நெஞ்சு பொறுக்குதில்லையே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 2,509 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மாடி கனகு நான் கடைக்கு போயாறேன், உனக்கு எதுனா வேணுமா?” கேட்டபடியே குடிசையினுள் நுழைந்தார் வடிவேலு.

“இல்லங்க மாமா, நேத்தே உங்க புள்ள வரும்போது வேணுங்கறது வாங்கிட்டு வந்துட்டார், நீங்க சீக்கிரம் போயிட்டு வாங்க, நீங்க வந்த பொறவுதான் நான் ஐயரம்மா வூட்டுக்கு பாத்திரம் தொலைக்க போவனும். இவ வேற இன்னும் எழும்பல. சோறாக்கி வச்சுட்டு நான் கிளம்பறேன், நீங்க வந்து புள்ளைய இஸ்கோலுக்கு மட்டும் கிளப்பி அனுப்பிடுங்க. அவரும் காலிலேயே சவாரி இருக்குன்னு போய்ட்டார்”, என்றபடியே காலை வேலைகளை அவசர அவசமாக செய்ய ஆரம்பித்தாள் கனகம். *சரிமா, நான் போயிட்டு ஒரு அரை மணில வந்துர்றேன், நீ புள்ளைய எழுப்பி மட்டும் விட்டுடு”, என்று கூறிக்கொண்டே வெளியேறினார் வடிவேலு.

“மீனா, அடியே மீனா, சீக்கிரம் எந்திரிச்சு கிளம்புடி. இஸ்கோலுக்கு மணி ஆவுது”

“அம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே, எனக்கு ரொம்ப தூக்கமா வருதும்மா. கால் கையெல்லாம் நோவுதும்மா, இஸ்கோல்ல கொஞ்சம் விலையாடறத்துகுள்ள மூச்சு வாங்குது.”, என்றபடியே மறுபடி தூங்க ஆரம்பித்தாள் மீனா

“ஏய் இங்க பாரு இந்த கதை எல்லாம் என்கிட்ட சொல்லாத மொதல்ல எந்திருச்சு கிளம்பற வழிய பாரு. தாத்தா வந்தவுடனே தயிர் சோறு இருக்கு சாப்பிட்டு கிளம்பு சொல்லிட்டேன்”

“சரிமா நீ போ சரியா பத்து நிமிஷத்துல எந்திரிக்கறேன்”

“இதே பொழப்புடி உன்னோட”, கத்தியபடியே சென்றாள் கனகம்.

இதற்கு மேல் படுத்திருந்தால் ஆபத்து என்று முனகியபடியே எழுந்து கொல்லைபுறம் சென்றாள் மீனா.

அன்று மதியம்.

“கனகு, ஏய் கனகு, இன்னாடி பண்ற”, என்று கூவியபடி பரபரப்புடன் வந்தான் முருகன்.

“இன்னா மச்சான், எதுக்கு கூவறே, பாத்திரம் தொலக்கறேன். இரு வரேன்”

“என்னடா ஆச்சு, ஏன் இப்படி வேர்த்து போய் வரே”.” வடிவேலு, முருகனிற்கு தண்ணீர் கொடுத்தபடியே கேட்டார்.

“இஸ்கோல்லேர்ந்து போன் பண்ணினாங்க கனகு, மீனா மயக்கம் போட்டுடிசாம், உடனே கிளம்பு போய் இட்டாறலாம்”

“ஐயோ என்ன ஆச்சு எம்புள்ளைக்கு, காலில்கூட நல்லாதானே போனா”

“உடனே கிளம்புயா, போய் என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்”

ஸ்கூல் டீசெர்ஸ் ரூம்.

“வாங்க, நீங்கதான் மீனாவோட அப்பா அம்மாவா? என்னன்னு தெரியல, இன்னைக்கு விளையாட்டு பீரியட் போது சோர்ந்துபோய் இருந்தா. அப்புறம் கொஞ்ச நேரத்துல மயக்கம் போட்டுட்டா, நாங்க தண்ணி எல்லாம் தெளிச்சு எழுப்பி உக்கார வச்சிருக்கோம். ரொம்ப மூச்சு வாங்குது அவளுக்கு. நீங்க உடனடியா அவளை பெரியாஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போங்க”,

“சரிங்க டீச்சர். ரொம்ப தேங்க்ஸ் நீங்க செஞ்ச உதவிக்கு. இப்போவே கூட்டிட்டு போறோம்”

2 நாட்களுக்கு பிறகு டாக்டர்ஸ் ரூம்.

“வாங்க முருகன். உங்க பொண்ணோட டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் பார்த்தேன். உங்க பொண்ணுக்கு வந்திருக்கறது congenital heart defects. உங்களுக்கு புரியறா மாதிரி சொல்லனும்ன்னா ஹார்ட்ல ஹோல் இருக்கு”

“இன்னா சொல்றீங்க டாக்டர்”, அதிர்ச்சியுடன் டாக்டரை பார்த்தான் முருகன்.

“தொலள சின்னதா இருந்தா பிரச்சனை இல்ல முருகன். உங்க பொண்ணுக்கு பெரிசா இருக்கு. இதுக்கு ஆபரேஷன் பண்ணிதான் ஆகணும், இல்லேன்னா உயிருக்கே ஆபத்தா முடியும். நீங்க என்ன வேலை பண்ணறீங்க”

“நான் ஆட்டோ ஓட்டறேன் டாக்டர். எம் பொஞ்சாதி ரெண்டு மூணு வீட்டுல வீட்டு வேலை செய்யுது, ரொம்ப செலவாகுமா டாக்டர்”

“ஆமாம் முருகன், கவர்மென்ட் ஹோச்பிடல்ன்னால ஒரு இரண்டு லட்சம் செலவாகும். இதுவே தனியாரா இருந்தா ரொம்ப ஜாஸ்தி. நீங்க எத்தனை சீக்கிரம் பணத்தை ரெடி பண்ணறீங்களோ அத்தனை நல்லது. சீக்கிரம் உங்க பொண்ண காப்பாத்தலாம்” “ஐயோ, அம்புட்டு செலவாகுமா டாக்டர், கவர்மென்ட் ஆஸ்பத்திரில எல்லாமே ப்ரீ அப்படின்னு சொல்றாங்களே இல்லையா”, அப்பாவியாக கேட்டான் முருகன்

“ப்ரீயா பண்ணனும்ன்னா, நீங்க ரொம்ப நாள் வெயிட் பண்ணனும், அப்பவும் முழுக்க இலவசம் கிடையாது. என்ன இரண்டுக்கு பதிலா ஒரு லட்சம் செலவாகும் அவ்வளவுதான். ஆனால் உங்க பொண்ணு இப்போவே மோசமா இருக்கா, சீக்கிரம் பண்றது நல்லது”. என்றபடியே டாக்டர் அடுத்த நோயாளியை அழைக்க, அரை உயிராக வெளியில் வந்தான் முருகன்.

“இன்னையா, டாக்டர் என்ன சொன்னாரு, மூஞ்சி ஏன் இப்படி இருக்கு”

“மீனா தூங்கிட்டலா புள்ள”

“இப்போதான் தூங்கிச்சு, சரி பேச்சை மாத்தாம விஷயத்தை சொல்லு”

டாக்டர் கூறியது அத்தனையும் கனகாவிடம் சொன்னான் முருகன்.

“இன்னையா இம்மாம் பெரிய குண்டை தூக்கி போடுற. அத்தனை துட்டுக்கு எங்க போவோம்”, அலற ஆரம்பித்தாள் கனகு.

“ஏய், நிறுத்தும்மே, கூவாத. இது ஆஸ்பத்திரி, நான் வூட்டுக்கு போய் அப்பாவாண்ட பேசறேன், அவுரு எதுனா ரோசனை சொல்லுவாரு, நீ புள்ளைய பத்திரமா பார்த்துக்க”

“சரிய்யா, நீ போயிட்டு வா, சொல்றா மாதிரி மாமா நல்ல ரோசனை சொல்லுவாரு. பேசிட்டு சுருக்க வா.”

“வாடா முருகா, டாக்டர் இன்னா சொன்னாரு”

“அப்பா புள்ளக்கு ஹார்ட்ல தொலள இருக்காம்பா. உடனே ஆபரேஷன் செய்யணுமாம். இரண்டு லட்சம் செலவாகுமாம். யாருகிட்டப்பா கேக்கறது.”

“ஐயோ பாவம் பச்சை புள்ளக்கு போய் இந்த நோவு வந்திருக்கே, கட்டைல போற வயசுல நான் இருக்கேன் எனக்கு வரகூடாதா? • புலம்ப ஆரம்பித்தார் வடிவேலு.

“ஏன் நைனா நீ எதுனா ரோசனை சொல்லுவேன்னு பார்த்தா, நீ இப்படி போலம்பறியே”

“இல்லடா மீனாக்கு இப்படின்னு கேட்டவுடனே ஒன்னும் தோனல, நான் சுப்புகிட்ட பேசி பாக்கறேன். அவன் பையன் நம்ம ஊரு MLAகிட்டதானே வேலை பாக்குறான். எதுனா கடன் வாங்கி தர முடியுமான்னு கேட்டு பார்க்கலாம். இட்லி சுட்டு வச்சிருக்கேன். நீ சாப்பிட்டுட்டு கனகுக்கும் எடுத்துட்டு போ. அப்படியே மீனாக்கு என்ன கொடுக்கலாம்னு கேட்டுட்டு வா. நானும் போய் சுப்புவை பார்த்துட்டு வரேன்”

சுப்புவின் வீடு

“வாடா வடிவேலு, என்னடா ஆச்சு? ஏன் இத்தனை சோகமா வரே. சாப்பிட்டியா. லக்ஷ்மி வடிவேலு வந்திருக்கன் பாரு. தண்ணி கொண்டு வா”

“வாங்க மாமா. அண்ணன் சௌக்கியமா”, என்றபடியே வந்தாள் சுப்புவின் மருமகள் லக்ஷ்மி

“உன் அண்ணன் மட்டும் இல்லமா, வீட்டுல யாருமே நல்லா இல்ல”

“என்ன மாமா சொல்றீங்க, என்ன ஆச்சு, லக்ஷ்மி மாமாக்கு மோர் தண்ணி கொடு. ரொம்ப சோர்ந்து தெரியறார்”, மனைவியை பார்த்து கூறினான் கபாலி. “அதெல்லாம் ஒன்னும் வேண்டாப்பா”, என்றபடியே வீட்டில் அன்று நடந்தது. டாக்டர் கூறியது என்று ஒன்று விடாமல் அவர்களிடம் வடிவேலு கூறினார்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல வேலு. அந்த குட்டி பொண்ணுக்கு இம்மாம் பெரிய வியாதி வரணும். அதுவும் பணக்கார வியாதியா? கடவுளுக்கு கண்ணே இல்லப்பா”

“சரியா சொன்ன சுப்பு. என்ன மாதிரி கிழம் கட்டைனாகூட பரவா இல்ல. போகட்டும்ன்னு விடலாம். அது பச்சை மண்ணு, அதுக்கு போய் இப்படி ஒரு வியாதி. அப்பா கபாலி நான் உன்னைத்தான் நம்பி வந்திருக்கேன். நீதான் உங்க அய்யாகிட்ட பேசி துட்டு வாங்கி தரணும். வட்டி வேணும்னாகூட கொடுத்துடலாம். மீனாக்கு ஆபரேஷன் முடிஞ்சப்புறம் நானும் எதுனா வேலைக்கு போலாம்ன்னு இருக்கேன். கனகுவும் இன்னும் ரெண்டு வீடு எக்ஸ்ட்ரா வேல பார்க்கும். எப்படியாவது அடைச்சுடறோம். நீதான்பா இப்போ உதவனும்”

“என்ன மாமா இது, உங்களுக்கு ஒரு உதவி செய்யாம நான் யாருக்கு செய்ய போறேன். நான் நாளைக்கே அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்றேன். நீங்க கவலைபடாம போங்க. பணத்துக்கு ஏற்பாடு பண்ண நானாச்சு”

“ரொம்ப தேங்க்ஸ்ப்பா. இந்த உதவியை உசிர் உள்ளவரை மறக்க மாட்டேன்”

“பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க மாமா, மீனா எனக்கும் பொண்ணு மாதிரித்தான். நீங்க முருகனை கவலைபடாம இருக்க சொல்லுங்க. நான் நாளைக்கு வந்து புள்ளைய பார்க்கறேன்”

*சரி சுப்பு. நான் கிளம்பறேன். ஒரு பெரிய பாரம் விட்டா மாதிரி இருக்கு”

மறுநாள் காலை – MLA வீடு

“தலைவரே அவனுங்களை என்ன பண்ணலாம் சொல்லுங்க, உங்களை பத்தி CM கிட்ட வத்தி வச்சிருக்கானுங்க. அதுனாலத்தான் இப்போ வர வேண்டிய மந்திரி பதவி வரலை, எதுனா பண்ணனும் தலைவரே, இல்லேன்னா அவனுங்களுக்கு துளிர் விட்டு போய்டும்:* கொதித்தான் கபாலி.

“கபாலி எதுக்கு கத்தறே. இப்போ அவனுங்களுக்கு எதுனா ஆச்சுன்னா உடனே பழி நம்ம மேலதான் வரும். அவனுங்களை எதுவும் செய்ய கூடாது. ஆனா எனக்கும் பதவி வரணும். அதுக்கு என்ன செய்யலாம் யோசி.”

“தலைவரே, உங்க சார்பா நாங்க கட்சி தொண்டர்கள் எல்லாம் மீட்டிங் போட்டு உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்காததை எதிர்த்து குரல் கொடுக்கறோம். அப்புறம் ஊர்வலம், சாலை மரியல்ன்னு அதை develop பண்ணி பெரிய அளவுல மேலிடத்துக்கு பிரஷர் கொடுக்கலாம். நாங்க கொடுக்கற கொடைச்சல்ல ஆடோமாடிக்கா உங்களுக்கு மந்திரி பதவி வரும் பாருங்க.”

“பாப்போம் முதல்ல மீட்டிங் போடலாம், மத்ததை அப்புறம் முடிவு செய்யலாம்-“

“தலைவரே ஒரு விஷயம். எனக்கு தெரிஞ்சவங்களோட குழந்தைக்கு உடம்பு சரி இல்ல. உடனே ஆபரேஷன் பண்ணனும் டாக்டர் சொல்றார். அதுக்கு 2 லட்சம் தேவைபடுது. கடனா கேக்கறாங்க. நான் உங்ககிட்ட கேட்டு பார்க்கறேன்னு சொல்லி இருக்கேன். ரொம்ப நாணயமானவங்க தலைவரே. கரெக்டா பணத்தை திருப்பி கொடுத்துடுவாங்க. நீங்கதான் மனசு வச்சு ஹெல்ப் பண்ணனும்”

“உனக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன் கபாலி. நாளைக்கு அவங்களை வீட்டுக்கு வந்து என்னை பார்க்க சொல்லு”

“நன்றிங்க தலைவரே. நானே நாளைக்கு அவங்களை கூட்டிட்டு வரேன்”

முருகன் வீடு

“மாமா,முருகன் மீனாக்கு எப்படி இருக்கு இப்போ. டாக்டர் என்ன சொன்னார்”

“மூச்சு வாங்கறது கொஞ்சம் கொறஞ்சு இருக்கு. ஆனால் டாக்டர் எத்தனை சீக்கிரம் ஆபரேஷன் பன்றோமோ அத்தனை நல்லதுன்னு சொல்றாங்க. அப்பா உன்கிட்ட பணம் பத்தி சொன்னாரா கபாலி. நீ உன் தலைவர் கிட்ட கேட்டியா”

“அதை பத்தி சொல்லத்தான் வந்தேன். தலைவர் பணம் தர ஒத்துகிட்டார். நாளைக்கு காலில நீங்க யாராவது என்கூட வந்திங்கன்னா அவரை பார்த்து பேசலாம்”

“நாளைக்கு முழு நாள் சவாரி ஒத்துக்கிட்டேன் கபாலி. இனிமே நிறைய துட்டு சேர்க்கணுமே. காலில அப்பா ஆஸ்பத்திரி போயிட்டு ஒரு மூணு மணி நேரம் இருந்துட்டு வருவாரு. அதுக்குள்ளே கனகு மத்த ஊட்டு வேலை எல்லாம் முடிச்சுடும். 11 மணிக்கு மேலனா ஒன்னும் பிரச்சனை இல்ல”

“சரிப்பா, நான் தலைவருக்கு போன் பண்ணி ஒரு 11 மணிக்கா வரேன்னு சொல்றேன்”

மறுநாள் காலை – MLA வீடு

“வாப்பா கபாலி, கரெக்டா சொன்ன நேரத்துக்கு வந்துட்ட”

“எங்க அவசரம் அப்படி தலைவரே. இவருதான் நான் நேத்திக்கு சொன்னவரு. இவரோட பேத்திக்குதான் ஆபரேஷன். எங்க அப்பாவும் இவரும் ரொம்ப வருஷமா பிரண்ட்ஸ்.”

“அப்படியா, ஒன்னும் பிரச்சனை இல்ல. கொடுத்துடலாம். கபாலி நான் இவரோட தனியா பேசணும். பண விஷயம் பாரு கொஞ்சம் கட் அண்ட் ரைட்டா பேசுவேன். உனக்கு சங்கடமா இருக்கும் அதுனால போயிட்டு ஒரு அரை அவர் கழிச்சு நீ வா”

“சரிங்க தலைவரே, ஏதோ பார்த்து செய்ங்க. மாமா நீங்க பேசி முடிசுட்டாலும் இங்கயே இருங்க. நான் வந்தப்புறம் ரெண்டு பெரும் ஒண்ணா போலாம்”

“சரிப்பா நீ போயிட்டு வா. நான் பக்குவமா அவர்கிட்ட பேசிக்கிறேன்”

அரை மணிக்கு பிறகு.

“நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். இனிமே முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான். நீங்க எடுக்கற முடிவுலதான் உங்க பேத்தி உயிர் இருக்குங்கறதை மறக்காதீங்க”

“அது சரிதான். ஆனா நீங்க சொல்றதை என்னால நினைச்சே பாக்க முடியலையே. சரி வேற வழியில்லைங்கறதால நான் நீங்க சொல்றதை செய்யறேன். ஆனா எனக்கு பணம் முன்னாடியே வேணும். என் பேத்தி ஆபரேஷன் முடிஞ்சு அவ உசிர் போழைச்சுட்டான்னு தெரிஞ்சப்புரம்தான் நான் இந்த வேலை செய்வேன். அதுக்கு நீங்க ஒத்துகிட்டா நான் இதை செய்யுறேன்”

“உங்களை எப்படி நம்புறது பெரியவரே. காசு வாங்கிட்டு உங்க காரியம் முடிஞ்சவுடனே நீங்க டேக்கா கொடுக்க மாட்டீங்கங்கறது என்ன நிச்சயம்”

“அய்யா நாங்க ஏழைங்கதான், ஆனா சொன்ன சொல் காப்பாதறவங்க. உங்களை மாதிரி அரசியல்வாதிதான் இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கி ஒண்ணுன்னு பேசுவான். எங்ககிட்ட அது கிடையாது. நீங்க துட்டை கொடுங்க, என் பேத்தி ஆபரேஷன் முடிஞ்சு நல்லபடியா கண் முழிக்கட்டும்.அடுத்த நாளே நான் நீங்க சொன்னதை செய்யுறேன்”

“சரிங்க பெரியவரே. நான் நீங்க சொல்றதை நம்பறேன். இன்னிக்கு சாயங்காலமே வந்து பணம் வாங்கிகோங்க. அதை திருப்பி தர வேணாம். நீங்க எனக்காக செய்யபோற வேலைக்கு சன்மானம் அது-“

1 வாரத்திற்கு பிறகு

“அப்பாடா நல்ல படியா ஆபரேஷன் முடிஞ்சு புள்ள கண்ண முழிச்சு பார்த்துடுச்சு. கபாலி உனக்குத்தான்ப்பா பெரிய நன்றி சொல்லணும். உங்க தலைவர் மட்டும் சரியான நேரத்துல உதவி செய்யலேன்னா புள்ள உசிர் போழசுருக்கறது கஷ்டம்தான். அதுவும் அந்த துட்டை திருப்பி கூட தர வேணாம்ன்னு சொல்லிட்டார். எம்மாம் பெரிய மனசுய்யா அவருக்கு. புள்ள குட்டிங்களோட அவரு நல்லா இருக்கணும். நானும் கனகுவும் நேர வந்து அவருக்கு நன்றி சொல்லணும். என்னப்பா ஒரு மாதிரி இருக்கீங்க”

“இல்ல முருகா, புள்ளைக்கு சரியாகனுமேன்னு ஒரே கவலை அதுதான் வேற ஒன்னும் இல்ல. ஆமா கபாலி உங்க தலைவருக்காக ஏதோ கூட்டம் போடப்போறீங்களாம். என்னிக்கு அது”

“ஆமா மாமா, தலைவருக்கு இந்த தபா மினிஸ்டர் பதவி வந்திருக்கணும். நடுவுல அந்த சொக்கேசன் பூந்து கெடுத்துட்டான். இந்த மாதிரி மீட்டிங், மரியல்ன்னு பண்ணி தலைவருக்கு எப்படியாவது பதவியை வாங்கி கொடுத்துடணும். இன்னிக்கு சனிகிழமை இல்ல. வர வெள்ளிகிழமை மீட்டிங்.”

“அப்படியா சரிப்பா. நானும் உன் மீடிங்க்கு வரேன். நீ என்னதான் பேச போறேன்னு கேப்போமே”

வெள்ளிகிழமை மதியம் 2 மணி

“என்னங்க மாமா ரொம்ப சோர்வா தெரியறீங்க. புள்ளதான் நல்லபடியா பொழச்சுடுச்சே. இன்னும் ஒரு வாரத்துல வீட்டுக்கே வந்துடும். அப்புறம் என்ன”

“ஒன்னும் இல்லமா, மனசு ஏதோ சரி இல்ல. நீ நல்லபடியா இரு. உன் புருஷனையும், புள்ளையும் நல்லா பார்த்துக்கோ. முருகனுக்கு ஒண்ணுமே தெரியாது தாயி. அவன் உண்டு. ஆட்டோ சவாரி உண்டுன்னு இருப்பான். நீதான் சுகுரா இருந்து இந்த குடும்பத்தை காப்பாத்தனும்”

“என்னாச்சு மாமா, ஏன் கண்டபடி பேசறீங்க”

“ஒன்னும் இல்லாம, ஏதோ உன்கிட்ட சொல்லனும்ன்னு தோணிச்சு அம்புட்டுதான். சரி நான் போய் நம்ம கபாலியோட மீட்டிங் பார்த்துட்டு வரேன்.”

“சரி மாமா, நானும் புள்ளைக்கு கஞ்சி எடுத்துட்டு ஆஸ்பத்திரி கிளம்பறேன்”

சென்னை தீவு திடல் – தலைவர் ஆதிராஜனுக்கு மந்திரி பதவி தராததை கண்டித்து போராட்டம்

“நான் உங்களை எல்லாம் ஒன்று கேட்க்கிறேன். எங்கள் அன்பு தெய்வம், அருமை தலைவர் இந்த நாட்டு மக்களுக்காக எத்தனை எத்தனை நல்லது செய்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா. எத்தனை ஏழை மக்களின் கண்ணீரை துடைத்திருக்கின்றார் என்று தெரியுமா. அவர் ஏழைகளின் பாட்டாளன். இதோ இப்பொழுது கூட எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என் நண்பன் குழந்தையை காப்பாற்றி இருக்கிறார். இலவச கல்யாணம்…”

“தலைவர் ஆதிராஜன் வாழ்க. அவருக்கு மந்திரி பதவி தராத இந்த அரசாங்கம் ஒழிக. எங்க தலைவருக்கு மந்திரி பதவி கொடுக்காததால நான் இப்போ தீக்குளிக்க போறேன்”

“ஐயோ மாமா என்ன காரியம் பண்றீங்க. நிறுத்துங்க மாமா”

மறுநாள் செய்தி தாளில் தலைப்பு செய்தி.

20 வருடங்களாக ஆதிராஜனுக்கு தொண்டனாக இருந்த வடிவேலு என்பவர் ஆதிராஜனுக்கு மந்திரி பதவி வழங்காததால் அரசை கண்டித்து தீக்குளித்தார்.

– 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *