நண்பன்
கதையாசிரியர்: தேவதர்ஷினி செல்வராஜ்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 4,731
வேலை முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். இடையிலேயே எனது வண்டி நின்றுவிட்டது. நானும் பலமுறை முயற்சி செய்தும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. இருள் சூழ்ந்த அந்த இடத்தில் நிற்பதற்கு சற்று பயமாகவே இருந்தது. அவ்வழியே பல பேர் என்னை கடந்துச் சென்றனர். ஆனால் ஒருவனுக்கு மட்டும் என்மேல் பரிதாபம் ஏற்பட்டதோ என்னவோ எனதருகில் வந்து என்னாச்சு என கேட்டான். நடந்ததை கூற நான் முயற்சி செய்து பார்க்கவா? என்றான் நான் தாராளமாக என்றேன். அவன் பார்த்துவிட்டு இன்ஜின்ல தான் ஏதோ பிரச்சன உங்க வீட்ல இருந்து யாரயாவது வர சொல்லுங்க என்றான். அப்பா வெளியூரில வேல பாக்குறாங்க அம்மா மட்டும் தான் இருக்காங்க என்றேன்.

வேறு யாரயும் தெரியாத என்றான், இல்லை என தலையசைத்தேன். நீங்க ரொம்ப நேரம் இங்க நிக்கிறது நல்லதல்ல. என்னுடன் வர உங்களுக்கு சம்மதமா என்றான். எனக்கு பயமாக இருந்ததை முக தோற்றத்தில் அறிந்து கொண்டான் போல. பயமா இருக்கிறதா நானும் அக்கா தங்கையுடன் பிறந்தவன் தான். ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தெரியும். எனது வண்டியின் மீது காலை வைத்துக் கொள்ளுங்கள் என்றான். எனக்கு அப்படியெல்லாம் வைக்க தெரியாது. காலை எடுத்துவிட்டு எங்கயாவது விழுந்துவிட்டாள் என்ன செய்வேன் என்றேன். அவன் சரி என் வண்டியை நீங்க ஓட்டுங்க. நான் உங்க வண்டியை எடுத்துக் கொள்கிறேன் என்றான். சரி என்றேன். உங்க அம்மாகிட்ட சொல்லிடீங்களா? என கேட்டான். இதோ போன் பண்றேன் என்று அம்மாகிட்ட விசயத்த சொன்னேன்.
பாத்து வா ஜாக்கிரதையாக இரு என கூறிவிட்டு வைத்துவிட்டார்கள் நாங்கள் புறப்பட்டோம் அப்பொழுது தெரியவில்லை அவன் என் வாழ்க்கையையே மாற்றுவான் என்று. சும்மாவே வரிங்க ஏதாவது பேசலாம்ல என்றான். என்பேரு பூஜா அம்மா பேரு தனம் சேமியா கம்பெனில வேல பாக்குறாங்க. அப்பா செல்வம் வெளியூரில வேல செய்றாரு நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு டிகிரி முடிச்சுருக்கேன் நான் ஹாஸ்பிட்டல அக்கவுண்டஸ் மேனேஜராக வேல பாக்குறேன். உன்ன பத்தி சொல்லு என்பேரு கார்த்தி எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா பேரு அனு. அப்பா இல்ல அம்மா மட்டும்தான் டிப்ளமோ முடிச்சுருக்கேன். சினிமால கொஞ்சம் இன்ரெஸ்ட் இருக்கு. நான்கு குறும்படம் எடுத்துருக்கேன். அம்மா சூப்பர் மார்க்கெட்ல வேல செய்றாங்க. நான் பிரைவேட் கம்பெனில இன்ஜினியராக ஒர்க் பண்றேன், தங்கச்சி காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர். ஏங்க வண்டிய நிறுத்துங்க. என்னாச்சு என்றேன், பசிக்குது ஏதாவது சாப்பிடலாமா என்றான். அவ்ளோதான் பத்து நிமிசத்துல வீடு வந்துரும் என் வீட்ல சாப்டு என்றேன். ஐயோ வேணாம் வேணாம் அது சரியா இருக்காது.
ஏன்? உங்களையே இப்பதான் பாக்குறேன். வீட்டுக்குலாம் வந்தா அக்கம்பக்கம் தப்பா பேசுவாங்க. அந்த ஒரு வார்த்தையில் என் மனதில் தனி இடத்தை பிடித்துவிட்டான். தெருமுனையிலேயே நிறுத்திவிட்டு இங்கிருந்து நீங்களே போங்க லேட் ஆச்சு என்றான் சரி என்று இறங்கி நான் எனது வண்டியை தள்ளிக்கொண்டு செல்ல என் வீடு வந்ததும் அம்மா வெளியே வந்தவுடன் நான் திரும்பி பார்த்தேன் தலையசைத்துவிட்டு சென்றான். அம்மாவிடம் நடந்ததை கூற இப்படி சிலபேர் இருக்கனால் தான் நாட்டில் மழை பெய்யுது என்றாள். சில நாட்கள் கடந்தன நானும் அம்மாவும் துணிக்கடையில் அவனை மீண்டும் சந்தித்தோம். அவனது குடும்பத்தை அறிமுகம் செய்தான். என் அம்மாவும் அவனின் அம்மாவும் பேசிக்கொண்டனர். நானும் அவனது தங்கையும் பேசிக்கொண்டு சென்றோம். துணி இருவரும் சேர்ந்தே வாங்கிவிட்டு போகையில் டீ சாப்பிடலாமா? என அவனின் அம்மா கேட்க சரி என நாங்களும் செல்ல அம்மா நீங்க என்ன சாப்பிடுவீங்க என கேட்டான் டீ தம்பி என என் அம்மா கூறினாள்.
உங்களுக்கு என்ன வேணும் என என்னை பார்த்தான் காபி என்றதும் வாங்கி கொடுத்தான். போன் நம்பரை கேட்டாள் அவனின் தங்கை அனு. பரிமாறிக்கொண்டோம். சில மாதங்கள் நகர்ந்தன. தியேட்டரில் சந்தித்தோம். அவன் நண்பர்களுடன் நான் எனது தோழிகளுடனும் சினிமா பார்த்துவிட்டு வெளியே ஆட்டோவை அழைக்கச் சென்றபோது உங்க வண்டி என்னாச்சு என கேட்டான். அப்பா வீட்டில் இருக்கிறார் அவர் ஒரு வேலையாக எடுத்து சென்றுவிட்டார். அதனால நான் ஆட்டோல போலாம்ன்னு இருக்கேன் என்றேன். நான் லிஃப்ட் தரவா என்றான். அக்கம்பக்கம் தப்பா பேசுவாங்கன்னு யாரோ சொன்னாங்க. அவன் சிரித்தான். அப்போ நீங்க யாரோ இப்ப நீங்க என் பிரண்ட் என்றான். பைக்கில் ஏறினேன். நிறைய பேசிக்கொண்டே சென்றோ.ம் எது பிடிக்கும் எது பிடிக்காது என அனைத்தையும் பேசிவிட்டோம். டீ கடையில் நிறுத்து காபி வாங்கி கொடுத்தான். முதன்முறையாக நான் பேசிய ஆண்மகன் அவன் தான். என்னை வீட்டிலேயே வந்து விட்டான்.
அம்மாவும் அப்பாவும் சாப்பிட சொல்ல சாப்பிட்டான். காலம் செல்ல செல்ல என் வீட்டிற்கு மகனாகி போனான். எங்களுக்குள் இருந்த நட்பு அவனை என் குடும்பத்துடன் பிணைத்தது. பார்ப்பவர்கள் அனைவரும் லவ்வர்ஸ் என கேலி செய்தார்கள். ஆனால் எங்களுக்குள் ஒரு புனிதம் இருந்தது. நீங்க என்பதில் இருந்து எரும என்கிற பதவியை அளித்தான். இருவரும் ஒன்றாக சேர்ந்து சினிமாவிற்கு செல்வது, கடைவீதிக்கு செல்வது, கோவிலுக்கு செல்வது என சுற்றிதிரிந்தோம்.
தொட்டு பேசுவான். அவன் தீண்டலில் தவறான செய்கை இல்லை. கண்களை பார்த்து பேசுவான். அவன் கண்கள் என்னிடம் பொய் சொல்லியதில்லை. என்னைப் பற்றி முழுமையாக தெரிந்தவன். எனினும் எல்லை மீறியதில்லை. காமம் கொண்டு பார்க்கின்ற ஆண்களின் மத்தியில் கண்ணியம் காத்தவன் அவன். மறுபிறவி உண்டெனில் மீண்டும் அவனையே நண்பனாய் அடைய இறைவனை வேண்டுகிறேன்…