அமுத நீர்




(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆறுமுகப் படையாச்சி வீட்டுக்குள் நுழைந்தபோது, மனைவி வள்ளியம்மை வழக்கம் போல்தான் வரவேற்பு அளித்தாள்.
“சொன்னா, கேட்டாத்தானே, அத்தனை பணத்தை, உருப் படாத மண்ணுன்னு தெரிஞ்சு, அதுலே போட்டுட்டு இப்படி மாடா ஒளைக்கணுமா?”

ஆறுமுகப் படையாச்சி வயலைச் சுற்றிவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார். மனைவியின் சொற்களைக் கேட்டுச் சிரித்தபடி, வலதுதோளில் இருந்த துண்டை உதறி, இடப்பக்கம் போட்டுக் கொண்டார். “எனக்குப் புரிகிறது உன் ஆதங்கம். நான் இன்னும் சாப்பிடலை. புருசன் பட்டினின்னா பெண்சாதி துடிக் கிறவள்னு எனக்குத் தெரியாதா? ஆனா, ஆம்பிளைங்க எடுத்த வேலையைத் தீவிரமா செய்யணுங்கறதை நீங்க மறந்துடக் கூடாது” எனக் கூறியபடி கிணற்றடிக்குச் சென்றுவிட்டார்.
கிணற்றில் ஊறும் புதுநீரை மொண்டு மொண்டு இழுத்துக் குளிப்பதில் அவருக்குப் பேரானந்தம். குளித்துவிட்டு, அவரையே தாயாக நினைத்து அன்பு வரவேற்பு அளிக்கும் ஆவினங்களுக்காக வைக்கோல் புரியை எடுத்துக்கொண்டு கொட்டிலுக்குச் சென் றார். அவற்றிற்குத் தன் கையினால் ஊட்டிய பிறகே,அவர் உணவு உண்பார்.
“சாப்பிடலாமா?”
குரல் கேட்டதும் வள்ளி திடுக்கிட்டுத் திரும்பினாள் “என்னாங்க இது, நெத்தியிலே துண்ணூறு கூட நல்லாப் படியும் படி வெக்கலை. தேவாரமும், திருப்புகழும் படிக்கற நெனப்புக் கூட மறந்துடுச்சாங்காட்டியும்? அதுக்காவதான் இந்த உருப் படாத நெலத்தைக்கட்டி அழுவறீங்களேன்னு அடிச்சுக்கறேன். பசி வந்தா பத்தும் பறந்துடும்.”
“நான் சொன்னா உனக்குப் புரியாது வள்ளி. நீ என் பசி யைக் காட்டறே. நான் உன் பசியைக் காட்டறேன். தேவார மும் திருப்புகழும் முடிச்சுட்டு நான் வரும் நேரத்துலே நீ பசியிலே துவண்டு படுத்திருப்பே, என் மனசு நோவும்.”
“இந்த எண்ணம் வயல்லே சுத்தறப்போ இருக்கணும்.” மடக்கிவிட்ட பெருமையும், கணவரின் அன்பு முழுமையும் அடைந்துவிட்ட பெருமையும் கலக்க வள்ளி கூறினாள்.
“நீ சொல்றதை ஒத்துக்கறேன். உண்மையாச் சொல் றேன். பட்டினத்துலே இருக்கறப்போ பிடிச்சு இளுக்கும் சக்தி இந்த மண்ணுக்கு இருக்கும்னு நான் நெனச்சதே கிடையாது. வயல்லே நுளைஞ்சதும் தாய் நெனப்புத்தான் நெஞ்சுலே முச்சூடும் இருக்கு ! உன்னைப் பத்திக்கூட நெனப்பு வர்ரதில்லை. எனக்கு என்னவோ இந்த நிலம் மண்பூமியாத் தோணறதில்லே. என்னைப் பெத்தெடுத்த தாயாக ஒருபக்கம் தெரியுது. பொறவு ஒரு சமயத்திலே நாம் வணங்கற தெய்வமாத் தோணுது. அதுக்காவ தான் என் சினேகிதரு ஒருத்தரு ‘தாயும், தெய்வமும் ஒண்ணு: கண்ணுலே தெரிவது மண்ணு’ன்னு சொல்லுவார் போலிருக்கு. மனுசனுக்கு உணவு தர்ரதுலே மூணுபேரும் ஒத்தாப்பலே இருக்காங்களே!”
“சும்மா மண்ணு மண்ணுன்னு, அடிச்சுக்கிட்டே இருங்க இந்த உப்புமண்ணுக்கும் களர் மண்ணுக்கும் இம்மாம் மதிப்பு வெக்கறவங்க, வெளைச்சல் நிலம் வாங்கிப் போட்டிருந்தா, என்ன பேசுவீங்களோ!”
கடைசியிலே கணவரைத் தேவாரமும், திருப்புகழும் படிக்கச் சொல்லிவிட்டுத்தான் வள்ளியம்மை கணவருக்கு அன்னம் படைத்தாள்.
சாப்பாடு முடிந்தபிறகு வெற்றிலைப் பெட்டியைக் கணவரின் அருகில் வைத்தாள், வள்ளியம்மை. ‘காலையிலே முத்துக்குமரு வந்தாரு.’
“குமருவா வந்தாரு? அந்த நேரத்துலே நான் வூட்டுலே இருக்கமாட்டேன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே!”- வாயில் வெற்றிலையைப்போட்டு மென்றபடி ஆறுமுகம் கூறினார்.
“அதெப்பத்தி எனக்குத் தெரியாது. வந்தாரு, நீங்க இல்லைன்னதும் திண்ணெலே குந்திக்கிட்டாரு…ரொம்பக் களைப்பாக் காணப்பட்டாரு. அதனாலே ஒரு கிளாஸ் பால் கொண்டு வந்து திண்ணெலே வெச்சேன்,”
“நல்ல வேலைசெய்தே!” எனக்கூறிய படையாச்சி, மனைவியை நோக்கினார். அவள் முகமே பால்வடியும் கனிவுக்குப் பொருள். இத்தனைகாலம் பட்டினக்கரையில் கணவரோடு வாழ்ந்தும், கிராமத்துப் பண்டைய நாகரிகத்தின் சின்னமாகத் தான் விளங்கினாள். காதில் சிவப்பு ஓலையும், மேலுக்குத் திருகும் கழற்றவே மாட்டாள். மஞ்சள் பூச்சின் ஒளியோடு நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு. தலைக்கொண்டை பக்கவாட்டிலி ருந்து மாறியதே கிடையாது. மூக்கில் வெள்ளை மூக்குத்தி. கழுத்தில் இரண்டு வடச் சங்கிலியோடு தடித்த மஞ்சள்கயிறு பிசுக்கு ஏறாமல் இருக்கும். கழுத்தைப் பிடித்தாற்போல் வெட்டி, முழங்கை அளவுக்கு நீட்டிய கையுடன் ரவிக்கை. உடலில் ஜாதி வழக்கப்படி சுற்றிய கைத்தறிப்புடவை. அது எட்டு கஜம். கைகளில் இறுக்கிப்பிடித்த காப்பு. இது நாள்வரை வேறு நகையோ, பட்டுப் புடவையோ அவள் கேட்டிருக்கவில்லை. முகத் தில் எப்போதும் புன்முறுவல் என்று சொல்லமுடியாது, ஆனால், எக்காரணம் கொண்டும் கோபிக்கமுடியாத கனிவுநிறைந்த ஆழம். கணவரோடு சண்டையிடுவாள். அவர் வேளா வேளைக்குச் சாப்பிடாவிட்டால்…அவர் சாப்பாட்டைத் தாமதமாக்கிவிடும் வயல்மீது அவளுக்குக் கோபம்வரும். கனிவும் குழைவும் பரிவு மாக அந்த மங்கை முகத்தை எப்போதும் பார்த்துக்கொண்டி ருப்பார் படையாச்சி. ஐம்பது வயசுக்கான தொள தொளத்த சதையோடு உள்ளமும் நாளுக்கு நாள் நிரம்பி வழியும் அந்த உருவத்தில் அவளுக்குப் பற்று.
உட்கார்ந்திருந்த வள்ளியம்மை சுவரோடு சாய்ந்து படுத்து விட்டாள்.
“வள்ளியம்மை, நானே போய்க் குமருவைப் பார்த்துட்டு வரேன். நீ கதவைத் தாளிட்டுப் படு எனக்கூறிய படையாச்சி வெளியே கிளம்பி விட்டார்.
வீட்டைத் தேடி முத்துக்குமரு வந்த காரணம் அவருக்குத் தெரியும். தம் மனக் கொதிப்பைக் கொட்டத்தான் வந்திருப் பார். முத்துக்குமரு ஒருவருக்கே மதுரைச் சீமையிலே- அந்த வட்டாரத்திலே அத்தனை நிலமும்… சொந்தமாக இருந்தது…உவர் நிலமும் களர் நிலமுமாக அத்தனையும் பரம்பரைச் சொத்துத் தான். அவருக்கு இந்த நிலத்தைக் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தந்தை தான் இருந்தவரை வியாபாரம் என்று செய்துவிட்டு நான்கு வருடங்களுக்கு முன்புதான் கண்ணை மூடினார். தந்தை இறந்த பிறகும் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை: மூத்த மகன் சென்னையில் எஞ்சினீயராக இருந்தான். இளையவன் தாத்தாவின் வியாபாரத்தைப் பம்பாயில் நாட்டினான். எடுத்த எடுப்பில் கொள்ளை லாபம். அங்கேயே தங்கிவிட்டான். இரு பிள்ளைகளும் தந்தைக்குப் பணம் அனுப்பி வந்தனர். தங்களுடன் வந்திருக்கும்படி பெற்றோருக்கு அவர்கள் என்றுமே அழைப்பு விடுத்ததில்லை. பெற்றோரைப் பார்க்க எப்போதேனும் அவர்களே வருவார்கள்.
கவனிப்பாரற்ற நிலத்துக்கு ஆறுமுகத்திடமிருந்து பேரம் வந்ததும் முத்துக்குமரு அதிசயித்து நின்று விட்டார். உவர் மண்ணையும், களர்மண்ணையும், பயிரிடுவதற்கு ஒருவர் வாங்கு வதென்றால்…பேரம் அதிகம் பேசவில்லை. சொன்ன விலைக்கு விற்றுவிட்டு “நல்ல ஏமாளி!” என மனைவியிடம் கூறிச் சிரித்துக் கொண்டார். ஆனால் பணம் அவர் கையில் தங்கவில்லை. புத்திரர் கள் ஏதோ சாக்குச் சொல்லி பங்கு போட்டுவிட்டனர்.
முத்துக்குமரு நினைத்தபடி ஆறுமுகம் ஏமாளியாக இருக்க வில்லை. ஆறுமுகத்தைப் பற்றிக் குமருவுக்கு அதிகம் தெரியாது.
பெற்றோரற்ற அநாதையான ஆறுமுகத்தை எட்டாவது வரை படிக்க வைத்தவர் அவருடைய மாமன். பட்டினக் கரை யில் துணிச்சல் ஒன்றையே மூலதனமாக வைத்துப் பல சிறு கடை களில் எடுபிடி ஆளாக அமர்ந்து பிறகு பெரிய பட்டறைகளில் பெரிய ஆளாக நின்று, கடைசியில் சொந்தத்தில் ஆறுமுகம் தொழில் ஆரம்பித்தபோது அவருக்குத் துணை ஊக்கமும் உற்சாகமும்தாம். வெற்றியைக் கைப் பிடித்த நேரத்தில் மாமனின் ஒரே மகள் வள்ளியம்மை வாழ்க்கைத் துணைவி யானாள். இன்று வரை குடும்பத்தில் அவ்விருவருமே குழந்தை கள். தொழிலில் முன்னுக்கு வந்துவிட்டவருக்கு முதலில் உற்சாகம் இருந்த போதிலும், வயதும் தொழிலும் பிணைந்து ஏறியபோது லைசன்ஸ், கோட்டா, ஏற்றுமதி இறக்குமதி, வரிச் சள்ளைகளோடு வேலை நிறுத்தம் தொழிற் சங்கம் எல்லாமாக அவரை அயர வைத்துவிட்டன. எடுத்த தொழிலில் பழக்கம் ஏற்பட்டுவிட்டதில் தனித்தவோர் அலுப்பு; முயற்சிக்கு இடமில்லை.
அப்போதுதான் அவருக்குத் திடீரென அந்த எண்ணம் தோன்றியது. நாட்டின் உணவும் பற்றாக்குறையைத் தீர்க்க, தரிசாகக் கிடக்கும் நிலங்களை வளர்பூமியாக்கும் பணியில் ஈடு படத் தலைவர்கள் விடுக்கும் வேண்டுகோள் அவர் மனத்தில் பதிந்தது. உடனே, அவர் தன் கம்பெனியை விற்று, வந்த பணத்தில் பாதிப் பணத்தை மனைவியின் பெயருக்குப் பாங்கில் கட்டிவிட்டு, மீதமிருந்த பணத்தில் உவர் நிலத்தையே வாங்கினார். பலர் அவர் செயலைப் பரிகசித்த போது ‘மண்ணைப் பொன்னாக்கற ரஸாயன வித்தையைச் செய்து பார்த்தாப் போச்சு, கிடைச்சா எனக்கு லாபம். கிடைக்கலைன்னா நான் ஒருத்தனையும் வஞ்சிக் காம நஷ்டத்தை எனக்கே வெச்சுப்பேன் என்றார்.
முதலில், சிறிதளவு நிலத்தில் பரிசோதனை நடந்தது. நவீன முறையில் நிலத்தை உழுது பண்படுத்தி, விவசாய அதிகாரி களைக் கலந்து நவீன முறையிலேயே உரமிட்டார். பட்டினக் கரையை விட்டுக் கிராமத்தோடு குடியேறி நிலத்தை அருகிலி ருந்து பயிரிட்டார்.
இதுவும் மாயமோ, மந்திரமோ ! நோஞ்சான் குழந்தைக்குச் சத்துள்ள ஊட்டம் கொடுத்து வலிமையாக்கி விட்டது போலல்ல வோ இருந்தது! ஆறுமுகப் படையாச்சி, பெற்ற தாயை அறிந் திருக்கவில்லை. விலை கொடுத்து வாங்கிய உவர் மண்ணையும் களர் மண்ணையும் தாயாகப் பாவித்தார். உருக்குலைந்து படுத்து விட்டிருந்த தாயை மெல்ல அரவணைத்து, ஆறுதலும் அன்புமாக ஊட்டச் சத்து அளித்து வலிமைக்கு உதவும் மகனாக விளங்கினார்.
பூமித் தாயின் கண்களில் அன்பு நீர் சுரந்தது. ஊட்டம் கண்டவள் வஞ்சித்து விடுவாளா! செழிப்பும் வளமையுமாகக் கதிர்கள் ஆடி ஆடி மகிழ்ச்சியோடு களிக்கும் பருவத்துக்கான அறிகுறி கண்டது. இந்த அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்தம் எய்த நிதமும் பெரும் பொழுதை வயலிலேயே கழித்தார் ஆறுமுகம். கணவரின் வெற்றியில் வள்ளிக்கும் ஆனந்தம் இல்லாமலா இருக்கும்? ஆனால், கணவருடைய உழைப்பல்லவோ அவளை நெஞ்சுருக வைக்கிறது!
முத்துக்குமருவுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந் தது. இந்த மலட்டு மண்ணை விற்று, தான் லாபம் கண்டு விட்டதாக இறுமாந்திருக்கும்போது, ‘இதோ பாரடா, நான் தாய்மையின் மகிழ்ச்சியில் பொங்குகிறேன்!’ என்றல்லவோ ஆறுமுகத்தின் கை அணைப்பில் பூமித்தாய் அவரைப் பார்த்துச் சிரிக்கிறாள் ! சிறு பரிசோதனை செய்த நிலத்திலிருந்தே ஆறு முகம் சென்ற வருடமே களஞ்சியம் வழிய நிரப்பிவிட்டபோது, முத்துக்குமருவுக்கும் அன்பளிப்பாகக் கொஞ்சம் கொடுக்கத் தான் செய்தார். அதன் பிறகு மனைவி மீனாட்சியின் நச்சரிப் பில் இந்நாள் வரை உழப்படாத தன் மிகுதி நிலத்தில் முத்துக்கு மரு ஏர் கட்டி உழுதார், விதை விதைத்தார். ஆனால், ஆறு முகப் படையாச்சியிடம் கனிவுள்ளம் கண்ட பூதேவி தன்னிடம் ஏன் காட்டவில்லை? உழப்பட்ட நிலம் வளமே காணாமல் அல்லவோ நிற்கிறது! இந்தப் பூமித்தாய்க்கு இத்தனை வஞ்சனையும் உண்டோ!
ஆறுமுகப் படையாச்சி குமரு வீட்டின் திண்ணையில் அமர்ந்த படியே, “அண்ணாச்சி ! ” என்று குரல் கொடுத்தார்.
குமரு வெளியே வந்தார். அவருடன் அவர் வேலையாள் கந்தனும் வந்தான். குமரு திண்ணையில் அமர்ந்ததும் கந்தன் திண்ணைக்கு அருகில் ஓரமாக நின்றுகொண்டான். ஆறுமுகம் கந்தனை ஏற இறங்க நோக்கினார். நல்ல வலிவுள்ள உடல். அடர்ந்த மீசையே அவனுடைய துணிச்சலுக்குச் சான்று. உருண்டு திரண்டு மார்பு. சதைப்பற்றுள்ள கைகள். இடுப்பில் மூலக்கச்சமும் தோளில் ஒரு துண்டும் தலையில் முண் டாசும் தாம் ஆடைகள். வயது முப்பதிலிருந்து நாற்பதுக்குள் இருக்கலாம். மணமாகாத காரணம் அவனுக்கே தெரியாது. ஒரே ஒரு சகோதரன் பழநி. அவன் சேனையில் சேர்ந்து கொண் டான். சீனர்கள் படையெடுப்பை எதிர்க்கும் பணியில் அவன் தன் உயிரை இழந்துவிட்டான். வீட்டில் அவனை நம்பி வாழும் தாய் அங்கம்மா. கந்தன் வெகு காலமாக முத்துகுமருவிடம் வேலை செய்பவன், மிகுந்த எசமான விஸ்வாசமுள்ளவன்.
“வீட்டுக்கு வந்தீங்களாம்…”—ஆறுமுகம் ஆரம்பித்தார்:
“ஆமாம்… உங்க பேச்சைக் கேட்டு நெலத்திலே கை வெச்சேனே, அந்த வவுத்தெரிச்சலை உங்களையே நேரில் அழைச் சிட்டுப் போய்க் காட்டலாம்னு வந்தேன்!’- மடியிலிருந்த துண்டைத் தோளில் போட்டபடி குமரு ஆறுமுகத்தை நேராகப் பார்க்காமலே சினத்துடன் கூறினார்.
ஆறுமுகம் கோபம் கொள்ளவில்லை. மெள்ளப் புன்னகை புரிந்தார். “அண்ணாச்சி, உங்க கோபம் எனக்குப் புரியுது. ஆனா இந்த நெலத்தை நீங்க தொழில் முறையிலே நோக்கணும். முன்னுக்குப் போட்டாத்தானே, பின்னுக்குப் பணம் பொரட்டலாம்.”
அவர் கூறியது முத்துக்குமருவுக்கு நன்றாகப் புரிந்தது. நவீன முறையில் ஆறுமுகம் நிலத்தில் புகுந்திருக்கிறார். ஆயிரக் கணக்கில் செலவு செய்திருக்கிறார். ஆனால், குமருவோ செலவு செய்ய முன்வரவில்லை. நவீன முறையைக் கையாளவும் இல்லை.
“கந்தா, தம்பி சொல்றதைக் கேட்டுக்கிட்டையா?” குமரு கந்தனிடம் முறையிட்டார்.
“புரியுது எசமான், இந்தக் காலத்து மனுசங்களே பரம் பரை வழக்கங்களைத் தூக்கி எறிஞ்சிட்டுத் தானே பேசறாங்க!”
ஆறுமுகமோ விடை பெற்றபடிக் கூறினார். “அண்ணாச்சி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்கப்படாது. உடம்புக்கு நல்ல டானிக் கொடுக்கறாப்பல நெலத்துக்கு ரஸாயன உரம் இடணும். காலத்துக்கு ஏத்தாப்பல, விஞ்ஞான முறையிலே மாறணும். கிராமத்துலே இருந்தவன் நகரத்துக்கு ஓடறான். வெறகு வாங் கியா சமைக்கிறான்? பொகைப் போக்கி இல்லாத அஞ்சு மாடி வீட்டுக்கு ஏத்தாப்பல காஸ் அடுப்பும் ஸ்டவ்வும் வெச்சுக்கறான். உரம் வாங்கப் பணம் போடணும். ஒண்ணு போட்ட மூணு எடுக்கலாம். பணமில்லைன்னா இந்த நிலத்தையே அடமானம் வெக்கலாம். நான் மறைச்சுப் பேசலே. கைப்பணம் போதாம வயல் வேலைக்குக் கடனுலேதான் ஆரம்பிச்சேன். போன விளைச் சல்லே கொஞ்சம் அடைச்சேன். இந்த போகத்துலே முச்சூடும் அடைஞ்சுடும். இந்தாப்பா கந்தா, நீ உழைப்புக்கு உறுதியான வன். நெலத்துலே உரம் போடறாப்ல உழைப்பையும் போடணும்…”
ஆறுமுகம் விடைப்பெற்றுச் சென்றதுமே முத்துக்குமரு கந்தனைக் கோபத்துடன் நோக்கினார்.
“ஏலே, கேட்டுக்கிட்டுதானே இருந்தே இந்நேரமும்?” எசமானின் உறுமலில் கந்தன் கொஞ்சம் நடுங்கிவிட்டான்.
“ஐயா சொல்றது புரியலை !”
“உனக்கெப்படிடா புரியும்? எத்தனை எக்காளமும் பெருமையுமா பேசிகிட்டுப் போனான் அவன். நேத்தி இந்தக் கிராமத் துக்கு வந்த பிள்ளை பேசறான், நான் கேட்டு நிக்கும்படி பார்த்துக்கிட்டு நிக்கறயேடா… என் வீட்டு உப்பைத் திங்கறவன் நீ, எனக்கு வெக்கற மரியாதை நல்லாயிருக்குடா.”
“புரியுது எசமான் ! அவரு பெரிய படிப்பா பேசறாரே. நான் எப்படி எதிர்த்து வாதாட முடியும்? அவரோட நிலமும் அவர் படிப்புக்குச் சாட்சியா நிக்குதே… “
“சாட்சியா நிக்கும்டா, நிக்கும்! படிப்பா அவனுக்கு உத வுது? கை வெச்ச வேளைடா, பொன்னா பொழியறது. அந்தத் திமிருதான் நமக்கு உபதேசம் செய்ய வெக்குது. இவனைப் பார்த்து நான் நிலத்துலே கை வெச்சு நூத்துக்கணக்குலே மண்ணாக்கிப்பிட்டேன். என்னைப் பரிகாசம் செய்யல்ல இப்படி வந்துட்டுப் போறான்! கடன் வாங்கணுமாமே கடன் ! இவன் நெனப்பு எனக்குத் தெரியாதாக்கும்! கடன் வாங்கி நான் ஏலத்துலே நின்னுட்டா, அப்பாலே, அந்த நிலத்தையும் ‘அபேஸ்’ பண்ணிக்கணங்கறது எண்ணம்.”
கடைசி வார்த்தை கந்தனை நிமிரச் செய்தது. “நெசமா அந்த எண்ணம் இருக்குமாங்க?”
“இல்லாம என்னடா? கை வைக்கற இடமெல்லாம் பொன்னாப்போற ராசிக்காரங்க எதைத்தான் செய்யமாட்டாங்க! உன்னையும் உழைக்காத சோம்பேறின்னு குத்திக் காட்டிட்டுப் போறான். நீயும் வெக்கமில்லாம கேட்டுகிட்டுத்தானே இருக்கே! ”-முத்துக்குமரு அழுத்தமாகக் கூறியது கந்தனின் நெஞ்சைத் தட்டி எழுப்புவதுபோல் உணர்ந்தான்.
உழைக்காத சோம்பேறின்னா ஆறுமுகம் கூறினார்?… அப் படித்தான் சொல்லியிருப்பாரோ… அப்படித்தான் இருக்கவேண் டும். இல்லாவிட்டால் அவன் உழைப்பைப்பற்றி அவர் எதற் காகப் பேசவேண்டும்? விளைச்சல் நிறையக் கண்டு விட்ட பெருமைதானே அப்படிக் குத்தலா பேசச் சொல்லியிருக்கும்…
கந்தன் யோசனையிலிருந்தபோதே குமரு மீண்டும் அவனைக் குத்திக் கிளப்பினார்: “அவனோட கொட்டத்தை அடக்கறத்துக் காகவாவது உன் உழைப்பையும் வலிமையையும் காட்டலா மேடா சோமாரிப் பயலே!”
குமரு கூறியது அவனுக்குப் புரியவில்லை. “கொட்டத்தை நம்ப எப்படிங்க அடக்க முடியும். கதிர் கட்டற கட்டமா யிடுச்சே!”
“போடா அசடு! இதுதான் சரியான சமயம்னு உனக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை. செங்கோடனையும் சேர்த்துக்கிட்டியானா ஒரே இரவுக்கு யானை புகுந்த கதையா நாசமாக்கிடலாமே. பகலுக்கெல்லாம் வயல்லே உக்காந்திருக்கிற படையாச்சி இரவு நேரத்துக்கு நடக்கறதை எப்படி அறிஞ்சுக்குவான். நீ கையாளை வெச்சுட்டா உன் பெயர் எடுபடாம பாத்துக்கலாமே!”
கந்தன் முதலில் தயங்கினான். குமரு அவனைத் தூண்டி விடுவதில் சளைக்கவில்லை. போடா, பயந்தாங்கொள்ளிப் பயலே ! ஒவ்வொருத்தனும் மனுசனையே வெட்டிச் சாய்ச்சுட்டு வந்துடறாங்க. நீ சும்மா வயல் வேலைக்குப் பயப்படறியே. நீயேவா செய்யப் போறே, நீ வெக்கற ஆளு செய்யப்போறான்…”
கந்தன் இணங்கிவிட்டான். செங்கோடனையும் பார்த்து ஏற்பாடு செய்துவிட்டான், கூலியும் பேசிவிட்டான். செங்கோ டனும் தன்னுடைய சகாக்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டான். அமாவாசை இரவுக்குப் படையாச்சியின் வயலில் அவர்கள் இறங்கி விடுவார்கள்.
முத்துக்குமரு ஆனந்தம் கொண்டார். “இத பார் கந்தா, இந்த வேலை நடக்கறப்போ நீ வயலுக்குப் போய் நிக்காதே. பொளுது சாயுற வேளைக்கு ஆறுமுகம் வீட்டுக்குப்போய் நல்லவன் மாதிரி பேச்சும் கொடுத்துட்டு வந்துடு. ஊர்க்காரங்களை நம்பி வயலுக்கு அவன் காவல் வெக்காதது நல்லதாப் போச்சு!”
குறிப்பிட்ட நாள்: இருட்டின் கருமை படர்ந்தது.
ஆறுமுகப் படையாச்சி தன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந் தார். வள்ளியம்மை திண்ணையை ஒட்டிக் கீழே அமர்ந்திருந்தாள். “வாப்பா கந்தா!”-இன்முகத்தோடு மகிழ்ச்சியுடன் வர வேற்றார் ஆறுமுகம்.
இந்த மகிழ்ச்சி காலையில் அழுகையாக மாறப்போகிறதே என, கந்தன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான்.
“எங்கே இப்படி வந்தே!” வள்ளியம்மை கேட்டாள்.
“சும்மாதானுங்க. எங்க ஐயா வூட்டுலே இம்மாநேரம் உங்களைப் பத்திதானுங்க பேசிக்கிட்டிருந்தோம்.’
“எங்களைப்பத்தியா என்ன விசயம்?”
“என்ன விசயம் இருக்கும்? நெலத்துலே போட்டபணம் விளைச்சல் காட்டுது. நமக்குக் காட்டலையேன்னு சொல்லிக் கிட்டிருப்பாரு…உம், நான் எத்தனை சொன்னாலும் அவருக்கு ஏற மாட்டேங்குது. நான் என்ன செய்யட்டும்..” ஆறுமுகம் விசனத்துடன் கூறினார்.
”அக்காங் போங்க, உங்களைப்போல ஓடா தேய்ஞ்சு உளைக் கணுமாக்கும்.. இருக்கிற பணத்துலே பாதிபோட்டுட்டு, போதாம கடனுக்கு உழறீங்க.. இந்த மண்ணு எம்மாம்பணம் சாப்பிட்டிருக்கும் !”
“புரியுது வள்ளி நீ சொல்றது…நான் அவரை முதல்லே முயற்சி பண்ணச்சொல்லலையே. நான் பண்ணிக் காட்டியாச்சு. அதனாலே நல்லமுறையிலே செய்து பாருங்கன்னு தானே சொன் னேன். நம்ம நிலத்துலே எப்படி விளைச்சல் காட்டியிருக்கு பாத்தியா?”
கந்தன் தனக்குள் சிரித்துக்கொண்டான். ‘நாளைக் காலை இவரு எப்படிப் பேசுவார்னு பாக்கணும்:’
வள்ளியம்மை பதில் கூறாமலிருக்கவே ஆறுமுகமே மீண்டும் பேசினார்: ” மண்ணை வெச்சே பணமாக்கலாமே! என்னப்பா கந்தா, நான் சொல்றது உனக்குக்கூடப் புரியலையா?”
“நல்லாப் புரியுதுங்க. ஆனா, அவரு புள்ளை குட்டிக்கார ருங்க. சொத்து சேர்த்தா சும்மா இருப்பாங்க, போய்டுச்சுனா கூப்பாடு போடுவாங்களே!” ஏதோ பதில் கூறவேண்டும் என்ப தற்காகக் கூறினான் கந்தன்.
வள்ளியம்மையை இவ் வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். “கேட்டீங்களா அவன் சொல்றதை, பிள்ளையில்லாச் சொத் துன்னு காட்டறாங்க… அன்னிக்கு ஒருநாள் மீனாட்சியம்மா கூடப் ‘பிள்ளைக்குட்டியா பாழாப் போவுது; ஏதுக்கு இப்படி உளைக் கணும்’னு உங்களைப் பத்தி ஊர்க்காரங்க பேசிக்கறதா சொன்னாங்க”. அவள் கண்களில் நீர் துளித்தது.
மனைவியின் கண்ணீரே ஆறுமுகத்தை விசையாகக் கிளப்பி விட்டிருக்க வேண்டும்! “என்ன கந்தா, இப்படியா பேசிக் கிறாங்க. ஊரிலே ஒருத்தன் ஒரு நல்ல காரியம் செய்யணும்னா அதைத் தனக்காகத் தான் செய்துக்கணுமாடா? ஏண்டா, நானும்தான் கேக்கறேன், தனக்காக, தன் பெண்ஜாதி குழந் தைங்களுக்காகத்தான் செய்துக்கணுமா? தான் பெத்த மகனும் தன்னோட பெண்ஜாதியும் மட்டும்தான் குடும்பமா? இந்த ஊரையே, இந்த நாட்டையே, இந்த உலகத்தையே நம்முடையதா பாவிச்சுகிட்டுச் செய்ய நம்மாலே முடியாதாடா. உன்னோட அண்ணாச்சி பழநி இருந்தானே, அவன் சண்டையிலே உசிரை விட்டான். ஏதுக்காக விட்டான்? இந்தப் பொன்னான நாட்டைத் தன்னுடையதுன்னு, தன் குடும்பம்னு நெனச்சு தானேடா போனான்? அப்படிப்பட்டவங்களுக்கு நம்மாலே என்ன ஒத்தாசை செய்ய முடியும்னு நெனச்சுப் பார்க்கணும். இந்த நெலத்துலே விளையற ஒவ்வொரு மணி நெல்லும் எனக்குச் சொந்த மில்லைடா. இந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொருத் தனுக்கும் சொந்தம்… இந்த நெல் அரிசியா வந்து சோறு சமைச்சு ஒவ்வொருத்தரோட இலைலே விழறப்போ நாட்டுக் குழந்தை களும், பெரியவங்களும் வயிறு நிறைஞ்சு ஆனந்தமாத் திங்கறதை நான் பார்க்கணும், சந்தோசப் படணும், அது தாண்டா என் கொள்முதல்…”
வள்ளி திடுக்கிட்டுக் கணவரை நோக்கினாள். இவர் இது வரை இவ்வளவு ஆவேசத்துடன் பேசினவரில்லை. நாம் கிளப்பி விட்டோமே என வருந்தினாள். “இந்தாங்க, எதுக்கு நாம் இப்படிப் பொளியணும்? ஏதோ நான் கேட்டதை வாங்கி அந்தக் காது வழியா விட்டுட்டுப் வழியா விட்டுட்டுப் போகாம்” கணவரைத் தேற்ற முயன்றாள்.
“இந்தா வள்ளி. உன்னை மலடுன்னு சொல்லட்டும், என்னைக் குழந்தைக்கு வழியில்லாதவன்னு சொல்லட்டும், ஒப்புக்கறேன். ஆண்டவன் படைப்புக்கு நான் சண்டை போட்டுக்கலை. ஆனா, இந்த விளைச்சலை என் ஒருத்தனுக்குக் காட்டறாங்களே, அதுதான் எனக்குப் பிடிக்கலை. திரும்பவும் அடிச்சுச் சொல்றேன். இத்தனையும் நாட்டு மக்களுக்கு, தாய் நாட்டின் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு வவுத்து உணவு. நான் நெல்லுக்குப் பணம் வாங்கப் போறவன்தான். ஆனா அத்தனையும் போட்டு மலட்டு மண்ணைத் திருத்தத்தான் போறேன். நாட்டைக் காக்கப் போர் முனைக்குப் போன சிப்பாய்ங்க திரும்பிப் பார்த்து ஐயா நாங்க நாட்டுக்கு உசிரைக் கொடுக்கிறோம். நீங்க என்ன செய்யப் போறீங்க’ன்னு கேட்டுட்டா நம்ப பதில் சொல்ல வேணாமா? “நீங்க நாட் டைக் காக்க வலிமை பெற இந்தாங்க சோறு’ன்னு நம்ப தர வேணாமா? மேனாட்டுக்காரங்க ஆயுதங்களைத் தயாரிக்க விஞ் ஞானத்தை உபயோகிச்சா, நாம் அமைதியை விரும்பி உணவு உற்பத்திக்கு விஞ்ஞானத்தை உபயோகிக்கலாமே! ஜப்பானிலே இந்த விவசாயத் தொழில்லே எப்படி முன்னேறிட்டாங்க!… கந்தா, என் மனசுலே பட்டதைச் சொல்றேன் கேட்டுக்க, இந்த மணி நெல்லும் வயல்லே வெளையற தானியம் முச்சூடும் தாய்ப் பாலுக்குச் சமம். மக்களுக்கு ஊட்டத்தைக் கொடுக் கும் அமுத சத்து. பொறத்தியான் கீழே சாப்பாட்டுக்குக் கப்பரை ஏந்த வேண்டாம். நம்ப பூமித்தாய், இந்தப் பூதேவி, மாபெரும் அம்மை, பிராட்டி நமக்கு அமுத நீர் பெருக்கத் தயாரா இருக்கறப்போ, அவளுக்கு ஊட்டம் கொடுக்க நாம் உழைக்க ஏனப்பா தயங்கணும்… கந்தா…..ந்தா அது அமுத நீர்… அ…முத நீர்…”
ஆவேசமாக ஆரம்பித்தவர் கடைசியில் குரல் அடைக்க நெஞ்சுருகி விம்மும் நிலைக்கு வந்துவிட்டார். அந்தப் ஆண் மகனுக்கே கண்களில் நீர் துளித்தது. பேசமுடியாமல் மெள்ளத் தூணோடு சாய்ந்துவிட்டார். வள்ளியம்மை பதறிப் போய் அவர் அருகில் வந்தாள்.
ஆறுமுகப் படையாச்சி உள்ளே சென்று படுத்த பிறகு தான் கந்தன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
நடையில் தள்ளாட்டம். உடலில் சோர்வு: கண்களில் ஒளியே மங்கிவிட்டது போன்ற தோற்றம். உற்சாகமும் துடிப்பும் விடை பெற்று விட்டதான தள்ளாமை. கந்தன் ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து மெல்ல மெல்லத் தன் வீட்டுப்பக்கம் சென்றான்: நடு நடுவில் தயங்கித் தயங்கி நின்று விட்டான்;
“…நாங்க நாட்டுக்கு உயிரைக் கொடுக்கிறோம். நீங்க என்ன செய்தீங்க…”
வார்த்தைகள் ஆறுமுகப்படையாச்சி கூறியதாகவே இல்லை. அதோ பழநி …அவனுடன் விளையாடிய அண்ணன், தனக்குத் தின்பண்டங்கள் கிடைத்தபோது பல்லால் கடித்துத் தம்பிக்குப் பங்கிட்டுக் கொடுத்த உடன் பிறந்தவன், தாய் அடித்தால் உடனே ஓடிவந்து அணைத்துத் தேற்றிய தமையன், அம்மா, தம்பிக்கு வவுறு நிறையச் சோறு போட்டு நல்லா பாத்துக்க’ எனக் கூறி விடைபெற்று, ‘எலே தம்பி, சுகமா இருக்கியா’ன்னு கடிதம் போட்டு வந்த சகோதரன்…அந்தப் பழநியா இப்படிக் கேட்டுக் கொண்டு நிற்கிறான். தமையன் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க உயிரைக் கொடுத்தவன் … தம்பியோ மக்களின் உயிர்ப் பண்டத்தை நாசமாக்க வித்திட்டவன்..
“ஐயோ அம்மா!” – கந்தன் கூவினான். தள்ளாடித் தள்ளாடி அவன் வீட்டை அடைந்தபோது நடு இரவுக்கு ஆகி விட்டது. வீட்டிலோ…
“ஐயோ அம்மா, ஏன் இப்படி ஒப்பாரி வெச்சு அழுது கிட்டிருக்கே !”
அங்கம்மா பெரியதாகக் கதறினாள். “வந்தியாடா மவனே, அடுத்த கிராமத்திலே இருக்கிற உங்க சித்தாத்தா மகாலட்சுமி போய்டுச்சேடா; அவ புருசனுக்கு என்னடா பதில் சொல்லப் போறே ?”
கந்தனுக்கு இடி விழுந்தது போலாயிற்று. லட்சுமியின் கணவன் வேலப்பனும் பழநியும் ராணுவத்திலே ஒன்றாகச் சேர்ந்தவர்கள். லட்சுமியின் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். வேலப்பன் உயிரோடு இருந்தான். சென்ற வருடம் லீவில் வந்திருந்தான். குழந்தை பிறந்துள்ள செய்தி அறிந்து கந்தனுக்குத்தான் அவன் கடிதம் கடிதம் எழுதினான் : ‘‘கந்தா, லட்சுமி உனக்குச் சொந்தத் தங்கச்சி போல. அவளையும் குழந்தையையும் நீதான் நல்லா பார்த்துக்கணும்…” கந்தன் அடிக்கடி சென்று லட்சுமியைப் பார்த்துவிட்டுக் குழந்தையை யும் கொஞ்சிவிட்டு வருவான். உடம்புக்கு ஒன்றில்லாமல் சுகமாக இருந்தவளுக்கு, திடீரென எப்படி முடிவு ஏற்பட்டது?
“என்னம்மா இது, திடும்னு இப்படிச் சேதி சொல்றே? நாலு நாள் முன்னாடி நான் போய்ப் பார்த்தப்போ நல்லாத்தானே இருந்தாள்?”
சுகமாத்தாண்டா இருந்தாள். நம்பளைப் பாக்கலாம்னு சாயங்காலம் கிளம்பினாளாம். ரோட்டிலே வர்ர போது அந்தப் பாளாப் போன பஸ் சக்கரம் கயண்டு தறி கெட்டு ஓடி இவமேலே ஏறிச்சாம்: அங்கேயே உசிரு போயிடுச்சாம். இம்மாம் நேரம் நீ எங்கே போனியோ. நீ வந்த பொறவு போகலாம்னு குந்தி கிட்டிருக்கேன்…” – அங்கம்மா கிளம்பி விட்டாள்.
“அம்மோவ், குழந்தை என்ன ஆச்சு?”- கந்தன் கேட்டான் பட படப்புடன்.
“அதையேண்டா கேக்கறே? இவவிழுந்த வேகத்திலே குழந்தை கையிலேந்து நழுவி தூர விழுந்திடுச்சாம். விழுந்த இடம் புல்லுத் தரை. அதனாலே குழந்தை பிழைச்சுடுச்சு. ஆனா, அந்தக் கண்ணராவியை ஏண்டா கேட்டுக்கறே, தாய்ப் பால் இல்லாம அது கத்தி விறைச்சுப்போவுதாம். அது என்னமா வயிறுநிறைஞ்சு பிழைக்கப் போவுதோ! அப்பன்காரன் எங்கேயோ மூலைலே கிடக்கறான். நான் போறேண்டா நீவா- அங்கம்மா அந்த நடு இரவிலும் தனியாகவே புறப்பட்டு ஓடிவிட்டாள்.
கந்தனுக்குத் தாயின் வார்த்தைகளைத் தொடர்ந்து வேறு சொற்களும் அல்லவோ கேட்கிறது. “இந்த விளைச்சல் தாய்ப் பாலுக்கு சமானம்டா… மக்களுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும் அமுத சத்து… கந்தா… கந்தா…இது அமுத நீர்…” தாய்ப் பாலுடன் வளரும் குழந்தை பெரியவனாகும் போது பூமித் தாய் அளிக்கும் இந்த அமுத நீரில் அல்லவோ வளர்ச்சி காண்கிறான்… அங்கம்மா. கவலையுடன் கூறினாளே: ‘குழந்தை என்னமா வயிறு நிறைஞ்சு பிழைக்கப் போவுதோ!’ ஏன் வயிறு நிரம்ப வழி இல்லை? இந்தப் பூமிப்பிராட்டி எங்கே போய்விட்டாள்? அவளுடைய கை அமுதத்துக்கு வஞ்சனையும் உண்டோ… வஞ்சனை இல்லை. ஆனால், இதோ படையாச்சியின் வளர்ப்பில் பூமி மாதா தயாராக்கும் அந்த அமுதநீர் இன்று மனிதனின் வெறிச் செயலில்…
கந்தனால் அதற்கு மேல் யோசித்தபடி நிற்க முடியவில்லை லட்சுமியோ குழந்தையோ அவன் நினைவில் அந்த விநாடிக்கு இல்லை. எங்கிருந்து கால்களுக்கு அவ்வளவு பலம் வந்திருக்கும் …வெள்ள நீர் பின் தொடரும் காட்சியாக, * மக்களுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் அமுதம்’ என்ற வார்த்தைகள் அவனைத் துரத்த, வேகமாக முன்னேறினான்.
படையாச்சியின் வயலில் அப்போதுதான் செங்கோடனும் அவன் ஆட்களும் அரிவாளைத் தீட்டிக்கொண்டிருந்தனர்.
“எலே, யார்ரா அது, கை வெச்சீங்கன்னா தீத்துபுடுவேன்.” – கந்தன் கூவிக்கொண்டே ஓடி வந்தான்.
ஆட்கள் திரும்பி நோக்கினர். அந்த அமாவாசை இருட்டி லும் செங்கோடன், கந்தனை அடையாளம் கண்டு கொண் டான். “என்ன கந்தா, உஷாரா இருக்கணம்னு னு சத்தம் போட்டுகிட்டு வரையாக்கும். இந்தச் செங்கோடன் கிட்டே ஒருத்தன் வாலாட்ட முடியுமா?”
கந்தன், கையிலிருந்த பெரிய கழியைக் கீழே தட்டினான்; “சும்மா இரு செங்கோடா, உண்மையாதான் பேசறேன். படையாச்சியோட இந்த நிலத்திலே ஒருத்தரும் கை வைக்கப் படாது. வெச்சா நான் பொல்லாதவனாயிடுவேன்! நிலத்துலே கை வெக்காதே”
கந்தன் பேச்சு விளையாட்டில்லை என்பது செங்கோடன் புரிந்துகொண்டான். ஆனால் இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகு கூலி வாங்காமல் போய் விடுவானா! ஆனால், கந்தனோ “…ம் வெட்டிச் சாய்ச்சு வவுத்துலே மண் போடற வேலைக்குக் கூலி கேக்கறியே, உனக்கு வெட்கமாயில்லை?” எனக் கேட்டு விட்டான்.
செங்கோடன் புலிபோல் கந்தன் மீதே பாய்ந்துவிட்டான். கந்தனும் சளைக்கவில்லை. சத்தம்கேட்டு ஊர் மக்கள் வருவதற் குள் செங்கோடன் தன் கை அரிவாளினாலேயே கந்தனைக் காயப்படுத்தி ஓடிவிட்டான். செய்தி அறிந்து ஓடிவந்த ஆறு முகப் படையாச்சி மூர்ச்சையடைந்து கிடந்த கந்தனை, தன் தோளிலேயே தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு எப்படித்தான் நடந்து சென்றாரோ!
ஊராரின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகாமலிருக்க முத்துக்குமரு இரண்டு நாட்கள் கழித்துக் கந்தனை ஆஸ்பத்திரியில் சந்திக்கச் சென்றார். முத்துக்குமருவைக் கண்டதும் கந்தனே பேச ஆரம்பித்துவிட்டான். “எசமானுக்கு நான் துரோகம் செய் துட்டதா நெனப்பீங்க. நீங்க இட்ட உப்புலேதான் இந்தத் தேகம் வளர்ந்தது. ஒத்துக்கறேன். ஆனால் உடம்பு வேறு, மனசு வேறுன்னு தோணுது. உங்களை நான் ஏமாத்திட்ட துரோகத்துக்கு இந்த உடம்புக்குத் தண்டனை கொடுங்க. ஒத்துக்கறேன். ஆனா, அத்தனை வவுத்து சோத்தையும் காப் பாத்தாம என்னாலே இருக்க முடியலை. எங்க லட்சுமியோட குழந்தே வவுத்துக்கு அழுவறது, என்னை வெறியனாக்கிடுச்சு. தாய்ப் பாலுக்குப் பிறகு அமிர்தமா வலுவு தரும் இந்தத் தானியத்தைக் காப்பாத்திட்டதுமே எனக்குச் சந்தோசம் தாங்க…”
குமரு பேசவில்லை. நகர்ந்து விட்டார்.
அறுவடை முடிந்துவிட்டது. அமோகமான விளைச்சல், கந்தனும் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிவிட்டான். அவன் மேற் பார்வையில் வயலில் வேலை செய்த அத்தனை பேருக்கும் ஆறுமுகப் படையாச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார். புரிந்தும் புரியாதவராகப் படையாச்சி பகைமைக் களையை எறிந்து விட்டு நட்புரிமையுடனேயே குமருவுடன் பழகியபோது குமரு நெகிழ்ந்துவிட்டார். படையாச்சியின் வீட்டு விருந்தில் அவரும் அல்லவோ கலந்துகொள்கிறார். அவர் மட்டுமல்ல, மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து ஓடிவந்த வேலப்பனும் இருக் கிறான். அவன் எவ்வளவு கூப்பிட்டும், கந்தன் தோளை விட்டுக் கீழே இறங்க தன் மகனைக் கோபிக்கவில்லை.
”பார்த்தீங்களா, சோறு போடறவன் கிட்டேதான் இதுக் குப் பிடிப்பு. எங்கிட்டே வரமாட்டேங்குது!” – வேலப்பன் மகனின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளியபடி கூறியபோது கந்தன், நானா சோறு போடறேன்? ஐயாவை நெனச் சுக்கோ, அவர் நிலத்துக் கேழ்வரகு கஞ்சியும் அரிசிச் சோறும் உன் மகன் வவுத்துலே !” என்றான்.
“அப்படித் தப்பா பேசிடாதேப்பா!” எனக் கூறிய படை யாச்சி ஒரு பிடி மண்ணைக் கையில் எடுத்துக் காட்டினார். “இதோ பாத்தியா, இந்தப் பூமித் தாயின் கருணையிலும் கனிவிலும்தான் நாம நிக்கிறோம். இந்தத் தாயைக் காப்பாத்த வேலப்பனைப் போல வலிவுள்ளவங்க எல்லையிலே நிக்கறாங்க. நாம பயமில்லாம தாய்க்கு வலிவூட்டி, அவ கருணையிலே அவங் களையும் வலுவாக்கி, நம்பளும் பசியாத்தறோம். ஜெய் கிஸான், ஜெய் ஜாவன்’னு தெரியாமலா சொன்னாரு…”
இந்தப் பேச்சைக் கேட்டதுமே வேலப்பன் தலை வணங்கி நிற்க, கந்தன் நன்றிப் பெருக்குடன் தாய்நாட்டு மண்ணை நோக்குகிறான்.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.