தார்கள்.

‘‘என்ன சாப்பிடுறீங்க?’’ அவள் இவனைக் கேட்டாள். ‘‘உங்களுக்குப் பிடிச்சது.’’

‘‘ப்ச் . எனக்குப் பசி இல்லே.’’

‘‘அப்போ எனக்கும் பசி இல்லே.’’

‘‘இப்போ நீங்க சாப்பிடுங்க. பின்னால பசிக்கும்.’’

‘‘உங்களுக்கும்தான் பசிக்கும்!’’

‘‘சரி சாப்பிடலாம். பேரர்?’’ தூரத்தில் நின்றவனை அழைத்தாள்.

சீருடை அணிந்தவன் வந்தான்.

ஜுலி மேசை மேலிருந்த புத்தகத்தைப் பார்த்து என்னென்னவோ ஆர்டர் செய்தாள்.
அவன் வரும்வரை ராகுல் ஜுலி முகத்தை ஆழமாக பார்ததான். பார்த்துக்கொண்டே மேசைக்கடியில் தன் காலை நீட்டி அவள் காலைத் தொட்டான்.

‘சாரி. எல்லாம் அப்புறம்…’ – அவள் தன்னுடைய காலை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள். உள்ளே எங்கும் குளிராக இருந்தாலும் அவள் மேலுதட்டில் லேசாக வேர்த்தது.

ராகுலுக்கு அவள் உணர்ச்சிக் குழம்பில் தவிப்பது புரிந்தது, அங்கம் அங்கமாக ரசித்தான்.

இந்த ரசனை பெண்களுக்குப் பிடிக்கும். ஜீலி கூச்சத்தில் நெளிந்தாள்.

பேரர் தூரத்தில் வந்தான்.

அத்தியாயம்2

பெரிய நகரத்தின் ஆரவாரம் கொஞ்சமுமில்லாமல் பத்து கிரவுண்டில் ஆடம்பரமாக இருந்தது அவள் வீடு. போர்டிகோ அகலமாக இருந்தது.

ஜுலி வாசலில் காரை மெதுவாக விட்டாள். இருவரும் இறங்கினார்கள். அவள் வீட்டைத் திறந்து விளக்கைப் போட அது ஒளி வெள்ளத்தில் மிதந்தது, ராகுல் உள்ளே நுழைய சாத்தினாள்.

தொலைக்காட்சிப் பெட்டி சோபா-கம்-பெட்…. கூடம் பணக்காரத்தனத்தில் வழிந்தது. சுவரில் மார்பளவு புகைப்படத்தில் ஜுலி அவள் கணவனுடன் தொங்கினாள்.

‘‘வாங்க…’’- அழைத்து மாடி ஏறினாள்.

படுக்கை அறை கதவு திறந்தாள். சொர்க்கலோகம் போல காட்சி அளித்தது, கட்டில் தேக்கு மரத்தில் இழைத்து காந்த படுக்கை போட்டு அட்டகாசமாக இருந்தது.

ஜுலி அமர்ந்தாள். வேர்த்தது.

‘‘ஏ..ஏன் வேர்க்குது ?’’ – ராகுல் பக்கத்தில் அமர்ந்தான். ‘‘நா…நான் புதுசு…இல்லே பயம்!’’ இதுவரையில் பொறுத்துக் கொண்டு வந்த ஆர்வம் பயம் இப்போது அதிகமாகி..உணர்ச்சி மேலீட்டில்… மெல்ல கை கால்கள் நடுங்கியது.

‘‘புதுசுன்னா..?!’’ – கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தான்.

‘‘தப்புப் பண்றது இ…து முதல் தடவை…’’

‘‘அப்படின்னா?’’ புரியாமல் பார்த்தான்.

‘‘..இ….இதுதான்…!’’

‘‘………………..’’

“என் தோழி ஒருத்தி பெண்களுக்கான பிரத்தியோக அழகு நிலையம் வைச்சிருக்கா. நான் அடிக்கடி அங்கே போவேன். மனம் விட்டுப் பேசுவோம். ஒரு நாள் அவதான் நம்ம தேவைக்கு ஆண்கள் இருக்காங்கடின்னா. நான் அரண்டு போய் பார்த்தேன். புருசன் இருந்தாலும் இல்லாம போனாலும் இளமையை வீணாக்கக் கூடாது. வயித்துல வர்றதைத் தடுக்க வழி முறை இல்லாத காலத்துலதான் புருசன் வந்தாத்தான் சுகம்ன்னு பெண்கள் பல்லைக் கடிச்சிக்கிட்டு உணர்வுகளை அடக்கி பொறுத்துக்கிட்டு கிடந்தாங்க. இப்போ ஏகப்பட்ட வழிகளிருக்கு. உனக்குச் சாமார்த்தியம் போதலை. இந்நேரம் ஒருத்தனைக் கணக்குப் பண்ணி கையாளாய் வைச்சிருக்கனும். அது கூட ஆபத்து. அவன் சொல்படி கேட்கனும்! அவனுக்குக்காக காத்திருக்கனும்! சமயத்துல
அவன் நம்மை அதிகாரம் செய்யவும் வழி இருக்கு. ஆழம் தெரியாம காலை விட்டோம்ன்னா சமயத்துல அந்த ஆட்களால ஆபத்தும் உண்டு. நம்ப வீக்னெஸ் தெரிஞ்சு கொலை செய்ஞ்சுட்டு கொள்ளையடிச்சுட்டுப் போனாலும் போவான்ங்க. அந்த மாதிரி ஆபத்தெல்லாம் இல்லாம சந்தோசமா இருக்க இவுங்க இருக்காங்கன்னு அவதான் நடப்பைச் சொல்லி தர்மலிங்கத்தை அறிமுகப்படுத்தினாள். அவரும் கவலைப்படாதேம்மா சூப்பர் ஆளாய்ப் புடிச்சித் தர்றேன்னு இன்னைக்கு என்னைக் கூட்டி வந்தார். உங்களால எனக்குப் பயம் இல்லியே?!’’ அப்பாவியாக கேட்டு மிரட்சியாக பார்த்தாள்.

திடுக்கிட்டான்.

‘‘எய்ட்ஸ் இ.வி.டி…’’

ராகுலுக்குச் சிரிப்பு வந்தது.

‘‘பயப்படாதீங்க. இதுவரை எனக்கு சீக்குன்னு படுத்ததில்லே. நேத்துதான் நான் டாக்டர்கிட்ட உடம்பை பரிசோதனை செய்தேன். இதோ ஆதாரம்.’’ – பாக்கெட்டிலிருந்து ஒரு தாளை எடுத்துக் காட்டினான்.

அது நகரின் பிரபல பிரத்தியோக டாக்டரிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. வாங்கிப் பார்த்தவளுக்குள் கொஞ்சம் நிம்மதி. நெஞ்சில் கை வைத்து பெரு மூச்சு விட்டு அதை வெளியிட்டாள்.

‘‘இதுக்காகவா பயந்தீங்க?’’

‘‘இல்லே. அது தப்பு செய்யிறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் இருக்கிற பயம்…’’

‘‘அப்போ அதை நாம கொஞ்சம் பேசி தீர்த்துக்கலாமா?’’

‘‘சரி’’ என்றவள் ‘‘நீங்க எப்படி இந்த வழிக்கு?’’ அவனை அடிக்கண்ணால் பார்த்தாள்.

‘‘எனக்குப் படிக்கும்போதே விளம்பரப்படங்கள்ல நடிக்கனும்இ மாடலிங் செய்யனும்ன்னு ஆசை. ஒன்னு ரெண்டு கம்பெனிங்க ஏறி வாய்ப்பு கேட்டு மாடலிங்கும் பண்ணினேன். பண்ணிக்கிட்டிருக்கேன்.! அதுவும் நல்லா போய்கிட்டிருக்கு. சமீபத்துல ஒருநாள் நான் லோதி கார்டன் பக்கம் நடந்து போனேன். பக்கத்துல ஒரு புது கார் மெல்ல வந்து என் பக்கத்துல நின்னுது.

ஹாய் ராகுல்ன்னு கூவி ஒருத்தி டிரைவர் இருக்கையிலேர்ந்து எட்டிப் பார்த்தாள். என் பேரை விளம்பரப்படங்கள்ல கேட்டு தெரிஞ்சிருப்பாள்ன்னு நெனைக்கிறேன். ஹாய்ன்னு நானும் அவளைப் பார்த்து புன்னகைச்சேன். எங்கே நடந்து போறீங்கன்னு கேட்டாள். அறைக்குப் போறேன்னேன். வாங்க நான் கொண்டு விடுறேன்னு கார் கதவைத் திறந்தாள். ஓசி கார் பயணம் ஏறினேன்.’’

‘‘ஆள் உங்களை விட அழகுல கம்மி. அறுபது மார்க் போடலாம். கியர் போடுற சாக்குல தொடை மேல கை போட்டாள். நான் விகல்பமா எடுத்துக்கலை. கார் ஓட்டிக்கிட்டே.. வழியிலதான் வீடிருக்கு காபி சாப்பிட்டுப் போகலாமான்னாள். தலையாட்டினேன்.
வீட்டுக்குக் கூட்டிப் போனாள். யாரும் இல்லே.

நீங்க அழகா இருக்கீங்கன்னு கதவைச் சாத்தி என் கையைப் புடிச்சி கிறக்கமா பார்த்தா. எனக்கு வேர்த்துப் போச்சு.

பயப்படாதே! யாருமில்லே..! ன்னு தைரியம் சொல்லி…..அப்புறம்…..டேஷ் டேஷ்.! இந்த விவகாரம்.

காலையில ஐயாயிரம் பணத்தை அள்ளிக் குடுத்து என் அறைகிட்ட கொண்டு வந்து இறக்கி விட்டாள்.!

அன்னையிலேர்ந்து இது எனக்கு பொழுது போக்கா உங்களுக்குச் சேவை செய்ய இறங்கிட்டேன்.’’- சொல்லி நிறுத்தினான்.

‘‘இன்னையைக் கூலி எவ்வளவு ?’’

‘‘உங்க விருப்பம் ,’’

‘‘எத்தனைப் பேரைத் தொட்டிருப்பீங்க?’’

‘‘பேட்டி எடுக்குறீங்களா ?’’

‘‘ஐயோ இல்லே. கேட்டு தெரிஞ்சிக்கலாம்ன்னு ஆசை!’’

‘‘கணக்கு வைச்சிக்கலை.’’

‘‘கோயில் காளையா?’’

‘‘இதுக்கு என்ன பேர் சொல்றதுன்னு தெரியலை. அகராதியைப் பார்த்து சொல்லனும்…’’ என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு ‘‘கதையை விட்ட இடத்திலேர்ந்து சொல்றேன். தொகையை வாங்கி அறைக்கு வந்ததும் எனக்கு பயம். முன் பின் தெரியாதவள் இப்படி அள்ளிக் கொடுக்கிறாள்ன்னா இதுக்காக ஏங்கினவள் ரொம்ப இதுமாதிரி பழக்கப்பட்டு வி.டி. எய்ட்ஸ் உள்ளவளான்னு சந்தேகம் வந்துது. உடனே தனியார் மருத்துவ மனைக்குப் போய் பரிசோதனைப் பண்ணினேன். இல்லே.’’

முடித்தான்.

‘‘உங்களைப் போல இங்கே நிறைய ஆட்கள் இருக்காங்களா ?’’

‘‘நீங்க என்ன சி.பி சி.ஐ.டியா ?!’’ கேட்டு திடுக்கிட்டவன் போல நடித்தான்.

‘‘ஏன்?’’ தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்து ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

அது அவனுக்கு மயில் கழுத்தைத் திருப்பி பார்ப்பது போல் அழகாக இருந்தது,

‘‘நீங்க விசாரிக்கிறதைப் பார்த்தா எங்களையெல்லாம் கூண்டோட கொண்டு போயிடுவீங்க போலிருக்கு.’’ சிரித்தான். ‘‘அதெல்லாம் கிடையாது நானும் உங்களைப் போல ஒரு சாதாரண இந்தியப் பிரஜை !’’ என்று அவளும் சிரித்தாள். ‘‘பெண்களுக்குப் போட்டியாய் ஆண்களும் இறங்கியாச்சு…..’’ என்றாள்.

‘‘எல்லாம் உங்க நன்மையை மனசுல வைச்சுதான் !’’ என்ற ராகுல் ‘‘பெண்கள் எல்லாத்துக்கும் போட்டியாய் எங்களை மிஞ்சுட்டீங்க. இன்னும் பத்து வருசத்துல நாங்க எல்லாரும் உங்க நிலைக்குத் தள்ளப் பட்டு நாங்க 33 சதவீதம் கேட்டாலும் ஆச்சரியப்படுறதுகில்லே!’’ வரப் போகும் நிலையைச் சொல்லிச் சிரித்தான்.

ஜுலியும் சிரித்தாள்.

‘‘சுகத்துச் சுகம.; பணத்துப் பணம்ன்னு ரொம்ப பேர் இதுல விருப்பப்பட்டு இறங்கிட்டீங்களா?’’ கேட்டாள். ‘‘இல்லே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையில பாதிப்பு. சுரேஷ் என்கிற பையன்… கையில பட்டத்தை வைச்சிக்கிட்டு வேலைக்கு அலையோ அலைன்னு அலைஞ்சான். கிடைக்கலை. ஒரு பெண் கூட்டிப்போய் கெடுத்து ருசி காட்டிவிட்டு கெடுத்துட்டாள். அடுத்து திருமணம் முடிச்ச ஒருத்தன். கலியாணம் முடிச்ச மறு மாசமே பொண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிட்டாள். அக்கம் பக்கம் உள்ளவங்களெல்லாம் அவனை ஆம்பளை இல்லை என்கிறது போல ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. தான் ஆண் என்பதை நிரூபிக்கனும்ங்குறதுக்காக வெறியாய்….பொம்பளைங்களைத் தேடி அலைய ஆரம்பிச்சு இதுல அவன் இறங்கிட்டான். இன்னொரு குடும்பதஸ்தன். பொண்டாட்டி புள்ளைங்களை வைச்சிக்கிட்டு ரொம்ப கஷ்டம். வீட்டுக்காரி சம்மதத்தோட தொழில்ல இறங்கிட்டான். மூணு வேளையும் முட்டை சாப்பாடு.’’ சிரித்தான். அவளும் சிரித்தாள்.

ஜுலி சகஜமாகிவிட்டதை உணர்ந்து ராகுல் எழுந்து சட்டையைக் கழற்றினான்.
அஜானுபாகுவான தோற்றம். நெஞ்சு நிறைய முடி. கட்டுகட்டான உடல். அவளுக்கு அவனைப் பார்க்க சிலிர்ப்பாக இருந்தது. போதை ஏறியது. சட்டென்று வெறியுடன் அவனைத் தாவி கட்டிப்பிடித்தாள்.

அவளின் இந்த எதிர்பாராத தாக்குதலில் ராகுல் ஒரு வினாடி நிலைகுலைந்து போனான்.

அத்தியாயம்3

காலையில் ராகுல் வீட்டிற்கு வந்தான். அம்மா கடிதம் போட்டிருந்தாள்.

அன்பு மகனுக்கு

அம்மா எழுதுவது. நான் நலம். உன் நலம் அறிய ஆவல். நீ டெல்லிக்கு வேலைக்குப் போய் ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. திருமண வயதையும் தாண்டி விட்டாய். எனக்கு மருமகள்இ பேரப்பிள்ளைகளைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது. எப்போது திருமணம் முடிக்கப் போகிறாய் ? இக் கடிதம் கண்டதும் பதில் போடவும். இத்துடன் ஐந்து பெண்களின் புகைப்படங்கள் அனுப்பியுள்ளேன். எல்லாரும் நல்ல வசதிஇ அழகு. எந்த பெண் பிடித்திருந்தாலும் குறிப்பிட்டு கடிதம் எழுது. உடன் முடிக்க ஆவண செய்கிறேன். இல்லை… நீ எவளையாவது மனதில் நினைத்திருந்தாலும் காதலித்தாலும் மறைக்காமல் கடிதம் எழுது. நான் முடித்து வைக்கிறேன்.

இப்படிக்கு
உன் அம்மா

படித்து முடித்தவன் பெருமூச்சு விட்டான். புகைப்படங்களைப் பார்த்தான். எல்லா பெண்களும் அழகாய் இருந்தார்கள்.

‘என்னதான் கார் பங்களா என்று வசதியாய் இருந்தாலும் தனக்கென்று ஒரு திருமணம் வாழ்க்கை தேவை. இந்த வாழ்க்கைக்கு எந்த பெண் சம்மதிப்பாள்? அனுமதிப்பாள் ?!’ – நினைவு ஓடும் போது வாசலில் அழைப்பு மணி அடித்தது. நிமிர்ந்து பார்த்தான்.

வாசலில்….பரமசிவம்..!

‘‘வாங்க ’’- வரவேற்றான்.

வந்தவருக்கு இருக்க நேரமில்லை.

‘‘இந்தாப்பா! ஐயாயிரம் பேசி 5000 ரூபாய் முன் பணம். எனக்கு 500 போக உனக்கு 4500!’’ நீட்டினார்.

‘‘கைபேசி எண் தர்றேன். என்ன முழிக்கிறே? நா சொல்லிக் கொடுத்த வாசகம் தான். செல்போனுக்குக் கைபேசின்னு பேர். மதியம்… ஒன்னு டூ இரண்டு பேசி… காலம் இடம் நேரம் தெரிஞ்சுக்கோ. மத்த நேரங்கள்ல அந்த வீட்டுல ஆளிருப்பாங்க போலிருக்கு. இடையில பேசி அவளை வம்புல மாட்ட விட்டுடாதே, ஒன்னு டூ இரண்டு நீ பேசலைன்னாலும் போன் வரும் புடிச்சிக்கோ. இருக்கிற பொழுதுக்கு நான் வேற இடம் பார்க்கனும் வர்றேன்.’’ – பணத்தை டீபாயின் மீது வைத்து விட்டு கிளம்பினார்.

இந்த தொழிலில் நல்ல சம்பாத்தியம். ஆனால் இது வெளியில் சொல்ல முடியாத வேலை. சொன்னாலும் பெண் கொடுக்க மாட்டார்கள். பிடரியில் அடித்து வெளியில் தள்ளுவார்கள். ஏதோ ஒரு வியாபாரம் இ தொழில் என்று பொய் சொல்லி மணம் முடித்தாலும்… பகல் ஒருத்திஇ இரவு ஒருத்தி என்றால் சமாளிக்க முடியாது. உடனே குட்டு உடைந்து விடும். எந்த பெண்ணும் புருசனை பங்கு போட விரும்பமாட்டாள். எப்படி முன்னேறினாலும் இந்தியப் பெண்கள் இதில் குறி. சண்டை சச்சரவு விவாகரத்து.

நித்தம் நித்தம் திருமணம். கால நேரமில்லாமல் கலியாணம். தனக்கு திருமணம் தேவை இல்லை. வேண்டாமென்று மறுத்து அம்மாவிற்கு எழுதினால் வருத்தப்படுவாள்.! – நினைக்க மனசு வலித்தது.

இது நித்தம் நித்தம் திருமணமில்லை. செக்ஸ் ! வாழ்க்கை இல்லை. வியாபாரம் ! பணம் பண்ணும் வித்தை. இன்றைக்குத் திருமணம் வேண்டாமென்று நினைத்தாலும் வயதான கால வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு பெண் துணை தேவை. என்ன சொல்லி திருமணம் முடிக்க?

தொலை பேசி அடித்தது. எழுந்து எடுத்தான்.

‘‘ஹலோ ராகுல் ! நான் ஜான்சி பேசறேன்.’’ எவளோ ஒருத்தி.

‘‘சொல்லுங்க ?’’

‘‘பரமசிவம் பணம் குடுத்தாரா?’’

‘‘குடுத்தார்.‘’

‘‘ராத்திரிக்கு நீங்க ப்ரீயா இருப்பீங்களா ?’’

‘‘இல்லே.’’

‘‘நாளைக்கு?’’

‘‘இருப்பேன். ‘’

‘‘நாளைக்கு ராத்திரி புருசன் ஊருக்குப் போறார். வர முடியுமா?’’

‘‘வர்றேன். இடம்?’’

‘‘குபேரன் நட்சத்திர ஓட்டல்!’’

‘‘அறை எண்?’’

‘‘நீங்க ப்ரீயா இருக்கீங்களான்னு கேட்டு அறை எடுக்கலாம்ன்னு இருந்தேன். இப்போ அறை எடுத்திட்டு போன் பண்றேன்.’’ – வைத்தாள்.

சமய சந்தர்ப்பம் தெரியாமல் இப்படி அடிக்கடி தொலைபேசி வரும். ஆண்கள்தான் அலைந்தார்கள் என்றால் இப்போது பெண்களும் துணிந்து விட்டார்கள். திருமணம் முடித்தால் எப்படி தொழில் செய்ய முடியும்?!

டெல்லியின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெண். இரவு முழுக்க இவனைத் தூங்க விடவில்லை.

‘‘என்னைக் கட்டிக்கிறீயா?’’ காலில் விழுந்தாள். ‘‘ஆனா அடுத்த நாள் எவளையும் ஏறெடுத்துப் பார்க்காம இருக்கனும்.’’ – சொன்னாள்.

எப்படி முடியும் ? அவளைப் போல் நூறு பெண்கள் சொல்லி விட்டார்கள்.!

‘விபச்சாரிகளிடம் வருபவர்களெல்லாம் நீ அழகாய் இருக்கே. கட்டிக்கிறேன்!’ என்று ஆண் சொல்வதெல்லாம் அபத்தம். பெண் அன்பாய் ஆசையாய் இணக்கமாய் இருப்பதற்கென்று ஆண்கள் அது அந்த நேரத்திற்கு சொல்லும் வசனம். அதே கலையைப் பெண்களும் பிடித்துவிட்டார்கள்.

‘‘பார்க்கலாம்!’’ நாசூக்காக மறுத்தான். அதற்காக அவள் உடைந்துவிட வில்லை. கை நிறைய பணத்தை அள்ளிக் கொடுத்து ‘‘நான் அழைக்கிறபோதெல்லாம் வரனும்…’’ கண்டிசன் போட்டு அனுப்பினாள்.

தொலைபேசி அடித்தது.

‘‘ஜான்சி!’’

‘‘என்ன?’’

‘‘அறை எண் 247. சரியா பத்து மணிக்கெல்லாம் வந்துங்க.’’ சுருக்கமாக பேசி அணைத்தாள்.

‘அம்மாவுக்கு என்ன கடிதம் எழுத?’ – ராகுல் விட்ட இடத்தைத் தொடர்ந்தான்.

‘தனக்கொரு வாழ்க்கை இல்லாமல் கார் பங்களாவெல்லாம் யாருக்கு ?’ – நினைவு ஓடியது.

‘சுகத்திற்குச் சுகம். பணத்திற்குப் பணம். நாளைக்கு வாழ்க்கை ?!’ அம்மா மறுபடியும் குழப்பினாள்.

இந்த தொழிலில் நிறைய அனுபவங்கள்.

ஒரு தடவை ஒருத்தி அழைத்தாளென்பதற்காக அவள் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் கணவன் இல்லை. உல்லாசமாக இருந்தார்கள். பன்னிரண்டு மணிக்கு அழைப்பு மணி அலறியது.

‘‘ஐயோ ! என் புருசன் வந்துட்டான்!’’ – பதறி எழுந்து ஆடையைச் சுருட்டினாள்.

இவனுக்கு அப்படியே குப்பென்று வியர்த்து வியர்வை ஆறாகப் பெருகியது.

‘‘எப்படியாவது இடத்தைக் காலி பண்ணுங்க…’’ டிராயரை இழுத்து பணத்தை அள்ளிக் கொடுத்து துரத்தினாள். மாட்டினால் இவனுக்கும் ஆபத்து. மொட்டை மாடிக்கு ஓடினான். அக்கம் பக்கமெல்லாம் கான்கிரீட் காடுகள். தாண்டி தாண்டி போய்விடலாம். யாராவது பார்த்து திருடன்! திருடன்! என்று கூவினால் நிலைமை இதைவிட மோசம். கீழே பார்த்தான். மூன்றடுக்கு மாடி. குலை நடுங்கியது. மெல்ல…. மழை நீர்க்குழாயைப் பிடித்து இறங்கினான்.

கதவைத் திறந்து கொண்டு அவள் மாமனார் மாமியார் உள்ளே சென்றார்கள். எப்படி இருந்தாலும் ஆபத்து. பதுங்கி வெளியேறினான். பணம் சம்பாதித்தாலும் கை காலெல்லாம் சிராய்ப்பு.

இனி எவள் வீட்டிற்கு அழைத்தாலும் போகக்கூடாது என்ற முடிவிற்கு வந்தான்.

அடுத்து ஓட்டலுக்கு எவர் அழைத்தாலும் சென்றான். பத்துத் தடவைக்கு மேல் பல பெண்களை அழைத்து வந்ததில் லாட்ஜ் மேலாளர் உரிமையாளர் இவனுக்கு ரொம்ப வேண்டியவராகிப் போய்விட்டார்.

‘‘இனி உங்களுக்குத்தான் தம்பி இந்த அறை !’’ என்று நிரந்தரமாக ஒதுக்கி விட்டார். ஆனாலும் போலீஸ்… திடீர் ரைடு.! இவன் அறையைத் தட்டி ஒரு இன்ஸ்பெக்டர் ஐந்தாறு கான்ஸ்டபிள்கள் நுழைந்தார்கள். கூட இருந்தவள் நடுங்க… ‘‘இவ யாரு?’’ ஆத்திரத்தில் கத்தினார்.

‘‘என் பொண்டாட்டி சார். பாருங்க கழுத்துல தாலி!’’ இவன் சொல்லி வாய் மூடவில்லை காதுக்கும் கன்னத்திற்கும் பொளேரென்று அறை.

‘‘படவா! இவ என் பொண்டாட்டி. கழுத்துல இருக்கிறது நான் கட்டின தாலி.! ’’ கத்தி இன்ஸ்பெக்டர் அவளை இழுத்துப் போனார்.

எங்கு சென்றாலும் ஆபத்து.!

அதிலிருந்து ராகுல் எதிலும் ஜாக்கிரதை. தர்மலிங்கம் இன்னும் ஒரு சில ஆட்கள்தான் நல்ல நம்பிக்கையான ஆட்கள். எந்தவித வில்லங்கமும் இல்லாமல் பிடிப்பார்கள்.

இன்னொருத்தனுக்கு வேறு மாதிரியான அனுபவம். அழைத்துப் போனவள் எனக்கு திருப்தி இல்லையென்று திருப்பி அனுப்பி விட்டாள்.

‘‘தகராறு பண்ணினே ! கற்பழிக்க வந்தேன்னு போலீஸ்ல புகார் குடுத்து உள்ளே அனுப்பிடுவேன்!’’ எச்சரித்தும் அனுப்பினாள். இப்படியும் பெண் ரௌடிக் கும்பல்.
இன்னொரு சம்பவம் ரொம்ப மோசம். ஒருத்தனை ஒருத்தி அழைத்துச் சென்று அறையில் பல பேர் சூழ்ந்து…… மறுநாள் காலை அறையில் அவன் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தான். ஓட்டல் மேலாளர்தான் அவனுக்கு உயிரூட்டி அனுப்பினார்.
இன்னொருத்தியிடம்…. பேசின பணத்தை ஒருவன் தகராறு செய்து அடித்த அடியில் வாங்கி வந்துவிட்டான். மறுநாள் மாலை அவளே அவனை அழைத்துஇ வீட்டில் நுழைந்ததும் ‘திருடன்! திருடன்!’ என்று கத்தி தர்ம அடிவாங்க வைத்து
விட்டாள்.

“நேத்திக்கு வாலாட்டினதுக்குத் தண்டனை!’’ சொல்லியும் அனுப்பி விட்டாள்.

இந்த தொழிலில் இன்னும் சொல்ல முடியாத சங்கடங்கள். ராகுல் எல்லாவற்றையம் சமாளித்து நின்றுவிட்டான். ஒரு மாருதி ஓமினி வேன் வாங்கி அதன் பின்னிருக்கைகளையெல்லாம் கழற்றி..இருக்கும் இடத்திற்கு மெத்தை வாங்கிப் போட்டு எங்கும் நிறுத்தி வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்தும் அளவிற்கு முன்னேறிவிட்டான்.

இப்படியெல்லாம் இருக்கும் போது எப்படி திருமணம் முடிக்க முடியும்? இந்த தொழில் வாலிப வயதில் சம்பாதிக்கக்கூடியது. வயதான காலத்தில் முடியாதது. அப்படி இருக்கும் போது திருமணம் முடிக்க வாய்ப்பே இல்லை.

வெகு நேர யோசனைக்குப் பின் ‘தனக்குத் திருமணம் தற்போதைக்குத் தேவை இல்லே..!’ – என்று கடிதம் எழுதி தபாலில் சேர்த்தான்.

கொஞ்சம் நிம்மதி. ஆனாலும்…அம்மா ரயில் ஏறி டெல்லிக்கு வந்தால் என்ன செய்வது? – யோசனை வர திக்கென்றது.

– தொடரும்…

– 13-10-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *