இழி தொழில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 1,619 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடுகு பொரிந்து அடங்குவதுபோல் கைதட்டல் கலகலத்து ஓய்ந்தது. 

நகர காங்கிரஸ் கமிட்டிக் காரியதரிசியும், ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரும், நகரசபைத் தலைவரும், பிரபல மொத்த ஜவுளி வியாபாரியும், முன்னாள் நீதிக் கட்சிப் பிரமுகரும், இந் நாள் சிவனடியார் திருச்சபையின் போஷகருமான திருவாளர் தில்லைத்தாண்டவராய பிள்ளையவர்கள் பெருமிதத்தோடு எழுந் திருந்து தொண்டையை லேசாகக் கனைத்துச் செருமிக்கொண்டு திருவாய் மலரத் தொடங்கினார். 

“தேச பக்தத் தியாகிகளே, ஊழியர்களே ! இன்றைய அவ சரக் கூட்டத்தின் காரணம் தங்களுக்குத் தெரிந்ததே. நமது நகரத்தின் தோட்டித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைப் பற்றி ஆலோசிக்கவே நாம் கூடியிருக்கிறோம். நமக்குள்ள செல்வாக்கையும் பலத்தை யும் கண்டு பொறாமை கொண்டுள்ள எதிர்க் கட்சிக்காரர்கள் தாம் இந்த வேலை நிறுத்தத்தைத் தூண்டிவிட்டு நமக்கும் பொது மக்களுக்கும் பெருங்கஷ்டத்தை உண்டுபண்ணியிருக்கிறார். கள். தொழிலாளரின் கோரிக்கைகள் நியாயமானவையாயிருந் தால் அரிஜன சேவையில் தலை சிறந்த நாம் அவற்றை உடனே ஏற்று ஆவன செய்யப் பின் வாங்கமாட்டோம். ஆனால் அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் அநியாயமானவை. எனவேதான் துர்ப்போதனையால் கெட்டுச் சீரழியும் தோட்டித் தொழிலாள ருக்கும் அவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் எதிர்க் கட்சியாளருக்கும் நாம் சரியான பாடம் கற்பித்தாக வேண்டி யிருக்கிறது. நமது அரும் பெருந் தலைவரான மகான் மகாத்மா காந்திஜி அவர்கள் தாம் ஒரு பதவியை ஏற்க நேர்ந்தால் ஒரு நகர சபைக் கவுன்சிலர் பதவியையே ஏற்பேன் என்று கூறியுள்ளார். ஏன் தெரியுமா? நகரத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதே கவுன்சில ரின் முக்கிய வேலை என்பதே அதன் பொருள். அதுமட்டுமல்ல. அவர் தமது நிர்மாணத் திட்டத்திலும் நகர சுத்தியை ஒரு பிரதான கருமமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். நாம்தான் துரதிருஷ்ட வசமாக அவரது பொன் மொழிகளையெல்லாம் மறந்துவிட்டோம். காந்தியடிகளின் போதனையை நாம் நடைமுறையில் கடைப் பிடிக்க, இந்தத் தோட்டித் தொழிலாளரின் வேலைநிறுத்தம் நல்ல சந்தர்ப்பத்தைத் தேடித் தந்திருக்கிறது. இதை நாம் நழுவவிடக்கூடாது. தோட்டித் தொழிலை இழிவானதென்றோ, கேவலமானதென்றே நாம் கருதக்கூடாது. எந்தத் தொழி லுமே உலகில் இழிவானதல்ல. இதை நாம் நன்குணர்ந்து, பொதுமக்களின் கஷ்டத்தையும், காந்தியடிகளின் உபதேசத்தை யும் கருத்தில் கொண்டு, நாமே இந்த நகரத்தைச் சுத்தி செய்ய வேண்டும். நாளைக் காலையிலேயே இந்தப் புனிதமான பணியை, பொதுஜன நன்மைக்கான போராட்டத்தை, நாம் தொடங்கி யாக வேண்டும். போராட்டத்தில் நாம் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்….” 

சொல்லின் செல்வரான தில்லைத் தாண்டவராயரின் தர்க்க நியாயம் நிறைந்த அறைகூவலைக் கேட்டு வந்திருந்தவர்களில் பலரும் தவிர்க்க முடியாத சேவா வைராக்கிய உணர்ச்சி வசப்பட் டுத் தத்தளித்தார்கள். பல ஊழியர்கள் அந்த இடத்திலேயே தமது பெயரைப் பதிவு செய்துகொள்ள முன் வந்தனர். வேறு சிலர் பின்னர் வந்து பதிவு செய்து கொள்வதாகக் கூறித் தப்பித்துக்கொண்டார்கள். செயலுள்ள வியாபாரிகளான உள்ளூர்க் காங்கிரஸ் பிரமுகர்கள் தாம் போராட்டத்தில் நேரடியாகப் பங்குகொள்ள இயலாவிட்டாலும், போராட்டத் துக்குத் தமது ஆத்மீக ஆதரவும் ஒத்துழைப்பும் பரிபூரண மாக உண்டு என்ற ஒளிவு மறைவற்ற உண்மையைத் தெரி வித்து மகிழ்ந்துகொண்டார்கள். அத்துடன் போராட்ட வீரர் களுக்குப் புதிய வாளிகளும், விளக்குமாறுகளும், அகப்பை களும், இலவசமாக ‘சப்ளை’ செய்யும் தளவாட தான் கைங்கரியப் பொறுப்பையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள். 

நகரசபைத் தலைவருக்குப் பரம திருப்தி. காந்தியடிகளின் மீது ஆணையிட்டு, எல்லோரும் கடமையை நிறைவேற்ற முன் வர வேண்டும் என்று இறுதியாகக் கேட்டுக் கொண்டார்? 

கூட்டம் கலைந்தது. 

காரியாலயத்தை விட்டு வெளியே வந்த ஊழியர்கள் பலர் அந்தப் புனிதப் போராட்டத்தைப் பற்றிய தமது கருத்துக் களைப் பரிமாறிக் கொண்டார்கள். 

“சேர்மன் ஐயாவின் தேச பக்தியைப் பார்த்தீங்களா? அவரைப்பத்தி என்னென்னமோ சொன்னீங்களே! “

“எல்லாம் அவர் மானத்தைக் காப்பாத்திக்கிறதுக்குத் தானே!”

“அட சரித்தாம்’யா! தேனொழுகப் பேசினாமட்டும் போதுமா? எலெக்சன் டயத்திலே அவர் பண்ணின அட்டகாச மும் தில்லுமில்லும் நமக்குத் தெரியாதா? இதுவும் அந்த மாதிரி ஒண்ணுதான். 

“இதிலென்னய்யா தில்லுமில்லு?” 

“பின்னே? தோட்டித் தொழிலாளியின் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறதிலே நமக்கு வேறே பங்கா?” 

” அதுக்காக, அந்தப் பயலுஹ ஊரை நாறவிடலா மாக்கும்!” 

“நகர சபைக்குள்ளே இருக்கிற நாத்தத்தை விடவா?” 

“அது சரிதான்’வே. அவனுக ஊரை நாறவிட்ட பிறகு தானே உமக்கும் நமக்கும் அவனைப்பத்தியே நினைப்பு வருது? இல்லேன்னா வருமா ? ஹரிஜன சேவை, சேவை என்கிறோமே, ஒரு வாரத்துக்கு மின்னே வரையிலும் அவங்க நிலைமை என்னங் கிறதைப்பத்தி, நாம் யாராவது கவலைப்பட்டதுண்டா? தெரிஞ்சிக்கிட்டதுண்டா ?” 

”வேய், இப்போ ஊர் நன்மையும், காங்கிரஸின் கௌரவ மும் தான் பெரிசு. நாளைக்கு நாம் இதிலே கலந்துக் கிடத்தான் வேணும் !” 

“அதென்னமோ, ஐயா. நான் புள்ளை குட்டிக்காரன். அந்தப் பலலுஹ வாயெரிஞ்சி வயிறெரிஞ்சி வாரித் தூத்தினா, அந்தப் பாவம் நம்மை லேசிலே விடாது. நான் இந்த விவகா ரத்திலே தலைகுடுக்கப் போறதில்லை.” 

“நீர் வரலைன்னா, வேலை நின்னுடப் போறதாக்கும்!” 

“இல்லை – நீங்க செய்ற வேலையைத்தான் ஊர் மெச்சப் போவுது!” 

……அந்த ஊழியர்களிடையே நிலவிய அபிப்பிராய பேதங் கள் முடிவேயில்லாத வாதப் பிரதிவாதங்களாக மாறி, கூச்ச லாகப் பரிணமித்து, பதில் காணமுடியாது தவித்தன. 

இன்றோடு ஏழு நாட்கள் ஆகின்றன. 

நகரசுத்தித் தொழிலாளரின் வேலை நிறுத்தம் இன்றும் முடிவு காணும் நிலையிலில்லை. நகரசபை நிர்வாகிகளும் தொழி லாளரின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. தொழிலாளர்களும் வணங்கிவிடவில்லை: எனவே வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

ஏழு நாட்கள்! 

நகரத்தின் நிலைமையோ சொல்லும் தரமன்று. வீடுகளில் சுத்தம் செய்ய ஆள் கிடையாது. ஊர்ச்சாக்கடைகள் அனைத் தும் கட்டுக்கிடையாகித் தேங்கிப் பெருகிப் பெருகி அணை கடந்து தெருக்களிலே போக்கிடம் தேடத்தொடங்கின. தெருக் கள் அனைத்தும் குப்பையும் கூளமும் மண்டிக் கிடந்தன. எங்கும் துர்நாற்றம் பரவி நின்றது. ஜனங்கள் மூச்சுவிடத் திணறினார்கள் ; சாப்பிடத் திணறினார்கள்; நடக்கத் திணறினார்கள். 

நகரம் நரகமாயிற்று. 

“இந்தத் தோட்டிப்பய சென்மங்களுக்கு வந்த திமிரைப் பார்த்திங்களா?” என்று கறுவினார்கள் சிலர். 

“அவன் மட்டும் மனுசனில்லையா? அவனுக்கும் வாயும் வயிறும் இல்லாமலா போச்சி!” என்று அனுதாபப்பட்டார்கள் வேறு சிலர். 

“இந்தப் பாச்சாவெல்லாம் நம்ம சேர்மன் பிள்ளைவாளிடம் பலிக்காது!” என்று ஜம்பம் பேசினார்கள் சிலர். 

“எந்தப் பூச்சாண்டியும் தொழிலாளியிடம் பலிக்காது ! என்று எதிரொலி கிளப்பினார்கள் வேறு சிலர். 

வேலை நிறுத்தத்தைப்பற்றி ஜனங்கள் பல்வேறு விதமாகப் பேசிக்கொண்டபோதிலும், அந்த வேலை நிறுத்தம் சகல மக்களின் கவனத்தையும் கவர்ந்திருந்தது என்பதில் மட்டும் எந்தவித அபிப்பிராய பேதத்துக்கும் இடமில்லை. 

திருவாளர் தில்லைத் தாண்டவராயன் சொல்கிறபடி அந்த வேலை நிறுத்தம் தூண்டுதலால் ஏற்பட்டதுதான். ஆனால் தூண்டிவிட்டது எதிர்க் கட்சிக்காரர்களோ, பொறாமைக்காரர் களோ, அல்ல. தூண்டிவிட்டது, அந்தத் தொழிலாளிகளின் துயரம்,பசி,பட்டினி, மிருக வாழ்க்கை, வறுமைக் கொடுமை முதலியவைதாம்…… 

நகரசுத்தித் தொழிலாளரின் வாழ்க்கை நிலை அவ்வளவு படுமோசமான நிலைமையிலிருந்தது. அவர்களுக்கு நல்ல குடியிருப்புக் கிடையாது. ஊர் எல்லையிலுள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் கோழிக்கூடுகளைப் போலவுள்ள குடிசைகள் தாம் அவர்களின் வாசஸ்தலங்கள். அங்குள்ள பன்றிகளோடும் நாய்களோடும் அவர்களும் அந்தக் கூடுகளில் வாழ்ந்தார்கள். அந்தக் குடியிருப்புக்குத் தண்ணீர் வசதி கிடையாது; விளக்கு வசதி கிடையாது. குடியிருப்புக்குப் பின்புறம் ஓடும் வயற் காட்டுச் சிற்றோடைதான் அவர்களின் அமுத கங்கை; நிலவின் கருணையுள்ள நாட்கள் தான் அந்தக் குடியிருப்பு ஒளிபெறும் நாட்கள். அந்தக் கோழிக் கூடுகளில்தான் அவர்கள் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள் ; காதலித்தார்கள்; கலியாணம் செய்தார் கள் ; பிரசவித்தார்கள்; பிள்ளை பெற்றார்கள்; பேரன் பேத்தி எடுத்தார்கள்; செத்துப்பிணமானார்கள். அந்தத் தொழிலாளி களுக்குக் கிடைத்துவந்த சம்பளமோ மாசம் பதினைந்து ரூபாய். பஞ்சப்படி உண்டு. அந்தப் ‘படி’யோ பஞ்சப்படி என்ற பெயருக்கே இலக்கணமாய் அமைந்திருந்தது. இந்தக் ‘குபேர’ சம்பளத்தில் தான் அவர்கள் உயிர் சுமந்து திரிந்தார்கள். வருகிற சம்பளம் வயிற்றுக்குக் காணாமல் தவணைவட்டிக் காரனிடம் கடன் வாங்கினார்கள். வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் வட்டிக்காரனிடம் அவஸ்தைப் பட்டார்கள்; அடிபட்டார்கள். சட்டிபானைகளைப் பறி கொடுத்தார்கள், மானம் மரியாதையைப் பறிகொடுத்தார்கள்.. 

அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை வசதிக்கு நகரசபை எந்தவித முயற்சியும் செய்யவில்லை. லோக்கல் போர்டு சிப்பந்தி கள் என்ற பெத்தப் பெயரே தவிர, அவர்களுக்கு வேலை நிரந்தர உத்தரவாதமோ, பாதுகாப்பு நிதி வசதியோ, சம்பள உயர்வோ எதுவும் கிடையாது. எனவே இந்த நிலையில் நகரசபை உத்தி யோகஸ்தர்களுக்கு அவ்வப்போது எழும் விருப்பு வெறுப்புக் களுக்காளாகி, சிலருக்குச் சீட்டுக் கிழிவதும் உண்டு. நகர சபையினர் அவர்களுக்கு வஸ்திரதானம் செய்து புண்ணியம் சம்பாதிப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். எனினும் அந்த வஸ்திரங்களோ ஆளுக்கு ஒரு ஜோடி ; அதுவும் மாமாங்கத்துக்கு மாமாங்கம். 

சுருங்கச் சொன்னால் நகரத்தை நரகமாக்காமல் சுத்தம் செய்து அழகுபடுத்தும் அந்தத் தொழிலாளர்கள் மட்டும் நரகக் குழியிலேதான் வாழ்ந்து வந்தார்கள். 

இந்த நிலைமைகளைச் சமாளிக்க முடியாதபோது தான், அந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமையின் பலத்தை, தமது உழைப்பின் சக்தியை உணர்ந்தார்கள்; ஒன்றுபட்டு நின்று உரிமைக்காகப் போராடினார்கள். பஞ்சப்படி, சம்பள உயர்வு புதிய உடை, வேலை நிரந்தரம், குடியிருப்பு வசதி, நீக்கப்பட்ட தொழிலாளரை மீண்டும் வேலைக்கு எடுத்தல் முதலிய கோரிக் கைகளுக்காக, நகரசபை நிர்வாகிகளோடும் லேபர் அதிகாரி களோடும் வாய்சலிக்குமட்டும் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த் தார்கள். அவற்றால் எந்தவித பயனும் விளையவில்லை. எனவே தான் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தங்களிடமுள்ள ஒரே ஆயுதத்தை, இறுதி ஆயுதத்தைப் பிரயோகிக்கத் துணிந்தார்கள். 

வேலை நிறுத்தம்! 

கடந்த ஒருவார காலமாக, ஆண் பெண் உட்பட எல்லாத் தொழிலாளரும் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஒரு குஞ்சு குளுவான்கூட, வேலைக்குச் செல்லவில்லை. வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகுதான் நகரசபை நிர்வாகிகளுக்கும் அதன் பலம் பலன் எல்லாம் தெரிந்தன. நியதி தவறாது சுற்றிச் சுற்றி வரும் பிரபஞ்ச கோளமே திடீரென்று ஸ்தம்பித்துச் சிந்திச் சிதறிப் போவதுபோல், நகரத்தின் நிலை நியதி குலைந்து தத்தளித்தது. எனினும் நிர்வாகிகள் தொழிலாளரின் கோரிக்கைக்கு இணங்க முன்வரவில்லை; உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பலரும் வேலை நிறுத்தத்தை உடைக்கச் செய்த சதிவேலைகள் எதுவும் பலிக்க வில்லை. சுதந்திரத்தின் பாதுகாவலர்களான அந்தப் பிரமுகர் கள் போலீஸின் மறைமுகமான ஒத்துழைப்பைச் சம்பாதித்துக் கொண்டு தமது அடியாட்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு, நகரசுத்தித் தொழிலாளரைக் கண்ட கண்ட இடத்தில் தாக்கி னார்கள் : குடியிருப்புக்குள் நுழைந்து சட்டிபெட்டிகளை உடைத் தெறிந்தார்கள்; பெண்களையும் பிள்ளைகளையும் சீரழித்தார்கள். போலீசாரும் அமைதியை நிலைநாட்டும்’ கடமை யுணர்ச்சி யோடு தொழிலாளர்மீது கண்டும் காணாமலும் தடியடித் தாக்குதல் நடத்தினர்; அமைதிக்குப் பங்கம் விளைவித்த தொழிலாளரை லாக்கப்பில் தள்ளினார்கள். 

அடக்குமுறை – சூழ்ச்சி – அரசியல் சாகசம் எதுவும் அந்தத் தொழிலாளரை அடக்கிவிடவில்லை. அவர்கள் எதற்கும் அஞ்ச வில்லை: அடிபணியவில்லை. உலைக்களத்திலே தள்ளிய காலத்தி லும் அவர்கள் உறுதி குலையவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் உருக்காகிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்ல. அந்தத் தொழிலாளரின் உரிமைப் போராட்டம் பிற பகுதித் தொழிலாளர்களின் கவனத்தையும் கவர்ந்தது. நகரசுத்தித் தொழிலாளருக்கு ஆதரவாக பிறதொழிலாளர்கள் கூட்டங்கள் நடத்தினர்; ஊர்வலம் நடத்தினர் : கோஷமிட்டனர்; தீர்மா னங்கள் நிறைவேற்றினர்; ஆதரவு திரட்டினர்….

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த வேலை நிறுத்தப் போராட் டத்தைச் சீர்குலைத்துச் சின்னபின்னமாக்கக் கனவு காணும் ‘புனித போராட்ட’த் திட்டம் நகரக் காங்கிரஸ் கமிட்டி காரியாலயத்தில் திருவாளர் தில்லைத் தாண்டவராயன் தலைமை யில் உருவாகியது…

பறையருக்கும் இங்குதீயர் 
புலையருக்கும் விடுதலை! 
பறவரோடு குறவருக்கும் 
மறவருக்கும் விடுதலை! 

என்று பாடிக்கொண்டே அருணோதயப் பொழுதில் நகரை வலம் வரத் தொடங்கியது அந்த ஊர்வலம். 

கதர்க் குல்லாய், கதர் ஜிப்பா, கதர் பைஜாமா முதலிய தூய வெள்ளை ஆடையலங்காராதிகளோடு, புத்தம் புதிய வாளிகளையும் அகப்பைகளையும், விளக்கு மாறுகளையும் ஏந்திய திருக்கரங் களோடு, சில காங்கிரஸ் ஊழியர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். வீறு நடைபோட்டுச் செல்லும் அந்த ஊழியர்களுக்கு முன்னால் வெற்றி நடை போட்டுச் சென்றுகொண்டிருந்தார் சேர்மன் பிள்ளையவர்கள். அந்தக் கர்மயோக சாதகர்களின் அணி வகுப் புக்கு இருமருங்கிலும் போலீஸ் ஜவான்கள் சிலர் பாதுகாப்பாக நடந்து வந்தனர். அந்த ஊர்வலத்துக்குப் பின்னால், சுமார் ஐம்பது கஜ தூரத்துக்கு அப்பால், எழுந்திருந்தாகிச் செல்லும் உற்சவ மூர்த்தத்துக்குப் பின்னால் தேவாரம் பாடிவரும் திருக் கோஷ்டியைப் போல், ஆயுதம் தாங்கிய போலீஸாரைத் தாங்கிய லாரி ஒன்று மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. 

ஊர்வலம் முதல் பெருவீதியைக் கடந்து மூலை திரும்பியது. 

எதிரே நகரசுத்தித் தொழிலாளர்களின் ஊர்வலம் கட்ட விழ்த்துவிட்ட அசுர சக்தியைப்போல் உருண்டு திரண்டு அலை மோதிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. 

“மகாத்மா காந்திக்கு-ஜே!’ என்று கோக்ஷித்தது தில்லைத் தாண்டவராயரின் ஊர்வலம். 

“உழைப்பவன் சோற்றைப் பறிக்காதே!” என்று எதிரொலி தந்தது நகர சுத்தித் தொழிலாளரின் ஊர்வலம். 

சிறிது நேரத்தில் இரு ஊர்வலங்களும் எதிரும் புதிருமாக, இரு பெரும்படைகள்போல் நெருங்கின ; ஒன்றையொன்று வழி மறித்தன ; இரண்டும் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. 

“வழி விடுகிறீர்களா, இல்லையா?” என்று கர்ஜனை செய்தார் தேசபக்த ராஜசிம்ம தில்லைத் தாண்டவராயர். 

“முடியாது! என் சவத்தின்மீது நடந்துபோங்கள்!” என்று முன்னே வந்து முழக்கினான் ஒரு வயோதிகத் தொழிலாளி. 

அந்தக் கிழட்டு உடம்பு படபடத்தது ; நரம்புகள் புடைத்துத் துடித்தன. 

சேர்மன் பிள்ளையவர்கள் போலீஸ் உதவியை அழைப்பதா வேண்டாமா என்று யோசித்தார்; அவருக்குப் பின்னால் திரண்டு நின்ற ஊழியர்கள் எதிரே ஏறிட்டுப் பார்த்தார்கள். 

எதிரே…. 

தாடி மண்டி வளர்ந்த முகங்கள் – பசியும் – களைப்பும் பதிந்து, களையும் ஒளியும் இழந்து பஞ்சடைந்து தோன்றும் கண்கள் -ஒட்டி உலர்ந்து உட்குழிந்த வயிறுகள் – குழலாடித் தளர்ந்துபோன வயோதிகர்கள் – வாலிப வயதிலேயே வயோதிகத்தை அனுப விக்கும் குமரர்கள் – மானத்தை மறைக்கக்கூடப் போதுமான கந்தலற்றுத் தவிக்கின்ற பெண்கள்-பிஞ்சிலே வெம்பிய பழம் போன்று வற்றி மெலிந்து தோன்றும் சிறுவர் சிறுமிகள்… 

அவர்கள் அத்தனை பேரும் ஆண் பெண் என்ற வித்தியாச மின்றி, சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி, ஒரே விதமான உறுதியோடும் உத்வேக உணர்ச்சியோடும் நின்று கொண்டிருந்தனர். 

முன் வரிசையில் நின்ற காங்கிரஸ் ஊழியன் ஒருவன் அந்தக் கிழவனை நோக்கிக் கேட்டான்: 

“எங்களை ஏன் வழி மறிக்கிறாய்? உங்கள் வேலை நிறுத்தத்தால் ஊரே நாற்றமெடுத்துப் போச்சே! ஏன் இந்த அடாத காரியம் செய்கிறீர்கள்?”

அந்தக் கிழவனிடமிருந்து கணீரென்று பதில் வந்தது: 

அடாத காரியமா? எதய்யா அடாத காரியம்? அந்தக் காந்தி மகாத்துமா சொல்லிக்கொடுத்த சத்தியாகிரகத்தைத் தானே நாங்களும் செய்கிறோம்!” 

“நாங்கள் செய்த சத்யாகிரகம் அன்னியனின் அநீதியை, ஆட்சியை எதிர்த்து: நீங்கள் செய்வது சத்தியாகிரகமல்ல; சண்டித்தனம்!” 

“ஏனையா? நீங்க செய்தா சத்யாக்கிரகம், நாங்க செய்தா சண்டித்தனம்! அப்படித்தானாய்யா? நாங்களும் எங்களுக்குச் செய்த அநியாயத்தை எதுத்துத்தான் போராடுதோம், தெரிஞ்சிதா?”

“உன்னிடம் வாதாட வரவில்லை. சரி வழியை விடு!” 

“இருங்க, சாமி ! காந்தி மகான் உங்களை இப்படித்தான் சேவை செய்யச் சொன்னாரோ?” என்று எரிச்சலோடும் கும்பிக் கொதிப்போடும் கேட்டான். 

“ஆமா, நகரத்தைச் சுத்தி செய்வது அவர் இட்ட கட்டளை!” 

அந்தக் கிழவனுக்கு மீசை துடித்தது ; உதடுகள் நடுங்கின ! தொள தொளத்த தசை நார்களெல்லாம் முறுக்கேறித் திமிறுவது போல் இருந்தன. புடைத்துத் தெரியும் ரத்த நாளங்களும், நரம்புக் கொடிகளும் நெளிந்து புரண்டன 

இதோ பாருங்கையா! எங்க கூட்டத்தை! உழைக்கிற உழைப்புக்குக் கிடைக்கிற காசு ஒரு வாய் சோத்துக்குப் பத்தலெ. எலும்பும் தோலுமா நிக்கிற எங்க குழந்தை குட்டிகளைப் பாருங்க; கட்டையிலே போற வயசிலேகூட வயித்தாத்திரம் தாங்க முடியாமெ,உழைச்சி உழைச்சித் தேஞ்ச இந்த உடம்பைப் பாருங்க. எங்க இத்தனை பேர் வயித்திலேயும் மண்ணடிச்சிட்டுத் தான் காந்தி மகான் ஊரைச் சுத்தம் பண்ணச் சொன்னாரா ? எங்களுக்கு எதிரா, கருங்காலி வேலை பார்க்கிறதுக்குத்தான் காந்தி சொல்லிக் கொடுத்தாரா ? நெஞ்சிலே கையை வைத்து நிசத்தை சொல்லுங்கய்யா!” 

கிழவனின் குரல் உணர்ச்சிப் பெருக்கால் உச்சஸ்தாயிக்கு ஏறிக் குழ குழத்துத் தடுமாறியது. 

“இவனோட என்னப்பா பேச்சு?” என்று வெட்டி முறித்துப் பேசிவிட்டு, அருகே நின்ற போலீஸ் ஜவான்களைக் கண் காட்டிய வாறு, ‘ஊம்’ என்று பத்திரம் காட்டி உறுமினார் திருவாளர் தில்லைத் தாண்டவராயர். 

மறுகணமே போலீஸ்காரர்கள் தொழிலாளர் அணிவகுப்பின் மீது தங்கள் கை வரிசையைக் காட்டத் தொடங்கினர். திடீரென்று அந்தக் கூட்டத்திலிருந்து கூச்சலும், வசவுகளும், கூக்குரலும் கேட்கத் தொடங்கின. அந்த அணிவகுப்பின் முன் வரிசையில் நின்ற அந்தக் கிழவன் மூக்கிலிருந்து வழியும் ரத்தத் தோடு “ஐயோ!” என்று கூவிக்கொண்டு, பாதையிலே குறுக்கே பேச்சு மூச்சற்று விழுந்தான். பெண்களும் குழந்தைகளும் அடிகளைத் தாங்கமாட்டாமல் அலறிக்கொண்டு ஓடினார்கள்; மண்டையிலிருந்து தெறித்துப் பாயும் ரத்தத்தோடு பல தொழி லாளர்கள் அடிகளைத் தாங்கிக்கொண்டு கீழே விழுந்தார்கள்; அந்தத் தொழிலாளர்கள் ஏந்தி வந்த தொழிற்சங்கப் பதாகை முறிந்து கீழே விழுந்தது. காயம்பட்டுக் கிடந்த அந்தக் கிழவனின் கடைவாயிலிருந்து ஒழுகிய செங்குருதி அந்தப் பதாகையை நனைத்து நனைத்து அதை மேலும் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. 

சில நிமிஷ நேரத்துக்குள் போலீஸார் அங்கு அமைதியை நிலை நாட்டினார்கள் !’ தாக்குதலை நடத்தி முடித்த போலீஸார் சேர்மன் பிள்ளைவாளைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்; சேர்மன் பிள்ளைவாளும் வெற்றிக் களிப்புத் துள்ளாடும் திருமுக விலாசத்தோடு குறுநகை பூத்தார். 

அவர்களுக்கு முன்னால் அந்தப் போர்க்கள அலங்கோலம் செக்கச் சிவந்து தோன்றியது. 

சேர்மன் பிள்ளைவாள் திருவாளர் தில்லைத் தாண்டவராயர் கம்பீரமான குரலில் தம் சகாக்களை நோக்கி ஆணையிட்டார். 

“ம் ; செல்லுங்கள் முன்னே!” 

திடீரென்று எழுந்த அந்த ஆணைச் சொல் அங்கு நிலவிய அந்தச் சுடுகாட்டு அமைதியைப் பிளந்து கொண்டு எதிரொலித் அந்த எதிரொலியில் தாக்குண்ட முன்னணியில் நின்ற அந்த ஊழியன் தனது வலது காலைத் தன்னையுமறியாமல் விறுட் டென்று எட்டு எடுத்து முன் வைத்தான். ஆனால் அந்தக் காலைப் பதித்ததுமே ஏற்பட்ட உணர்ச்சி, அவன் உடம்பில் மின்சாரத் தாக்குதலின் அக்கினி வேகத்தைப் போல் அந்தக் காலை உதறி யெறிந்தது. அவனது காலில் நழுக்கென்று மிதிபட்டு வழுக்கி யது அந்தக் கிழவனின் உயிரற்ற சடலம்! 

அதைக் கண்டதுமே அவன் கண்களும் மனமும் சுளுக்கிச் சுண்டுவது போலிருந்தன. என் சவத்தின் மீது நடந்து போங்கள்! என்ற அந்தக் கிழவனின் வார்த்தைகள் கணீரென்று ஒலிப்பது போலிருந்தன. 

அவன் கால்கள் இடம் பெயர மறுத்தன. 

“என்ன தயக்கம்? போங்கள் முன்னே!” என்று திருவாள ரின் ஆணை முழக்கம் மீண்டும் ஒலித்தது. 

“முடியாது!” என்று அந்த ஊழியனிடமிருந்து கணீ ரென்று எதிரொலி கிளம்பியது. 

“முடியாதா? ஏன் முடியாது?” என்று உறுமினார் சேர்மன்: 

“இந்த இழிந்த தொழிலை என்னால் செய்ய முடியாது!” 

“எது இழிந்த தொழில்? எந்தத் தொழிலும் இழிவான தில்லை என்று காந்தியடிகள் சொல்லவில்லையா? அதற்குள்ளா கவா மறந்துவிட்டீர்கள்?'” 

“நாங்கள். மறக்கவில்லை. ஆனால் கருங்காலித் தொழில் செய்வது ஒன்றுதான் உலகத்தில் மிகவும் கேவலமான இழிவான தொழில் என்பதையும் மகாத்மா சொல்லிக் கொடுத்திருக் கிறார். 

மறுகணமே அந்த ஊழியன் தன் கையிலிருந்த வாளியையும் அகப்பையையும் கையைவிட்டு இறக்கிக் கீழே வைத்தான். 

“நீங்கள் போகப் போகிறீர்களா, இல்லையா?” என்று இடிக் குரலில் கர்ஜித்தார், தில்லைத் தாண்டவராயர். 

அவர்கள் அனைவரும் உடனே போகத்தான் செய்தார்கள். ஆனால், முன்னணியில் நின்ற அந்தக் காங்கிரஸ் ஊழியனைப் பின்பற்றி, தம் கைகளிலிருந்த வாளி, அகப்பை, விளக்குமாறு முதலியவற்றைக் கீழே வைத்து விட்டுத்தான் போனார்கள்!

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

தொ.மு.சி.ரகுநாதன் தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *